Custom Search

Thursday, October 23, 2008

காவோலை விழுந்தால் குருத்தோலை :-) ம்கும்

என்ர அப்பம்மா 78 வயசில 2 மாசத்துக்கு முதல்தான் ஏஜன்சி மூலம் கனடாவுக்கு வந்தவா.ஏஜன்சி மூலம் வாறதெண்டால் சும்மா லேசுப்பட்ட விசயமில்லையென்டு உங்களுக்குத் தெரியும்தானே.இலங்கைக்காசுக்கு 36லட்சம் குடுத்துக் கூப்பிட்டவை மோன்மார்.இந்த மாதிரிக் காசு விசயங்களில மட்டும் பொம்பிளைப்பிள்ளையள் ஒதுங்கிடுவினம் இந்த சித்தாந்தம் மட்டும் எனக்கு விளங்கேல்லப் பாருங்கோ....எல்லாருக்கும்தானே அவா அம்மா அதெப்பிடி ஆம்பிளைப்பிள்ளையள் மட்டும் செலவேற்கவேணும்.அப்பிடிப் பார்த்தால் என்ர அப்பா பெத்து வைச்சிருக்கிறதுகள் மூன்றும் பெட்டையள் ம் ம் இருக்கட்டும் இருக்கட்டும்..ஆனைக்கொரு காலம் வந்தால் பூஸ்குட்டிக்கும் ஒரு காலம் வரும்தானே.

எங்கட அப்பம்மா இருக்கிறாவெல்லோ அவா 12 (அதான் டசின்) பிள்ளையள பெத்தவா.அப்ப அவாக்கு என்ன குறையிருக்கப்போதென்று கேக்கிறியளா?? அவாக்கு ஒரு குறையுமில்லை.இதில ஒருவிசயத்தை நான் கட்டாயம் சொல்லோணும் அப்பிடிச் சொல்லாட்டா அந்தக்குமரின்ர மனம் குளிராது :-) அந்தக் குமரி வேற யாருமில்ல அப்பம்மான்ர தோழி. அப்பம்மாவை கனடாக்கு கூப்பிட மாறி மாறி அப்பா அத்தை சித்தப்பாவை என்று எல்லாரும் ஸ்பொன்ஸர் செய்திச்சினம் அனால் அவான்ர வயசுக்கு வாற வருத்தங்களால மெடிக்கல் சரிவரேல்ல அதால 5 வருசமா கொழும்பில நிண்டு கடைசியா ஏஜென்சி மூலம் மலேசியாவில வந்து 5 மாசம் நிண்டுதான் கனடாக்கு வந்து சேர்ந்தவா. அப்ப மலேசியால அப்பம்மான்ர அறைத்தோழிதான் அந்த நான் சொன்ன குமரி. குமரிக்கு 80 வயசாம். ஒரு நாள் அப்பா அப்பம்மாக்கு போன் பண்ண அப்பம்மா போனில அழுதிட்டா...நாங்களும் ஏதோ பயத்தில அழுறாவாக்கும் என்று அப்பம்மா கவலைப்படாதயுங்கோ நீங்கள் இந்த முறை என்ர பிறந்தநாளுக்கு வந்திடுவீங்கள் அக்கான்ர கல்யாண நாளுக்கு வந்திடுவீங்கள் என்று சமாதானம் சொல்றம் அப்பத்தான் அவா சொன்னா நான் அதுக்கு அழேல்லப் பிள்ளையள் இவ்வளவு காசு குடுத்திருக்கு இந்த ஏஜென்சி நல்ல பிள்ளை எனக்குச் சீலையெல்லாம் வேண்டி தந்திருக்கு.

பின்ன என்னத்துக்கு அழுறீங்கள்?

கூட இருக்கிற மனுசிக்கு பொறாமை போல சும்மா கறுவிக் கொண்டிருக்கு. எப்ப பார் ஏதும் குறை சொல்லிக்கொண்டு எப்படா அங்க வருவன் எப்ப உங்களையெல்லாம் பார்ப்பன் என்டிருக்கு.

எங்களுக்கும் அப்பிடித்தானிருக்கு. டக்கெண்டு வந்திடுவீங்கள்.

இல்ல மோன நேற்றும் இப்பிடித்தான் அந்த மனுசி என்ன உங்களுக்கு ஒரே போன் வந்து கொண்டிருக்கு என்டு புறுபுறுத்திச்சு பின்ன நான் சொன்னன் எனக்கு கனடால 5 பிள்ளையள் இருக்கினம் அப்ப பிள்ளையள் மருமக்கள் பேரப்பிள்ளையள் எனக்கு எடுப்பினம் தானே என்று சொன்னன். மனுசி கேட்டிச்சு கனடால 5 அப்ப எத்தின பிள்ளையள் என்று. 12 ல இளையவனும் மூத்தவனும் இப்ப இல்ல. நான் அப்பிடிச் சொன்னதுதான் தாமதம் மனுசி சொல்லுது நீயும் என்னைப்போல 2 பிள்ளையோட நிப்பாட்டியிருக்கலாம். உத்தின பிள்ளையள் பெத்ததாலதான் நீ இப்பிடி இருக்கிறாய் என்னைப் பார் 80 லயும் சும்மா எப்பிடி ஜம்மென்று குமரியா இருக்கிறனென்டு.

என்று சொல்லிட்டு அப்பம்மா அழுதிட்டா...அப்பாக்கு தாங்க முடியல சும்மா இரண உதெல்லாம் ஒரு கதையென்டு...அந்த மனுசிக்கு தன்ர பிள்ளையள் போன் பண்ணிக் கதைக்கிறேல்ல என்று கவலையாக்கும்...நீ உதுகளை விட்டிட்டு கெரியெண வாற வழியைப் பார்.

இன்டைக்கு ஏத்துறன் நேற்று ஏத்துறன் என்று ஏஜென்சி ஏத்தி இறக்கி ஒரு மாதிரி அப்பம்மா வாற நாளும் வந்திச்சு. மோன்மாருக்கு இருப்புக்கொள்ளுமே வீட்டில..எல்லாரும் குடும்பம் குடும்பமா Airport க்குப் போனாச்சு அதுவும் 2 மணித்தியாலத்துக்கு முதலே. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் லேற்றா வந்தா அப்பம்மா. 11 வருசத்துக்கு முதல் நாங்கள் பாரத்ததை விட நல்ல வாய்க்கெட்டுப்போய்த்தான் இருந்தா அப்பம்மா. எங்களைக் கண்ட உடன அழுதிட்டா. வன்கூவர்ல இறங்கேக்க கனடாக்கு வந்தாச்சென்டு சொன்னத கேட்டிட்டு அங்க எங்களை எதிர்பார்த்திருக்கிறா எங்கள் ஒருதரையும் காணேல்ல என்டதும் தன்னை எங்கயோ கொண்டுபோய் அடைக்கப்போறாங்கள் என்று நினைச்சிட்டாவாம். எங்கள் எல்லாரையும் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினா.மருமகள்மாரில சும்மா சொல்லக்கூடாது பாசம் அந்த மாதிர ஒவ்வொருதரையும் தேடி தேடிக் கொஞ்சினா. உங்களையெல்லாம் பார்தாப்பிறகுதான் நிம்மதி. இப்ப கூட உதில பாஸ்போர்ட்டையும் பார்த்து என்னையும் பார்த்திட்டு பாஸ்போர்ட் படத்தில பல்லுக் கிடக்கு உனக்குப் பல்லில்லை என்று துருவி துருவிக் கேட்டாங்கள்...எனக்குப் பயம்தான் இருந்தாலும் பல் செற்றைத் தூக்கிக் காட்டினன் விட்டிட்டாங்கள் என்டா.


