Custom Search

Sunday, January 27, 2008

உங்களுக்கு சமஷ்கிர்தம் தெரியுமா?

இந்தச் சொற்களுக்கு அர்த்தம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்லுங்கோ plzzzzzzzz.

yac ca ks(.)usA
namaskaromy
kriyata
eva bibhyati
palAyan

நன்றி!

Sunday, January 20, 2008

வரட்டா போட்டு:-)


இன்றுடன் எனது நட்சத்திர வாரம் நிறைவடைகிறது. நீண்ட நாட்களாக பதிவுகள் எழுதப்படாமல் தூசிபடிந்து கிடந்த என் வலைப்பதிவை மீண்டும் தூசு தட்டி புதுப்பிக்க வைத்த தமிழ்மண நிர்வாகத்துக்கு எனது நன்றி!

முடிந்தளவு எனது கல்விசார் அனுபவங்களையும் சமூகம் சார்ந்த எண்ணங்களையும் ஏனைய வலைப்பதிவு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. எனது பதிவுகளைப் படித்து அவற்றுக்கு தங்கள் கருத்துக்களைதத் தெரிவித்தும் தவறுகளைச் சுட்டிக்காட்டியும் உற்சாகமளித்த நண்பர்களுக்கு நன்றி.

வாசித்துக் கருத்தெதுவும் சொல்லாமல் போனவர்களுக்கும் (:-)தனிமடலில் கருத்துக்களைச் சொன்னவர்களுக்கும் நன்றி.

வழமையாக பொழதுபோக்கும் அலட்டலுமாக போய்க்கொண்டிருந்த தத்தக்கபித்தக்க, நட்சத்திரவாரத்திலாவது ஆக்கபூர்வமாக எழுதவேண்டுமென்றுதான் இந்தப்பதிவுகள். சமூகம் நோக்கிய எந்தக்கருத்துக்களையும் சொல்வதல்ல நோக்கம்; இன்று தமிழ்ச்சமூகம் (குறிப்பாக ஈழத்தில் யுத்த சூழலிலும் ,யுத்த சூழலால் புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளிலும் ,தமிழக இயந்திரமயமாக்க சூழலிலும் வாழ்கிற தமிழ் மக்கள்) எதிர்நோக்கும் சமகால உளவியல் பிரச்சனைகளை மையப்படுத்தி சில அடிப்படையான எண்ணங்கைள வெளிப்படுத்தியிருக்கிறேன்.

இங்கு நான் சுட்டிக்காட்டியுள்ள சில விடயங்கள் தமிழ்ச்சமூகத்தில் தொடர்ந்தும் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டு தமிழ்ச் சமூக கலாச்சார பொருளாதார கட்டமைப்புகளை கருத்தில் கொண்ட தீர்வுகள் காணப்படவேண்டும்.இதுவே என் அவா.




நன்றி
தொடர்ந்தும் தத்தக்க பித்தக்க வலைப்பதிவினூடு உங்களிடம் வருவேன்.
அன்புடன்
சினேகிதி.

Saturday, January 19, 2008

வயதேறும் - வடு மாறா !

child clinical psychologists மற்றும் social wokers என ஐவர் அடங்கிய குழு ஒன்று விவரிக்கமுடியாத ஒரு எதிர்பார்ப்புடன் 14 வயதான மைதிலியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பொதுவாகவே 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு psychological assessment பண்ணும்போது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூட இருக்கவேண்டும் என்பது நியதி. ஆனால் மைதிலியோ தான் assessment க்கு வரும்போது தன் குடும்ப உறுப்பினர்கள் வரக்கூடாதென்று கேட்டுக்கொண்டதால்தான் உளவியல் ஆலோசகர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு. குடும்பத்தினர்களிடமிருந்து மறைக்கவேண்டிய ஏதோ ஒன்று பற்றி மைதிலி சொல்லப்போகிறாள் என்ற எண்ணத்தில் காத்திருக்கிறார்கள்.

மைதிலியைப் பார்த்தால் 14 வயதிலிருக்கும் எல்லாரையும் போலச் சாதாரணமாகத்தான் காணப்பட்டாள்.குடும்பத்தைப்பற்றிய விவரங்களைக் கேட்டபடியே assessment ஆரம்பமானது.அம்மாவைப் பற்றி அதிகம் சொன்னாள். அப்பாவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.தனது உயிரியல் தந்தையைத்தான் எப்போதாவது போய்ப் பார்த்து வந்ததாகவும் தற்போது சில வருடங்களாக அவர் எங்கேயிருக்கிறார் என்று தெரியாதென்றும் சொன்னாள். அவளுக்கு 2 வயதாகவிருக்கும்போது step father ம் அவளுடைய அம்மாவும் திருமணம் செய்து கொண்டதாகவும் ஆரம்பத்தில் தனக்கு அது பற்றிய கவலையொன்றும் இல்லையென்றும் ஆனால் நாளடைவில் அவளுடைய step father சுயநலம் மிக்கவராக மாறிவிட்டாராம்.

தன்னால வீட்டில நிம்மதியா இருக்க முடியாமலிருக்காம்.தன்னால சந்தோசமா இருக்க முடியேல்லயாம். இரவில் நித்திரை வருவதில்லையாம். தான் திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்களில் பார்க்கும் பயங்கர உருவங்கள் தன்னையும் அம்மாவையும் பிடிக்க வாறமாதிரி எண்ணங்கள் வருதாம்.

இப்படி மைதிலி தன்னைப்பற்றித்தானே சொன்ன விடயங்களை வைத்து உளவில் ஆலோசகர்களால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. மைதிலியின் தாயைச் சந்தித்தார்கள்.

மைதிலி எப்பவும் தாயை விட்டுப்பிரிந்திருக்க மாட்டாளாம். தாய் சமையலறையிலிருக்கும்போது மைதிலி தன்ர அறைக்குப் போக வேண்டி வந்தால் நீளமான துணியொன்றில் ஒரு நுனியைத் தாயிடம் கொடுத்துவிட்டு மறுநுனியைப்பிடித்துக்கொண்டு போவாளம். எப்போதும் தாய் தன் கண்ணில் படுமாறு இருக்கவேண்டும் என்று சொல்லிவைத்திருந்தாளாம்.மைதிலிக்குச் சின்ன வயதிலிருந்தே தனியப்படுக்கும் பழக்கமில்லையாம். ஒரளவு வளர்ந்த பிறகும் அம்மாவுடன் படுப்பதற்கு அடம் பிடிப்பாளாம்.அதற்கு step father மறுப்புத் தெரிவித்ததால்தான் அவரிடம் மைதிலிக்கு ஒரு விதமான வெறுப்பு வளர்ந்திருக்கிறது.

இப்படி மைதிலியின் தாய் சொல்வதைக் கேட்ட உளவியல் ஆலோசகர்களுக்கு ஒருவேளை மைதிலிக்கு seperation anxiety disorder இருக்குமோ என்று சந்தேகம் வந்தது.
ஆனால் மைதிலியிடம் இன்னொரு பழக்கமிருந்தது. அவளுடைய அறையில் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட இடமுண்டு. அந்தந்தப் பொருள் அந்தந்த இடத்திலிருக்க வேண்டும் இல்லையென்றால் வீட்டில் ஒரு பிரளயமே நடக்குமாம்.இது obssesive compulsion disorder ன் அறிகுறியாகும்.

மைதிலிக்கு பாடசாலையில் நண்பர்கள் எவருமில்லை. பாடங்களில் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை. பாடங்களை விளங்கிக்கொள்ளமுடியவில்லையென்று பாடசாலை நிர்வாகத்தினர் மைதிலியின் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள். அப்ப learning disability disorder ஆக இருக்குமா? நண்பர்கள் இல்லாத போதும் personality disorder ஆக இருக்க முடியாது ஏனெனில் 16-18 வயதுக்குப்பிறகுதான் ஒருவருக்கு personality disorder இருக்கென்று ஒருவரை வகைப்படுத்த முடியும்.

அப்போ மைதிலிக்கு என்னதான் பிரச்சனை? உளவியல் ஆலோசகர்களால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. seperation anxiety, depression, insomnia, adjustment disorder, learning disabilty, Obsessive-compulsive disorder (OCD) இப்படி எல்லாமே ஒன்றாக இருப்பது அதிசயமாகப் பட்டது.

கடைசி முயற்சியாக மீண்டும் மைதிலியின் தாயைச் சந்தித்தார்கள். மைதிலி கருவில் இருக்கும்போது மைதிலியின் தாயாரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள் பற்றிக்கேட்ட போது மைதிலி 5 மாதக் கருவாக இருக்கும்போது தாய் மாடிப்படியில் தவறி விழுந்திருக்கிறார். அதன் பின்னர் சில நாட்களில் சாலை விபத்தொன்றில் காயமடைந்து 2 வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருக்கிறார். மைதிலி 7 மாதக் கருவாக இருந்தபோது மைதிலியின் தந்தைக்கும் வேறொரு பெண்ணுக்கும் இருந்த தொடர்புபற்றித் தெரிய வந்து அவரை விவகாரத்துப் பண்ணியிருக்கிறார். அவருடைய குழந்தையைச் சுமப்பது பிடிக்காமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் தாய். முதல் முயற்சியில் காப்பாற்றப்பட்டு 2வது முயற்சியின் பின்னர் தீவிரக்கண்காணிப்பிலிருந்த போது 3 கிழமைகள் முன்னதாகவே மைதிலி பிறந்திருக்கிறாள். கணவன் மேலிருந்த வெறுப்பு முழுவதும் குழந்தைமேல் திரும்ப குழந்தைக்குப் பால்குடுப்பதையே வெறுத்திருக்கிறார் மைதிலியின் தாயார். மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகத் தாய்ப்பாலூட்டியிருக்கிறார்.

மைதிலிக்கு 2 வயதாகியபோதுதான் மைதிலியின் தாயார் மறுமணம் செய்துள்ளார். அப்படி வந்த step father க்கும் மைதிலுக்குமிடையே யார் மீது அம்மா அதிக பாசம் வைத்திருக்கிறார் என்ற போட்டி நிலவியிருக்கிறது. ஏற்கனவே பிறந்த குழந்தைக்குத் தாயிடமிருந்து கிடைக்கவேண்டிய நியாயமான அன்பு கிடைக்காமலிருந்த மைதிலிக்கு step father க்கில்லாமல் தாயின் அன்பு அரவணைப்பு முழுதும் தனக்கே கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

பல நாட்கள் நடைபெற்ற clinical assessment ன் பின்னர் மைதிலிக்கு post-tramatic stress disorder என்று சொல்லப்பட்டது. இது நடந்தது 2000 ம் ஆண்டில். இன்றுவரை மைதிலியால் சாதாரண நிலமைக்குத் திரும்பமுடியவில்லை.

ஏதாவது ஒரு அறிகுறியை மட்டும் கணக்கெடுத்து சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் பல psychological disorders களால் அவதிப்படும் மைதிலி தன்னுடைய 22 வயதில் வயதுக்கேற்ற முதிர்ச்சியின்றி இன்னமும் குளிக்கச் செல்லக்கூட தாய் கட்டாயம் கூட வரவேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறாள். எல்லாம் தாய் மயமாக இருக்கிறாள்.

அப்பாமாரே நீங்கள் செய்யும் துரோகம் உங்கள் மனைவிக்கு மாத்திரமல்ல பிள்ளைகளுக்கும் கொடுமைதான்.!

அம்மாமாரே கணவன்மார் செய்ற தப்புக்கெல்லாம் குழந்தைகளைத் தண்டிச்சா எப்பிடிங்க?

Friday, January 18, 2008

வந்துகொண்டிருக்கு குரல்பதிவு...

விளையாட்டா ஒரு ஞாபகப் பதிவு

நட்சத்திரவாரத்துக்கும் ஞாபகத்துக்கும் என்ன தொடர்பு என்று என்னட்ட கேக்கவேண்டாம் ; அப்பிடியே நீங்கள் கேட்டாலும் அது எனக்கு ஞாபகம் வருமோ யாருக்குத் தெரியும்.என்ர கதையை விடுங்கோ உங்கட ஞாபக சக்தி எப்பிடி?
நான் அரிச்சந்திரன்ர தங்கச்சிக்கு தோழி ; அதால நான் சொல்றதை எல்லாம் நீங்கள் கேள்வி கேக்காம நம்பணும். அப்ப கதையைச் சொல்லத் தொடங்கட்டா? “சரி மேற்றர் என்னன்னா லச்சுமி லச்சுமின்னு ஒரு ஆட்டோ அதை ஓட்டுறது சந்துரு. அவனை ஓட்டுறது ராணி” என் ஞாபக சக்தி வாழ்க !!! நட்சத்திர வாரத்துக்கு உங்களையெல்லாம் வாரணுமே ஏதாவது எழுதுவம் என்று நினச்சு ரைப்பத் தொடங்கினனா அப்ப பார்த்து ‘ஓரம்போ’ trailer வந்து என்னப்பார் ரிக்கற் வாங்கு தியேட்டர்ல வந்து பார் என்று ஒரே தொல்லை. ஆமா நான் எழுதவந்த விசயம் என்ன?

