Custom Search

Wednesday, June 29, 2005

மாவீரர் நீங்களே...…

-சினேகிதி-

அளவில்லா ஆனந்தத்தோடு அண்ணன்
படை சேர்ந்தாய் அண்ணாவே
பூநகரி மணலாறு கிளிநொச்சி
எனக்களம்பல கண்டாய்
இன்று நீயும் மாவீரன்

வீட்டருகில் நீ வெடித்துச் சிதறினாய்
உள்ளம் வலிக்கத்தான் செய்தது
உன் சோதரர்கள் உனக்குச் சொல்லவில்லையா
அது இராணுவம் ரோந்து வரும் நேரமென்று
யார்யாரோவெல்லாம் ஆறுதல் சொன்னார்கள்
அம்மாவும் விசும்பல்களை நிறுத்திவிட்டாள்
அழுது ஆற்றாமை தீர்த்தால்
இராணுவ இராஜமரியாதையையும்
ஏற்கவேண்டி இருக்குமே

ஐயர் வந்து சாந்தி செய்தார் - நீ
சிதறிப்போன சந்தில்
எங்களுக்குத் தெரியும் தமிழீழம் ஒன்றுதான்
உங்களுக்கு ஆத்ம சாந்தியென்று
இரு தசாப்தங்கள் ஆகிவிட்டன ஆனாலும்
உங்கள் கனவுகள் நனவாகவில்லை

ஓ மாவீரவே உங்களுக்கு
விடியலின்பூபாளம் கேட்கிறதா?
தானைத்தலைவரின் தங்குதடையற்ற
தலைமையில் உம் சகாக்களின்
போராற்றல் பேராற்றலாய்
பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறதே
அது உங்களுக்குத் தெரிகின்றதா?

உங்கள் நாமகரணங்களை தகர்க்க
சில புல்லுருவிகள் - பணத்துக்காகப்
பதவிக்காகப் பல்லிளித்துப் பறந்தாலும்
பற்றுறுதி கொண்ட வேங்கைகளுக்குப்
பக்கபலமாகத் திரளும் பல வேர்களாய்
மாணவர் சக்தி உலகெங்கும் திரள்கிறதே
அதை நீங்கள் அறிவீர்களா?
அதனால்தான் சொல்கிறேன்
“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்”.

Sunday, June 26, 2005

தெரிந்தால் நீங்கள் சொல்லக்கூடாதா?

முதலாம் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபை 1945ம் ஆண்டு மனித உரிமைபப்பிரகடனம் என்றொரு பிரகடனத்தைக் கொண்டு வந்திச்சிதாம்.

ஆ என்ன பிரகடனம?
மனித உரிமைப்பிரகடனமோ?? அதில என்ன சொல்லியிருக்கு?

ஆதில ஒரு தேசிய இனம் தன்னைத்தானே ஆட்சி செய்ய உரிமையுடையது எண்டு சொல்லினம்.

பொறுங்கோ பொறுங்கோ அதென்ன தேசிய இனம்?

தேசிய இனம் என்றால்
• தொடர்ச்சியான நிலப்பரப்பு
• தனித்துவமான மொழி
• பாரம்பரிய கலைப்பண்பாடு
• நீண்ட வரலாறு
• தனித்துவமான பொருளாதாரம்இவ்வளவு பண்புகளையும் தன்னகத்தே கொண்டதான ஒரு இனம்.

இலங்கையில சிங்களவர், தமிழர் ,முஸ்லிம்கள், பறங்கியர் மலைநாட்டுத்தமிழர் என்ற ஐந்து வகை இன மக்கள் வாழ்கின்றார்கள்.இவர்களில் தமிழர் தேசிய இனமா என்று பார்ப்பம்.

எங்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நிலப்பரப்பு இருக்கோ?
பின்ன? சிலாபம், புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம், வவுனியா, முல்லைத்தீவு, புல்மோட்டை, திருகோணமலை ,மட்டக்களப்பு, அம்பாறை அப்பிடியே தொடர்ச்சியா எங்கட நிலமெல்லோ.






எங்களுக்கு என்றொரு தனித்துவமான மொழியிருக்கோ?

அதான் எங்கட தமிழ் மொழி.அதென்னமோ செம்மொழி என்று சொல்லுவினமே…அப்பிடித்தானே?

அடுத்து எங்களுக்கு என்றொரு பாரம்பரியக் கலைப்பண்பாடு இருக்கோ?