பரிவாரங்கள் புடைசூழ அப்பம்மா parking lot க்கு வந்தாச்சு இப்ப அவா ஆற்ற ஜீப்ல ஏறுவா என்டது பேரப்பிள்ளையளான எங்களின் மிக முக்கியமா மில்லியன் டொலர் கேள்வி...ஆனால் நான் உங்களுக்குச் சொல்ல மாட்டன் அவா ஆற்ற ஜீப்ல எறினவா என்டு.

Airport ல flight arrival நேரத்துக்கு முதலே போய் காவல் நிக்கிற மண்டைக்காயளுக்கு ஒரு எச்சரிக்கை. parking fee எவ்வளவு என்று முதலே பார்த்து வையுங்கோ ஏன் சொல்றன் என்டால் ஒரு வாகனத்துக்கு 21 டொலர்படி 5 வாகனத்துக்கும் 105 டொலர் parking fee மட்டும் கட்டினாங்கள் .

அப்பம்மா வந்தாச்சு ..ஆற்ற வீட்ட முதல் போவா? ஆற்ற வீட்ட இன்டைக்கு இரவுக்கு நிப்பா....இந்த விசயத்தில அம்மாக்கள் மகள் பக்கம்...என்னை விடுங்கோ இதப்பற்றி நான் ஒன்டுமெ சொல்லப்போறதில்ல.

அப்பம்மா வந்து 3 நாளாச்சு. எல்லாப்பிள்ளை வீட்டயும் போய் வந்தாச்சு.

அம்மா இந்தாண...இது நான் உனக்கெண்டு செய்து வைச்சதிருக்கிற சங்கிலி.

அம்மா இது நான் உனக்கெண்டு வாங்கின காப்பு.

என்ன கொடுமை சரவணா.

ம் இப்பிடித்தான் எல்லாம் ஆரம்பிக்கும். இனித்தானே இருக்கு விளையாட்டு.

அட்டவணை போட்டாச்சு. வார இறுதி நாட்கள்ல மகள் வீட்ட. மற்ற நாட்கள்ல மகன்கள் வீட்ட அம்மா நிக்கலாம்.

மற்ற எல்லா மருமகள்களும் வேலைக்குப் போறாக்கள் என்ர அம்மாவைத் தவிர.அதனால கிட்டத்தட்ட எல்லா நாளும் அப்பம்மா எங்கட வீட்ட நிக்கிறளவில இருக்கு இப்ப நிலமை.

வயசு போனால் வாற மறதி...கண் பார்வை இப்பிடியான பிரச்சனைகள் இல்லை. இருமல் சளி காலுளைவு நாரிப்பிடிப்பு இதெல்லாமிருக்கு.எத்தின பேரப்பிள்ளை இருக்கினமோ அத்தினபேரும் காலமுக்கி விட்டால் அவாக்கு நல்ல சந்தோசம். ஒருநாள் அண்ணா வீட்ட வர காலை நீட்டிச்சொன்னா ஒரே காலுளைவா இருக்கு மோனை என்று அவன் சும்மா பக்கத்தில இருக்கிற மாதிரி இருந்திட்டு ஒடிட்டான் கள்ளன் நாங்கள் போய்ச் சொன்னம் அவாக்கு பேரன் மாரிலதான் கரிசனம் கூட போ போ போய் கால் பிடிச்சு விடென்டு.

பிள்ளையள்ல பொம்பிளையப்பிள்ளைல பாசம் கூட என்டால் பேரப்பிள்ளைலயும் அப்பிடித்தானே இருக்கோணும்..ஏனப்பிடியில்லை?

அப்பம்மா சாப்பிட வாங்கோ...இங்க வா மேன இந்தப்படியால இறங்கேலதாம் என்னைக் கொஞ்சம் பிடிச்சு இறக்கிவிடு.

பிள்ளை எனக்கு வெண்டிக்காய் கறி போட வேண்டாம். நான் தோஞ்சனான் வெண்டிக்காய் குளிர். இது சூடு. இப்பிடியெல்லாம் தவிர்த்து சொதியோட சாப்பிட்டா. இது தொடர்ந்திச்சு கொஞ்ச நாளைக்கு.பிறகு சளியா இருக்கு முட்டா இருக்கு சோறு சாப்பிட என்டால் நல்ல உறைப்பான சம்பலும் ரசமும் வைமேனை.

மூன்று நேரமும் fresh சமைக்கத் தொடங்கினா அம்மா. பிரிட்ஜ் ல வைச்சு சாப்பிடுறது இல்லாமல் போச்சு.நினைச்ச நேரம் சூப் ரசம் சாம்பார் சம்பல் நண்டுக்கறி கணவாய்க்கறி நெத்தலிச்சொதி...விதம் விதமா சாப்பாடு அப்பம்மாக்கு எங்களுக்கும்தான். வந்த புதுசிலதான் அம்மா செய்தவா. இப்ப அப்பம்மாவும் நல்லாச் சமைப்பா...இப்ப அவாக்கு கனடா பழகிட்டுது. தானா நடப்பா தானே வோஸ்றூமுக்குப் போவா ஆனால் என்ன வோஸ்றூம் போன கிளீன் பண்ணத் தெரியேல்ல இன்னும் அதும் பழகிடுவா கெரில.

இப்ப குளிர் தொடங்கிட்டு..அப்பா ஒரு ஜக்கற் வேண்டிக்கொண்டு வந்தார் அப்பம்மாக்கு. நானுது போட மாட்டன்..நான் சிவப்புக்கலரில உடுப்பே போடுறதில்லை ஜக்கற்ற வேண்டியந்திருக்கிறாய் சிவப்பில...என்னட்ட பறையாமல் உன்னையார் போய் வாங்கச் சொன்னது.

அப்பா சிலநேரம் எங்களையே தான் வேண்டிக்கொண்டு வாறதைப் போட வைக்கிறவர் இப்ப அவற்ற அம்மாக்கு முன்னால மண்டிக்கொண்டு நிக்கிறவரைப் பார்க்க எனக்கும் தங்கச்சிக்கு சிரிப்படக்க முடியல்ல.

