Custom Search

Wednesday, December 03, 2008

வெள்ளம் + ஞாபகங்கள் + இடப்பெயர்வுஊரில இருந்து ஒரு போன் வந்தது. உங்கட வீடு வரைக்கும் வெள்ளம் வந்திட்டுதாம். மாயக்கக் குளம் மேவிப்பாயுதாம். நிறையப்பேர் வீட்டை விட்டுப் போய் சொந்தக்கார வீடுகளில இருக்கினமாம். எனக்குத்தெரிஞ்சு மாயக்கை குளம் ஒருநாளும் கட்டுடைத்துப் பாய்ந்ததில்லை. எங்கட வீடுதான் கடைசி வீடு. வீட்டுக்குப் பின்னால நீட்டுக்குத் தோட்டங்கள். தோட்டக்காணிகள் முடிய ஒரு சின்ன வெளி வெளிக்கு அங்காலதான் இந்தக்குளம். குளப்பக்கம் 2 தரம் போயிருக்கிறன். ஒருக்கால் மருதனார் அண்ணா வந்திருந்தநேரம் போயிருந்தம் எல்லாரும் நடந்து. இன்னொருமுறை கோயிலுக்குப் போயிருந்த நேரம் அப்பிடி அந்தக்குளத்தில என்னதான் இருக்கெண்டு பார்ப்பதற்காக களவாப்போனான். சுத்தவர பாதுகாப்பாக வேலி போல எதுவும் இல்லாததால் சின்னப்பிள்ளைகளை அந்தப்பக்கம் போக விடுவதில்லை. அப்பிடியே நாங்கள் போக முயற்சித்தாலும் தோட்டம் செய்யிற பெரிசுகள் வீட்டில போய் சொல்லிப்போடுங்கள்.

மழைக்காலத்தில வீட்டுக்கு மேல ஏறிநிண்டு பார்த்தால் வழமைக்கு மாறா கடற்கரை போல மாயக்கைத் தண்ணியும் மினு மினு என்று தெரியும். மற்ற நேரங்களில அவ்வளவு தூரத்துக்குத் தெரியாது தண்ணி. மெயின் றோட்ல இருக்கிற பாலத்தால நல்ல force ஆ வாற மழை வெள்ளம் எங்கட வீட்டடியில slow ஆத்தான் போகோணும் ஏனென்டால் எங்கட வீட்டடில ஒரு திருப்பம் ' ட ' வடிவில இருக்கு. நல்ல மழை பெய்து எவ்வளவு வெள்ளம் வந்தாலும் எங்கட கேற்றைத்தாண்டி தெருவெள்ளம் வீட்டுக்குள்ள வாறதில்லை. ஆனால் ஒருமுறை அப்பிடி வந்திருக்கு. எத்தினையாம் ஆண்டு என்டு தெரியாது. எங்கட வீட்டுக்கும் ஒரு பாலம் ((?) சீமேந்தால ஏற்றமா கட்டினதொண்டு) இருக்கு. வெள்ளம் அந்தப்பாலத்தை மேவி ஒரேஒரு தரம் முற்றத்துக்கு வந்திருக்கு. எனக்கு இப்பவும் ஞாபகமிருக்கு வீட்டு வாசல்ல நிண்டுகொண்டு வெள்ளம் நிரம்பி கொஞ்சம் கொஞ்சமா முற்றத்துக்கு வடிஞ்ச வடிஞ்சு வரத்தொடங்கவே நான் கத்தத் தொடங்கிட்டன் வீட்டுக்க வெள்ளம் வருது வீட்டுக்க வெள்ளம் வருதெண்டு. கொஞ்சம் கொஞ்சமா வெள்ளம் நிறையவே வரத்தொடங்கிட்டுது. முற்றத்தில இருந்து 2 படி அதுக்குப்பிறகு ஒரு ஹ~ட்வாசல். அதுக்குப்பிறகுதான் கதவு. கதவு வரைக்கும் வெள்ளம் வரேல்ல ஆனால் முற்றமெல்லாம் தெருவெள்ளம் நிரம்பி நிண்டது. பிறகு அந்த வெள்ளமெல்லாம் வத்தினாப்பிறகு தெருவெள்ளத்தோட சேர்ந்து வந்த கஞ்சல் குப்பை குட்டி குட்டித் தடி ஒற்றைச் செருப்பு இப்படியான பொருள்கள் எல்லாம் இருக்கும் முற்றத்தில.

வெள்ளம் ஓரளவுக்கு வத்தினாப்பிறகு வீடுகளில் உள்ள என்னைப்போல சின்னாக்களத்தான் பாண் வேண்டிக்கொண்டுவர அனுப்புவினம் வீட்டில. நாங்கள் 2-3 பேர் பக்கத்துவீட்டாக்கள்
எல்லாம் சேர்ந்து ஒராளை ஒராள் பிடிச்சுக்கொண்டு போறது கடைக்கு. கடைக்குப்போய் கடையில ஆற்ற வீட்டில எந்த மரம் முறிஞ்சது போன்ற தகவல்களையும் சேர்த்து
வேண்டிக்கொண்டு போவம். வெள்ளத்தில சைக்கிள் ஓடியிருக்கிறீங்கிளா? உருட்டிக்கொண்டு போனாலும் சரி ஓடிக்கொண்டுபோனாலும் சரி சைக்கிள் றிம்ல பட்ட வெள்ளம் பள்ளிச்சீருடை எல்லாம் நல்ல வடிவா தெளிக்கும்.

வெள்ளம் முற்றாக வடிந்தபின் தெருவில் திட்டுத் திட்டாக ஊத்தையெல்லாம் கழுவப்பட்டு வெள்ளை மண் மினுங்கிக்கொண்டிருக்கும். அந்த மண்ணை அள்ளி அள்ளி முற்றத்தில
போடுறது. எல்லாற்ற வீட்டுக்கும் முன்னால ஒராள் மண்வெட்டியால நின்டு அள்ளி அள்ளி வாழில போட போட மற்றாக்கள் கொண்டுபோய் கொட்டுறது. தெருவில நீட்டுக்கு நிண்டு
ஆக்கள் கதைக்கிறது நல்ல பம்பலா இருக்கும். அந்தத் தெருவுக்குள்ள இருந்தாக்கள் விவசாயம் செய்றேல்ல. ஆனால் நான் ஏற்கனவே சொன்னமாதிரி எங்கட வீட்டுக்குப்பின்னால முழுக்க நீட்டுக்கு தோட்டக்காணிகள் தான். வேற ஊார் ஆக்களும் அங்க பயிர் நட்டிருப்பினம். எங்களுக்கு மழையால பெருசா இழப்பில்லை. ஆனால் கஸ்டப்பட்டு வெங்காயத்தை நட்ட ஆக்களுக்கு நட்ட கொஞ்ச நாளிலயே மழை கொட்டிச்சுதெண்டால் தோட்டம் செய்றாக்கள் பாவம்தானே. அவையள் நாங்கள் தெருவில நின்டு கும்மியடிக்கிறதைப் பார்த்து உங்களுக்கென்ன கொண்டாட்டம்தான் நாங்கள் இனிப்போய்ப் பார்த்தால்தான் தெரியும் பயிரின்ர நிலமை என்டிட்டுப் போவினம்.

இந்தியன் ஆமி அட்டூழியம் செய்த காலத்திலயும் எங்கட ஊர் மொத்தமா இடம் பெயராமல் சில வயசுபோன ஆக்கள் ஊரில இருந்தவையாம். 92 ல என்று நினைக்கிறன் வடமராட்சியாக்கள் எல்லாரையம் தென்மராட்சி பக்கம் போகச்சொல்லி அறிவுப்பு வந்தநேரம் அநேகமா எல்லாரும் இடம்பெயர்ந்தவை. ஆனால் இப்ப இந்த மாயக்கை குளம் நிரம்பி தோட்டங்களைத்தாண்டி ஊருக்குள்ள வந்ததால எல்லாரும் வீடுகளை விட்டிட்டு வேற எங்கயோ எல்லாம் போய் இருக்க வேண்டிய நிலமை.


வன்னியில் இந்த வெள்ளக்காட்டுக்க மக்கள் வாழும் கூடாரங்களின் படங்களைப் பார்க்கேக்க ஊறிப்போன நிலத்தில அடுப்பு மூட்டி எப்பிடித்தான் சமைச்சு சாப்பிட முடியுதோ? மேல மட்டும் கூடாரம் கீழ நிலத்தில ஒன்டுமே இல்ல. எங்க படுக்கிறது?இதெல்லாம் காணாதெண்டு கிளஸ்டர் பாம் வேற பாவிக்கிது இலங்கை இராணுவம். ஆரிட்ட போய்ச் சொல்றது.

Monday, December 01, 2008

ஊமைச்செந்நாய் - ஒரு வாசிப்பனுபவம்

கொஞ்சநாளா வேலையில்லை சரி ஏதும் புத்தகம் வாசிக்கலாம் என்று யோசிச்சன். யாற்ற புத்தகங்களை வாசிக்கிறதென்று யோசிக்கேக்கதான் "ஜெயமோகன் ஜெயகாந்தன் சேர்ந்து எழுதிய கவிதை நீ "என்ற பாட்டு வரி ஞாபகம் வந்திச்சு. அதோட இவர்களின் இருவரின் பெயரும் அடிக்கடி தமிழ்மணத்தில் பார்த்திருக்கிறேன். பெரிய எழுத்தாளர்கள் என்று மட்டும் தெரிந்து வைத்திருந்தேன் வேறெந்த தகவலும் தெரியாது. நூலகத்தில இவர்கள் இருவரின் புத்தகங்களை hold பண்ணினேன்(காசு குடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கிற அளவுக்கு வளரல இன்னும் ). 3 நாட்களிலயே இரண்டு புத்தகங்கள் கிடைத்தன. ஒன்று 'கோகிலா என்ன செய்துவிட்டாள்' மற்றது ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பு. கோகிலா என்ன செய்துவிட்டாள் என்னால் முழுவதுமாக வாசித்து முடிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையே எனக்கு விளங்கேல்ல. ஒன்று மொழிப்பிரச்சனை. நிறைய சொற்கள் தமிழ் இல்லாத மாதிரி இருந்தது. அதும் இல்லாம சூத்திரங்கள் காளி தேவதைன்னு திரும்ப திரும்ப வரவும் எனக்கு வாசிக்கப் பிடிக்கேல்ல மூடி வைச்சிட்டன். அடுத்த முறை நூலகத்துக்குப் போனபோது ஜெயமோகனின் புத்தகங்களைத் தவிர்த்து ஜெயகாந்தனின் 'ரிசிமூலம்' , 'சமூகம் என்பது நாலுபேர்' , 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன' , 'உன்னைப்போல் ஒருவன்' என்ற நான்கையும் எடுத்துக்கொண்டு வந்தன். நான்கும் வித்தியாசமான வாசிப்பனுபவங்களைத்தந்தன. முக்கியமா ரிசிமூலம், உன்னைப்போல் ஒருவன், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன ஆகிய மூன்று நாவல்களும் கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தையும் தந்தன. 1934 (?) ம் ஆண்டிலேயே இப்படியான கதைகள் எழுதப்பட்டிருப்பதே எனக்கு ஆச்சரியம்தான். அதுவும் இந்தநாவல்களில் இழையோடியிருக்கும் உளவியல் தாக்கங்களும் எண்ணப்போக்குகளும் கொஞ்சம் சிந்திக்கவும் வைத்தன என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகங்களைப் பற்றிய வாசிப்பனுவத்தை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

இன்டைக்கு இந்தப் பதிவை எழுதத் தூண்டியது நேற்று தமிழ்மணத்தில் நான் வாசித்த 'ஜெயமோகன் என்ற மா....யல்' என்ற கட்டுரைதான். கட்டுரையைப் போய் வாசித்தால் ஜெயமோகனின் 'ஊமைச்செந்நாய்' என்ற சிறுகதை ஆபாசம் நிறைந்ததாக விரசத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது என்ற கருத்துப்பட எழுதப்பட்டிருந்தது. என்னடா இது அந்தக் கதையைப் பற்றி ஒன்றையும் சொல்லக்காணம் எழுதினவரப் பற்றியே விமர்சனமா இருக்கென்று யோசித்தன். நான் வாசிச்ச சிறுகதையில எல்லாம் (கனக்க இல்ல 2-3 :-) ஆபாசம் எல்லாம் இருக்கலையே என்டிட்டு கூகிளாண்டவரிட்ட "ஊமைச்செந்நாய்" எனக்கும் கொஞ்சம் காட்டுங்கோவன் என்று கேட்டன். ஒருமாதிரி உயிர்மையில் பதிவு செய்து அந்த சிறுகதை(நெடுங்கதை?)யை வாசிக்கத் தொடங்கினன். வாசிக்கத்தொடங்கி கொஞ்சநேரத்திலேயே first impression is the best impression என்றது உண்மையில்லை என்று உணர்ந்தேன். ஜெயகாந்தன் நாவல்களைப் போலவே ஊமைச்செந்நாயும் எனக்கு நல்ல வாசிப்பனுவத்தையே தந்தது.

நான் வாசிச்ச அந்த விமர்சனத்தில சொல்லப்பட்டது போல இந்தக்கதையில வந்த ஓரிரு வர்ணனைகள் எனக்கு ஏனோ ஆபாசமா தெரியேல்ல. இது நான் வாசித்த ஜெயமோகனின் முதல் நெடுங்கதை என்பதால் மற்றைய நாவல்களைப் பற்றி என்னால் சொல்ல முடியாது ஆனால் இந்த நாவலில் ஆபாசம் இருப்பதாக எனக்குத்தோணேல்ல.


ஒரு வெள்ளைக்கார துரைக்கு அடிமையாக இருக்கும் ஒரு இந்தியத்தாய்க்கும் ஒரு வெள்ளைக்காரனுக்கும் பிறந்த ஒரு வேலைக்காரனின் கதை. ஊமைச்செந்நாய் ஊமையில்ல ஆனால் ஊமையாக்கப்பட்டிருந்தான்.துரை கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லுவான். ஆனால் அவனுக்கு நன்றாக ஆங்கிலம் பேசவரும் என்பது கதையின் இடையில் தெரிய வருகிறது. அவனுடைய கண்கள் காட்டு நாயின் கண்கள் போல சிவப்பாக இருக்குமாம் அதனால் அவனுக்கு அந்தப்பெயர்.கதையில் துரை பிடிக்கும் பெரிய சுருட்டு ஒரு கரிய ஆண்குறி போலிருக்கிறது என்றொரு வர்ணனை வருகிறது. இன்னொரு இடத்தில் துரைக்காக கிராமத்திலிருந்து ஒரு பெண்ணை அழைத்து வருகிறான் ஊமைச்செந்நாய். அந்தப்பெண் இரண்டு குழந்தைகளின் தாய். ஏற்கனவே துரையிடம் வந்து போனவள் என்று நினைக்கிறேன். அவளைப் பற்றிய வர்ணனையில் அவளுடைய மார்புகள் தூக்கணாங்குருவிக்கூட்டுக்கும் பிட்டங்கள் இரண்டு பலாப்பழங்களுக்கும் உவமிக்கப்படுகிறது. இவற்றைத்தான் ஆபாசம் என்றிருக்கிறார்கள். துரைக்கு அவளைப்பிடிக்கவில்லை துரத்திவிடுகிறான். காரணம் அவளிடமிருந்து துர்நாற்றம் வந்ததாம். இதை வாசித்ததும் அண்மையில் பார்த்த ஏதோ ஒரு திரைப்படத்தில் சோப் வாங்கிக் குடுத்து குளிக்கச்சொல்லிட்டு அதன்பிறகு அவளைப் படுக்கைக்கு அழைக்கும் தமிழ்நாட்டுத் துரைகள் ஞாபகத்துக்கு வந்தார்கள். தவிர கோலங்கள் நாடகத்தில் தொல்காப்பியனின் தாயான செல்லம்மாளோடு தொடுப்பு வைச்சால் முதலாளிக்கு நல்ல யோகம் என்று சொல்கிறார் ஒரு ஜோதிடர். அந்த முதலாளியும் அவளுடைய குடிகாரக் கணவனிடமே பணத்தாசை காட்டி அவன் மனைவியோடு தொடுப்பு வைக்க முயலும்போது அவள் முதலாளியையும் வெட்டித் தானும் வெட்டுப்பட்டு செத்துப்போகிறாள். இந்தக்காட்சியும் ஞாபகம் வந்தது. துரை அவளை அனுபவித்த பிறகு துரையிடம் அடிமையாக இருக்கும் தேமா என்ற சமையல்காரன் அவளை அடிமையாக்கி கிட்டத்தட்ட வன்புணருகிறான். துரை அவனிடம் ஒன்றும் அதைப்பற்றி கேட்கவில்லை ஆனால் ஊமைச்செந்நாயிடம் கேக்கிறான் நீ சோதியை அன்டைக்கு ஊருக்கும் கொண்டுபோய் விடும்போது அவளோடு படுத்தாயா என்று கேட்டு கோவப்படுகிறான். துரைக்கு என்ன தாழ்வுச்சிக்கலோ? ஊமைச்செந்நாயின் கண்கள் சிவப்பாக இருப்பது வெள்ளைக்காரப் பெண்களுக்கு பிடிக்கும் என்று சொல்லிவிட்டு நீயெப்பவாவது ஒரு வெள்ளைக்காரியுடன் படுத்தாய் என்று நான் அறிந்தால் நான் உன்னைக் கொலை செய்வேன் என்று சொல்கிறான். ஏன் இவனிடத்தில் இவ்வளவு குரூரம் என்ற என் கேள்விக்குப் கதையின் முடிவில் பதில் கிடைக்கிறது.

துரையும் செந்நாயும் யானைத்தந்த வேட்டைக்குப் போகிறார்கள். காட்டில் நல்ல அடிமையாக எல்லாம் செய்கிறான். யானை வேட்டையில் செந்நாயையே பணயமாக அனுப்பி யானையை வேட்டையாடுமளவுக்கு கொடியவன் துரை. இறுதியில் யானையும் சுடுபட்டு இறந்துபோகிறது. அந்த நேரத்தில் துரைக்கு பாம்பு கடித்துவிடுகிறது. காலால் உதைத்து எச்சிலால் துப்பி ஏறி மிரித்தெல்லாம் துரை செந்நாயை அவமானப்படுத்தியிருந்து அவன் துரையைக் காப்பாற்றுகிறான். உயிர் பிழைத்த துரை குற்றவுணர்வில் உண்மையெல்லாம் சொல்கிறான். நான் உண்மையில் கெட்டவனில்லை. எங்கட ஊரில நானும் ஒரு அடிமைதான். நல்ல குடும்பத்து வெள்ளைக்கார பெண்கள் எல்லாம் எங்களைத் திரும்பியும் பார்க்கமாட்டார்கள். அங்கே எங்களை யாரும் மதிப்பதில்லை அதனால்தான் இந்தியா போன்ற நாடுகளில் வந்து உங்களைப் போல அடிமைகளிடம் எங்கள் இயலாமைகளை மறைத்து உங்களிடம் அடிமைத்தனத்தை பரிசோதித்துப் பார்க்கிறோம் என்று சொல்கிறான். ஒரு கட்டத்தில் செந்நாயைப் பார்த்து நீ நல்லவன் என் சகோதரன் நண்பன் என்றெல்லாம் பினாத்துகிறான். இதை வாசிக்கும்போது பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் தாங்களும் ஒரு கட்டத்தில் தங்களிலும் வலிமை குறைந்தவர்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்குகிறார்கள் என்று படித்தது ஞாபகம் வந்தது. தாமிழந்து போன்ற ஏதோ ஒரு உருவமற்ற ஒன்றை இன்னொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதன் மூலம் அவர்கள் திரும்ப பெறுவதாக உணர்கிறார்கள். துரையின் நிலையும் அதுதானில்லையா?

ஏழுமலை என்றொரு படம் பார்த்தேன். அர்ஜுன் சிம்ரன் கஜோலா நடித்த படம். இந்தப்படத்திலும் இந்த அடிமையையும் ஆளுபவர்களையும் பார்க்கலாம். வெளிநாட்டிலிருந்து வரும் அர்ஜுனின் அண்ணன்களும் அண்ணிகளும் சேர்ந்து அர்ஜுனையும் சிம்ரனையும் அடிமைகள் போல நடத்துவார்கள்.சிம்ரன் காதுபடவே செக்ஸ்ஐ பற்றி ஏ பி சி டி தெரியாத இவனெல்லாம் குடும்பம் நடத்தி இப்ப பிள்ளைவே பிறக்கப்போது என்ன அதிசயம் என்று கேலி பண்ணுவார்கள். அதுவரை பொறுமையாக இருந்த சிம்ரன் ஆங்கிலத்திலயே வார்த்தைகளாலேயே அவர்களைத் திருப்பியடிப்பார்.இந்தப்படத்தில எனக்குப் பிடித்த காட்சியே ஒரு அண்ணனின் மகன் சிம்ரனிடம் சொல்லுவான் அமெரிக்கால எல்லாம் வீடு கூட்றதில இருந்து வோஸ்றூம் கழுவிறதெல்லாம் அம்மாதான் செய்வா. இங்கதான் இந்தப் பந்தா எல்லாம் என்று சொல்லி சிரிப்பான். அண்ணிமாருக்கு தாங்கள் அங்க அடிமையா இருக்கிறம் இங்க சிம்ரனை கொஞ்சம் அடிமையாக்கி தங்கள் இயலாமையப் போக்கிக்கொள்கிறார்கள்.கணவரும் இந்த கழுவுற துடைக்கிற வேலையில பங்கெடுத்தால் மனைவிமார் அடிமையா நினைக்கமாட்டினம் என்றது வேற விசயம். மாமியார் மருமகள் பிரச்சனையும் இதானில்லையா :-.

