Custom Search

Tuesday, November 04, 2008

அல்லலுறும் மக்களுக்காக உங்கள் கண்களைத் திறவுங்கள்

தாயகத்தில் தொடர்ந்தும் எம் உறவுகள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு வருகிறார்கள்.ஏறத்தாழ 300,000 மக்கள் சாதாரண அடிப்படை வசதிகளான உணவு, உடை உறையுள் போன்றவை இல்லாமல் அல்லற்படுகிறார்கள்.

பருவகால மழையிலும் சிக்கி அவதியுறுகிறார்கள். இந்த நிலை தொடரக்கூடாதெனில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நாங்கள் எம் மக்களுக்கான நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை திரும்ப இலங்கைக்கு அனுப்பவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் இதுவரை காலமும் அளித்து வந்த ஆதரவை விட இன்னும் பல மடங்கு அதிகமாக 100% முயற்சி செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

Canadian Humanitarian Appeal for the Relief of Tamils (CanadianHART) என்ற இளையவர்கள் பலரின் ஒன்றிணைந்த திட்டத்தினால் "Open Your Eyes for HART" என்ற கவனயீர்ப்பு வார நிகழ்வு ரொறன்ரோ கனடா கந்தசாமி கோவிலில் ஒன்ராரியோ மற்றும் ஏனைய மாகாணங்களிலுமுள்ள அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஊடகங்களையும் உள்ளடக்கி கனடாத் தமிழ்ச் சமூகத்தால் 1.11.08 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை (31.10.08) கனடா கந்தசாமி கோயில் மண்டபத்தில் தமிழ் இளையோர்களைச் சந்தித்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் இளையவர்கள் எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்யலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டதோடு முதற்கட்டச் செயற்பாடுகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



நேற்று சனிக்கிழமை (01.11.08) பொதுமக்களையும் தமிழ் ஊடகங்களையும் சந்தித்து ஒரு வார காலம் நடைபெறவுள்ள இந்தக் கவனயீர்ப்பு வாரத்தில் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்த முழுமையான பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது, ஆளணி தேவைப்படுகின்றது போன்ற விடயங்கள் விளங்கப்படுத்தப்பட்டது.

வரும் திங்களிலிருந்து, வீட்டில் வேலைத்தளத்தில் பேருந்தில் என எல்லா இடங்களிலும் உங்கள் அயலவரிடம் எங்கள் நாட்டில் மக்கள் படும் இன்னல்களைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல 10,000 ரொறன்ரோ வாழ் மக்கள் தங்கள் அயலவர் இருவருக்கு எங்கள் தாயக உறவுகள் படும் அல்லல்களை எடுத்துச் சொன்னால் 20,000 மக்களால் எங்கள் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். அப்படியே படிப்படியாக எல்லாச் சமூகத்தினரையும் எங்கள் குரல்கள் சென்றடையும் என விளக்கப்பட்டது.

மக்களின் வசிப்பிடங்கள் வேலைத்தளங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் போன்றவற்றில் இடம்பெயர்ந்த மக்களின் நிலையை எடுத்துச் சொல்லும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் கவனயீர்ப்பு நிகழ்வினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

செவ்வாய் ஆரம்பித்து பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களுக்குச் சென்று ஆதரவுக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுதல் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களைச் சந்தித்து தாயகத்தில் மக்கள் படும் இன்னல்களையும் தற்போதைய நிலவரங்களையும் அவர்களுக்கு எடுத்தியம்புதல் மற்றும் ஆதரவுக் கடிதம் பெறுதல் போன்றன இடம்பெறும் என்று கூறப்பட்டது.

புதன் முதல் வெள்ளி வரை 72 மணித்தியால கண்காட்சியும் காட்சிப்படுத்தலும் இடம்பெறும். இது வன்னியில் மக்கள் இடம்பெயர்ந்து எப்படியான ஒரு சூழலில் வாழ்கிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதாகக் காட்டி உண்மையான இடப்பெயர்வை ஏனைய சமூகத்தினருக்கு காட்டுவதாக அமையவிருப்பதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து 72 மணித்தியாலம் இடம்பெறவுள்ள இந்த மாதிரி இடப்பெயர்வின் போது பொது மக்களின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுவதாக விளக்கப்பட்டது.

www.tamilidpcrisis.org என்ற இணையத்தளத்தினை மற்ற சமூக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த இணையத்தளத்திலுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு இளையவர்களின் இந்த முன்னெடுப்பினை வெகுவாகப்பாராட்டினர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு இளையவர்களும் பொதுமக்களும் எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்ற அறிவுறுத்தல்களையடுத்து 'நாம் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து இன்று எமது நாட்டில் புலம்பெயர்ந்த எமது உறவுகள் இன்னல் துடைக்கும் இப்பரப்புரையில் எம்மையும் இணைத்துக்கொள்கிறோம்; காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது எனும் வாக்கிற்கமைய செயற்படுவோம் என்றும் எம்மோடு எம்முறவுகளையும் இணைத்து எம்மாலான உதவிகளைச் செய்வோம் என்றும் குரல்வளை நெரிக்கப்படும் எம்முறவுகளின் குரலாக நாம் குரலெழுப்புவோம் என்றும் உறுதி கூறுகிறோம்" என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உலகின் பல பாகத்திலும் செறிந்து வாழும் உறவுகளே அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதிற்கிணங்க நாமனைவரும் ஒன்றுகூடி உலக மக்களுக்கு எம்மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் எடுத்தியம்புவோம். அல்லலுறும் எம்முறவுகளின் குரலாக நாமிருப்போம். ஒன்றுபடுவோம். செயற்படுவோம்.

www.tamilidpcrisis.org
info@tamilidpcrisis.org
416-838-9637

1 comments:

சந்தனமுல்லை said...

நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்..உங்கள் முயற்சி பலனளிக்கட்டும்...வாழ்த்துக்களும் & பிரார்த்தனைகளும்!!