ஒரு ஓரில ஒரு சின்னப்பொண்ணு இருந்தாளாம். அவளுக்கு நல்ல ஞாபகசக்தியாம். நல்ல கெட்டிக்காரியென்று ஊரே சொல்லுமாம். அவளின்ர அம்மம்மாக்கு தன்ர பேத்திக்கு ஞாபகசக்தி எப்பவும் இப்பிடியே இருக்கோணும் என்று ஆசை. தானே பார்த்து பார்த்து ஆய்ஞ்ச வல்லாரைக் கீரையைத் துப்பரவு பண்ணி சம்பலரைச்சுக் குடுப்பா. ஆனா அந்தச் சின்னப்பொண்ணிருக்கே அது ஒரு லூசு. அம்மம்மா செய்து குடுத்த வல்லாரைச் சம்பலைக் களவா எறிஞ்சுபோட்டு தாத்தாக்கு அரைச்சு வச்ச மிளகாய்க் கூட்டைக் களவா எடுத்து தின்டிடுமாம். அந்தப்பொண்ணு வளர வளர ஞாபகசக்தி மட்டும் வளரவேயில்லை.

||இதுக்குமேல கதை எழுத வராதாம். அந்தச் சின்னப்பொண்ணு நான்தான். மிச்சக்கதையை மறந்திட்டன். இன்றுபோய் நாளை வாங்கோ. நன்றி வணக்கம் || அப்பிடிச் சொல்லி முடிப்பம் என்று நினச்சன் ஆனால் இது ஏன் எழுதத் தொடங்கினான் என்று ஞாபகம் வந்திட்டுது.

போன மாதம் cognition எக்ஸாம் எழுதேக்க எனக்கு நிறைய விசயம் மறந்திட்டுது. நானும் பேப்பர்ல எழுதி வச்சிருக்கிற குறிப்புகளைத் திரும்ப திரும்ப வாசிச்சு வரிச்சு நான் என்ன எழுத நினைக்கிறனோ அதை என் மனக்கண்ணில ஓட விடுவம் என்று பார்க்கிறன் ஆனால் என்ர மனசுக்குள்ள இருக்கிற டிவிடி ல என்ன பிரச்சனையோ யாரறவார்?? அது ஒழுங்கா படம் வரவேயில்ல.இதில பகிடி என்னெண்டால் எனக்கு ஞாபகம் வராமல் போனதே ஞாபகத்தைப்பற்றித்தான். இப்ப எக்ஸாம் முடிஞ்சு இரண்டு கிழமைக்குப் பிறகுதான் நானிதை ரைப் பண்றன் ஆனால் எனக்கந்த எக்ஸாமில பதில் மறந்து போன கேள்வி இப்ப சரியா ஞாபகம் வரேல்ல ஆனால் ஒரு பாட்டு ஞாபகம் வருது. அந்தப் பாட்டு எந்தப்படத்தில என்றும் ஞாபகமிருக்கு. கிழக்குக் கடற்கரைச்சாலை என்றொரு சுனாமாமிப் படம் வந்திச்சே அடச்சா சுனாமி படம் வந்திச்சே அதில கஞ்சப்பெண்ணே கஞ்சாப்பெண்ணெ என்றொரு பாட்டிருக்கு உங்களுக்கு ஞாபகமிருக்கா? அதில சில வரிகள வரும் “நீ பரீட்சையில் மறந்திடும் விடைகளா, கடைசிப் பக்கம் கிழிந்த நாவலா, வார்த்தை மறந்த பாடலா ,நினைவில் வர அடம்பிடிக்கும் முகம் நீயா” இன்னும் ஏதோ எல்லாம் வரும்.

[ஒரு முக்கியமான விசயம் மறந்திட்டுது. Memory என்றால் ஞாபகம் தானே?? அப்பிடியென்று நினச்சுக்கொண்டுதான் நானிதை ரைப்புறன் அதுவும் என்ர மறதியென்றால் நீங்கள் போய் படுங்கோ குட்நைற்.]

ரீச்சர் ஞாபகத்தைப்பற்றிப் படிப்பிக்கேக்க கேட்டா short term memory ல இருந்து long term memory க்கு தகவல்களை எப்பிடி அனுப்புறதென்று சொன்னது ஞாபகமிருக்கா என்று. நாங்கள் ஒன்றும் சொல்லாமலிருக்க ஒன்றில் சேது மாதிரி தலையை ஆட்டுங்கோ இல்லாட்டி கஜனி மாதிரி ஆட்டுங்கோ என்று சொன்னா. ( நான் அப்பவே சொன்னான் அரிச்சந்திரன்ர தங்கச்சி என்ர தோழி என்று :-) கனேடியன் prof க்கு சேது வை கஜனியை எல்லாம் தெரியும் என்றால் அதை நீங்கள் நம்போணும் ஓகே )

எப்பவும் நாங்கள் LTM ல சேமிச்சு வைக்கோணும் என்று நினைக்கிற தகவல்களை ஒன்றோட ஒன்று தொடர்புபடுத்தி ஒரு கோர்வையாக பாடமாக்கினம் என்டால் அது இலகுவா LTM ல போய்ச் சேருமாம் பிறகு அது ஒன்றை ஞாபகப்படுத்தினால் காணும் மற்றது தன்ரபாட்டில ஞாபகம் வருமென்றா. சத்தியமா அவா சொன்னத நான் நம்பேல்ல. அவ ஒரு உதாரணம் சொன்னா அத நான் மறக்கவே மாட்டன். எக்ஸாமில நீங்கள் இதுவரைக்கும் படிச்ச ஒவ்வொரு theorist ஐப் பற்றி சிறுகுறிப்பு வரைக என்றொரு கேள்வி வந்தா அதற்கான பதிலை நாங்கள் இலகுவாக ஞாபகம் வச்சிருக்க ஒரு வழி சொன்னா ஆனால் அது இலகுவான வழியில்லை.

இப்ப நான் Pavlo (classical conditioning) , Piaget (Developmental stages) , Freud (Psycho dynamic) , Bandura (Observational learning) இவையைத்தான் முக்கியமா ஞாபகம் வச்சிருக்கோணுமென்றால் இவை நாலுபேரும் எங்கட வீட்டுக் கூடத்தில இருந்து கும்மியடிக்கினம் oops கதைச்சுக்கொண்டிருக்கினம் என்று நினைக்கட்டாம்.

• Pavlo ஒரு சோபாவில இருந்துகொண்டு மணி அடிக்கிறதும் நாய்க்கு சாப்பாடு போடுறதுமா விளையாட்டுக்காட்டுறார்.

• Piaget ஒரு குழந்தைப்பிள்ளையைத் தவள விட்டிட்டு ஒரு பொம்மையை பெட்சீற்றுக்கு கீழ ஒழிச்சு வச்சிட்டு அது தேடுதோ என்று பார்த்துக்கொண்டே அவர் அந்த பொம்மையைத் தேடுறார்.பிறகு கொஞ்ச வாண்டுகளை வச்சுக்கொண்டு அதுகளோட கண்ணாடிக்குவளைகள் வச்சு தண்ணி அளந்து ஊத்தி விளையாடுறார்.

• அடுத்தது நம்ம Freud தாத்தா. அவர் தன்ர மகளை ஒரு கண்ணாடி அறைக்குள்ளு பூட்டி வச்சிட்டு அந்த அனாப்பொண்ணு வெளில நிக்கிறாக்களைப் பார்த்து சிரிக்குதா ஒழுங்காச் சாப்பிடுதா. கண்ணாடி அறைக்குள்ள வெப்ப தட்பம் எல்லாம் சரியா இருக்கா என்று நோட்டம் விட்டுக்கொண்டெ இந்தப்பொண்ணுக்கு ஈகோ எப்ப உருவாகும்? எப்பிடி அது வெளிப்படும் ? பெரிசா வளர்ந்து வந்து தன்னைப்பற்றி எல்லாத்தையும் என்னட்ட சொல்லுமா? இல்லாட்டி அப்பா விரும்புற மகளா இருக்கோணும் என்று எனக்குப் பிடிச்ச மாதிரி தான் இருக்கிறதா காட்ட நிறையப் பொய் சொல்லுமா ? என்று யோசிச்சுக்கொண்டு தனக்குத்தானே கதைக்கிறார்.

• கடைசியா என்ர பண்டுரா மாமா( அவர் எனக்கு மட்டும்தான் மாமா உங்களுக்கில்ல சரியா..இன்னும் உயிரோடதான் இருக்கார் British Columbia or Vancouver ல)
o பண்டுரா மாமா சின்னப்பிள்ளையள் கொஞ்சப்பேருக்கு ஒரு ரீவில ஒரு கனல் கண்ணன் மாஸ்டர்ட சண்டைக்காட்சியைப் போட்டுக்காட்டிட்டு பிறகு ஒரு அறைக்குள்ள கொஞ்ச பொம்மைகளையும் குடுத்து அந்தப்பிள்ளையளைப் பூட்டிவிட்டிட்டு அதுகள் அந்தப்பொம்மைக்கு எப்பிடி உதைக்குதுகள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.

இவ்வளவு விசயமும் எங்கட வீட்டுக்கூடத்தில நடக்க என்ர அம்மா விடுவா என்று நினக்கிறீங்கள்???? பெட்டைக்கு நல்லா முத்திட்டுதெண்டு நினச்சிடுவா.

எனக்கு இன்னொரு விசயம் ஞாபகம் வந்திட்டுது. ஊரில எனக்கு வகுப்பில விஞ்ஞானம் படிப்பிச்ச மாஸ்டருக்கு பெயர் விஜயகுமார்.என்னை முதல் முதல் முட்டிபோட வச்ச வாத்தி எப்பிடி மறப்பன். அன்டைக்கு நான் Periodic table பாடமாக்கிக்கொண்டு போகோணும். ரியுசன்ல யாரோ சொன்னதக் கேட்டு Hello Hero Li(H He Li) (இது மறந்திட்டன் மிச்சம்) Benz Car என்று பாடமாக்கிக்கொண்டு போனன். அங்க போனால் அது இடையில மறந்து போச்சு. நானும் ஞாபகப்படுத்துறதுக்கும் வாத்திட்ட இருந்து தப்புறதுக்கும் ஏதேதோ முயற்சி பண்ணிப்பார்த்தன் ஒன்டும் சரியா வரேல்ல கடைசில பிரின்ஸிட வாசல்ல அன்டைக்கு தவம்தான்.

இந்த மறதி என்றதில்லாம ஞபாகம் மட்டும் வாழ்க்கைல இருந்தா நல்லாத்தானிருக்கும்போல...இல்ல இல்ல தப்பு தப்பு தெரியாமல் சொல்லிட்டன் ஞாபகம் என்றொன்று இருந்தால் கட்டாயம் மறதியும் இருக்கோணும் இல்லாட்டா அவ்வளவும்தான். மறக்கவேண்டிய எவ்வளவு விசயத்தை ஞாபகம் வச்சிருக்கிறம்..ஏனப்பிடி?

மனசுக்குப் பிடிக்காத விசயங்கள் எங்கட LTM க்குப்போய்ச் சேராதாம். ஞாபகத்துக்கும் emotion க்கும் தொடர்பிருக்காம். அப்ப ஞாபகத்துக்கும் காதலுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கு. அப்பிடி மனசுக்குப் பிடிக்காத விசயம் LTM க்குப்போய்ச் சேராதெண்டால் ஏன் தோற்றுப்போன காதல் யாருக்கும் மறக்கிறதே இல்ல? தோக்கிற காதல்தான் மனசுக்கு பிடிச்ச காதலா?

சுத்தம் எனக்கு நாளைக்கு என்ன எழுதோணும் என்றது மறந்து போச்சு.
எதுக்கும் நீங்கள் இப்ப நான் சொல்ற படங்களைப் பார்த்திட்டு வாங்கோ மிச்சத்த நாளைக்கு கதைப்பம். Memento , 50 First dates, Mulholland Drive , The Bourne Identity அப்புறம் மறக்காம நம்ம Nemo வையும் பாருங்கோ.

Thursday, January 17, 2008

வரிசையாய் விளைவுகள் - விழுங்கும் குளிசைகளால்

போனவாரம் வந்த ஒரு fwd mail ல: 31 வயதுடைய Psychology விரிவுவரையாளர் ஒருவர் கருத்தடை மாத்திரை (OCS – oral contraceptives) எடுத்துக்கொண்ட காரணத்தால் stroke வந்து உயிரிழந்ததாகவும், எனவே அவர் உட்கொண்டு வந்த 2 கருத்தடை மாத்திரைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் - "please deal with your period once a month" என்றும் எழுதப்பட்டிருந்தது.

