Custom Search

Thursday, August 20, 2009

Toronto வில் Tornado


படம் பெறப்பட்டது : www.cp24.ca ( City Pulse 24)

இரவு 7 மணி அப்பிடியிருக்கும் நான் அத்தை வீட்ட நின்டனான். திடிரென்டு பெரிய இரைச்சலுடன் இடியிடிக்க மழை கொட்டத் தொடங்கியது. மரங்கள் எல்லாம் பேயாட்டம் ஆடத்தொடங்கிச்சு. நானிருந்த அறையில இருந்து பார்க்க பக்கத்து வீட்டிலிருந்த மரத்திலிருந்து பியர்ஸ் காய்கள் எல்லாம் காத்துக்குப் பறக்குது. சுவாரிசயமாக் கதைச்சுக்கொண்டிருந்த அத்தை அம்மா அப்பம்மா எல்லாரும் கதையை நிப்பாட்டிட்டு வாசலுக்குப் போட்டினம் புதினம் பார்க்க.

இருளத்தொடங்கியிருந்தது 7 மணியளவில். புயலுடன் கூடிய மழை அடிச்சு ஓய்ஞ்சுது கொஞ்ச நேரத்தில. மழை நிண்டதும் இருளத்தொடங்கியிருந்த வானம் பட்டப்பகல் போல மீண்டும் வெளிச்சமாகியது. என்னதான் நடக்குது எண்டிட்டு செய்தியைப் போய்ப் பார்த்தால் எங்கள் மார்க்கம் ( வீட்டிலிருந்து ஒரு 20 கி.மீ தொலைவில் ) நகரில் சில வீட்டுக்கூரைகள் சேதம் ,அங்கால இன்னும் கொஞ்சம் தள்ளியுள்ள நகரங்களிலும் வீடுகள் சேதம் , ஒருவர் இறந்துவிட்டார் என்று செய்திகள் அறிவித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

புயலுடன் கூடிய மழை ஓய்ந்து விட்டாலும் சாதுவான மழை தூறியபடியே இருக்கிறது. இடி இடித்துக்கொண்டேயிருக்கிறது. வீட்டிலிருந்து அடுத்த தொலைபேசி அழைப்பு வரமுதல் அத்தை வீட்டிலிருந்து வெளிக்கிடோணும் ஆனால் கார் ஓடவும் பயமா இருக்கு. நான் கொண்டு போய் விட்டிட்டு வாறன் என்று சின்ன மச்சான் நக்கல் அடிக்கிறான் ..ரோசம் வந்து வெளிக்கிட்டம் நானும் அம்மாவும். வீட்ட வந்தால் அப்பாவைக் காணேல்ல.

அக்கா சொன்னா நிமல் அண்ணா வீட்டு கூரை எல்லாம் உடைஞ்சிட்டாம் வீடெல்லாம் தண்ணியாம்..அவையைக்கூட்டிக்கொண்டு வர அப்பா போட்டார் என்டு. என்னால நம்ப ஏலாம இருந்தது ஏனென்டால் ஒரு சின்ன விசயத்துக்கும் ரென்சன் ஆகிற / பயப்படுற ஆள் நிமலண்ணா அப்ப நான் நினைச்சன் அக்கா சும்மா வேணுமென்று சொல்றா என்டு. அம்மாவும் சொன்னா ஏனப்படி சொல்றாய் பாவம் நிமல் விளையாட்டுக்கும் அப்பிடிச்சொல்லாத எண்டு.