அப்பம்மா நல்லா நாடகம் பார்ப்பா அதுவும் கஸ்தூரில ஒரு தனிப்பாசம் அவாக்கு.இதாலயே தங்கச்சியும் அப்பம்மாவும் சிலநேரம் முண்டுப்படுவினம். அப்பம்மா நாடகம் பார்க்கிற நேரம் தங்கச்சி ஆங்கிலத் தொடர்கள் எதுவும் பார்க்க வெளிக்கிட்டால் காணும் அப்பம்மா சொல்லுவா உதென்ன உவளுகள் ஒழுங்கான உடும்பும் போடுறேல்ல எல்லாப்பக்கமும் கிழிஞ்சு தொங்குது காதில வயித்தில மூக்கில எல்லாம் தொங்குது. என்ன அருமந்த முகம் ..தலைமயிரைப் பின்னிக் கட்டினா என்னமா இருக்கும்..உதுகள ஏன் பார்க்கிறியள் இது கஸ்தூரி தொடங்கப்போகுது மாத்தடி. ராம் பாவம் எங்கட அப்பம்மாட்ட அந்தாள் வேண்டுற அர்ச்சனையிருக்கே. ஒரு எபிசோட்ல கஸ்தூரிக்கு அசிட் ஊத்திட்டினம் முகத்தில...அப்பம்மா திட்டத்தொடங்கிட்டா. அப்பா சொன்னார் ஏனண கத்திறாய் உது நாடகம்தானே..

ஓமடா எனக்குத் தெரியாதே நாடகமெண்டு அப்பிடியென்டாலும் அவளுக்குக் கொஞ்சமெண்டாலும் பட்டிருக்கும்தானே முகத்தில

இல்லையெண அது தண்ணிதான் உண்மையா ஊத்துறது.

சீ சீ ஆர் சொன்னதுனக்கு...இப்பிடிப்போகும் அப்பம்மாவும் நாடகங்களும்.

மகளின் ஒரு காதல் பிரச்சனையால சொந்தக்காரர் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்து இப்ப சுகம். அங்க போட்டு வந்ததில இருந்து அப்பம்மா எங்கள் எல்லாரும்கும் ஒரே அட்வைஸ் மழை. இங்கத்த பிள்ளையளுக்கு ஒன்றும் தெரியுறேல்ல. பெத்ததுகளை அழ வைச்சுப் பார்க்குதுகள். எங்கட காலத்திலயென்டால் கல்யாணத்தன்னிக்குதான் மாப்பிள்ளையைப் பார்க்கிறது. அதும் ஒன்றும் விளங்காத வயசில கட்டி வைச்சிடுவினம்..எண்டா.
எனக்குப் பொறுக்க முடியேல்ல கேட்டிட்டன் அப்ப நீங்கள் தாத்தாவை லவ் பண்ணேல்லயே.

நாங்கள் எங்க லவ் பண்ணினம்...

அப்ப எப்பிடியப்பம்மா இவ்வளவு பிள்ளையளையும் பெத்தனீங்கள்.

இதென்ன கேள்வி..கல்யாணத்துக்குப் பிறகு ஆர்தான் லவ் பண்ணாமலிருக்கினம் கல்யாணம் கட்டினாப்பிறகு லவ் பண்ணினதுதான். அதுக்கு முதல் உங்களைப் போல லவ் பண்ணவெல்லாம் எங்களை யார் விட்டது.

ஹா ஹா அப்பிடி வாங்கோ வழி்க்கு அப்ப நீங்கள் தாத்தாவை லவ் பண்ணினீங்கள்.

இவளின்ர கதையைப் பாருங்கோ என்று சிரிச்சுக்கொண்டு நல்லா வெக்கப்பட்டா அப்பம்மா ..அதோட எனக்கு நுள்ளிப்போட்டா...நான் அதுக்குப்பிறகு இடம் மாறி இருந்திட்டன்.

தங்கச்சி கேட்டாள் தாத்தாக்கு உங்கள விட 23 வயசு கூடவெல்லோ..ஏன் நீங்கள் அவரை கல்யாணம் கட்டினீங்கள்..ஏன் லவ் பண்ணினீங்கள்.

உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கென்ன...இப்பிடி பக்கத்தில இருந்துகொண்டு கேள்வி கேக்கிறீங்கள் சிரிக்கிறீங்கள். எங்களையார் கேள்வி கேக்க விட்டவை பதில் யார் சொல்லுவினம்.பெரியாக்கள் கதைக்கிற பக்கமே நாங்கள் போகேலாது. அம்மா 6 வயசிலயே செத்திட்டா என்று கண் கலங்கினா. சொந்தக்காரர் சொல்லிச்சினம் நானும் கழுத்தை நீட்டிட்டன். மனுசன் என்னை நல்லாத்தானே வச்சிருந்தது. பரியாரின்ர மனிசி என்று ஊரிலயும் எனக்கு நல்ல மரியாதை. சொத்து சுகம் பூமி நிலம் என்று நல்லாத்தானே இருந்தம். இப்பத்தான் எல்லாம் யார் யாரோ அனுபவிக்குதுகள்.

அப்பம்மா அப்ப தாத்தா நல்லவர்தானே பின்ன ஏன் நீங்கள் 10 வருசமா கதைக்காமல் இருந்தனீங்கள்.

அவற்ற குசும்புக் கதையள் வர வரக்கூடிட்டுது. அவர் கதைச்சிருக்கலாம்.

ஆகா அப்பவே ஈகோப் பிரச்சனையா..ம்.

இப்பிடிச்சும்மா பம்பலாப் போகுது பொழுது. அவாக்கு சில விசயங்கள் தெரியாதென்டு விளங்கப்படுத்தப்போய் மூக்குடைபட்டிருக்கினம் சிலர்.

ஒருநாள் வெளில போன ஒரு இடத்தில இருந்த வோஸ்றூம்ல இருந்த கொமட்ல flush பண்றது கொஞ்சம் வித்தியாசம்..பொதுவா ஒரு பிடியிருக்கும் இது ஓரு குட்டி button இருக்கும் கருஞ்சிவப்பா.. பெருசா தெரியாது கண்ணுக்கு. அத்தை போட்டுவந்து சொன்னா எப்பிடி flush பண்றதென்று முதல் தெரியேல்ல ..தேடிப்பார்த்தனான் வித்தியாசமா இருக்கெண்டு சொன்னா. உடன அப்பம்மா சொன்னா என்ன உனக்கு அந்த button தெரியேல்லயே.எனக்கே வடிவாத் தெரியுது..மலேசியாலயும் இப்பிடித்தான்.