கருத்தடை மாத்திரை பாவிக்கிறவர்களுக்கு நிறைய பக்கவிளைவுகள் வருமென்று எனக்குத் தெரியும்தான் ஆனால் இப்படி உயிர்வாங்குமளவுக்கு பொல்லாததென்று நினைக்கேல்ல நான். எனக்குத் தெரிந்த சில சகோதரிகள் முக்கியமான பரீட்சைக்காலங்களில் அல்லது நடன நிகழ்ச்சிகள் செய்ய வேண்டியிருக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் period வந்து தொந்தரவு செய்யக்கூடாதென்பதற்காக கருத்தடை மாத்திரைகளைப் பாவிப்பதுண்டு. உண்மையாவே இப்படியான மாத்திரைகளைப் பாவிக்கிறாக்களுக்கு என்ன மாதிரியான சின்னச் சின்ன உபாதைகள் அல்லது பெரிய பெரிய வருத்தங்கள் வருமென்று பார்க்கத் தொடங்கினால் கிணறுவெட்ட பூதம் வெளிக்கிட்ட கதைதான்.



Oral contraceptives (OCs) அல்லது birth control pills என்றால் என்னென்டு அநேகமானாக்களுக்குத் தெரியும். வாய் மூலம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலம், மாதவிடாய்ச் சுழற்சியின் இயல்பை மாற்ற முற்படுபவர்கள்தான் இந்த கருத்தடை மாத்திரைகளை பாவிப்போர். மேலே சொன்னதுபோல கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள், முக்கியமாக மாதா மாதம் period மூலம் ஏற்படும் உடல் உள உபாதைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வேறு பல காரணங்களுக்காகவும் மாதவிடாயை 3,4,6 மாதத்துக்கொருமுறை அல்லது வருடத்துக்கொருமுறை வருமாறு செய்ய இம்மாத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத குடும்பப்பெண்கள் மற்றும் பலாத்காரத்துக்குள்ளான பெண்கள் போன்றோரும் இந்த மாத்திரைகளை உபயோகிக்கிறார்கள்.

இந்த மாத்திரைகளை ஏன் கருத்தடை மாத்திரைகள் என்று சொல்லவேணும்?
குழந்தை உருவாவதற்கு பெண்ணின் முதிர்ச்சியடைந்த கரு முட்டையும் ஆணின் விந்தும் சேரவேண்டும். முதிர்ச்சியடையாத கருமுட்டையிலிருந்து குழந்தை உருவாக முடியாது. இந்த கருமுட்டைகளை முதிர்ச்சியடையாமல் தடுப்பதுதான் இந்த கருத்தடை மாத்திரைகளின் முக்கியமான வேலை. மற்ற வேலை: ஆணின் விந்து நீந்திச்சென்று fallopian tube ல் முதிர்ச்சியடைந்த கருமுட்டையுடன் சேரவேண்டும் - அப்படி விந்து நீந்திச்செல்ல vagina விலுள்ள mucus வழுவழுப்பாக இருக்கவேண்டும். ஆனால் இந்த கருத்தடை மாத்திரைகள் mucus ன் வழுவழுப்பைக்குறைத்து தடிப்பாக்குவதன் மூலம் விந்து நீந்திச்செல்லும் தன்மையை வெகுவாகக்குறைத்து விடும்.உடலுறவின்போது condom பயன்படுத்தினாலும் 14% பெண்கள் கருத்தரிக்கிறார்களாம். அதனால்தான் பலர் கருத்தடைமாத்திரைகள் பக்கம் போகிறார்கள் ஆனால் எதுவுமே 100% நிவாரணியல்ல.

இப்படி கருத்தடை மாத்திரை பாவிப்பவர்களுக்கு blood clots, stroke, heart attacks தவிர புற்றுநோய்களும் வரலாம். அதுவும் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள பெண்கள் கருத்தடை பாவிப்பவர்களாயின் அவர்களுக்கு இந்நோய்களின் தாக்கம் அதிகமானதாக இருக்கும். வாந்தி, மயக்கம், அடிவயிற்றில் - மார்பகங்களில் இறுக்கமான தன்மை அல்லது வீக்கம், கால் கை மூட்டுகளில் வீக்கம், சோர்வு, vagina வில் வலி - அரிப்பு - எரிச்சல், இரத்தக்கொதிப்பு இப்படி பல விளைவுகளேற்படும். இவ்வளவற்றையும் தாங்கிக்கொண்டு இம்மாத்திரைகளை உட்கொள்வோர் ஒருநாள் தவறவிட்டாலும் கருவுறும் வாய்ப்புள்ளது.

இரத்தம் ஒரு இடத்தில் உறைந்துபோய் இருப்பதற்கான சில அறிகுறிகளாக சில நேரம் பார்வையில் அல்லது பேச்சில் தடுமாற்றம், மூர்ச்சையடைதல், பயங்கர தலைவலி, இருமலின் போது இரத்தம் வருதல், தொடர்ந்து அடிவயிற்றில் வலி, உடம்பின் சரிபாதிப் பகுதிகளில் வலி (உதாரணமாக ஒருபக்க நெஞ்சுவலி கால்வலி கைவலி) - இப்படியான அறிகுறிகள் தொடர்ந்து வரும்போது மருத்துவரின் ஆலோசனையை உடனடியாக நாடவேண்டும். Demulen, Desogen, Loestrin, Lo/Ovral, Nordette, Ortho-Novum, Ortho-Tri-Cyclen, Estrostep, Ortho-cept, Alesse, Levlite and Ovcon எனப்பல பெயர்களில் விற்பனையாகும் இம்மாத்திரைகளால் சில ஒவ்வாமைகளும் ஏற்படுவதுண்டு. உதாரணமாக அதிகநேரம் சூரிய வெளிச்சத்தில் நிற்கும் பல பெண்களுக்கு தோலில் சிறிய கொப்பளங்களுண்டாகி பின்னர் அது மறைய பல வருடங்களாகும்.

எனவே கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவோர் வேறு ஏதாவது வருத்தங்களுக்காக வேறு எந்த மாத்திரைகளைப் பயன்படுத்துவதென்றாலும் மருத்துவ ஆலோசனையின் பின்னரே உட்கொள்ளவேண்டும். ஏனெனில் அம்மாத்திரைகள் கருத்தடை மாத்திரையின் பயன்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால் வேறு பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

2007 ஐப்பசியில் gene block birth control என்றொரு புதிய கருத்தடை முறை எலிகளில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. RNAi (RNA interference) மூலம் ஒரு gene ஐ செயலிழக்கச் செய்வதன் மூலம் விந்தும் முட்டையும் சேருவதைத் தடுக்கும் முயற்சியில் எலிகளை வைத்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. இம்முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார்கள் - ஆனாலும் மனிதர்கள் இந்த முறையைப் பின்பற்ற இன்னும் 10 ஆண்டுகள் எடுக்குமாம். கருத்தடை மாத்திரைகளால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகள் இந்த gene block ல் இல்லையென்று கூறுகிறார்கள். ஆனால் வேறுவிதமான பக்க விளைவுகள் தோன்றக்கூடுமாம்.

எனவே எடுத்ததுக்கெல்லாம் கருத்தடை மாத்திரைகளின் உதவியை நாடாமல் முடிந்தவரை "please deal with your period once a month" என்றுதான் எனக்கும் சொல்லத்தோணுது. சின்ன விசயங்களுக்காக இம்மாத்திரைகளைப் பாவிக்க வெளிக்கிட்டு உயிர்விடவேண்டாமே. வாழ்வை வாழ்ந்துதான் பார்ப்போமே.

Wednesday, January 16, 2008

வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும்

சாமத்தியச் சடங்கு வைக்கிறது நல்லதா கூடாதா ? அப்பிடி வைக்கிறது எங்கட கலாச்சாரமா இல்லையா? பாலச்சந்தர் படத்தில வாறது மாதிரி தேவதை போல அந்தரத்தில தொங்க விட்டு படமெடுக்கலாமா ? இப்பிடி எத்தனையோ பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கு. ஆனால் இந்த பூப்படைதல் என்றால் என்ன? அதன்மூலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுகிற உடல் உள மாற்றங்கள் பற்றிய அக்கறையும் அறிவும் எங்களில் எத்தனை பேருக்கிருக்கு?

யாராவது மகளுக்கு பூப்புனித நீராட்டுவிழா வைக்கிறம் என்று அழைத்தால் எந்தக்கடையில வாழ்த்து மடல் வாங்கிறது எப்பிடி வாழ்த்திறதென்றுதான் ஆராய்கிறார்கள் எங்கட அருமை அண்ணாக்கள் மாமாக்கள் சித்தப்பாக்கள். தெரிந்த நண்பர் ஒருவர் ஒருபடி மேல போய் தான் இப்படியான ஒரு நிகழ்வுக்குப்போனால் “can you demonstrate it please” என்று கேப்பாராம்.ஆக ஒரு பெண் பூப்படைதல் என்பது எல்லாருக்கும் ஒரு நகைச்சுவைக்குரிய விடயம் அப்படித்தானே?

பூப்புனித நீராட்டுவிழா வைப்பதன் அவசியம் பற்றியோ அல்லது அது எங்கட கலாச்சாரம் என்றதெல்லாம் எனக்குத்தெரியாது. ஒரு பெண் பூப்படைந்தால் அவள் திருமணத்துக்கு தயார் அல்லது தாயாகும் தகுதி அவளுடைய உடலுக்கு உண்டு என்று பறைசாற்ற இதை ஒரு குடும்ப நிகழ்வாக நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் புலம்பெயர் மக்களிடையே அது வெவ்வேறு காரணங்களுக்காக நடத்ப்படுகிறது. பெண் பூப்படைதல் என்பது banquet hall வைச்சிருக்கிறவை வீடியோ எடுக்கிறவைக்கெல்லாம் நல்ல வியாபார உத்தி.

ஆனால் அவையைச் சொல்லி என்ன செய்ய? நாங்கள் 20 000 செலவழிக்கத்தயாரா இருக்கிறதால தானே அவை புதுசு புதுசா உத்திகளை அறிமுகப்படுத்தினம். அது கலாச்சாரம் என்றதோ இல்லை ஒரு பெண்ணுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய சடங்கென்றதோ ஒவ்வொருவரின் நம்பிக்கையைப் பொறுத்தது. நிறையப் பரிசுப்பொருள் கிடைக்குமே அம்மா அப்பா இதுவரைக்கும் வேண்டித்தராமல் போனதெல்லாம் மற்றாக்களுக்கு படம் காட்டுறதுக்காகவே வேண்டித்தருவினம் என்ற ஆசையிலயே இங்கத்த சின்னனுகள் சாமத்தியவீடு செய்யறதெண்டால் ஏதோ படம் நடிக்கிற கணக்கில கற்பனை செய்யுதுகள். அப்பிடி கனவில இருக்கிறவைக்கு பூப்படைந்து முதல் ஒன்றிரண்டு மாதத்துக்கு சந்தோசமாத்தானிருப்பினம். பிறகுதானே hormone களின் ஆட்டம் புரியத்தொடங்கும். இப்ப கடைசியா சாமத்தியவீடு செய்யாமல் விட்டவைக்கெல்லாம் ஒரு அரிய வாய்ப்பிருக்கு. அதான் 16வது பிறந்தநாளை பெருசாக் கொண்டாடுறது.உங்களைக்குற்றம் சொல்லி என்ன பயன்?

10 வயசு வரைக்கும் உறவினர்கள் ஒன்றுகூடும் விடுமுறை நாட்களில் ஒன்டா basement ல நின்று விளையாடுற குஞ்சு குருமனெல்லாம் 9 வயசுக்குப்பிறகு தனித்தனி றூமுக்க நிண்டு விளைாயாடுதுகள். கேட்டால் இது “girls talk “ என்று பெட்டையளும் “boys’stuff” என்று பெடியங்களும் சொல்லுதுகள்.

எனக்கு 10 வயசில தெரிஞ்ச விசயங்களை விட இதுகளுக்கு பல மடங்கு தெரியும். ஆனால் முக்கியமாக தெரியவேண்டிய விசயங்கள் தெரியுறேல்ல. 10 வயசு பெடியனுக்கு PSB வேண்டி குடுத்திருக்கு. பெடியன் என்ன செய்யும் அறைக்குள்ள எல்லா மூலையிலயும் நிண்டு பார்ப்பான் எங்க wireless net connection கிடைக்குதெண்டு. பிறகு அந்த மூலைதான் அவன்ர குடியிருப்பு. பிறகென்ன 50 cent ன்ர äyo technology” , ”candy shop” என்று 24 மணித்தியாலயமும் PSP ம் கையுமாத்தான் திரியுறாங்கள். இதுகளைப் பார்த்து பார்த்து பெட்டையள் என்றாலே இப்பிடித்தான் treat பண்ணோனும் என்று அவங்களா ஒரு வரையறை போட்டு வைச்சிட்டு அதன்படி எல்லாத்தையும் பார்க்கிறது.