உண்மையா எந்தக் கெட்டதும் எங்களுக்கு நடக்காதெண்டதுதான் எல்லாற்ற எண்ணமும் ஆனால் அது சிலநேரம் நடந்திடும். அப்பிடித்தான் நிமலண்ணா வீட்ட வந்து நிண்ட அவற்ற நண்பர் ஒராள் கார்ல ஏதோ எடுக்க எண்டு போனவர் ..அவற்ற மனைவியின் அலறல் சத்தம் கேட்டு நிமலண்ணா வெளியில ஓடிப்போனால் வேகமா வந்துகொண்டிருந்த புயல் நிமலண்ணாவை மேல தூக்கி இழுக்குதாம். கீழ நிமலண்ணா , நிமலண்ணான்ர மனைவி ,நண்பரின் மனைவி இவ்வளவு பேரும் அவரை மேல போகவிடாமல் அழுத்திப்பிடிக்கிறார்களாம். ஏற்கனவே புயலில் அள்ளுப்பட்டுக்கொண்டு வந்து மரத்துண்டுகள் , கொப்புகள் மற்றைய பொருட்கள் எல்லாம் இவர்களுக்கு மேல் விழுந்து அழுத்துகிறது...அப்பிடியே மேலெழும்பிய புயல் நிமலண்ணாட வீட்டுக் கூரை ,கதவு யன்னல் எல்லாத்தையும் சேதமாக்கிக் கொண்டு பக்கத்து வீடுகளையும் பதம் பார்த்துக்கொண்டு கொஞ்சம் அமைதியாகிக் கடந்து போகிறது.

என்ன நடந்தது என்று திகைச்சு நிக்கிறதுக்கள்ளயே எல்லாம் நடந்து முடிந்திற்று. இதுவரையில் இந்தப் புயலால் ஒருவர் இறந்திருக்கிறார் காயப்பட்டோர் போன்ற ஏனைய தகவல்கள் இன்னும் வரவில்லை. ஒவ்வொரு ஊர் ஊராக அலையும் இந்தப் புயல் இப்ப எங்க என்ன ஆட்டம் போடுதெண்டு தெரியேல்ல.

இன்றைய இந்தச் சூறாவளியால் Vaughan , Maple போன்ற நகரங்களிலிருந்து இதுவரை 120 குடும்பங்கள் அவர்களின் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டிருக்கின்றது. 2 நாட்களுக்கு முதல் எங்கள் பகுதியிலும் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைபட்டிருந்தது. நாளையும் புயலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது வேலைக்குப் போகாமல் விடலாம் போலத்தான் தெரிகிறது.


இப்ப எனக்கு ஞாபகம் வாறது "Dante's Peak" என்ற திரைப்படம் தான். வாழ்வதற்கு சிறந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்ட இடமொன்றில் வெடிக்கவிருக்கும் எரிமலை பற்றி எதிர்வுகூறும் நிபுணரின் கருத்துகளை புறக்கணித்துவிட்ட பின்னர் அந்த இடத்தில் உள்ள மக்கள் படும் துன்பங்களையும் பூகம்பம் , எரிமலை வெடிப்பு வெடிப்புக்கு பின்னர் நடைபெறும் லாவா மக்மாக்களின் களியாட்டம் என எல்லாவற்றையும் வெளிக்கொணர்ந்த படம் அது. பார்த்துப் பல வருடங்களாகியும் பலகாட்டிசிகள் இப்பவும் ஞாபகம் வருது. அதும் முக்கியமா இந்தப்படத்தில போட்டிருக்கிற காட்சியில அந்தக் கொதி பிடிச்ச மேலதிகாரி சாகுற காட்சி. சாவது போல காட்சி இல்லை ஆனால் பாலம் முறிஞ்சிடும்.

அம்மாட்ட நானிந்த படத்தைப் பற்றிச் சொல்றன். அம்மா பல வருடங்களுக்கு முன்பு வடமராட்சியில் ஏற்பட்ட சூறாவளியில் தாத்தான்ர கடையின் கூரையைச் சேதமெதுவும் இல்லாமல் காற்று எப்பிடித் தூக்கிப் பக்கத்து தோட்டத்தில போட்டதெண்ட கதையைச் சொல்றா எனக்கு.

Monday, August 10, 2009

உங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?

{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது }

எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது.

எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் "அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் " என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளிச்சு நிண்டே கேட்கும்?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறேன். ஆனால் எல்லாமே எங்களுடைய மனம்தான் என்று இப்போது தெரிகிறது.