இன்னொருநாள் அப்பம்மா ஒரே இருமிக்கொண்டிருந்தா. வேற ஆக்களின்ர வீட்டில நிண்டனாங்கள் பின்ன நடுக இருமுறா என்டிட்டு அத்தை gum குடுத்திட்டுச் சொன்னா அம்மா இது விழுங்கக் கூடாது..சுவை போன பிறகு வெளில துப்பிடணும். அப்பம்மா வேண்டி வாய்ல போட்டிட்டு அட இது சுவிங்கம்..இதை எப்பிடிச் சாப்பிடணும் என்று எனக்குத் தெரியாதே..இதையேன் நான் விழுங்கப் போறன்.நீங்கள் எல்லாம் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீங்கள் ஹா? தெரியாமல்தான் கேக்கிறன் ஊரில நீ சுவிங்கம் சாப்பிட்டதில்லையே?
அத்தையைப் பார்க்ப பாவமாய் இருந்திச்சு..அத்தை சொன்னா பிறகு நீங்கள் விழுங்கிப்போட்டு முதல்லயே நீ சொல்லியிருக்கலாம் என்டுவீங்கள் அதான் சொன்னனாண.
அந்த வீட்ட விட்டு வரேக்க அத்தை கேட்டா அம்மா gum துப்பிட்டியே..இல்ல கொடுப்புக்குள்ள ஒட்டி வைச்சிருக்கிறன். இருமலோட விழுங்கிடப்போறாய் துப்பண..அடி விசரி நான் எப்பவோ வோஸ்றூம்ல துப்பிட்டன.

அப்புறம் ஒரு விசயம் சொல்ல மறந்திட்டன் அந்தக் குமரி தோழி இருக்கிறா தானே அவா கனடாக்கு வாறா என்டு தெரியும். ஆனால் அப்பம்மான்ர அதிஸ்டம் அவா சித்தப்பா வீட்டுக்கு பக்கத்து வீட்டு அன்ரின்ர மாமி :-) அப்பம்மாவும் அவாவும் கனடால சந்திக்கேக்க ஒரு சிற்றுவேஸன் ஸோங் போடட்டே " என்னம்மா கண்ணு செளக்யமா"

Tuesday, October 21, 2008

தூக்கம் கண்களைத் தழுவட்டுமே

"ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்கு தூக்கம் போச்சே..." இப்படித்தான் எங்களில் 25 வீதமானவர்கள் அடிக்கடி பாடிக்கொண்டிருக்கிறம். ஒன்பது வீதமான ஆக்களின் நிலமை இன்னும் மோசம்...அவைக்கு எப்போதுமே நித்திராதேவியோட சண்டைதானாம். படுத்ததுதான் தாமதம் உடனே நித்திரை வந்துவிடும் அல்லது பக்கத்தில இருப்போரை வெட்டினாற்கூடத் தெரியாத மாதிரி நித்திரை கொள்பவர்களும் இருக்கிறார்கள். படுத்துப் பலமணி நேரங்களாகியும் நித்திரை வராமல் கடிகார முள்ளதிர்வதையும் இதயம் துடிக்கும் ஓசையையும் மட்டும் கேட்டுக்கொண்டு கூரையைப் பார்த்துக்கொண்டு ஆந்தைக்குப் போட்டியா விடிய விடிய முழித்துக்கொண்டு இருப்பவர்களுமுண்டு. ஏனிந்த வேறுபாடு? தூக்கமின்மை என்பது ஒருவித வியாதியா? தூக்கமின்மைக்கு என்ன காரணம்? நல்ல நித்திரை கொள்ள என்ன செய்யலாம்?

உணவு ,உடை, உறையுள் ,பாதுகாப்பு, அன்பு மாதிரி நிம்மதியான நித்திரையும் மனிதர்களுக்கு அவசியம்தானே? எவ்வளவு பணம் செலவளித்தும் நல்ல கட்டில் மெத்தையைத்தான் எங்களால் வாங்க முடியும். ஆனால் நல்ல தூக்கத்தை எங்க போய் வாங்கலாம்? "நல்ல நித்திரைகொண்டு கன காலமாச்சு" என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். "நல்ல நித்திரை" என்பது அவரவருடைய வசதிக்கு ஏற்ப வேறுபடும். சிலருக்கு 5 மணிநேர நித்திரையே போதும் போதுமென்றிருக்கும். சில கும்பகர்ணன்களுக்கு 10 மணிநேர நித்திரையே போதாது போலிருக்கும் (அண்ணா, என்னை மன்னிச்சுக் கொள்ளு).

"நல்லா நித்திரை தூக்கி அடிக்கிற மாதிரி இருக்கும் போய்ப்படுத்தா நித்திரை கொள்ள முடியாமல் இருக்கு. மெதுவாக் கண்ணை மூடி தூங்க முயற்சி செய்து நித்திரை வாற நேரம் பார்த்து முழிப்பு வந்திடும்" இப்படி அர்த்தம் இல்லாமல் பலர் புலம்புவதை யாவரும் கெட்டிருப்போம். இவர் போல் தூக்கம் வராமல் அவதிப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் சில உளவியல் காரணங்களாக இருக்கலாம் அல்லது சுற்றுப்புறச்சூழல் காரணிகளாக இருக்கலாம். மனவழுத்தம், மனக்கவலை, போதைப்பழக்கம் போன்றவற்றால் அவதிப்படுவோர்தான் அதிகம் தூக்கமின்றித் தவிப்ப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இவை தவிர உடம்பில் தீராத வலியுடையோர், நுரையீரல் இரத்தப்பை சம்பந்தமான நோயுள்ளோர், இரவு நேர வேலை செய்வோர்கள், நித்திரைக்கான மாத்திரை உட்கொள்வோர்கள், அதிகம் இரைச்சலான/குளிரான/வெப்பமான இடங்களில் வசிப்போர், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவோர் மற்றும் அடிக்கடி caffeine போன்ற பதார்த்தங்களடங்கிய பானங்களை அருந்துவோர் எனப் பலர் தூக்கமின்மையால் அவதியுறுகிறார்கள்.

தூக்கமின்மை என்பது ஒரு வருத்தமன்று; மாறாக நோய் வருவதற்கான அறிகுறியாகும். தூக்க மாத்திரைகளை உட்கொள்வதால் தூக்கம் வரும் என்று நினைப்பது தவறு. மாத்திரைகள் தூக்கம் வருவதை விரைவாக்குமே தவிர ஆழ்ந்த நித்திரையை தராது; மாறாக குறுகிய நேரத்தூக்கத்தையே அது விளைவிக்கும். அடிக்கடி முழிப்பும் வந்து போகும்.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்வோர் பின்னர் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொள்வதை அவதானித்திருப்பீர்கள். அடிக்கடி உட்கொள்வதால் மாத்திரைகளுக்குப் பழக்கப்பட்டுப்போன எமதுடம்பு தான் வழமையாகச் செய்யும் உதவியைக் குறைத்துக்கொள்வதால் ஆரம்பத்தில் வந்தது போல நித்திரை உடனே வராது. எப்போதாவது ஒருநாள் மாத்திரை உண்ணாது தூங்க முயன்றால் அது முடிவதில்லை.
தூக்க மாத்திரைகளை உட்கொண்டு நாளடைவில் முழுத்தூக்கத்தையும் கெடுத்துக்கொள்வதை விட நிம்மதியான நித்திரைக்கு வேறு வழிகளைத் தேடுவதே சிறந்தது. உதாரணமாக படுக்கையை நித்திரை கொள்வதற்கு மட்டும் பயன்படுத்துவது. புத்தகம் வாசித்தல், ரீவி பார்த்தல், றேடியோ கேட்டல் லாப்டாப் இல் நேரங்கழித்தல், போனில் அரட்டை அடித்தல் இவையெதற்குமே படுக்கையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நித்திரைக்குச்சென்று பத்து நிமிடங்களாகியும் உறக்கம் வரவில்லையா? படுக்கையறையை விட்டு வெளியே சென்று விருப்பமான ஒரு பாடலைக் கேட்கலாம்; சிறிது நேரம் ரீவி பார்க்கலாம்; பிடித்த புத்தகமொன்றை வாசிக்கலாம்; மீண்டும் தூக்கம் கண்களை முட்டும்போது போய்த் தூங்கலாம்.

