Custom Search

Saturday, March 31, 2007

பாட்டுப் பாடவா












ஒரு பாட்டு இசையில்லாமல் கத்துறன் மற்றது இசையோட சேர்ந்து கத்துறன். இடையில சத்தம் கூடிக்குறையும் கண்டுக்காதீங்க:-)))

Tuesday, March 27, 2007

நானொரு மாதிரி ........ நீங்கள் ஒரு மாதிரி

சிந்தாநதி,ஸ்ரேயா நானுங்களுக்கு என்ன பாவம் செய்தன்.. உந்த விளையாட்டில என்னை சேர்த்துவிட்டிட்டிங்கிளே.என்ர வண்டவாளத்தையெல்லாம் சொன்னால் பிறகு சினேகிதின்ர கௌரவம் என்னாகும் என்று கொஞ்சமாவது யோசிச்சுப்பார்த்திங்கிளே.

சரி ஏதோ நான் சொல்வதெல்லாம் பொய் பொய்யத்தவிர வேறெதுவுமில்லை..ஐயொ நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறெதுவுமில்லை.

ஒருதரும் சிரிக்காதயுங்கோ..குழந்தைப்பிள்ளைகள் சாப்பிடுற சாப்பாடுகள் எனக்குப்பிடிக்கும்.
எனக்கும் தங்கச்சிக்கும் ஒன்பது வயது வித்தியாசம் ஸோ அம்மா தங்கச்சிக்கு செர்லக் தீத்தேக்க எனக்கும் தாறவா இல்லாட்டா நான் மூஞ்சைய நீட்டுவன் என்று.இங்கயும் எங்கட றெஸ்ரோரன்ரில இருக்கிற கிட்ஸ் மீல்ஸ்ல அநேகமானவை எனக்குப் பிடிக்கும்.

ஊரில பச்சைப்புளியா ஒரு நாரத்தங்காய் இருக்குத் தெரியுமா? அத எங்கட வீட்ட ஒருதரும் கவனிக்கிறதேயில்லை.ஆனால் நான் ஒவ்வொருநாளும் பிடுங்கிச் சாப்பிடுவன்.அதுவும் சும்மாயில்லை ஒவ்வொரு சுளையிலுமுள்ள முத்துக்களை தனித்தனியா எடுத்துச் சாப்பிடுவன்.அம்மம்மா பார்த்திட்டுச் சொல்லுவா உனக்கென்ன விசரோ உதை வச்சு உறிஞ்சுக்கொண்டு நிக்கிறாய்..மாதாளம்பழம் புடுங்கித் தின்னு என்றுவா.நான் நட்ட மரங்கள் எல்லாமே நல்லாய் காய்க்கும் என்று சொல்றவை வீட்ட (அதுவும் வியேட் தானே)

புல் பூண்டுகள் அவற்றிலுள்ள தும்புகள் அழகான இலைகள் சேர்த்து வச்சு சும்மா பலவித வடிவங்களில் அவற்றை ஒட்டிக் காயவச்சு பிரேம் பண்ணுவது பிடிக்கும்.கனடாவில இருக்கிற என் கஸின்ஸ்கும் சொல்லிக்குடுத்திருக்கிறன் இந்தப்பழக்கத்தை.( இதையேதான் ஸ்ரேயாவும் எழுதியிருக்கிறா).

அப்பா ஸ்பெயின், ஜேர்மனி, லண்டன் ,அமெரிக்கா, இத்தாலி என்று பல நாடுகளில் இருந்திருக்கிறார்.அது தவிர கப்பலில் வேலை செய்ததால் பல நாட்டுக் காசுகளை எனக்காக கொண்டுவந்து தந்திருக்கிறார் ஏனென்றால் தாள் காசு மற்றும் நாணயங்களைச் சேரத்து வைக்கிற குணமிருக்கு எனக்கு.ஊரை விட்டு வரும்போது எல்லாத்தையும் ஒராளிட்ட குடுத்திட்டு வந்தனான் போகும்போது கேட்டு வாங்கவேணும்.இப்ப கனடா 25 சத நாணயத்தில் 29 வகையான நாணயங்கள் வைத்திருக்கிறேன்.தவிர சிங்கப்பூர் அமெரிக்கா நியுசிலான்ட் நாட்டு நாணயங்களும் சிலது வைத்திருக்கிறேன்.

எனக்கும் கனவுகளுக்கும் தூரம் அதிகம் இருந்தாலும் அதிசயமா வாற கனவுகள் வியேர்ட் ஆ இருக்கும். உதாரணமா ஊhர் நண்பர்கள், மாத்தளை நண்பர்கள் ,கனடா நண்பர்கள் எல்லாரும் ஒன்றா இருந்து படிக்கிற மாதிரி அதுவும் ஹோல்வேயில இருந்து படிக்கிற மாதிரி, சாப்பிடுற மாதிரியெல்லாம் கனவு வரும்.சிரிப்பென்னெண்டால் ஒருமுறை அண்ணி நாடகத்தில நடிச்ச ஒரு கேர்ளும் என்ர பிரண்டா ஒரு கனவில வந்தா.

எவ்வளவு சோகப்படம் பார்த்தாலும் என் கண்ணில தண்ணி வராது.வீட்டுக்காரர் முழுப்பேரும் மூக்கை உறிஞ்சிக்கொண்டிருப்பினம் நான் மட்டும் அவையைப் பார்த்துக்கொண்டிருப்பன்.அவைக்கு சிரிப்பு வராத ஜோக்குக்கெல்லாம் எனக்கு பயங்கரமாச் சிரிப்பு வரும்.செத்தவீடுகளுக்குப்போனாலும் எனக்கு அழுகை வாறதில்லை.அதால போகவே பயம் என்னைப்பார்த்து மற்றாக்கள் என்னவும் நினைப்பினமோ என்று.

லெக்ஸர் ஹோல்ல இருந்துகொண்டு boring ரொபிக் என்று சொல்லி என்ர நண்பர்கள் பக்கத்தில இருக்கிற ஆக்களுக்கு ரெக்ஸ்ற் மெஸேஜ் அனுப்பிக்கொண்டிருப்பினம் எனக்கு அன்றைக்குத்தான் படிக்கவேணும் நோட்ஸ் எடுக்கவேணும் போல இருக்கும்.”காதலே காதலே” என்றொரு படம் வந்தது அந்த ஹீரொவ எனக்குப்பிடிக்கும் என்ர நண்பிகள் சொல்லுவினம் போயும் போயும் இவனைப்போய் கியுட் என்று சொல்றா நீயும் உன்ர ரேஸ்ற்றும் என்று.என்ர தங்கச்சியும் அதத்தான் சொன்னா.

லக்கி பென், லக்கி பான்ற்ஸ், லக்கி றூம் ( எக்ஸாம் எழுத) இப்பிடியெல்லாம் நிறைய லக்கி இருக்கு.ஏதாவது ஒரு சின்ன விசயத்துக்கு முடிவெடுக்க முடியாட்டா நான் உடன நேரத்தப்பார்ப்பன் ஒற்றை நம்பர் என்றா ஒரு முடிவு இரட்டை நம்பர் என்றா மற்ற முடிவு.எனக்கே சிலநேரம் விசர் வரும் என்ர இந்தக்குணத்தைப் பார்த்து.மாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறன்.

எங்கட வீட்ட எனக்கு லேற்கோச்சி என்று பட்டம்.கொம்பறிமூக்கன் என்றும் ஒரு பெயர் இருக்கு.வெளில நான் நல்ல பிள்ளை. எல்லாரும் சேர்ந்து சாப்பிட இல்லாட்டி மோலுக்கு எங்கயும் போவம் என்று வெளிக்கிட்டா நான் வரேல்ல என்று சொல்லிட்டு இருப்பன் அவை வாசல் வரைக்கும் போக யாரோ மண்டைல குட்டி போ போ போய் வெளிக்கிடு என்று சொல்ற மாதிரியிருக்கும்...உடன நில்லுங்கோ நானும் வாறன் என்றிட்டு வெளிக்கிட ஓடுவன்.எல்லாருக்கும் பயங்கரக்கோவம் வரும் பிறகு மோலுக்குப் போய் 15-20 நிமிசத்திலயே அலுப்பாயிருக்கும்.அப்பாவோட போய் இருந்திடுவன்.அக்காட்டயும் தங்கச்சிட்டயும் பேச்சு வாங்கிறது இதுக்குத்தான்.நான் போடுற முக்காவாசி உடுப்பும் அவை செலக்ட் பண்றதுதான்.

அம்மா சொல்லுவா சின்ன வயசிலயே என்னை ஒருதரும் நித்திரையாக்கத் தேவையில்லையாம்.நானே றேடியோவப் போட்டிட்டு தலையணியை எடுத்துக் கால்ல போட்டு ஆட்டிக்கொண்டு நித்திரையாப்போடுவனாம். வளர்ந்தபிறகும் என்னை யாரும் இதைச் செய் அதச் செய் என்று யாரும் சொல்றதில்லை.என் வேலை எல்லாம் நானே பார்ப்பன்.

