வடுக்கள் வலிகளாய் - வன்முறையாய்
அம்பா : அங்க பார் தீபன் அந்த மரத்துக்கு கீழ தனிய இருக்கிறான். பாவம் அவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெடியனாம்.அதான் அவன் எப்பவும் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கிறவன் போல.
ஆதிரை: என்ன வித்தியாசம்? எல்லாரயும் போலத்தானே இருக்கிறான். எனக்கொரு வித்தியாசமும் தெரியேல்ல.
அம்பா: நீ எப்பதான் மற்றாக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறாய்? சுயநலவாதிகளுக்கெல்லாம் மற்றாக்களின்ர கண்ணிலயும் குரலிலயும் இருக்கிற வலி தெரியாது. அவனை வடிவாப்பார். எப்பவும் ஏதோ பெருசா துன்பம் நடக்கப்போற மாதிரியும் அதை அவன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற மாதிரியும் இருக்கிறான் பார். அவன்ர அறையில சாமம் சாமமா எப்பவும் லைற் எரிஞ்சுகொண்டேதானிருக்கும்.அவன் நித்திரையே கொள்றேல்ல என்று நினைக்கிறன். மற்ற பெடியங்களைப் போல இல்லாமல் அவன் எப்பவும் ஒரு பெரிய சோகத்தை சுமக்க முடியாமல் சுமந்துகொண்டிருக்கிறான் என்று நான் அப்பவே நினச்சனான்.
ஆதிரை: ஆமா யாருக்குத்தான் சோகம் இல்லை. எனக்கில்லையா? உனக்க்குத்தானில்லையா?? உனக்குள்ள ஆயிரம் சோகங்களையும் கேள்விகளையும் ஏக்கங்களையும் விருப்பங்களையும் வச்சுக்கொண்டு ஏண்டியிப்பிடி யாற்றயும் பிரச்சனைகளை உன் தலையில போட்டுக்கொண்டு நீயும் மண்டை காஞ்சு கூட இருக்கிறாக்களையும் குழப்புறாய்?
அம்பா: என்ர பிரச்சனைகள் எல்லாமே சின்னச் சின்ன பிரச்சனைகள் இப்ப இல்லாட்டி எப்பவாவது ஒருநாளைக்கு இல்லாமல் போயிடும். ஆனால் தீபன் போன்ற பெடியங்களுக்கு இருக்கிற பிரச்சனைகளோடு ஒப்பிடேக்க எங்கட சின்னச் சின்ன கவலையெல்லாம் ஒன்றுமேயில்ல ஆதிரை.
நேற்று நான் volunteer வேலை செய்யுற இடத்துக்கு கடைசியா வந்த file அவன்ரதான். அவன் என்ர ஒரு வகுப்பில இருக்கிறபடியால் அவன் எப்பிடி வகுப்பிலயும் வெளிலயும் நடந்துகொள்றான் என்று அவனுக்குத்தெரியாமல் கவனிக்கச் சொன்னவா என்ர சீனியர்.அவன் 8 வயசில இருந்து 13 வயசு வரைக்கும் அவன்ர அப்பாவால பாலியல் ரீதியில துன்புறுத்தப்பட்டிருக்கிறான். அவன்ர testimony ஐ வாசிச்சு நான் அழுதிட்டன். அவன்ர அப்பா மட்டும் என் கையில கிடைச்சார் அவ்வளவுதான்.
ஆதிரை : முதல் அவன் testimony ல என்ன சொல்லியிருக்கிறான் என்று சொல்லு.