தூங்கச்செல்ல முதல் அன்று நடந்த நல்ல விசயங்களை மட்டும் அசைமீட்டபடி ஒரு சின்னக்குளியல் போட்டுவிட்டு பால் குடிக்கலாம் அல்லது ஸ்னாக்ஸ் ஏதும் சாப்பிடலாம். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்து வைக்கலாம். காலையில் போடுவதற்கான ஆடைகளைத் தயார் பண்ணி வைக்கலாம்.
தினமும் ஒரே நேரத்துக்கு எழும்ப வேண்டும். வார இறுதி நாட்களில் இன்னும் கொஞ்சம் தூங்கினால் என்ன என்று ஆசை வந்தாலும் அந்த ஆசையைப் புறக்கணித்து வாரநாட்களில் எழும்பும் நேரத்துக்கே எழும்ப வேண்டும்.பகல்நேரக்குட்டித்தூக்கத்தைக்குறைக்கவேண்டும்அல்லதுநிறுத்தவேண்டும்

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உறங்கச் செல்வதற்கு 3௪ மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே உடற்பயிற்சியை முடிக்க வேண்டும்.

உணவு உட்கொள்வதற்கென ஒரு அட்டவணை போட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். இரவுச் சாப்பாட்டில் அதிகம் காரமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டாயம் நண்டுக்கறி சாப்பிட்டாத்தான் நித்திரை வருமென்றால் பின்னர் பாலருந்தல் நல்லது.
Nicotine & caffeine நித்திரையைக் கெடுப்பவை. நித்திரைக்குச் செல்ல முதல் caffeine உள்ளடங்கிய பானம் அருந்தவே கூடாது. ஆறு மணித்தியாலங்கள் வரை cஅffஎஇனெ இரத்தத்திலிருக்கும். சிகரட் பிடிப்பவர்கள படுக்க முதல் 2 மணித்தியாலங்களுக்கு முதல் சிகரட் பிடிக்கலாம். சிகரட்டிலுள்ள Nicotine 2 மணித்தியாலங்கள் வரை இரத்தத்திலிருக்கும்.

படுக்கப் போகும்போதுதான் உள்ள வீட்டுக்கவலை நாட்டுக்கவலை எல்லாம் வந்து கண்முன்னால் களி நடனம் புரியும். அதையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு 100 லிருந்து 1 வரைக்கும் எண்ணிக்கொண்டு அல்லது பிடிச்ச பாடல்களைக் கேட்டுக்கொண்டு.. ... .. கொர் கொர் கொர்...

Friday, October 17, 2008

Genital Wart

பல விநோதங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நம்முடலில் நூற்றுக்கும் அதிகமான பாப்பிலோமாவைரஸ்கள் (papillomavirus ) உள்ளன.தோல் சம்பந்தமான நோய்களோடு தொடர்புடைய இந்த வைரஸ்களில் கிட்டத்தட்ட 30 வைரஸ்கள் உடலுறவின்போதே பரப்பப்படுகின்றன. 90 % கருப்பைப் புற்றுநோய்க்குக் கூட இந்த பாப்பிலோமாவைரஸ்களே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது Oral,Genital மற்றும் Anal செக்ஸ் ன் போது பரவும் papillomavirus (6, 11, 30, 42, 43, 44, 45, 51, 52, & 54) உருவாக்கும் வீக்கம் அல்லது அழற்சியே ஜெனிற்றல் வாட்..

பெண்ணின் பிறப்புறுப்பின் வாசலில் நுண்ணிய வீக்கமாகத் தொடங்கிப் பின்பு பிறப்புறுப்பைச் சுற்றியும் குதத்திலும் மிகப்பெரிய திரட்சியாகப் பரவத்தொடங்கும்.ஆண்களுக்கும் பிறப்புறுப்பின் நுனியில் தொடங்கிப் பின்னர் பீனஸ் சுவர்களிலும் குதத்தைச் சுற்றியும் பரவும் ஆனால் ஜெனிற்றல் வார்ட்டின் அறிகுறிகள் ஆண்களில் குறைவாகவே காணப்படும். Oral செக்ஸ் ல் ஈடுபடுவோருக்கு இந்த ஜெனிற்றல் வார்ட் வாயில் கூட வரலாம். Condom அணிந்த பாதுகாப்பான உடலுறவினில் கூட இந்த papillomavirus தொற்றக்கூடும்.இந்த ஜெனிற்றல் வார்ட்டை உருவாக்கும் வைரஸ்கள் ஊடுருவிப் பல மாதங்கள் வருடங்களுக்குப் பிறகு கூட திரட்சிகளை உருவாக்கக்கூடும்.

ஜெனிற்றல் பகுதியில் வீக்கம் காணப்படின் உடனடியாக வைத்திய ஆலொசனை பெறுதலே சாலச் சிறந்தது.ஆரம்பத்தில் அழற்சிகளை அகற்றுவது இலகுவானது ஆதலால் ஜெனிற்றல் பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் குட்டிக் குட்டித் திட்டுக்கள் அல்லது வீக்கம் இருப்பின் உடனே வைத்தியரிடம் காட்டவும்.

ஜெனிற்றல் வார்ட்டை அகற்றுவதற்கான சிகிச்சைகள் வார்ட்டின் அளவு தன்மை பரந்துள்ள இடங்கள் என்பவற்றைப் பொறுத்து வேறுபடும்.Imiquimod, podophyllin anti-mitotic solution, -fluorouracil கிறீம் Trichloroacetic acid போன்ற மருந்துகளால் சில ஜெனிற்றல் வார்ட்கள் குணமாக்கப்படுகின்றன. இவைதவிர Pulsed dye laser சிகிச்சை, Liquid nitrogen cryosurgery போன்ற நவீன சிகிச்சை முறைகளும் பயன்படுத்தப் படுகின்றன.குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்திருப்பவர்கள் fluorouracil கிறீமைப் பயன்படுத்துதலும் கர்ப்பிணிப்பெண்கள் podophyllin / podofilox கிறீமைப் பாவிப்பதும் சிசுவுக்கு உகந்ததல்ல. cryosurgery சிகிச்சையின் மூலம் சிறிய கட்டிகளை உறைய வச்சு லேசர் கதிர்களின் மூலம் எரிக்கலாம் ஆனால் பெரிய கட்டிகளைச் சத்திரசிகிச்சை மூலமாகவே அகற்ற நேரிடும். இந்த ஜெனிற்றல் கட்டிகளை அகற்றினாலும் மூலகாரணிகளான papillomavirus களை எமது உடம்பிலிருந்து முற்று முழதாக அகற்ற முடியாத காரணத்தால் இக்கட்டிகள் மீண்டும் மீண்டும் வரக்கூடும் என்பது மிகவும் கசப்பான உண்மை.சில வைத்திய நிபுணர்கள் interferon-alpha போன்ற விலை அதிகமான மருந்தைக் கட்டியினுள் அனுப்பி இக்கட்டிகளைக் கரைப்பதுண்டு.ஆனால் இந்த விலைகூடிய மருந்துகளால் கூட ஜெனிற்றல் கட்டிகள் திரும்ப வருவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கமுடிவதில்iலை.