றிப்போர்ட் கொண்டுவந்து முதல் பொய் பொய்யாச் சொல்லுவன்.அம்மா நான் இந்தப்பாடத்தில 60 மார்க்ஸ்தான் வாங்கினான் என்று.அம்மா றிப்போர்ட்ட வாங்கிப் பார்த்திட்டு பேசுவா ஏனுப்பிடி பழகுறாய். 90 மார்க்ஸ் 60 என்று சொன்னா சாத்தான் அப்பிடியே ஆகட்டும் என்று சொல்லிடும் என்று. அந்தக்குணம் இப்பவும் கொஞ்சமிருக்கு.

நான் ஏதும் சொன்னால் அது உடன நடந்திடும்.இப்ப நான் ரை பண்ணிப் பார்க்கேல்ல.முந்தி நடந்ததைச் சொல்றன். ஓருநாள் ஹெலியைப் பார்த்து இப்ப சுடப்போறான் என்று சொல்லி வாய்மூடேல்ல அவன் பட பட என்று சுடத்தொடங்கிட்டான்.
பிறகொருநாள் நான் அப்பம்மா வீட்ட போக சித்தப்பா கிணத்துத் தட்டில இருந்துகொண்டு மண்ணெண்ணெய் (பெரல்????) தகரத்ததை சுட்டியலால தட்டி நிமித்திக்கொண்டிருந்தவர்.என்னைக் கண்டிட்டு சொன்னார் வந்திட்டா கணவாய்க்கறி மணந்ததோ உங்கட வீடுவரைக்கும் என்றார்..எனக்குக் கோவம் வந்திட்டு பின்ன உங்களுக்கு மணக்காமலோ அப்பம்மாட்ட வந்தனீங்கள் என்று சொல்லிட்டு சுட்டியல் கிணத்துக்கு விழப்போது பாருங்கோ என்றன் அது உண்மையாவே விழுந்திட்டுது.நான் ஓடித்தப்பிட்டன்.

நீங்களும் உங்கள் லூசுக்குணங்களைச் சொல்லுங்கள்.

டிஜே
தர்சன்
தமிழ்நதி
மோகன்டோஸ்
சோமியண்ணா
( நான் கூப்பிட நினச்ச மிச்ச ஆக்களை மலைநாடான் கூப்பிட்டிட்டார்)

Monday, March 26, 2007

என்று தணியும்....

நேற்றொரு நண்பன் MSN ல் "வான்படை எழுந்தது சிங்களம் திகைத்தது" என்று போட்டிருந்தான். பலவருடக்கனவு இப்பத்தான் நிறைவேறியிருக்கிறது.ஒரு ஈழத்தமிழ் மகளாக சந்தோசப்பட்டாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ குறிப்பிட்டுச்சொல்ல முடியாதவோர் உணர்வும் கூடவே சேர்ந்தே வருது.ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது போர் ஒரு முடிவுக்கு வரும்..தமிழீழம் கிடைக்கும் ஒருநாள் நிம்மதியாய் ஊருக்குப்போகலாம்.மீண்டும் கிட்டததட்ட பத்து வருடங்களாகப் பிரிந்துபோன நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பழையபடி ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோசமாய்க் கழிக்கலாம் என்ற ஆசை கொஞ்சம் கொஞ்சமா தூர்ந்து போறமாதிரி ஒரு உணர்வு.

இராணுவம் செய்த மாதிரி சிறார்களையோ பாடசாலைகளையோ தொழுகைத்தலங்களையோ குண்டுபோட்டு நம்மவர் அழிக்கவில்லைத்தான் இருந்தாலும் இறந்துபோன மூன்று அதிகாரிகளின் உயிருக்குப்பலியாக இப்பவோ எப்பவோ கொழும்பிலும் அருகிலுள்ள சிங்கள மக்கள் அதிகமாக செறிந்து வாழும் மாத்தளை , கண்டி போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் இனி தினமும் நடுக்கத்துடன்தான் அன்றாட வேலைகளைச் செய்யமுடியும்.எந்த நேரம் யாருக்கு இனவெறி வரும் யாரைக்கொல்வார்கள் யாரைச்சூறையாடுவார்கள் என்ற அச்சம் இருந்துகொண்டேயிருக்கும்.

எட்டு வருடங்களுக்கு முதல் நான் மாத்தளையில் வசித்தபோது ஒரு சமரில் மடிந்த ஒரு இராணுவ வீரரின் பூதவுடல் நாங்கள் வசித்த பகுதியிலிருந்த சகோதரியின் வீட்டுக் கொண்டுவரப்பட்டது.எங்களைப்போல அவர்கள் அழவில்லை மாறாக அரசாங்கத்தையும் பணத்துக்காக மகனை இராணுவத்தில் சேர்த்துவிட்ட தந்தையையும்தான் திட்டினார்கள்.இருந்தாலும் இருந்த ஒரே அண்ணனைப் பறிகொடுத்த சோகத்தை அவர்களுடைய கண்ணில் காண முடிந்தது.நடக்க இருந்த பபிதாக்காவின் திருமணமும் தள்ளிப்போனது.

குடும்பத்திலுள்ள ஒரு உயிரைத் தற்காலிகமாகப் பிரிவதும் நிரந்தரமாகப் பிரிவதும் கொடுமையானது.அதை நான் சொல்லிப்புரிய வைக்கவேண்டியதில்லை..அந்த வலியை ஒருமுறையாவது நாம் அனுபவித்திருப்போம்.இப்போது நாட்டுக்காக வீட்டுக்கொருவரைப் போராட அழைக்கிறார்கள்.இது நான் பிறந்தது முதலே நடந்துகொண்டுதானிருக்கிறது.மாமா, சித்தப்பா என்று தொடங்கி அண்ணா, அக்கா என்று போராட்டத்தில் இணைந்து மாவீரர்களானார்கள்.பிறகு கூடப்படித்தவர்களும் அந்தவழியிலே போய்விட்டார்கள. ஒருவர் போராடப்போயாவது குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரு சில உயிர்களையாவது தமிழீழம் மலரும்போது நிம்மதியாக வாழவைக்க முடியும் என்ற நம்பிக்கையால் இப்ப தம்பி தங்கை மாரை பெற்றோரே போராட்டத்தில் இணைத்துவிடுகிறார்கள்.

இன்று இங்க சரியான மழை...காலையிலிருந்து ஒரே இடியும் மின்னலும்.காலையில் பஸ் எடுக்கச்செல்லும்போதுதான் முதலாவது இடிச்சத்தம் கேட்டது.உடனே மனசு கனடாவலிருந்த ஊருக்குப்போய்விட்டது.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலாய் குண்டுச்சத்தம் கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறன்.பாலர் வகுப்புப் படிக்கேக்க தூரத்திலதான் குண்டுச்சத்தம் கேக்கும் எங்கயோ சண்டை நடக்குது என்று பேசாமல் இருப்பம்.பிறகு பிறகு பக்கத்திலயே ஆமி வந்திட்டான்.எந்தப்பக்கம் சூடுச் சத்தம் கேட்டாலும் அம்மா, அம்மம்மா சத்தம் கேட்ட பக்கத்தில இருக்கிற சொந்தக்காரரை தெரிஞச்hக்களை நினைச்சு கடவுளே அவைக்கு ஒன்றும் நடக்கக்கூடாதென்று உள்ள எல்லாக்கடவுள் மாரிட்டையும் கெஞ்சுவினம்.பிறகு வளர வளர எல்லாமே பழகிப்போச்சு.குண்டுச் சத்தம் கேட்டாலும் பயம் இல்லாமல் போயிற்று.ஒருமுறை பாடசாலையில் ஆறாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று பயங்கர சத்தங்கள்.அந்த நேரம் வெளியில நின்டனாங்கள் எங்கட வகுப்பில எல்லாரும் உடன கீழே விழுந்து படுத்திட்டம்.செல் கூவிக்கொண்டு போறது தெரியுது.அன்றைக்கு நெல்லியடி சென்றஸ்கூல் பள்ளிக்கூடத்துக்கருகில் இரு தரப்பினரும் சந்தித்துக்கொண்டதாலதான் அந்த அடிபாடு.கொஞ்ச நேரத்தில ஸ்கூல் விட்டிட்டுது.வீட்ட போய்க்கொண்டிருக்கிறம் கொஞ்ச ஆக்கள் சேர்ந்து.வீட்டுக்கு கிட்டப் போட்டம்.ஸ்கூலடியிலதான் சண்டை என்று கேள்விப்பட்டு எல்லாற்ற அம்மாமாரும் கோயிலடியில வந்து எங்களைக் காணேல்ல என்று கவலைல பார்த்துக்கொண்டு நிக்கினம் நாங்களும் பாலத்தால இறங்கிறம் சைக்கிள்ல, எங்களுக்கு மேல வந்த ஹெலியில
இருந்து நெருப்புப்பொறி விழுந்து மேல கறன்ட் வயர்ல பட்டு வயர் தொங்கிக்கொண்டு வருது அப்ப நினைச்சம் நாங்கள் எல்லாரும் சாகப்போறம் என்று ஆனால் ஒருதருக்கும் ஒன்றுமே நடக்கேல்ல.