அம்பா : தீபனுக்கு அவன்ர வீட்டில எந்தவிதமான கவனிப்பும் கிடைக்கேல்ல. அப்பா அம்மான்ர தாம்பத்ய வெற்றியை வெளிக்காட்ட பிறந்த அண்ணா மேலதான் எல்லாருக்கும் பாசம். அண்ணாக்கு விளையாட ஒரு பொருளா தன்னை உருவாக்கினது போல அவன் உணர்த்தப்பட்டிருக்கிறான் பல சந்தர்ப்பங்களில்.அம்மான்ர பரிவுக்கும் அப்பான்ர அணைப்புக்கும் ஏங்கி ஏங்கித் தவிப்போடயே அவன் பல நாட்களில் நித்திரை கொண்டிருக்கிறான்.
அவனுக்கு எட்டு வயசிருக்கும்போது அவன்ர மென்மையான வெண் தோல் அவனுடைய தந்தைக்கு அவன் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கு.பொதுவாவே சிறுவர்களை பாலியல் கொடுமைக்குள்ளாக்கும் மனித வல்லூறுகள் தேர்ந்தெடுக்கும் சிறுவர்களின் மெல்லிய தோல் கொண்டவர்களாகவும் ஏதோ ஒன்றை வாழ்வில் இழந்தவர்களாகவும் ; அதாவது அன்பை , பாதுகாப்பை , அழகை , துணிவை , உடல் பலத்தை , மன பலத்தை இழந்தவர்களாகவும் இருப்பார்கள். அப்படி அவர்கள் ஏங்கும் ஒன்றை வழங்குபவராக ஒருவர் அவர்களை நெருங்கும்போது எந்தவிதத் தயக்கம் யோசனை எச்சரிக்கையுணர்வு எதுவுமின்றி இந்தச் சிறுவர்கள் அந்த வல்லூறுகளிடம் ஒட்டிக்கொள்வார்கள்.
இதுதான் தீபனுக்கும் நடந்தது. அன்புக்காக ஏங்கிய அவன் அப்பா தன்னிடம் திடீரென்று அன்பாய் நடந்துகொள்ளத்தொடங்கவும் அப்பாக்கு தன்னில் உண்மையாகவே அன்பு வந்துவிட்டதாக எண்ணி அப்பாவின் சின்ன சின்னத் தொடுதல்களையும் உரசல்களையும் ஏற்றுக்கொண்டான். அப்படித்தான் ஒருநாள் தீபனை மஸாஜ் செய்துவிடும்படி தந்தை கேட்கவும் தீபனும் தயங்காமல் அப்பா வேலைக்குப்போய் விட்டு வந்திருக்கிறார் பாவம் என்று மஸாஜ் செய்துவி்ட்டிருக்கிறான்.அன்றுதான் முதன்முதலாக அந்த பாலியல் கொடுமை அவனுக்கு நடந்திருக்கிறது. அதன்பிறகு பல தடவைகள். அப்பா மஸாஜ் பண்ண தீபனைக் கூப்பிட்டாலே அது எதற்கான அழைப்பென்று அவனுக்குத்தெரியும். சின்னச் சின்ன சேட்டைகளில் தொடங்கிய பாலியல் துஷ்பிரயோகம் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது.அவன் வலிபொறுக்க முடியாமல் அழுதபடியே தன் தந்தையிடம் கேட்டிருக்கிறான் ஏனப்பா என்னை இப்பிடிக் கொடுமைப்படுத்துறீங்கள்.அதற்கு அவன் தந்தை சொன்ன பதிலைக்கேள்:
• உன்ர அம்மா தாற இன்பம் எனக்குக் காணாது
• மற்றது இதுவும் உனக்கு ஒருவிதமான கல்விதான்.
• இது ஒரு பெரயி விசயமேயில்லை. எல்லா இடத்திலயும் நடக்கிறதுதான்.
