Custom Search

Saturday, July 30, 2005

நானும் டாட்டா

இன்று வேலையில் கடைசிநாள்.இனிம இப்போதைக்கு தமிழ்மணத்தில் எழுத நேரம் கிடைக்காது. Uni தொடங்கி இரண்டு மூன்று மாதத்தில் திரும்ப வருவன் என்று நினைக்கிறன் அதான் உங்கள் எல்லாருக்கும் சொல்லிட்டுப் போவம் என்று நினைச்சன்.சொல்லிட்டன்.

எனக்கு தமிழ்மணத்தை அறிமுகம் செய்து வைத்த தமிழ்நாதத்துக்கு நன்றி.

வலைப்பதிவொன்றை தொடங்க உதவி செய்த நிலவுநண்பனுக்கு நன்றி.

என்னையும் எழுத வைச்ச வலைப்பதிவுளுக்கும் நன்றி.

நான் எழுதியவற்றை வந்து வாசிச்ச உங்களுக்கும் நன்றி.

Uni தொடங்க இந்தப்பக்கம் வர்றது கஷ்டம். Uni க்குப் போய் புது இடங்கள் ஆக்கள் எல்லாம் பழகினாப் பிறகு திரும்ப வாறன்.

Tuesday, July 26, 2005

இந்தாங்கோ மிச்ச படங்கள்இந்த படங்களில இருக்கிற இடங்களுக்கு போக விரும்புவர்கள் தயவு செய்து மதி அக்காவுடன் தொடர்பு கொண்டு ஒரு வலைப்பதிவாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவும்.

சமையல் பொறுப்பு வேற யாரு கறுப்பிதான்.அவாக்கு சொல்லிப்போடதாங்கோ பிறகு அகப்பைக்காம்போட என்னை அடிக்க வந்திடுவா. ஸ்கேப்ப்ப்ப்ப்ப்.

மொன்றியலில் மூன்று நாட்கள்ஒவ்வொரு வருசமும் மொன்றியல் வல் மொறின் தேர் திருவிழாக்கு நாங்கள் போறது வழக்கம்.இந்த முறை 2 கிழமைக்கு முன்னமே மொன்றியலுக்குப் போனாங்கள். வெள்ளிக்கிழமை இரவு போய்ச் சேர்ந்தம்.பெரியம்மா வீட்ட போட்டு மாமா வீட்ட இரவு தங்கிட்டு அடுத்த நாள் வல் மொறினுக்குப் போனம்.சாமி கும்பிட்டிட்டு கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தம். ஒருத்தர் வந்து ஆக்களுக்குப் பிரசாதம் குடுக்க திருநீற்றை கொஞ்சம் கொஞ்சமா சின்ன சின்ன பொட்டலம் கட்டித் தாங்கோ எண்டு சொன்னார்.நாங்களும் சரியென்று போய் பாயில உக்கார்ந்தா ஒரு அம்மா வந்து சொன்னா எல்லாரும் தலைமயிரைப் பின்னிக் கொண்டு வாங்கோ என்று.அதையும் செய்திட்டு வந்திருந்து பொட்டலம் கட்டத் தொடங்கினா திரும்ப வந்து சொன்னா உப்பிடிக் கதைச்சு கதைச்சு வேலை செய்யக்கூடாது…நீங்க கதைக்க கதைக்க எச்சில் எல்லோ திருநீற்றில விழும்….பிறகு மௌன விரதம் தான்.வேலை செய்து முடிய எங்களுக்கு ஸ்பெசல் அன்னதானச் சாப்பாடு தந்தவை.மத்தியான நேரம் நல்ல பசி வேற கோயில் சாப்பாடு தேவாமிர்தம் மாதிரி இருந்தது( தேவாமிர்தம் எப்பிடி இருக்கும் என்று சத்தியமாத் தெரியாதுங்கோ) அதையும் ஒரு பிடி பிடிச்சிட்டு வெளியில பொங்கின ஆக்கள் தந்த பொங்கலையும் சாப்பிட்டிட்டு ஆச்சிரமத்துக்கும் போட்டு பிறகு Old Montreal Park க்குப் போனாங்கள்.அதை நாங்க வர்றம் என்று தெரிஞ்சு பூட்டிப்போட்டினம்.

பின்னேரம் கடைகளுக்குப் போனாங்கள்.அடுத்த நாள் Granby Zoo க்குப் போனம்.அங்க போய் எங்கட சொந்தக்காரர்களான புலி பூனை கரடி பாம்பு பல்லி ஓணான் ஒட்டகம் யானை நாய் நரி உடும்பு மயில் புறா கிளி எருமை மாடு இப்பிடி நிறையப்பேரைச் சந்திச்சம்.எருமை மாட்டைப் பார்த்திட்டு அம்மா சொன்னா எருமை மாட்டுக்கு உரோமம் எல்லாம் கழருது என்று உடனே என்ர கஸின் சொன்னா பெரியம்மா உதே எருமை மாடு….அம்மா பின்ன என்னை ஏன் எருமை மாடு என்று திட்டினீங்கள்?? என்னைப் பார்க்க அப்பிடியே இருக்கு?? அந்த நேரம் எல்லாரும் சிரிச்சாலும் இந்த அம்மாக்களின்ர அலும்பல் தாங்க முடியல…எப்பிடி அப்பிடித் திட்டலாம்??சொந்தக்காரருக்கு டாட்டா சேரியோ சொல்லிப்போட்டு குளிக்கப் போனம். வெக்கைக்கு அங்க செயற்கையா செய்து வைச்சிருக்கிற beach ல அலையடிக்க குளிக்கிறது சுகம் சுகமே.காலமை பத்து மணிக்கு வந்து இரவு ஏழு மணிக்கு Zoo பூட்டும் வரைக்கும் அங்கதான் தஞ்சம்.