எங்கட வீடுதான் கடைசி வீடு அதால எங்கட வீட்டு முன் பக்க மதிலால பார்த்தா மெயின்றோட்டால ஆமி போறதையும் பார்க்கலாம்.வீடுகளுக்கு அடுத்து தோட்டங்கள்.தோட்டங்கள் முடியிற இடத்தில ஒரு சின்னத்தெரு ..அதாலதான் அண்ணைமார் போய் வாறவை.பின் பக்க மதிலடியில வந்துநின்று ஆமி ரோந்து போறதை நோட்டம் விடலாம்.அப்பிடி ஒருநாள் சிலபேர் வந்துநின்று பார்த்துக்கொண்டு நிண்டதை ஹெலி கண்டிட்டுதோ இல்லை சும்மா சுட்டாங்களோ தெரியாது சுடத்தொடங்கிட்டினம்.அந்தநேரம் பார்த்து நான் சிவப்புக்கலர் தண்ணிக்கானோட நின்டனான் முத்தத்தில..அம்மா நினச்சா நான் அதில படம் காட்டிக்கொண்டு நின்டதாலதான் சுட்டதென்று எனக்கு நல்ல பேச்சு.ஏற்கனவே எண்பத்தேழாம் ஆண்டு ஹெலி அடிச்சதில அக்காக்கு காலில காயம் பட்டு திரும்ப திரும்ப வெட்டி வெட்டி ஒரு அரிசியளவில் சன்னங்கள் எடுக்கிறது.அப்ப எனக்கும் அப்பிடி நடந்திடும் என்று கவலைல எனக்கு அடியும் விழுந்திச்சு.

காயம் பட்டாக்களுக்கு உடன தெரியாதாம்.அக்காக்கு காயம் பட்டதே தெரியாதாம்.அவாக்கு அப்ப என்ன 6 வயதிருக்கும்.விளையாடிக்கொண்டு நிண்டவவாம்.ரத்தக்கறையைப்பார்த்திட்டு யாருக்கு காயம் என்று தேடித்தான் அக்காக்கு காயம் பட்டிருக்கென்று கண்டுபிடிச்சவையாம்.பல வருடங்களுக்குப்பிறகு 95 ல் என்று நினைக்கிறேன்..அக்கா ஒருநாள் ஸ்கூhல வந்து அம்மா மொழிக்குப் பக்கத்தில ஏதேப உருளுது என்று சொல்லிப் பக்கத்து வீட்டு டொக்டர் அங்கிள் வீட்ட போனா அவரும் பார்த்திட்டு ஓம் பிள்ளை ஏதோ கிடக்கு என்று சொல்லி கொஸ்பிற்றலுக்குக் கொண்டுபோய் திரும்ப வெட்டி ஒரு ஒருசதம் அளவுக்கு இன்னொரு செல் துண்டு கிடந்து எடுத்தது.அம்மா அதைப் பத்திரமா வச்சிருந்தவா பிறகு ஊரை விட்டு வெளிக்கிடும்போது எறிஞ்சு போட்டா.

சாவகச்சேரியில கவிதா மச்சாளின்ர அப்பா குண்டு பட்டு இறந்திட்டார் என்று செத்த வீட்டுக்குப் போனம்.அவேன்ர வீட்டைக் கண்கொண்டு பார்க்கேலாது.100 இடத்தில ஓட்டை கிடந்திச்சு.அவை சன்னங்கள் எல்லாத்தையும் பொறுக்கி ஒரு லாச்சி நிறையச் சேர்த்து வச்சிருந்தவை.

பங்கரில ஒளியுறதைப் பற்றியும் சயந்தனண்ணா எழுதியிருந்தார்.எங்கட வீட்டில பங்கரே இல்லை.டொக்டர’ அங்கிள் வீட்டு வேப்ப மரத்துக்கு கீழ ஒரு பெரிய பங்கர் அங்கதான் அந்த ஏரியாவில இருக்கிற நிறைய ஆக்கள் வருவினம் பங்கரில ஒளியுறதுக்கு.ஆனால் எங்களுக்கு அது ஒரு விளையாட்டிடம் மாதிரி.திருவலகை கொஞ்சச் சாப்பாட்டு சாமான் எல்லாம் அதுக்குள்ள இருக்கும்.பொரிவிளாங்காய் ஞாபகம் இருக்கா? கடிச்சாலும் கடிபடாது.தொடர்நது குண்டடிபட்டா அன்றைக்கு முழுக்க பங்கருக்குள்ளதான் எல்லாரும்.ஆனால் பெருசுகள் எங்களைச் சத்தம் போடாம இருக்கச்சொல்லுவினம் நாங்கள் எங்கட பாடு.

ஒருநாள் ஊராக்கள் எல்லாரும் நிலா வெளிச்சத்தில கோயில் வாசல்ல இருக்கிற பலாமரத்துக்கு கீழ இருந்து கதைச்சுக்கொண்டிருந்தம்.சில நேரம் சாமம் சாமமா அதில இருந்து கதைப்பம்.அப்பிடி ஒருநாள்தான் 91 என்றுதான் நினைக்கிறன்.ஹெலில அறிவித்தல் வந்திச்சு எல்லாரயும் தென்மராட்சிக்குப் போகச்சொல்லி.ஊரில இருக்கிறாக்கள் ஒருதரும் வெளிக்கிடுற பிளானில்லை.கடைசியா வேறவழியில்லாம சாவகச்சேரிக்குப்போனம்.இடம்பெயர்ந்தது அந்த அனுபவம் மட்டும்தான்...இதைப்பற்றிப் பிறகு எழுதணும்.

உண்மையா இன்றைக்கு எழுத நினைச்சது வேற.அதயும் சொல்றன்.போர் என்று ஒன்று இல்லாம இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று யோசிச்சுப்பார்த்தன்.

இப்ப என்னோட படிக்கிற நண்பர்கள் சிலர் நாங்கள் சின்னவயசில இருந்தே நண்பர்கள் என்று சொல்லும்போது எரிச்சல் எரிச்சலா வருது.நாங்களும்தான் சின்ன வயசில இருந்தே பல கனவுகளோட ஒன்றாய் வளர்ந்தோம் படித்தோம் ,அழுதோம், சிரித்தோம் ஆனால் இப்ப பிடுங்கி நடப்பட்ட செடிகள் போல எங்கெங்கயோ வாழுறம்.ஜெசி ,ஜெயந்தி, வாசு, வசா ,லுசா ,வித்தி ,கோதா, கார்த்தி இப்பிடி ஒரு குறூப்.எல்லாரும் அஞ்சு ஆறாம் வகுப்பில இருந்தே ஒரே யுனிவர்சிற்றுக்குப்போவம் என்ற கனவில திரிஞ்சனாங்கள்.சொன்னா நம்பமாட்டிங்கள்.எங்களில நிறையப்பேர் பத்துப் பதினொரு வயதிலயே இது ஹொஸ்டல்ல போயிருக்கும்போது பாவிக்க என்று நிறைய பொருட்கள் வாங்கி வச்சனாங்கள்.ஆனால் இன்றைக்கு நானிங்க.மற்றவர்களும் எங்கயோ எல்லாம் சிதறிப்போயிருக்கிறம்.ஜசி அம்மாக்கு கான்ஸர் வந்து இறந்துபோனதால படிப்பையே நிப்பாட்டிட்டு மற்றவர்களுடைய தொடர்பையும் விடுத்து நத்தைபோல வாழுறாள்.ஜெயந்தி ரெக்னிக்ல் கொலேஜ்ல.வா
சு ஸ்ரீபாதா கொலேஜ், வசா செய்தா மெடிசின்தான் என்று இரண்டாந்தரம் A/L எடுத்து இப்ப யாழ் பல்கலைக்கழகத்தில எப்பவாவது நடக்கிற வகுப்புக்கு போய்க்கொண்டு..வித்தி எங்கயோ சித்தமருத்துவம் படிக்கிறாள்.லுசா பாங்ல வேலை.கோதா கார்த்தி என்ன செய்யினம் என்றே தெரியா.எப்பவாவது ஒரு போன்.அதிசயமா ஒரு கடிதம்.இப்பிடித்தானிருக்கிறம் இப்ப.

அங்க பட்டதாரிகள் என்று மரியாதையாக அழைக்கபட்ட பலர் புலம்பெயர் நாடுகளில் காஸ் ஸ்ரேசனிலும் pizza டெலிவரியும் செய்துகொண்டிருப்துதான் கொடுமை.திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்குப் பௌதீகம் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் இப்ப இங்க ஒரு பக்டரியில வேலை செய்யுறா.ஈழப்போருக்கு உதவி செய்த ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கபட்ட பலர் பெற்றவர்களின் இறுதிச்சடங்கில் கூடக் கலந்துகொள்ள முடியாமல் புலம்பெயர் நாடுகளில் இருந்து புழுங்குவது ஒருவிதக்கொடுமை என்றால் போரால ஏற்படுகின்ற மனவுளைச்சல்களும் வடுக்களும் அதவிடக்கொடுமை.