இப்படிச் சொன்னது அவன்ர அப்பா. அப்பா சொல்றதை அந்த வயசில எந்த மகனுமே நம்புவான். அவனும் நம்பினான். அப்பா சொல்றது பொய் என்று எப்பிடிடி அவனுக்குத் தெரியும்? பக்கத்துவீட்டில அப்பிடி நடக்கேல்ல என்று அவனுக்கு எப்பிடித் தெரியும்? செக்ஸ் என்றாலே பரமரகசியம் மூடுமந்திரம் என்ற வர்ணனையில் இருக்கும்போது இன்னும் பல தீபன்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கப்போறாங்கள். அவன் ஒரே ஒரு முயற்சி செய்திருக்கிறான். ஏதொ ஒரு சந்தர்ப்பத்தில் தன் தாயிடம் “அப்பாவுக்கு இன்னும் கூட செக்ஸ் குடுங்கோம்மா “என்று சொல்லியிருக்கிறான். 10 வயசுப்பையனுக்கு செக்ஸ் ஐப்பற்றி என்ன தெரியும் என்ற அலட்சியம். மகன் ஏனிப்படிச் சொல்கிறான் என்று அந்தத் தாய்க்கு ஏன் யோசிக்கத்தோணேல்ல? அந்தத்தாய் ஒரு நிமிசம் தீபன் ஏனப்படிச் சொன்னான் என்று யோசித்திருந்தால் அன்றைக்கே அவன் பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து காப்பற்றப்பட்டிருப்பான்.
ஆதிரை: அப்பாமாரும் சித்தப்பாமாரும் அண்ணன்மாரும் சொந்தக்காரரும் அறிவுகெட்டத்தனமா தங்கட ரத்த உறவுகளையே பாலியல் கொடுமை செய்யுறதுக்கு நீயேன் அம்மாமாரைத் திட்டுறாய்?
அம்பா: அப்பிடியில்லை ஆதிரை. எவ்வளவுதான் பரிணாமவளர்ச்சியடைந்நதிருந்தாலும் இன்னமும் எங்களைச் சுத்தி இப்படியான கொடுமைகள் நடந்துகொண்டுதானே இருக்கு. இதுக்கு யார் காரணம். நாங்கள்தான் காரணம். நாங்களேதான்.
சின்னப்பிள்ளைகள் பொக்கிசம். குழந்தைப்பிள்ளைகள் பொய் சொல்லாதுகள். குழந்தைப்பிள்ளைகள் ஒன்று சொன்னால் அது கடவுளே வந்து சொன்னமாதிரி என்று சொல்றம் : ஆனால் ஒரு பிள்ளை போய் தன்ர அம்மாட்ட “அம்மா அப்பா என்னை இப்பிடித்தொட்டவர் . அப்பிடிச் சொன்னவர் ;செய்தவர் “என்று சொன்னால் அந்தத்தாய் தன்ர பிள்ளை சொல்றதை நம்புவாவோ இல்லாட்டி “நீ சொல்றதுண்மையா? ஏனிப்பிடி பொய் சொல்றாய்? எந்தப்படத்தில பார்த்தனி ? இந்த வயசிலயே இப்பிடி முத்திப்போய் நிக்கிறாய்” என்று கன்னத்தில இரண்டு போடுவாவோ? ஒருசில தாய்மாரைத் தவிர மிச்ச எல்லாரும் பிள்ளை சொல்றதை நம்புறேல்ல. கேட்டுக் கேள்வியில்லாம பிள்ளையை பொய்காரன்/காரியாக்கிப்போடுவினம். அப்ப அதுக்குப்பிறகு அந்தப்பிள்ளைக்கு எப்பிடி தன்னம்பிக்கை வளரும்?? தான் சொல்றது உண்மையா என்று அதுக்கே சந்தேகம் வரும். தனக்குள்ளே குழம்பி ஒரு முடிவுக்கு வரேக்க அப்பா மேல மட்டுமில்ல அம்மா மேலயும் சேர்த்துத்தான் கோபம் வெறுப்பு எல்லாம் வளரும். அந்த வெறுப்புத்தான் பிறகு காதலி மனைவி என்று வாழ்க்கையில சந்திக்கிற அத்தனை பெண்களிடமும் தொடரும்.