பள்ளிக்கூடத்தில பெண்களின் மாதவிடாய் சக்கரம் அது எப்பிடி நிகழுது அதால பெண்களுக்கு ஏற்படும் PMS (premenstrual symptoms ) போன்ற மூட் சம்பந்தமான விசயங்களைப் பற்றி ரீச்சர் சொல்லும்போது அவங்களுக்கு எப்பிடி கவனிக்கத்தோணும். தோணாது ஏனென்டால் மனசுக்குள்ள ஏற்கனவே குமைச்சல் இருக்கல்லா. அக்காக்கு மட்டும் 15000 டொலர் செலவளிச்சு சாமத்தியவீடு செய்தவை. எனக்கென்ன செய்தவை.பெட்டையளுக்கென்ன கஸ்டம் சந்தோசமாத்தானே இருக்கினமென்டிட்டு ஒன்று வெளிநடப்புச் செய்றது.

இப்பிடிச்சின்னன்ல இருந்தே பெண்களைப் புரிந்துகொள்றதென்றது தெரிந்தோ தெரியாமலோ புறக்கணிக்கபடுகிறது.இவை பிறகு வளர்ந்துவந்து திருமணம் என்ற பந்தத்தில் ஒரு பெண்ணோடு இணையும்போது அவள் என்னதான் நரகவேதனைப் பட்டாலும் பொருட்படுத்தமாட்டினம்.எல்லாருக்கும் வாறதுதானே என்ற அலட்சியம். சீன் போடுறாள் என்ற எரிஞ்சு விழுறது.இப்பிடி நிறையச் சொல்லலாம். சரி இதுக்கெல்லாம் உண்மையா என்ன காரணம்.


ஒரு பெண் சிசு கருவில் இருக்கும்போதே அவளுக்கு இரண்டு சினைப்பைகள் வளரும்.அவளுக்கு 9 -13 வயதுகளில் estrogen , progesterone என்ற இரண்டு hormone கள் சுரக்கத்தொடங்கும். அப்படி முதன் முதலில் சுரப்பதைத்தான் பூப்படைதல் என்று சொல்றம்.
சரி இதில எரிச்சல் விரக்தி வெறுப்பு வெறுமை இதெல்லாம் எப்பிடி வருதென்று கேக்கிறவர்கள் முதல்ல ovulation period ஐ விளங்கிக்கொள்ள வேணும்.மாதவிடாய்ச் சுழற்சியின் காலம் 28 நாள் முதல் 35 நாள் வரை. மனவுளைச்சல் நேரம் அதாவது அதிகமான கவலை சிந்தனை போன்ற எக்ஸாம் ரைம் அல்லது வேறு சில சந்தர்ப்பங்களில் இந்தச் சுழற்சிக்காலம் 15 நாளாகக் குறைவதுமுண்டு. பெண்களின் உடலிலுள்ள pituitary gland, Follicle secreting hormone (FSH) மற்றும் luteinizing hormone (LH ) போன்றவற்றைச் சுரக்கின்றது. முதல் 15 நாளும் FSH தான் அதிகமாகச் சுரக்கின்றது. 15வது நாள் LH அதிகமாகச்சுரக்கப்படும். அப்படி LH அதிகமாகச் சுரக்க்ப்படும் நாள் அல்லது அடுத்த நாள்தான் Ovulation நிகழ்கிறது.ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 20 சினை முட்டைகள் பெண்ணின் Ovaries ல் முதிர்ச்சியடைகின்றன. அப்படி முதிர்ச்சியடையும் முட்டையோடு fallopian tube ல் ஆணின் விந்து சேர்ந்தால் அது சிசுவாக வளர்கிறது. Ovary ல் இருந்து முதிர்ச்சியடைந்த முட்டை வெளியேறுவதைத்தான் Ovulation என்கிறோம். இந்த முட்டைகளின் ஆயுட்காலம் வெறும் 24 மணித்தியாலம் தான். ஆனால் ஆண்களின் விந்துவின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 7 நாட்கள். ஆணின் விந்து கிட்டத்தட்ட 7 நாட்கள் genital tract அதாவது பெண்ணின் vagina, uterus அல்லது fallopian tube ல் உயிருடன் இருக்கும். ovulation period ல் சினை முட்டையும் விந்தும் fallopian tube ல் சேர்ந்தால் கருவாக வளரும்.

அப்படி கருவாக வளரத் தொடங்கும்வரை Ovary ல் estrogen சுரப்பு அதிகமாகவிருக்கும். அப்படி estrogen அளவு கூடும்போது FSH ன் சுரப்பு குறைந்து LH ன் சுரப்பு அதிகமாகிறது.ஆனால் அதுவே கருவாக வளரத்தொடங்கிவிட்டால் estrogen அளவு குறைந்து progesterone ன் அளவு அதிகமாகும்.கருப்பைச்சுவர் பலமானதாக இருந்தால்தான் கரு தங்கியிருக்க முடியும் எனவே கருப்பைச்சுவர் பலமுடையதாக progesterone ன் அளவு அதிகமாகத் தேவைப்படுகிறது. அப்படி முட்டையும் விந்தும் சேராத போது முட்டைகள் கருப்பைச்சுவரில் பதிந்து இரத்தத்துடன் வெளியேறிவிடும். அப்படி கருவாக உருவாகாதபோது progesterone ன் அளவு குறையும். அவ்வாறே பிரசவத்திற்கு பின்னரும் progesterone ன் அளவு குறையும்.அதனாலும் விரக்தி வெறுமை எரிச்சல் எல்லாம் ஏற்படும்.அதைத்தான் postpartum depression என்று சொல்றம்.

இப்படி progesterone, estrogen Follicle secreting hormone (FSH) மற்றும் luteinizing hormone (LH) ன் அளவு கூடிக்குறையும் நேரத்தில் பெண்களின் குணமும் ஒரு நிலையில்லாமல் மாறிமாறி பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாகவே இருக்கும்.அதைப்புரிந்து கொள்ளாமல் கோவக்காரி கொம்பறிமூக்கன் என்று பட்டம் சூட்டி என்ன பிரியோசனம்? ரத்தப்போக்கு, அடிவயிற்றில் மார்பகங்களில் பாரம், வலி, சோர்வு இப்பிடி உடல் உபாதைகள் மாறிமாறி வந்தால் மனம் என்ன செய்யும்?

இயலாமையில் தன்மீதான எரிச்சல், கூட இருக்கிறாக்கள் மேல பரவும்.அமைதியா இருக்கமாட்டாமல் எல்லாத்துக்கும் எரிஞ்சு விழுறது. கடைசில மனக்கவலையைக் கூட்டிப்போட்டு சின்ன சின்ன விசயம் எல்லாத்தையும் பெரிசா பூதாகரமாக்கி யோசிச்சு உடன அழவேண்டியது. திடீர் திடீரென்று அழுதால் பார்க்கிறாக்களுக்கு விசித்திரமா இருக்கும்.உணர்ச்சிகள் கட்டுப்பாடில்லாம தாறுமாறா வெளிப்பட துடிக்கும். தன் மேலயும் கோபம், கூட இருக்கிறாக்கள் மேலயும் கோபம்.என்ன நடக்கும் என்ன செய்யிறம் என்று தெரியாமல் கொலை கூட நடக்கலாம். கூட நடக்கலாம்.எங்கயோ கொலைக்கான காரணம் இப்படியான hormone imbalance என்று குற்றவாளிக்குச் சாதகமாக தீர்ப்புகூடச் சொல்லப்பட்டதாம் ஒரு கொலைவழக்கில்.

அதனால இப்படிப் பெண்களை வன்முறையாளராக்காமல் பெண்களின் கோபத்தை விரக்தியை வெறுமையைப் புரிந்து கொள்ளுங்கள். முடிந்தால் ஆதரவாய் இருங்கள். இல்லையெண்டால் விலகியிருங்கள்.அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்தால் எந்த வலியையும் தாங்கிக்கொள்ள முடியும்.அப்படி ஆதரவு கிடைக்காதபோது தங்கள் கடமைகளை உரிய நேரத்தில் செய்து முடிப்பதற்காக சில பெண்கள் Lybrel , Seasonique போன்ற மாத்திரைகளை உட்கொண்டு இயற்கையாக நிகழும் மாதவிடாய்ச்சுழற்சியை ஒரு வருடத்திற்கொருமுறை அல்லது சில மாதங்களுக்ககொருமுறை நிகழும்படி கட்டுப்படுத்த முயன்று அதன் விளைவாக தங்கள் உயிரையே விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எனவே இன்றைய அம்மாக்கள் உங்கள் மகன்களுக்கு சின்ன வயசில இருந்தே அக்காவை தங்கையை இந்த 5 நாள்ல தொந்தரவு பண்ணாத என்றும் அதற்கான காரணத்தை முடிந்தளவு சொல்லியும் வளர்த்தால் பிற்காலத்தில உங்கட மகன் நல்ல ஒரு கணவனாக மனைவியைப் புரிந்துகொள்ளக்கூடியவனாக தன் மகளுக்கு நல்ல தந்தையாக இருப்பான்.

Tuesday, January 15, 2008

வடுக்கள் வலிகளாய் - வன்முறையாய்

அம்பா : அங்க பார் தீபன் அந்த மரத்துக்கு கீழ தனிய இருக்கிறான். பாவம் அவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெடியனாம்.அதான் அவன் எப்பவும் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கிறவன் போல.

ஆதிரை: என்ன வித்தியாசம்? எல்லாரயும் போலத்தானே இருக்கிறான். எனக்கொரு வித்தியாசமும் தெரியேல்ல.

அம்பா: நீ எப்பதான் மற்றாக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறாய்? சுயநலவாதிகளுக்கெல்லாம் மற்றாக்களின்ர கண்ணிலயும் குரலிலயும் இருக்கிற வலி தெரியாது. அவனை வடிவாப்பார். எப்பவும் ஏதோ பெருசா துன்பம் நடக்கப்போற மாதிரியும் அதை அவன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற மாதிரியும் இருக்கிறான் பார். அவன்ர அறையில சாமம் சாமமா எப்பவும் லைற் எரிஞ்சுகொண்டேதானிருக்கும்.அவன் நித்திரையே கொள்றேல்ல என்று நினைக்கிறன். மற்ற பெடியங்களைப் போல இல்லாமல் அவன் எப்பவும் ஒரு பெரிய சோகத்தை சுமக்க முடியாமல் சுமந்துகொண்டிருக்கிறான் என்று நான் அப்பவே நினச்சனான்.

ஆதிரை: ஆமா யாருக்குத்தான் சோகம் இல்லை. எனக்கில்லையா? உனக்க்குத்தானில்லையா?? உனக்குள்ள ஆயிரம் சோகங்களையும் கேள்விகளையும் ஏக்கங்களையும் விருப்பங்களையும் வச்சுக்கொண்டு ஏண்டியிப்பிடி யாற்றயும் பிரச்சனைகளை உன் தலையில போட்டுக்கொண்டு நீயும் மண்டை காஞ்சு கூட இருக்கிறாக்களையும் குழப்புறாய்?

அம்பா: என்ர பிரச்சனைகள் எல்லாமே சின்னச் சின்ன பிரச்சனைகள் இப்ப இல்லாட்டி எப்பவாவது ஒருநாளைக்கு இல்லாமல் போயிடும். ஆனால் தீபன் போன்ற பெடியங்களுக்கு இருக்கிற பிரச்சனைகளோடு ஒப்பிடேக்க எங்கட சின்னச் சின்ன கவலையெல்லாம் ஒன்றுமேயில்ல ஆதிரை.

நேற்று நான் volunteer வேலை செய்யுற இடத்துக்கு கடைசியா வந்த file அவன்ரதான். அவன் என்ர ஒரு வகுப்பில இருக்கிறபடியால் அவன் எப்பிடி வகுப்பிலயும் வெளிலயும் நடந்துகொள்றான் என்று அவனுக்குத்தெரியாமல் கவனிக்கச் சொன்னவா என்ர சீனியர்.அவன் 8 வயசில இருந்து 13 வயசு வரைக்கும் அவன்ர அப்பாவால பாலியல் ரீதியில துன்புறுத்தப்பட்டிருக்கிறான். அவன்ர testimony ஐ வாசிச்சு நான் அழுதிட்டன். அவன்ர அப்பா மட்டும் என் கையில கிடைச்சார் அவ்வளவுதான்.

ஆதிரை : முதல் அவன் testimony ல என்ன சொல்லியிருக்கிறான் என்று சொல்லு.

அம்பா : தீபனுக்கு அவன்ர வீட்டில எந்தவிதமான கவனிப்பும் கிடைக்கேல்ல. அப்பா அம்மான்ர தாம்பத்ய வெற்றியை வெளிக்காட்ட பிறந்த அண்ணா மேலதான் எல்லாருக்கும் பாசம். அண்ணாக்கு விளையாட ஒரு பொருளா தன்னை உருவாக்கினது போல அவன் உணர்த்தப்பட்டிருக்கிறான் பல சந்தர்ப்பங்களில்.அம்மான்ர பரிவுக்கும் அப்பான்ர அணைப்புக்கும் ஏங்கி ஏங்கித் தவிப்போடயே அவன் பல நாட்களில் நித்திரை கொண்டிருக்கிறான்.

