Custom Search

Tuesday, November 11, 2008

கோணப்பா + உளநலம் குன்றியவர்கள் - எண்ணங்கள் சில

எங்கட ஊரில அம்மம்மா வீட்டுக்கு கிட்ட ஒரு அண்ணா இருந்தார். அவற்ற சொந்தப்பெயர்கூட எனக்கு ஞாபகமில்லை ஆனால் எனக்குத் தெரிஞ்சு எல்லாரும் அவரை கோணப்பா அல்லது கொப்பக்கடுவா என்றுதான் கூப்பிடுவார்கள். காலை ஒரு மாதிரி விந்தி விந்தித்தான் நடப்பார். சில நேரம் அவர் சிரிக்கேக்க வாயால உமிழ்நீர் வழியும். சரியான பெரிய நெத்தி அவருக்கு.கிட்டத்தட்ட 16 வயதினிலே சப்பாணி மாதிரித்தான் இருப்பார் பார்க்க. எண்ணை வடியுற ஒழுங்கா இழுக்காத தலை. வாயில எப்பவும் வெத்திலை பாக்கு இல்லாட்ட வீணீர் வடியும். வயிறுக்கு மேல இழுத்துக் கட்டின சாரம். திசைக்கொன்றா இருக்கும் விரல்களும் கோணல் மாணலா வளர்ந்து நிக்கிற நகங்கள். இதான் கோணப்பாவின் வெளித்தோற்றம்.

அம்மம்மா வீட்டுப் பக்கம் நிறையத் தோட்டங்கள் இருக்கு. எல்லாம் எங்கட சொந்தக்காரற்ற தோட்டம்தான். கோணப்பா எப்பவும் யாராவது ஒருவரின் தோட்டத்தில் நின்று ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பார். அவர் அவற்ற வீட்டில நிக்கிறார் என்றால் அன்டைக்கு அவருக்கு வலிப்பு வந்திருக்கு என்றுதான் அர்த்தம்.

அவற்ற அம்மாக்கு அவரை விட இன்னும் நிறையப் பிள்ளையள் இருக்கினம்.கொஞ்சம் கஸ்டப்பட்ட குடும்பம் அதால சில நேரம் அவேன்ர வீட்ட எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்கிறேல்ல. இந்த கோணப்பா ஊரில எல்லாருக்கும் செல்லப்பிள்ளை மாதிரி. ஆற்ற தோட்டத்தில வேலை செய்யுறாரோ அவேன்ர வீட்ட அண்டைக்கு 3 நேரமும் சாப்பிடுவார். சின்ன வயசிலயே அடிக்கடி வலிப்பு வந்ததாலயோ அல்லது வறுமை காரணமோ தெரியா அவரை பள்ளிக்கூடம் அனுப்பேல்ல அவற்ற அம்மா அப்பா.

முந்தி அடிக்கடி வலிப்பு வருமாம். ஆனால் எனக்குத் தெரிஞ்ச காலத்தில எப்பவாவது இருந்திட்டொருக்காத்தான் வலிப்பு வரும். சிலதடவைகள் நானும் போய் புதினம் பார்த்திருக்கிறன் அவருக்கு வலிப்பு வாறதை. வலிப்பு வரத் தொடங்கினதும் ஒரு வித்தியாசமான சத்தம் போடுவார் பிறகு அப்பிடியே விழுந்திடுவார்.கண்ணெல்லாம் ஒரு மாதிரி மேல போய் சொருகி நிக்கும். கை கால் கிடந்து உதறும். வாயால ஒரு பக்கமா எச்சில் நுரை நுரையாத்தள்ளும். பக்கத்தில இருக்கிற கதவுத் திறபை எடுத்து அவற்ற உள்ளங்கைக்குள்ள வச்சால் வலிப்பு கொஞ்ச நேரத்தில குறைஞ்சிடும்.