அடுத்த நாள் Saint Joseph Church க்குப் போட்டு ரொரண்டோவுக்கு வர வெளிக்கிட சித்தப்பான் வான் கசால் பண்ணத் தொடங்கிட்டுது.சரி இதான் சாட்டெண்டு இன்னுமொரு நாள் நிக்கப்போறம் என்று சந்தோசப்பட்டா அது பிறகு பிரச்சனை குடுக்கேல்ல நாங்களும் வீட்ட வந்து சேர்ந்திட்டம்.

Monday, July 25, 2005

அப்படியே ஆகட்டும்

-சினேகிதி-

ஹலோ தர்மினியே?

ஓம் தாத்தா சொல்லுங்கோ.

அம்மா அப்பா ஒருத்தரும் இல்லையே??

தாத்தா அவையள் பின்னால தோட்டத்துக்க நிக்கினம் போன் கொண்டு போய் குடுக்கிறதே??

இல்லை அவையைக் குழப்ப வேண்டாம் நான் எங்களுக்கு ஒரு றூம் ஒன்று வாடகைக்கு தேவையெண்டு சொல்லி வைக்கத்தான் எடுத்தனான்.

ஏன் தாத்தா உங்களுக்கு ஒரு றூம்?? உங்களுக்கும் பாட்டிக்கும் ஒரு றூம் எண்டா அப்ப விமல் மாமா எங்க இருக்கப்போறார்?

அவனுக்கு நான் பார்த்து வைச்ச பொம்பிளையள் ஒருத்தரையும் பிடிக்கேலயாம் அதான் கூட வேலை செய்யுற ஒரு குஜராத்தி பிள்ளையை விரும்பிறானாம் அவளைத்தான் கட்டப் போறானாம்.எல்லாத்தையும் இப்பதானே சொல்லுறான்.வீட்டுக்கு நோட்டிசும் குடுத்திட்டுத்தான் எங்களிட்டயே சொல்றான்.வாற மாசம் கல்யாணமாம் அதுக்குப் பிறகு மிசிசாகாவில போய் இருக்கப் போயினமாம்.தர்மினி பாட்டிய நடக்கப் போப்போறாவாம் நான் போனை வைக்கிறன் நீங்க அம்மா அப்பாட்ட சொல்லுங்கோ.

சரி தாத்தா நீங்க இந்த முறை எங்கட தோட்டம் பார்க்க வரேல்ல…எப்ப வாறீங்கள்?

வாறன் ஒரு நாளைக்கு…இந்த முறை தோட்டத்தில என்ன வைச்சிருக்கிறியள்?

பூசணி கத்தரி வெங்காயம் மிளகண்டு உருளைக்கிழங்கு கீரை தக்காளி.

பறவாயில்லையே கனடாவிலயும் இவ்வளவு மரக்கறி நட்டுப் பராமரிக்கிறா அம்மா..சொல்லி வையுங்கோ தாத்தா இந்தக்கிழமை வருவன் எண்டு.சரியடா நான் பிறகு கதைக்கிறன்.

சரி தாத்தா.bye.

எங்கட பக்கத்து வீட்டில முந்தி இருந்த தாத்தா நேற்று போன் பண்ணினார்.62 வயசிலயும் என்ன சுறுசுறுப்பாய் வேலை செய்வார்.பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு குறைந்த சம்பளத்துக்கு உதவி ஆசிரியரா இருக்கிறார்.அவங்க குடுக்கிற சம்பளம் பாட்டின்ர மருந்துக்குதான் காணும்.தாத்தாவும் பாட்டியும் வேற மதத்தவர்கள் காதலிச்சு கல்யாணம் பண்ணி எப்பவுமே சந்தோசமா இருக்கினம்.பாட்டிக்கு இப்பவும் தலைக்கு குழிச்சா தலை துவட்டி விடுவார்.பொம்பிளைப் பிள்ளையள் இல்லை.எங்களில சரியான பாசம்.விமல் மாமா ஒரு போக்கு.எல்லாரோடயும் பெரிசாக் கதைக்க மாட்டார்.தாத்தா சொல்றதுக்கு எதிராத்தான் எல்லா வேலையும் செய்வார்.பாட்டி கதை கேட்டா பட்டும் படாமலும் ஏதாவது முணுமுணுத்துக் கொண்டு போவார்.இப்ப அவருக்கு கல்யாணமாம் அதுக்கு ஏன் தாத்தாவை வீடு மாறவேணும்.பாவம் தாத்தா இந்த வசயிலயும் பஸ்சில வேலைக்குப் போய் வரோணும்.

ஊரில எங்கட தாத்தா எங்கட வீட்டதான் இருந்தவர்.எங்கட வளவுக்குள்ள ஏழு வீடுகள். சித்தப்பாவேன்ர அன்ரியவேன்ர மாமாவேன்ர இப்பிடி எல்லா வீடும் பக்கத்தில பக்கத்தில.தாத்தா எல்லாற்ற வீட்டுக்கு நடந்து திரிவார்.அவர் ஆயுள் வேத வைத்தியர்.அப்ப ஆக்கள் நாடி பிடிச்சு பார்க்க குழந்தைப் பிள்ளைகளுக்கு தொய்வு பார்க்கவெண்டு வருவினம்.தாத்தா என்னவோ எல்லாம் வாயுக்குள்ள சொல்லிக்கொண்டு கையில ஒற்றைக்கை முத்திரை இரட்டைக்கை முத்திரை எல்லாம் பிடிப்பார்.சின்னப் பிள்ளையள் நாங்க பாரத்துக்கொண்டு நிண்டிட்டு தூரத்தில போய் நிண்டு கொண்டு அப்பிடிச் செய்து பார்க்கிறது. தாத்தா கண்டா காணும் ஓடிடுவம் ஏனெண்டால் சும்மா அப்பிடிக் கையால செய்யக் கூடாதெண்டு பேச்சு விழும்.