அவனுக்கு எட்டு வயசிருக்கும்போது அவன்ர மென்மையான வெண் தோல் அவனுடைய தந்தைக்கு அவன் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கு.பொதுவாவே சிறுவர்களை பாலியல் கொடுமைக்குள்ளாக்கும் மனித வல்லூறுகள் தேர்ந்தெடுக்கும் சிறுவர்களின் மெல்லிய தோல் கொண்டவர்களாகவும் ஏதோ ஒன்றை வாழ்வில் இழந்தவர்களாகவும் ; அதாவது அன்பை , பாதுகாப்பை , அழகை , துணிவை , உடல் பலத்தை , மன பலத்தை இழந்தவர்களாகவும் இருப்பார்கள். அப்படி அவர்கள் ஏங்கும் ஒன்றை வழங்குபவராக ஒருவர் அவர்களை நெருங்கும்போது எந்தவிதத் தயக்கம் யோசனை எச்சரிக்கையுணர்வு எதுவுமின்றி இந்தச் சிறுவர்கள் அந்த வல்லூறுகளிடம் ஒட்டிக்கொள்வார்கள்.

இதுதான் தீபனுக்கும் நடந்தது. அன்புக்காக ஏங்கிய அவன் அப்பா தன்னிடம் திடீரென்று அன்பாய் நடந்துகொள்ளத்தொடங்கவும் அப்பாக்கு தன்னில் உண்மையாகவே அன்பு வந்துவிட்டதாக எண்ணி அப்பாவின் சின்ன சின்னத் தொடுதல்களையும் உரசல்களையும் ஏற்றுக்கொண்டான். அப்படித்தான் ஒருநாள் தீபனை மஸாஜ் செய்துவிடும்படி தந்தை கேட்கவும் தீபனும் தயங்காமல் அப்பா வேலைக்குப்போய் விட்டு வந்திருக்கிறார் பாவம் என்று மஸாஜ் செய்துவி்ட்டிருக்கிறான்.அன்றுதான் முதன்முதலாக அந்த பாலியல் கொடுமை அவனுக்கு நடந்திருக்கிறது. அதன்பிறகு பல தடவைகள். அப்பா மஸாஜ் பண்ண தீபனைக் கூப்பிட்டாலே அது எதற்கான அழைப்பென்று அவனுக்குத்தெரியும். சின்னச் சின்ன சேட்டைகளில் தொடங்கிய பாலியல் துஷ்பிரயோகம் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது.அவன் வலிபொறுக்க முடியாமல் அழுதபடியே தன் தந்தையிடம் கேட்டிருக்கிறான் ஏனப்பா என்னை இப்பிடிக் கொடுமைப்படுத்துறீங்கள்.அதற்கு அவன் தந்தை சொன்ன பதிலைக்கேள்:

• உன்ர அம்மா தாற இன்பம் எனக்குக் காணாது
• மற்றது இதுவும் உனக்கு ஒருவிதமான கல்விதான்.
• இது ஒரு பெரயி விசயமேயில்லை. எல்லா இடத்திலயும் நடக்கிறதுதான்.

இப்படிச் சொன்னது அவன்ர அப்பா. அப்பா சொல்றதை அந்த வயசில எந்த மகனுமே நம்புவான். அவனும் நம்பினான். அப்பா சொல்றது பொய் என்று எப்பிடிடி அவனுக்குத் தெரியும்? பக்கத்துவீட்டில அப்பிடி நடக்கேல்ல என்று அவனுக்கு எப்பிடித் தெரியும்? செக்ஸ் என்றாலே பரமரகசியம் மூடுமந்திரம் என்ற வர்ணனையில் இருக்கும்போது இன்னும் பல தீபன்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கப்போறாங்கள். அவன் ஒரே ஒரு முயற்சி செய்திருக்கிறான். ஏதொ ஒரு சந்தர்ப்பத்தில் தன் தாயிடம் “அப்பாவுக்கு இன்னும் கூட செக்ஸ் குடுங்கோம்மா “என்று சொல்லியிருக்கிறான். 10 வயசுப்பையனுக்கு செக்ஸ் ஐப்பற்றி என்ன தெரியும் என்ற அலட்சியம். மகன் ஏனிப்படிச் சொல்கிறான் என்று அந்தத் தாய்க்கு ஏன் யோசிக்கத்தோணேல்ல? அந்தத்தாய் ஒரு நிமிசம் தீபன் ஏனப்படிச் சொன்னான் என்று யோசித்திருந்தால் அன்றைக்கே அவன் பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து காப்பற்றப்பட்டிருப்பான்.

ஆதிரை: அப்பாமாரும் சித்தப்பாமாரும் அண்ணன்மாரும் சொந்தக்காரரும் அறிவுகெட்டத்தனமா தங்கட ரத்த உறவுகளையே பாலியல் கொடுமை செய்யுறதுக்கு நீயேன் அம்மாமாரைத் திட்டுறாய்?

அம்பா: அப்பிடியில்லை ஆதிரை. எவ்வளவுதான் பரிணாமவளர்ச்சியடைந்நதிருந்தாலும் இன்னமும் எங்களைச் சுத்தி இப்படியான கொடுமைகள் நடந்துகொண்டுதானே இருக்கு. இதுக்கு யார் காரணம். நாங்கள்தான் காரணம். நாங்களேதான்.
சின்னப்பிள்ளைகள் பொக்கிசம். குழந்தைப்பிள்ளைகள் பொய் சொல்லாதுகள். குழந்தைப்பிள்ளைகள் ஒன்று சொன்னால் அது கடவுளே வந்து சொன்னமாதிரி என்று சொல்றம் : ஆனால் ஒரு பிள்ளை போய் தன்ர அம்மாட்ட “அம்மா அப்பா என்னை இப்பிடித்தொட்டவர் . அப்பிடிச் சொன்னவர் ;செய்தவர் “என்று சொன்னால் அந்தத்தாய் தன்ர பிள்ளை சொல்றதை நம்புவாவோ இல்லாட்டி “நீ சொல்றதுண்மையா? ஏனிப்பிடி பொய் சொல்றாய்? எந்தப்படத்தில பார்த்தனி ? இந்த வயசிலயே இப்பிடி முத்திப்போய் நிக்கிறாய்” என்று கன்னத்தில இரண்டு போடுவாவோ? ஒருசில தாய்மாரைத் தவிர மிச்ச எல்லாரும் பிள்ளை சொல்றதை நம்புறேல்ல. கேட்டுக் கேள்வியில்லாம பிள்ளையை பொய்காரன்/காரியாக்கிப்போடுவினம். அப்ப அதுக்குப்பிறகு அந்தப்பிள்ளைக்கு எப்பிடி தன்னம்பிக்கை வளரும்?? தான் சொல்றது உண்மையா என்று அதுக்கே சந்தேகம் வரும். தனக்குள்ளே குழம்பி ஒரு முடிவுக்கு வரேக்க அப்பா மேல மட்டுமில்ல அம்மா மேலயும் சேர்த்துத்தான் கோபம் வெறுப்பு எல்லாம் வளரும். அந்த வெறுப்புத்தான் பிறகு காதலி மனைவி என்று வாழ்க்கையில சந்திக்கிற அத்தனை பெண்களிடமும் தொடரும்.

அடுத்தது எங்கட சட்டமும் அதிகாரிகளும். பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய ஒரு வழக்குகளை எடுத்துப்பார். 100 வழக்கு நடந்தால் அதில எத்தின வழக்கில் மனதி வல்லூறுகளுக்கு தண்டனை கிடைக்குது. சரியான சாட்சியம் இல்லை என்று எத்தனை வல்லூறுகள் திரும்ப வந்து மீண்டும் சிறுவர்களைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருக்குதுகள் என்று யோசிச்சுப்பார். இதில கொடுமை என்ன என்றால் வழக்கு என்று போனாலே பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட சிறுவர்கள் மீண்டுமொரு முறை வழக்கு என்ற பெயரில் மீண்டும் உளரீதியில் காயப்படுத்தப்படுவது தான். எதிர்த்தரப்பு வக்கீல்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாகப் பதில் சொல்லமுடியாது தெரிந்தவர்கள் முன்னிலையிலும் உறவினர்கள் முன்னிலையிலும் இவர்கள் படும் அவஸ்தையிருக்கே. அந்த அவஸ்தை அவர்கள் சாகும்வரை அவர்களை விட்டு விலகுவதில்லை. இவர்களில் ஒருசிலர்தான் தங்கள் உள்மனதுடன் போராடி வெற்றிபெறுகிறார்கள்.

ஆண்கள் அழமாட்டார்களாம் ஆதிரை. ஏன் அவைக்கு கண்ணீர்ச்சுரப்பியில்லையா? ஆண்கள் அழுவதில்லை. அவர்கள் பிறப்பிலேயே மனசாலும் உடலாலும் பலமுள்ளவர்கள் என்றொரு முகமூடியைச் சிறுவனாக இருக்கும்போதே போட்டு விட்டாச்சு. ஆண்களுக்கு பிரச்சனைகளே வராது அப்பிடியே வந்தாலும் அவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கக்கூடாது தாங்களாகவே சமாளிக்கப்பழகவேணும் என்றெல்லாம் சொல்லிவச்சா இப்பிடி பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும்போது அதை அவர்கள் எப்பிடி வெளியே சொல்வார்கள்?? எப்பிடி மற்றவர்களின் உதவியை நாடுவார்கள்?? அப்பிடியே ஒருசிலர் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியே சொன்னாலும் இருக்கவே இருக்கு ஒரிசனச்சேர்க்கையாளர் என்ற லேபிள்.

எங்கள் சமுதாயம் இப்படி இருக்கும்போது தீபன் போன்றவர்கள் யாரிடம் போவார்கள் சொல்? தீபன் போன்ற சிலர்தான் தங்களுக்கு நடந்தது பாலியல் கொடுமைதான் என்று புரிந்துகொண்டு தாங்களாகவே எங்கட போன்ற சமூகநல நிறுவனங்களிடம் தங்கள் உள்ளக்கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் தன்னுள்ளே எல்லாத்தையும் பூட்டி வச்சிருக்கிற ஒரு சிலர்தான் மீண்டும் தாங்களே இன்னொரு சிறுவனைப் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆதிரை : இப்ப நீ என்ன சொன்னனீ? பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான ஆக்கள் எப்பிடி இன்னொராளைக் கொடுமைப்படுத்த முடியும்? தங்களுக்கு ஏற்பட்ட வலிதானே மற்றாக்களுக்கும் வருமென்று தெரியும்தானே?

அம்பா : ம் தெரியும்தான். இது ஒருவிதமான குரூரம். குரூரம் என்றும் சொல்லேலாது. தான் பட்ட துன்பத்தை இன்னொராளிட்ட இறக்கி வைக்கிறதெண்டு சொல்லலாம். அதாவது நான் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவன். அதனால என்ர உடம்பில இருந்தும் மனசில இருந்தும் எதையோ இழந்திட்டன். அப்பிடி நான் இழந்ததைத் திரும்ப பெற ஒரே வழி நான் abuser மாறி நானொரு victim ஐத் தேடி அந்த victim ஐ பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குவதன் மூலம் நானிழந்ததை திரும்பப் பெறலாம் என்ற எண்ணம்.

ஒரு சிலர் தங்களுக்கு இப்பிடி நடந்ததற்கு விதிதான் காரணமென்றும் மற்றும் சிலர் தாங்களே abuser ஆக மாறிப்போக இன்னும் சிலர் தங்களைச் சாதாரணமானவர்களாக மற்றவர்களிடையே காட்டிக்கொள்ள பெரும்பாடு படுவார்கள். இவர்கள் எப்பவும் பெண்களைப் பற்றியே நினைத்துக்கொண்டும் கதைத்துக்கொணடும் இருப்பார்கள்.எங்கே தங்களை ஒரினச்சேர்க்கையாளர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் சதா செக்ஸ் ஐப்பற்றியே சிந்தித்துக்கொண்டு இறுதியில் செக்ஸ் ஐயே தொழிலாக்கிக் கொள்ளுவார்கள். இவர்கள்தான் male prostitute ஆகவும் male striper ஆகவும் உருவாகிறார்கள்.இன்னும் சிலர் தங்களை ஓரினச்சேர்க்கைாயாளராக அடையாளப்படுத்த விரும்பாமல் பெண்ணைத்திருமணம் செய்துகொண்டு சமுதாயத்தின் கண்ணுக்கு இருபால்சேர்க்கையாளராகவும் ரகசியமாக ஒரினச்சேர்க்கையிலும் ஈடுபடுவா்கள்.

ஆதிரை : இப்பிடி எல்லாத்தையும் தெரிஞ்சுவைச்சுக்கொண்டு ஏன் தீபனைக் கண்காணிக்கணும் அவனோட கதைக்கோணும் பழகோணும் என்றாய்?