கோணப்பா பள்ளிக்கூடம் போய் படிக்கேல்ல ஆனால் அவரோட வேலை செய்யிற மற்றைய கமக்காரர்களின் கைங்கர்யமோ என்னவோ அவர் பத்திரிகைகள் எல்லாம் வாசிப்பார். அரசியல் பற்றிக்கூட விவாதிப்பார் என்று அம்மா சொல்றவா.அப்படி ஒரு அரசியல் பற்றிய விவாதத்தில்தான் அவருக்கு கொப்பக்கடுவா என்ற பட்டப்பெயர் வந்ததாம்.ஊரில உள்ள சின்னப்பிள்ளைகளோடும் அவருக்கு நல்ல சிநேகிதம். தோற்றத்தில் மனநலம் குன்றியவர் போல இருந்தாலும் அவரை யாரும் கிண்டல் பண்ணுவதில்லை. நான் படித்த பாடசாலைக்கருகில் ஒரு பைத்தியம் இருந்தார். எப்பவும் ஒரே இடத்தில் இருப்பார் அவர். பக்கத்திலுள்ள குப்பைகளை பொறுக்கி ஒரு இடமாப் போடுவார். ஒருதரும் அவருக்கு கிட்ட போகாதவரை அவர் நல்லாத்தான் இருப்பார். தப்பித்தவறி கல்லெடுத்தெறிஞ்சு அவரைச் சீண்டினால் காணும் கன தூரத்துக்கு விட்டுத் துரத்துவார்.இன்னொரு பைத்தியம் இருந்தார் கோயிலில்.அவர் ஒரு M.A பட்டதாரி.அவற்ற தங்கச்சி சாதி குறைந்தவருடன் ஓடிப்போட்டா என்டதால அவற்ற அம்மா தற்கொலை செய்திட்டாவாம்.அம்மால அதிக பாசம் வைச்சிருந்த இவர் பைத்தியமாகிட்டார் என்று சொல்வார்கள் ஊரில். அந்தக் கோயில்ல ஒரு பொன்னொச்சி மரமிருக்கு. அந்த மரத்தோடும் அருகிலிருக்கும் மின் கம்பத்தோடும் மட்டும்தான் அவர் பேசுவார்.இப்படியான பைத்தியங்களை பார்த்த எனக்கு கோணப்பாக்கும் பைத்தியமோ என்று சந்தேகம் வரும்..அம்மாட்ட போய் கோணப்பாவுக்கு பைத்தியமா என்று கேட்டால் அம்மா என்னைப் பைத்தியமென்று பேசுவா.

கோணப்பாவுக்கு வலிப்பு மட்டுமின்றி 3 வயதுவரை நடக்கவில்லை 4 வயதுவரை பேச்சு வரவில்லை. வயதுக்கேற்ற மூளை வளர்ச்சியில்லை போன்ற குறைபாடுகளும் இருந்ததாம்.ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மருத்துவம் பார்க்கும் நிலையில் அவரின் குடும்பம் இருக்கவில்லை. இறைவன் விட்ட வழியென்று விட்டிட்டினம் போல. பணம் செலவழித்து மருத்துவம் செய்யவில்லை ஆனால் அவருடைய பெற்றோர் மட்டுமில்ல உறவினர்கள் அயலவர்கள் என எல்லாரும் கோணப்பாவில் பாசமாக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் அவரை ஒரு குறையாகப் பார்க்காமல் குறையுள்ள ஒரு மனிதனாகப் பார்த்திருக்கிறார்கள். அப்படி அவரையும் ஒரு மனிதனாக மதித்ததால் தான் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் அவருடைய பட்டறிவு அவரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது இப்பவும் ஒரு கமக்காரனாக.