தாத்தாக்கு ஆர் சுங்கான் கழுவி புகையிலை இடிச்சுப் போட்டுக் குடுக்கிறமோ அந்தப் பேரப்பிள்ளைக்கு அண்டைக்குத் தாத்தா சாப்பாடு தீத்துவார்.என்ர முறை வந்தா நான் தாத்தாட்ட வாங்கிச் சாப்பிட்டிட்டு வீட்டுக்குள்ள போய் இறைச்சிக் கறியோடு தயிர் போட்டுச் சாப்பிடுவன்.தாத்தாக்கு அது பிடிக்கவே பிடிக்காது. கண்டால் அம்மாக்கும் சேர்த்துப் பேச்சு விழும்…பசுவுக்கு முலை வெடிச்சுப்போடும் எண்டெல்லோ சொன்னான் எண்டு தொடங்கிடுவார்…பிறகெண்ன நான் வீட்டைச் சுத்தி ஓட வேண்டியதுதான்.

பசு எண்டவுடனேதான் ஞாபகம் வருது….பசு கன்று போட்டவுடனே அம்மம்மா கடும்பு காய்ச்சித் தருவாவே…என்ன உருசையது..சட்டி வழிக்கிறது நானாத்தானிருக்கும்.

தாத்தாக்கு அம்மாவோட சேர்த்துப் பத்துப் பிள்ளையள்.ஒருத்தருக்கொருத்தர் சண்டையில்லாம அவையெல்லாரும் ஒண்டா ஒரே வளவுக்க இருந்ததால தாத்தா நல்ல சந்தோசமா இருந்தவர்.வீட்ட வாற ஆரும் உங்களுக்கென்னையா பிள்ளையள் சண்டை பிடிக்காம ஒற்றுமையா இருக்குதுகள் எனக்கும் வந்து பிறந்துதகள் பிசாசுகள் எண்டு சொன்னா தாத்தா சொல்லுவார் அப்பிடிச் சொல்லாதயுங்கோ…நாங்க கதைக்கிறதைக் கேட்டுக் கொண்டிருக்கிற சாத்தான் அப்பிடியே ஆகட்டும் எண்டு சொல்லிப்போடும் எண்டு.

போன வெள்ளிக்கிழமை நான் அம்மா அப்பா தங்கச்சி அண்ணா எல்லாரும் ஓக்விலுக்கு அக்கா வீட்ட போனாங்கள்.போற வழியில அம்மா சொன்னா நடுகலும் அப்பாவைக் கேக்காம நாங்களே அக்கா வீட்ட போகலாம் வரேக்க Go train ல நாங்கள் வருவம் எண்டு. அப்பாவும் அண்ணாவும் கார்ல வீட்டை போகட்டும் எண்டு.403 ல அக்கா வீட்ட போற exit எடுக்கு ஒரு இரண்டு நிமிசத்துக்கு முதல் படார் எண்டொரு சத்தம்…அவ்வளவும் தான் தெரியும் சும்மா கார் நாலு றவுண்ட் சுத்திச் சுழண்டடிச்சுக் கொண்டு வந்து நடு track ல நிண்டிச்சுது.நாலாவது track ல போய்க்கொண்டிருந்த கார் என்ன மாதரி 2வது track க்கு வந்திச்சுதோ கடவுளுக்குத்தான் தெரியும்.அம்மா இருந்த பக்கக் கதவு தான் முதல் அடிபட்டது.அவாதான் முதல் Volvo truck ஐ பார்த்ததும். பயந்திட்டா சரியா; அழத்தொடங்கிட்டா.தங்கச்சி மட்டும்தான் belt போட்டிருந்தவா நானும் அம்மாவும் ஊஞ்சல் ஆடினது தான்.கார் ஒரு பக்கம் சப்பை.நான் நினைக்கிறன் truck ல இருந்தது பால் எண்டு எண்ணெய் மட்டும் இருந்திருக்க வேணும் அம்மளவும் தான் குடும்பத்தோட கைலாசம் தான்.Paramedics வந்து அம்மாக்கு sugar blood presure எல்லாம் பார்த்தாப்பிறகு அத்தான் வந்து எங்களைக் கூட்டிக்கொண்டு போனவர்.வீட்ட வரேக்க Go train தான்.தாத்தா சொன்ன மாதிரி சாத்தான் நாங்க கதைச்சதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கும் போல.ஆனால் ஒண்டு truck ஓட மோதியும் ஒருத்தருக்கும் காயம் இல்லை அதால எங்கள் எல்லாருக்கும் ஆயுள் கெட்டியாம். (*:*)

பக்கத்து வீட்டு தாத்தா ஒரு றூம் வேணும் எண்டு சொல்லச் சொன்னவர் நான் எங்கட தாத்தாட்ட போய் சாத்தானிட்ட போய் தாத்தா போன் பண்ணினதையே சொல்ல மறந்திட்டன்…அம்மா………. தாத்தா…

Wednesday, July 13, 2005

சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு

Hi Sumi
Hi Miss
How are you today?

