Custom Search

Wednesday, July 26, 2006

கனவாகிப் போனவர்கள்
தமிழமுதத்துக்காக
-சினேகிதி-


அம்மம்மா எனக்கு இன்னுமொரு பிடி சோறு வேணும்.மிளகாயும் சேர்த்து வையுங்கோ.

இந்தாடி ஆத்தா உனக்குத்தராம ஆருக்குக் குடுக்கப்போறன்.

என்ர கையில சோத்தை வைக்கும்போதே அம்மம்மான்ர கண்ணிரண்டும் பொல பொல என்று கண்ணீர் வடிக்குது.

ஏனழுறீங்கள்?? உங்களுக்குச் சோறு காணதென்டோ?? எனக்குக் காணும்.இந்தாங்கோ இதை நீங்கள் சாப்பிடுங்கோ.

அம்மம்மா இன்னும் பெருசா அழத்தொடங்கிட்டா.நானும் அழத்தொடங்கிட்டன்.நானழுறதைப் பார்த்திட்டு அம்மம்மா அழுறதை நிப்பாட்டிட்டா.

அம்மம்மா .. ஏனழுதனீங்கள் ?

இல்லடா சின்னமாமான்ர ஞாபகம் வந்திட்டு....அவனும் உன்னை மாதிரித்தான் குழையல் சோறும் மோர் மிளகாய்ப் பொரியலும் என்றால் இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவான்.இன்றைக்கு மட்டும் என்ர பிள்ளை என்னோட இருந்திருந்தால் என்னையிப்பிடி கஸ்டப்பட விட்டிருப்பானே.

அம்மம்மா நீங்கள் எல்லோ சொன்னீங்கள் சின்னமாமா குட்டிச் சித்தீன்ர கல்யாணவீட்டுக்கு வருவார் எண்டு.ஆனால் அவர் வரேல்லயே.

அவன் இண்டைக்கு வருவான் நாளைக்கு வருவான் என்றுதான் இந்தப் பத்து வருசமாச் சொல்லிக்கொண்டிருக்கிறன்.எனக்குக் கொள்ளிபோடவாவது அவன் வரோணும்.

அம்மம்மா ரியுூசன் ரீச்சர் சொன்னவா உங்கட சின்ன மாமா திரும்ப வர மாட்டார்.உயிரோட இருந்தாத்தானே அவர் வாறதுக்கெண்டு.ஏனம்மம்மா அவா அப்பிடிச் சொன்னவா.
என்ர கடவுளே ....குழந்தைப்பிள்ளையளிட்ட என்ன கதைக்கிறதெண்டு தெரியேல்ல..இதுகளெல்லாம் ஒரு ரீச்சர்.அவாட்ட உன்ன கொம்மா ரியூசனுக்கு விடுறா.ஆவா அப்பிடித்தான் சொல்லுவா கானவிக்குட்டி.நீ இருந்து பாரன் சின்னமாமா ஒருநாளைக்கு வரத்தான் போறார்.அவையிவை சொல்றதையெல்லாம் கேக்காம கெரியாப் போய் படுத்து நித்தா கொள்ளுங்கோ நாளைக்குப் பள்ளிக்கூடமெல்லோ.

சரி அம்மம்மா நீங்களும் படுங்கோ.குட்நைட்.

++++++++++++++++++++++++++++++++++++

அம்மா

ம்

அம்மா

ம்..என்ன கானவி நீ இன்னும் நித்திரை கொள்ளேல்லயோ.

அம்மா சின்னமாமாக்கு என்னைத் தெரியுமோ?

என்ன இப்ப திடீரெண்டு சின்னமாமான்ர ஞாபகம்?

சின்னமாமாக்கு என்னைத்தெரியோமெண்டெல்லோ கேட்டனான் உங்களிட்ட.

உதான் உதான் உந்த முன்கோபமும் வாயும்தான் இன்டைக்கு அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று கூடத்தெரியாமா எங்களெல்லாரையும் அலைக்கழிக்குது.உரிச்சு வச்சு உருவத்தில குணத்தில படிப்பில எல்லாத்திலயும் அவனைப்போலவே வாறாய் நீயும்.