சிறார்கள் வெளிச்சக்கூடு வாங்கவும் தேவையில்லை.இந்த வெளிச்சக்கூடு பற்றிய பதிவு பற்றி நான் யோசிச்ச விசயமிது.ஆமி மாமா கொஞ்சநேரம் அழுதவர் என்றொரு வரி வரும்.நான் நினைக்கிறன் அவர்களுக்கும் ஒரு மூலையில் கொஞ்ச இரக்க குணம் இருக்கும்தானே அப்ப தாங்கள் இந்தச் சின்னஞ்சிறார்களைச் சீரழிப்பது போலத் தங்கள் குழந்தைககளையும் யாரும் சீரழிக்கக்கூடும் என நினைத்திருப்பாரோ அந்த ஆமி மாமா?

பெண்கள் சூறையாடப்படவும் தேவையில்லை.அந்த ரணத்தோடு உயிர் வாழவும் தேவையில்லை.ஒருமுறை சூறையாடப்பட்டவர்கள் பிறகு சாதாரண வாழ்க்கை வாழுதல் என்பது எவ்வளவு சாத்தியமென்று தெரியவில்லை.பிற்காலத்தில் இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படக்கூடிய மனநிலைபிறழ்தலுக்கு கூட இதுபோன்ற அக்கிரமங்கள்தான் காரணம்.ஆண்களும் எந்தவிதமான வக்கிர சோதனைகளுக்கும் உட்படத்தேவையில்லை.பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்ட்ட சிறுவர்கள் கூட பிற்காலத்தில் ஆக்ரோசமுடைய கணவனாகவோ தந்தையாகவோ மாறுதலுக்குக் கூட சின்ன வயதில் ஏற்பட்ட மாறாத வடுக்கள்தான் காரணம்.

ஊரிலுள்ளவர்களினதும் சரி புலம்பெயர்ந்தவர்களினதும் சரி கல்வி கற்கும் உரிமை நசுக்கப்படத்தேவையில்லை.என்னோட கூடப்படித்த பெடியங்களில் ஒராளைத்தவிர மற்ற எவருமே உயர்கல்வி கற்கவில்லை.ஒன்பது வருடங்களுக்குப்பிறகு தீபன் என்ற நண்பனை ஒரு ஒன்றுகூடலில் சந்திக்கநேர்ந்தது.அன்றுதான் தெரிந்துகொண்டேன் பலர் போராட்டத்தில் இணைந்திருப்பதையும் சிலர் பாதுகாப்புத்தேடி துபாய் போன்ற நாடுகளில் வேலை செய்துகொண்டிருப்பதையும்.கனடாவிலிருக்கிற தீபனாவது படிக்கிறான் என நினைத்தேன் ஆனால் அவனும் மலேசியாவில் வேலை செய்துகொண்டிருந்துவிட்டு இப்பத்தான் இங்க வந்ததாம் இனிம கடனையடைக்க இரண்டு வேலை செய்யவேண்டுமாம்.நான் குறிப்பிட்டவர்களெல்லாம் எங்களோடு எப்பவுமே எல்லா விசயத்திலயும் போட்டி போடுபவர்கள்.எங்களைப்போலவே பல கனவுகளுடனே படித்தவர்கள் தான்.

சில தினங்களுக்கு முன்னர் இங்குள்ள ஒரு யுனிவர்சிட்டியில் நடந்த ஒரு நிகழ்வின்போது விடுதலையைப் பற்றி ஒரு றாப் பாடல் பாடியதற்காக சில தமிழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.அவர்கள் விடுதலையானது பற்றி இன்னும் தெரியவில்லை.

உயிர்ச்சேதங்களைப்பற்றியும் அம்மா அப்பா இல்லாது வளரும் குழந்தைகளைப்பற்றியும் சொல்லவே தேவையில்லை.போரால் ஏற்பட்ட, நானிங்கு சொல்லாமல் விட்ட நிறை பிரச்சனைகளுமுண்டு.

[நானிப்ப இவற்றை போர் என்று ஒன்று இல்லாமல் விட்டால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்ற ஒரு நப்பாசையில்தான் இதை எழுதினேன் எனவே போரின் அவசியம் என்ன என்று தெரியாதது காரணமில்லை என சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....பதிவு கொஞ்சம் நீளமாப் போயிற்று அத்தோடு தொடர்பில்லாத மாதரியும் இருக்கு :-(( ]

டங்கு டிங்கு டுக்கா டுக்கா






எல்லாரும் ஆசைப்பட்ட மாதிரி றினிஸைப் பேக்காட்டி ஏதோ என்னால முடிஞ்சளவு றக்கோட் பண்ணினான்....கேட்டுப்பாருங்கோ.

இடையில் ஏற்படும் தடங்கல்களுக்கு வருந்துகிறோம்.

Sunday, March 25, 2007

ஒரு ரேடியோவுக்கு நான் வச்ச ஆப்பு






இந்த ஆப்பு சில வாரங்களுக்கு முதல் வச்சது இருந்தாலும் வலைப்பதிவில குரல்பதிவு போடுறதெண்டு முடிவெடுத்தாயிற்று அதான் எல்லாத்தையும் இங்க போடுறன் .

[என்ன எல்லாரும் நக்கலடிக்கிறீங்கள்?? பயமாயிருக்காம் ,பாஸ் மார்க்காம் ...... வேணாம் வேணாம்... நான் அழுதிடுவன்(வடிவேலு ஸ்ரைல் இல்ல)]

Friday, March 23, 2007

சினேகிதியும் குரல்பதிவு போடுறாவாம்






வசந்தனணண்ணா சயந்தனண்ணா பிரபாண்ணா மலைநாடான் சோமியண்ணா வழியில் சினேகிதியின் குரல்பதிவு இதோ.ஹா ஹா இதுக்கு முதல் ஒன்டு றக்கோட் பண்ணினான் பட் எனக்கே சிரிப்பு வந்திட்டு ஸோ இத இப்ப கேளுங்கோ மிச்சம் நாளைக்குப் போடுறன்.

Saturday, March 17, 2007

என்னை முதன் முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்...

அண்ணைமார் எல்லாரும் பொம்பிளை பார்க்கிற முறை பற்றி எழுதிச்சினம் அதான் நானும் இன்டைக்கு எங்கட வீட்ட நடந்த மாப்பிளை பார்க்கிற நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்றன் கேளுங்கோ.

அன்ரியாக்கள் மற்றும் அத்தை மாமா எல்லாரும் வீட்ட வாறம் என்று போன் பண்ணிச்சினம்.அண்ணா நிப்பான்தானே என்று கேட்டா அன்ரி அப்ப எங்களுக்கு விளங்கிட்டுது இவை சும்மா வரேல்ல அண்ணாவைப் பார்க்கத்தான் வரினம் என்று.

அண்ணாவைக் கலாய்க்கணுமே...தங்கச்சி போய் அம்மாட்ட கேட்டா அம்மா படத்தில வாற மாதிரி நிறைய ஆக்கள் பூ பழம் எல்லாம் கொண்டு வருவினமோ என்று.அம்மாவும் சிரிச்சுக்கொண்டு

சீ அப்பிடியெல்லாம் இல்லை.அவை சும்மா வரினம் அண்ணாவைப் பார்க்க வரேல்ல.

பொய்தானே அ;ம்மா சும்மா வரினம் என்றா ஏன் நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இவ்வளவு நாளும் வராதாக்கள் இப்ப அன்ரின்ர தங்கச்சிக்கும் அண்ணாக்கும் திருமணம் செய்யுறதைப்பற்றிக் கதைச்ச பிறகு வரினம் ஸோ அண்ணாவைப்பார்க்கத்தான் வரினம்.

அண்ணா போய் வேட்டி கட்டிக்கொண்டு வந்து நில்லு போ என்று அவனை ஒரு பாடு படுத்திப்போட்டம்.

4 மணிக்கு வந்திச்சினம் எல்லாரும் சும்மா வரேல்ல மோதகம் கொழுக்கட்டை எல்லாம் கொண்டு வந்திச்சினம். நானும் தங்கச்சியும் சிரிக்கத்தொடங்கிட்டம்.

என்ன அன்ரி பழம் பூ எல்லாம் எங்க. அவாவும் நக்கலுக்குப் பின்னால வருதெண்டு சொன்னா.

பெரியாக்கள் எல்லாரும் ஹோல்ல இருந்து சமா வைக்கத் தொடங்கிட்டினம்.நாங்கள் கொஞ்ச நேரம் இருந்து பார்த்தம் சரி வரேல்ல மேல போய் அழகிய அசுரா படம்; பார்த்தம்.நல்ல படம்தான் எனக்குப் பிடிச்சுது.ஆனால் ஹரோவ விட பிரன்ட் ஒராள் நல்லா இருந்தது போல தோணிச்சு சொன்னா பக்கத்தில இருந்த பிசாசுகள் எனக்கு ரேஸ்ரே இல்லையாம் என்டுதுகள் சரி அத விடுவம். படம் பார்த்துக்கொண்டிருக்க ஹோல்ல இருந்து ஒரே சிரிப்புச்சத்தம்...என்னடா எங்களை விட்டிட்டு அப்பிடி ஜோக் என்டிட்டு கீழ போன அங்கிள் ஒராள் அவற்ற மனுசியைப் பார்த்துப் பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார்.
அதுவும் என்ன பாட்டு “என்னை முதன் முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்..உன் கண்கள் முதன் முதலாகப் பட்ட போது என்ன உணர்ந்தாய் “ (அப்பிடித்தான் ஏதோ..வரி சரியாய் ஞாபகம் இல்லை.அவருக்கு 55 வயசாகுது ஆனால் ரொமான்ஸ்ப் பற்றி சொல்லி வேலையில்ல.அன்ரியும் லேசுப்பட்டவா இல்லை.அவா அவை இரண்டு பேரின்ரயும் லவ் ஸ்டோரி சொல்லத் தொடங்கினா.