Did you do your homework?

Sumi are you okay?

my mom said that she wont pick me up today.
Y did she say that?
Because I forgot to do my piano homework so my piano teacher compliant about me.
Oh why didn’t you do your home work then?
Because I forgot it.
And my mom said that I have to sleep in the garage today.
Hmm ok sumi don’t cry I’ll let you play flipwords today okay.
Can I go on the internet….can you open www.whatsherface.com for me?

என்னட்ட படிக்க வாறவா சுமி.அந்தப்பிள்ளை பியானோ, Swimming, Computer Math , Dance எண்டு ஆயிரத்தெட்டு வகுப்புக்கு போறது.நான் நினைக்கிறன் அதுக்கு விளையாடவே நேரம் கிடைக்காதெண்டு.சின்ன பிள்ளையளால எவ்வளவு நேரம்தான் இப்பிடி தொடர்ந்து படிக்க முடியும்.சின்ன வயசிலேயே வெறுப்புத்தான் வளரும்.சின்ன வயசில படிச்சா நல்லம்தான் அதுக்காக அதுகளைப்போட்டு பிச்சு எடுக்கக்கூடாது.பத்மாக்கா சொன்னமாதிரி இப்பிடி நிறைய வகுப்புக்களுக்குப் போற பிள்ளையளிடம் நான் அடிக்கடி கோபத்தைப் பார்த்திருக்கிறன்.

என்னையெல்லாம் எங்கட வீட்டில ஒருநாளும் புத்தகத்தை எடுத்துப்படி என்று சொன்னது கிடையாது அதுக்காக நான் படிக்காம இருந்ததில்லை.அவர்களாக ஊக்கம் எடுத்து ஆர்வத்தோட எதையும் செய்தால்தான் அவர்களின் திறமை வெளிப்படும் அதைவிட்டிட்டு அகப்பக்காம்பு வச்சு இடிச்சு சாப்பாடு தீத்தினா சத்திதான் வரும் புத்தி வளராது.

என்னமோ சொல்லணும் என்று நினைச்சன் சொல்லிட்டன்.

பூ ஜாதி
-சினேகிதி-

நேரம் சொல்லி பூக்கிற நாலுமணிப்பூ ஜாதியா?
வைகாசில பூத்து ஆடி வரை வாழும் வைகாசிப்பூ ஜாதியா?
மார்கழியில வாற மார்கழிச் செவ்வந்தி ஜாதியா?
இல்ல வாடாமல்லிகை ஜாதியா?

தங்கச்சியை குழிப்பாட்டின செம்பருத்திப்பூ ஜாதியா?
அம்மனுக்குப் பிடிச்ச பொன்னொச்சி ஜாதியா?
கண்வருத்தத்துக்கு அம்மா தாற நந்தியாவட்ட ஜாதியா?
எங்கட தேசியப்பூ காரத்திகை ஜாதியா?

அம்மம்மா வடகம் செய்யிற வேப்பம்பூ ஜாதியா?
கடவுளரிடையே சண்டை மூட்டிய தாழம்பூ ஜாதியா?
வல்லிபுரக்கோயில்ல ஐயர் தாற தாமரைப்பூ ஜாதியா?
ஓ நீ தேமா என்று இருக்கிற தேமாப்பூ-பெரியார் பேத்தி

Monday, July 11, 2005

நான் நினைத்தவை - உறுதிப்பூக்கள் 2005

-சினேகிதி-

உறுதிப்பூக்கள் 2005 கரும்புலிகள் நினைவாக போனவாரம் ரொரண்டோவில் நடைபெற்றது. அதைப்பற்றிக் காவலன் இங்கு (http://kaavalan.blogspot.com/2005/07/2005.html) எழுதியுள்ளார் அதை படித்து விட்டு இதையும் படியுங்கள்.

காவலன் நீங்கள் நிறைகளைச் சொல்லிவிட்டீர்கள் நான் குறைகள் என்று நினைத்தவற்றைச் சொல்கிறேன்.

1.
அடுப்படி போர்க்களமாகிறது நாடகத்தில் தங்கை வீரமரணம் அடைந்தவுடன் அக்காவை போராட்டத்தில் இணைந்து கொள்ளும்படி அன்புக்கோரிக்கை விடுப்பது இதுவரை நானறிந்த எந்தப் போராட்டக் குடும்பத்திலும் நடக்காத ஒன்று.அக்காவுக்குத் திருமணம் செய்து வைக்கவேணும் என்று அம்மா சொல்லும்போது போராளியான தங்கை எப்படித் தடுக்கலாம்?? அக்காவுக்குப் போராட்டத்தில் இணைந்து செயற்படவேணும் என்ற எண்ணம் தானாக எழ வேண்டும். வீட்டுக்கு வந்த போராளிகள் நாங்கள் உங்களைவ வற்புறுத்தவில்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் வாங்கோ என்று சொல்வது எந்தப் போராளியும் சொல்லாத ஒன்று.ஒரு குடும்பத்தில் ஒருவர் வீரமரணம் அடைந்தால் எஞ்சியுள்ள ஒரு பிள்ளையையும் நாட்டுக்காக போராட வரச்சொல்லி ஒரு போராளியும் கேட்பதில்லை.அந்த நாடகத்தில் அம்மா கூட மகள் போராட்டத்தில் இணைந்து செயற்படுவதுதான் தன் ஆசை என்று கூற மகளும் நான் விருப்பத்துடன் தான் போகிறேன் என்று சொல்லிச் செல்வதும் உண்மையான கருத்தாக எனக்குப் படவில்லை.

