நான் உனக்கு சாபம் தரமாட்டேன்.
பொறுமையின் சிகரமா நீ.
அக்கிரமக்காரி!
இரு கரம் கூப்பிக் கேக்கிறேன்.போதும் உன் ருத்ர தாண்டவம்.
நான் என்னத்தை பிரட்டி போட்டாலும் பூமியின் பிடிவாதம் குறையாதாம்.
சுனாமி வந்த சுவடழியுமுன் வெள்ளப்பெருக்கு. பொறுமை தாயே பொறுமை.
கீழிறங்கி பொழிந்து எடுக்கப் போவது பலி. அதுக்குள்ள என்ன றொமான்ஸ் வேண்டியிருக்கு.
இயற்கைத்தாய்க்கு அறளை பிடித்ததால் முதலைகள் ஊருக்குள் தஞ்சம்.
எனக்கும் யானைக்கும் தண்ணீர் தாகம்.உனக்கு ஏன் உயிர்த்தாகம்.
நிம்மதியான தூக்கம் வேண்டியே இங்கு இருக்கிறேன்.
என் பாலர்களை தூர்த்த மாதிரி என்னையும் சுவடில்லாமல் ஆக்கங் கங்கணமா?
பலியெடுத்தது போதும் இங்கு கொஞ்சம் பொழிவாய். பாவமன்னிப்பு பெறுவாய்.
அடைமழையில் மிஞ்சியிருக்கும் பறவைகளே என்னிடம் வாருங்கள்.முடிந்தவரை நான் உங்களைத் தாங்குவேன்.
நான் உன்னை குடித்தால் அது கிரமம்.நீ மனிதரைக் குடித்தல் அக்கிரமம்.
உணவு உடை உறையுள் இன்றி அல்லலுறும் மக்களின் சோக முகம் கண்டு குதூகலிக்கிறாயா தாயே.நான் உனக்கு சாபம் தரமாட்டேன்.