ஊரில இருக்கிறாக்களே குறையுடன் ஒரு மனிதனை மனிதனாக ஏற்றுக்கொண்டிருக்கையில் கனடாவில் சகல மருத்துவ வசதிகளையும் அணுகும் நிலையிருக்கும் ஒரு குடும்பம் தங்கள் மனவளர்ச்சி குன்றிய மகனை வெளியுலகுக்குத் தெரியாமல் மறைத்து வைக்க நினைக்கிறது.எங்கட வீட்டை சில வருடங்களாக வாடகைக்கு விட்டிருந்தோம். கடிதம் எடுப்பதற்காக வீட்டுக்கு வந்தால் கதவை முழுவதுமாக திறக்கமாட்டார்கள் ஒரு சொட்டு திறந்துபோட்டு அந்த இடைவெளியில் கடிதத்தை தருவார்கள். வீடு வாடகைக்கு விட்டு பல மாதங்களாச்சே ஒருக்கா உள்ளுக்க போய் பார்த்திட்டு வரலாம் என்று ஒருநாள் அப்பா போனார். அப்பாவ வீட்டுக்குள்ளயே விடவில்லையாம் இன்னொருநாள் வாங்கோ என்று சொல்லியனுப்பி விட்டார்கள். பிறகும் 2-3 தடவை முயன்ற போது வீட்டில அம்மா அப்பா இல்லை பிறகு வாங்கோ என்றிச்சு அவேன்ர மகள். சரி வீட்டுக்குள்ளதான் விடேல்ல பின் வளவில மரங்களையாவது பார்த்திட்டு போவம் என்று நானும் அப்பாவும் ஒருநாள் போனம். ஒழுங்கா புல்லுகள் வெட்டாமல் பத்தையா இருந்திச்சு. ஆக்கள் இருக்கிற வீடு மாதிரித் தெரியேல்ல. மேல நிமிர்ந்து பார்த்தல் யன்னல் கண்ணாடிக்குள்ள இருந் நெற் பிஞ்சு பிஞ்சு தொங்குது, அப்பாட்ட காட்டினன் .எனக்கு வீட்டில ஏதோ வில்லங்கம் என்று விளங்கிட்டு. முன் பக்கம் வந்து கடிதம் வேண்ட நான்தான் போனன். தற்செயலா உள்ளுக்க பார்த்தால் sofa க்குப்பின்னால பிஞ்ச பேப்பர் துண்டுகள் கச்சான் கோது காஞ்ச பாண் துண்டுகள் இப்பிடி நிறையச் சாமான் குவிஞ்சு போயிருக்கு. நான் நினைக்கிறன் வீட்டுக்கு வாடகைக்கு வந்ததில இருந்து வீடு கூட்டிறதே இல்லையெண்டு. அப்பாட்ட சொன்னன் வீட்டில ஏதோ பிரச்சினையிருக்கு. பக்கத்து வீட்டு அங்கிள்ட்ட போய் கதைச்சம். அப்ப அவர் சொன்னார் தானும் பலமுறை அவையளோட கதைக்க முயற்சி செய்தவராம் முகத்தை திருப்பிக் கொண்டு போடுவினமாம்.

அடுத்த நாள் எனக்கு ஒரு தொலைபேசியழைப்பு வந்தது ஒரு உளவியல் ஆலோசகரிடமிருந்து.

உ.ஆ : என்னம்மா படிப்பு எப்பிடி போகுது? வீட்டில எல்லாரும் நலமா?

நா : படிப்புக்கென்ன அது தன்பாடு நான் என்பாடு.

உ.ஆ : அதுசரி வாடகைக்கு விட்டிருந்த உங்கட பழைய வீடு வித்திட்டிங்கிளோ?

நா : இல்லையே ஏன் கேக்கிறீங்கள்?

உ.ஆ : இல்ல எங்கட இல்லத்துக்கு ஒராக்கள் வந்திருந்தவை. அவை என்னட்ட ஒரு உதவி கேட்டிருக்கினம். அதைப்பற்றி உன்னட்ட சொல்லணும்.

நா : சொல்லுங்கோ முடிஞ்சால் நானும் உதவி செய்றன்.