அவா O/L படிக்கேக்க அங்கிள் A/L படிச்சவராம்.அங்கிள் கொஸ்டல்ல இருந்தவராம்.அன்ரின்ர அம்மா அப்பாவை கண்டில கடையாம் ஸோ அவா பெரியம்மா வீட்ட இருந்து படிச்சவவாம்.இரண்டு பேரும் வல்லிபுரக்கோயில்லதான் மீற் பண்ணினவையாம் முதல்ல பிறகு ஒரே லவ் தானாம்.ஸ்ருடியோல போய் தோள்ல கை போட்டு படம் எடுத்தவையாம்.அந்த ஸ்ருடியோக்காராள் எடுத்த படத்தில ஒன்டை அன்ரின்ர பெரியப்பாட்டயும் குடுத்திட்டாராம்.பிறகென் அன்ரின்ர அப்பா அம்மா ஊருக்கு வந்தாம் அங்கிளைப் பார்த்துக் கதைச்சு அவரைப்பிடிச்சுப்போய் 17 வயதிலேயே கட்டி வைச்சிட்டினமாம்.அங்கிள்ட வோலட்ல அன்ரியும் அவரும் எடுத்த படம் இன்னும் இருக்கு.அன்ரி கிப்பி வெட்டியிருக்கிறா படத்தில சூப்பரா இருக்கிறா.

இப்பிடியே கதைச்சு கதைச்சு சாப்பிட்டம்.யாருக்காவது என்ன சாப்பாடெண்டு தெரியணுமா?? புட்டு இறால் பொரியல் இறைச்சிக்கறி கத்தரிக்காய்ப்பிரட்டல்...வேற என்ன?அவ்வளவும் என்றுதான் நினைக்கிறன்.
சாப்பிட்டு முடிய shraides (spelling ??)விளையாடுவம் என்று ஒரு கஸின் தொடங்க சரியென்று இரண்டு குறூப் ஆ பிரிஞ்சு விளையாடினம்.தங்கச்சிக்கு வந்த படம் சமுத்திரம்.அவா அலை மாதிரி செய்து செய்து காட்டினா நாங்கள் எல்லாரும் கடல் மீன் என்று சொல்லிக்கொண்டிருந்தம்.ஒருதருக்கும் கடலைச் சமுத்திரம் என்றும் சொல்லாம் என்று ஞாபகம் வரேல்ல.எனக்கு வந்த படம் பூச்சூடவா.நானும் கையில அலபத்மம் முத்திரை பிடிச்சுக்காட்டிட்டு தலையில கொண்டே வைக்கிற மாதிரிக்காட்டினமன் .பூ என்று சொன்னவை ஆனால் பிறகு கொண்டை கொண்டை என்று அதிலயே நின்டிட்டினம் ஒருதரும் சொல்லேல கடைசியா நான் பூச்சூடவா என்று சொல்ல தலையில வைக்கிற மாதிரிக்காட்டிட்டு கையால வா வா என்று சைகை செய்திருக்கலாமெல்லோ என்று சொல்லிச்சினம்.

அடுத்ததா அத்தைன்ர முறை.அவாக்கு வந்தது பாலும் பழமும்.அவா என்ன செய்தா தெரியுமோ...மேசையில கிடந்த அப்பிளையும் தூக்கி அக்கான்ர மகன்ர கையில கிடந்த பால்போத்திலையும் பறிச்சு ஆட்டி ஆட்டிக் காட்டினா.சிரிப்போ சிரிப்பு.. எல்லாரும் உடன பாலும் பழமும் என்று சொல்லியாச்சு.அவாவும் சிரிச்சுக்கொண்டு உங்கட றூல்சின் படி வாயால கதைக்கக்கூடா ஆனால் பொருட்கள் எடுத்துக்காட்டக்கூடாதெண்டு சொல்லேலதானே என்றா..வேற வழி.அன்ரிக்கு வந்தது விசில் அவா ஈஸியா வந்து விசிலடிச்சுக்காட்டினா.அப்பாக்கு வந்தது ஒரு கைதியின் டைரி.அதுவும் கண்டுபிடிச்சிட்டம் ஈஸியா.அண்ணாக்கு வந்தது மனசெல்லாம்.அதுவும் சொல்லிட்டம்.அத்தான் செய்ததைப் பார்த்துத்தான் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.அவர் படத்தின்ர பெயரைப்பார்த்திட்டு ஒரு கஸினை இழுத்துக் கீழ விழுத்திட்டு காலாலயும் கையாலயும் அடிக்கிறமாதிரி செய்தார்.அக்காட மகன் அழத்தொடங்கிட்டான் மாமாக்கு உண்மையா அடி விழுதெண்டு நினைச்சு.நாங்களும் அடிதடி , போக்கிரி என்று சொன்னம் கடைசில அது பொல்லாதவன் படமாம்.

பிறகு கொஞ்ச நேரம் பாட்டுக்குப் பாட்டு விளையாடினம்.அங்கிளும் அன்ரியும்தான் ஒரே லவ்ஸ் பண்ணிக்கொண்டிருந்திச்சினம் பாட்டுக்கு எதிர் பாட்டுப் பாடிக்கொண்டு.கஸின் ஒராள் தான் ஏதோ செய்து காட்டப்போறன் என்று எழும்பினா.எழும்பி சும்மா பாட்டு படமென்டு ரைம் வேஸ்ற் பண்ணாம நல்லதா என்னவும் செய்யணும் என்று சொல்ல அங்கிள் உடன எழும்பி “பணத்தைத் திருடு பொருளைத்திருடு ஆனால் என் டயலொக் ஐ மட்டும் திருடாதா “ என்று சொல்ல பின்ன கஸினும் “நான் யாழி இல்லை காளி என்னட்ட வம்பு வேண்டாம் “ என்று சொல்ல அடுத்த அரை மணிநேரம் அப்பிடியே போச்சு.பிறகு கொஞ்ச நேரம் பாட்டுப் பார்த்தம்.அப்ப தனுஸ்pன்ர “விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாள் “ பாட்டுப் போக தனுஸ் உந்தப்பாட்டில கொஞ்சம் வடிவா இருக்கிறார் ஐஸ்வர்யாவின் தேர்வாக்கும் உடைகள் கெயர்ஸ்டைல் என்று அலட்டினம கொஞ்சநேரம்.இப்பிடியே நேரம் போச்சு.கடைசில இரவு 11.30 ஆச்சு.அன்ரியாக்களும் அத்தையவையும் வீட்ட போக என்று வெளிக்கிட ஊரில இருந்தொரு போன்..இறுதிப்போருக்காக குடும்பத்தில ஒருவரைப்போராட்டத்தில் இணையச்சொன்னதால அன்ரியொராள் தன்ர மகளைக்கொண்டு போய்ச் சேர்த்து விட்டிட்டு இப்பத்தான் வந்து நிக்கிறாவாம் என்று மற்ற அன்ரி போன் பண்ணினா.

Saturday, March 10, 2007

பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் என்ன சிறுவர்கள் கூட...

இப்பத்தான் பெட்டையின் வலைப்பதிவில் அமௌனன் எழுதிய " வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…"படிக்க வேண்டியதாயிற்று..ஏன்டா வாசிச்சம் என்றாயிற்று ஆனால் என்ன மதி அக்கா சொல்றமாதிரி கோவத்தையும் ஆத்திரத்தையும் வச்சு என்னத்த செய்யிறது. இதைப்போன்றதொரு இன்னொரு அவலம் தான் நான் இப்ப சொல்லப்போறதும்.இதுகளை எல்லாம் மற்றாக்களுக்குச் சொல்றதால பெரிசா ஒன்றும் நடக்கப்போறேல்லத்தான் இருந்தாலும் மனசுக்குள்ள இருக்கிறதை யாரிட்டாயவது சொன்னால் ஏதோ ஒரு சுமை குறைஞ்ச மாதிரித்தானே.

மிருனாக்கு இப்பத்தான் 13 வயது ஆனால் அதுக்குள்ள அவளுடைய வாழ்க்கையைச் சீரழிக்க சில ஆமிக்காரர்களும் ஒரு தமிழ்த்துரொகியும் கங்கணம் கட்டிக்கொண்டு திரியுறாங்கள். வெளிநாட்டில இருக்கிற பிள்ளையள் தான் வயதுக்கு மீறிய வளர்ச்சியில் 12 வயதிலயே இருபது வயது மாதிரித் தோற்றமளிக்கிறார்கள் என்றால் ஊரிலுள்ள பிள்ளைகளிலும் சிலருக்கு வயதுக்கு மீறிய வளர்ச்சியிருக்கும்.மிருனாவும் அப்படித்தான் துறுதுறு என்று எப்பவும் வாயடிச்சுக்கொண்டு திரிவாள் அந்தத்துடுக்குத்தனம் தான் ஒரு துரொகியை ஈர்த்திருக்கிறது.