ஊமைச்செந்நாயிடம் திரும்ப வருவோம். கதையின் முடிவில் ஒரு பாறையிலிருந்து நழுவி ஊமைச்செந்நாய் ஒரு பள்ளத்தாக்கில் விழப்போகிறான். துரை தன் பெல்ற்றை குடுத்து அவனைக் காப்பாத்த முயற்சி செய்கிறான். ஆனால் ஊமைச்செந்நாயோ 'நீ நரகத்துக்குப் போ' என்று சொல்லிவிட்டு பெல்ற்றை பிடிக்காமல் பள்ளத்திலிருக்கும் பசிய மரங்களை நோக்கிப் போகிறான். முடிவு எனக்கு வடிவா விளங்கேல்ல என்று நினைக்கிறன். துரை தான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று தன்னிலை விளக்கமெல்லாம் குடுத்த பிறகு ஏன் ஊமைச்செந்நாய் துரையை மன்னிக்கவில்லை? நரகத்துக்போ என்று சொன்னதன் அர்த்தம் திரும்பி போக வழி தெரியாமல் அல்லது காட்டு மிருகங்களிடம் அடிபட்டு துரை செத்து நரகத்துப் போறதா? அல்லது சாகாமல் உயிரோட இருந்து ஒரு அடிமை போட்ட உயிர்பிச்சைல தான் உயிர் வாழுறன் என்ற குற்ற உணர்ச்கிதான் அந்த நரகமா?

Sunday, November 30, 2008

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!


அப்பா தங்கச்சியோட சண்டை பிடிக்காதயுங்கோ - அவள்ட
வயசு அப்பிடி வாய்க்கு வாய்தான் கதைப்பாள். அன்பால எதையும்
செய்ய வைக்கலாம் தொலுக்காரிப்பும் அதிகாரமும் பதின்ம வயதுகளிடம்
எடுபடாது அவளோட அன்பா கதையுங்கோ என்று வழக்கம் போலவே
நான் அவளுக்காக வாதாடுறன் நீங்களும் எப்ப பாரு முறிச்சுபோடுவன்
அடிச்சு போடுவன் வெளில பிடிச்சு விடுவன் என்ன பண்றன் என்று
பண்ணேக்க பாருங்கோ வழக்கம் போல உறுமிட்டுப் போறீங்கள்

அக்கா நீயும் வழக்கம் போல ஏன் நான் அப்பாவோட
வாதாடுறன் என்ற உண்மை தெரியாமல் வழக்கம் போலவே
நானும் நடுகப் பார்க்கிறன் உனக்கு எப்பவும் அப்பாவோட என்ன
அராத்தல்.அவர் சொல்றதை செஞ்சா என்ன குறைஞ்சு போடுவீங்கள்
வாய்க்கு வாய் காட்டிறதில மட்டும் குறைச்சலில்லை என்று
வழக்கம் போல என்னைக் குறை சொல்லிட்டு போறாய்

வழக்கம் போல முத்தம் தருவியா மாட்டியா என்று பார்க்கிறதுக்காகவே
நானும் முத்தம் கேக்குறன். நீயும் வழக்கம் போலவே என்னென்னவோ
எல்லாம் கதைச்சிட்டு வழக்கம் போலவே முத்தம் தராமலே போட்டாய்

அம்மா நீங்க வைத்தியர் இல்லைன்னு தெரிஞ்சும் ஏம்மா என் ஒரு கண்ணு
மட்டும் சிவந்திருக்குன்னு கேக்குறன் நீங்களும் வழக்கம் போலவே அது
ஒன்னுமில்ல நீ கனநேரம் ரீவி பாக்கிறாய் என்று எந்த சமாதானமும்
சொல்லாமல் பேசாம படு என்டிட்டு திரும்பி படுக்கிறீங்கள்.

நானும் வழக்கம்போலவே நான் சந்தோசமா இருக்கிறன் என்று சொல்லித்
நல்ல தருணங்களை எல்லாம் நினைச்சு நினைச்சு தூங்க முயற்சிக்கிறன்.
வழக்கம் போலவே தூக்கம் வராமல் எழுதிக் கொண்டும் இருக்கிறன்.


குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

Wednesday, November 26, 2008

உடம்புக்கு வெளியே வளரும் இதயம்

நான்கு நாட்கள் வயதுடைய ஒரு பெண் குழந்தையின் இதயமும் ஈரலின் ஒரு பகுதியும் உடம்புக்கு வெளியே வளர்கிறதாம். இந்தியாவின் வட பெங்கால் மருத்துவக் கல்லூரி வைத்திய வளாகத்தில் இருக்கின்ற இந்த குழந்தைக்கு சத்திரசிகிச்சை மூலம் இதயத்தையும் ஈரலையும் உடம்புக்குள் செலுத்த முயற்சி நடைபெறுகிறது , ஆனால் இது மிகவும் புதியதாக இருக்கிறது எங்களாலான முயற்சியை செய்து வருகிறோம் என்று கூறுகிறார் குழந்தை வைத்திய நிபுணர் மிரிடுலா சட்டர்ஜி.

படங்கள் எடுக்கப்பட்டது Nove.26.08Saturday, November 15, 2008

கார், வசந்த முல்லை போல , வாடா வாடா தோழாகார் பைத்தியங்கள் இரண்டு இருக்குதுகள் வீட்ட. எந்த பேப்பர்ல flyer ல கார் படம் இருந்தாலும் காணும் எடுத்துக்கொண்டு போய் கட்டிலுக்கு கீழ ஒளிச்சு வைச்சிட்டு அப்பா இல்லாத நேரம் கொண்டுவருவினம் கார் படம் வெட்டித்தரச் சொல்லி. படத்கை் காட்டி இது hammer என்று சொல்றளவுக்கு expert ஆயிட்டாங்கள்.இன்டைக்கு labtop ல கார் படம் காட்டுறன் என்று அக்கான்ர மகன்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு வந்து பாட்டுப்பாடினால் கார் காட்டுறன் என்று சொன்னன். றினிஸ் பாட்டுப்பாடுறார் றிஷான் one,two,three சொல்லுறார்.

as.mp3 -

8.55 நிமிடமான ஒலிப்பதிவு சரியா வேலை செய்யாதமாதிரியிருக்கு. முழுவதுமா கேக்க முடியாட்டால் சொல்லுங்கோ.

Tuesday, November 11, 2008

கோணப்பா + உளநலம் குன்றியவர்கள் - எண்ணங்கள் சில

எங்கட ஊரில அம்மம்மா வீட்டுக்கு கிட்ட ஒரு அண்ணா இருந்தார். அவற்ற சொந்தப்பெயர்கூட எனக்கு ஞாபகமில்லை ஆனால் எனக்குத் தெரிஞ்சு எல்லாரும் அவரை கோணப்பா அல்லது கொப்பக்கடுவா என்றுதான் கூப்பிடுவார்கள். காலை ஒரு மாதிரி விந்தி விந்தித்தான் நடப்பார். சில நேரம் அவர் சிரிக்கேக்க வாயால உமிழ்நீர் வழியும். சரியான பெரிய நெத்தி அவருக்கு.கிட்டத்தட்ட 16 வயதினிலே சப்பாணி மாதிரித்தான் இருப்பார் பார்க்க. எண்ணை வடியுற ஒழுங்கா இழுக்காத தலை. வாயில எப்பவும் வெத்திலை பாக்கு இல்லாட்ட வீணீர் வடியும். வயிறுக்கு மேல இழுத்துக் கட்டின சாரம். திசைக்கொன்றா இருக்கும் விரல்களும் கோணல் மாணலா வளர்ந்து நிக்கிற நகங்கள். இதான் கோணப்பாவின் வெளித்தோற்றம்.

அம்மம்மா வீட்டுப் பக்கம் நிறையத் தோட்டங்கள் இருக்கு. எல்லாம் எங்கட சொந்தக்காரற்ற தோட்டம்தான். கோணப்பா எப்பவும் யாராவது ஒருவரின் தோட்டத்தில் நின்று ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பார். அவர் அவற்ற வீட்டில நிக்கிறார் என்றால் அன்டைக்கு அவருக்கு வலிப்பு வந்திருக்கு என்றுதான் அர்த்தம்.

அவற்ற அம்மாக்கு அவரை விட இன்னும் நிறையப் பிள்ளையள் இருக்கினம்.கொஞ்சம் கஸ்டப்பட்ட குடும்பம் அதால சில நேரம் அவேன்ர வீட்ட எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்கிறேல்ல. இந்த கோணப்பா ஊரில எல்லாருக்கும் செல்லப்பிள்ளை மாதிரி. ஆற்ற தோட்டத்தில வேலை செய்யுறாரோ அவேன்ர வீட்ட அண்டைக்கு 3 நேரமும் சாப்பிடுவார். சின்ன வயசிலயே அடிக்கடி வலிப்பு வந்ததாலயோ அல்லது வறுமை காரணமோ தெரியா அவரை பள்ளிக்கூடம் அனுப்பேல்ல அவற்ற அம்மா அப்பா.

முந்தி அடிக்கடி வலிப்பு வருமாம். ஆனால் எனக்குத் தெரிஞ்ச காலத்தில எப்பவாவது இருந்திட்டொருக்காத்தான் வலிப்பு வரும். சிலதடவைகள் நானும் போய் புதினம் பார்த்திருக்கிறன் அவருக்கு வலிப்பு வாறதை. வலிப்பு வரத் தொடங்கினதும் ஒரு வித்தியாசமான சத்தம் போடுவார் பிறகு அப்பிடியே விழுந்திடுவார்.கண்ணெல்லாம் ஒரு மாதிரி மேல போய் சொருகி நிக்கும். கை கால் கிடந்து உதறும். வாயால ஒரு பக்கமா எச்சில் நுரை நுரையாத்தள்ளும். பக்கத்தில இருக்கிற கதவுத் திறபை எடுத்து அவற்ற உள்ளங்கைக்குள்ள வச்சால் வலிப்பு கொஞ்ச நேரத்தில குறைஞ்சிடும்.

கோணப்பா பள்ளிக்கூடம் போய் படிக்கேல்ல ஆனால் அவரோட வேலை செய்யிற மற்றைய கமக்காரர்களின் கைங்கர்யமோ என்னவோ அவர் பத்திரிகைகள் எல்லாம் வாசிப்பார். அரசியல் பற்றிக்கூட விவாதிப்பார் என்று அம்மா சொல்றவா.அப்படி ஒரு அரசியல் பற்றிய விவாதத்தில்தான் அவருக்கு கொப்பக்கடுவா என்ற பட்டப்பெயர் வந்ததாம்.ஊரில உள்ள சின்னப்பிள்ளைகளோடும் அவருக்கு நல்ல சிநேகிதம். தோற்றத்தில் மனநலம் குன்றியவர் போல இருந்தாலும் அவரை யாரும் கிண்டல் பண்ணுவதில்லை. நான் படித்த பாடசாலைக்கருகில் ஒரு பைத்தியம் இருந்தார். எப்பவும் ஒரே இடத்தில் இருப்பார் அவர். பக்கத்திலுள்ள குப்பைகளை பொறுக்கி ஒரு இடமாப் போடுவார். ஒருதரும் அவருக்கு கிட்ட போகாதவரை அவர் நல்லாத்தான் இருப்பார். தப்பித்தவறி கல்லெடுத்தெறிஞ்சு அவரைச் சீண்டினால் காணும் கன தூரத்துக்கு விட்டுத் துரத்துவார்.இன்னொரு பைத்தியம் இருந்தார் கோயிலில்.அவர் ஒரு M.A பட்டதாரி.அவற்ற தங்கச்சி சாதி குறைந்தவருடன் ஓடிப்போட்டா என்டதால அவற்ற அம்மா தற்கொலை செய்திட்டாவாம்.அம்மால அதிக பாசம் வைச்சிருந்த இவர் பைத்தியமாகிட்டார் என்று சொல்வார்கள் ஊரில். அந்தக் கோயில்ல ஒரு பொன்னொச்சி மரமிருக்கு. அந்த மரத்தோடும் அருகிலிருக்கும் மின் கம்பத்தோடும் மட்டும்தான் அவர் பேசுவார்.இப்படியான பைத்தியங்களை பார்த்த எனக்கு கோணப்பாக்கும் பைத்தியமோ என்று சந்தேகம் வரும்..அம்மாட்ட போய் கோணப்பாவுக்கு பைத்தியமா என்று கேட்டால் அம்மா என்னைப் பைத்தியமென்று பேசுவா.

கோணப்பாவுக்கு வலிப்பு மட்டுமின்றி 3 வயதுவரை நடக்கவில்லை 4 வயதுவரை பேச்சு வரவில்லை. வயதுக்கேற்ற மூளை வளர்ச்சியில்லை போன்ற குறைபாடுகளும் இருந்ததாம்.ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மருத்துவம் பார்க்கும் நிலையில் அவரின் குடும்பம் இருக்கவில்லை. இறைவன் விட்ட வழியென்று விட்டிட்டினம் போல. பணம் செலவழித்து மருத்துவம் செய்யவில்லை ஆனால் அவருடைய பெற்றோர் மட்டுமில்ல உறவினர்கள் அயலவர்கள் என எல்லாரும் கோணப்பாவில் பாசமாக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் அவரை ஒரு குறையாகப் பார்க்காமல் குறையுள்ள ஒரு மனிதனாகப் பார்த்திருக்கிறார்கள். அப்படி அவரையும் ஒரு மனிதனாக மதித்ததால் தான் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் அவருடைய பட்டறிவு அவரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது இப்பவும் ஒரு கமக்காரனாக.

ஊரில இருக்கிறாக்களே குறையுடன் ஒரு மனிதனை மனிதனாக ஏற்றுக்கொண்டிருக்கையில் கனடாவில் சகல மருத்துவ வசதிகளையும் அணுகும் நிலையிருக்கும் ஒரு குடும்பம் தங்கள் மனவளர்ச்சி குன்றிய மகனை வெளியுலகுக்குத் தெரியாமல் மறைத்து வைக்க நினைக்கிறது.எங்கட வீட்டை சில வருடங்களாக வாடகைக்கு விட்டிருந்தோம். கடிதம் எடுப்பதற்காக வீட்டுக்கு வந்தால் கதவை முழுவதுமாக திறக்கமாட்டார்கள் ஒரு சொட்டு திறந்துபோட்டு அந்த இடைவெளியில் கடிதத்தை தருவார்கள். வீடு வாடகைக்கு விட்டு பல மாதங்களாச்சே ஒருக்கா உள்ளுக்க போய் பார்த்திட்டு வரலாம் என்று ஒருநாள் அப்பா போனார். அப்பாவ வீட்டுக்குள்ளயே விடவில்லையாம் இன்னொருநாள் வாங்கோ என்று சொல்லியனுப்பி விட்டார்கள். பிறகும் 2-3 தடவை முயன்ற போது வீட்டில அம்மா அப்பா இல்லை பிறகு வாங்கோ என்றிச்சு அவேன்ர மகள். சரி வீட்டுக்குள்ளதான் விடேல்ல பின் வளவில மரங்களையாவது பார்த்திட்டு போவம் என்று நானும் அப்பாவும் ஒருநாள் போனம். ஒழுங்கா புல்லுகள் வெட்டாமல் பத்தையா இருந்திச்சு. ஆக்கள் இருக்கிற வீடு மாதிரித் தெரியேல்ல. மேல நிமிர்ந்து பார்த்தல் யன்னல் கண்ணாடிக்குள்ள இருந் நெற் பிஞ்சு பிஞ்சு தொங்குது, அப்பாட்ட காட்டினன் .எனக்கு வீட்டில ஏதோ வில்லங்கம் என்று விளங்கிட்டு. முன் பக்கம் வந்து கடிதம் வேண்ட நான்தான் போனன். தற்செயலா உள்ளுக்க பார்த்தால் sofa க்குப்பின்னால பிஞ்ச பேப்பர் துண்டுகள் கச்சான் கோது காஞ்ச பாண் துண்டுகள் இப்பிடி நிறையச் சாமான் குவிஞ்சு போயிருக்கு. நான் நினைக்கிறன் வீட்டுக்கு வாடகைக்கு வந்ததில இருந்து வீடு கூட்டிறதே இல்லையெண்டு. அப்பாட்ட சொன்னன் வீட்டில ஏதோ பிரச்சினையிருக்கு. பக்கத்து வீட்டு அங்கிள்ட்ட போய் கதைச்சம். அப்ப அவர் சொன்னார் தானும் பலமுறை அவையளோட கதைக்க முயற்சி செய்தவராம் முகத்தை திருப்பிக் கொண்டு போடுவினமாம்.

அடுத்த நாள் எனக்கு ஒரு தொலைபேசியழைப்பு வந்தது ஒரு உளவியல் ஆலோசகரிடமிருந்து.

உ.ஆ : என்னம்மா படிப்பு எப்பிடி போகுது? வீட்டில எல்லாரும் நலமா?

நா : படிப்புக்கென்ன அது தன்பாடு நான் என்பாடு.

உ.ஆ : அதுசரி வாடகைக்கு விட்டிருந்த உங்கட பழைய வீடு வித்திட்டிங்கிளோ?

நா : இல்லையே ஏன் கேக்கிறீங்கள்?

உ.ஆ : இல்ல எங்கட இல்லத்துக்கு ஒராக்கள் வந்திருந்தவை. அவை என்னட்ட ஒரு உதவி கேட்டிருக்கினம். அதைப்பற்றி உன்னட்ட சொல்லணும்.

நா : சொல்லுங்கோ முடிஞ்சால் நானும் உதவி செய்றன்.

உ.ஆ: என்ர இல்லத்துக்கு வந்திருந்தார்கள் உங்கட பழைய வீட்டு முகவரியைக் குடுத்து இந்த வீட்டில இருக்கிற ஆக்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமிருந்து தங்களைத் தாங்களே தனிமைப் படுத்தியிருக்கினமாம். அவைக்கு 3 பிள்ளைகள். ஒரு பிள்ளை மனவளர்ச்சி குன்றியது. அவனைப் பார்க்க மிக அமைதியா இருக்கிறான். ஆனால் சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் பயங்கரமா கோவப்படுறான். கோவம் வந்த உடன பக்கத்தில இருக்கிறத எடுத்த மற்றாக்களுக்கு அடிதான். உடன அவனக் கொண்டு போய் அவன ஒரு அறைக்குள்ள பூட்டி வைக்கினம். அந்த அறை யன்னல் நெற்றெல்லாம் கிளிஞ்சிட்டுது. சுவரில கூட சில இடங்களில ஓட்டை ஓட்டையா இருக்கு. அவன்ர கோவத்தை அவன் அறைக்குள்ள இருந்தே காட்டுறான். எங்க அந்த மகனைப் பற்றிய உண்மை வெளில தெரிஞ்சிடுமோ என்று பயந்து முந்தியிருந்த இடத்தை விட்டு இங்க வந்திருக்கினமிப்ப.மற்ற 2 பிள்ளையளையும் பள்ளிக்கூடத்தில தம்பியைப் பற்றி ஒருதருக்கும் சொல்லக்கூடாது நண்பர்கள் ஒருவரையும் வீட்டுக்கூட்டிக்கொண்டு வரக்கூடாதென்று சொல்லிவைச்சிருக்கினம். அதுகளையும் ஒரு இடத்துக்கும் போக விடுறேல்ல,போய் உண்மையை வெளில சொல்லிடுவினம் என்று பயம். சரியான சமையல் சாப்பாடில்லை. தகப்பன் இல்லாத நேரம் அவனைச் சமாளிக்கவே பெரிய கஸ்டப்படினம் ஆனால் நானும் கணவரும் எவ்வளவு சொல்லியும் ஒரு உளவியல் ஆலோசகரின் உதவியை நாட அவர்கள் தயாரில்லை. கிட்டத்தட்ட எங்களையும் emotional blackmail பண்ணித்தான் விட்டார்கள். இந்த விசயம் வெளியில தெரிஞ்சால் குடும்பத்தோட தற்கொலை செய்து கொள்வார்களாம் என்று அவை சொல்லிச்சினம்.இப்பவே ஒரு மகனால கிட்டத்தட்ட மொத்த குடும்பமும் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற 2 பிள்ளைகளும் பெற்றோரிடமிருந்து மனவழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

நா : ஓ...நான் யோசிச்சனான் ஏன் நாங்கள் எங்கட வீட்டுக்குள்ள போய் பார்க்கிறதை விரும்பேல்ல..விட்டேற்றியாப் பதில் சொல்லினம் என்று யோசிச்சனான். இப்ப என்ன செய்யப் போறீங்கள்? எங்கட ஆக்கள் ஏன்தான் இப்பிடியிருக்கினமோ? எந்தக் காலத்தில இருக்கினம். ஒரு பிள்ளைக்கு வருத்தம் என்றதுக்காக மொத்தக் குடும்பமும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு ஏனிப்பிடி. மனவளர்ச்சி குன்றிப் பிள்ளை பிறக்கிறதுக்கு மரபியல்,உயிரியல் என்று எத்தனையோ விதமான காரணங்கள் இருக்கலாம். இதைப்பற்றின விழிப்புணர்வு எங்கட ஆக்களுக்கு தேவை. நாலுவிதமாக் கதைக்கிற நாலுபேற்ற கதைக்கு காது குடுக்கத் தேவையில்லை என்று சொல்லுங்கோ. அந்தப்பிள்ளையை உங்கட இல்லத்துக்கு கூட்டிக்கொண்டு போங்கோ.