உ.ஆ: என்ர இல்லத்துக்கு வந்திருந்தார்கள் உங்கட பழைய வீட்டு முகவரியைக் குடுத்து இந்த வீட்டில இருக்கிற ஆக்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமிருந்து தங்களைத் தாங்களே தனிமைப் படுத்தியிருக்கினமாம். அவைக்கு 3 பிள்ளைகள். ஒரு பிள்ளை மனவளர்ச்சி குன்றியது. அவனைப் பார்க்க மிக அமைதியா இருக்கிறான். ஆனால் சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் பயங்கரமா கோவப்படுறான். கோவம் வந்த உடன பக்கத்தில இருக்கிறத எடுத்த மற்றாக்களுக்கு அடிதான். உடன அவனக் கொண்டு போய் அவன ஒரு அறைக்குள்ள பூட்டி வைக்கினம். அந்த அறை யன்னல் நெற்றெல்லாம் கிளிஞ்சிட்டுது. சுவரில கூட சில இடங்களில ஓட்டை ஓட்டையா இருக்கு. அவன்ர கோவத்தை அவன் அறைக்குள்ள இருந்தே காட்டுறான். எங்க அந்த மகனைப் பற்றிய உண்மை வெளில தெரிஞ்சிடுமோ என்று பயந்து முந்தியிருந்த இடத்தை விட்டு இங்க வந்திருக்கினமிப்ப.மற்ற 2 பிள்ளையளையும் பள்ளிக்கூடத்தில தம்பியைப் பற்றி ஒருதருக்கும் சொல்லக்கூடாது நண்பர்கள் ஒருவரையும் வீட்டுக்கூட்டிக்கொண்டு வரக்கூடாதென்று சொல்லிவைச்சிருக்கினம். அதுகளையும் ஒரு இடத்துக்கும் போக விடுறேல்ல,போய் உண்மையை வெளில சொல்லிடுவினம் என்று பயம். சரியான சமையல் சாப்பாடில்லை. தகப்பன் இல்லாத நேரம் அவனைச் சமாளிக்கவே பெரிய கஸ்டப்படினம் ஆனால் நானும் கணவரும் எவ்வளவு சொல்லியும் ஒரு உளவியல் ஆலோசகரின் உதவியை நாட அவர்கள் தயாரில்லை. கிட்டத்தட்ட எங்களையும் emotional blackmail பண்ணித்தான் விட்டார்கள். இந்த விசயம் வெளியில தெரிஞ்சால் குடும்பத்தோட தற்கொலை செய்து கொள்வார்களாம் என்று அவை சொல்லிச்சினம்.இப்பவே ஒரு மகனால கிட்டத்தட்ட மொத்த குடும்பமும் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற 2 பிள்ளைகளும் பெற்றோரிடமிருந்து மனவழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

நா : ஓ...நான் யோசிச்சனான் ஏன் நாங்கள் எங்கட வீட்டுக்குள்ள போய் பார்க்கிறதை விரும்பேல்ல..விட்டேற்றியாப் பதில் சொல்லினம் என்று யோசிச்சனான். இப்ப என்ன செய்யப் போறீங்கள்? எங்கட ஆக்கள் ஏன்தான் இப்பிடியிருக்கினமோ? எந்தக் காலத்தில இருக்கினம். ஒரு பிள்ளைக்கு வருத்தம் என்றதுக்காக மொத்தக் குடும்பமும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு ஏனிப்பிடி. மனவளர்ச்சி குன்றிப் பிள்ளை பிறக்கிறதுக்கு மரபியல்,உயிரியல் என்று எத்தனையோ விதமான காரணங்கள் இருக்கலாம். இதைப்பற்றின விழிப்புணர்வு எங்கட ஆக்களுக்கு தேவை. நாலுவிதமாக் கதைக்கிற நாலுபேற்ற கதைக்கு காது குடுக்கத் தேவையில்லை என்று சொல்லுங்கோ. அந்தப்பிள்ளையை உங்கட இல்லத்துக்கு கூட்டிக்கொண்டு போங்கோ.