அந்தத்துரொகி சும்மா லேசுப்பட்டவனல்ல.ஏற்கனவே எங்கள் குடும்பத்திலுள்ள ஒருவரைக் கேவலம் பத்தாயிரம் ரூபாவுக்காகக் காட்டிக்கொடுத்து எமனானவன். ஆமிக்காரருடைய சப்போட் இருக்கிற ஒரே காரணத்தால மிருனா பாடசாலை செல்லும் நேரம் ரியூசனுக்குச் செல்லும் நேரம் என அவளைப் பின் தொடர்ந்தான்.ஆக்கினை தாங்காமல் மிருனா தந்தையிடம் சொல்லிவிட்டது அந்தத் துரோகிக்கு வசதியாகப் போய்விட்டது.ஆமிக்காரர் கேட்டுக்கேள்வியின்றி எங்களுடைய வளவுக்குள் இருக்கிற கிணத்தடியில் வந்து குளிக்கத்தொடங்கினாங்கள் கூடவே அந்தத் துரோகியும்.எப்படியோ யாரோ சின்னப்பிள்ளைகளிடம் கேட்டு மிருனாவின் பிறந்தநாளை அறிந்துகொண்டு கேக் ம் வாங்கிக்கொண்டு தைரியமாக வீடுவரைக்கும் வந்து பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னான்.

ஊர்ப்பெரயவர்கள் சிலரின் ஆலோசனைப்படி அந்தத்துரோகியின் பெற்றோரிடம் முறையிட்டும் எந்தப்பலனுமில்லை.தூரத்துறவினர் ஒருவரையும் அந்தத்துரொகி காட்டிக்கொடுத்ததுதான் மிச்சம்.

மிருனாவைக் கண்ணும் கருத்துமாகக் காப்பதே பெற்றோருக்கும் உற்றோருக்கும் தலையாய கடமையாகப் போக அவர்களுடைய அன்றாட வாழ்க்கையே ஆட்டம் காணத்தொடங்கியதால் இனிமேலும் அங்கிருப்பது நல்லதல்ல என்பதால் தற்போது மிருனாவும் குடும்பத்தினரும் ஊரைவிட்டுப் போய்விட்டார்கள்.ஓரளவு பணவசதியுள்ளவர்களுக்குத் தம்மை பாதுகாக்கும் வல்லமை கொஞ்சம் அதிகமாகவேயுண்டு மற்றவர்களுக்கு??????

இதுதான் எங்களுக்குச் சொல்லப்பட்ட உண்மை இதில் எதைக் குறைத்துச் சொன்னார்களோ நானறியேன். தெரிந்தது இந்தப்பிரச்சனை தெரியாமல் எத்தனையோ???? இன்று பொடிச்சியின் பதிவைப் படித்ததும் தான் தெரிந்துகொண்டேன் பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் என்ன சிறுவர்கள் கூட இந்த வெறியர்களின் பிடியில் விதி விலக்கல்ல என்று.

Wednesday, March 07, 2007

குறையொன்றுமில்லை....

குடுத்து வச்சனீங்கள் உங்களுக்கென்ன கவலை பிள்ளையா குட்டியா எதைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை சுதந்திரமாத் திரியுறீங்கள் இப்பிடித்தான் இளையோரைப் பார்த்து பெரியாக்கள் சொல்றவை.அதெல்லாம் சுத்தப்பொய்!!!!!எங்களுக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினை இருக்குப்பாருங்கோ சும்மா எப்ப பார்த்தாலும் உங்களுக்குத்தான் பிரச்சினை இருக்கெண்டு புலம்பாதயுங்கோ.எங்கட கவலைகள் என்ன என்னெண்டு சொல்றன் கேளுங்கோ இல்லையெண்டால் இடையிலையே தலையைப் பிச்சுக்கொண்டு ஓடிப்போயிடுங்கோ.

படிப்பு படிப்பு படிப்பு அதான் எங்கட முதற் கவலை.பள்ளிக்கூடத்திலயும் அதத்தான் செய்யிறம் வீட்டயும் அதுதான். 70 வீதமானோருக்கு படிக்கிறதும் படிச்சு முடிய என்ன செய்யப்போறம் என்றதும்தான் தற்போதுள்ள பெரிய பிரச்சனை.எங்களுக்கே தெரியும் நாங்கள் ஒழுங்காப் படிக்காட்டி உருப்படமாட்டம் என்று பிறகேன் எப்ப பார்த்தாலும் படி படியென்று உயிரை வாங்குறீங்கள். படிக்கிறதெண்டாலும் சரி தேத்தண்ணி குடிச்ச கப் ஐக் கழுவி வைக்கிறதெண்டாலும் சரி நாங்களா நினச்சுத்தான் செய்வம் சும்மா நொய் நொய் என்றால் உங்க ஒரு அலுவலும் நடக்காது சொல்லிட்டன்.

அடுத்தது நேரம்.கிட்டத்தட்ட 10 மணித்தியாலம் போக்குவரத்திலயும் வகுப்பிலயும் செலவழியும்.வீட்ட வந்து ஒரு 4-5 மணித்தியாலம் ஹோம்வேர்க் பிறகு Facebook, MSN தமிழ்மணம் யாழ் அந்த வெப் இந்தப்பாட்டெண்டு ஒரு 3 மணித்தியாலம்.சாப்பாடு பிறகு Grey's Anatomy ,Desperate housewives, House என்று ஒரு 2 மணத்தியாலம் செலவழிக்கிறம்.பிறகு நித்திரை கொள்ள நேரம் காணாது .ஸோ ஒரு நாளில 24 மணித்தியாலம் நேரம் காணவே காணாது எங்களுக்கு.வார நாட்களிலாவது நண்பர்களோட சேர்ந்து உருப்படாம போகலாம் என்றா அதுக்கும் வழியில்லை.பகுதிநேர வேலையென்று ஒன்றைக் கண்டுபிடிச்சதால எங்களுக்கெண்டொரு ஸோசல் வாழ்க்கையே இல்லாமப் போச்சு.

இன்னும் வாசிச்சுக்கொண்டிருக்கிறீங்கிளா?? இல்லாட்டி ஓடிப்போயிற்றீங்கிளா? அட மறந்தே போனன் மகளிர் தினம் வருதென்ன...எல்லா மகளிருக்கும் வாழ்த்துக்கள் அதுசரி ஆடவர் தினம் எப்ப? சரி நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கிறன்.


முக்கியமான பிரச்சனை காசு.70 வீதமான விளம்பரங்கள் எங்களைக்கவரத்தான் பாடுபடுகின்றன ஆனால் OSAP, பகுதிநேர வேலை ,பெற்றோர் தரும் காசும் சேர்த்தாலும் காசு எப்பவுமே பற்றாக்குறையாவே இருக்கு.அதான் ஏனெண்டு விளங்கேல்ல.எங்களை நம்பியே உருவாக்கப்படுற பொருட்களையெல்லாம் வயசுபோன ஆக்கள் அனுபவிக்க விட்டிட்டு இருக்கவேண்டியிருக்கு சா.

இப்பிடி நாங்கள் ஏற்கனவே பிரச்சனையளோட இருக்கும்போது ஆதரவாக இருக்கவேண்டிய பெற்றோர்களுக்கு எங்கட பிரச்சனையள் விளங்குதில்லை.அப்பிடி அவைக்கு விளங்காததும் எங்களுக்குப் பெரிய பிரச்சனைதான்.யார்க்கெடுத்துரைப்போம்??? (வசந்தனண்ணாவைப்போல கதைப்பம் என்று வெளிக்கிட்டன் சரி வரேல்ல :-) :-))

நண்பர்களோட செலவழிக்க நேரம் கிடைப்பதில்லை அப்பிடியே எப்பவாவது பனிப்புயல் அடிச்சு வகுப்புகளில்லாமப் போனாலும் வேற வேற இடங்களில இருக்கிற நண்பர்களைப் பார்க்க முடிவதில்லை.அதால நண்பர்களிடம் இருந்து விலகி விலகிப் போறமாதிரியொரு உணர்வு.வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரியில்லையே மாறிக்கொண்டே போகுதே என்றொரு கவலை. சிலருக்கு நண்பர்கள் அம்மா அப்பா சகோதரர்களைத் தவிர்த்து அந்த ஒரு ஸ்பெஸல் சம்1 இல்லையென்ற பிரச்சனை.அப்பிடி இருந்தாலும் அந்த ஸ்பெஸல் சம்1 உடன் கூட இருப்பதற்கு நேரம் இல்லாத பிரச்சனை.எப்பவாவது தலைக்குள்ள நர்த்தனமாடும் ஏன் வாழுறம் யாருக்காக வாழ்கிறோம் என்ன சாதிக்கப்போறம் போன்ற பொன்னான கேள்விகள், சில நேரம் தனிமை ,மனவுளைச்சல் அம்மா அப்பாவோட சண்டை இப்பிடி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