உ.ஆ : அப்பிடித்தான் நானும் யோசிச்சனான்.நான் நேரில போய் அவேன்ர மகனைப் பார்த்தா பிறகு உனக்கு சொல்றன். அப்பாக்கு மெல்லமா விசயத்தை சொல்லு. வீட்டுக்கு அவர் பார்த்து பார்த்து நிறைய செலவழிச்சவர் என்று தெரியும். .

உ.ஆ : கட்டாயம் எனக்குத் தகவல் சொல்லுங்கோ.அநேகமா வீடு திரும்ப திருத்த வேணும் என்று நினைக்கிறன். அப்பா பாவம்தான்.

Tuesday, November 04, 2008

அல்லலுறும் மக்களுக்காக உங்கள் கண்களைத் திறவுங்கள்

தாயகத்தில் தொடர்ந்தும் எம் உறவுகள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு வருகிறார்கள்.ஏறத்தாழ 300,000 மக்கள் சாதாரண அடிப்படை வசதிகளான உணவு, உடை உறையுள் போன்றவை இல்லாமல் அல்லற்படுகிறார்கள்.

பருவகால மழையிலும் சிக்கி அவதியுறுகிறார்கள். இந்த நிலை தொடரக்கூடாதெனில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நாங்கள் எம் மக்களுக்கான நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை திரும்ப இலங்கைக்கு அனுப்பவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் இதுவரை காலமும் அளித்து வந்த ஆதரவை விட இன்னும் பல மடங்கு அதிகமாக 100% முயற்சி செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

Canadian Humanitarian Appeal for the Relief of Tamils (CanadianHART) என்ற இளையவர்கள் பலரின் ஒன்றிணைந்த திட்டத்தினால் "Open Your Eyes for HART" என்ற கவனயீர்ப்பு வார நிகழ்வு ரொறன்ரோ கனடா கந்தசாமி கோவிலில் ஒன்ராரியோ மற்றும் ஏனைய மாகாணங்களிலுமுள்ள அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஊடகங்களையும் உள்ளடக்கி கனடாத் தமிழ்ச் சமூகத்தால் 1.11.08 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை (31.10.08) கனடா கந்தசாமி கோயில் மண்டபத்தில் தமிழ் இளையோர்களைச் சந்தித்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் இளையவர்கள் எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்யலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டதோடு முதற்கட்டச் செயற்பாடுகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.நேற்று சனிக்கிழமை (01.11.08) பொதுமக்களையும் தமிழ் ஊடகங்களையும் சந்தித்து ஒரு வார காலம் நடைபெறவுள்ள இந்தக் கவனயீர்ப்பு வாரத்தில் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்த முழுமையான பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது, ஆளணி தேவைப்படுகின்றது போன்ற விடயங்கள் விளங்கப்படுத்தப்பட்டது.

வரும் திங்களிலிருந்து, வீட்டில் வேலைத்தளத்தில் பேருந்தில் என எல்லா இடங்களிலும் உங்கள் அயலவரிடம் எங்கள் நாட்டில் மக்கள் படும் இன்னல்களைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல 10,000 ரொறன்ரோ வாழ் மக்கள் தங்கள் அயலவர் இருவருக்கு எங்கள் தாயக உறவுகள் படும் அல்லல்களை எடுத்துச் சொன்னால் 20,000 மக்களால் எங்கள் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். அப்படியே படிப்படியாக எல்லாச் சமூகத்தினரையும் எங்கள் குரல்கள் சென்றடையும் என விளக்கப்பட்டது.

மக்களின் வசிப்பிடங்கள் வேலைத்தளங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் போன்றவற்றில் இடம்பெயர்ந்த மக்களின் நிலையை எடுத்துச் சொல்லும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் கவனயீர்ப்பு நிகழ்வினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

செவ்வாய் ஆரம்பித்து பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களுக்குச் சென்று ஆதரவுக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுதல் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களைச் சந்தித்து தாயகத்தில் மக்கள் படும் இன்னல்களையும் தற்போதைய நிலவரங்களையும் அவர்களுக்கு எடுத்தியம்புதல் மற்றும் ஆதரவுக் கடிதம் பெறுதல் போன்றன இடம்பெறும் என்று கூறப்பட்டது.

புதன் முதல் வெள்ளி வரை 72 மணித்தியால கண்காட்சியும் காட்சிப்படுத்தலும் இடம்பெறும். இது வன்னியில் மக்கள் இடம்பெயர்ந்து எப்படியான ஒரு சூழலில் வாழ்கிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதாகக் காட்டி உண்மையான இடப்பெயர்வை ஏனைய சமூகத்தினருக்கு காட்டுவதாக அமையவிருப்பதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து 72 மணித்தியாலம் இடம்பெறவுள்ள இந்த மாதிரி இடப்பெயர்வின் போது பொது மக்களின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுவதாக விளக்கப்பட்டது.

www.tamilidpcrisis.org என்ற இணையத்தளத்தினை மற்ற சமூக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த இணையத்தளத்திலுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு இளையவர்களின் இந்த முன்னெடுப்பினை வெகுவாகப்பாராட்டினர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு இளையவர்களும் பொதுமக்களும் எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்ற அறிவுறுத்தல்களையடுத்து 'நாம் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து இன்று எமது நாட்டில் புலம்பெயர்ந்த எமது உறவுகள் இன்னல் துடைக்கும் இப்பரப்புரையில் எம்மையும் இணைத்துக்கொள்கிறோம்; காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது எனும் வாக்கிற்கமைய செயற்படுவோம் என்றும் எம்மோடு எம்முறவுகளையும் இணைத்து எம்மாலான உதவிகளைச் செய்வோம் என்றும் குரல்வளை நெரிக்கப்படும் எம்முறவுகளின் குரலாக நாம் குரலெழுப்புவோம் என்றும் உறுதி கூறுகிறோம்" என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உலகின் பல பாகத்திலும் செறிந்து வாழும் உறவுகளே அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதிற்கிணங்க நாமனைவரும் ஒன்றுகூடி உலக மக்களுக்கு எம்மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் எடுத்தியம்புவோம். அல்லலுறும் எம்முறவுகளின் குரலாக நாமிருப்போம். ஒன்றுபடுவோம். செயற்படுவோம்.

www.tamilidpcrisis.org
info@tamilidpcrisis.org
416-838-9637

Sunday, November 02, 2008

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலமும்

கடந்த வெள்ளிக்கிழமை ரொரன்டோ Crowne Plaza Hotel ல் "Refugees, Forced Migration and Mental Health – Recovery from Trauma and De-stigmatization of Mental Illness
" என்ற கருவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலம் தொடர்புடைய psychosis, schizophrenia, Autism போன்ற விடயங்களை குடும்பங்கள் சமூகங்கள் மன நல நிபுணர்கள் எவ்வகையில் அணுகிகிறார்கள் என்பது தொடர்பான விடயங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திலும் உளநலம் தொடர்பான பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக நோக்கப்படுவதால் இவ்வகையான உளநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்போது சம்மந்தப்பட்டவர்களின் சமூக கலாச்சாரப் பின்னணிகளை கவனித்தில் எடுக்க வேண்டுமா? ஆட்டிசம் போன்ற உளநலக்குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , புலம்பெயர்ந்து கனடா போன்ற நாடுகளில் வாழும் லற்றின் அமெரிக்க ,சோமாலிய ,சூாடானிய மற்றும் தமிழ் மக்கள் உளநலக்குறைகளை எவ்வாறு உள்வாங்கிக்கொள்கிறார்கள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்தது இம்மாநாடு.

Centre for Addiction and Mental Health ஐச் சேர்ந்த Dr.Laura Simich பேசும்போது ஆண்டுக்கு 220 000 வரையான மக்கள் கனடாவில் குடியேறுகிறார்கள். இவர்களில் 50% மக்கள் ஒன்ராரியோ மாகாணத்தில் குடியேறுகிறார்கள். ரொரன்டோ போன்ற மக்கள் செறிந்து வாழும் நகரங்களில் வாழும் மக்களில் தாய் நாட்டில் நடைபெறும் போர் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் மற்றைய மக்களோடு ஒப்பிடும்போது அதிகளவான மனவழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் ஆனால் ஏனையவர்களோடு ஒப்பிடுகையில் உளநலம் தொடர்பான பிரச்சனைகளுக்காக ஆலோசனை பெறுவதிலும் ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் இவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே உள்நாட்டு போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலோடு சொந்த நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் புலம்பெயர்ந்து தாம் குடியேறும் நாடுகளில் தொடர்ந்தும் மனவுளைச்சலுக்குள்ளாக வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறார்கள். புலம்பெயர்ந்து வரும் இவர்களில் 33.3% மக்கள் Post Traumatic Stress Disorder (PTSD)க்குள்ளாகிறார்கள். 5%மக்கள் (Major Depression) மனவழுத்தத்துக்குள்ளாகிறார்கள்.புலம்பெயர் நாட்டில் நிச்சமற்ற ஒரு வாழ்க்கையைத் தொடங்கும் இவர்கள் சமூக ரீதியில் கலாச்சார ரீதியில் பொருளாதார ரீதியில் புதிய சூழலில் பல இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள். உதாரணமாக புதிய மொழியைப்பயில ஒரு வேலையைத் தேடிக்கொள்ள தகவல்களை அறிந்துகொள்ள தனிமைப்படுத்தப்படுதலில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள சொந்தநாட்டில் விட்டு வந்த உறவுகளைப் பற்றி கவலையைப்போக்க இங்குள்ள சமூகத்தினரோடு தம்மை இணைத்துக்கொள்ள இவர்கள் போராட வேண்டியுள்ளது.குறிப்பாக ஏற்கனவே பொருளாதார வசதியோடு சொந்தநாட்டில் வாழ்ந்த உயர்கல்வி கற்றவர்கள் மற்றும் பெண்கள் முதியோர்களுக்கு புதிதாக இன்னொரு நாட்டில் குடியேறி அந்த நாட்டுச் சூழலுக்கு தம்மை இவைவாக்கப் படுத்துதல் கூடுதல் சவாலாக இருப்பதாக Dr.Laura Simich குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்து வரும்போது அவர்கள் சுமந்து வந்த எதிர்பார்ப்புகள் முற்றுமுழுதாக நிறைவேறாது போகும்போதும் குடியேறிய நாட்டில் வாழும் பல்கலாச்சாரமக்களோடு தாமும் இருகலாச்சாரத்தையும் பின்பற்றும் மக்களாக வாழவேண்டி இருப்பதாலும் இனவாதத்தை எதிர்கொள்ளவேண்டியிருப்பதாலும் அவர்கள் தொடர்ந்தும் மனவுளைச்சலோடு வாழ்கிறார்கள். அதனால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உடல் உள நல சேவைகளைப் புரிய முன்வந்தாலும் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் மனநிலையை ஏனையோரிடம் பகிர்ந்துகொள்ளவோ உதவிகோரவோ முன்வராமல் ஒருவித (resilient) எதிர்ப்பபையே காட்டுகிறார்கள் என்றார்.

20 வருடமாக சூடான் நாட்டில் நடந்துவரும் போர் காரணமாக ரொரன்ரோ போன்ற நகரங்களில் வாழும் மக்களில் அரசாங்க சமூக நல உதவிப்பணம் பெற்று வாழும் மக்களில் 77% ஆனோர் அந்தப் பணம் தங்களுக்குப் போதவில்லை என்று கூறியிருக்கிறார்கள் ஏனெனில் அந்தப் பணத்தில் தங்கள் அன்றாடத் தேவைகளையும் நிறைவு செய்து சூடான் நாட்டில் இன்னலுறும் தங்கங் மக்களுக்குத் தேவைாயான பண உதவிகளைத் தங்களால் செய்ய முடியாதுள்ளதென்று தெரிவித்துள்ளார்கள். இனபேதம் பார்க்கும் வேலைத்தளங்களில் தங்களுக்கு வேலை கிடைக்காதால் தங்கள் வாழ்க்கையே பெரும்பாடாய் இருக்கிறது. அதனால் தங்களைப்ற்றி மட்டும் சிந்திக்கும் சொந்த நாட்டிலுள்ளவர்களை மறக்கச் செய்யுமளவுக்கு கனடா தங்களைச் சுயநலவாதிகளாக்குகிறதென்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழர்களைப் பற்றிக் குறிப்பிட்டவை : 1983 முதல் போராட்டம் நடைபெறுகிறது. போரால் மக்கள் உள்நாட்டிலேயே பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளார்கள். 1980 தொடக்கம் தமிழ் மக்கள் கனடாவுக்கு அகதிகளாக வருகிறார்கள். ரொரன்டோவில் மட்டும் 200 000 தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். 61% மக்கள் கனடாவுக்கு வரமுதல் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் அல்லது வாழ்வில் ஒருமுறையாவது அகதிமுகாமில் வாழ்ந்திருக்கிறார்கள்.32% மக்கள் மிகவும் குறைந்தளவு ஆங்கிலம் பேசுபவர்கள்.33% மக்கள் மனவுளைச்சலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களைச் சந்தித்திருக்கிறார்கள். 36%மக்கள் PTSD ல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்(PTSD யால் பாதிக்கப்பட்ட பெண்களின் % இன்னும் அதிகம்).இவர்களில் 3% மக்களே PTSD யிலிருந்து மீள்வதற்கான ஆலோசனையைப் பெற்றிருக்கிறார்கள்.2004 ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்துக்குப் பின் ரொரன்டோ வாழ் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உளநோய்கள் அதிகமாயிருப்பதாக Dr.Laura குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டைப்பற்றிய ஏனைய தகவல்களை தொடர்ந்தும் எழுதுவேன்.ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்லி இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.இன்று Canadian Multicultural Radio (CMR) ல் சமூக நிகழ்வுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் ஒரு உடல் உள நல ஆய்வு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார் :

ஒருவர் : நீங்களா இப்ப CMR ல் உளநல ஆய்வு பற்றி கதைச்சனீங்கள்
நான் : ஓம் சொல்லுங்கோ.

ஒருவர் : கனடாக்கு பிள்ளையளைக் கூப்பிடத் தெரிஞ்ச எங்களுக்கு எங்கட பிள்ளையயளை எப்பிடி வளர்க்கிறதென்டும் தெரியும். எங்கட பிள்ளையை எப்பிடி வளர்க்கிறதென்டு நீங்கள் எங்களுக்குச் சொல்லித்தரவேண்டாம் சரியோ. உங்கட உளநலத்தை எப்பிடிப் பாதுகாக்கிறதென்டதைப் பற்றி மட்டும் நீங்கள் கவலைப்படுங்கோ.

என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டார். அவர் சொன்னதற்குப் பதில் சொல்லும் வாய்ப்பும் இல்லையெனக்கு.நான் சொன்ன உடல் உள நல ஆய்வுக்கும் பிள்ளை வளர்ப்புக்கு துளியளவும் தொடர்பில்லை அப்பிடியிருந்தும் அவர் என்ன விளங்கி அவர் அப்படிச் சொன்னாரோ அது அவருக்கு மட்டும்தான் வெளிச்சம்.

Dr.Laura சொன்னதுபோல இவர்கள் ஏன் இவ்வளவு resilient ஆக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.முந்தின காலத்திலதான் மனோ தத்துவம் பேசியவர்களை உயிரோடு எரித்தார்களாம். இந்தக்காலத்திலும் மக்கள் இப்படி எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டுக்கொண்டும் உதவி கோரவும் ஆலோசனைகள் பெறவும் பின் நிற்பதால் யாருக்கென்ன லாபம் என்று யோசித்துப் பார்த்தால் ------------.

Thursday, October 23, 2008

காவோலை விழுந்தால் குருத்தோலை :-) ம்கும்

என்ர அப்பம்மா 78 வயசில 2 மாசத்துக்கு முதல்தான் ஏஜன்சி மூலம் கனடாவுக்கு வந்தவா.ஏஜன்சி மூலம் வாறதெண்டால் சும்மா லேசுப்பட்ட விசயமில்லையென்டு உங்களுக்குத் தெரியும்தானே.இலங்கைக்காசுக்கு 36லட்சம் குடுத்துக் கூப்பிட்டவை மோன்மார்.இந்த மாதிரிக் காசு விசயங்களில மட்டும் பொம்பிளைப்பிள்ளையள் ஒதுங்கிடுவினம் இந்த சித்தாந்தம் மட்டும் எனக்கு விளங்கேல்லப் பாருங்கோ....எல்லாருக்கும்தானே அவா அம்மா அதெப்பிடி ஆம்பிளைப்பிள்ளையள் மட்டும் செலவேற்கவேணும்.அப்பிடிப் பார்த்தால் என்ர அப்பா பெத்து வைச்சிருக்கிறதுகள் மூன்றும் பெட்டையள் ம் ம் இருக்கட்டும் இருக்கட்டும்..ஆனைக்கொரு காலம் வந்தால் பூஸ்குட்டிக்கும் ஒரு காலம் வரும்தானே.

எங்கட அப்பம்மா இருக்கிறாவெல்லோ அவா 12 (அதான் டசின்) பிள்ளையள பெத்தவா.அப்ப அவாக்கு என்ன குறையிருக்கப்போதென்று கேக்கிறியளா?? அவாக்கு ஒரு குறையுமில்லை.இதில ஒருவிசயத்தை நான் கட்டாயம் சொல்லோணும் அப்பிடிச் சொல்லாட்டா அந்தக்குமரின்ர மனம் குளிராது :-) அந்தக் குமரி வேற யாருமில்ல அப்பம்மான்ர தோழி. அப்பம்மாவை கனடாக்கு கூப்பிட மாறி மாறி அப்பா அத்தை சித்தப்பாவை என்று எல்லாரும் ஸ்பொன்ஸர் செய்திச்சினம் அனால் அவான்ர வயசுக்கு வாற வருத்தங்களால மெடிக்கல் சரிவரேல்ல அதால 5 வருசமா கொழும்பில நிண்டு கடைசியா ஏஜென்சி மூலம் மலேசியாவில வந்து 5 மாசம் நிண்டுதான் கனடாக்கு வந்து சேர்ந்தவா. அப்ப மலேசியால அப்பம்மான்ர அறைத்தோழிதான் அந்த நான் சொன்ன குமரி. குமரிக்கு 80 வயசாம். ஒரு நாள் அப்பா அப்பம்மாக்கு போன் பண்ண அப்பம்மா போனில அழுதிட்டா...நாங்களும் ஏதோ பயத்தில அழுறாவாக்கும் என்று அப்பம்மா கவலைப்படாதயுங்கோ நீங்கள் இந்த முறை என்ர பிறந்தநாளுக்கு வந்திடுவீங்கள் அக்கான்ர கல்யாண நாளுக்கு வந்திடுவீங்கள் என்று சமாதானம் சொல்றம் அப்பத்தான் அவா சொன்னா நான் அதுக்கு அழேல்லப் பிள்ளையள் இவ்வளவு காசு குடுத்திருக்கு இந்த ஏஜென்சி நல்ல பிள்ளை எனக்குச் சீலையெல்லாம் வேண்டி தந்திருக்கு.

பின்ன என்னத்துக்கு அழுறீங்கள்?

கூட இருக்கிற மனுசிக்கு பொறாமை போல சும்மா கறுவிக் கொண்டிருக்கு. எப்ப பார் ஏதும் குறை சொல்லிக்கொண்டு எப்படா அங்க வருவன் எப்ப உங்களையெல்லாம் பார்ப்பன் என்டிருக்கு.