உறுதிப்பூக்கள் என்ற நிகழ்வு எமது கரும்புலி வீரர்களை நினைவு கூரும் முகமாக நடத்தப்படுவது எனவே அங்கு நாடகங்களினூடாகச் சொல்லப்படும் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட இயக்குனரின் கருத்தாக மக்களிடையே செல்வதில்லை மாறாக ஒருமித்த தாயக போராட்டத்தின் கருத்தாகவே சென்றடைகின்றது எனவே இப்படியான தவறான கருத்துக்களை மக்களிடை செல்ல விடலாமா??நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்தான் இப்படியான தவறுகள் அடுத்தமுறை நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2.மனதோடு நாடகத்தின் நேர அளவைக் குறைத்திருக்கலாம்.சொல்ல வந்த கருத்து நல்லது.புலம் பெயர்ந்து வாழும் ஒரு பெண்ணுக்குப் பக்கத்து வீட்டுப் பெண் சொல்லும் கதைகளால் தன் கணவன் மீது சந்தேகம் வருகிறது.சீப்பில் வெள்ளை மயிரை பார்த்தவுடன் பக்கத்து வீட்டு விமலா சொன்னமாதிரி வெள்ளைக்கார பெண்னை வீடுவரை கூட்டிக்கொண்டு வந்திருப்பாரோ என்று சந்தேகம் வருது பிறகு தன் மகள் Barbie பொம்மைக்கு தன்ர சீப்பால தலை இழுக்கிறதைப் பார்த்தவுடனே சந்தேகம் போய்விடுகிறது.மற்றவைன்ர கதையைக் கேட்டு கணவனைச் சந்தேகப் படக்கூடாது என்பது சரிதான். அதற்காக எவ்வளவு நாள் தான் பெண்கள் வெறும் தலைமுடியையும் ஒட்டுப்பொட்டையும் பார்த்துத்தான் சந்தேகப்படுறம் என்ற சொல்லப்போயினம்??

“காட்டுக்குள் நீ பட்ட பாடு” என்ற தலைவரைப் பற்றிய பாடலுக்கு நடனமாடும்போது வீரவேங்கை என்ற மாவீரர்களுக்கான நினைவுச்சின்னம் தேவையற்றது என்று தோன்றியது.தவறிருக்குமானால் சுட்டிக்காட்டவும்.
மற்ற நாடகங்களைப் பார்க்க முடியவில்லை அதனால் எனக்கு நிறை குறை தெரியவில்லை.

Tuesday, July 05, 2005

இருதய நரம்பினை அறுத்தவன்

-சினேகிதி-

அன்பான தன் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்தவள் ஆதிரை.சின்ன வயது முதலே படிப்படியாக பல வெற்றிகளைக் கல்வியில் அடைந்து மிகுந்த புகழுடன் இருந்தாள்.இனப்பிரச்சனையால் சொந்த ஊரை விட்டு நீங்கும் துன்பத்தை ஆதிரை குடும்பமும் ஏற்க வேண்டியதாயிற்று.கொழும்புக்கு வந்து வெள்ளவத்தையில் குடியேறினார்கள்.

கொழும்புக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.ஆதிரை வயதுக்கு வந்துவிட்டபிறகு அவளையும் தங்கை குயிலியையும் வளர்க்கப் பெற்றவள் பாடுபட வேண்டியதாயிற்று. வாரத்துக்கு ஒருமுறை தந்தை கார்மேகம் தொலைபேசியில் கதைப்பார். இந்தப்பிள்ளைகள் இருவரும் தகப்பனோடு முழுதாக இரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருப்பார்களோ என்னவோ… இருந்தாலும் கார்மேகத்துக்கு இவர்கள் மேல் கொள்ளைப்பிரியம்.ஒருநாள் கதைக்கும்போது கதையோடு கதையாக தாய் சொன்னா “ என்னால் இனிம இதுகளோட தனியா இருக்க முடியாது எங்களைக் கெதியாக் கூப்பிடுற அலுவலைப் பாருங்கோ”.

பதினோராம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த ஆதிரைக்குச் கூடப்படிக்கிற சுதன் அம்பு விடத்தொடங்கினான்.ஆதிரை அம்மாவிடம் சொன்னாள் “அம்மா O/L பரீட்சைக்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் தான் இருக்கிறது அதுக்குள்ள சுதனும் அவன்ர வாலுகளும் எனக்குப் பின்னால நடுகலும் வாறாங்களம்மா இனிம நான் அந்த ரியூசனுக்குப் போகமாட்டன்.”

சரிடி அதுக்காக ரியூசனுக்குப் போகாம வீட்டில இருந்தா நீ புத்தகத்தையே திறக்கமாட்டாய்.ஏதோ உன்ர இஷ்டம்.அப்பா கதைச்சவர் இன்னும் ஆறு மாதத்தில எங்களைக் கூப்பிடுவராம்.

இப்ப ஆர் அங்க போகவேணும் எண்டு கேட்டது?? நான் வரமாட்டன் நீங்களும் தங்கச்சியும் வேணுமெண்டால் போங்கோ.நான் அத்தையோட இங்கையே இருக்கிறன்.