அதான் இருக்கே எங்கட சாப்பாடு நாங்க ஆடை அணிகிற விதம் எங்கட விழாக்கள். இன்னும் நிறைய எனக்கு மிச்சம் தெரியாது யாராவது சொல்லுங்கோ….

எங்கட நீண்ட வரலாறு ??

அதான் பூநகரியில, காரைநகரில, வேலணையில எல்லாம் எங்கட மூதாதையரின் வரலாற்று எச்சங்கள் கண்டு பிடிச்சிருக்கிறம் என்று வரலாற்றாய்வாரள் ப.புஸ்பரட்ணம் குமுவினர் சொல்லியிருக்கினம்.

பொருளாதாரம்??

அதான் போதுமானளவு இருக்கே.எங்களட்ட என்ன இல்லை கேக்கிறன்?நீர் வளம் இல்லையா நில வளம் இல்லையா?சீமெந்து இருக்கு.கடல் பெரு வளம் இருக்கு.என்ன பயிரும் விளையக்கூடிய நிலம் இருக்கு.இப்ப பத்தாததுக்கு மன்னாரில பெற்றோலிய வளம் வேற இருக்குதாம்.

அப்ப தமிழர் ஒரு தேசிய இனம் தானே?

போர்த்துக்கேயர் 1505 ல் வந்திச்சினம் பிறகு ஒல்லாந்தர் ஆங்கிலேயர் எண்டு மாறி மாறி வந்து 1833 ல் யாழ் கண்டி கோட்டை என்று இருந்த மூன்று இராச்சியங்களையும் ஒன்றாக்கி பிரச்சனையைத் துவக்கி வைச்சினம்.பிறகு திருப்பிப் போகும்போது தமிழர்களையும் சிங்களவரிடம் ஒப்படைச்சிட்டுப் போட்டாங்கள்.

இப்ப நான் மகாவம்சம் என்ற நூலில் சொல்லப்பட்ட சில சுவாரிசயமான சில தகவல்களைச் சொல்லப் போறன்.

எல்லாளன் எண்டால் எல் ஐ ஆண்டவன் என்று அர்த்தமாம். எல் எண்டால் தமிழ் என்றொரு அர்த்தமிருக்காம்.இந்த எல்லாளனோடு சமர் புரிந்த துட்டகைமுணுவின் அம்மா விகாரமகாதேவிக்கு துட்டகைமுணுவைக் கருவில் சுமந்த போது மூன்று ஆசை வந்திச்சாம்.
• கொம்புத்தேன் தனக்கும் பிக்குமார்களுக்கும் அருந்தத்தரவேண்டும்.
• எல்லாளனுடைய அரண்மனையில் பூக்கும் ஒரு விசேச மலரைத்தான் தலையில் சூட வேண்டும்.
• எல்லாளனுடைய தளபதி ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு வழிந்தோடும் இரத்தத்தை தான் குடிக்க வேண்டும்.

இப்படி தமிழர்கள் சிங்களவர்களின் எதிரிகள் என்ற பாடம் துட்டகைமுணு போன்றவர்களுக்கு கருவிலேயே புகட்டப்பட்டதாம்.

1948 ம் ஆண்டு மலையகத்தமிழர்களின் குடியுரிமை டி.ஸ்.சேனனாயக்காவால் பறிக்கப்பட்டது. 1950 ல் மகாவலி குடியிருப்புத்திட்டத்தின் கீழ் கொலை கொள்ளை கற்பளிப்பு போன்ற குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற சிங்களச் சிறைக்கைதிகளை விடுதலை செய்து அவர்களை தமிழர் வாழும் பகுதிகளான அம்பாறைப் பிரதேசங்களில்குடியமர்த்தி தமிழர்களை இடம்பெயரச் செய்வதன் மூலம் அவர்களுக்கான தேசிய இனப் பண்பான நிலப்பரப்பைத் தகர்த்தார்கள்.

1956 ல் பண்டாரநாயக்க மொழியில் கை வைத்தார்.சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்குவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.