எங்களுக்கும் அப்பிடித்தானிருக்கு. டக்கெண்டு வந்திடுவீங்கள்.

இல்ல மோன நேற்றும் இப்பிடித்தான் அந்த மனுசி என்ன உங்களுக்கு ஒரே போன் வந்து கொண்டிருக்கு என்டு புறுபுறுத்திச்சு பின்ன நான் சொன்னன் எனக்கு கனடால 5 பிள்ளையள் இருக்கினம் அப்ப பிள்ளையள் மருமக்கள் பேரப்பிள்ளையள் எனக்கு எடுப்பினம் தானே என்று சொன்னன். மனுசி கேட்டிச்சு கனடால 5 அப்ப எத்தின பிள்ளையள் என்று. 12 ல இளையவனும் மூத்தவனும் இப்ப இல்ல. நான் அப்பிடிச் சொன்னதுதான் தாமதம் மனுசி சொல்லுது நீயும் என்னைப்போல 2 பிள்ளையோட நிப்பாட்டியிருக்கலாம். உத்தின பிள்ளையள் பெத்ததாலதான் நீ இப்பிடி இருக்கிறாய் என்னைப் பார் 80 லயும் சும்மா எப்பிடி ஜம்மென்று குமரியா இருக்கிறனென்டு.

என்று சொல்லிட்டு அப்பம்மா அழுதிட்டா...அப்பாக்கு தாங்க முடியல சும்மா இரண உதெல்லாம் ஒரு கதையென்டு...அந்த மனுசிக்கு தன்ர பிள்ளையள் போன் பண்ணிக் கதைக்கிறேல்ல என்று கவலையாக்கும்...நீ உதுகளை விட்டிட்டு கெரியெண வாற வழியைப் பார்.

இன்டைக்கு ஏத்துறன் நேற்று ஏத்துறன் என்று ஏஜென்சி ஏத்தி இறக்கி ஒரு மாதிரி அப்பம்மா வாற நாளும் வந்திச்சு. மோன்மாருக்கு இருப்புக்கொள்ளுமே வீட்டில..எல்லாரும் குடும்பம் குடும்பமா Airport க்குப் போனாச்சு அதுவும் 2 மணித்தியாலத்துக்கு முதலே. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் லேற்றா வந்தா அப்பம்மா. 11 வருசத்துக்கு முதல் நாங்கள் பாரத்ததை விட நல்ல வாய்க்கெட்டுப்போய்த்தான் இருந்தா அப்பம்மா. எங்களைக் கண்ட உடன அழுதிட்டா. வன்கூவர்ல இறங்கேக்க கனடாக்கு வந்தாச்சென்டு சொன்னத கேட்டிட்டு அங்க எங்களை எதிர்பார்த்திருக்கிறா எங்கள் ஒருதரையும் காணேல்ல என்டதும் தன்னை எங்கயோ கொண்டுபோய் அடைக்கப்போறாங்கள் என்று நினைச்சிட்டாவாம். எங்கள் எல்லாரையும் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினா.மருமகள்மாரில சும்மா சொல்லக்கூடாது பாசம் அந்த மாதிர ஒவ்வொருதரையும் தேடி தேடிக் கொஞ்சினா. உங்களையெல்லாம் பார்தாப்பிறகுதான் நிம்மதி. இப்ப கூட உதில பாஸ்போர்ட்டையும் பார்த்து என்னையும் பார்த்திட்டு பாஸ்போர்ட் படத்தில பல்லுக் கிடக்கு உனக்குப் பல்லில்லை என்று துருவி துருவிக் கேட்டாங்கள்...எனக்குப் பயம்தான் இருந்தாலும் பல் செற்றைத் தூக்கிக் காட்டினன் விட்டிட்டாங்கள் என்டா.


பரிவாரங்கள் புடைசூழ அப்பம்மா parking lot க்கு வந்தாச்சு இப்ப அவா ஆற்ற ஜீப்ல ஏறுவா என்டது பேரப்பிள்ளையளான எங்களின் மிக முக்கியமா மில்லியன் டொலர் கேள்வி...ஆனால் நான் உங்களுக்குச் சொல்ல மாட்டன் அவா ஆற்ற ஜீப்ல எறினவா என்டு.

Airport ல flight arrival நேரத்துக்கு முதலே போய் காவல் நிக்கிற மண்டைக்காயளுக்கு ஒரு எச்சரிக்கை. parking fee எவ்வளவு என்று முதலே பார்த்து வையுங்கோ ஏன் சொல்றன் என்டால் ஒரு வாகனத்துக்கு 21 டொலர்படி 5 வாகனத்துக்கும் 105 டொலர் parking fee மட்டும் கட்டினாங்கள் .

அப்பம்மா வந்தாச்சு ..ஆற்ற வீட்ட முதல் போவா? ஆற்ற வீட்ட இன்டைக்கு இரவுக்கு நிப்பா....இந்த விசயத்தில அம்மாக்கள் மகள் பக்கம்...என்னை விடுங்கோ இதப்பற்றி நான் ஒன்டுமெ சொல்லப்போறதில்ல.

அப்பம்மா வந்து 3 நாளாச்சு. எல்லாப்பிள்ளை வீட்டயும் போய் வந்தாச்சு.

அம்மா இந்தாண...இது நான் உனக்கெண்டு செய்து வைச்சதிருக்கிற சங்கிலி.

அம்மா இது நான் உனக்கெண்டு வாங்கின காப்பு.

என்ன கொடுமை சரவணா.

ம் இப்பிடித்தான் எல்லாம் ஆரம்பிக்கும். இனித்தானே இருக்கு விளையாட்டு.

அட்டவணை போட்டாச்சு. வார இறுதி நாட்கள்ல மகள் வீட்ட. மற்ற நாட்கள்ல மகன்கள் வீட்ட அம்மா நிக்கலாம்.

மற்ற எல்லா மருமகள்களும் வேலைக்குப் போறாக்கள் என்ர அம்மாவைத் தவிர.அதனால கிட்டத்தட்ட எல்லா நாளும் அப்பம்மா எங்கட வீட்ட நிக்கிறளவில இருக்கு இப்ப நிலமை.

வயசு போனால் வாற மறதி...கண் பார்வை இப்பிடியான பிரச்சனைகள் இல்லை. இருமல் சளி காலுளைவு நாரிப்பிடிப்பு இதெல்லாமிருக்கு.எத்தின பேரப்பிள்ளை இருக்கினமோ அத்தினபேரும் காலமுக்கி விட்டால் அவாக்கு நல்ல சந்தோசம். ஒருநாள் அண்ணா வீட்ட வர காலை நீட்டிச்சொன்னா ஒரே காலுளைவா இருக்கு மோனை என்று அவன் சும்மா பக்கத்தில இருக்கிற மாதிரி இருந்திட்டு ஒடிட்டான் கள்ளன் நாங்கள் போய்ச் சொன்னம் அவாக்கு பேரன் மாரிலதான் கரிசனம் கூட போ போ போய் கால் பிடிச்சு விடென்டு.

பிள்ளையள்ல பொம்பிளையப்பிள்ளைல பாசம் கூட என்டால் பேரப்பிள்ளைலயும் அப்பிடித்தானே இருக்கோணும்..ஏனப்பிடியில்லை?

அப்பம்மா சாப்பிட வாங்கோ...இங்க வா மேன இந்தப்படியால இறங்கேலதாம் என்னைக் கொஞ்சம் பிடிச்சு இறக்கிவிடு.

பிள்ளை எனக்கு வெண்டிக்காய் கறி போட வேண்டாம். நான் தோஞ்சனான் வெண்டிக்காய் குளிர். இது சூடு. இப்பிடியெல்லாம் தவிர்த்து சொதியோட சாப்பிட்டா. இது தொடர்ந்திச்சு கொஞ்ச நாளைக்கு.பிறகு சளியா இருக்கு முட்டா இருக்கு சோறு சாப்பிட என்டால் நல்ல உறைப்பான சம்பலும் ரசமும் வைமேனை.

மூன்று நேரமும் fresh சமைக்கத் தொடங்கினா அம்மா. பிரிட்ஜ் ல வைச்சு சாப்பிடுறது இல்லாமல் போச்சு.நினைச்ச நேரம் சூப் ரசம் சாம்பார் சம்பல் நண்டுக்கறி கணவாய்க்கறி நெத்தலிச்சொதி...விதம் விதமா சாப்பாடு அப்பம்மாக்கு எங்களுக்கும்தான். வந்த புதுசிலதான் அம்மா செய்தவா. இப்ப அப்பம்மாவும் நல்லாச் சமைப்பா...இப்ப அவாக்கு கனடா பழகிட்டுது. தானா நடப்பா தானே வோஸ்றூமுக்குப் போவா ஆனால் என்ன வோஸ்றூம் போன கிளீன் பண்ணத் தெரியேல்ல இன்னும் அதும் பழகிடுவா கெரில.

இப்ப குளிர் தொடங்கிட்டு..அப்பா ஒரு ஜக்கற் வேண்டிக்கொண்டு வந்தார் அப்பம்மாக்கு. நானுது போட மாட்டன்..நான் சிவப்புக்கலரில உடுப்பே போடுறதில்லை ஜக்கற்ற வேண்டியந்திருக்கிறாய் சிவப்பில...என்னட்ட பறையாமல் உன்னையார் போய் வாங்கச் சொன்னது.

அப்பா சிலநேரம் எங்களையே தான் வேண்டிக்கொண்டு வாறதைப் போட வைக்கிறவர் இப்ப அவற்ற அம்மாக்கு முன்னால மண்டிக்கொண்டு நிக்கிறவரைப் பார்க்க எனக்கும் தங்கச்சிக்கு சிரிப்படக்க முடியல்ல.

அப்பம்மா நல்லா நாடகம் பார்ப்பா அதுவும் கஸ்தூரில ஒரு தனிப்பாசம் அவாக்கு.இதாலயே தங்கச்சியும் அப்பம்மாவும் சிலநேரம் முண்டுப்படுவினம். அப்பம்மா நாடகம் பார்க்கிற நேரம் தங்கச்சி ஆங்கிலத் தொடர்கள் எதுவும் பார்க்க வெளிக்கிட்டால் காணும் அப்பம்மா சொல்லுவா உதென்ன உவளுகள் ஒழுங்கான உடும்பும் போடுறேல்ல எல்லாப்பக்கமும் கிழிஞ்சு தொங்குது காதில வயித்தில மூக்கில எல்லாம் தொங்குது. என்ன அருமந்த முகம் ..தலைமயிரைப் பின்னிக் கட்டினா என்னமா இருக்கும்..உதுகள ஏன் பார்க்கிறியள் இது கஸ்தூரி தொடங்கப்போகுது மாத்தடி. ராம் பாவம் எங்கட அப்பம்மாட்ட அந்தாள் வேண்டுற அர்ச்சனையிருக்கே. ஒரு எபிசோட்ல கஸ்தூரிக்கு அசிட் ஊத்திட்டினம் முகத்தில...அப்பம்மா திட்டத்தொடங்கிட்டா. அப்பா சொன்னார் ஏனண கத்திறாய் உது நாடகம்தானே..

ஓமடா எனக்குத் தெரியாதே நாடகமெண்டு அப்பிடியென்டாலும் அவளுக்குக் கொஞ்சமெண்டாலும் பட்டிருக்கும்தானே முகத்தில

இல்லையெண அது தண்ணிதான் உண்மையா ஊத்துறது.

சீ சீ ஆர் சொன்னதுனக்கு...இப்பிடிப்போகும் அப்பம்மாவும் நாடகங்களும்.

மகளின் ஒரு காதல் பிரச்சனையால சொந்தக்காரர் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்து இப்ப சுகம். அங்க போட்டு வந்ததில இருந்து அப்பம்மா எங்கள் எல்லாரும்கும் ஒரே அட்வைஸ் மழை. இங்கத்த பிள்ளையளுக்கு ஒன்றும் தெரியுறேல்ல. பெத்ததுகளை அழ வைச்சுப் பார்க்குதுகள். எங்கட காலத்திலயென்டால் கல்யாணத்தன்னிக்குதான் மாப்பிள்ளையைப் பார்க்கிறது. அதும் ஒன்றும் விளங்காத வயசில கட்டி வைச்சிடுவினம்..எண்டா.
எனக்குப் பொறுக்க முடியேல்ல கேட்டிட்டன் அப்ப நீங்கள் தாத்தாவை லவ் பண்ணேல்லயே.

நாங்கள் எங்க லவ் பண்ணினம்...

அப்ப எப்பிடியப்பம்மா இவ்வளவு பிள்ளையளையும் பெத்தனீங்கள்.

இதென்ன கேள்வி..கல்யாணத்துக்குப் பிறகு ஆர்தான் லவ் பண்ணாமலிருக்கினம் கல்யாணம் கட்டினாப்பிறகு லவ் பண்ணினதுதான். அதுக்கு முதல் உங்களைப் போல லவ் பண்ணவெல்லாம் எங்களை யார் விட்டது.

ஹா ஹா அப்பிடி வாங்கோ வழி்க்கு அப்ப நீங்கள் தாத்தாவை லவ் பண்ணினீங்கள்.

இவளின்ர கதையைப் பாருங்கோ என்று சிரிச்சுக்கொண்டு நல்லா வெக்கப்பட்டா அப்பம்மா ..அதோட எனக்கு நுள்ளிப்போட்டா...நான் அதுக்குப்பிறகு இடம் மாறி இருந்திட்டன்.

தங்கச்சி கேட்டாள் தாத்தாக்கு உங்கள விட 23 வயசு கூடவெல்லோ..ஏன் நீங்கள் அவரை கல்யாணம் கட்டினீங்கள்..ஏன் லவ் பண்ணினீங்கள்.

உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கென்ன...இப்பிடி பக்கத்தில இருந்துகொண்டு கேள்வி கேக்கிறீங்கள் சிரிக்கிறீங்கள். எங்களையார் கேள்வி கேக்க விட்டவை பதில் யார் சொல்லுவினம்.பெரியாக்கள் கதைக்கிற பக்கமே நாங்கள் போகேலாது. அம்மா 6 வயசிலயே செத்திட்டா என்று கண் கலங்கினா. சொந்தக்காரர் சொல்லிச்சினம் நானும் கழுத்தை நீட்டிட்டன். மனுசன் என்னை நல்லாத்தானே வச்சிருந்தது. பரியாரின்ர மனிசி என்று ஊரிலயும் எனக்கு நல்ல மரியாதை. சொத்து சுகம் பூமி நிலம் என்று நல்லாத்தானே இருந்தம். இப்பத்தான் எல்லாம் யார் யாரோ அனுபவிக்குதுகள்.

அப்பம்மா அப்ப தாத்தா நல்லவர்தானே பின்ன ஏன் நீங்கள் 10 வருசமா கதைக்காமல் இருந்தனீங்கள்.

அவற்ற குசும்புக் கதையள் வர வரக்கூடிட்டுது. அவர் கதைச்சிருக்கலாம்.

ஆகா அப்பவே ஈகோப் பிரச்சனையா..ம்.

இப்பிடிச்சும்மா பம்பலாப் போகுது பொழுது. அவாக்கு சில விசயங்கள் தெரியாதென்டு விளங்கப்படுத்தப்போய் மூக்குடைபட்டிருக்கினம் சிலர்.

ஒருநாள் வெளில போன ஒரு இடத்தில இருந்த வோஸ்றூம்ல இருந்த கொமட்ல flush பண்றது கொஞ்சம் வித்தியாசம்..பொதுவா ஒரு பிடியிருக்கும் இது ஓரு குட்டி button இருக்கும் கருஞ்சிவப்பா.. பெருசா தெரியாது கண்ணுக்கு. அத்தை போட்டுவந்து சொன்னா எப்பிடி flush பண்றதென்று முதல் தெரியேல்ல ..தேடிப்பார்த்தனான் வித்தியாசமா இருக்கெண்டு சொன்னா. உடன அப்பம்மா சொன்னா என்ன உனக்கு அந்த button தெரியேல்லயே.எனக்கே வடிவாத் தெரியுது..மலேசியாலயும் இப்பிடித்தான்.

இன்னொருநாள் அப்பம்மா ஒரே இருமிக்கொண்டிருந்தா. வேற ஆக்களின்ர வீட்டில நிண்டனாங்கள் பின்ன நடுக இருமுறா என்டிட்டு அத்தை gum குடுத்திட்டுச் சொன்னா அம்மா இது விழுங்கக் கூடாது..சுவை போன பிறகு வெளில துப்பிடணும். அப்பம்மா வேண்டி வாய்ல போட்டிட்டு அட இது சுவிங்கம்..இதை எப்பிடிச் சாப்பிடணும் என்று எனக்குத் தெரியாதே..இதையேன் நான் விழுங்கப் போறன்.நீங்கள் எல்லாம் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீங்கள் ஹா? தெரியாமல்தான் கேக்கிறன் ஊரில நீ சுவிங்கம் சாப்பிட்டதில்லையே?
அத்தையைப் பார்க்ப பாவமாய் இருந்திச்சு..அத்தை சொன்னா பிறகு நீங்கள் விழுங்கிப்போட்டு முதல்லயே நீ சொல்லியிருக்கலாம் என்டுவீங்கள் அதான் சொன்னனாண.
அந்த வீட்ட விட்டு வரேக்க அத்தை கேட்டா அம்மா gum துப்பிட்டியே..இல்ல கொடுப்புக்குள்ள ஒட்டி வைச்சிருக்கிறன். இருமலோட விழுங்கிடப்போறாய் துப்பண..அடி விசரி நான் எப்பவோ வோஸ்றூம்ல துப்பிட்டன.

அப்புறம் ஒரு விசயம் சொல்ல மறந்திட்டன் அந்தக் குமரி தோழி இருக்கிறா தானே அவா கனடாக்கு வாறா என்டு தெரியும். ஆனால் அப்பம்மான்ர அதிஸ்டம் அவா சித்தப்பா வீட்டுக்கு பக்கத்து வீட்டு அன்ரின்ர மாமி :-) அப்பம்மாவும் அவாவும் கனடால சந்திக்கேக்க ஒரு சிற்றுவேஸன் ஸோங் போடட்டே " என்னம்மா கண்ணு செளக்யமா"

Tuesday, October 21, 2008

தூக்கம் கண்களைத் தழுவட்டுமே

"ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்கு தூக்கம் போச்சே..." இப்படித்தான் எங்களில் 25 வீதமானவர்கள் அடிக்கடி பாடிக்கொண்டிருக்கிறம். ஒன்பது வீதமான ஆக்களின் நிலமை இன்னும் மோசம்...அவைக்கு எப்போதுமே நித்திராதேவியோட சண்டைதானாம். படுத்ததுதான் தாமதம் உடனே நித்திரை வந்துவிடும் அல்லது பக்கத்தில இருப்போரை வெட்டினாற்கூடத் தெரியாத மாதிரி நித்திரை கொள்பவர்களும் இருக்கிறார்கள். படுத்துப் பலமணி நேரங்களாகியும் நித்திரை வராமல் கடிகார முள்ளதிர்வதையும் இதயம் துடிக்கும் ஓசையையும் மட்டும் கேட்டுக்கொண்டு கூரையைப் பார்த்துக்கொண்டு ஆந்தைக்குப் போட்டியா விடிய விடிய முழித்துக்கொண்டு இருப்பவர்களுமுண்டு. ஏனிந்த வேறுபாடு? தூக்கமின்மை என்பது ஒருவித வியாதியா? தூக்கமின்மைக்கு என்ன காரணம்? நல்ல நித்திரை கொள்ள என்ன செய்யலாம்?

உணவு ,உடை, உறையுள் ,பாதுகாப்பு, அன்பு மாதிரி நிம்மதியான நித்திரையும் மனிதர்களுக்கு அவசியம்தானே? எவ்வளவு பணம் செலவளித்தும் நல்ல கட்டில் மெத்தையைத்தான் எங்களால் வாங்க முடியும். ஆனால் நல்ல தூக்கத்தை எங்க போய் வாங்கலாம்? "நல்ல நித்திரைகொண்டு கன காலமாச்சு" என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். "நல்ல நித்திரை" என்பது அவரவருடைய வசதிக்கு ஏற்ப வேறுபடும். சிலருக்கு 5 மணிநேர நித்திரையே போதும் போதுமென்றிருக்கும். சில கும்பகர்ணன்களுக்கு 10 மணிநேர நித்திரையே போதாது போலிருக்கும் (அண்ணா, என்னை மன்னிச்சுக் கொள்ளு).