ஆதிரைன்ர கூச்சலை அங்க யாரும் செவிமடுப்பதாயில்லை.தூதரகம் சென்று விஸாவும் எடுத்தாச்சு.ஒருநாள் வகுப்பு முடிந்து வெளியே வந்த ஆதிரையிடம் சுதன் போய்ச் சொன்னான். “ஆதிரை நான் உனக்காகத்தான் இவ்வளவு நேரமும் நிண்டனான்.”அவள் அவனைக் கடந்து போக “நான் இனிம உன்னை இப்பிடித் தொந்தரவு செய்யமாட்டன் என்று சொல்லிட்டுப் போகத்தான் வந்தனான் என்ர சித்தப்பா கனடாவில இருக்கிறார் நான் அவரட்டைப் போகப்போறன்…நான் உன்னட்ட ஒன்று சொல்லோணும் உனக்கே தெரியும் நான் உன் பின்னால எவ்வளவு நாள் வந்தனான் எண்டு.நான் ஒண்டும் அந்த நகுல் மாதிரி சிரிச்சு சிரிச்சுப் பேசி பொண்ணுங்களை ஏமாத்திறவன் இல்லை.நான் உன்னை விரும்பிறன்.எனக்குத் தெரியும் உனக்கு இதெல்லாம் பிடிக்காதெண்டு இருந்தாலும் எனக்கு இனிமேல் உன்னைப் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடைக்காதோ..அதான் நான் என்ர ஆசையைச் சொல்லிட்டன்.நல்லாத் தேர்வெழுத என் வாழ்த்துக்கள்." என்று சொல்லிட்டு அவளைத் தாண்டி சென்றான்.அவனுக்குத் தெரியும் எப்படியும் என் காதலனே நீ போய் வா என்று ஆதிரை தன்னை வழியனுப்பப் போவதில்லை என அதான் திரும்பிப்பாரமல் போய்க்கொண்டிருந்தான்.

ஆதிரை கனடாவுக்குப் போய் எங்களை எல்லாம் மறந்திடுவாய் என்ன? என்ற கேள்விதான் ஆதிரையின் வகுப்பில் அதிகம் கேட்கப்படுவத.ஆதிரையின் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து Autograph ல் தாம் சேர்ந்திருந்து மகிழ்ந்த தருணங்களை எழுத்தில் வடித்துக் கொடுத்தார்கள்.ஒராள் எழுதினதுக்கு மற்றாள் நக்கலாக இன்னொரு வரி சேர்ப்பது இப்படிக் கடைசி நாள் கழிந்தது. ஆசிரியர்களின் ஆசீர்வாதத்துடனும் நண்பர்களின் பரிசுப்பொருட்களுடனும் ஆதிரை வீடு வந்து சேர்ந்தாள்.

கனடா செல்ல முதல்நாள் பரீட்சை முடிவுகளும் வந்தன.உறவினர்களுக்குக் கையசைத்தபடியே விடைபெற்று கனடாவுக்கு வந்து சேர்ந்தார்கள். கார்மேகமும் நண்பர் கோபாலுவும் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிரிந்தவர்கள் கூடினால் என்னவென்று சொல்லவும் வேண்டுமா.கனடா அழகை ரசித்தபடி வீடுவந்து சேர்ந்தார்கள்.

அடுத்த வாரமே பாடசாலையில் சேர்ந்தார்கள்.குயிலிச் சின்னப்பிள்ளை பாடசாலைச் சூழலோடு தன்னை சுலபமாக இணைத்துக் கொண்டாள். ஆதிரைக்கு தான் முதல்நாள் கணித வகுப்பே சங்கடமாகிப் போய்விட்டது.ஆசிரியர் போட்ட கணக்கைத் தீர்க்க முடியாமல் மாணவர் சிலர் போராட ஆதிரை செய்து முடித்த கணக்கின் விடையைச் சொல்ல முடியாது போராடவேண்டியதாயிற்று.ஆதிரை கையை உயர்த்திவிட்டு பேசாமல் இருந்தாள் ஆசிரியர் அவளைக் கவனிக்கவில்லை.ஆதிரை சொல்ல நினைத்த விடையை பின்னாலிருந்த யாரோ சொன்னார்கள்.இந்தக்குரல் எனக்குப் பரிச்சயமானதாயிற்றே…திரும்பிப் பார்க்க நினைத்தும் முடியவில்லை.

நேரஅட்டவணையின் படி ஒருமணி நேர இடைவேளை என்றிருக்கே என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே ஆசிரியரிடம் நூலகம் எங்கே என்று கேட்டறிந்தபடியே அங்கு போனவளை “ஆதிரை நான் உன்னை நான் மீண்டும் அதுவும் என்வகுப்பில் காண்பேன் என்று நினைச்சுகூடப் பார்க்கவில்லை” என்ற சுதனின் அழகு தமிழ் வாரத்தைகள் ஒருகணம் தடுமாற வைத்தது.வெள்ளவத்தையில் இருக்கும்போது சுதனோடு கதைப்பதில்லை இப்பமட்டும் என்னவென்று கதைப்பது எண்றெண்ணியபடியே சிரித்து விட்டுப்போனாள்.

கோபால் கெட்டிக்காரர் சுதன் வந்த புதிதில் அவனுடைய முகத்தை வைத்தே எல்லா வி~யங்களையும் கேட்டறிந்திருந்தார்.இன்று பாடசாலையால் வந்த சுதன் தான் ஆதிரையை மீண்டும் இங்கே சந்திச்ச வி~யத்தைச் சித்தப்பாவிடம் சொன்னான். “டேய் நீ வெள்ளவத்தையில பின்னால திரிஞ்ச மாதிரி இங்கேயும் திரியாத உனக்கு அவளெண்டு இருந்தால் நிச்சயம் நடக்கும்”.