உடலமைப்பும் எங்களுக்குப் பெரிய பிரச்சனைதான்.ஸெக்ஸியா இருக்கோணும் என்றுதான் எல்லாருக்கும் ஆசை.Dhoom 2 பிபாஸா பாபாஸ+ மாதிரி இருக்கோணும் என்று ஹா ஹா.என்ர நண்பியொராள் சொன்னா உலகத்தில எய்ட்ஸ் ஆல பாதிக்கப்பட்டிருக்கிற ஆக்களை விட டயற்றிங் என்று வெளிக்கிட்டு ஒழுங்கான சாப்பாடில்லாம வருந்தி Anorexia, Bulimia போன்ற நோயை வாங்கின பெண்கள்தான் அதிகமாக இருக்கினம் என்று.எதை எதையோட ஒப்பீடு செய்து பார்க்கினம் பாருங்கோ.ஏனென்றால் விளையாட்டு வீராங்கனைகளில் கூட திறமையுள்ளவர்களை விட கவர்ச்சியா இருக்கிறவைக்குத்தான் அதிக மதிப்பு மீடியாக்களின் செல்வாக்கு எல்லாமே.போன கிழமை உறவினர் ஒருவருடைய உணவுவிடுதி+பார் க்குச் சென்றபோது அங்கே ரெனிஸ் பிளேயர் Anna Kournikova ன் கவர்ச்சியான படம் ஒன்றைப்பார்த்திட்டு நான் கேட்டேன் அதிக போட்டிகளில் வெல்லாத Anna Kournikova ன் படத்துக்குப் பதிலா சிறந்த கோல்ப்பிளேயர் Karrie Webb ன்ர படத்தை வைக்கலாம் தானே என்று அதுக்கு அவர் சொன்னார் Anna Kournikova போன்றவர்களுடைய படத்தைப் பார்த்தாத்தான் இன்னுமொரு கப் வாங்கி அடிப்பினமாம் ஆக்கள்.நானும் பின்னச் சொல்லிட்டு வந்தன் றித்திக் றொசான்ட படமும் ஒன்றை வாங்கி வையுங்கோ நிறையப் பெட்டையள் வந்து நிறைய கப் வாங்கி அடிப்பினமென்று.

இந்த ஆராய்ச்சியாளர்களால கூட எங்களுக்குப் பிரச்சனைதான்.ஒரு ஆராய்ச்சில பெண்கள்தான் அதிகமாக மற்றவர்களிடம் உதவியை எதிர்பார்க்கிறார்கள்.தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும் தங்களைப்பற்றிய நல்லெண்ணங்கள் நிறைய இல்லை தாங்கள் வடிவோ என்று சந்தேகம் என்றெல்லாம் கண்டுபிடிச்சவையாம். ஆனால் உண்மையாவே இளையோர்களில் ஆண் பெண் என்று பாகுபாடில்லாம எல்லாருக்குமே இந்தப்பிரச்சனை இருக்கு ஆனால் என்ன ஆண்கள் மற்றவர்களிடம் உதவி எதிர்பார்க்கக்கூடாது தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஒரு முகமூடியைப் போட்டு வச்சிருக்கிறதால உண்மையாவே பிரச்சினையிருக்கிற ஆண்கள் கூட அதை வெளியில காட்டிக்கொள்றேல்ல.

இன்னும் நிறைய இருக்குத்தான் ஆனால் நீங்களும் பாவம்தானே உங்கட பிச்சனைகளைப் பார்க்கப்போங்கோ பிறகு ஆறதலா மிச்சம் சொல்றன்.

Tuesday, March 06, 2007

கடவுளே எனக்கு யாரப்பா எதிரி????

அன்புள்ள வலைப்பதிவுலக நண்பர்களுக்கு!!!!!!!!

என்னுடைய பெயரில் இருந்து கடந்த இரண்டு நாளாக அசிங்க அசிங்கமா யாரோ பின்னோட்டம் போடுகிறார்களாம். பாருங்க சினேகிதிக்கு வந்த சோதனையை.
அந்தப்பின்னோட்டம் வந்த பெயரைக் கிளிக் பண்ணினால் என்னுடைய profile க்கு லிங் போகுதாம். இது நண்பரொருவர் எனக்குத் தெரிவித்தது இது போல உங்களில் வேறு யாருக்கும் பின்னோட்டம் வந்ததா?? சினேகிதியைப் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே நான்பாட்டுக்கு நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கிறன் எனக்குப்போய் ஏனிப்பிடியெல்லாம் அன்பர்கள் வந்து வாய்த்திருக்கிறார்களோ தெரியேல்ல.

கடவுளே எனக்கு யாரப்பா எதிரி?? என்னவும் பிரச்சனையென்றால் பேசித் தீர்த்துக்குவம் உப்பிடி அசிங்கம் பிடிச்ச வேலை செய்யாதீங்க பிளீஸ்..

வேற என்னத்த சொல்ல வேற யாருக்கும் என் பெயரில் இருந்து தப்பான பின்னோட்டம் வந்திருந்தா அது நான் இல்லை என்று சொல்லவே இந்தப் பதிவு.

இனிம நான் நிம்மதியா யாற்ற பதிவுக்கும் பின்னோட்டம் போட ஏலாதோ என்று யோசிக்கிறன்.

Sunday, March 04, 2007

ஒளிப்படக் கலைஞர் கஜானி




என்ன சொல்ல...படமெடுப்பது சும்மா பொழுதுபோக்கு போல நினைக்கிற என்னைப்போல ஆக்களுக்கு அந்தக்கலையில் எவ்வளவு விசயங்கள் பொதிந்திருக்கென்று சொல்கிறார் கஜானி.
அவரைப் பற்றி அப்பால் தமிழில் கருணாகரன் எழுதியிருக்கிறார்.
வாசித்துப்பாருங்கள் மறக்காமல் கஜானியின் படத்தொகுப்பையும் பாருங்கள்.தாகத்தின் ஒளியும் நிழலும்

Saturday, March 03, 2007

தன்வினை தன்னைச் சுடும்...

இது நான் தாயகப்பறவைகள் பங்குனி இதழ் சமுதாயக்கண்ணோட்டத்துக்காக எழுதியது.இப்ப பிரபாண்ணாட மனசினக்கரே -முதுமையின் பயணம் வாசிச்சதால இதை இங்க பதியணும் என்று தோணிச்சு.

அன்புள்ள அம்மா அப்பாக்கு நிர்மலா எழுதிக்கொள்வது!

அன்புள்ள என்று தொடங்கிட்டன் ஆனால் உண்மையாவே உங்களிருவர் மீதான அன்பு தற்போது மேலோங்கியிருக்கிறதா என்று இப்ப எனக்கு சந்தேகமாயிருக்கு.நான் உடலளவில நலமாகத்தானிருக்கிறேன் ஆனால் உள்ளத்தளவில மிகவும் கூனிக்குறுகிப்போயிருக்கிறேன்.நீங்களிருவரும் நலமாய்த்தானிருப்பீர்கள் அதிலெனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.ஒரு வீட்டு வருமானமா உங்களுக்கு...

நீங்கள் சின்ன மாமாவுக்கெழுதிய கடிதத்தை தற்செயலாகப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அதைப்படித்தது முதல் உங்களிருவர் மீதும் எனக்கிருந்த மதிப்பு அதள பாதாளம் வரை போயிற்று.என்னடா பல வருடங்களிற்குப் பிறகு எழுதும் மடலை இப்படி எழுதியிருக்கிறாளே என யோசிக்கிறீர்கிளா? எல்லாம் உங்கள் பணத்தாசைக்கு ஒரு எல்லையில்லை என்பதைப் புரிந்து கொண்டதன் விளைவுதான்.

ஏனம்மா உன்னைப்பெற்ற தாய் தானே அம்மம்மா? இல்லை உன்னை மட்டும் வாங்கி வளர்த்தாவா?? அம்மம்மாவை பாராமரிக்க உனக்கு முடியாதா? நேரமில்லையா? ஓருவரை வேலைக்கமர்த்தித்தான் அம்மம்மாவைக் கவனிக்க வேண்டுமா? மூத்தமகள் என்று அம்மம்மா உன்மீது எவ்வளவு பாசமாக இருப்பா.அவா இப்ப உனக்குச் சுமையாகிட்ட என்ன? வயசு போன நேரத்தில உன்னை ஒரு சொல்லுக் குறை சொல்லிட்டா என்றா அதை நீ நடுச்சாமம் ஒரு மணிக்கு கட்டயாம் இங்க போன் பண்ணாச் சொல்லாட்டா உனக்குத் தூக்கம் வராதென்ன? நான் கனடாக்கு வந்தே நான்கு வருடங்களாகப்போகின்றன ; இன்னுமா உனக்கு கனடா நேரம் சரியாகப் பிடிபடேல்ல என்ன? மாமாவை மாறி மாறி மாதம் மாதம் உனக்குப் பிறிம்பா அம்மம்மாவைக் கவனிக்கப் பிறம்பாவென்று காசனுப்பினம் தானே பிறகேனம்மா அம்மா அங்க விளுந்திட்டா அந்த எக்ஸ்றே எடுக்கவேணும் இந்த மருந்து வாங்கவேணும் என்று ஓரு சின்ன விசயத்தைக் கூட பணம் கொட்டும் விசமாய் மாத்த பொய்யெல்லாம் சொல்லி மாமாவேன்ர குடும்பத்தில நிம்மதி இல்லாமப் பண்றாய்?