"நல்லா நித்திரை தூக்கி அடிக்கிற மாதிரி இருக்கும் போய்ப்படுத்தா நித்திரை கொள்ள முடியாமல் இருக்கு. மெதுவாக் கண்ணை மூடி தூங்க முயற்சி செய்து நித்திரை வாற நேரம் பார்த்து முழிப்பு வந்திடும்" இப்படி அர்த்தம் இல்லாமல் பலர் புலம்புவதை யாவரும் கெட்டிருப்போம். இவர் போல் தூக்கம் வராமல் அவதிப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் சில உளவியல் காரணங்களாக இருக்கலாம் அல்லது சுற்றுப்புறச்சூழல் காரணிகளாக இருக்கலாம். மனவழுத்தம், மனக்கவலை, போதைப்பழக்கம் போன்றவற்றால் அவதிப்படுவோர்தான் அதிகம் தூக்கமின்றித் தவிப்ப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இவை தவிர உடம்பில் தீராத வலியுடையோர், நுரையீரல் இரத்தப்பை சம்பந்தமான நோயுள்ளோர், இரவு நேர வேலை செய்வோர்கள், நித்திரைக்கான மாத்திரை உட்கொள்வோர்கள், அதிகம் இரைச்சலான/குளிரான/வெப்பமான இடங்களில் வசிப்போர், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவோர் மற்றும் அடிக்கடி caffeine போன்ற பதார்த்தங்களடங்கிய பானங்களை அருந்துவோர் எனப் பலர் தூக்கமின்மையால் அவதியுறுகிறார்கள்.

தூக்கமின்மை என்பது ஒரு வருத்தமன்று; மாறாக நோய் வருவதற்கான அறிகுறியாகும். தூக்க மாத்திரைகளை உட்கொள்வதால் தூக்கம் வரும் என்று நினைப்பது தவறு. மாத்திரைகள் தூக்கம் வருவதை விரைவாக்குமே தவிர ஆழ்ந்த நித்திரையை தராது; மாறாக குறுகிய நேரத்தூக்கத்தையே அது விளைவிக்கும். அடிக்கடி முழிப்பும் வந்து போகும்.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்வோர் பின்னர் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொள்வதை அவதானித்திருப்பீர்கள். அடிக்கடி உட்கொள்வதால் மாத்திரைகளுக்குப் பழக்கப்பட்டுப்போன எமதுடம்பு தான் வழமையாகச் செய்யும் உதவியைக் குறைத்துக்கொள்வதால் ஆரம்பத்தில் வந்தது போல நித்திரை உடனே வராது. எப்போதாவது ஒருநாள் மாத்திரை உண்ணாது தூங்க முயன்றால் அது முடிவதில்லை.
தூக்க மாத்திரைகளை உட்கொண்டு நாளடைவில் முழுத்தூக்கத்தையும் கெடுத்துக்கொள்வதை விட நிம்மதியான நித்திரைக்கு வேறு வழிகளைத் தேடுவதே சிறந்தது. உதாரணமாக படுக்கையை நித்திரை கொள்வதற்கு மட்டும் பயன்படுத்துவது. புத்தகம் வாசித்தல், ரீவி பார்த்தல், றேடியோ கேட்டல் லாப்டாப் இல் நேரங்கழித்தல், போனில் அரட்டை அடித்தல் இவையெதற்குமே படுக்கையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நித்திரைக்குச்சென்று பத்து நிமிடங்களாகியும் உறக்கம் வரவில்லையா? படுக்கையறையை விட்டு வெளியே சென்று விருப்பமான ஒரு பாடலைக் கேட்கலாம்; சிறிது நேரம் ரீவி பார்க்கலாம்; பிடித்த புத்தகமொன்றை வாசிக்கலாம்; மீண்டும் தூக்கம் கண்களை முட்டும்போது போய்த் தூங்கலாம்.

தூங்கச்செல்ல முதல் அன்று நடந்த நல்ல விசயங்களை மட்டும் அசைமீட்டபடி ஒரு சின்னக்குளியல் போட்டுவிட்டு பால் குடிக்கலாம் அல்லது ஸ்னாக்ஸ் ஏதும் சாப்பிடலாம். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்து வைக்கலாம். காலையில் போடுவதற்கான ஆடைகளைத் தயார் பண்ணி வைக்கலாம்.
தினமும் ஒரே நேரத்துக்கு எழும்ப வேண்டும். வார இறுதி நாட்களில் இன்னும் கொஞ்சம் தூங்கினால் என்ன என்று ஆசை வந்தாலும் அந்த ஆசையைப் புறக்கணித்து வாரநாட்களில் எழும்பும் நேரத்துக்கே எழும்ப வேண்டும்.பகல்நேரக்குட்டித்தூக்கத்தைக்குறைக்கவேண்டும்அல்லதுநிறுத்தவேண்டும்

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உறங்கச் செல்வதற்கு 3௪ மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே உடற்பயிற்சியை முடிக்க வேண்டும்.

உணவு உட்கொள்வதற்கென ஒரு அட்டவணை போட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். இரவுச் சாப்பாட்டில் அதிகம் காரமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டாயம் நண்டுக்கறி சாப்பிட்டாத்தான் நித்திரை வருமென்றால் பின்னர் பாலருந்தல் நல்லது.
Nicotine & caffeine நித்திரையைக் கெடுப்பவை. நித்திரைக்குச் செல்ல முதல் caffeine உள்ளடங்கிய பானம் அருந்தவே கூடாது. ஆறு மணித்தியாலங்கள் வரை cஅffஎஇனெ இரத்தத்திலிருக்கும். சிகரட் பிடிப்பவர்கள படுக்க முதல் 2 மணித்தியாலங்களுக்கு முதல் சிகரட் பிடிக்கலாம். சிகரட்டிலுள்ள Nicotine 2 மணித்தியாலங்கள் வரை இரத்தத்திலிருக்கும்.

படுக்கப் போகும்போதுதான் உள்ள வீட்டுக்கவலை நாட்டுக்கவலை எல்லாம் வந்து கண்முன்னால் களி நடனம் புரியும். அதையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு 100 லிருந்து 1 வரைக்கும் எண்ணிக்கொண்டு அல்லது பிடிச்ச பாடல்களைக் கேட்டுக்கொண்டு.. ... .. கொர் கொர் கொர்...

Friday, October 17, 2008

Genital Wart

பல விநோதங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நம்முடலில் நூற்றுக்கும் அதிகமான பாப்பிலோமாவைரஸ்கள் (papillomavirus ) உள்ளன.தோல் சம்பந்தமான நோய்களோடு தொடர்புடைய இந்த வைரஸ்களில் கிட்டத்தட்ட 30 வைரஸ்கள் உடலுறவின்போதே பரப்பப்படுகின்றன. 90 % கருப்பைப் புற்றுநோய்க்குக் கூட இந்த பாப்பிலோமாவைரஸ்களே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது Oral,Genital மற்றும் Anal செக்ஸ் ன் போது பரவும் papillomavirus (6, 11, 30, 42, 43, 44, 45, 51, 52, & 54) உருவாக்கும் வீக்கம் அல்லது அழற்சியே ஜெனிற்றல் வாட்..

பெண்ணின் பிறப்புறுப்பின் வாசலில் நுண்ணிய வீக்கமாகத் தொடங்கிப் பின்பு பிறப்புறுப்பைச் சுற்றியும் குதத்திலும் மிகப்பெரிய திரட்சியாகப் பரவத்தொடங்கும்.ஆண்களுக்கும் பிறப்புறுப்பின் நுனியில் தொடங்கிப் பின்னர் பீனஸ் சுவர்களிலும் குதத்தைச் சுற்றியும் பரவும் ஆனால் ஜெனிற்றல் வார்ட்டின் அறிகுறிகள் ஆண்களில் குறைவாகவே காணப்படும். Oral செக்ஸ் ல் ஈடுபடுவோருக்கு இந்த ஜெனிற்றல் வார்ட் வாயில் கூட வரலாம். Condom அணிந்த பாதுகாப்பான உடலுறவினில் கூட இந்த papillomavirus தொற்றக்கூடும்.இந்த ஜெனிற்றல் வார்ட்டை உருவாக்கும் வைரஸ்கள் ஊடுருவிப் பல மாதங்கள் வருடங்களுக்குப் பிறகு கூட திரட்சிகளை உருவாக்கக்கூடும்.

ஜெனிற்றல் பகுதியில் வீக்கம் காணப்படின் உடனடியாக வைத்திய ஆலொசனை பெறுதலே சாலச் சிறந்தது.ஆரம்பத்தில் அழற்சிகளை அகற்றுவது இலகுவானது ஆதலால் ஜெனிற்றல் பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் குட்டிக் குட்டித் திட்டுக்கள் அல்லது வீக்கம் இருப்பின் உடனே வைத்தியரிடம் காட்டவும்.

ஜெனிற்றல் வார்ட்டை அகற்றுவதற்கான சிகிச்சைகள் வார்ட்டின் அளவு தன்மை பரந்துள்ள இடங்கள் என்பவற்றைப் பொறுத்து வேறுபடும்.Imiquimod, podophyllin anti-mitotic solution, -fluorouracil கிறீம் Trichloroacetic acid போன்ற மருந்துகளால் சில ஜெனிற்றல் வார்ட்கள் குணமாக்கப்படுகின்றன. இவைதவிர Pulsed dye laser சிகிச்சை, Liquid nitrogen cryosurgery போன்ற நவீன சிகிச்சை முறைகளும் பயன்படுத்தப் படுகின்றன.குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்திருப்பவர்கள் fluorouracil கிறீமைப் பயன்படுத்துதலும் கர்ப்பிணிப்பெண்கள் podophyllin / podofilox கிறீமைப் பாவிப்பதும் சிசுவுக்கு உகந்ததல்ல. cryosurgery சிகிச்சையின் மூலம் சிறிய கட்டிகளை உறைய வச்சு லேசர் கதிர்களின் மூலம் எரிக்கலாம் ஆனால் பெரிய கட்டிகளைச் சத்திரசிகிச்சை மூலமாகவே அகற்ற நேரிடும். இந்த ஜெனிற்றல் கட்டிகளை அகற்றினாலும் மூலகாரணிகளான papillomavirus களை எமது உடம்பிலிருந்து முற்று முழதாக அகற்ற முடியாத காரணத்தால் இக்கட்டிகள் மீண்டும் மீண்டும் வரக்கூடும் என்பது மிகவும் கசப்பான உண்மை.சில வைத்திய நிபுணர்கள் interferon-alpha போன்ற விலை அதிகமான மருந்தைக் கட்டியினுள் அனுப்பி இக்கட்டிகளைக் கரைப்பதுண்டு.ஆனால் இந்த விலைகூடிய மருந்துகளால் கூட ஜெனிற்றல் கட்டிகள் திரும்ப வருவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கமுடிவதில்iலை.

Condem கூட முழமையான பாதுகாப்பைத்தராததால் இந்தக் கொடிய தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாத்தக்கொள்ள நாம் Gardasil என்ற தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஓன்பது வயதிலிருந்து 26 வயது வரையிலான பெண்களனைவரும் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். papillomavirus தொற்ற முதல் தடுப்பூசியை உள்ளெடுக்க வேண்டும் மற்றும் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்க முதலே தடுப்புூசியைப் பெற்றிருக்க வேண்டும்..அப்போதுதான் இந்தக் கொடிய நோயிலிருந்து முழமையான பாதுகாப்படைய முடியும்.ஆண்களுக்கு எந்த விதமான தடுப்பூசியும் கண்டறியப்படவில்லை.

இந்த ஜெனிற்றல் வார்ட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது பல சிக்கல்கள் வர வாய்ப்புண்டு.இப்படியான தாய்மாருக்குப் பிறக்கும் குழந்தைகள் பிறக்கும்போதே தொண்டையில் கட்டியுடன் பிறந்து உயிருக்குப்போராடுவதுண்டு.சிசுவிற்கு மூச்சு விடும்போது ஏற்படும் தடைகளைப் போக்க அடிக்கடி லேசர் சிகிச்சையளிக்க வேண்டி வரும்.

ஆரம்பத்திலேயே இந்த ஜெனிற்றல் கட்டியை அடையாளம் கண்டு சிகிச்சையெடுக்காவிடில் vulva, vagina, anus / penis போன்ற உறுப்புகளில் புற்றுநொயை உருவாக்கி விடலாம்.ஆகவே வருமுன் காப்போம்!

Tuesday, October 14, 2008

உடல் நலம் - உள நலம் தொடர்பான ஆய்வுக்கு தமிழ் இளையோர் தேவை

ரொரன்ரோ பல்கலைக்கழகமும் Access Alliance Multicultural Health and Community Services மும் இணைந்து இந்த ஆய்வை நடத்துகின்றன. கனடாவின் புதுக்குடிவரவார்களில் 12-18 வயசுக்குட்பட்ட இளையோர்கள் பாடசாலையில், நண்பர்களிடையே, சமூகத்தில், வீட்டில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன? அந்தப்பிரச்சனைகள் அவர்களின் உடல் நலனையும் மன நலனையும் எப்படிப் பாதிக்கின்றது ? சமூக அந்தஸ்து பெற்றோரின் கல்வியறிவு பொருளாதார நிலமை இ்வையெல்லாம் இவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியே இது.

கனடா ரொரன்டோவிலுள்ள Afghan, Colombian, Sudanese & தமிழ் இளையோர்களைப் பற்றியது இந்த ஆய்வு.


இந்தாய்வில் பங்கு பற்றுபவர்கள்

** 14-18 வயதுக்குட்பட்டவர்களாகவும்
** கடந்த 5 வருடத்துக்குள் கனடாவுக்கு வந்தவராகவும்
** ஓரளவுக்கு ஆங்கிலத்தில் உரையாடக்கூடியவராகவும் இருக்க வேண்டும்

** பங்குபற்றுவர்களுக்கான போக்குவரத்துச் செலவும்(TTC Fare) சிற்றுண்டியும் $ 20 டொலர்களும் வழங்கப்படும்.

** பாடசாலை மாணவர்கள் விரும்பினால் அவர்கள் இந்த ஆய்வில் பங்குபற்றியதற்கான சான்றிதழும் Volunteer Hours க்கான கடிதமும் வழங்கப்படும்.

நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் இந்தாய்வில் பங்குபற்றக்கூடியவர்கள் என்று கருதினால்அல்லது மேலதிக தகவல்கள் அறிய விரும்பினால் snegethy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 09, 2008

என்னைத் தெரியுமா - Alzheimer's disease

நிறைமாதக் கர்ப்பிணியான பியா ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏதோ பொறிதட்ட ஓடி வந்த கணவர் அஜய் அதிர்ச்சியில்

'பியா என்ன பண்றாய் என்று உனக்குத் தெரியுதா'.

என்ன அஜய் உடம்மைக் குறைக்க முயற்சி செய்றன். இங்க பாருங்க எனக்கு எப்பிடி வண்டி வச்சிருக்கெண்டு. ஒரு ஜீன்ஸ்ம் அளவில்ல. சேர்ட் பட்டன் போடமுடியல்ல அதான் உடற்பயிற்சசி செய்றன்.

பியா அஜய் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்ததற்கான விருந்துபசாரம் நடந்து கொண்டிருக்கிறது. பியா மொட்டைமாடியில் தீவிரமா எதையோ யோசிச்சுக்கொண்டிருக்கிறா.

அஜய் : பியா உள்ள வா பனி கொட்டுது பார்.
பியா : இல்ல அஜய் நம்ம பிள்ளை எப்பிடி நான் பெத்தெடுக்கப்போறனோ தெரியல. பயமா இருக்கு.


மகனைக் குளிக்க வாக்க பாத்ரப்ல தண்ணியைத் திறந்துவிட்டிட்டு குழந்தையையும் அதுக்குள்ள விட்டிட்டு அறைக்குள்ள ஏதோ எடுக்க வந்த பியாவின் கண்ணில் ஒரு பல்லி படுகிறது. அந்தப் பல்லியையே பார்த்துக்கொண்டிருக்கும் பியாவுக்கு மகனின் ஞாபகம் இல்லை. தண்ணியி நிரம்பி மூர்ச்சையாகும் மகன் எப்படியோ காப்பாற்றப்படுகிறான்.


இப்ப நான் சொன்னதெல்லாம் U, Me aur Hum என்ற திரைப்படத்தில் வந்த காட்சிகள். படத்தில் பியா (கஜோல்)க்கு Alzheimer's disease என்று சொல்லப்படுகிறது. அஜய் ஒரு மனோதத்துவ வைத்தியர். இருவரும் காதலிக்கிறார்கள். அஜய் தன்னிடம் பொய் சொன்னது தெரிந்து பிரிந்து பிறகு சேர்கிறார்கள். திருமணம் செய்துகொள்கிறார்கள். ஒரு நாள் கடைக்குப்போகும் பியாவுக்குத் திரும்ப வீட்டுக்கு வர வழி தெரியவில்லை. தன்ர பெயர் அஜயின் தொலைபேசி இலக்கம் வீட்டு முகவரி என எல்லாம் மறந்துபோய் விடுகிறது பியாவுக்கு.பிறகொருநாள் திருமணநாளையும் மறந்து முழிக்கிறார் பியா. அப்போதுதான் மருத்துவரிடம் செல்கிறார்கள்.அந்த மருத்துவ நண்பரும் பியாவுக்கு Alzheimer's disease ன் ஆரம்ப கட்டம் என்கிறார்.

65 வயதுக்கு கூடிய கனடிய முதியோர்களில் 7.69% இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதன் முதலாக 1906 ம் ஆண்டு ஜேர்மன் வைத்தியரான Alois Alzeimer ல்தான் இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகங்களை மங்கச் செய்து உணர்வுகளை அங்க அசைவுகளைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்வது இந்நோய். cerebral cortex , entorhinal cortex , hippocampus , பின்னர் frontal , partial & temporal என மூளையின் எல்லாப் பாகங்களும் படிப்படியாக தம் தொழிற்பாடுகளை நிறுத்திக்கொள்ளும்.

அண்மையில் ரொரன்டோவில் இந்நோயுள்ள 3411 பேரின் மூளைகளின் உருவ அமைப்புகளை ஒப்பீடு செய்து பார்த்ததி்ல் `ஹிப்போகம்பஸின் கனவளவு குறைந்து போனால் அது அல்சைமரின் ஆரம்ப கட்டம் எனவும் medial temporal lobe ன் கனவளவு குறைவா இருந்தால் அவர்களை இந்நோய் தாக்கி 4-5 வருடங்கள் ஆகியிருக்கலாம் என்று சொல்லலாமாம். நோயின் ஆரம்ப கட்டத்தில் cerebellum முதுகெலும்பு மற்றும் உடல்பாகங்களை அசைக்கச் செய்யும் பாகங்கள் போன்றவை பெரிதாக பாதிப்படைவதில்லை அதனால்தான் இந்நோய் தாக்கியிருப்பவர்களால் ஆரம்பகட்டத்தில் நடக்கலாம் கதைக்கலாம். வெளியாட்களிடையே இவர்கள் நோயாளிகளாக அடையாளம் காணப்படமாட்டார்கள். ஆனால் நாளடைவில் அத்தியாவசிய தேவைகளையே இவர்களால் கவனிக்க முடியாது. நெருப்பில கை வைச்சால் சுடும் என்றோ பேனையால் எழுதலாம் என்றோ தெரியாது.கிட்டத்தட்ட குழந்தையைப்போல் ஆகிவிடுவார்கள்.

நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல தான் தாயாகப்போறன் என்பதை மறந்து பியா ஸ்கிப்பிங் ஆடுறா. பின்னர் குழந்தை பிறந்ததை மறந்து எப்படிக் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறோனோ என்று கவலைப்படுகிறாள்.பியாவுக்கு நான் அவளுடைய கணவன் என்ற ஞாபகம் வரும் நாட்கள் என்னுடைய அதிஸ்டமான நாட்கள் என்று சொல்வார் அஜய்.இந்தப்படமே அஜய் ஒரு அந்நியனாக பியாவிடம் அறிமுகமாகி தங்கள் கதையைச் சொல்வதுபோல எடுக்கப்பட்டிருக்கும். கதை சொல்லி முடிய பியாவுக்கு அஜய் தன் கணவர் என்ற ஞாபகம் வரும். கிட்டத்தட்ட 50 First Dates மாதிரி. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் எப்ப கோபப்படுவார்கள் எப்ப உணர்ச்சிவசப்படுவார்கள் என்று தெரியாததால் அநேகமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர்தான் கூடவிருந்து இவர்களைப் பார்த்துக்கொள்ள முடியும். மற்ற யாருக்கும் அந்தளவுக்கு பொறுமையோ விருப்பமோ தேவையோ இருக்கப்போவதில்லை.

ரத்த உறவுகளுக்கு அதாவது உங்கள் பெற்றோருக்கு அல்லது சகோதரர்களுக்கு Alzheimer's disease இருந்தால் உங்களுக்கும் வரக்கூடிய சந்தர்ப்பமுள்ளது. அதுவும் ஒரு கருமுட்டையிலிருந்து பிறந்த ஒருவருக்கு இந்நோய் இருக்குமானால் மற்றவருக்கு வரக்கூடிய சாத்தியக்கூறு 40%.அம்மா அப்பா இருவருக்கும் இந்நோய் இருந்தால் அவர்களுக்கு 80 வயது வரமுதல் அவர்களுடைய பிள்ளைகளுக்கு இந்நோய் வரக்கூடிய சாத்தியக்கூறு 54%.