அடுத்தது எங்கட சட்டமும் அதிகாரிகளும். பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய ஒரு வழக்குகளை எடுத்துப்பார். 100 வழக்கு நடந்தால் அதில எத்தின வழக்கில் மனதி வல்லூறுகளுக்கு தண்டனை கிடைக்குது. சரியான சாட்சியம் இல்லை என்று எத்தனை வல்லூறுகள் திரும்ப வந்து மீண்டும் சிறுவர்களைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருக்குதுகள் என்று யோசிச்சுப்பார். இதில கொடுமை என்ன என்றால் வழக்கு என்று போனாலே பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட சிறுவர்கள் மீண்டுமொரு முறை வழக்கு என்ற பெயரில் மீண்டும் உளரீதியில் காயப்படுத்தப்படுவது தான். எதிர்த்தரப்பு வக்கீல்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாகப் பதில் சொல்லமுடியாது தெரிந்தவர்கள் முன்னிலையிலும் உறவினர்கள் முன்னிலையிலும் இவர்கள் படும் அவஸ்தையிருக்கே. அந்த அவஸ்தை அவர்கள் சாகும்வரை அவர்களை விட்டு விலகுவதில்லை. இவர்களில் ஒருசிலர்தான் தங்கள் உள்மனதுடன் போராடி வெற்றிபெறுகிறார்கள்.
ஆண்கள் அழமாட்டார்களாம் ஆதிரை. ஏன் அவைக்கு கண்ணீர்ச்சுரப்பியில்லையா? ஆண்கள் அழுவதில்லை. அவர்கள் பிறப்பிலேயே மனசாலும் உடலாலும் பலமுள்ளவர்கள் என்றொரு முகமூடியைச் சிறுவனாக இருக்கும்போதே போட்டு விட்டாச்சு. ஆண்களுக்கு பிரச்சனைகளே வராது அப்பிடியே வந்தாலும் அவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கக்கூடாது தாங்களாகவே சமாளிக்கப்பழகவேணும் என்றெல்லாம் சொல்லிவச்சா இப்பிடி பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும்போது அதை அவர்கள் எப்பிடி வெளியே சொல்வார்கள்?? எப்பிடி மற்றவர்களின் உதவியை நாடுவார்கள்?? அப்பிடியே ஒருசிலர் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியே சொன்னாலும் இருக்கவே இருக்கு ஒரிசனச்சேர்க்கையாளர் என்ற லேபிள்.
எங்கள் சமுதாயம் இப்படி இருக்கும்போது தீபன் போன்றவர்கள் யாரிடம் போவார்கள் சொல்? தீபன் போன்ற சிலர்தான் தங்களுக்கு நடந்தது பாலியல் கொடுமைதான் என்று புரிந்துகொண்டு தாங்களாகவே எங்கட போன்ற சமூகநல நிறுவனங்களிடம் தங்கள் உள்ளக்கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் தன்னுள்ளே எல்லாத்தையும் பூட்டி வச்சிருக்கிற ஒரு சிலர்தான் மீண்டும் தாங்களே இன்னொரு சிறுவனைப் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஆதிரை : இப்ப நீ என்ன சொன்னனீ? பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான ஆக்கள் எப்பிடி இன்னொராளைக் கொடுமைப்படுத்த முடியும்? தங்களுக்கு ஏற்பட்ட வலிதானே மற்றாக்களுக்கும் வருமென்று தெரியும்தானே?
அம்பா : ம் தெரியும்தான். இது ஒருவிதமான குரூரம். குரூரம் என்றும் சொல்லேலாது. தான் பட்ட துன்பத்தை இன்னொராளிட்ட இறக்கி வைக்கிறதெண்டு சொல்லலாம். அதாவது நான் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவன். அதனால என்ர உடம்பில இருந்தும் மனசில இருந்தும் எதையோ இழந்திட்டன். அப்பிடி நான் இழந்ததைத் திரும்ப பெற ஒரே வழி நான் abuser மாறி நானொரு victim ஐத் தேடி அந்த victim ஐ பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குவதன் மூலம் நானிழந்ததை திரும்பப் பெறலாம் என்ற எண்ணம்.