1971 ல் கல்வித்தரப்படுத்தலை அரசாங்கம் கொண்டுவந்தது.சிங்கள மாணவருக்கு குறைந்த வெட்டுப்புள்ளியுடனே பல்கழைக்கழகம் செல்ல வாய்புக் கொடுத்தது.அவர்களைவிட அதிகப் புள்ளிகள் பெற்ற தமிழ் மாணவர்கள் வீதியில் திரிவதா என்றெதிர்த்த சிவக்குமாரண்ணாவும் 1974ல் விடுதலைப் போராட்டத்தில் முதலாவதாக சயனைற் அருந்தி வீரமரணமடைந்தார்.

1974 ல் தமிழாராய்ச்சி மாநாடு முற்றைவெளியில் நடந்தபோது 10ம் நாள் 9 தமிழர்கள் சிங்களக் காவலர்களால் காரணமின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1980 ல் எமது இதயபூமியான மணறாலிருந்து தமிழர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்டு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

1981 ம் ஆண்டு தென்கிழக்காசியாவின் தலைசிறந்த நூலகமாகிய யாழ் நூலகம் லலித் திசாநாயக்க போன்ற படித்த சிங்களவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.இதில் தமிழர் வரலாற்றுச் சான்றுகள் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் எல்லாம் அழிந்து போயின.

இப்படி தமிழர் ஒரு தேசிய இனமாக இருக்கக் கூடாது என்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்தன.

இப்ப சொல்லுங்கோ தமிழர் ஒரு தேசிய இனம்தானே?அவர்களுக்கு தம்மைத்தாமே ஆட்சி செய்யும் உரிமை ஏன் மறுக்கப்பட வேண்டும்.?

இன்னொரு கேள்வி….
இலங்கையின் முதல் மனிதன் என்று மகா வம்சத்தில் சொல்லப்படுகின்ற விஜயன் என்பவர் சிங்கத்துக்கும் இளவரசிக்கும் பிறந்தவராம்…அறிவியல் சார்ந்து இது எவ்வளவு சாத்தியம்.?

Saturday, June 25, 2005

தண்ணியடிக்கிற ஆக்கள் உளறுவினமோ??யெவன்(ள்) சொன்னான்(ள்)?

-சினேகிதி-

நேற்று மாமா மொன்றியலிலிருந்து வந்தவர்.அம்மாக்கு முன்னால இருந்து தண்ணியடிக்க அவருக்கு வெட்கம் போல அதால அம்மாட்ட சொன்னார்.... தண்ணியடிச்சுப் போட்டுக் கதைக்கிறன் எண்டு மாத்திரம் நினைக்க வேண்டாம்….அண்ணி கோவிக்கக்கூடாது விஜி வேலைக்குப் போட்டாள் அப்ப அங்கயும் போக ஏலாது.குலம் மச்சான்ர மனுசியைப் பத்தி எனக்குத் தெரியுத் அங்க போனா சண்டை தான் வரும் குணம் மச்சான்ர மனுசி எல்லாரையும் வெண்டவ அதான் யோகன் மச்சானுக்குப் போன் பண்ணினான் மச்சான் வரச்சொன்னார் வந்திட்டன்.நீங்கள் ஒன்றும் செய்து தரத்தேவையில்லை நாங்களே எல்லாத்தையும் பாரத்துக் கொள்றம்.நான் தண்ணியடிச்சா உண்மைதான் கதைக்கிறனான்....

சுரி இங்க வந்திட்டங்கள் எண்டு மனுசிக்குப் போன் பண்ணிச் சொல்லிட்டீங்களே??

மகன் போன் பண்ணினவன் அதில இருந்து அவாக்குத் தெரியும் அப்பன் உருப்படியாப் போய்ச் சேர்ந்திருப்பபன் எண்டு சொல்லிட்டு ஒரு சிரிப்புச் சிரிச்சார்... …யெப்பா

பிறகு அப்பாக்குச் சொல்லிக் கேட்குது மச்சான் நான் நேற்று அண்ணைக்குப் போன் பண்ணினான் சரியோ அண்ணன் கேட்டார் டேய் ஏன் நீ இவ்வளுவு தலைமுடி வைச்சிருக்கிறாய் அதுவும் இந்த வெக்கைக்கு அளவா வெட்டலாம் தானே…உடனே நான் சொன்னன் ஏனண்ணே வெட்டுவான் வேர்க்கிற நேரம் கழட்டி வைக்கலாம்தானே…ஹி ஹி.

இப்படி மாமான்ர உருப்படியான உளறல்கள் விடிய விடிய நடந்ததாம் நான்தான் மிச்சத்தை கேக்காம நித்திரையாப் போனன்..

பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்……..

-சினேகிதி-

பின்னேரம் 6 மணி இருக்கும் மகளையும் வாசல்ல இருந்து படிக்கச் சொல்லிட்டு பாரதி முத்தத்தில அரிசிமா வறுத்துக் கொண்டிருந்தவா.பொத் பொத்தெண்டு மதிலால நிறையப்பேர் ஏறி விழுற சத்தம் பாரதி அடுப்பையும் அப்பிடியே விட்டிட்டு பிள்ளையையும் வீட்டுக்குள்ள போகச்சொல்லி சைகை காட்டிப்போட்டு தானும் போய்க் கதவைச் சாத்திப்போட்டு யன்னலோரமா நிண்டு கவனிச்சா நாலுபேர் கையில துவக்கோட முதுகில சாரத்தால போர்த்தபடி நிக்கினம்.

ர் ர் என்று மெல்லமா கதவை சுரண்டுற சத்தம்.பாரதிக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது.

சித்தி பாரதிச்சித்தி நான்தான் றஜி வந்திருக்கிறன்….கதவைத் திறக்கிறிங்களே….

லைற்றைப் போட்டிட்டுக் கதவைத்திறந்து விட்டிட்டு தெய்வமே நீயேடா எனக்கு இப்பதான் உயிர் வந்தது.நான் போனமுறை மாதிரி கள்ளனாக்கும் எண்டு நினைச்சிட்டன்.ஆராவது பாத்துத் தொலைக்க முதல் கெதியா உள்ள வாங்கோ பிள்ளையள்.என்ன இந்த நேரத்தில ஆயுதத்தோட வந்திருக்கிறியள்?

சித்தி நாங்கள் நாளைக்கு இரவு மட்டும் இங்கதான் நிக்கவேணும் உங்களுக்கு அதில என்னவும் பிரச்சனையோ ?

சீ சீ நீங்கள் வெளியில வராம இருந்தாச் சரி.

சரியான பசி சாப்பிட என்னவும் இருக்கோ??

அந்த அறையில இருங்கோ பத்து நிமிசத்தில சாப்பாடு தாறன்.

மகள் அண்ணாவுக்கு என்னவும் வேணுமோ எண்டு கேட்டு எடுத்துக்குடுங்கோ.

றஜி அண்ணா நான் இந்த துவக்கை தொட்டுப் பார்க்கட்டே??

ம் கவனமா தொட்டுப் பாரன்.

உங்களோட வந்தா எனக்கும் இப்பிடி ஒன்று துவக்கு தருவினம் என்ன?

நீ அங்க வரவேண்டாம் நீ வந்திட்டா பிறகு உங்கட அம்மாவையும் எங்கட அம்மாவையும் ஆர் பாரக்கிறது.

நீங்கள் நாளைக்கு எங்க போகப்போறிங்களண்ணா?

றஜி பத்து வயதேயான தங்கையின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாத நிலையில் அவளைத் தூக்கிக் கொஞ்சி விட்டுப் பேசாமல் இருந்தார்.

சாப்பாடு ரெடி றஜி.

சித்தி உங்கட கையால சமைச்ச சாப்பாடு சாப்பிடுறது இன்றைக்குத்தான் கடைசி என்று நினைக்கிறன்.

சும்மா இருடா அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது.ஏன் எங்காவது தூரமான இடத்துக்குச் சண்டைக்குப் போகப்போறீங்களே?

இப்ப தெரியாது சித்தி தூரத்துக்குப் போவமோ திரும்பி வருவமோ என்று ... நால்வரும் ஒருவரையொருவர் பாரத்துக் கொண்டார்கள்.

மறுநாள் காலை நன்றாகவே விடிந்தது.நால்வரும் பாரதிக்கு முதலே குளித்து முடித்திருந்தார்கள்.பாரதி எழும்பி வந்தால் முத்தத்தில துளசிச் செடியில சாரம் விரிச்சுக் கிடிந்தது.பாரதிக்கு வந்த கோபத்தில …
றஜி சித்தப்பாவும் ஊரில இல்லை நீங்கள் உப்பிடி நீட்டுக்கு சாரத்தை விரிச்சு வக்க யாராவது பார்த்திட்டு ஆமிக்காரரிட்ட போய்ச் சொன்னால் நான் என்னடா பண்ணுவன்.முதல்ல போய் உதெல்லாம் எடுத்து உள்ளுக்க கொண்டே விரி பார்ப்பம்.