உண்மையாவோம்மா?அப்ப சின்னமாமா என்ன மாதிரியோ இருப்பார்? எங்க பார்ப்பம் படம் காட்டுங்கோ.

அவன்ர படத்தை நடுக அம்மம்மா பார்த்து அழுறா என்று பெரிய மாமா எல்லாப்படங்களையும் கொண்டுபொய் றங்குப்பெட்டிக்க வச்சிட்டார்.பிறகு எடுத்துக் காட்டுறன்.

சரி பின்னச் சொல்லுங்கோ சின்னமாமாக்கு என்னைத் தெரியுமோ தெரியாதோ?

அப்ப உனக்கொரு இரண்டரை வயசிருக்கும்.ஒரு சித்திரைப் பொங்கலுக்கு மொறட்டுவலிருந்து வந்து நிண்டவன்.அந்த நேரம் யுனிவர்சிற்றிப் பெடியங்கள் எல்லாரையும் சந்தேகப் பட்டு ஆமிக்காரர் பிடிச்சுக்கொண்டு திரிஞ்சவங்கள்.இவன் சொல்லாமக் கொள்ளாம நேர இங்க வந்திட்டான்.அன்றைக்கிரவே தாத்தா எவ்வளவு கெஞ்சினவர் இவனை உடனே முல்லைத்தீவில அப்பப்பான்ர பண்ணைல போய் நிக்கச் சொல்லி.இந்தப் பிடிவாதம் பிடிச்சவன் யாற்றயும் சொல் கேட்டாத்தானே. விடாப்பிடியா தானிங்கதான் நிப்பன் என்று நிண்டவன்.தாத்தா அடிக்கப்போக பக்கத்தில கிடந்த பானையத் தட்டி விட்டான் அது அம்மியோட போய் அடிபட்ட சத்தத்துக்கு நித்திரையாக்கிடந்த நீ வீரிட்டுக்கத்தத் தொடங்கிட்டாய்.
உன்னில சின்னமாமாக்குச் சரியான விருப்பம்.உன்னையும் தூக்கிக்கொண்டு "எனக்கென்னமும் ஆகோணும் என்று விதியிருந்தால் அது எங்கயிருந்தாலும் நடக்கும்.ஏற்கனவே என் இரண்டு பிரண்ட்ஸ் ஐ உயிரோட என் கண்முன்ன துலைச்சிட்டுத்தான் இங்க வந்து நிக்கிறன்.நான் இப்ப எங்கயும் போறதா இல்லை.என்னோட மல்லுக்கட்டாம உங்கட உங்கட வேலையைப் பாருங்கோ எல்லாரும்" ன்று சத்தம் போட்டிட்டுத் தோட்டத்துக்குப் போனான்.போனவன் போனவன்தான். திரும்பி வரவேயில்லை.

ஏன் திரும்பி வரேல்ல? அப்பா நானிப்பிடி திரும்பி வந்தனான்?

தோட்டத்துக்க நிக்கேக்குள்ள ஆமி வந்து ட்றக் ஸ்டாற் பண்ணேல்ல தள்ள வரச் சொல்லி சின்னமாமாவையும் அவன்ர பிரணட்ஸ் இரண்டுபெரையும் கூட்டிக்கொண்டு போனவங்களாம்.உன்னை பொன்னுத்தாத்தாதான் வீட்ட கூட்டிக்கொண்டு வந்தார்.சின்னமாமா வருவானென்று இரவு முழக்க முத்தத்திலயே சாக்குக்கட்டில்ல இருந்தம் அவன் வரேல்ல.அடுத்த நாள் விடிய பள்ளத்தில கிடந்த அவனோட போன இரண்டுபேற்ற உயிரில்லாத உடம்பைத்தான் கொண்டு வந்தினம்.அன்றைக்கு தாத்தாக்கு முதல் மாரடைப்பு வந்தது.வெத்திலைல மை போட்டுப் பார்த்தவர் சொன்னதைக் கேட்டுக் களுத்துறைச் சிறைச்சாலைக்கு அலைஞ்சலைஞ்சு அங்கயும் இல்லையென்ற அலுப்பிலயே அடுத்த கிழமையே அவர் எங்களையெல்லாம் தவிக்க விட்டிட்டு ஆண்டவனிட்ட போய்ச்சேர்ந்திட்டார். இப்ப பெரிய மாமாதான் தன்ர சுமையைக் குறைக்க சின்னமாமா எப்பவாவது ஒருநாள் வருவான் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.அம்மம்மாக்கு எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சே பிறசர் கூடிக்கொண்டிருக்கு.இனிம நீ அம்மம்மாட்ட மாமாவைப் பற்றிக்கேக்கிறேல்ல சொல்லிப்போட்டன்.