ஒரு சிலர் தங்களுக்கு இப்பிடி நடந்ததற்கு விதிதான் காரணமென்றும் மற்றும் சிலர் தாங்களே abuser ஆக மாறிப்போக இன்னும் சிலர் தங்களைச் சாதாரணமானவர்களாக மற்றவர்களிடையே காட்டிக்கொள்ள பெரும்பாடு படுவார்கள். இவர்கள் எப்பவும் பெண்களைப் பற்றியே நினைத்துக்கொண்டும் கதைத்துக்கொணடும் இருப்பார்கள்.எங்கே தங்களை ஒரினச்சேர்க்கையாளர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் சதா செக்ஸ் ஐப்பற்றியே சிந்தித்துக்கொண்டு இறுதியில் செக்ஸ் ஐயே தொழிலாக்கிக் கொள்ளுவார்கள். இவர்கள்தான் male prostitute ஆகவும் male striper ஆகவும் உருவாகிறார்கள்.இன்னும் சிலர் தங்களை ஓரினச்சேர்க்கைாயாளராக அடையாளப்படுத்த விரும்பாமல் பெண்ணைத்திருமணம் செய்துகொண்டு சமுதாயத்தின் கண்ணுக்கு இருபால்சேர்க்கையாளராகவும் ரகசியமாக ஒரினச்சேர்க்கையிலும் ஈடுபடுவா்கள்.
ஆதிரை : இப்பிடி எல்லாத்தையும் தெரிஞ்சுவைச்சுக்கொண்டு ஏன் தீபனைக் கண்காணிக்கணும் அவனோட கதைக்கோணும் பழகோணும் என்றாய்?
அம்பா: ஆதிரை எல்லோரும் பழிக்குப்பழி இரத்தத்துக்கு இரத்தம் என்றா இருக்கிறார்கள். ஒருசிலர் விதிவிலக்கு. அப்படியான பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான ஒரு சிலர்தான் எங்கட volunteer center போல பல சமூக நோக்கங்கொண்ட நிறுவனங்களை உருவாக்கி நடத்துகிறார்கள்.
ஆச்சரியமா இருக்கா ஆதிரை ? தங்கட வாழ்வில நடந்தது போல மற்றாக்களுக்கு நடக்கக்கூடாதென்றதுக்காகவும் தங்கட அப்பாவைப்போலவோ அல்லது எந்ந abuser ஐப்போலவும் இன்னொரு சிறுவனின் வாழ்வை யாரும் பாழாக்கக்கூடாதென்றதுக்காகவும் இப்படியான center ஐ நடத்துகிறார்கள். முக்கியமாக தீபன் போன்ற victims மனம் திறந்து உண்மைகளைச் சொல்லும்போது அதன் உண்மைத்தன்மையை உணர்ந்துகொள்ள இப்படியான அமைப்புகளை அமைத்து நடத்துபவர்களும் ஒருகாலத்தில் victims தான் ஆனால் இன்று survivors. ஒருநாள் தீபனும் survivor ஆவான்.
ஆதிரை : அம்பா நாளைக்கு எனக்கும் ஒரு application எடுத்துக்கொண்டுவா. நானும் உங்கட volunteer center ல் சேரப்போறன்.
அம்பா: கட்டாயம் ஆதிரை .இப்ப வகுப்புக்கு போவம் நேரமாச்ச.
================================================================================
தொடர்புள்ள பதிவுகள்:
நெசமாத்தான் சொல்றியா?
Paul ன்ர கதையை எப்பிடிச் சொல்றது?