சித்தி கோவிக்காதங்கோ.நான் போகும்போது உங்கட சிரிச்ச முகத்தைத்தான் பார்க்கவேணும்.

நீ வந்ததிலிருந்து கதைக்கிறது ஒண்டும் சரியாப்படல எனக்கு.எல்லாரும் வாங்கோ பாணும் சம்பலும் சாப்பிடுவம்.

காலம சாப்பிட்டிட்டு அறைக்குள்ள போனவங்கள் இன்னும் வெளில வரேல..மகள் போய் மத்தியானச் சாப்பாடு றெடியெண்டு சொல்லுங்கோ.

அம்மா அம்மா றஜியண்ணா பெரிய படம் ஒன்று வைச்சுக்கொண்டு மற்ற அண்ணாவைக்கு ஏதோ படிப்பிக்கிறார்.

பொழுதுசாயிற நேரம்தான் அறையை விட்டு வெளில வந்தவை சாப்பிட்டிட்டு கொஞ்ச நேரம் இருந்து கதைச்சிட்டுப் போட்டு வாறம் எண்டு சொல்லிட்டு துவக்கு எல்லாம் எடுத்துக்கொண்டு போட்டினம்.

அவையள் போய்க் கொஞ்ச நேரத்தால சூட்டுச் சத்தம் கேட்டது.

பாரதியக்கா பாரதியக்கா….

என்ன நிமல் ஏனிப்பிடி ஓடி வாறாய்?

நாவலடிச் சந்தியில பெடியளும் ஆமியும் நேர சந்திச்சிட்டாங்களாம்.உங்கட றஜி அண்ணாவை வேற எங்கயோ காம்ப் அடிக்கப் போகேக்க அம்பிட்டிட்டனமாம்.பக்கத்தில நிண்ட ஆறேழு ஆமியைச் சுட்டுப்போட்டு வயித்தில கிறனைற்றை வச்சு அமத்திப் போட்டினமாம்.ஆரும் தப்பேல்ல என்று கோபாலு மாமா சொன்னவர்.

Friday, June 24, 2005

தரிசனம் கிடைக்காதா?

-சினேகிதி-

ஓவ்வொரு வருசமும் முத்துமரி அம்மன் கோவில் திருவிழா இருபத்தைந்து நாட்களும் புத்தக விற்பனை நடப்பது வழக்கம்.அவ்வாறே 2000ம் ஆண்டும் புத்தக விற்பனைப் பிரிவுக்கு அருகில் உள்ள இரண்டு பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் அழைக்கப்பட்டு ஒவ்வொரு செயற்திட்டங்கள் வழங்கப்பட்டது.காலை ஆறு மணியிலிருந்து மத்தியானம் இரண்டு மணிவரைக்குமான காசுப்பொறுப்பாளர்கள் சயிந்தினியக்காவும் ராஜேஷண்ணாவும் மற்ற மற்ற பொறுப்புகளுக்குமாக மொத்தமாக எட்டு பேர் இருப்பார்கள்.அதில நான் விற்க வேண்டியது மு.வரதனாரின் புத்தகங்கள் (“தம்பிக்கு” “தங்கைக்கு” அப்பிடிதான் அவருடைய புத்தகங்களின் தலைப்புக்கள் இருந்நதாக ஞாபகம் ).இருபத்தைந்து நாட்கள் சந்திக்கிற இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் இடையே நிறைய காதல் பூ பூக்கிறதும் நடக்கிறது.

நான் படிச்ச பள்ளிக்கூடத்தில திடீர் இராணுவ நடவடிக்கை மாதிரி எங்களை எல்லாம் பிறேயருக்கு அனுப்பிட்டு சில ரீச்சர்ஸ்மாரும் மாணவர் தலைவிகளும் சேர்ந்து எங்கட உடமைகள் அத்தனையும் ஆராய்வார்கள்..அதில யாராவது வைத்திருந்த நடிகர்களின்ர படம் லவ் லெற்றர்ஸ் ஏதாவது அகப்பட்டா அதோ கதிதான….அம்மா அப்பா வந்துதான் பிரின்ஸிட்ட போய் அதெல்லாம் வாங்கவேணும் …..அதுமட்டுமா இத்தின cm ல்தான் சட்டை collar இருக்கவேணும் அதில button இருக்கவேணும் சங்கிலி போடக்கூடாது மோதிரம் போடக்கூடாது ஒருநாள் கூட தலை பின்னி றிபன் கட்டாம வந்தி;ட்டா அவளவுதான் வாழைநாரால பின்னிக் கட்டி விடவெண்டே இருக்குது ஒரு குறூப்.இப்பிடியெல்லாம் செய்யிற அக்காமார் தப்பித்தவறி எங்கட அண்ணாமாருக்கு லைன் போடுறதா தெரிஞ்சது அம்புட்டுத்தான் அவங்க காதலுக்குச் சமாதிதான்.நிறைய பாவம் பண்ணிட்டன் போல இருக்கு. .என்னத்தையோ சொல்ல வந்து எங்கயோ போயிட்டன்.