அஸ்பிறின் நிக்கற்றின் போன்றவை இந்நோய் வருவதற்கான காரணிகளைக்குறைப்பதாகச் சொல்லப்படுகிறது இருந்தாலும் அஸ்பிறின் போன்றவற்றால் ஈரல் பாதிப்படைவதும் நிக்கற்றினால் நுரையீரல் பாதிப்படைவதும் தெரிந்ததே.ம் ஏறச்சொன்னால் எருதுக்கு கோவம் இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோவமாம்.

யோர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இரண்டு மொழிகள் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்நோயால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் சற்றுக்குறைவாகவுள்ளதாம் ஏனென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பேசுபவர்களின் working memory அதிகமான வேலையைச் செய்கின்றதாம் அதனால் அது தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருப்பதால் இப்டித் திடீர் மறதி வருவது குறைவாம்.

Wednesday, October 08, 2008

ஆட்டிசம்

வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்?

ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப் பெற்றோரைப் போலவும் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு சிறிய வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துக்கொண்டிருந்தவர்களுக்கு எப்போது தம்பிள்ளை தங்களைப் பார்த்துச் சிரிப்பாள், தூக்கச் சொல்லிச் சிணுங்குவாள, தவழ்ந்து வந்து செல்லக் குறும்புகள செய்து தங்களைச் சிரிக்க வைப்பாள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் நாளடைவில் ஏக்கமாக மாறத் தொடங்கி விட்டன. ஏனென்றால் நர்மிதா மற்றக் குழந்தைகளைப் போல ஐந்து ஆறு மாதத்திலேயே பெற்றோரினதும் மற்றோரினதும் முகம் பார்த்துச் சிரிக்கவில்லை. கார்ட்டூன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கவில்லை எவற்றிலுமே ஒரு பிடிப்பில்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பாள். காச்சலோ தடிமனோ வந்தால் கூட தன்னைத் தேற்ற யாரும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிறிதுமற்று இருப்பாள். பேச்சுத்திறன் கூட மிகவும் மட்டுப் படுத்தப் பட்டதாகவே இருந்தது. உதாரணமாக தனக்குப் பசிக்குது "பால் வேணும்" என்று கேட்கத் தெரியாமல் பக்கத்திலிருப்பவிரிடம் "உங்களுக்குப் பசிக்குது பால் குடுங்கோ" என்றுதான் நர்மிதா சொல்வாள்.

தங்களுடைய குழந்தை வளர்ச்சி மற்றைய குழந்தைகளைப் போலில்லாதிருப்பதால் வைத்தியரிடம் அழைத்துச் சென்றபோது நர்மிதாவுக்கு ஆட்டிசம் என்ற மூளைவளர்ச்சிக்குறைபாடு நோய் இருப்பதாக சொல்லிவிட்டார் வைத்தியர்.

உலகில் வாழும் குழந்தைகளில் 1 : 2500 என்ற விகிதத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்கிறார்கள். அன்பு செலுத்துவோரிடத்தில் திரும்ப அன்பு செலுத்தும் தன்மையற்ற சமூகத்தோடு ஒன்றி வாழும் தன்மையற்ற பேச்சுத்திறன் குறைவாகவோ அல்லது முழமையாக இழந்த கற்பனா சக்தி சிறிதுமற்ற இந்த ஆட்டிசம் குழந்தைகளைப் பற்றி முதன் முதலில் தெரிந்து 1943 ல் வெளியுலகத்திற்கு சொன்னவர் Dr.Kanner.

பெண் குழந்தைகளை விட மூன்று மடங்கு அதிகமாக ஆண் குழந்தைகளைத் தாக்குகிறது இந்த ஆட்டிசம். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அநேகமான குழந்தைகளைப் பார்த்தால் தங்களைப் பராமரிப்பவர்களை விட தங்களைச் சுற்றி இருக்கும் சடப்பொருட்கள் மீதே பாசமாக இருப்பார்கள். எந்நேரமும் ஏதாவது பொருளை எடுத்து வைத்து அதன் அளவு, வடிவம், தன்மை பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். தாம் நேசிக்கின்ற பொருளைக் காணாவிட்டால் மூர்க்கமாகிப் பக்கத்திலிருப்பவரைத் தாக்கும் குழந்தைகளுமுண்டு. சில குழந்தைகள் கையால் தரையைப் பிறாண்டுவார்கள் தரையில் கையால் குத்துவார்கள் தலையை ஆட்டி ஆட்டி வித்தியாசமான சத்தம் போடுவார்கள். இந்த ஆட்டிசம் குழந்தைகளிடம் சில அதீத சக்தி இருக்கும். உதாரணமாக மூன்று நான்கு இலக்க எண்களைக் கூட இலகுவாகப் பெருக்கிச்சொல்வார்கள்.

ஆட்டிசத்திற்குரிய காரணமாக Dr.Kanner சொன்னது மரபியல் காரணங்களாகும். ஆனால் அவருக்கு பின்பு வந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் பெற்றோர்களின் சரியான கவனிப்பின்மையால்தான் குழந்தைகளுக்கு இந்த பரிதாப நிலையென்றார்கள். தற்போதுள்ள நிபுணர்கள் பெற்றோர்கள் நிந்திக்கப்பட வேண்டியவர்கள் அல்ல பதிலாக அன்பும் உதவியும் தேவைப்படுபவர்கள் என்கிறார்கள்.

இந்த ஆட்டிசத்திற்கான முக்கியமான ஒரு காரணம் மரபணுக்களாகும். ஓரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருக்கென்றால் அந்தக்குழந்தையின் சகோதரர்களில் ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருக்கோ ஆட்டிசம் இருப்பதற்கான சாத்தியக்கூறு 3 % ஆகும். அதனால்தான் ஆட்டிசம் குழந்தையுள்ள பெற்றோர்களில் சிலர் தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்புவதில்லைப் போலும். ஓரே கரு முட்டையிலிருந்து பிறந்து இரட்டைக்குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் இருந்தால் மற்றக்குழந்தைக்கும் ஆட்டிசம் இருப்பதற்கான சாத்தியக்கூறு 75% ஆகும். எமதுடம்பிலுள்ள 23 சோடி நிறமூர்த்தங்களில் ஆட்டிசத்தோடு தொடர்புடைய நிறமூர்த்தங்கள் 2, 7, 15, மற்றும் X நிறமூர்த்தங்கள் என்று Folstein & Roseb என்ற ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

குழந்தைக்கு கருவிலோயோ அல்லது பிறந்த உடனேயே கொடுக்கப்படும் றுபெல்லா தலிடோமைட் போன்ற மருந்துகளால் ஏற்படும் பின்விளைவுதான் ஆட்டிசம் எனச் சில நிபுணர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக 1960 களில் கர்ப்பிணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தலிடோமைட் என்ற மருந்து அக்கர்ப்பிணிப்பெண்களின் குழந்தைகளின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்ததும் நாளடைவில் அக்குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை MRI பரிசோதனைக்குட்படுத்தியபோது சாதாரண குழந்தைகளின் மூளையை விட ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையின் அளவு பெரிதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டிசம் குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் மூளை அளவு சாதாரணமாகத்தானிருக்கும் ஆனால் இரண்டு வயதுக்குப்பிறகு மூளையின் முக்கிய பகுதியான Cerebellum என்ற பகுதியிலுள்ள white matter மற்றும் cerebral hemispheres இல் உள்ள Grey matterன் அளவும் அதிகரிக்கிறது. அதேபோல cerebellar cortex லுள்ள ஒருவித நரம்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 31 வீதம் குறைகிறது. எங்களுடைய அசைவுகளை நிர்ணயிக்கும் Cerebellum பகுதியில் ஏற்படும் மாற்றங்களும் ஆட்டிசத்திற்குரிய காரணமாகும் என நிபுணர்கள் கண்டுபிடித்திருந்தாலும் குறிப்பாக மூளையிலுள்ள குறைபாடுகளுக்கும் ஆட்டிசக் குழந்தைகள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு அறிகுறிகளுக்கும் இடையேயான தொடர்பு இன்னமும் தெளிவாக அறியப்படவில்லை.

அநேகமான மூளை சம்பந்தப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட வருத்தங்களுக்கு நிரந்தரமான தீர்வு இல்லாதது போலவே ஆட்டிசத்துக்கும் நிரந்தரமான தீர்வு இல்லை.ஆனால் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய பேர்ஸனல் ரியுட்டர் போன்றோரை வைத்து முறையான பயிற்சி கொடுத்து வந்தால் நாளடைவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முன்னேற்றம் காணலாம் .நான் ஏற்கனவே சொன்னதுபோல சில குழந்தைகளிடம் உள்ள அபார சக்தியை வளர உதவி செய்தால் அந்தக் குழந்தைகளாலும் சாதனை படைக்கலாம்.

Friday, October 03, 2008

எதை நீ தொலைத்தாலும் மனதை....
மீள்பதிவு - நட்சத்திர வாரத்திலிருந்து

Tuesday, September 30, 2008

என்னை மட்டும் விட்டுவிட்டு பூமி சுத்துது

கவி : ஹலோ சுமி பிஸியா நீ?

சுமி : இல்ல இராமன் தேடிய சீதை படம் பார்த்துக்கொண்டிருக்கிறன்...சொல்லு.

க: எனக்கென்னவோ ஆயிட்டுது போல இருக்கு. சொறிடி நீ கன தரம் போன் பண்ணியிருக்கிறாய் நான் உன்ர போன் மட்டுமில்ல கொஞ்ச நாள ஒருதற்ற போனும் எடுக்கிறேல்ல.உலகத்திலயே தங்களுக்கு மட்டும்தான் கவலை தங்களுக்குமட்டும்தான் கஷ்டம் என்று நினைச்சுக்கொண்டிருக்கினம் நிறையப்பேர். சும்மா எல்லாரும் சந்தோசமா இருக்கினம் தங்களுக்கு மட்டும்தான் மாறி மாறி ஒரே பிரச்சனையென்ட நினப்பு.

சு: என்ன ஆகிட்டுது உனக்கு ? ஆரைத் திட்டுறாய் இப்ப?

க: ஒருதரையும் இல்ல..பொதுவா சொல்றன். யாரும் என்னட்ட வந்து சோகமாக் கதைச்சால் எனக்கு கோவம் வருது. எல்லாருக்கும் பிரச்சனை இருக்கெண்டு எப்பிடி விளங்கப்படுத்துறது மற்றாக்களுக்கு. ஆனால் இப்ப நான் நினைக்கிறன் கடவுளுக்கும் எனக்கும் தீர்க்கப்படாத கணக்கென்னவும் இருக்கோ தெரியா சும்மா ஒரே என்ர தலையெழுத்தையே அழிச்சு அழிச்சு எழுதிக்கொண்டிருக்கிறார் ..உந்தக் கடவுளுக்கு முதல் lay off குடுக்கோணும் அப்பதான் அவர் திருந்துவார்.

சு: அது சரி கடவுளுக்கேவா???? சரி என்னட்ட சொல்லன் என்னாச்சுனக்கு.

க: வேலைக்குப் போனால் ஒழுங்கா வேலை செய்யமுடியேல்ல மாறி மாறி ஈமெயில் பண்ணினம் அது பிழை இது பிழையென்று. வீட்ட வந்தா என்ன ஒரே labtopயோடயே இருக்கிறாய் முகம் தெரியாத ஆக்களோட மணித்தியாலக் கணக்கா கதையுங்கோ ஆனால் வீட்டில இருக்கிற மனிசரோட ஒரு வார்த்தை கதைக்க நேரமில்லை. பொம்பிளைப்பிள்ளைன்ர அறை மாதிரியே இருக்கு இது..மற்ற வீடுகளிலயும் போய் பாருங்கோ இப்பிடித்தான் வீடு வைச்சிருக்குதுகளே என்று அம்மா அப்பான்ர அர்ச்சனை தாங்க முடியேல்ல. மிச்சத்துக்கு என்ர வயசாக்கள் எல்லாரும் கல்யாணம் கட்டிட்டினமாம் என்ற நச்சரிப்பு வேற.முந்தியெல்லாம் படுத்த உடனே என்னமா நித்திரை வரும் இப்பெல்லாம் படுத்த 3-4 மணித்தியாலத்துக்குப் பிறகுதான் நித்திரை வருது. அம்மா கத்துறாவே என்டிட்டு கடமைக்கு சாப்பிடுறன் என்னத்த சாப்பிட்டாலும் ருசியும் தெரியுறேல்ல.ஒன்றிலயும் அக்கறையில்லை என்று அம்மா பேசுறா. ஜிம் பக்கமே போறேல்ல இப்ப. முகத்தில பருக்கள் வேற வரத்தொடங்கிட்டு. எனக்கே அசிங்கமா இருக்கு பார்க்க.சுமி : ம்....

கவி : தொடர்ந்து படிக்கிறதா இல்லாட்டா இந்த வேலையையே தொடர்ந்து செய்யிறதா ஒன்றும் தெரியேல்ல. தனிய இருந்து எவ்வளவு யோசிச்சாலும் முடிவெடுக்கேலாம இருக்கு. எடுக்கிற முடிவுகள் தெளிவல்லாமலிருக்கு.என்ன செய்து கொண்டிருக்கிறன் என்ன செய்யப்போறன் ம்கும் எல்லாம் ஒரே சூனியமா இருக்கு.எதிர்காலத்த நினச்சா பயமா இருக்கு. பேசாம செத்துப்போய்டலாம் போல இருக்கு..

சுமி : இது எல்லாருக்கும் வாற குழப்பம்தானே. இதுக்குப் போய் சாகுற கதைச்சுக்கொண்டு லூசா நீ. ஏய் அழுறியா நீ..கவி சீ என்ன இது சின்னப்பிள்ளத்தனமா.

எனக்கும்தான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கேல்ல.நானும் தான் வீட்டயும் வேலைலயும் பேச்சு வாங்கிறன் ஒன்டிலயும் கவனமில்ல நிதானமில்ல என்று. தங்கச்சியே என்னைப் பேசுதென்றா யோசிச்சுப் பார்.

நேரத்துக்கு படுக்கிறேல்ல விடிய எழும்பு அறக்கப் பறக்க வேலைக்குப்போறது. ஒழுங்கா சாப்பிடுறேல்ல. வயசுக்கேற்ற முதிர்ச்சியில்லாம சின்னப்பிள்ளைக்கு நிக்கிறன்.. இப்பிடியான குற்றச்சாட்டுகள் எனக்கும் இருக்கு. இதெல்லாம் எல்லாருக்குமிருக்கிற பிரச்சனைதானே. நானும் அநேகமா அடுத்த வருசம் திரும்ப college க்குப்போவன். நீயும் வா தொடர்ந்து படிப்பம். அத விட்டிட்டு இப்பிடி அழாத. பிறகு நான் யாருக்கில்ல போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் என்டு பாடத்தொடங்கிடுவன் பிறகு நீ போனை வச்சிட்டு ஒட வேண்டியது தான்.

கவி : ம்.

சுமி : நான் ஒன்று சொல்லுவன் ஆனால் நீ பிறகு நீயும் உன்ர உளவியல் மண்ணாங்கட்டியும் என்டு திட்டக்கூடாது.

கவி : திட்டமாட்டன் சொல்லு.
சுமி: நீ சொன்ன கவலை நித்திரை பசியின்மை வாழ்க்கை குறித்த பயம் முடிவெடுக்க முடியாமத் தடுமாறுதல் மற்றாக்களிட்ட இருந்து விலகியிருக்கிறது மரணம் பற்றிய எண்ணங்கள் இதெல்லாம் மனவழுத்தம் (depression ) ன்ர அறிகுறிகள். ஆண்களை விட இளம்பெண்கள் தான் 2 மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எங்கள் எல்லாருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில மனவழுத்தத்தைச் சந்திக்கிறம். படிபு்பு காதல் வேலை இப்பிடி எவ்வளவோ விசயங்களை ஒன்றாக சிந்திக்கேக்க இப்பிடியான எண்ணங்கள் தோன்றுவது இயல்புதான். அதால சும்மா பெரிய அறிவாளி மாதிரி கனக்க யோசிக்காமல் நல்ல படமொன்றைப் போட்டு பார். இல்லாட்டா எங்கட வீட்ட வா எங்கயாவது வெளில போட்டு வரலாம். நான் ஏன் இப்பிடியிருக்கிறன் எனக்கென்ன நடந்தது என்று கேட்டால் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். உனக்கு இப்பவாவது போன் பண்ணனும் என்று தோணிச்சே அதே பெரிய விசயம்.

கவி : ம்..நானும் எனக்கு depression ஓ என்டு நினச்சனான் தான் ..அதான் சந்தேகத்தில உனக்கு போன் பண்ணினான். விசரா இருக்கு.. நானிப்பிடியிருக்கிறது எனக்கே பிடிக்கேல்ல..lake shore க்குப் போவமா..

சுமி. 10 நிமிசத்தில வா வீட்டடிக்கு..நிறைய விசயங்கள் சொல்லோணும் உன்னட்ட. depression லயும் chronic depression ( cyclothymic & dysthymic) , bipolar disorder , Seasonal affective disorder(SAD) எண்டெல்லாமிருக்கு. ஒருவிதத்தில பார்த்தால் எல்லாரும் மனவழுத்தத்தோடதான் இருக்கிறம் போல..சரி போனை வைக்கிறன். 10 நிமிசத்தில ரெடியாகிடுவன். நீ வா.

தொடரும்.......

Wednesday, September 24, 2008

அதிபுத்திசாலிக் குழந்தைகள் அசாதாரணமானவர்களா??

லண்டன்ல இருந்து விடுமுறைக்கு வந்திருந்த ஒரு குடும்பம் எங்கட வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார்கள்.எங்கட அப்பாவும் அவேன்ர அப்பாவும் அவை தியேட்டருக்குள்ள போகாமலே படம் பார்த்தது பஸ்ல தொங்கிக்கொண்டு றோட்டால போன பொலிஸ்ட தொப்பி கழட்டி முதல் தடவையா பொலிஸிட்ட அடி வாங்கினது தாத்தா நட்ட கச்சான்களை களவாப் பிடுங்கி கொண்டு போய் வித்துப்போட்டு பிளாவில கள்ளடிச்சது என்டு பழைய கதையள் கதைச்சுக்கொண்டிருந்தினம்.

அம்மாவும் அந்தன்ரியும் அம்மான்ர குட்டித்தோட்டத்தில காய்ச்சிருக்கிற தக்காளி வெண்டி பாவக்காய்களோட ஏதோ கதை நடக்குது. அம்மாக்கு தன்ர ஐயா (அம்மப்பா) வீட்ட வாறாக்களுக்கு மரக்கறிகள் வெங்காயம் குடுத்துவிடுறது போல தன்னால கனடாலயும் செய்ய முடியுதென்டதில பெருமை.இது எங்கட தோட்டத்தில காய்ச்சது என்று சொல்லி ஆக்களுக்குக் குடுக்கேக்க அம்மான்ர முகத்த பார்க்கோணும் சந்திரமுகி ஜோதிகா தோத்தா போங்கோ.

இப்பிடி பெரியாக்கள் எல்லாரும் பிஸியா இருக்கேக்க தங்கச்சியும் வந்திருந்த 2 பிள்ளைகளும் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள் தங்கச்சியோடு. ஒரு பிள்ளை மட்டுடம் ஒண்டும் கதைக்காமல் சும்மா தலையாட்டுறதும் சிரிக்கிறதுமா இருக்குது வாய் திறந்து ஒன்றும் சொல்லாதாம். எல்லாரும் தங்கச்சிக்குத்தான் தோதான ஆக்களா இருக்குதுகள் எண்டதாலதான் நான் சும்மா லாப்டாப்ல ஏதோ முக்கியமான அலுவல் செய்றமாதிரி ஒரே கட்டுரையை 3ம் தரம் வாசிச்சுக்கொண்டிருந்தன். இப்பெல்லாம் தங்கச்சி என்ன கதைக்குறாள் என்ன செய்யிறாள் என்று கண்காணிக் வேண்டியிருக்கு.

எனக்கும் ரொம்ப போரடிக்கிறமாதிரி இருந்திச்சு அதால அந்தக் கதைக்காம இருந்த சுகன்யாவோட கதைப்பம் என்டிட்டு நீங்கள் எத்தினையாம் வகுப்பு படிக்கிறீங்கள் என்று கேட்டன்.லண்டன்ல 8ம் வகுப்பு படிச்சுக்கொண்டிருந்ததாம் இப்ப கனடாலதான் இனிப் படிக்க போறன் என்று சொன்னா.அவை நிரந்தரமாக் கனடால வசிக்க வந்திருக்கினமென்டு தெரிஞ்சுகொண்டன். அப்ப பெரியாளா வந்து என்னவா வர விருப்பமென்டு கேட்டன் (இப்பவே என்ன விடப் பெரியாள்தான் ) தனக்கு ரீச்சரா வரத்தான் விருப்பமாம் ஆனால் தான் ரீச்சரா வந்தால் கடைசி வரைக்கும் தன்ர ரீச்சர்மாதிரி ஆக்களின்ர அழகைப் பார்த்து ஒருதரையும் எடைபோட மாட்டாவாம்.