Condem கூட முழமையான பாதுகாப்பைத்தராததால் இந்தக் கொடிய தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாத்தக்கொள்ள நாம் Gardasil என்ற தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஓன்பது வயதிலிருந்து 26 வயது வரையிலான பெண்களனைவரும் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். papillomavirus தொற்ற முதல் தடுப்பூசியை உள்ளெடுக்க வேண்டும் மற்றும் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்க முதலே தடுப்புூசியைப் பெற்றிருக்க வேண்டும்..அப்போதுதான் இந்தக் கொடிய நோயிலிருந்து முழமையான பாதுகாப்படைய முடியும்.ஆண்களுக்கு எந்த விதமான தடுப்பூசியும் கண்டறியப்படவில்லை.

இந்த ஜெனிற்றல் வார்ட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது பல சிக்கல்கள் வர வாய்ப்புண்டு.இப்படியான தாய்மாருக்குப் பிறக்கும் குழந்தைகள் பிறக்கும்போதே தொண்டையில் கட்டியுடன் பிறந்து உயிருக்குப்போராடுவதுண்டு.சிசுவிற்கு மூச்சு விடும்போது ஏற்படும் தடைகளைப் போக்க அடிக்கடி லேசர் சிகிச்சையளிக்க வேண்டி வரும்.

ஆரம்பத்திலேயே இந்த ஜெனிற்றல் கட்டியை அடையாளம் கண்டு சிகிச்சையெடுக்காவிடில் vulva, vagina, anus / penis போன்ற உறுப்புகளில் புற்றுநொயை உருவாக்கி விடலாம்.ஆகவே வருமுன் காப்போம்!

Tuesday, October 14, 2008

உடல் நலம் - உள நலம் தொடர்பான ஆய்வுக்கு தமிழ் இளையோர் தேவை

ரொரன்ரோ பல்கலைக்கழகமும் Access Alliance Multicultural Health and Community Services மும் இணைந்து இந்த ஆய்வை நடத்துகின்றன. கனடாவின் புதுக்குடிவரவார்களில் 12-18 வயசுக்குட்பட்ட இளையோர்கள் பாடசாலையில், நண்பர்களிடையே, சமூகத்தில், வீட்டில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன? அந்தப்பிரச்சனைகள் அவர்களின் உடல் நலனையும் மன நலனையும் எப்படிப் பாதிக்கின்றது ? சமூக அந்தஸ்து பெற்றோரின் கல்வியறிவு பொருளாதார நிலமை இ்வையெல்லாம் இவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியே இது.

கனடா ரொரன்டோவிலுள்ள Afghan, Colombian, Sudanese & தமிழ் இளையோர்களைப் பற்றியது இந்த ஆய்வு.


இந்தாய்வில் பங்கு பற்றுபவர்கள்

** 14-18 வயதுக்குட்பட்டவர்களாகவும்
** கடந்த 5 வருடத்துக்குள் கனடாவுக்கு வந்தவராகவும்
** ஓரளவுக்கு ஆங்கிலத்தில் உரையாடக்கூடியவராகவும் இருக்க வேண்டும்

** பங்குபற்றுவர்களுக்கான போக்குவரத்துச் செலவும்(TTC Fare) சிற்றுண்டியும் $ 20 டொலர்களும் வழங்கப்படும்.

** பாடசாலை மாணவர்கள் விரும்பினால் அவர்கள் இந்த ஆய்வில் பங்குபற்றியதற்கான சான்றிதழும் Volunteer Hours க்கான கடிதமும் வழங்கப்படும்.

நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் இந்தாய்வில் பங்குபற்றக்கூடியவர்கள் என்று கருதினால்அல்லது மேலதிக தகவல்கள் அறிய விரும்பினால் snegethy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 09, 2008

என்னைத் தெரியுமா - Alzheimer's disease

நிறைமாதக் கர்ப்பிணியான பியா ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏதோ பொறிதட்ட ஓடி வந்த கணவர் அஜய் அதிர்ச்சியில்

'பியா என்ன பண்றாய் என்று உனக்குத் தெரியுதா'.

என்ன அஜய் உடம்மைக் குறைக்க முயற்சி செய்றன். இங்க பாருங்க எனக்கு எப்பிடி வண்டி வச்சிருக்கெண்டு. ஒரு ஜீன்ஸ்ம் அளவில்ல. சேர்ட் பட்டன் போடமுடியல்ல அதான் உடற்பயிற்சசி செய்றன்.

பியா அஜய் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்ததற்கான விருந்துபசாரம் நடந்து கொண்டிருக்கிறது. பியா மொட்டைமாடியில் தீவிரமா எதையோ யோசிச்சுக்கொண்டிருக்கிறா.

அஜய் : பியா உள்ள வா பனி கொட்டுது பார்.
பியா : இல்ல அஜய் நம்ம பிள்ளை எப்பிடி நான் பெத்தெடுக்கப்போறனோ தெரியல. பயமா இருக்கு.


மகனைக் குளிக்க வாக்க பாத்ரப்ல தண்ணியைத் திறந்துவிட்டிட்டு குழந்தையையும் அதுக்குள்ள விட்டிட்டு அறைக்குள்ள ஏதோ எடுக்க வந்த பியாவின் கண்ணில் ஒரு பல்லி படுகிறது. அந்தப் பல்லியையே பார்த்துக்கொண்டிருக்கும் பியாவுக்கு மகனின் ஞாபகம் இல்லை. தண்ணியி நிரம்பி மூர்ச்சையாகும் மகன் எப்படியோ காப்பாற்றப்படுகிறான்.