அடுத்தவார முடிவில் தன் மனைவி பிள்ளைகள் வந்த சந்தோசத்தைக் கொண்டாட கார்மேகம் தன் நண்பர் கோபாலையும் மற்றும் சிலரையும் இரவு விருந்துக்கு அழைத்திருந்தார்.சாப்பாட்டு மேசையில் உணவுகளை அடுக்கிக்கொண்டிருந்த ஆதிரை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சுதனைக் கண்டுவிட்டாள்.ஆதிரைக்குச் சுதனைக் பாடசாலையில் கண்டதிலிருந்தே வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளத் தொடங்கியிருந்தது.அதாவது வைரமுத்துவின் கருத்துப்படி ஆதிரைக்குள்ளும் காதல்விதை முளைவிட்டிருந்தது.அருகிலே இல்லாதபோதுதான் அதன் அருமை தெரியுமாம் அதப்போல சுதன் கனடா போனபின் அவனைப் பற்றி ஆதிரை அடிக்கடி நினைத்ததுண்டு.முதல்நாள் பாடசாலையில் அவனோடு கதைக்காததால் அவனும் அதன்பிறகு அவளைக் கண்டும் காணாமல் இருந்து வந்தான்.அதனால் தானோ என்னவோ காதல் விருட்சம் வேருன்றி நன்றாய் வளர்ந்து விட்டிருந்தது.

சுமையலறையில் அம்மாவிடம் சுதன் வந்திருப்பதை சொன்னாள்.ஓ அந்தப் பிள்ளையே அவன் கோபாலண்ணனோடு வந்தவன்.தாய்க்கு ஏற்கனவே சுதனைப் பற்றித்தெரியும்.இப்போது மகளின் மாற்றங்களையும் கவனித்தவள் கணவனிடம் நடந்த எல்லாவற்றையும் சொன்னாள்.கார்மேகம் தன் குடும்பத்தில் பற்றும் நம்பிக்கையும் கொண்டவர்.கோபாலைக் கூப்பிட்டுக் கதைத்தார்.கோபால் ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு “டேய் அவன் என் அண்ணன் பையன் அதோட எனக்கு அவன்ர காதல் எல்லாம் தெரியும் ஆனால் அது உண் பொண்ணு என்று தெரியாமல் போட்டுது..அது கிடக்கட்டும் இப்பபார் இரண்டு பேரும் எங்களை நம்பிச் சொல்லியிருக்கினம் நாங்கள்தான் ஏதாவது செய்யவேணும்”.

கார்மேகம் மனைவியிடம் சொல்லிவிட்டு ஆதிரையிடம் போய் “ அம்மா ஆதிரை அந்தப்யையன் சுதன் காதல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் நீதான் மருந்து குடுக்கவேணும்.”
ஆதிரைக்கு தன் காதுகளையே நம்பவே முடியவில்லை கண்களால் நன்றி சொன்னாள்.

நடந்த எதுவுமே தெரியாமல் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சுதனை ஆதிரை மூலம் கூப்பிட்டாள்.சங்கடத்துடன் வந்தவனுக்கு ஆதிரையைக் கண்டதும் என்ன கதைப்பது என்றே தெரியவில்லை.ஆதிரைதான் மௌனத்தைக் கலைத்தாள். “அப்ப நீங்கள் போட்ட காதல் விண்ணப்பத்திற்கு பதில் எங்கள் வீட்டு முகவரிக்கு வந்திருக்கிறது” என்று ஒரு காகிதத்தைக் கொடுத்தாள்.பிரிச்சுப் பார்த்தால் சம்மதம் என்றிருந்தது.நம்பாமல் நின்றவனுக்கு “டேய் சுதன் நாங்கள் மூன்று பேரும்தான் ஆதிரையை உனக்கு மருந்து கொடுக்க அனுப்பினாங்கள்”என்ற சித்தப்பாவின் குரல் நம்பவைத்ததது.

“இப்ப நீங்கள் இரண்டு பேரும் ஒழுங்காப் படிக்கிறவேலையை பாருங்கோ.பிறகு அம்மா அப்பாவோடு கதைத்து ஐந்தாறு வருடம் கழித்து கல்யாணத்தை நாங்கள் நடத்திவைக்கிறம்.”

எல்லோரும் சாப்பிடப்போக ஆதிரையுடன் ஆறுதலாகப் பேசலாம் என்றால் அவள் நழுவப்பார்த்தாள்.எட்டி அவளைப்பிடித்தவன் எவ்வளவு நாள்தான் நானே உன்னை நினைச்சு ஏங்கிக்கொண்டிருக்கிறது...நீ அப்பிடி ஏங்க வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே காதல் சின்னமொன்றைக் கொடுத்துவிட்டுப் போனான்.


27.12.2002

சக்தியும் காவலனும்
காவலன் நீங்கள் ஆந்தையாம் சக்திதான் அந்தக் குட்டிக் குருவியாம்.

Monday, July 04, 2005

கத்தரிக்காய் வாழைக்காய்

பெருக்கி கூட்டி பாருங்க கணக்குச் சரியா இருக்கும்1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321


- யாரோ-

மாயா மாயா மாயா எல்லாம் மாயா – பகுதி II

மாயா மாயா மாயா எல்லாம் மாயா – பகுதி I-சினேகிதி-

Sunday, July 03, 2005

தேடல் எங்களிடையே உண்டு

இளைய சமுதாயத்தினர் தங்கள் மொழி பண்பாடு கலாச்சாரம் என்பவற்றைத் தேடுகிறார்கள்.தாம் தேடிய அறிந்த விடயங்களை இங்கே கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.