அம்பா: ஆதிரை எல்லோரும் பழிக்குப்பழி இரத்தத்துக்கு இரத்தம் என்றா இருக்கிறார்கள். ஒருசிலர் விதிவிலக்கு. அப்படியான பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான ஒரு சிலர்தான் எங்கட volunteer center போல பல சமூக நோக்கங்கொண்ட நிறுவனங்களை உருவாக்கி நடத்துகிறார்கள்.

ஆச்சரியமா இருக்கா ஆதிரை ? தங்கட வாழ்வில நடந்தது போல மற்றாக்களுக்கு நடக்கக்கூடாதென்றதுக்காகவும் தங்கட அப்பாவைப்போலவோ அல்லது எந்ந abuser ஐப்போலவும் இன்னொரு சிறுவனின் வாழ்வை யாரும் பாழாக்கக்கூடாதென்றதுக்காகவும் இப்படியான center ஐ நடத்துகிறார்கள். முக்கியமாக தீபன் போன்ற victims மனம் திறந்து உண்மைகளைச் சொல்லும்போது அதன் உண்மைத்தன்மையை உணர்ந்துகொள்ள இப்படியான அமைப்புகளை அமைத்து நடத்துபவர்களும் ஒருகாலத்தில் victims தான் ஆனால் இன்று survivors. ஒருநாள் தீபனும் survivor ஆவான்.

ஆதிரை : அம்பா நாளைக்கு எனக்கும் ஒரு application எடுத்துக்கொண்டுவா. நானும் உங்கட volunteer center ல் சேரப்போறன்.

அம்பா: கட்டாயம் ஆதிரை .இப்ப வகுப்புக்கு போவம் நேரமாச்ச.

================================================================================
தொடர்புள்ள பதிவுகள்:
நெசமாத்தான் சொல்றியா?

Paul ன்ர கதையை எப்பிடிச் சொல்றது?

Paul ன்ர கதை II

Monday, January 14, 2008

வளரும் பயிர்கள் வாடாதிருக்க ...

குழந்தைப்பருவம் ,பதின்மம் ,முதுமை இப்படி எல்லா வயதிலும் இன்னொரு மனிதனின் அன்பு ,பாசம், நேசம் ,ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. அம்மாவாக, அப்பாவாக, சகோதரமாக, நண்பனாக, வாழ்க்கைத்துணையாக இப்படி ஏதோ ஒருவடிவில் எல்லாமனிதனும் பல சந்தர்ப்பங்களில் இன்னொருவரின் துணையை எதிர்பார்க்கிறான். அன்புக்காக ஏங்குகிறான்.அது உரிய நேரத்தில் கிடைக்காது போனால் சமூகத்துக்குப் பயன்படாதவனாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிவனாக கொடியவனாக மூர்க்கனாக மாறுகிறான். எல்லாரும் எங்களை நேசிக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறோம். யாருமே கெட்டவனாக வேண்டுமென்று தவமிருப்பவதில்லை.ஆனால் இன்று யுத்தபூமியில் பிறந்து சித்திரவதைகளையும் இரத்தக்காயங்களையும் பார்த்து அனுபவித்து மரணத்தின் வாசத்தை சுவாசித்து பசி பட்டினியோடு வாழும் நம் சிறார்கள் நாளை வன்முறை நிறைந்தவர்களாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் தோன்றுகிறது.குண்டு, செல், துவக்கு, இரத்தம், தசைப்பிண்டங்கள், சடலங்கள், பசி, பட்டினி இவையெல்லாம் இந்தச் சிறார்களின் தினசரி வாழ்வின் அங்கங்களாக உள்ள இந்த நிலை இவர்களுக்குப் பழகிப்போனால் உயிரிழப்புகள் இனி இவர்களைப் பெரிதாகப் பாதிக்காமல் போய்விடில்......???????

வீட்டில் பசியால் துடிக்கின்ற பிள்ளைகளுக்காக வரிசையில் நின்று அரிசி கிடைத்தவரிடமிருந்து அதைக் கிடைக்காதவர் அடித்துப் பறித்துக்கொண்டதை நாங்கள் செய்தியாகப் படித்திருப்போம். மற்றவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும், குடும்பமிருக்கும் அவர்களுக்கும் பசியிருக்கும், வலியிருக்கும், உணர்வுகளிருக்கும் என்று சிந்திக்கத்தெரிந்த பெரியவர்களுக்கே இந்த நிலமை என்றால் சிறுவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? பிறந்ததிலிருந்தே இந்தச்சிறுவர்களால் கைதுகளும், காணாமல் போதலும், ஆட்கடத்தல்களும், ஆயுதப்பிரயோகங்களும், பாலியல் வல்லுறவுகளும், உயிரிழப்புகளும்தான், ஐம்புலன்களிலும் உணரப்படுகிறது. ஆசையாகக் கதைசொல்லிச் சோறூட்ட அம்மா இல்லை. அரவணைக்க அப்பா இல்லை.கூட விளைாயட சகோதரர்களுமில்லை, நண்பர்களுமில்லை. குதூகலிக்க உறவினர்களுமில்லை. சத்தான சாப்பாடில்லை. உறங்கிப்போக உரிமையுள்ள வீடுமில்லை. இப்பிடி ஆரோக்கியமாக வளரவேண்டிய பிள்ளைகளுக்குத் தேவையான எதுவுமில்லாமல் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வாழும் சிறுவர்கள் செய்த தவறுதான் என்ன? அவர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்ப்போகிறது? கண்களில் சோகத்தைச் சுமக்கும் இந்தச்சிறுவர்களின் மனங்களில் ஆயிரம் கேள்விகள், ஏக்கம், கோபம்,விரக்தி, வெறுப்பு.அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பி ,தங்கை ,அயலவர் ,உறவினர் இப்படி கண் முன்னாலே கொல்லப்பட்டவர்களின் கடைசி அலறல்களையும் அவலங்களையும் இன்னும் முதல்தடவையாக உணர்பவர்களாக காட்சியளிக்கும் இந்தச்சிறார்களின் மனங்களில் யுத்தத்தின் வடுக்கள் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது. இதன் மறைமுகப் பாதிப்புகள் நமக்கு இப்போது விளங்காவிட்டாலும் இதன் நீண்டகாலப்பாதிப்புகள் நாமெண்ணிப் பார்க்காத அளவுக்கு கொமடூரமானதாகவும் இருக்கலாம். இவர்களுக்கு உளவியல் பயிற்சிகள் இப்போதிருந்தே அளிக்கப்பட வேண்டும். இல்லையேல் ஒரு வன்முறை நிறைந்த சமுதாயத்தை வரவேற்பவர்களாகிவிடுவோம் நாங்கள்.

10 வயதிலெல்லாம் நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? நிச்சயமாக இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாக தந்தையாகவிருக்கவில்லை. தாய் தந்தை இருவரையும் போரில் அல்லது சுனாமியில் தொலைத்துவிட்டு தன்னிளைய சகோதரர்களுக்கு குளிப்பாட்டி, உணவூட்டி, பாடசாலைக்கு அனுப்பிவிட்டுப் பின்னர் வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை.எதற்கும் அம்மாவை அப்பாவை எதிர்பார்த்துக்கொண்டும், செல்லம் கொஞ்சிக்கொண்டுமிருக்கும் விளையாட்டுத்தனமாக இருக்கவேண்டிய 10 வயதில் ஒரு தாயின், தந்தையின் கடமைகளைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்று எத்தனையோ சிறுவர்கள் இருக்கிறார்கள். ஆதரவு தேவைப்படும் நிலையிலிருக்கும் இந்தச்சிறுவர்கள் ஆதரவு வழங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறார்கள்.இந்தச்சுமை அவர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தப்போகிறது?

ராமேஸ்வரம் படத்தில் ஒரு காட்சியில் சிறுவர்கள் சிலர் "ஆமி - புலி " விளையாட்டு விளையாடுவினம். "நாங்கள் புலி இவங்கள் ஆமி ; இது எங்கட machine gun" ஒருவன் துரத்திக்கொண்டுபோய் சுட மற்றவன் துடிதுடித்துச் சாவது போல் அவர்களது விளையதட்டுத் தொடரும்.போர் இவர்களின் வாழ்வில் ஊறியிருக்கு.இது இன்று நேற்றல்ல சில தசாப்தங்களாகவே துவக்கு செல் குண்டுச்சத்தம் டாங்கி பீரங்கி இவைகளெல்லாம் சிறுவர்களின் விளையாட்டில் முக்கிய அங்கம் பெற்றுவிட்டன. 93ம் ஆண்டென்று நினைக்கிறன். சாவகச்சேரியில் மாமா வீடு செல்களால் சல்லடையாக்கப்பட்டு வீட்டில் தனித்திருந்த மாமாவைப் பொறுக்கித்தான் கட்டி வைத்திருந்தார்கள். அன்றிலிருந்தே மச்சானின் விளையாட்டுப் பொருட்களில் அவன் பொறுக்கி வைத்திருந்த சன்னங்கள் தனித்துவமானவை.அவன் அந்தச் சன்னங்களை வைத்து நிறைய வித்தைகள் காட்டுவான். மாலைகூடக் கட்டி வைச்சிருந்தான் ஒரு விடுமுறையில். சிறுவர்களின் விளையாட்டு இப்படி இருக்கையில் சிறுமிகளின் விளையாட்டு எப்படியிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.....பலாத்காரத்துக்குள்ளான ஒரு பெண்ணின் நிலையைப் பிரதிபலிப்பதாக இருக்குமோ இச்சிறுமிகளின் விளையாட்டு? கணவனை பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாயின் அவலநிலையைக் காணலாமோ இவர்களின் விளையாட்டில்? பசியில் அழும் குழந்தையின் கண்ணீரை விரட்ட வழிதேடும் தாயின் போராட்டமா இருக்குமோ? அல்லது படிக்க முடியாமல் பல நாளும் பூட்டியிருக்கும் பாடசாலையை வெறித்துநோக்கும் மாணவியின் விரக்தியைக் காட்டுவதாக இருக்குமோ?

அடிக்கடி குண்டுவெடித்து மனிதர்கள், வீடுகள், வாகனங்கள் சிதறுவதையும், கொலைகளையும், கொள்ளைகளையும், பலாத்காரங்களையும், காட்டிக்கொடுத்தல்களையும், பார்த்தும் கேட்டும் அனுபவித்தும் வளர்ந்தவர்கள் ஒருநாள் இவற்றிலிருந்து விடுபட்டு எங்களைப்போல புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் பாடசாலைக்குச் செல்லும்போது அல்லது வேலைக்குச் செல்லும்போது ஒரு சின்னச் சத்தம் கூட இவர்களுக்கு பலமான அதிர்வை ஏற்படுத்தக்கூடும்.உதாரணமாக விக்டோரியா தினம், புத்தாண்டு தினம், கனடா தினம் போன்றவற்றுக்கு நாங்கள் வெடிக்கும் வாண வேடிக்கைகளின் சத்தம் கூட ஆட்லறி செல் சத்தமாகக் கேட்கக்கூடும். பாடசாலையில் படிக்கும் பாடங்கள் விளங்காமல் காதில் குண்டுச்சத்தமும் அவலக்குரல்கள் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கலாம்.பயங்கரமான கற்பனைகள் எண்ணங்கள் தான்தோன்றித்தனமாக உருவாகலாம். வெளிப்பார்வைக்கு அமைதியா இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு எரிமலை வெடிக்கமுதல் எப்படி தீக்குழம்புகள் கோரநாக்கை நீட்டிக்கொண்டிருக்குமோ அப்படியிருக்கலாம் இவர்களின் மனசு. ஒருநாளைக்கு வெப்பம் தாங்காமல் வெடித்துச்சிதறக்கூடும் இவர்கள். இவன்கள் மற்றவர்களின் பார்வைக்கு ஒரு gangster ஆகத் தென்படலாம். ஆனால் இவர்களுடைய வன் செயல்களின் ஆரம்பப்புள்ளி நெல்லியடியின் ஒரு மூலையில் ஒரு இராணுவச்சிப்பாயின் பாலியில் இச்சையின் வடிகாலாயிருக்கலாம்.அல்லது கண்முன்னே தன் தாயோ சகோதரியோ கதறக்கதற பலாத்காரப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கபட்டவன் தான் ஒரு abuser ஆவதன் மூலம் தானிழந்த ஏதோ ஒன்றைத் திரும்பப் பெற துடிப்பது போல இந்தச்சிறுவர்களும் பிற்காலத்தில் ஒரு வன்முறையாளனாக வல்லுறவு கொள்பவனாக மாறலாம்.