சயிந்தினயக்காவும் எங்களுக்குப் பிடிக்காத ஒரு மாணவ தலைவிதான்.ராஜேஷண்ணாட்ட நாங்கள் ரியுசனுக்குப் போறனாங்கள்.அவருக்கு சயிந்தியக்காவில விருப்பம் அவா நல்ல வடிவு கெட்டிக்காரியும் கூட.அவேன்ர A/L ரியூசன் முடிய இன்னும் கொஞ்சநாள் தான் இருந்தது அதான் அவர் திருவிழாவிலேயே தன்ர காதலைச் சொல்லப் போறன் எண்டு சொல்லிட்டு வைரமுத்ததுவின் கவிதைப் புத்தகம் ஒன்றையும் வாங்கி வைச்சிருந்தவர்.எங்களிட்ட சொன்னவர் நான் சயிந்திட்டச் சொல்லப் போறன் என்று நாங்களும் குட் லக் சொல்லிட்டுச் சாப்பிட போட்டம்.சாப்பிட்டு வந்தால் சயிந்தியக்கா இல்லை ராஜேஷண்ணா தனிய கோபத்தில இருந்தார்.என்னாச்சு எண்டு கேட்டதுதான் தாமதம் சும்மா ஆமிக்காரன் கெலியிலிருந்து நெருப்புப்பொறி பொரிஞ்ச மாதரி வார்த்தைகள் வந்து விழுந்தன … “ பெடியங்கள் அப்பவே சொன்னவங்கள் டேய் சயிந்தியைப் பற்றி உனக்குத் தெரியாது… வேண்டாம் என்று….நான்தான் நம்பாமால் ….இருந்தாலும் இந்தத்திமிர் கூடாது. பிடிக்கல என்றால் சொல்ல வேண்டியது தானே அத விட்டிட்டு நான் குடுத்த புத்தகம் சொக்லட் இரண்டையும் இங்க இந்தக் கால்வாயில போட்டிட்டுப் போட்டாள்.அழகு அறிவோட சேர்த்து மற்றவையை எப்பிடி நோகடிக்கலாம் என்றும் தெரிஞ்சு வைச்சிருக்கிறா.”

நாங்கள் எட்டி கால்வாயைப் பார்த்தா சாமி தீர்த்தம் ஆடிட்டுப் போன மஞ்சள் குங்குமம நீரெல்லாம் வடிஞ்சு வந்து கவிதைப் புத்தகம் நனைஞ்சு சிதைஞ்சு கொண்டிருந்தது ராஜேஷண்ணான்ர மனசைப்போல.

Monday, June 20, 2005

நானும் என் நண்பர்களும்

-சினேகிதி-

என்னவென்று சொல்வது எங்க ஊரழகை? ஐயோ எனக்கு வர்ணிக்கத் தெரியாதே…நான் பிறந்தது கொஞ்சம் வளர்ந்தது அல்வாய் என்ற ஊரில்.மிச்சம் வளர்ந்தது மாத்தளையில்.அல்வாயில் பிறந்ததால அல்வா குடுப்பனோ எண்டு நினைக்க வேண்டாம் ஆனால் என்ன எனக்கு கொஞ்சம் வாய் நீளம் எண்டு நினைக்கிறன். சீ சீ வாயெல்லாம் அளவான நீளம் அகலம் தான் கதைதான கூட.