பிறந்ததிலிருந்தே எங்களுடைய மனதில் விதைக்கப்படும் எண்ணங்களே நாங்கள் வளர்ந்து எப்படிப்பட்ட மனிதராக உருவாகிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. ‘என்ர பிள்ளை கெட்டிக்காரி, அவளால் நன்றாகப் படிக்கமுடியும் , அவள் வளர்ந்து தனக்குப் பிடித்த ஒரு துறையில் மிளிர்வாள்’ என்று தாயொருத்தி மற்றவர்களிடம் சொல்வதை அந்தப்பிள்ளை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தப்பிள்ளை பிற்காலத்தில் ஏதோ ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஒருவர் எங்களைப் பற்றி நல்ல விதமாகக் கதைக்கும்பொழுது அது எங்களின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கச் செய்கின்றது.

இந்தச் சுயமதிப்பீடு அல்லது சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள காலமெடுக்கும். ‘நான் என்னைச் சுற்றி இருப்பவர்களால் நேசிக்கப்படுகிறேன், எனக்கென்று சில சிறந்த குணங்களுள்ளன, என்னால் முடியும், என்னால் மற்றவர்களுக்கும் உதவ முடியும்’ போன்ற எண்ணங்கள்தாம் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு தொடர்ந்து உயிர்வாழும் ஆசையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன.

சுயமதிப்பை வளர்த்துக்கொள்ளும் எண்ணங்கள் உருவாகும் வகையில் குழந்தைகளை வளர்க்கும் கடமை பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் தான் அதிகம் அடங்கியிருக்கிறது. அவர்கள் அந்தக் கடமையைச் செய்யத் தவறுகையில் அந்தப் பணி நண்பர்களுடையதாய் அமைகிறது. அம்மா அப்பாவிடம் சரி சமமாகக் கதைக்கப் பழக்க வேண்டும்; எதையும் மனம் திறந்து பெற்றோருடன் உரையாடக் கூடிய இடத்தை வழங்க வேண்டும்; ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.சில குடும்பங்களில் என்ன நடக்கிறது? பாடசாலையில் குடியமர்வு ஆலோசகராக பணிபுரியும் ஒருவருடன் அண்மையில் உரையாடும்போது அவர் சொன்னார், ‘உண்மையில் இந்தப்பிள்ளைகள் இப்படி ஓராளை ஓராள் அடிச்சுக்கொண்டு சாகிற அளவுக்கு நடந்துகொள்றதுக்கு அவர்களின் பெற்றோரும் ஒருவகையில் காரணம்தான்.’ வெளிநாடுகளில் ஆசிரியர்கள் "என்னைப் பார் , என் கண்ணைப் பார்த்துப் பேசு "என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சில வீடுகளில் "என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிற அளவுக்கு நீ வளந்திட்டியோ " என்று சொல்லி பிள்ளைகளை அடிக்கிறார்கள். அப்போ அந்த பிள்ளை ஆசிரியர் சொல்வதைக் கேட்பதா, பெற்றோர் சொல்வதைக் கேக்கிறதா? ஆசிரியர் கேள்வி கேட்கும்போதெல்லாம் அந்த மாணவன் தலை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை, குனிந்துகொண்டே பதில் சொல்வான். இது தொடர்பாக அந்த குடியமர்வு ஆலோசகர் அவனுடைய தந்தையிடம் பேசும்பொழுது அவர் சொன்னாராம் "நான் என்ர அப்பாவை இதுவரைக்கும் நிமிர்ந்து பார்த்துக் கதைத்ததில்லை. ஆனால் இவன் இப்பவே என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிறான் ,அப்ப இவனை அடிக்காமல் என்ன செய்றது?"

பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு சுயமதிப்பீடு , வெறுப்பு , குழப்பம் , விரக்தி போன்றவற்றோடுதான் வாழ்கிறார்கள்.பிள்ளைகளிடம் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை அதில் மேலும் ஈடுபடச்செய்து அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை வீட்டுக்கும் நாட்டுக்கு நல்லவர்களாக உருவாக்க வேண்டும். ஆனால் சில பெற்றோர் என்ன செய்கிறார்கள்? பிள்ளைக்கு ஒரு விடயம் சரியாகச் செய்யத் தெரியாவிட்டால் "எருமை மாடு எத்தனைதரம் சொல்லித் தந்தனான் சனியன்… சனியன் " என்று திட்டுவார்கள். இன்னும் சில பெற்றோர் பொது இடங்களில் வைத்தே பல்லை நெறுமிக்கொண்டே, "இண்டைக்கு வீட்ட வா உனக்கிருக்கு" என்று சொல்லும்போது வீடு செல்லும்வரைக்கும் அந்தப்பிள்ளை அதையே நினைச்சு நினைச்சு என்ன நடக்குமோ என்று பயந்து ஏங்க ஏங்க அந்தப்பிள்ளையின் சுயமதிப்பீடு குறைந்து கொண்டே போகும்.

ஆனால் பாடசாலையில் பிள்ளை ஒரு பிழை விட்டால் ஆறுதலாக பொறுமையாக விளங்கப்படுத்தி அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அவர்களாகவே தங்களுக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்து அந்தச் செயலை செய்ய வைத்து விட்டு, "பார்த்தாயா திரும்ப முயற்சி செய்தபோது உன்னால் அந்தக் காரியத்தை எளிதாகச் செய்ய முடிந்ததல்லவா" என்று பாராட்டி ஒரு பேனாவைக் கொடுத்து அந்தப்பிள்ளையின் சுய மதிப்பீட்டை வளர்க்கிறார்கள். இது எல்லாப்பெற்றோரையும் குறை கூறி எல்லா ஆசிரியரையும் தலையில் தூக்கி வைக்கும் முயற்சியில்லை. ஆனால் பொதுவாகவே மாணவர்களிடம் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பள்ளியிருக்கிறது. ஆனால் பிள்ளைகளிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று பெற்றோருக்குச் சொல்லித்தர எந்தப்பள்ளியியும் இல்லை.

பிறந்த குழந்தைக்குக் கூட அம்மாவின் தொடுகையில் , பார்வையில் அன்பிருக்கிறதா, கோபம் இருக்கிறதா, கவலையிருக்கிறதா என்று இனம்காண முடியும். தன்னைச்சுற்றி நடக்கும் விடயங்களில் இருந்தே தன்னை வளர்த்துக்கொள்ளும். எனவே குழந்தையின் முன்னால் எப்போதும் சந்தோசமாகத் தென்படுங்கள். நான் நேசிக்கப்படுகிறேன் என்று அந்தக் குழந்தை உணரவேண்டும். உணர்தல் வேறு உணர்த்தப்படுதல் வேறு. குழந்தை தானாகவே உணரவேண்டும்.

இந்தக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது அக்காவின் மகன் விளையாட்டில் தோற்றுவிட்டதால் றிமோட்டை எறிந்துவிட்டு அழுதுகொண்டு ஓடி வந்து கதவைப் பூட்டிக்கொண்டான்.

இப்போ, "நீ தோத்துவிட்டாய் ந ந ந ந" என்று சின்னப்பிள்ளைகள் நெழிப்பது போலும் பழிக்கலாம். அல்லது “தோத்துப்போறதும் ஒருவிதமான பாடம் தான் நீங்கள் போனதடவை நல்லா விளையாடி வென்றனீங்கள்தானே என்று உற்சாகப்படுத்தித் திரும்ப விளையாட வைக்கலாம். விளையாட்டாக நெழித்துப் பழிக்கும்போதும் சுயமதிப்பீடு குறைக்கப்படும். ஆனால் முன்பு வென்றதை நினைவுபடுத்தி, உற்சாகப்படுத்தி மீண்டும் விளையாட வைக்கும்போது அப்பிள்ளையின் சுயமதிப்பீடு அதிகரிக்கப்படும். ‘இதென்ன சாதாரணமான விளையாட்டுப் பற்றியது இதில் என்ன இருக்கு’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் குழந்தை வளர்ந்துவந்து வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் தோல்வி ஏற்படும்போது அதன் சுயமதிப்பீடு அவ்வளவாகப் பாதிக்கப்படாது; ஏனென்றால் அந்தப்பிள்ளைக்குத் தெரியும் தன்னால் இதிலிருந்து மீளமுடியுமென்று.உயர்ந்த சுயமதிப்பீடு உள்ளவர்கள் எப்போதும்:

*பிறரை மட்டுமே நம்பியிருக்கமாட்டார்கள்.
*என்னால் முடியும் என்று பெருமையுடனும் சுதந்திரமாகவும் வாழ்வார்கள்.
*பொறுப்புடன் கடமைகளைச் செய்வார்கள்.
*எப்போதும் தேடலுடன் புதியவற்றைத் தேடிக்கற்றுக் கொள்வார்கள்.
*மகிழ்ச்சியையும் சோகத்தையும் சரிசமமாக எதிர்கொள்வார்கள்.
*கோபத்தையும் எரிச்சலையும் கையாளத் தெரிந்திருப்பார்கள்.
*மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.குறைந்த சுயமதிப்பீடு உள்ளவர்கள்:
*புதிதாக எதையும் செய்யப் பயப்படுவார்கள்.
*என்னை யாருக்கும் பிடிக்கவில்லை,நான் யாருக்கும் தேவையில்லை என்று எண்ணுவார்கள்.
*தன் பிழைக்கும் மற்றவர்களையே குறை கூறுவார்கள்.
*தன்னையும் தன் திறமைகளையும் குறைத்தே மதிப்பிடுவார்கள்.
*கோபம், கவலை, மகிழ்ச்சி இப்படி எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டுவார்கள்.
*சட்டென்று யாரையும் நம்புவார்கள். நம்பி அவர்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள்.


சுயமதிப்பீட்டை அதிகரிக்க என்ன செய்யலாம்?

*இயலாமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து திறமைகளை அடையாளம் கண்டு அவற்றில் ஈடுபடல்.

*பக்கத்திலிருப்பவர்களின் கருத்தை விட யாருக்கு சுயமதிப்பீடு அதிகரிக்க வேண்டுமோ அவர்களை மட்டும் கணக்கிலெடுத்தல்.

*என்னைச் சுற்றியிருப்பவர்களால் "நான் நானாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன்" என்று காட்டுதல்.

*பிழை விடலாம், எல்லோரும் பிழை விட்டிருக்கிறார்கள் என்று தாங்கள் விட்ட பிழைகளையும் பகிர்ந்துகொள்ளல்.

*தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது நான் உன்னிலும் பெரியவன் , நான் உன் சரி பிழைகளை அடையாளம் காணும் உயர்ந்த நிலையிலிருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளாமலிருத்தல்.

*அந்நபரால் செய்து முடிக்கக்கூடிய சின்னச் சின்ன நோக்கங்களையும் , குறிக்கோள்களையும் நினைவூட்டல்.

*குறிக்கோள்களைப் படிப்படியாகத்தான் அடைய முடியும் என்று நினைவூட்டல்.

*எப்போதும் அந்நபரின் நேர் தன்மைகளை(Positiveness), திறமைகளைப் பற்றி உரையாடுதல்.

*பிழை விட்ட காரியத்தை அடுத்த முறை எப்படி இன்னும் திறம்படச் செய்யலாம் என்று அந்நபரோடு சேர்ந்து கலந்துரையாடி நல்ல வழிகளைக் கண்டடைதல்.

*முன்பு நடந்த விடயங்களில் இருந்து பட்டறிதல்.உன்னையறிந்தால் – நீ

உன்னையறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை

வணங்காமல் நீ வாழலாம்.

Friday, August 07, 2009

Men's Brain VS Women's Brain