இந்தச்சிறார்கள் அனைவருக்கும் உளவியல் நிபுணர்களின் உதவி மிக மிக அவசியமானதொன்று. உளவியல் நிபுணர்கள் என்றால் பைத்தியத்தைக்குணப்படுத்துபவர்கள் அவர்களின் உதவி எங்கள் குழந்தைகளுக்குத் தேவையில்லை என்பது பலரின் எண்ணமாக இருக்கலாம். ஆனால் கண்முன்னால் நடந்த கொடூரங்களைப் பார்த்து பார்த்து வளர்ந்த இந்தச் சிறுவர்கள் epilepsy , mild seizure, multiple personality disorder, split personality, antisocial personality , anxiety disorders, sleeping disorders போன்ற psychological அல்லது neurlogical disorders களால் பாதிக்கப்படக்கூடியவர்களாக, ஆக்ரோசம் நிறைந்தவர்களாக, பழிவாங்கும் உணர்ச்சி நிறைந்தவர்களாக, போதைப்பொருட்களுக்கு அடிமையாகக்கூடியவர்களாக உருவாகிவிடாமல் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது.தற்போதைய காலகட்டத்தில் பண உதவி மட்டுமே வழங்கக்கூடியபோதும் புலம்பெயர் நாடுகளிலுள்ள உளவியல் நிபுணர்களிடமிருந்து இந்தச்சிறுவர்களுக்கு உதவக்கூடிய சிகிச்சை முறைகள் பற்றிய ஆவணங்களைப் பெற்று ஈழத்திலுள்ள உளவியல் நிபுணர்களுக்கு வழங்குவதன் மூலம் அங்குள்ள உளவியல் நிபுணர்களை ஊக்குவிக்கலாம்.அரசாங்க உதவிகளும் தேவையான மூலங்களும் (resources ) ம் இல்லாதபோது மாற்றுவழிகளைக் கண்டறியவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். மருந்துகளை விட இந்தச் சிறுவர்களுக்கு அத்தியாவசியமானது அன்பும் அரவணைப்பும்தான்.எனவே ஆதரவில்லாத குழந்தைகளுக்கு அதை வழங்குவதன் மூலம் அவர்களை உளவியல் தாக்கங்களிலிருந்து மெதுவாக மீட்டெடுக்கலாம்.குழந்தை இல்லாதவர்கள் ஆதரவு வேண்டிநிற்கும் இந்தச்சிறார்களுக்கு பெற்றோராகலாம். முகம்தெரியாத ஒரு குழந்தையை மானசீகமாகப் பிள்ளையாக தம்பியாக தங்கையாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான பண உதவியை வழங்குவதே இப்போது நாம் செய்யக்கூடியதாகவுள்ளது.மாதமொரு அன்பான விசாரிப்புகள் அக்கறை அடங்கிய ஒரு கடிதம் ஒரு தொலைபேசி அழைப்பு சாப்பிட்டியா என்ற ஒரு சொல் இவைகளே அவர்களின் மனச்சிதைவைப் பாதியாகக் குறைத்துவிடும்.

பொதுவாக மனவழுத்தம் மனவிறுக்கம் போன்றவை தொடக்கம் பாரிய மனச்சிதைவால் அவஸ்தைப்படுபவர்களுக்கென்று Behavioral therapy, Cognitive therapy, psychoanalytic therapy, psychodynamic therapy இப்படிப்பலவிதமான Psychotherapy (talk therapy) பல தெரப்பிகளுண்டு. ஆனால் இவையெல்லாம் அநேகமாக என்னகாரணத்தால் உளவியல் பாதிப்பு ஏற்பட்டதென்று கண்டறிந்து அதறக்கு ஏற்றமுறையில் ஆலோசனை வழங்கப் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் போரும் போரால் வந்த இழப்புகளும் பயமும் தான் மனச்சிதைவுகளுக்கு காரணம்.இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் சிரமங்களை தெளிவாக எதிர்நோக்க ஊாக்கமளிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வியில் ஆர்வத்தைத் தூண்டவேண்டும். மனவழுத்தத்துக்குள்ளான பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் இனங்காணப்பட்டு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். அவர்களுக்குப் பிடித்த இசை பிடித்த விளையாட்டு உணவு வழங்கப்பட்டு மனதில் மாறுதலை ஏற்படுத்த வேண்டும். கிபிர் சத்தம் கேட்டாலே செஞ்சோலையில் இன்னும் சில குழந்தைகள் மயக்கமடைகிறார்களாம் இப்படியான பயம் போக்கப்படவேண்டும். இதெல்லாம் செய்து முடிக்க நிறைய நேரமும் ஆளணியும் தேவை.
ஈழத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய உளவியல் நிபுணர்கள் (ஆலோசகளர்கள்) தான் இருக்கிறார்கள். தற்போது யுத்தத்துக்குள் வாழப்பழகியிருக்கும் மக்களில் அநேகமாக எல்லாரும் ஏதோவொரு விதத்தில் மனச்சிதைவுக்குள்ளாகித்தானிருப்பார்கள். ஒரு சில உளவியல் ஆலோசகர்களால் எல்லோருக்கும் ஆலோசனை வழங்கமுடியாது. ஏற்கனவே வைத்தியசாலைகளில் வளப்பற்றாக்குறை, உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்திய அதிகாரிகளுக்கான தட்டுப்பாடு நிலவும் இக்காலத்தில் மனச்சிதைவால் அல்லல்படும் மக்கள் வைத்தியசாலைகளுக்கு வருவது அதிகரித்துள்ளதென்று அங்குள்ள வைத்தியர்கள் கூறுகிறார்கள். இந்நிலமையில் எங்களால் செய்யக்கூடியது என்ன?
தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உளவியல் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து எப்படி உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டோருக்கு உதவலாம் என்ற திட்டங்களை வகுத்துவிட்டுப் பின்னர் குழுக்களாகப் பிரிந்து குடும்பம் குடும்பமாகவும் தேவைப்படின் தனித்தனியாகவும் ஆலோசனை வழங்கலாம். மருந்துகளை மட்டும் நம்பியிராமல் ஒருவரையொருவர் எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம் என்பது பற்றிக் கலந்துரையாடலாம். முக்கியமாக அன்பு ,அடையாளம் , ஆதரவு, வாழ்க்கைக்கான அர்த்தம், அங்கீகாரம், தங்களுக்காக அழ சிரிக்க யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை,சிந்தனைகளைப் புதுப்பிக்க தளம் இவையெல்லாம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

"கனடா வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்" {(தொடர்புகளுக்கு: யோகநாதன் :- (416) 609-3179 | அம்பலவாணர் :- (416) 335-7722 | E-mail: Scholarship@vannitamil.com} துவண்டுபோயிருந்த செஞ்சோலைச்சிறார்களை ஊக்குவித்து புலமைப்பரிசில் திட்டத்தின்மூலம் அவர்களைத் தொடர்ந்து படிக்க வைக்க இங்குள்ள மக்களிடமிருந்து உதவித்தொகை பெற்று அனுப்புகிறது. அது தவிர வருடம் $120 தொடக்கம் ஒரு சிறாருக்கு ஒரு குடும்பத்திடமிருந்து பெற்று அனுப்புவதோடு அந்தக்குடும்பத்துக்கும் சிறுவருக்குமான நேரடித்தொடர்பையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது. இப்படி எல்லாச்சங்கங்களும் உதவி செய்ய முன்வரவேண்டும்.

போரின் விளைவுகளில் ஒன்றான இந்த உளவியல் தாக்கம் ஒரு சங்கிலித்தொடர் போன்றது. அது குழந்தைகளை மட்டுமன்றி வளர்ந்தோர்களையும் இறுகக் கட்டியே வைத்திருக்கிறது.ஆண்கள் பெண்கள் முதியவர்கள் என எல்லோரையும்தான் பாதிக்கின்றது. கடல்கடந்து புலம்பெயர்ந்து வாழும் எங்களையும்தான் பிணைத்துவைத்திருக்கிறது. அடிப்படை வசதிகளாக உணவு உடை உறையுள் இன்றி நம்முறவினர்களும் தெரிந்தவர்களும் இறந்துபோக விட்டுவிட்டு எங்களால் நிம்மதியாக இருக்கமுடியுமா? குற்றஉணர்வு கொஞ்சம் கொஞ்சமாக தின்றுவிடாது? சிந்திப்போம்.செயற்படுவோம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வட்டத்தை விட்டு வெளிவந்து மனிதராக வாழ முற்படுவோம்.

வளரும் பயிர்கள் வாடாதிருக்க
உளமும் உடலும் நோகாதிருக்க
உறவாய் உரமாய் நாமிருப்போம்

உங்கட வீட்ட பொங்கியாச்சா ?

இன்டைக்கு பொங்கலாம் எல்லோ..உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே நானேன் போய் உங்களிட்ட சொல்லுவான். நீங்கள் எல்லாரும் இப்ப பொங்கி பொங்கலை நல்லா ஒரு பிடி
பிடிச்சிருப்பியள் ஆனால் என்ன மாதிரி விடுதியில இருக்கிறாக்களுக்கெல்லாம் cheerios ம் பாலும்தான் பொங்கல் (ஆமா அது ஒவ்வொரு நாளும் சாப்பிடுறது தானே) . நானிப்பிடி
எழுதுறதை என்ர அம்மா மட்டும் வாசிக்கோணும் அவ்வளவுதான் :-) ஆமா நீ வீட்டில நிண்டாலும் பொங்கல் சாப்பிடுற ஆள்தானே என்று கட்டாயம் சொல்லுவா.என்னதான் பொங்ல் பிடிக்காட்டாலும் பொங்கல் நாளுக்கு வீட்டில நிண்டால் ஒரு சந்தோசம்தான் என்ன ? இப்ப பாருங்கோ நான் மட்டும் விடுதில நிண்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறன் ஆனால் வீட்ட அக்கா குடும்பத்தோட அம்மா வீட்ட போய் நிக்கிறா. போனது காணாதெண்டு போன் பண்ணி எனக்கு வெறுப்பேத்துதுகள் பெரிசுகள்தான் இந்தப்பாடெண்டால் அக்கான்ர மகன்கள்
இரண்டுபேரும் என்னை நக்கலடிக்க வெளிக்கிட்டுதுகள். அவை எல்லாரும் ஒன்றா இருந்து fun அடிக்கினமாம் நான் இங்க தனிய நிக்கிறன் என்றதில ஒரு சிரிப்பவைக்கு.

பொங்கல் எனக்கு சாப்பிட விருப்பமில்லை ஆனால் பொங்கலுக்கென்று வேண்டுற கச்சான் kaju nuts இதெல்லாம் உடைச்சு வெட்டி வைக்க முதல் கால்வாசி என்ர வாய்க்குள்ளயும்
கால்வாசி அக்கான்ர வாய்க்குள்ளயும் போயிடும் மிச்சம்தான் பொங்கல் பானைக்குள்ள போகும். (அம்மம்மா என்ன யார் பக்கத்தில இருந்தாலும் எப்பிடி களவாச் சாப்பிடுதென்று
எங்களுக்குத் தெரியுமில்ல :-) ஆனால் சில நேரம் இப்பிடிக் களவாச் சாப்பிடுற சின்ன விசயத்தில தொடங்கி அம்மம்மாக்கு மாமாக்களுக்கென்று யாரிட்டயாவது வாய்காட்டிப்போட்டு
நல்ல நாளதுவுமா நல்லா மண்டகப்படி வாங்கிப்போட்டு நாள் முளுக்க பம்மிக்கொண்டும் சில நேரம் இருப்பம்.

இப்ப மட்டுமில்ல எப்பவுமே எனக்கு பொங்கல் பிடிச்ச சாப்பாடில்ல பொங்கல் மட்டுமில்ல இனிப்பானது எதுவுமே. ஆனால் பொங்கல் என்ற பெயரில நடக்கிற மிச்ச எல்லா விசயமும்
பிடிக்கும்.அம்மா குடும்பத்திலயும் சரி அப்பா குடும்பத்திலயும் சரி நிறையப் பிள்ளையள் அதால எனக்கு நிறைய சித்திமார் சித்தப்பாமார் மாமாமார் மாமிமார் பெரியப்பா அத்தை ;
பொங்கல் போன்ற பண்டிகை நாட்களையொட்டி நிறையக் காசு கிடைக்கும். அது தவிர நிறைய உடுப்புகள் கிடைக்கும். அதுவும் சித்தப்பாமார் அவைக்கு என்ன பிரச்சனை என்டாலும் பெறாமக்களுக்கு உடுப்பு வாங்கிக்குடுக்க பின்நிக்கிறதேயில்லை. புத்தகம் கொப்பி கொம்பாஸ் இப்பிடி நிறையக் கிடைக்கும். வீட்ட பொங்கி முடிஞ்ச கையோட நானும் அக்காவும் அம்மம்மாவீட்ட ஓடிடுவம் ஏனென்டால் எங்கட வீடு மட்டும் கொஞ்சம் தூரத்தில மற்ற மாமாக்கள் சித்தியவைன்ர வீடெல்லாம் ஒரே வளவுக்குள்ள இருக்கும். ஒவ்வொருத்தற்ற வீட்டயும் போய் என்னென்ன நொறுக்குச் சாப்பாடு இருக்கோ அதை எடுத்துக்கொண்டு அம்மம்மான்ர தோட்டக்காணிக்குப் போய் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம். அநேகமா பெடியங்களை விட பெட்டையளுக்குத்தான் நிறையப் பரிசுகள் கிடைக்கும். அதால பொங்கலண்டைக்கு அவங்கள் கொஞ்சம் மூஞ்சையத் தூக்கி வச்சுக்கொண்டு திரிவாங்கள் (இப்ப நினச்சா சிரிப்பா இருக்கு).