அம்மா பின்ன ஏன் எங்கட ரியுூசன் ரீச்சர் சின்னமாமா உயிரோட இல்லையென்று சொன்னவா?

இத்தின வருசமா வராதவன்...எங்கயாவது உயிரோட இருந்தா ஒரு கடிதமாவது போட்டிருப்பான் தானே.அதான் சனமெல்லாம் அப்பிடிச் சொல்லினம்.

கானவி பத்து மணியாச்சு..அம்மாவும் பொண்ணும் .இன்னும் நித்திரை கொள்ளேல்லப்போல...

இல்லையம்மம்மா இந்தா நித்திரை இதோ பக்கத்தில வந்திட்டுது.நான் நித்தா.

குட்நைட் அம்மா.

குட்நைட் கானவி.

+++++++++++++++++++++++++++++++++++++

கானவி!

என்னம்மா?

நாளைக்கு அம்மம்மான்ர திவசம் அம்மா விடிய எழும்போணும் சமைக்க.றூமுக்க பால் வைச்சிருக்குக் குடிச்சிட்டுப் படுங்கோ. விடிய லெக்ஸர் இருக்கெண்டிட்டு இன்னும் என்ன கம்பியுூட்டர்ல தட்டிக்கொண்டு..

அம்மா இப்ப ஊரில நடக்குறதுகளை வாசிக்க தெச்சு மாமான்ர ஞாபகம் வந்திட்டு..அதான் அவரைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறன்.10 நிமிசத்தில படுக்கிறன்.

கெரியாப்போய்ப் படுங்கோ.குட்நைட்!

குட்நைட்மா.

+++++++++++++++++++++++++++++++++++++

-இந்தச் சின்ன மாமா போல எத்தினபேருக்கு இப்பிடி கனவாய்ப்போன உறவுகளுண்டு. மகனைத்தேடி அம்மா, அண்ணாவைத்தேடி சோதரர்கள், கணவனைத் தேடி மனைவி, தந்தையைத் தேடிப் பிள்ளைகள் ,காதலனைத்தேடி காதலிகள் , நண்பனைத்தேடி நண்பர்கள் இப்படி எத்தனை பேர் காணமால் போன உறவுகளின் நினைவுகளைச் சுமந்தபடி இன்னமும் அவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.-

Wednesday, July 12, 2006

என்ன தான் விசித்திரமோ?

கரை தேடும் அலை மீண்டு(ம்) கடல் சேர்கிறது
இலைஉ திரும் மரம் மீண்டும் துளிர் விடுகிறது
மண் வீழும் நீரும் ஆவியாய் விண் மீள்கிறது

என்ன தான் விசித்திரமோ?
பிரிந்து போன நம் காதல் மட்டும்
இன்னும் உயிர்ப்படைய வில்லை

தரித்து நிற்கும் புகைவண்டி மீண்டும் பயணிக்கிறது
இடைவேளைக்குப் பின்னரும் திரைப்படம் தொடர்கிறது
நின்று போன யுத்தம் மீண்டும் தொடர்கிறது

என்ன தான் விசித்திரமோ?
நின்று போன நம் காதல் மட்டும்
மறுபடி தொடரவே யில்லை :wink

-சினேகிதி-

கொள்ளையின்பம் தரும் மழலைகள்

எல்லாற்ற வீட்டிலயும் மழலைச்சத்தம் கேட்டிருக்கும் கேட்டுக்கொண்டிருக்கும் இல்லாட்டா இனிம கேக்கும் தானே?அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பண்ணிய குறும்புகளையாவது ரசிச்சிருப்பீங்கள் தானே:-)