அல்வாயில எனக்கு இருக்கிற நண்பர்கள் கூட்டத்தில முக்கியமானவை சுஜித்தா சுபாசினி பிரபா இவையெல்லாம் பக்கத்;து வீட்டாக்கள்.ரியூசனில கோபிராம் புழுக்கொடியல் துசி அபிராமி ஜெயந்தி தர்சி….ரியூசனால வரேக்க ஒரு முறைப்பாட்டோடதான் நான் வீட்ட போறது.அம்மம்மா இண்டைக்கு என்னை துசி நுள்ளிப்போட்டா ம் ம் அப்பத்தானே அம்மம்மா போய் அவேன்ர அம்மம்மாட்ட யாருடி அவ என் பேத்தியை நுள்ளினவா கொண்டாடி அந்தக்கையை வெட்டி அடுப்புக்க வைக்கிறன்…இப்ப நினைச்சா சிரிப்பு வருது ஆனால் அப்ப அதெல்லாம் தினமும் நடக்கிற கூத்து.

ஐந்தாம் வகுப்பு முடிய வேற பள்ளிக்கூடம் போகவேணும் அப்ப புது நண்பர்கள் பது ஆசிரியர்கள் ‘.செல்லையா கம்பஸ’ என்றது நான் படிச்ச பள்ளிக்கூடத்துக்குச் செல்லப்பெயர்.எல்லா ரீச்சருக்கும் என்னில விருப்பம் வாழ்க்கைத்திறன் படிப்பிக்கிற செல்வி ரீச்சரைத் தவிர. 'இவாக்குப் பஞ்சு மாஸ்ரர்ட மருமோள் எண்ட தலைக்கனம் அதான் கணிதத்துக்கு மட்டும் தொண்ணூறு எடுப்பா என்ர பாட நேரம் தான் பேச்சுப் போட்டி வினாடி வினா அந்தப் பிறக்ரிஸ் இந்தப பிறக்ரிஸ் எல்லாம் வரும்'.அவாக்கு என்னக் கண்டாலே பிடிக்காது.நான் கஸ்தூரி சோபர்ணா மைத்திரேயி லிலாணி அனிதா துசி எல்லாரும் கூடி கூடி கதைக்கிறது. அவான்ர வீட்டுக்காரர் அவான்ர ஆக்கினை தாங்காம விட்டிட்டு போட்டாராம் அதான் அவாக்கு guilty நாங்கள் தன்னைப் பற்றித்தான் கதைக்கிறம் எண்டு.இப்பிடியே அவாவோட மல்லிக்கட்டினபடியே படிக்கும்போது எங்கட குடும்பம் மாத்தளைக்குப் போகவேண்டியதாயிற்று.

அங்க போய் எனக்கு ஒரு நண்பர் பட்டாளமே கிடைத்தார்கள்.போன புதுசில நான் கதைக்கிறது அவைக்கு விளங்காது.அவை சொல்லுவினம் பணிய(கீழே) அப்புறம் (அதுக்குப்பிறகு) கசால் (சண்டை) உக்காருங்க (இருங்க) அப்பிடியே உள்ளம் கேட்குமே லைலா மாதிரி ஏதாவது எக்குத்தப்பா பண்ணிறதால எனக்கு வசா லுசா யசி காத்தி லோஜி வித்யா வாசு கோதா மலர் அஸ்மின் இப்படி நிறைய நண்பர்கள்.அங்க நடந்த முக்கியமான விசயம் என்னெண்டால் நான் சயன்ஸ படிக்கப்போன ரீச்சரோட அரட்டை அடிக்கறதால அவா எங்கட கூட்டத்துக்கு தோழியாயிட்டா (அவான்ர வீட்டதான் நாங்கள் வெரலிக்காய் ஆம்பரலங்காய் எல்லாம் களவெடுக்கிறது) அப்ப ஒருநாள் அவான்ர அல்பம் பார்த்துக்கொண்டிருக்க அதில செல்வி ரீச்சரின்ர கல்யாணப்போட்டோ எனக்கு ஒரே ஆச்சர்யம்.நான் சொன்னன் மிஸ் இவாதான் எனக்கு ரொம்பபபபபபபபப பிடிச்ச செல்வி ரீச்சர் எண்டு.பக்கத்தில இருந்ததுகள் எல்லாம் சிரிக்கத்தொடங்கிட்டுதுகள்.மிஸ் சொன்னா ஓ இவாதான் என்ர மூத்தண்ணி ஆனால் அண்ணா இப்ப வேற கல்யாணம் செய்திட்டார்.எனக்கு ஒரே சந்தோசமாவும் இருந்திச்சு ஆனால் பிறகு கவலையாயும் இருந்திச்சு பாவம் அவாக்கு எங்கட வயசில இரண்டு பிள்ளையள்.அண்டைக்கு இரவே துசிக்கு கடிதம் போட்டனான் “உனக்குத் தெரியுமோ நான் செல்வி ரீச்சற்ற கல்யாணப் போட்டோ பார்த்தனான்” அது இது எண்டு ஒரே புழுகல் தான்.