Paul ன்ர கதை II
20 comments:
இப்ப தான் வாசிச்சு முடிச்சன்,
பொருத்தமான தலைப்பிலிருந்து உள்ளடக்கம் வரை மிகக் கவனமாத் தேர்ந்தெடுத்து இயல்பாக எல்லோருக்குமான பொது நடையில் உளவியல் பிரச்சனையை அணுகியிருக்கின்றீர்கள். நம்மில் பலர் எழுதவோ, இது பற்றி அறியவோ அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை, இன்னொரு பதிவாக நீங்கள் தொட்டிருப்பது நன்றாக இருக்கு.
ஸ்ஸப்ப்பாஆஆஆ
படிக்கிறப்பவே 'பக்'குனு ஆயிடிச்சி
:(
பதிவுகளில் வலிகள் பதிக்கிறீர்கள்..வாழ்வின் இந்தப் பக்கம் வலிகள் நிறைந்த பக்கம்.
//நீ எப்பதான் மற்றாக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறாய்? சுயநலவாதிகளுக்கெல்லாம் மற்றாக்களின்ர கண்ணிலயும் குரலிலயும் இருக்கிற வலி தெரியாது//
இந்த வரிகள் படித்ததும் குற்ற உணர்வு கிளர்ந்தெழுந்தது..
சிந்திக்கவைத்த பதிவு! அப்புறம் உங்கள் சிய அறிமுகம்(தமிழ்மணத்தில)் .. அசத்தல்! வாழ்த்துக்கள் தோழி...
உளவியல்/மனோவியல் இல்லை,இல்லை அறிவின் கானல்(virtual) என்று சொல்லலாம் தானே!
உள்ளம் (அ) மனம் என்பது இயற்பொருளாக இருப்பதில்லை... அது அறிவின் கானலாக தானே இருக்கிறது...
பாலியல் வன்முறை - மனச்சிதைவு - உருவாக்கம் மிக எளிமைப்படுத்தப்பட்ட உரையாடல்...
வெளியிலிருந்து உள் நோக்கிய பார்வை மிகவும் ஆழமானது...
சினேகிதி முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள் ;)
நல்லதொரு பதிவு.
உங்களின் கவனமான எழுத்து நடை அருமை. உளவியல் பிரச்சனைகளை சரியாக சொல்லியிருக்கிங்க.
பாலியல் வன்முறை பற்றி எழுத எனக்கே கஸ்டமாத்தானிருந்தது அதானால்தான் உரையாடல் மாதிரி எழுதிப் பார்த்தன். சில விசயங்களுக்கு உரையாடல் நல்லதுபோலத்தானிருக்கு.
குழந்தைப் பாலியல் வன்முறை என்பதைப் பற்றி, அழகாக தெளிவாக சொல்லியிருக்கீங்க.
இந்தியாவைப் பொறுத்த மட்டில், இதைப் பற்றிய, விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம்.
இப்போது தான் பேட் டச், குட் டச்ப் பற்றி, ஆவியில் எழுதி வருகிறார்கள்.
ஆனால், சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களே, பயரை மேய்வது, கொடுமை. உளவியல் ரீதியாக பெரியோர்கள்/பெற்றோர்கள்..abuser ஆகக் காரணம் ஏதாச்சும் இருக்குதா.
ம்ம்ம் மனம் வலிக்கிறது - ஒரு முறை படித்ததிலேயே - இவைகள் அதிகம் வெளியில் தெரிவதில்லை - மற்றவர்களின் வலியைப் புரிந்து கொள்ள நமக்குப் பொறுமை இல்லை. என்ன செய்வது
\\இன்னொரு பதிவாக நீங்கள் தொட்டிருப்பது நன்றாக இருக்கு.\\
தொட்டிருக்கிறன்? அப்ப இதைப்பற்றி இன்னும் நிறைச் சொல்லவேண்டியிருக்கு.
சிவா, பாச மலர், ஓசை செல்லா, பாரி அரசு, கோபிநாத் நன்றி.