எங்கட வீட்டயும் இரண்டு பபாக்கள் இருக்கினம்.இவை செய்யுற ஒவ்வொரு சின்னச் சின்னச் செயல்களும் நல்ல ஒரு கவிதை வாசித்த சுகத்தைவிட கூடச் சந்தோசம் தரக்கூடியவை.அப்படி நான் ரசிச்சு சிரிச்ச சில சந்தர்ப்பங்களை உங்களுக்குச் சொல்கிறேன் அதேமாதிரி நீங்கள் ரசித்தவற்றையும் சொல்லுங்கள்.

சின்னாக்கள் வடிவாக்கதைக்க முதல் திக்கித் திக்கி அரைகுறை வார்த்தைகளால் கதைப்பினம்.
கவினுக்கு இரண்டு வயசு.ஒரு சில வார்த்தைகள் மட்டுமே கதைச்சார் இப்ப " அத்தி அண்ணா பார்க் டொம்மா" என்று ஒவ்வொருநாளும் அஞ்சுமணிக்கு நச்சரிக்கத் தொடங்குவான்.சித்தி அண்ணாவை பார்க்குக் கூட்டிக்கொண்டு போங்கோ என்றதுதான் அதின்ர அர்த்தம்.தம்பி பிறந்தவுடனே எல்லாரும் அண்ணா என்று சொல்லிப்பழக்கித் தன்னைத்தானே அண்ணா என்று கூப்பிடுறார்.

தண்ணில விளையாடுறது எல்லாச் சின்னப்பிள்ளையளுக்கும் விருப்பம் போல.கவிணும் "அண்ணா கும் கும் குளிக்கிப்போ" என்று சொல்லுவார்...இன்று மழை பெய்தபோது ஓடி வந்தார் வந்து " அத்தி தாத்தாக்கார் அப்பாக்கார் மாமாக்கார் கும் கும் அ அ".

ஆதிப்பட அத்தி அத்திக்காய் பாட்டுப்போட்டாத்தான் சாப்பாடு தீத்தலாம்.வானுக்குள்ள பாட்டுப்போட்டா "சுற்றும் விழிச்சுடரே " ,"அத்தி அத்திக்காய் " ,"ரா ரா" இப்பி அவருக்கெண்டு கொஞ்ச பாட்டிருக்கு.பாட்டின்ர ஆரம்ப இசை வரவே அவர் பாடத் தொடங்கிடுவார் மிச்ச பாட்டு. அதே மாதிரி ப்ளு குளூஸ் விக்கிள்ஸ் என்றாக்காணும் சாப்பாடும் வேண்டாம்.

கவின்ர பக்கத்துவீட்டு பிரண்ட்ஸ் கொஞ்சம் பெரிய ஆக்கள்.இப்ப கின்டர்கார்டின் போயினம்.அவேன்ர அம்மம்மா சொல்லுவா இவங்கள பக்கத்தில வச்சுக்கொண்டிருந்தா ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சுக் கதைக்கோணும் என்று.ஒருநாள் தெரியாத்தனமா கெட்டவார்த்தை என்று சொல்லிட்டாவாம் உடனே அவான்ர பேரன்கள் இரண்டு பேரும் ஓ ஓ என்று சொல்லத்தொடங்க தானுடனே "excuse ma french " என்று சொல்ல அவை உடனே "hmm that wasn't french" என்று சிரிக்கினமாம்.
இப்பிடி நீங்கள் ரசித்தவற்றைச் சொல்லுங்கள். :)

-சினேகிதி-

Monday, July 10, 2006

மல்ரிபிள் பேர்ஸனாலிற்றி டிஸ்ஓடர்


இந்தப்பெயர் நமக்குப் புதிதில்லை.தமிழ்ச்சினிமாக்களில் அடிக்கடி தடக்குப்படும் வித்தியாசமான மனநோய்.சந்திரமுகில ஜோதிகா,அந்நியன்ல அம்பி ,பார்த்திபனுடைய ஒரு படம் இப்படி நிறையப் பார்த்து விட்டோம்.