குடும்பத்தாக்களோட பொங்ல் கொண்டாடி முடிய தூரத்துச் சொந்தக்காரர் வீட்டயும் அயலவர் தெரிஞ்சாக்கள் வீட்டயும் போறது. அங்க போய் எனக்கு என்ர சித்தப்பா பொங்கலுக்கு
புதுக் கொம்பாஸ் வேண்டித்தந்தவர். அப்பா பொங்கல் வாழ்த்தும் காசும் அனுப்பினவர் கொழும்பு மாமா மங்குஸ்தான் பழம் கொண்டு வந்தவர் என்று அதுவரை கிடைச்சதெல்லாத்தையும் விளம்பரப்படுத்துறது அங்க இருக்கிற எங்கட வயசாக்களும் தங்கட பங்குக்கு எங்கட குட்டிச் சித்தப்பா லண்டன்ல இருந்து ஏதோதோ அனுப்பினவர் என்று சொல்லுவினம். வீட்ட போய் அம்மாவ நச்சரிக்கிறது ஏனம்மா எங்கட சுவிஸ் மாமா எங்களுக்கொண்டு அனுப்பேல்ல. அம்மா சொல்லுவா அவை அவேன்ர குட்டிச்சித்தப்பாவோட கதைக்கிறதேயில்ல உனக்குச் சும்மா சொல்லியிருக்கினம். ( யாரிட்டயும் ஏதும் வேண்டுறதிலயே நிக்கிறாள் என்று நினைக்கிறீங்களென்ன :-) சின்ன வயசில எப்பிடியிருந்தனோ அதைத்தானே சொல்ல முடியும் :-) ).

இவைதவிர பொங்கல் என்றால் எனக்கு ஞாபகம் வாறது எங்கட ஊரில இருக்கிற பிள்ளையார் கோயில் வையிரவர் கோயில் மற்றும் பாலாச்சி. வீட்டுப்பொங்கல் முடிய கோயில்லயும் போய் பொங்குவினம் அம்மாமார். நாங்கள் மரத்தில மாங்காய் காய்ச்சிருக்கோ பலா மரத்தில பூ பூத்திருக்கோ எப்ப காய் வரும் நிலத்தில நிண்டுகொண்டு ஆயுறமாதிரிக்காய்க்குமோ என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பம். ஆனால் அது பொறுக்காது அம்மா மாருக்கு சாணி காணாது பாலாச்சி வீட்ட போய் இன்னும் கொஞ்சம் சாணி வேண்டிக்கொண்டு வரச்சொல்லுவினம். மஞ்சள் தூள் எடுத்துக்கொண்டுவா அது வேணும் இதுவேணும் என்று ஆக்கினைப் படுத்துவினம். ஆக்கினை என்டு நினச்சதாலயோ என்னவோ இப்ப பொங்கல் என்றாலே நினைவுகள்
மட்டும்தானிருக்கு.

இப்பிடித்தான் ஒரு பொங்கலுக்கு முதல்நாளிரவு வெடி வேண்டிக்கொண்டு வந்து தந்திட்டு அண்ணா போராடப் போறன் என்று கடிதம் எழுதி வச்சிட்டுப் போட்டான். அடுத்த நாள் பொங்கல் பொங்கலோ பொங்கல்தான். பெரியப்பா பாவம் ஊாரில உள்ள எல்லாக்காம்புக்கும் திரிஞ்சுபோட்டு இரவு வந்தார் வீட்ட அவன் திரும்ப வரமாட்டானாம் என்டு.

பொங்கலண்டைக்கு எல்லாரையும் பானையில அரிசி போடச் சொல்லறவையெல்லா?? ஏதோவொரு தாயகப்படத்தில பொங்கல்பானையில அரிசி போட்டுக்கொண்டிருக்கும்போது பொம்மர் அடிச்சு அந்தக் குடும்பத்தில எல்லாரும்(?) சாவினம் யாருக்காவது ஞாபகம் இருக்கா என்ன படமென்று?

ஊரைவிட்டு வந்தாப்பிறகு பொங்கல் அதுபாட்டுக்கு வந்த சுவடு தெரியாமல் வந்து போகுது. பொங்கல் வரப்போகுதென்ற ஆரவாரமும் இல்லை எதிர்பார்ப்புமில்ல. எடுத்ததுக்கெல்லாம்
புதுச்சட்டை போட்டுப் பழகி புதுசாப் போடோணும் என்ற ஆசையும் வாறேல்ல. இங்க ஸ்காபுறோவில ரெடிமேற் பொங்கல்பானை விற்கிறார்கள். ஊரில பொங்கல்சாமான் என்று லிஸ்ட் போட்டு வேண்டினமாதிரிக் கஸ்டப்படத்தேவையில்ல. பொங்கலுக்குத்தேவையான எல்லாம் தருவினம் அதை வேண்டி கிச்சின்ல பொங்கலைப் பொங்கி விருப்பம் என்றால் சாப்பிடலாம் இல்லாட்டி பொங்கி வைச்சிட்டு தேவையான ஆக்கள் போட்டுச் சாப்பிடுங்கோ என்டிட்டு வேலைக்குப்போறாக்கள் போகலாம். பள்ளிக்கூடம் போறாக்கள் போகலாம். வீட்டில
இருக்கிறாகள் பொங்கல் வாழ்த்துச் சொல்ல வாற தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளித்துக்கொண்டு சன் ரீவியில் நயன்தாராவின் முதல் பேட்டியை அல்லது TVI ல ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். இல்லாட்டி என்னைப்போல நடுச்சாமத்தில கணனிக்கு முன்னால கொட்டாவி விட்டுக்கொண்டு எதையாவது டொக்கு டொக்கெண்டு தட்டிக்கொண்டிருக்கலாம் :-)

என்னதான் சொன்னாலும் தைப்பொங்கல் தைப்பொங்கல்தான்!
பொங்கல்பொங்கல் வாழ்த்துக்களுடன் -சிநேகிதி-

Saturday, January 12, 2008

வணக்கம் வணக்கம் வணக்கம் !!!

எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்? எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும் இனிய பொங்கல் வாழ்த்துக்களும். பொங்கல் பொங்கி சாப்பிட்டாச்சா ? பொங்கினாக்கள் எனக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்கோ என்ன:-)பொங்கல் நாளுக்கு வீட்ட நிக்காம விடுதிக்கு வந்திட்டன். நின்டிருந்தால் அப்பாட்ட கொஞ்சம் காசடிச்சிருக்கலாம். சரி விடுவம் ..தமிழ்மணத்தில பொங்கல் வாரத்தில நட்சத்திர போனஸ் கிடைச்சிருக்கே என்று சந்தோசப்பட்டுக்கிறன்.

ஆனால் என்ன என்னை அநேகமா நீங்கள் மறந்துபோன நேரமாப் பார்த்து நட்சத்திர வாரத்தில் எழுதுமாறு தமிழ்மண நிர்வாகத்தினர் அழைத்திருக்கிறார்கள். இது யாருடைய அதிஸ்டம் அல்லது துரதிஸ்டம் என்று எனக்குத் தெரியாது. நான் நிறைய எழுதவேணும் என்று ஆசைப்பட்டது ஒரு காலம். ஆர்வம் என்றது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்குது. எழுதுறது மட்டுமில்ல எதிலயுமே ஆர்வத்தின் ஆயுட்காலம் வரவரக் குறைஞ்சு கொண்டே போகுது. இதுக்கு ஏதாவது மருந்திருக்கா?

கார்த்திகை மாத நடுவில் இடைக்காலத் தேர்வுகளும் மற்ற பாடங்களின் assignments, term papers இப்படி பல dead-lineகளும் கனவில கூட பயமுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒருநாளில் “தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்க அன்புடன் அழைக்கிறோம்” என்று ஒரு மெயில் வந்தது. நிறைய தகவல்களின் சேர்க்கையால் மூளை கொஞ்சம் கொஞ்சமா செயலிழக்கத் தொடங்கியிருந்த சாமவேளையில நித்திரை தூங்கிறதும் மடிக்கணணியின் சூடு தாங்காமல் திடுக்கிட்டு எழும்பி திரும்ப படிக்கிறதுமா இருந்த ஒரு இரவில்தான் அந்த மெயில் வந்திருந்தது. என்ன எழுதுறன் என்ற யோசனையே இல்லாம “மன்னிக்கோணும் எனக்கு ஜனவரியில அடுத்த semester தொடங்கிடும் எழுத நேரம் இருக்காது ” என்று பதிலெழுதிட்டன். மெயிலனுப்பின பிறகுதான் யோசிச்சன் கிறிஸ்மஸ் விடுமுறையெண்டு ஒண்டிருக்கல்லோ அந்த நேரம் எழுதி வச்சிட்டு ஜனவரியில post பண்ணலாம்தானே எண்டு. எனக்கு மூளை கொஞ்சம் தாமதாவே செயல்படுது என்றத நிரூபிக்கிற மாதிரி நான் நினைத்ததையே பிரதிபலிக்கிற மாதிரி தமிழ்மண நட்சத்திர நிர்வாகியிடமிருந்து அடுத்த மெயில் வந்தது. சரியென்டு நட்சத்திர வாரத்தில எழுதுறன் என்று சொல்லிட்டன். ஆனால் விடுமுறைக்கு வீட்ட போன நேரம் வீட்டில இணைய வசதி இல்லாதால நான் நினைத்தமாதிரி எழுத முடியாமல் போச்சு. இப்ப விடுதிக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமா எழுதுறன். அதால நிறையத் திட்டாதயுங்கோ என்னை plzzz.

எழுத வந்த புதுசில 2005 ல நினைக்கிறதெல்லாத்தையும் எழுதிக்கொண்டிருந்தன். அப்ப இந்த நட்சத்திர எழுத்தாளர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டிருக்கிறன். இன்னும் ஒருக்காலும் நட்சத்திரமாகேல்லயா என்று கேட்ட ஆக்களுக்கு நாமளும் ஒருநாளைக்கு நட்சத்திரமாவமில்ல அப்ப பார்த்துக்கிறன் உங்களையெல்லாமெண்டு மனசுக்குள்ள நினச்சிருக்கிறன். ஆனால் பிறகு அந்த ஆசையில்லாமல் போட்டுது.

இப்பெல்லாம் எழுத்துக்கும் என்னைப் பிடிக்காமல் போச்சு எனக்கும் அதை இப்ப பிடிக்கிறேல்ல. அப்பப்ப தாயகப்பறவைகளுக்கு மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறன். நிறைய எழுதவேணும் என்று எனக்கு நானே சொல்றதும் அது நடக்காமல் போறதும் வழமையாகிட்டு. இனிமேலாவது செயலுக்கு அதிகமுக்கியத்துவம் குடுக்கிறன். ஒவ்வொரு lecture லயும் interesting ஏதாவது படிச்சால் இதைப்பற்றி எழுதவேணும் என்று குறிச்சு வச்ச விசயங்கள் என்ர gmail draft ல நிரம்பிக்கிடக்கிறதுதான் மிச்சம். எழுதுவதற்கான நேரமும் ஆர்வமும் தான் இல்லை. இப்ப வலுக்கட்டாயமாக என்னைக் கெஞ்சிக்கேட்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறன். இதை எழுதி முடிக்கிறதுக்குள்ள நான் எத்தின தரம் பாட்டுப் பார்ப்பன், msn க்குப் போவன், சாப்பிடுவன், தேத்தண்ணி குடிப்பன் என்றதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒருநாளைக்கு ஒரு பதிவாவது எழுதவேணும் என்ற முடிவில இருக்கிறன். இனி எல்லாம் என்ர மனசைப் பொறுத்தது.
ஆனால் ஒரு விசயம். நான் final exam க்குப் படிக்கும்போது கூட இவ்வளவு கரிசனையாப் படிச்சதில்ல ஆனால் நட்சத்திர வாரத்துக்கு ஒழுங்கா எழுதவேணும் என்று நினைச்சதில இருந்து கட்டில் நிறைய என்ர பாடப்புத்தகங்களும் மடிக்கணனியின் desktop முழுவதும் பழைய lecture slides எல்லாம் நிறைஞ்சு கிடக்கு. என்னால முடிஞ்சளவுக்கு இந்த வாரத்தை உருப்படியா பிரயோசனமாக்கணும் என்றுதான் நினைக்கிறன். பிழைகள் ஏதாவது வந்திட்டால் சுட்டிக்காட்டுங்கோ. குட் லக்.