உனக்கொரு வியசம் தெரியுமா? இங்க ஒரு தனி றூமுக்கு ஒரு மாதத்துக்கு குறைந்தது 500 டொலர்களாவது வாடகை குடுக்க வேணும்.அப்பிடிப்பார்த்தா இந்த நாலு வருசத்துக்கும் வாடகை சாப்பாடெல்லாம் சேர்த்தா உங்கத்த காசுக்கு நீ மாமாவுக்கு 25 லட்சத்துக்குக் கூட குடுக்க வேணும்.சின்ன மாமாவோ மாமியோ எப்பவாவது உன்னட்ட ஒரு வாய் இதைப்பற்றிக் கேட்டிருப்பார்களா? ஆனால் ஏனம்மா நீமட்டும் இவ்வளவு சுயநலமாயிருக்கிறாய்?

சின்னமாமி ஊரில சாளி ஓடிக்கொண்டு பள்ளிக்கூடம் போற அழகைப்பார்த்து நானும் ரீச்சரா வரவேணும் என்று ஆசைப்பட்டவ நான்.ஆனால் இங்க மாமி தானும் படிச்சுப் படிச்சு மாமாவுக்கும் உதவி செய்யுறதுக்காகத் தானும் கஸ்டப்பட்டு பக்டரிக்குப் போய் வேலை செய்யுறா. பட்டதாரியான அவாக்கென்ன தலையெழுத்தா இப்படிக் கஸ்டப்படவேணும் என்று? ஆனால் நீ ? நாள் முழுதும் ரீவியைப் பார்த்துக்கொண்டு ஊர் வம்பு கதைச்சுக்கொண்டிருக்கு யாரோ வந்து ஏனோ தானோ என்று அம்மம்மாவை அவசர அவசரமாக் கவனிச்சிட்டுப்போயினம். சின்ன மாமின்ர குடும்பத்தப் பார்த்த உனக்கென் அவ்வளவு இளக்காரம்? உங்ளைப்போல சகோதரங்களிட்டயோ மகளிட்டயோ இரந்து வாழேல்ல என்றதால உன்னை விட அவர்கள் ஒரு படி கீழ என்ற எண்ணம் உனக்கு.இதில உனக்குப் பெருமை வேற.

குட்டி மாமா சின்ன மாமா பெரியமாமா எவருமே உன்னை; இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.அதனால் தான் நீ கேட்கும் போதெல்லாம் முப்பதாயிரம் நாற்பதாயிரம் எனப் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்தப் பணத்தைச் சம்பாதிக்க எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள் என்று தெரியுமா உனக்கு?

சின்ன மாமா நாள் முழக்க ஓய்வெடுக்காமல் இங்கேயிருந்து புளோரிடா வரைக்கும் ட்றக் ஓடிப்போட்டு வந்து சிவனே என்று கொஞ்சநேரம் படுத்தா அந்தநேரம் பார்த்து போன் பண்ணுவாய் நீ. இந்த நேரம் ஏன் அக்கா போன் பண்றா என்று மாமா கவலையோட போனையெடுத்தா நீ அம்மம்மாவைப்பற்றிப் புகார் சொல்றாய்.சா வெக்கமா இருக்கம்மா எனக்குன்னை நினைச்சா. வயசு போகப் போக பெரியவர்களும் குழந்தைகள் போலாவர்கள் என்று சொல்றவை தானே.அப்ப அம்மம்மாவையும் ஒரு குழந்தை போல நினைச்சு அவா சொல்றதுகளை உன்னால தாங்கிக்கொள்ள முடியாதா? மாமாதான் நித்திரைத் தூக்கத்தில உன்ர சின்னத்தனமான புகார்களைக் கேட்ட எரிச்சலில “போனை வையக்கா உனக்கு நேரங்காலம் தெரியாம இப்ப போய் அம்மா பேசிப்போட்டா என்றாய்..நீயுந்தான் தன்னை எப்ப பார்த்தாலும் கரிச்சுக்கொட்டுறாய் என்று அம்மா சொன்னவா அதுக்கா நான் உன்னட்ட என்னவும் விளக்கம் கேட்டனானே” என்று ஒரு கேள்வி திருப்பிக்கேட்டா உடனே போனை அடிச்சு வைச்சிட்டுப் பெரிய மாமாக்குப் போன் பண்ணி அழுது காட்டியிருக்கிறாய்.உடனே பெரிய மாமாவும் விளக்கம் கேக்க வாறார்; விடிஞ்சதும் விடியாததுமாய்.ஏனம்மா இப்பிடியெல்லாம் செய்து ஏற்கனவே வேரறுந்த மரங்கள் போல பனி தேசத்தில இன்னும் அல்லலாடிக்கொண்டிருக்கிற ஆக்களை இன்னும் நோகடிக்கிறாய்.

உன்னையும் அப்பாவையும் விட இங்க எல்லாரும் கஸ்டமான வாழ்க்கைதான் வாழ்கிறார்கள் என்று சொன்னால் நம்பவா போறாய் நீ..உனக்கு எண்ணாமல் காசனுப்பிட்டு தாங்கள் ஒவ்வொரு டொலரையும் எண்ணி எண்ணிச் செலவழிக்கிறார்கள்.மாமாவைக் கஸ்டப்படுத்தக்கூடாதென்றதுக்காக நான் பார்ட் ரைம் வேலை செய்கிறேன் ஆனால் நீ மற்றாக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கால் மேல கால் போட்டுக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்றாய்.

அப்பா வீடு வாங்குற அலுவலாய் என்ர பிரண்ட்ட அங்கிளைப் போய்ப் பாரத்து நீர்கொழும்பில முப்பது லட்சத்துக்கு ஒரு வீடு ஓகே பண்ணிட்டாராமே.இதைப்பற்றி யாராவரு ஒரு மாமாவுக்காவது மூச்சு விடேல்ல நீங்கள் இரண்டு பேரும்.
ஏனம்மா அம்மம்மாவுக்குப் புதுசுh சஸ்டேஜன் மா வாங்கினதையே சொல்லிக்காட்டுற ஆள் நீ வீடு வாங்கப்போறம் என்றதை மட்டும் ஏனம்மா சொல்லேல்ல? மாமாவேட்ட இருந்து கொள்ளையடிச்ச காசென்று எல்லாருக்கும் தெரிஞ்சிடுமென்றா?

அக்கான்ர கல்யாணத்துக்குக் காணாது காணாதென்று எத்தினதரம் திரும்ப திரும்பப் போன் பண்ணினீங்கிளே அப்பா அப்ப இல்லாத காசு இப்ப மட்டும் எங்க இருந்து வந்திச்சு? கொள்யைடிச்ச காசுதானே. நீங்கள் கழுத்தில கையில எல்லாம் மினுங்க மினுங்கப் போட்டுக்கொண்டு எனக்கு கனடாவில மூன்று இளிச்சவாய் மச்சான்கள் இருக்கிறாங்கள் என்றதைச் சொல்லாமல் சொல்ற மாதிரி பவுசு காட்டிக்கொண்டு திரிய மாமாக்கள் இங்க என்ன பாடு படவேண்டிக்கிடக்கு.

சா உங்கள் இரண்டு பேரையும் அம்மா அப்பாவா அடைய நானும் அக்காவும் போன பிறப்பில என்ன புண்ணியம் பண்ணினமோ தெரியேல்ல.அக்காவது லண்டனில நிம்மதியா இருக்கட்டும்.இந்த செமஸ்டரோட என்ர படிப்பு முடியுது. நிம்மி கொழும்புப்பக்கம் வருவாள்;.அவள்ட கல்யாணத்தைச் சாட்டியும் மாமாவேட்ட் காசு வறுகலாம் என்று கனவிலயும் நினைக்காதயுங்கோ.அப்பிடியே நான் வந்தாலும் உங்களோட இருக்க மாட்டன். மாமாவை அம்மம்மாவை இங்க கூப்பிட எவ்வளவு முயற்சி செய்தும் அம்மம்மான்ர பிடிவாதத்தால அது நடக்கேல்ல ஆனால் நான் அங்க வந்து எப்பிடியாவது அம்மம்மாவைச் சம்மதிக்க வைச்சிடுவன்.அது முடியாமல் போனால் நான் வந்து அம்மம்மாவைக் கூட்டிக்கொண்டுபோய் வேற எங்கயும் வச்சுப் பார்ப்பன்.

கடைசிக்காலத்தில நீங்கள் இரண்டுபேரும் களவா வாங்கின வீட்டைக் கட்டிப்பிடிச்சுகொண்டிருங்கோ.நீ அம்மம்மாவை அன்பாப் பார்த்தது போல நீங்கள் வாங்கப்போற வீடு உங்கள் இரண்டுபேரையும் அக்கறையோட பார்த்துக்கொள்ள என் வாழ்த்துக்கள்.

-சினேகிதி-