அக்காவும் தங்கச்சியும் gifted children படிக்கிற ஒரு பள்ளிக்கூடத்தில படிக்கினமாம்.தான் சாதாரணமான பள்ளிக்கூடத்தில படிக்கிறதாம். இங்கயும் அவையள gifted children படிக்கிற பள்ளிக்கூடமா பார்த்து அனுப்பப்போயினமாம்.படிக்கிற பிள்ளை எங்க போனாலும் படிக்கும் என்று முந்தி அம்மா சொல்றவா என்று சொன்னன். ஆனால் அது எவ்வளவு உண்மையென்று தெரியேல்ல எனக்கும். சுற்றுச்சூழல் எங்கட வாழ்க்கைமுறை முதல்கொண்டு எல்லாத்திலயும் ஆதிக்கம் செலுத்துறது உண்மையென்டால் படான்கள் எல்லாம் படிக்கிற பள்ளிக்கூடத்தில படிக்கிற பிள்ளை கொஞ்சம் கெட்டிக்காரியா இருந்தாலும் மற்றப் பிள்ளையளோட ஒப்பிட்டுப் பார்த்திட்டு தான்தான் உலகத்திலயே அறிவாளி என்று கிணற்றுத் தவளையாத்தான் நினைச்சுக்காள்ளும். ஊரில எல்லாம் சில பள்ளிக்கூடங்களில்ல A B C D என்று பிரிவுகளிருக்கும். அநேகமா A ப்பிரிவு அதிபுத்திசாலிகளாகவும் B புத்திசாலிகள் என்று ஒரு எண்ணம் பெற்றோருக்கு மாணவர்களுக்கு ஆசிரியருக்கு எல்லாருக்குமிருக்கும். A ப்பிரிவில 10 வதா வாற பிள்ளையின்ர அறிவும் D ப்பிரிவில முதலாம்பிள்ளையா வாற பிள்ளையின்ர அறிவும் ஒரேயளவா இருக்கலாம். ஆனால் முதலாம்பிள்ளைக்குத்தானே மதிப்பு :-)

ஒரு சம்பவம் ஞாபகம் வருது சொல்லாமல் இருக்க முடியேல்ல...கனடால நடந்த ஒரு தமிழர் விளையாட்டுப்போட்டிக்குப் போயிருந்தன்.சின்னப்பிள்ளையளின்ர ஓட்டப்போட்டி முடிவுகள் வந்ததும் சில பெற்றோர்கள் கோவத்தோட நிர்வாகிகளைத் திட்டுற சத்தம் கேட்டிச்சு.மழை வேற பெய்துகொண்டிருந்திச்சு வெளில அப்பிடியிருந்து என்ன விசயம் என்று எட்டிப்பார்த்தால் கொஞ்சம் இடக்குமுடக்கான விசயம்தான். நிறையப்பேர் ஓடுவதற்கு பெயர் குடுத்திருந்ததால் 4-5 குழுவாகப் பிரித்து ஒடவிட்டிருக்கிறார்கள். ஓடும் தூரம் முடிவடையும் இடத்தில கயிறு வைத்துப் பிடித்து முதலாமிடம் 2ம் இடம் 3ம் இடம் என்று எழுதுவதுதான் சாதாரணமாக நடைபெறுவது. இம்முறை அப்படிச்செய்யாமல் எவ்வளவு நேரத்தில் ஓடிமுடிக்கிறார்கள் என்பதை automated timer மூலமாக பதிவு செய்திருக்கிறார்கள். இதைப்பற்றிய போதிய விளக்கம் பெற்றோர்களுக்கோ பங்குபற்றியய பிள்ளைகளுக்கோ அளிக்கப்படவில்லை. நடுவர்ககள் தீர்ப்பை automated timer ன் பதிவுகளிலிருந்து தெரிவு செய்ததால் முதலாவதாக வந்தவர்களெல்லாம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படவில்லை. இதை நான் ஏன் சொல்றன் என்றால் ஒரு குழுவில் ஓடினாக்கள்ல அநேகமானோர் கொஞ்சம் சோம்பேறிகள் என்றால் முதலாவதாக வந்துகொண்டிருப்பவன் திரும்பிப் பார்ப்பான் 2வதா 3 வதா வாறவர்களிடையே அதிக இடைவெளியிருப்பின் இவர்கள் இப்போது என்னை முந்தமாட்டார்கள் என்று முதலாவதா வாறவனும் மெதுவாகத்தான் ஓடுவான். அதமாதிரித்தான் கொஞ்சம் மக்குகளோட படிக்கிற அறிவாளியும் நாளடைவில கொஞ்சம் மக்காயிடுவான் இல்லாட்ட அறிவு வளராமல் இருக்கிற அறிவோடயே இருந்திடுவான்.

சுகன்யாவைப் பற்றிக் கதைச்சிட்டு எங்கயோ போனாச்சு...சுகன்யாக்கு தான் அக்கா தங்கையை விட ஏதோ ஒரு விதத்தில அழகிலயோ அறிவிலயோ குறைந்தவள் என்ற எண்ணம் வந்து சேர்ந்திருக்கு. அதுக்கு யாரோ ஒரு ரீச்சர் அல்லது பெற்றோர்கள் சகோதரிகளோ காரணமா இருக்கலாம். என்னதான் பெரிய அறிவாளியாக் காட்டிக்கொண்டாலும் எல்லாருக்குள்ளயும் ஒரு
முட்டாள்தனம் தாழ்வுசச்சிக்கல் எல்லாம் ஒளிஞ்சுகொண்டுதானிருக்கும். gifted students ம் ஒரு சில குறிப்பிட்ட துறைகளில்தான் சிறந்து விளங்குவார்கள் ஆனால் உம்மள மாதிரி என்னை மாதிரியாக்கள் பல துறைகளில்ல சிறப்பாக இல்லையென்றாலும் திறமையுடன்தானிருக்கிறம். ஆனால் gifted students களைப் பாருங்கள் சில நேரங்களில் அவர்கள் முற்று முழுதாக gifted ஆட்களுடனும் பொருந்தாமல் சாதாரணமானவர்களுடனும் பொருந்தாமல் அந்தரத்தில் தத்தளிக்கிறமாதிரி தோணும் எனக்கு ..நீங்கள் அப்பிடி நினைக்கேல்லயா சுகன்யா.

நானும் அப்பிடி நினைச்சிருக்கிறன்தானக்கா சில நேரம் ஆனால் gifted student ஆ இருக்கோணும் என்டு எனக்கும் ஆசை.
நாங்கள் எல்லாருமே ஒருவிதத்தில் தனித்துவமானவர்கள் சுகன்யா.gifted student என்ற label ஓடதான் இருக்கோணும் என்டு அவசியமா என்ன...நீங்கள் நிறைய வாசியுங்கோ . ரீச்சர் சொல்றதை மட்டும் படிக்காமல் இன்னும் கொஞ்சமா தேடி ஆழமா விருப்பத்தோட படியுங்கோ. மற்றவர்களுக்கு நீங்கள் படிச்சதை விளங்கப்படுத்துற அளவுக்கு உங்களை தெளிவா வச்சிருங்கோ. மற்றவர்களுக்கு முன்மாதிரியா இருங்கோ. நிறையக் கேள்விகளைக் கேளுங்கோ பதில்களைத் தேடுங்கோ.ஒரே மாதிரியான புத்தகங்களை வாசிக்காமல் புதிய விசயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு ஏற்கனவே தெரிந்து கொண்ட விடயங்களில் உங்களைத் தகவமைச்சுக் கொள்ளுங்கோ...பிறகு அடுத்தமுறை என்னைக் காணேக்க நீங்களும் gifted student ஆக உணர்வதாக நீங்களே என்னட்ட சொல்லுவீங்கள்.

நீங்கள் நல்லாக் கதைக்கிறீங்கள் அக்கா...நிச்சயமா அடுத்த முறை உங்களை காணேக்க நீங்களே என்னைப் பார்த்து ஆச்சரியப்படுவீங்கள் சந்தோசப்படுவீங்கள்.

(ம் எனக்கு நல்லாக்கதைக்க மட்டும்தான் தெரியும்...அட்வைஸ் பண்றது ரொம்ப சுலபம்-இதை நான் சுகன்யாட்ட சொல்லேல்ல)

Saturday, September 13, 2008

காஞ்சிவரம் எப்பிடி காஞ்சிபுரமாச்சு ?

அம்மா நான் பிரகாஸ்ராஜ் ஐக்கண்டனான் :-)

வேலையால நேர வீட்ட போகாமல் லேற்றாப் போனாலே வீண் பிரச்சனைதான் அதான் போன் பண்ணின உடனேயே பிரகாஸ்ராஜ் ஐக் கண்டனான் என்று சொல்லிட்டன். அப்பிடிச் சொன்னதும் அம்மாட்ட இருந்து அடுத்து வரவேண்டிய கேள்வியான 'ஏன் பிள்ளை போனால் போற போற இடத்திலயே இருக்கிறதே வீட்ட போன் பண்ணோனும் என்று நினைக்கிறேல்லயே ' கேள்வி வரேல்ல. ஆ...அவர் எங்க வந்தவர்? படம் எடுத்ததோ? படம் எல்லாம் எடுக்கேல்ல என்ர போன்ல ஏதோ பிரச்சனை கமெரா வேலை செய்யாதாம். அங்கால மற்ற போனைத் தூக்கி வைச்சுக்கொண்டு தங்கச்சி கத்திக்கேக்குது ஏன் என்னைக் கூட்டிக்கொண்டு போகேல்ல...விஜய் ஜேசுதாசையும் பிரகாஸ்ராஜையும் விசாலையும் பார்க்கோணுமென்று ஆசை அதில விஜய் ஜேசுதாசைப் பார்த்திட்டன்..இண்டைக்கு பிரகாஸ்ராஜையும் பார்த்திருப்பன் எல்லாம் உம்மளாலதான் சின்னக்குகுகுகுகுகுகுகுகு என்று அவள்ட பல்லில நான் கடிபடத் தொடங்கேக்கயே ஓகே நான் கொஞ்ச நேரத்தில வீட்ட வந்திடுவன் என்று சொல்லிக் கட் பண்ணிட்டன் போனை.

நேற்று Toronto International Film Festival (TIFF) ல்ல காஞ்சிவரம் படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. படத்தை திரையிட இயக்குனர் பிரியதர்சன் நடிகர்கள் பிரகாஸ்ராஜ் சம்மு மற்றும் தயாரிப்பாளர் சைலேன்ரா சிங் ஆகியோர் வந்திருந்தார்கள். பிரியதர்சன் உரையாற்றும்போது அவர் போன வருடம் TIFF அனுப்பியிருந்த படத்தை மிகவும் பெருமையுடன் அவர்கள் நிராகரித்துவிட்டார்கள் அந்த நிராகரிப்புதான் தன்னை மீண்டும் புதிய உத்வேகத்தோடு காஞ்சிவரத்தை நெய்ய வைத்தது என்பதை பெருமையோடு சொல்லி நிறையக்கைதட்டுகள் வாங்கினார்.பிரகாஸ்ராஜ் 'ஹாய் செல்லம்' என்றபடி வந்தார். முன்பொருமுறை ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டபொழுது தானும் சிவப்புக் கம்பளத்தில் நடப்பேன் என்ற கனவு இன்று நிறைவேறியதென்றார்.தயாரிப்பாளரும் மகளாக நடித்த ஷம்மு வும் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். எல்லாம் முடிஞ்சு ஒருமாதிரி படம் தொடங்கிச்சுது.இந்தப்படம் காஞ்சிவரத்திலுள்ளள நெசவாளிகளைபப் பற்றியது. கதை முழுக்க வேங்கடம் என்கிற பிணயக் கைதியின் மழைநேர வண்டிப்பயணத்தின் நினைவலைகளாகவே சொல்லப்பட்டிருக்கிறது.வேங்கடம் என்கிற பிரகாஸ்ராஜ் பட்டுடுத்தித்தான் தன் மனைவியைத் திருமணம் செய்வேன் என்று ஊரெல்லாம் சொல்லி வைத்துவிட்டு நூல் சேலையுடன் அன்னம் என்கிற ஸ்ரேயா ரெட்டியை மணந்து ஊருக்குக் கூட்டிவருகிறார். திமிருல வந்த தில்லானாவா இந்த ஸ்ரேயா என்றளவுக்கு அப்பிடி சாந்தமா இருக்கிறா அன்னம். தன் வாழ்நாள் முழுதும் பல பட்டுச்சேலைகளை நெய்த பிரகாஸ்ராஜின் தந்தை இறந்தபோது அவருடைய உடம்பைப் போர்த்துவிட ஒரு பட்டுத்துணியில்லாமல் ஒரு பட்டு நூலால் அவருடைய பெருவிரல்கள் கட்டப்படுவதன் மூலம் ஒரு நெசவாளியின் நிலமை சொல்லப்படுகிறது.அவர்களுக்கு பட்டை நெசவு செய்யத்தான் முடியும் அதை உடுத்தி அழகு பார்க்கும் வல்லமையில்லை.

ஒரு சேலையை நெசவு செய்வது முதல் அந்தச் சேலையின் நிறங்கள் அதில் வரும் டிசைன் எல்லாமே அந்த நெசவாளியின் சொந்தக் கற்பனை அல்லது படைப்பு. ஆனால் அந்தச்சேலையை பலநூறு ரூபாய்களுக்கு விற்றுச் சம்பாதிப்பது அங்கேயுள்ள முதலாளிகள். ஒரு சேலை நெசவு செய்ய 3-4 ரூபாய்கள்தான் கூலி. அப்படிச் சம்பாதிப்பதில் அவர்கள் வாழ்நாள் முழுக்கச் சேமித்தால்தான் ஒரு நெசவாளியால் ஒரு பட்டுச்சேலையை வாங்க முடியும். அப்படி தனக்கு வரப்போகும் மனைவிக்கு பட்டுச்சேலை வாங்கவென்று வெங்கடம் காசு சேர்க்கிறார் ஆனால் அது போதவில்லை அதற்குள் கல்யாணமும் நடந்துவிட்டது.

ஒருநாள் வேங்கடத்தின் முதலாளியின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகிறது. முதலாளி வேங்கடத்தையழைத்து நீதான் மிகத்திறமை சாலியாம் என் மகளுடைய திருமணப்புடைவையை நீதான் நெய்ய வேண்டும் என்கிறார். அந்தச்சேலையை வெள்ளைக்கார துரை முதல் அனைவரும் புகழ்ந்து தள்ள முதலாளி வேங்கடத்து போனஸ் எல்லாம் குடுக்கிறார். சந்தோசத்தில் வேங்கடம் அன்னத்திடம் அந்தச் சேலையைப் பற்றி வர்ணிக்க அன்னம் அந்தச் சேலையைத் தான் பார்க்கவேண்டும் என்கிறாள்.பட்டு நூலைத் திருடுகிறார்களோ என்ற சந்தேகத்தில் முதலாளியின் கட்டளைப்படி கோயிலில் வைத்துத்தான் பட்டுச்சேலைகள் உருவாக்கப்படுகின்றன அதனால் காஞ்சிவர நெசவாளிகளின் மனைவியருக்கு பட்டுச்சீலையை உடுத்துவது மட்டுமில்லை அதைக்கண்ணால் பார்ப்பதே பெரிய விசயம்.

இந்தச்சந்தர்ப்பத்தில் வேங்கடத்துக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது.குழந்தையின் வரவைக்கொண்டாட ஏற்பாடு செய்யபட்ட விழாவில் அவர்களின் வழக்கப்படி தந்தை தன் மகளின் காதில் ஒரு வாக்குறுதி சொல்லவேண்டும். வேங்கடம் தன் மகளின் காதில் " நீ வளர்ந்து பெரிய மனுசி ஆனதும் உன்னைப் பட்டுச்சேலை கட்டித்தான் புருசன் வீட்டுக்கு அனுப்பி வைப்பன் இது சத்தியம் " என்று சொல்கிறார். "முதல்ல பொண்டாட்டிக்கு பட்டுச்சீலையெண்டான் இப்ப மகளுக்கு ஏனிந்தப் பேராசை "என்று முணுமுணுப்பார்கள் வந்திருந்தவர்கள்.எம்.ஜி.ஸ்ரீகுமார் என்ற இசையமைப்பாளருக்கு இதுதான் முதல்படமாம். " பொன்னூஞ்சல் தொட்டிலேலே மயிலிறகு மெத்தையிலே மானே நீ உறங்கு உறங்கு ...ஆராரொ ஆரிரரோ "என்றொரு பாடல் வருகிறது. திரும்ப திரும்ப கேக்கோணும் போல இருந்திச்சு ஆனால் படத்தின் முடிவிலயும் அந்தப் பாடலைப் போட்டு நிறைய பேரை அழ வைத்துவிட்டார் இயக்குனர்.

ஊருக்கு முதல்முதலாக வரும் மோட்டார்வண்டியைப் பார்க்க அம்பலோதிப்படும் சனத்திரளில் மிதிபட்டு நோய்வாய்ப்படுகிறார் அன்னம்.தன் மகளுக்குக் குடுத்த வாக்குறுதியைக் கணவரால் காப்பாத்த முடியாதென்கிற கவலையில் வாடும் மனைவியயைத் தூக்கிச்சென்று தான் இரகசியமாகத் திருடிவரும் பட்டுநூல்களைக் கொண்டு தான் நெய்துவரும் பட்டுச்சீலையைக் காட்டி அன்னத்தை நிம்மதியாகச் சாகவிடுகிறார்.மகளாக வரும் அந்த ஓட்டைப்பல்லிக் குட்டிப்பொண்ணும் சரி வளர்ந்த மகளாக நடித்த ஷம்முவும் சரி நன்றாக நடித்திருக்கிறார்கள். ஷம்முவுக்கு இது முதல் படமாம்.மகளுக்குத்தான் குடுத்த வாக்குறுதியைக் காப்பாத்த ஒரு பொதுவுடைமை வாதியான வேங்கடம் ஒரு திருடனாக சுயநலக்காரனாகிறார். சாரதி என்கிற ஒரு எழுத்தாளர் காஞ்சிவரத்துக்கு வந்து தன் பொதுவுடைமைக் கருத்துகளையும் புத்தகங்களையும் வேங்கடத்துக்கும் அவருடைய நண்பருக்கு வழங்கிவிட்டு சுடுபட்டு செத்துப்போக அவருடைய கருத்துக்களை ஏனைய நெசவாளிகளுக்குச் சொல்லி தாங்கள் எவ்வாறு முதலாளிகளால் சுரண்டப்படுகிறோம் என்று விளக்கி ஒரு அமைப்பைக் கட்டியெழுப்பும் வேங்கடம் கோரிக்கை வைத்தல் வேலைநிறுத்தம் இப்படியெல்லாம் செய்கிறார். இறுதியில் தன்மகளின் திருமணத்துக்காக பட்டுச்சேலை தயாராகவேணும் அதற்கு தான் பட்டுநூல் திருடியாகவேண்டும் அதற்கு தொடர்ந்து வேலை நடக்கவேண்டும் என்பதற்காக தோழர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிடவேண்டும். தோழர்களிடம் அவர்களைக் குழப்வுதற்காகவே மிகத்தெளிவாக ஒரு பிரச்சாரம் செய்வார் அந்தநேரம் அரங்கு முழுக்கச் சிரிப்புத்தான்.எல்லா மனிதருக்குள்ளயும் ஒரு சுயநலவாதி ஒளிந்திருக்கிறான் என்றதுண்மைதான்.

வேங்கடத்துக்கு ஒரு தங்கையிருக்கிறார். என்னைப்பொறுத்தவரைக்கும் அவர்தான் வில்லி. அவாவும் அவான்ர கணவரும் சேர்ந்து அழுது வடிச்சு வேங்கடம் தன் மகளுக்கு பட்டு வாங்க சேர்த்த காசைச் சுருட்டாமல் விட்டிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.