உ.ஆ : அப்பிடித்தான் நானும் யோசிச்சனான்.நான் நேரில போய் அவேன்ர மகனைப் பார்த்தா பிறகு உனக்கு சொல்றன். அப்பாக்கு மெல்லமா விசயத்தை சொல்லு. வீட்டுக்கு அவர் பார்த்து பார்த்து நிறைய செலவழிச்சவர் என்று தெரியும். .

உ.ஆ : கட்டாயம் எனக்குத் தகவல் சொல்லுங்கோ.அநேகமா வீடு திரும்ப திருத்த வேணும் என்று நினைக்கிறன். அப்பா பாவம்தான்.

4 comments:

கோபிநாத் said...

\\சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் பயங்கரமா கோவப்படுறான். கோவம் வந்த உடன பக்கத்தில இருக்கிறத எடுத்த மற்றாக்களுக்கு அடிதான்.\\\


எங்களின் உறவினர்கள் ஒருவர் பேர் இப்படி இருந்தனர். மருத்துவம் பார்த்து அவர் இப்போது நன்றாக இருக்கிறார். சின்ன வயதில் நான் அவரிடம் அடி கூட வாங்கியிருக்கிறேன்.

கடவுள் துணையுடன் அந்த பிள்ளை நன்றாக வேண்டும்.

சினேகிதி said...

வாங்க கோபிநாத்!

எனக்கு இப்பிடி அடிவாங்கின அனுபவம் இல்லை ஆனால் அடிவாங்கியதாக முன்பும் கேட்டிருக்கிறேன் சிலர் சொல்லி. சிலநேரம் இவர்களுக்கு Schizophrenia இருக்கோ தெரியேல்ல.

காரூரன் said...

மற்றவர்களின் மனதை அறிந்து நடப்பவர்களை விட மற்றவர்களின் மனதை புண்படுத்தி நடப்பவர்களால் தான் இப்படியான குடும்பங்கள் சோதனை அடைகின்றார்கள். இன்னொருவரின் பலவீனத்தை பழிப்பது நகைச்சுவை என்று நடப்பவர்கள் எம் சமுதாயத்திற்கு சாபக் கேடு. இந்தக் காலத்தில் உதபுவர்கள் யார், அந்த போர்வையில் வந்து அந்த குடும்பங்களை கஸ்டப்படுத்துபவர்களால் தான் இப்படியான குடும்பங்கள் சமுதாயத்தின் மீது நம்பிக்கை இழக்க வைக்கின்றது. எனக்கு தெரிந்த சிறுவன் ஒருவன் இருக்கின்றான், அவனுக்கும் இதே பிரச்சனை, நான் அவன் பெற்றோருக்கு சொன்ன அறிவுரையின் பின் தான் அவர்கள் அச்சிறுவனை வெளியே கொண்டு செல்கின்றார்கள். அவனின் நடவடிக்கையில் முன்னேற்றம் இருப்பதாக சொல்கிறார்கள்.

நல்ல பகிர்வு.

சினேகிதி said...

பகிர்வுக்கு நன்றி காருரன்,

அண்மைக்காலமாக நான் கேள்விப்படும் மனநலம் குன்றிய பிள்ளைகளினதும் அவர்களின் குடும்பங்களின் நிலமைப்பாடும் கவலைக்கிடமாகவே உள்ளது. 20 வயதுடைய இளைஞன் ஒருவன் திடிரென்று தன் நண்பர்களின் நடவடிக்கைகள் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியே போவதை நிறுத்திக்கொண்டு வெளியுலகத்தினுடான தொடர்பை முற்றாக துண்டித்துக்கொண்டு வீடியோ கேமே கதியென்று இருக்கிறான். பெற்றோரும் அப்படியிருப்பது ஏதோ நல்லவிசயம் போல அவனைப் பாடசாலைக்குப் போகச்சொல்லியோ வேலைக்குப் போகச்சொல்லாமல் இருக்கிறார்கள்.