அதிசயமான புதிரான பலர் அறிய ஆவலாயுள்ள உளவியல் சிக்கல்களில் விவாதத்துக்குரியதும் ஆராய்ச்சியாளர்களோடு மல்லுக்கட்டும் ஒரு மனநோய்தான் இந்த MPD.

இவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவருடைய குணாதிசியங்கள் இருக்கும்.ஒவ்வொரு குணாதிசயத்தையும் ஒவ்வொரு "Alter" என்று சொல்வார்கள்.ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு அல்டர் இவர்களில் ஆதிக்கம் செலுத்தும்.உதாரணமா அந்நியனில் விக்ரம் சில நேரம் அந்நியனாகவும் சில நேரம் அப்பாவி அம்பியாகவும் அட்டகாச றெமோகாவவும் வருவாரே.இந்த அல்டரில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் மருத்துவரிடம் வரும் MPD க்கு தன் அல்டர்களைப் பற்றி அநேகமாகத் தெரிந்திருக்காது ஆனால் அல்டர்களுக்கு தம் நிலையான பாத்திரம்(original patient) பற்றியும் தன் மற்ற அல்டர்களைப் பற்றி முழுவிபரமும் தெரியும்.இந்த அல்டர்கள் வேறு வேறு பிரதேசங்களில் வசிக்கும் வெவ்வேறு வயதுடைய வெவ்வேறு இனமாகவோ ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் என்பது மற்றொரு வியப்பூட்டும தகவல்.

MPD உள்ளவர்களை சோதனைக்குட்படுத்தி அறிந்த ஆச்சரியமான உண்மைகளில் இவர்களுக்கு வெவ்வேறு இசை ரசனை, IQ ,வித்தியாசமான ஒவ்வாமைகள் இருப்பதும் அடங்கும்.

இந்த MPD க்கள் தங்கள் சின்ன வயதில் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப் பட்டிருக்கக் கூடும் என்பது உளவியலாளர்களின் கருத்து.இந்த MPDக்களின் அல்டர்கள் இவர்களின் ஒன்பதாவது வயதுக்கு முதலே உருவாகத் தொடங்குகிறார்கள்.ஒவ்வொரு அல்டரும் ஒவ்வொரு விதமான பாலியல் துன்புறுத்தலின்போது வளரத்தொடங்குகிறது.இந்த MPDயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் என்பது கசப்பான உண்மை.

-சினேகிதி-

நீ இல்லாத நான்

உனக்குப் பிடித்த பாடல்களாலும்
உன்னை படித்த நாட்களாலும்
உன்னை வடித்த வரிகளாலும்
திமிருற்ற எந்தன் ஏட்டை
அழித்து விட்டு எனக்கு நானே
சொல்லிக்கொண்டேன நம் காதல்
கலைந்து விட்டதென்று

காலையில் தினமும் கண்சிமிட்டும் பகலவனால்
உன் துளிர்ப்புன்னகைச் சேமிப்பெடுத்து
இன்னமும் ரசிக்கிறேன் சிலிர்க்கிறேன்
இருந்தும் உன்னை விட்டு விலகி விட்டேன்

சில்லென்று மெய் நனைக்கும்
ஒவ்வொரு நீர்த்துளியும்
உன் ஸ்பரிசயமாய் படர்ந்தன
ஆனாலும் உன்னை மறந்து விட்டேன்

உட்கொள்ளுமோர் பருக்கையிலும்
நிராசையாகிப்போன நம் ஆசைகள்
நளினத்தோடு எள்ளி நகையாடின
என்றாலும் நாம் பிரிந்து விட்டோம்

பார்வையில் பாசையில் தூண்டலில்
துலங்கலில் நிறத்தில் மணத்தில்
சுவையில் தூக்கத்தில் கனவில்
நினைவில் எங்குமாக எல்லாமாக
நீக்கமற நீ நிறைந்திருக்கலாம்!

அதனாலென்ன
எனக்கு நீ இல்லாத நான் கிடைத்துவிட்டேனென
உரக்கச் சொல்லிக்கொள்வேன்- உண்மையாகாதா?

-சினேகிதி-