இக்காட்சிகள் ரொரண்டோவில் நடைபெற்ற தமிழ் மொழிவார நிகழ்ச்சிகளில் கண்டவை.இம்மாணவர்கள் தங்கள் மொழியை கலாச்சாரத்தை பண்பாட்டை நேசிப்பவர்களாகவே நான் காண்கின்றேன. நீங்கள்???

படங்கள் உதவி: Nava Jupiter

Saturday, July 02, 2005

"Mr.Temple come to me"

-சினேகிதி-

நக்கீரனின் புலம்பெயர் வாழ்வில் தமிழ் இனி தேவையா?இல்லை என்ற ஆக்கத்தை வாசித்தவுடன் இப்படி எழுதிவிட்டேன்.

தமிழின் தேவை சிறிதாக இருக்கலாம் ஆனால் தமிழ் ஒரு தொடர்பாடல் சாதனமாக மட்டுமன்றி எமது இனத்தின் அடையாளமாகவும் கணிக்கப்படுவது.

அரசியல் சமூக ஊடக சக்திகள் யாவும் தாய் மொழிக்கல்வியின் பயனைத்தான் கூறி நிற்கின்றனவே தவிர யாரும் எங்களைக் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை.

எம்மைப்போன்ற மாணவர்களுக்கு அதுவும் கனடா போன்ற பல்கலாச்சார நாடுகளில் படிப்பவர்களுக்கு தாய்மொழி கதைக்கவும் எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டியது முக்கியமாகிறது – ஏனென்றால் எங்கள் பாடசாலைகளில் பல்கலாச்சார நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நடைபெறும்போது ஒவ்வொரு நாட்டவரும் தங்கள் பண்பாட்டை கலாச்சாரத்தை மொழயைப் பிரதிபலிக்கும் ஆக்கங்களைச் செய்ய வேண்டும்.அவ்வகையில் நாங்கள் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிளை செய்யும்போது ஆங்கிலப் பாடலுக்கா ஆடுவது??அவர்கள் பாடலுக்கோ நடனத்துக்கோ அர்த்தம் அதன் கருவைப் பற்றிக் கேட்டால் எங்களுக்குச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.அப்படித் தெரிந்திருக்க வேண்டுமானால் எங்களுக்கு அதை விளங்கிக் கொள்ளக்கூடிய போதியளவு தமிழறிவு இருந்தால்தான் அதை மற்ற நாட்டவருக்கு அவர்களுடைய மொழியில் எங்களால் விளக்கம் கொடுக்க முடியும்.இப்படி தங்கள் மொழியைத் தெரிந்து கொண்டிராத பல்லகழைக்கழக மாணவர்கள் மற்ற மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் புலமை உடையவராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முன் தலைகுனிய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

தமிழ் தங்கள் பிள்ளைகள் கற்க வேண்டும் என்ற ஆர்வமுடைய பெற்றோர் எல்லோருமே தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதில்லை..ஆங்கிலம் மூலம் தமிழ் கற்கக்கூடிய நூல்களையோ அல்லது குறுந்தட்டுக்களையோ வாங்கிக் கொடுக்கலாம்.பணம் செலவழிக்க முடியாதவர்கNளூ அல்லது விரும்பாதவர்களோ மூன்று டொலர்களுக்கு குறுவட்டுப் பிரதி எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ் தெரிந்தவர்களுடன் கதைப்பதற்குக்கூட வாசிப்பு அவசியம் என்பது எனது கருத்து.ஒரு மொழியைப்பற்றிய அடிப்படை தெரியாமல் கேள்விஞானம் மட்டுமே கொண்ட இருவரால் எவ்வளவு நேரம் ஒரு மொழியில் உரையாடலாம் என்பது எனக்குப் புரியவில்லை.

சங்கீதம் பரதநாட்டியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழில்தான் சொல்லித்தருவார்கள் தமிழில் எழுதத் தெரியாத மாணவர்கள்தான் தமிழை ஆங்கில எழுத்துக்களைப் பாவித்து எழுதுவார்கள்.உதாரணமாக கனடாவில் நடக்கும் ஒரு பரதநாட்டிய ஆரம்ப வகுப்பில் ஒரு ஆசிரியர் ஒற்றைக்கை முத்திரை சொல்லிக் கொடுக்கிறார் என்று வைப்போம்.மயூரம் என்பது ஒரு ஒற்றைக்கை முத்திரை அதை ஆசிரியர் மயூரம் என்றால் மயிலைக் குறிப்பது என்று தமிழில்தான் சொல்லுவார் எனக்குத் தெரிந்து மயிலுக்குத்தான் ஆங்கில வார்த்தை உண்டு மயூரத்துக்கு இல்லை.

மற்றது திரைப்படங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு திரையில் வருகிறது சரி ஆனால் இந்த உதாரணத்தைப் பாருங்கள் “திருக்கோயிலே ஓடிவா” என்றொரு தமிழப் பாடல் வரி அதற்கு ஆங்கில மொழபெயர்ப்பு பின்வருமாறு போடப்பட்டுள்ளது – “Temple is coming”. நல்ல காலம் “Mr.Temple come to me” என்று போடாமல் விட்டார்கள்.

நான் சொல்ல விரும்பியதைத் தெளிவாகச் சொன்னேனா என்று தெரியவில்லை.தமிழ் என்பது ஒரு சிறந்த மொழி என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் அது எங்கள் இன அடையாளமாக இருக்கின்றது எனவே தமிழை தமிழர்கள் தெரிந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.