இப்ப நான் சொன்னதெல்லாம் U, Me aur Hum என்ற திரைப்படத்தில் வந்த காட்சிகள். படத்தில் பியா (கஜோல்)க்கு Alzheimer's disease என்று சொல்லப்படுகிறது. அஜய் ஒரு மனோதத்துவ வைத்தியர். இருவரும் காதலிக்கிறார்கள். அஜய் தன்னிடம் பொய் சொன்னது தெரிந்து பிரிந்து பிறகு சேர்கிறார்கள். திருமணம் செய்துகொள்கிறார்கள். ஒரு நாள் கடைக்குப்போகும் பியாவுக்குத் திரும்ப வீட்டுக்கு வர வழி தெரியவில்லை. தன்ர பெயர் அஜயின் தொலைபேசி இலக்கம் வீட்டு முகவரி என எல்லாம் மறந்துபோய் விடுகிறது பியாவுக்கு.பிறகொருநாள் திருமணநாளையும் மறந்து முழிக்கிறார் பியா. அப்போதுதான் மருத்துவரிடம் செல்கிறார்கள்.அந்த மருத்துவ நண்பரும் பியாவுக்கு Alzheimer's disease ன் ஆரம்ப கட்டம் என்கிறார்.

65 வயதுக்கு கூடிய கனடிய முதியோர்களில் 7.69% இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதன் முதலாக 1906 ம் ஆண்டு ஜேர்மன் வைத்தியரான Alois Alzeimer ல்தான் இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகங்களை மங்கச் செய்து உணர்வுகளை அங்க அசைவுகளைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்வது இந்நோய். cerebral cortex , entorhinal cortex , hippocampus , பின்னர் frontal , partial & temporal என மூளையின் எல்லாப் பாகங்களும் படிப்படியாக தம் தொழிற்பாடுகளை நிறுத்திக்கொள்ளும்.

அண்மையில் ரொரன்டோவில் இந்நோயுள்ள 3411 பேரின் மூளைகளின் உருவ அமைப்புகளை ஒப்பீடு செய்து பார்த்ததி்ல் `ஹிப்போகம்பஸின் கனவளவு குறைந்து போனால் அது அல்சைமரின் ஆரம்ப கட்டம் எனவும் medial temporal lobe ன் கனவளவு குறைவா இருந்தால் அவர்களை இந்நோய் தாக்கி 4-5 வருடங்கள் ஆகியிருக்கலாம் என்று சொல்லலாமாம். நோயின் ஆரம்ப கட்டத்தில் cerebellum முதுகெலும்பு மற்றும் உடல்பாகங்களை அசைக்கச் செய்யும் பாகங்கள் போன்றவை பெரிதாக பாதிப்படைவதில்லை அதனால்தான் இந்நோய் தாக்கியிருப்பவர்களால் ஆரம்பகட்டத்தில் நடக்கலாம் கதைக்கலாம். வெளியாட்களிடையே இவர்கள் நோயாளிகளாக அடையாளம் காணப்படமாட்டார்கள். ஆனால் நாளடைவில் அத்தியாவசிய தேவைகளையே இவர்களால் கவனிக்க முடியாது. நெருப்பில கை வைச்சால் சுடும் என்றோ பேனையால் எழுதலாம் என்றோ தெரியாது.கிட்டத்தட்ட குழந்தையைப்போல் ஆகிவிடுவார்கள்.

நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல தான் தாயாகப்போறன் என்பதை மறந்து பியா ஸ்கிப்பிங் ஆடுறா. பின்னர் குழந்தை பிறந்ததை மறந்து எப்படிக் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறோனோ என்று கவலைப்படுகிறாள்.பியாவுக்கு நான் அவளுடைய கணவன் என்ற ஞாபகம் வரும் நாட்கள் என்னுடைய அதிஸ்டமான நாட்கள் என்று சொல்வார் அஜய்.இந்தப்படமே அஜய் ஒரு அந்நியனாக பியாவிடம் அறிமுகமாகி தங்கள் கதையைச் சொல்வதுபோல எடுக்கப்பட்டிருக்கும். கதை சொல்லி முடிய பியாவுக்கு அஜய் தன் கணவர் என்ற ஞாபகம் வரும். கிட்டத்தட்ட 50 First Dates மாதிரி. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் எப்ப கோபப்படுவார்கள் எப்ப உணர்ச்சிவசப்படுவார்கள் என்று தெரியாததால் அநேகமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர்தான் கூடவிருந்து இவர்களைப் பார்த்துக்கொள்ள முடியும். மற்ற யாருக்கும் அந்தளவுக்கு பொறுமையோ விருப்பமோ தேவையோ இருக்கப்போவதில்லை.

ரத்த உறவுகளுக்கு அதாவது உங்கள் பெற்றோருக்கு அல்லது சகோதரர்களுக்கு Alzheimer's disease இருந்தால் உங்களுக்கும் வரக்கூடிய சந்தர்ப்பமுள்ளது. அதுவும் ஒரு கருமுட்டையிலிருந்து பிறந்த ஒருவருக்கு இந்நோய் இருக்குமானால் மற்றவருக்கு வரக்கூடிய சாத்தியக்கூறு 40%.அம்மா அப்பா இருவருக்கும் இந்நோய் இருந்தால் அவர்களுக்கு 80 வயது வரமுதல் அவர்களுடைய பிள்ளைகளுக்கு இந்நோய் வரக்கூடிய சாத்தியக்கூறு 54%.

அஸ்பிறின் நிக்கற்றின் போன்றவை இந்நோய் வருவதற்கான காரணிகளைக்குறைப்பதாகச் சொல்லப்படுகிறது இருந்தாலும் அஸ்பிறின் போன்றவற்றால் ஈரல் பாதிப்படைவதும் நிக்கற்றினால் நுரையீரல் பாதிப்படைவதும் தெரிந்ததே.ம் ஏறச்சொன்னால் எருதுக்கு கோவம் இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோவமாம்.

யோர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இரண்டு மொழிகள் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்நோயால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் சற்றுக்குறைவாகவுள்ளதாம் ஏனென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பேசுபவர்களின் working memory அதிகமான வேலையைச் செய்கின்றதாம் அதனால் அது தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருப்பதால் இப்டித் திடீர் மறதி வருவது குறைவாம்.

Wednesday, October 08, 2008

ஆட்டிசம்

வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்?

ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப் பெற்றோரைப் போலவும் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு சிறிய வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துக்கொண்டிருந்தவர்களுக்கு எப்போது தம்பிள்ளை தங்களைப் பார்த்துச் சிரிப்பாள், தூக்கச் சொல்லிச் சிணுங்குவாள, தவழ்ந்து வந்து செல்லக் குறும்புகள செய்து தங்களைச் சிரிக்க வைப்பாள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் நாளடைவில் ஏக்கமாக மாறத் தொடங்கி விட்டன. ஏனென்றால் நர்மிதா மற்றக் குழந்தைகளைப் போல ஐந்து ஆறு மாதத்திலேயே பெற்றோரினதும் மற்றோரினதும் முகம் பார்த்துச் சிரிக்கவில்லை. கார்ட்டூன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கவில்லை எவற்றிலுமே ஒரு பிடிப்பில்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பாள். காச்சலோ தடிமனோ வந்தால் கூட தன்னைத் தேற்ற யாரும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிறிதுமற்று இருப்பாள். பேச்சுத்திறன் கூட மிகவும் மட்டுப் படுத்தப் பட்டதாகவே இருந்தது. உதாரணமாக தனக்குப் பசிக்குது "பால் வேணும்" என்று கேட்கத் தெரியாமல் பக்கத்திலிருப்பவிரிடம் "உங்களுக்குப் பசிக்குது பால் குடுங்கோ" என்றுதான் நர்மிதா சொல்வாள்.