\\இப்போது தான் பேட் டச், குட் டச்ப் பற்றி, ஆவியில் எழுதி வருகிறார்கள்.
ஆனால், சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களே, பயரை மேய்வது, கொடுமை. உளவியல் ரீதியாக பெரியோர்கள்/பெற்றோர்கள்..abuser ஆகக் காரணம் ஏதாச்சும் இருக்குதா.
\\
ஆவியில்??? அதென்ன பத்திரிகையா?
abuser முன்பு victim ஆக இருந்திருக்கலாம்.
சீனா நமக்குப் பொறுமை இல்லை என்றது உண்மைதான். அவரவருக்குத் தங்கள் தங்கள் பிரச்சனைகளைப் பார்க்கவே நேரம் காணாமல் இருக்கு.
You have handled a sensitive topic in a sensible way! Xlnt!
tx Divya...
//ஆவியில்??? அதென்ன பத்திரிகையா?//
ஆனந்த விகடன் அது
ஸ்ப்பா.. எல்லாத்துக்கும் நான் வந்து விளக்கம் சொல்ல வேண்டிக்கிடக்கு..
வேலியே பயிரை மேய்வது...ம்ம்ம்... சிநேகிதி.. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.
உங்க பதிவுல ஒரு சின்ன கதை சொல்ல விரும்புறேன் தோழி. நான் இந்தியாவில் இருக்கும் வரையில்..கைவிடப் பட்ட சிறுவர் சிறுமியர் இல்லத்துக்கு செல்வது வழக்கம். அங்கே நடந்த கதை. அங்கேயே பணிபுரியும் ஆசிரியை (32 வயதிருக்கும்) 12 வயது சிறுவனிடம் பாலியலில் ஈடுபடுவதை கண்ட நான் அப்பெண்மணியிடம் பேசி, கவுன்சிலரிடம் சேர்ப்பித்துவிட்டேன். அழுது புலம்பி, திரும்பவும் அவ்வேலையில் சேர்ந்த அப்பெண்மணி, மறுபடியும் கையும் களவுமாகப் பிடிபட்டார். அப்போது மனநல மருத்துவர் அப்பெண்மணி குறித்து சொன்ன வார்த்தைகள் உங்கள் பதிவோடு ஒத்துப் போகின்றன.
//தான் பட்ட துன்பத்தை இன்னொராளிட்ட இறக்கி வைக்கிறதெண்டு சொல்லலாம். அதாவது நான் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவன். //
பின்குறிப்பு:
இப்பெண்மணியும் ஆதரவற்றோர் நிலையத்திலிருந்து வந்தவர் தான். :-(
//கொழுவி said...
//ஆவியில்??? அதென்ன பத்திரிகையா?//
ஆனந்த விகடன் அது
ஸ்ப்பா.. எல்லாத்துக்கும் நான் வந்து விளக்கம் சொல்ல வேண்டிக்கிடக்கு..//
அ.மு.ந.வா.வி.கொ
அதாவது
அடுத்த முறை நான் வாறன் விளக்கம் கொடுக்க
\\ஆனந்த விகடன் அது
ஸ்ப்பா.. எல்லாத்துக்கும் நான் வந்து விளக்கம் சொல்ல வேண்டிக்கிடக்கு..
\\
danke :-)
//danke :-)//
Bitte
பிரிய சிநேகிதி வணக்கம், பதிவுலக தாரகையே,உங்களின் பதிவுகள் அருமை.
இனி தினம் படிக்கும் வலைப்பூக்களில் உங்கடதும் உண்டு.தொடர்வோம்.
\\பிரிய சிநேகிதி வணக்கம், பதிவுலக தாரகையே,உங்களின் பதிவுகள் அருமை.
இனி தினம் படிக்கும் வலைப்பூக்களில் உங்கடதும் உண்டு.தொடர்வோம்\\
பதிவுலக தாரகையா?? அது போனவருசம் முடிஞ்சுபோச்சு.
Post a Comment