எல்லாம் சொல்லிட்டன் மிச்சக்கதையும் சொல்லலாம் போலத்தானிருக்கு ஆனால் பிறகு நீங்களொருதரும் படம் பார்க்காமல் விட்டிட்டால் அது எவ்வளவு பெரிய நட்டம்..ம் அதால வேங்கடத்தின் மகளுக்குத் திருமணம் நடந்ததா ? பட்டுச்சேலை கட்டும் அதிஷ்டம் அவளுக்கு வாய்த்ததா என்று படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தப்படம் பார்த்தவர்களிடம் ஒரு கேள்வி :
வேங்கடம் தன் மனைவி சாகும் தறுவாயில் தங்கள் மகளுக்காக தான் நெய்துகொண்டிருப்பதாக காட்டுவது ஒரு அழகான பச்சையும் சிவப்புமான சேலை ஆனால் கடைசிக்காட்சியல் காட்டப்பட்டது வேறு ஒரு சேலை மாதிரி எனக்குப் பட்டது...யாரும் கவனித்தீர்களா?

ஒரு படத்தின் வெற்றி அந்தப்படம் என்ன எண்ணங்களை எங்களிடம் விட்டுச்செல்கிறது என்பதைப் பொறுத்தது உண்மையெனில் நாங்கள் இந்தப்படம் பற்றியும் அதில் வரும் கதாபாத்திரங்களும் அவர்கள் பேசும் வசனங்களைப் பற்றியும் கதைத்துக்கொண்டு நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தையும் தாண்டி ரெயின் போறதைப் கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தோம் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு பொலிஸ் அதிகாரியொருவரின் தொப்பியிலுள்ள பிரிட்டிஸ் சின்னம்(?) கழன்று விழுந்துவிடும் அதை தைப்பதற்காக அந்த அதிகாரி ரொம்பக் கஸ்டப்படுவார்.பேருந்தை மறித்து ஒரு தையற்கடையில் போய் கனநேரமா உக்காந்திருப்பார். பொறுமையிழந்த பயணிகள் இப்ப அந்தச் சின்னம் இல்லாட்ட என்ன என்று சினக்க மற்றொரு அதிகாரி சொல்லுவார் அந்தச் சின்னமில்லாட்டா வேலை போயிடும் அப்ப மற்றொராள் கேப்பார் "ஏன் அப்பிடி" பொலிஸ் அதிகாரி சொல்லுவார் பிரிட்டிஸ் காரன் வச்சிட்டுப் போன சட்டம் ஏன் எதுக்கெண்டே தெரியாமல் நாங்கள் பின்பற்றுறம்" இப்பிடியான வசனங்களுக்கோ கதையினூடு இழையோடும் மெல்லிய நகைச்சுவைகளுக்கும் பஞ்சமில்லை.

முதல்லயே கேக்கணும் என்று நினைச்சன்...எல்லாரும் நல்லா இருக்கிறீங்கிளா ?

Thursday, April 03, 2008

Malingering and Factitious Disorder

Malingering ,Factitious Disorder இரண்டுமே கொஞ்சம் விசித்திரமான மனநோய்கள். உங்களுக்குத் தெரிஞ்ச நிறைய பேருக்கு இந்நோயின் சில அறிகுறிகள் இருக்கலாம் ஏன் உங்களுக்குக் கூட இருக்கலாம் (எனக்கும்தான்). எனவே இதை வாசித்துவிட்டு உங்களுக்கும் இந்த நோய் இருக்கா என்று சந்தேகப்பட வேண்டாம் ஏனென்றால் இந்நோய்களில் எத்தனை அறிகுறிகள் இருந்தால் diagnostic criteria க்குள் வருவீர்கள் என்று வரையறுத்துச் சொல்வது கடினம்.

இந்நோயுள்ளவர்கள் பொய்யாக ஒரு இயலாமையை உருவாக்கி அதன்மூலம் தங்கள் பொறுப்புகளில் இருந்து ஒதுங்குவார்கள். உதாரணமாக அடிக்கடி sick அடிக்கிறது. வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வோர்களுக்கு இந்த "sick அடித்தல்" நல்லாவே தெரியும். சில வேலைத்தளங்களில் லீவு எடுப்பது கடினம் உடன நம்மவர்கள் sick அடிப்பார்கள். வேலைத்தளத்தைத் தொடர்புகொண்டு எனக்கு இன்று திடீரென்று தாங்கமுடியாத தலைவலி காய்ச்சல் தடிமன் இப்பிடி என்னென்னெல்லாம் அழையாத விருந்தாளியா வருமோ அதெல்லாம் தனக்கு வந்திட்டுது என்று சொல்லி வேலைக்கு கள்ளம் போடுறது.அது பெரியாக்களின் விளையாட்டு.

பாடசாலைக்குச் செல்வோரும் இதே விளையாட்டு விடுவினம் ஆனால் அம்மா அப்பாவை கண்டு பிடிச்சிடுவினம். ஆனால் பிள்ளையள் தங்களிட்ட இருந்துதான் பழகினவையெண்டதை ஒத்துக்கொள்ளவே மாட்டினம்.சிலருக்கு பெளதீகப் பரீட்சை நடக்கிற நேரமெல்லாம் வயிற்றுவலி வரும் இன்னும் சிலருக்கு தமிழ்ப் பரீட்சை நேரம் புதுசா புதுசா எல்லாம் வருத்தம் வரும்.
இன்னும் சிலர் ஒரு படி மேல போய் மண்டை உடைச்சுப்போட்டு வாறது கிணத்துக்க விழுறது காய்ச்சல் வரோணும் என்று கோயில் கிணத்தில போய்க் குளிச்சிட்டு நிறைய ஐஸ்கிறீம் சாப்பிடுறது இப்பிடி நிறையச் சொல்லலாம். மனசைத் தொட்டு சொல்லுங்கோ நீங்களும் இப்பிடி எல்லாம் பம்மாத்து விட்டனீங்கள் தானே ?

சில நாடுகளில் இராணுவ சேவை செய்யவேண்டியது கட்டாயம். அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வேலையிடத்திலிருந்து அதிகளவிலான காப்புறுதி பெறுவதற்காகவும் தங்களுக்கு பெரிய பெரிய வருத்தங்கள் இருப்பதாக சொல்பவர்களுண்டு.இப்பிடி ஒரு பொறுப்பிலிருந்து விடுபட பொய்யாக வருத்தம் இருப்பதாக பொய் சொல்வது அல்லது வருத்தத்தை வருவிப்பது இந்நோயின் ஒரு அறிகுறி.
இது தவிர தன்னை வீட்டிலுள்ள எல்லோரும் கவனிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும் சிலர் வருந்தி நோயை வரவழைத்துக்கொள்வதுண்டு. வீட்டில ஒரு சகோதரருக்கு வருத்தம் என்றால் விசேட கவனிப்புக் கிடைக்கும் அதைப்பார்க்கிற மற்ற பிள்ளைகளுக்கு சா இந்த வருத்தம் நமக்கு வந்திருக்கக் கூடாதா ? அம்மம்மான்ர மடில படுக்கலாம் நெஸ்ரோமோல்ட் குடிக்கலாம் 3 நேரமும் பிஸ்கட் சாப்பிடலாம் சோறு சாப்பிடத்தேவையில்ல என்று மனசுக்குள்ள கணக்குப் போடுறது அடுத்த நாள் தானாவே காய்ச்சல் வந்திடும் மற்றாளுக்கு. இது அநேகமா சின்னப்பிள்ளைகள்தான் இப்பிடி நடிக்கிறது ஆனால் பெரியவர்களும் சளைத்தவர்களல்ல. மனைவி பிள்ளைல அல்லது பேரப்பிள்ளைல பாசத்தைப் பொழிஞ்சால் பொறுக்கேலாமல் வருத்தம் என்று படுக்கிற அப்பாக்கள் தாத்தாக்களும் உண்டு.
இப்பிடி பொய் சொல்லிக்கொண்டு பொய் றிப்போர்ட் கேட்டு வாறாக்களால கன நேரம் நடிக்க முடியாது தானே.சில நேரம் தாங்களே மாட்டுப்பட்டிடுவினம். சாதாரணமா ஒரு குறிப்பிட்ட வருத்தம் இருக்கிறாக்கள் எப்பிடி நடந்துகொள்ளுவினமோ அதையே மிகைப்படுத்துவதுபோல இவர்களின் நடிப்பிருக்கும். நெஞ்சு வலியென்டு வருவினம். எந்தப்பக்க நெஞ்சு வலியென்டு கேட்டால் இடப்பக்க வலியெண்டு சொல்லிக்கொண்டு வலப்பக்கத்த இறுக்கிப்பிடிச்சிருப்பினம். இதைத்தான் la belle indifference என்று சொல்றது. உதாரணத்துக்கு ஒருவர் அதிகளவிலான காப்புறுதிப்பணம் எடுப்பதற்காக தனக்கு ஞாபக சக்தி இல்லாமல் போய்விட்டதாகச் சொல்கிறார் என்று வைப்பமே அதை நிரூபிப்பதற்காக அவருக்குக் கொடுக்கப்படும் வினாக்கொத்தில் தெரிந்த கேள்விகளுக்கெல்லாம் தாறுமாறாகப் பிழை பிழையாக் பதிலளிப்பார். ஒரு குறிப்பிட்ட border line இருக்கும்தானே எதற்கும். இப்படி பொய் சொல்பவர்களின் அதீத நடிப்பால் இவர்கள் அந்த வினாக்கொத்தில் மிக மிக குறைவான மதிப்பெண் பெற்றால் clinical assessment செய்பவர்களுக்கு விளங்கிவிடும் இவர் நடிக்கிறார் என்று. கண்ணை மூடிக்கொண்டு விடையளித்தால் கூட 10 % புள்ளிகள் வரும் ஆனால் இவர்கள் அதற்கும் குறைவாக எடுப்பார்கள்.

இந்த வருத்தம் மருத்துவம் படிப்பவர்களுக்கும் மருத்துவத்துறையில் வேலை செய்பவர்களுக்கும் அதிகமா வருதாம். ஏனென்றால் மற்றவர்களை விட இவர்களுக்கு அநேகமான வருத்தங்களின் அறிகுறிகள் பற்றித் தெரிந்திருக்கும்தானே அதனால் பொய் சொல்வதும் நடிப்பதும் அவ்வளவு கடினமில்லை :-)

இந்த Malingering உடன் தொடர்புடைய இன்னொரு மனநோய்தான் Factitious Disorder.இது இன்னும் விசித்திரமானது. இந்த வருத்தம் உள்ளவர்கள் தங்களுக்கு காயம் ஏற்படுத்திக்கொள்றது மட்டுமில்லாமல் தங்கட பிள்ளையையும் காயப்படுத்துவினம். அப்பிடி பிள்ளைக்கு காயம் ஏற்படுத்தினால் அதை Factitious Disorder by proxy அல்லது Munchausen Syndrome by proxy என்று சொல்றது.
Rapper Eminem ஐ உங்கள் எல்லாருக்கும் தெரியும்தானே? Eminem ன் பிரபலமான ஒரு பாடல்தான் "Cleaning out my closet ''. அந்தப்பாடலில் வரும் பின்வரும் வரிகளில் தன் தாய்க்கு Munchausen Syndrome இருந்ததாகவும் அதனால் தான் தாயார் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் சொல்கிறார். தன் மனதில் தேங்கியிருந்தவற்றை தான் வெளியில் சொல்வதைத்தான் (அதாவது மனதைச் சுத்தப்படுத்துவதைத்தான் ) cleaning out my closet என்று குறிப்பிடுகிறார்.

" Witnessing your mama popping prescription pills in the kitchen
Bitching that someone's always going through her purse and shit missing
Going through public housing systems, victim of Munchausen syndrome
My whole life I was made to believe I was sick when I wasn't
' Till I grew up, now I blew up it makes you sick to ya stomach, doesn't it ".

கனடாவில் சில வருடங்களுக்கு முதல் இரண்டு தாதிமார்களுக்கு Munchausen syndrome இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தங்களுக்கு Urinary tracy infection, flank pain ( அடிவயிற்றிலும் அதனை அண்டிய பாகங்களிலும் வலி ) மற்றும் gross hematuria ( urine ல் இரத்தம் கலந்திருப்பது) இருப்பதாக தொடர்ந்து முறையிட்டுள்ளார்கள். நாளடைவில் தாங்களே தங்கள் bladder ( பித்தப்பை??)) இரத்தத்தைச் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது ( Chew ,Pace & Honey , 2002).
இப்படியான மனநோய்களுக்கு சிறுவயதில் உரிய பராமரிப்பு கவனிப்பு கிடைக்காதது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கென்று தனியான சிகிச்சைமுறைகளில்லை. பலர் தங்களுக்கு இந்த வருத்தம் இருப்பதாக ஒத்துக்கொள்வதில்லை. அப்படி அவர்களாக ஒத்துக்கொண்டு தெரப்பி எடுத்துக்கொள்வது தவிர வேறு வழிகளில் இவர்களைக் குணப்படுத்தமுடியாது.

Thursday, March 20, 2008

ஜீவீதா - அவளை இன்டைக்குப் பார்த்தனான்!


இப்ப என் மனசில ஏற்பட்டுக்கொண்டிருக்கிற உணர்ச்சிகளையும் ஞாபகங்களையும் இந்த ஒரு பதிவுக்குள்ள அடக்க முடியுமா என்று தெரியேல்ல இருந்தாலும் எழுதுறதுதான் மனசை லேசாக்கும் என்றதால எழுதத் தொடங்கிட்டன்.

அவளுக்கு பெயர் ஜீவிதா. முதலாம் வகுப்பில இருந்து 5ம் வகுப்பு வரைக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில படிச்சிட்டு பிறகு ஆறாம் வகுப்புக்கு இன்னொரு பெரிய பள்ளிக்கூடத்துக்கு போவமெல்லோ அப்பிடி நான் பருத்தித்துறை மெதடிஸ் மகளிர் கல்லூரிக்கு போய் ஒரு கிழமைல நேவி அடிக்குப் பயந்து பள்ளிக்கூடம் போமாட்டன் என்று வீட்டில நின்டிட்டன். அப்பா வேற அந்தநேரம் லண்டனால வந்து நிண்டவர் வீட்டுக்கு பக்கத்திலயே படிக்கட்டும் என்று செல்லையாக் கம்பஸ்ல கொண்டுபோய் சேர்த்து விட்டிட்டார். புதுப் பள்ளிக்கூடம் புது இடம் கொஞ்சம் பயம் வேற. முதல் கிழமைதான் பயமெல்லாம் பிறகு எங்களைப் பார்த்துத்தான் மற்றாக்கள் பயப்பட்டவை அது வேற கதை. செல்லையால அறிமுகமான என் நண்பிகள்தான் துசி கஸ்தூரி கார்த்திகா சோபர்ணா அகல்யா மந்தாகினி ஜீவிதா சோபியா மைத்திரேயி மேகலா சுனிதா இந்த பட்டியல் ரொம்ப நீளம். இப்ப ஏன் இதெல்லாம் சொல்றன் என்று யோசிக்கிறீங்கிளா?

முதல்ல சயந்தன் அண்ணாக்கு ஒரு பெரிய நன்றி. சயந்தன் அண்ணா மட்டும் "பூவைப் போல புன்னகை காட்டு " பாடலைத் தந்து என்னைப் பார்க்கச் சொல்லாட்டால் நான் ஜீவீதாவை எப்பிடிப் பார்த்திருப்பன். அந்தப் பாட்டை போட்டிட்டு வேற ஏதோ வேலை செய்துகொண்டிருந்தனான் தற்செயலா பாட்டு window வைப்பார்த்தால் ஒரு மரக்கிளைக்கு நடுவில தெரிஞ்சது ஜீவிதாட முகம். என்னால ஒரு நிமிசம் நம்ப முடியேல்ல. திரும்ப கொஞஞ்சம் பின்னால இழுத்துப்போட்டு அவளேதான். அந்தக் கண் காட்டிக்குடுத்ததிட்டு. கத்திட்டன் நான். பக்கத்தில இருந்த அம்மாவும் அக்காவும் பயந்திட்டினம்.அக்காக்கும் ஜீவிதாவைத் தெரியும். இங்க பார் அக்கா ஜீவிதா இந்தப்பாட்டில வாறாள் என்றன் . ஒரு நிமிசம் நான் பயந்திட்டன் அவச்சத்தம் மாதிரிக் கத்துது என்று அம்மா திட்டுறா எனக்குப் பயங்கர சந்தோசம் அவளைப் பார்த்தது.


ஊாரை விட்டு வந்து 10 வருசமாச்சு. 4-5 வருசத்துக்கு முதல் ஒரு நண்பியோடு ஊரிலுள்ள மற்ற நண்பிகளைளப்பற்றிக் கேட்கும்போது எல்லாற்ற காதல் கதை எல்லாம் சொன்னாள் ஜீவிதாவைப் பற்றி ஒன்றும் சொல்லே்ல.கடைசியா சொன்னாள் ஜீவிதா இயக்கத்துக்குப் போட்டாள் என்று, எனக்கு நம்பக் கஸ்டமா இருந்தது. இவை இவைதான் போராடப் போவினம் என்ற ஒரு நினைப்பு எனக்கிருந்தது இந்த நினைப்பின் படி ஜீவிதாவை என்னால போராளியாக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியேல்ல. ஆனால் நாங்கள் நினைச்சதுக்கு எதிர்மாறா நிறைய விசயங்கள் நடக்கேக்க அவள் மட்டும் விதிவிலக்கா என்ன. ஜீவிதான்ர நெருங்கிய நண்பி அனிதா. 6ம் வகுப்பில இருந்து 8ம் வகுப்பு வரைக்கும் நாங்கள் எல்லாரும் நண்பிகள்.ஜீவிதா, மந்தா, அனிதா, அகல்யா இவையெல்லாம் பக்கத்து வகுப்பு. அநேகமாக எங்களுக்குப் படிப்பிக்கிற ரீச்சர்தான் அவைக்கும் படிப்பிக்கிறது அதால பக்கத்து வகுப்பெண்டாலும் எங்களுக்கு ஒரு ஆரோக்கியமான போட்டி எப்பவுமே இருந்தது. முக்கியமா எனக்கு இப்ப ஞாபகம் வாறது கிருஸ்ணகுமார் சேர். எங்களுக்கு கணிதம் படிப்பிச்சவர் அவர். ஜீவிதா வாய்காரி எங்களோட மட்டுமில்ல கிருஸ்ணகுமார் சேரோடயும் நல்லாச் சண்டை பிடிப்பாள். ஜீவிதான்ர அக்காவும் எங்கட பள்ளிக்கூடத்திலதான் படிச்சவா அவா ஜீவிதாக்கு நேரெதிர்.

எனக்கு அவளை இந்தப் பாட்டில பார்த்த சந்தோசத்தில மூளை வேலை செய்யேல்ல. சயந்தனண்ணாட்ட ஜீவிதைப் பற்றி விளங்கப்படுத்துறன் அவர் யாரைச் சொல்றீங்கள் இந்தப்பாட்டின்ர முக்கிய பாத்திரமா என்று அப்பத்தான் முழுப்பாட்டையும் திரும்பப் பார்த்ததன் அதுவரைக்கும் எனக்கு அவளுக்காகத்தான் பாடினம் என்றது புரியவேயில்லை.

இந்தப் பாட்டைப் பார்க்க எனக்கு செல்லையாக் கம்பஸ் மாமரமும் தெய்வம் ரீச்சர் வீட்ட நாங்கள் எல்லாரும் சைக்கிள் park பண்றதும் செல்லையா கன்ரீனும் செல்வி ரீச்சரும் (எங்கட வாழ்க்கைத்திறன் ரீச்சர் - என்னைமாதிரி ஜீவிதா மாதிரி எதிர்த்துக் கதைக்கிற பெட்டையள அவாக்கு ரொம்பபபபப் பிடிக்கும்:-) இன்னும் என்னென்னவோ எல்லாம் ஞாபகம் வருது எழுதத்தான் பயமா இருக்கு. எங்களுக்கு ஆங்கிலம் படிப்பிக்கிறது ஒரு ரீச்சர். ஜீவிதாவைக்கு ஆங்கிலம் படிப்பிக்கிறது ஒரு மாஸ்டர். இரண்டு பேரும் வயசுபோன ஆக்கள். இரண்டு வகுப்புக்கும் ஒரே நேரத்திலதான் ஆங்கில வகுப்பு நடக்கும். அவை எங்களுக்குப் படிப்பிக்கிறத விட்டிட்டு பிஸியாயிருப்பினம்.அந்த நேரத்தில ஜீவிதா எங்கட வகுப்புக்கு ஓடி வந்து இரகசியம் சொல்றன் என்டுபோட்டு பிலத்த சத்தமா நளினத்தோட கதை சொல்லுவாள்.இப்பிடி நிறைய ஞாபகம் வருது. ஜீவிதா மட்டும் இதை வாசிச்சு என்னைத் தொடர்புகொண்டாள் என்டால் ஐயோ அதை விட சந்தோசம்... ஜீவிதாவைத் தெரிந்த 2 நண்பிகளுக்கு மெஸேஜ் பண்ணிட்டன் அவையும் பார்த்திட்டு கத்தி அம்மாட்ட பேச்சு வாங்கப்போயினம்.

திரும்பவும் சயந்தனண்ணாக்கு நன்றி.