தங்களுடைய குழந்தை வளர்ச்சி மற்றைய குழந்தைகளைப் போலில்லாதிருப்பதால் வைத்தியரிடம் அழைத்துச் சென்றபோது நர்மிதாவுக்கு ஆட்டிசம் என்ற மூளைவளர்ச்சிக்குறைபாடு நோய் இருப்பதாக சொல்லிவிட்டார் வைத்தியர்.

உலகில் வாழும் குழந்தைகளில் 1 : 2500 என்ற விகிதத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்கிறார்கள். அன்பு செலுத்துவோரிடத்தில் திரும்ப அன்பு செலுத்தும் தன்மையற்ற சமூகத்தோடு ஒன்றி வாழும் தன்மையற்ற பேச்சுத்திறன் குறைவாகவோ அல்லது முழமையாக இழந்த கற்பனா சக்தி சிறிதுமற்ற இந்த ஆட்டிசம் குழந்தைகளைப் பற்றி முதன் முதலில் தெரிந்து 1943 ல் வெளியுலகத்திற்கு சொன்னவர் Dr.Kanner.

பெண் குழந்தைகளை விட மூன்று மடங்கு அதிகமாக ஆண் குழந்தைகளைத் தாக்குகிறது இந்த ஆட்டிசம். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அநேகமான குழந்தைகளைப் பார்த்தால் தங்களைப் பராமரிப்பவர்களை விட தங்களைச் சுற்றி இருக்கும் சடப்பொருட்கள் மீதே பாசமாக இருப்பார்கள். எந்நேரமும் ஏதாவது பொருளை எடுத்து வைத்து அதன் அளவு, வடிவம், தன்மை பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். தாம் நேசிக்கின்ற பொருளைக் காணாவிட்டால் மூர்க்கமாகிப் பக்கத்திலிருப்பவரைத் தாக்கும் குழந்தைகளுமுண்டு. சில குழந்தைகள் கையால் தரையைப் பிறாண்டுவார்கள் தரையில் கையால் குத்துவார்கள் தலையை ஆட்டி ஆட்டி வித்தியாசமான சத்தம் போடுவார்கள். இந்த ஆட்டிசம் குழந்தைகளிடம் சில அதீத சக்தி இருக்கும். உதாரணமாக மூன்று நான்கு இலக்க எண்களைக் கூட இலகுவாகப் பெருக்கிச்சொல்வார்கள்.

ஆட்டிசத்திற்குரிய காரணமாக Dr.Kanner சொன்னது மரபியல் காரணங்களாகும். ஆனால் அவருக்கு பின்பு வந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் பெற்றோர்களின் சரியான கவனிப்பின்மையால்தான் குழந்தைகளுக்கு இந்த பரிதாப நிலையென்றார்கள். தற்போதுள்ள நிபுணர்கள் பெற்றோர்கள் நிந்திக்கப்பட வேண்டியவர்கள் அல்ல பதிலாக அன்பும் உதவியும் தேவைப்படுபவர்கள் என்கிறார்கள்.

இந்த ஆட்டிசத்திற்கான முக்கியமான ஒரு காரணம் மரபணுக்களாகும். ஓரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருக்கென்றால் அந்தக்குழந்தையின் சகோதரர்களில் ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருக்கோ ஆட்டிசம் இருப்பதற்கான சாத்தியக்கூறு 3 % ஆகும். அதனால்தான் ஆட்டிசம் குழந்தையுள்ள பெற்றோர்களில் சிலர் தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்புவதில்லைப் போலும். ஓரே கரு முட்டையிலிருந்து பிறந்து இரட்டைக்குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் இருந்தால் மற்றக்குழந்தைக்கும் ஆட்டிசம் இருப்பதற்கான சாத்தியக்கூறு 75% ஆகும். எமதுடம்பிலுள்ள 23 சோடி நிறமூர்த்தங்களில் ஆட்டிசத்தோடு தொடர்புடைய நிறமூர்த்தங்கள் 2, 7, 15, மற்றும் X நிறமூர்த்தங்கள் என்று Folstein & Roseb என்ற ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

குழந்தைக்கு கருவிலோயோ அல்லது பிறந்த உடனேயே கொடுக்கப்படும் றுபெல்லா தலிடோமைட் போன்ற மருந்துகளால் ஏற்படும் பின்விளைவுதான் ஆட்டிசம் எனச் சில நிபுணர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக 1960 களில் கர்ப்பிணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தலிடோமைட் என்ற மருந்து அக்கர்ப்பிணிப்பெண்களின் குழந்தைகளின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்ததும் நாளடைவில் அக்குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை MRI பரிசோதனைக்குட்படுத்தியபோது சாதாரண குழந்தைகளின் மூளையை விட ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையின் அளவு பெரிதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டிசம் குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் மூளை அளவு சாதாரணமாகத்தானிருக்கும் ஆனால் இரண்டு வயதுக்குப்பிறகு மூளையின் முக்கிய பகுதியான Cerebellum என்ற பகுதியிலுள்ள white matter மற்றும் cerebral hemispheres இல் உள்ள Grey matterன் அளவும் அதிகரிக்கிறது. அதேபோல cerebellar cortex லுள்ள ஒருவித நரம்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 31 வீதம் குறைகிறது. எங்களுடைய அசைவுகளை நிர்ணயிக்கும் Cerebellum பகுதியில் ஏற்படும் மாற்றங்களும் ஆட்டிசத்திற்குரிய காரணமாகும் என நிபுணர்கள் கண்டுபிடித்திருந்தாலும் குறிப்பாக மூளையிலுள்ள குறைபாடுகளுக்கும் ஆட்டிசக் குழந்தைகள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு அறிகுறிகளுக்கும் இடையேயான தொடர்பு இன்னமும் தெளிவாக அறியப்படவில்லை.

அநேகமான மூளை சம்பந்தப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட வருத்தங்களுக்கு நிரந்தரமான தீர்வு இல்லாதது போலவே ஆட்டிசத்துக்கும் நிரந்தரமான தீர்வு இல்லை.ஆனால் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய பேர்ஸனல் ரியுட்டர் போன்றோரை வைத்து முறையான பயிற்சி கொடுத்து வந்தால் நாளடைவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முன்னேற்றம் காணலாம் .நான் ஏற்கனவே சொன்னதுபோல சில குழந்தைகளிடம் உள்ள அபார சக்தியை வளர உதவி செய்தால் அந்தக் குழந்தைகளாலும் சாதனை படைக்கலாம்.

Friday, October 03, 2008

எதை நீ தொலைத்தாலும் மனதை....
மீள்பதிவு - நட்சத்திர வாரத்திலிருந்து