மாத்தளையில ஞாயிற்றுக்கிழமையிலே அறநெறிப்பாடசாலைக்குப் போகவேணும்.அங்க இருந்து றம்பொட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகத்துக்கு தேசிக்காய் சாதமும் கொண்டு எல்லாரும் போனமா போற வழியில எல்லாரும் நல்ல நித்திரை எனக்குப் பின்னால கொஞ்ச் பெடியங்கள் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருந்தவங்கள்.எனக்கு “அவன் வட்ட வட்ட நிலவையும் அறிவான் ஆனால் பேதை நெஞ்சம் புரியல அவனா மேதை” என்றொரு 'தாளம்' பட பாட்டு விருப்பம்.அவை கேட்டுக் கொண்டிருந்தது அந்தப் பாட்டுத்தான் அப்ப நான் மெல்லமா அந்தப் பாட்டைப் பாடினான். றம்பொடக்கு போட்டு வந்ததிலிருந்து அந்தப் பொடியங்கள் எல்லாருக்கும் எனக்கும் திவாகர்(அந்தப் பாட்டுப் போட்ட பெடியன்) லவ் எண்டு சொல்லி ம் ம் மலரும் நினைவுகள்.பிறகு நாங்கள் கனடாவுக்கு வந்திட்டம்.

கனடாவிலயும் நிறைய நண்பர்கள் இருக்கினம் முக்கியமா சுதா கார்த்தியக்கா நித்தியா இவையைப் பற்றித் தனியா ஒரு பதிவு ஆறுதலா எழுதிறேன். இங்க வந்து ஸ்கூல் முடிச்சிட்டு இப்ப பகுதி நேர வேலை செய்கிறேன் இந்த செப்ரெம்பர் யுனிவர்சிற்றிக்குப் போகப்போறேன்.
யப்பா எழுதி முடிச்சிட்டன்.

Sunday, June 19, 2005

பசியின் ருசியென்ன?

-சினேகிதி-

முதன்முதலா நான் பசியை ருசித்தேன்… அசந்து போனேனே முழுப்பானை சோறு பொங்கி நான் முழுங்கப் போறேனே.

நேற்று அம்மாவும் தங்கச்சியும் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்குப் போயிட்டனம் அதால நான் நேற்றிரவு சித்தப்பா வீட்டதான் வேலையால போகவேண்டியிருந்தது.பொதுவா நான் ஆற்றயும் வீட்ட போனால் கொஞசமாதான் சாப்பிடுறனான் அப்ப நேற்றும் அப்படித்தான் சித்தி சோறும் முருங்கைக்ககாய் கறியும் கொணர்ந்து தந்தா.கோப்பையில ஒரு சொட்டுச் சோறு எனக்கு நேற்றெண்டு பார்த்துப் பசியோ பசி.

நீ நிறைய சாப்பிடமாட்டாய்தானே அதான் அரிசி உனக்கெண்டு தனியாப் போடேல.நேற்றும் வீணா நிறைய சோறு கொட்டனது.இது காணும்தானே உனக்கு.

ஓமோம் காணும் சித்தி.

“இங்க பாத்திங்களே நான் சொன்னான் எல்லோ இவளவை உடம்பு வைச்சிடும் எண்டு சும்மா கொறிக்கிறது எண்டு நான் சொல்ல நீங்கள் உது என்னத்துக்குக் காணும் எண்டிங்கள்” …சித்தி சித்தப்பாக்குச் சொல்லிக் கேட்குது.அப்பதான் நினைச்சன் பந்தா எல்லாம் பசிக்குச் சரிப்பட்டு வராது.

Friday, June 10, 2005

தளராத துணிவோடு களமாடினாய்

சயந்தனின் பதிவொன்றில் கிட்டண்ணா பூங்காவைப் பற்றி வாசிச்சதிலிருந்து எனக்கு மாவீரர் நாளுக்கு நான் பள்ளிக்கூடத்தில பாடின இரண்டு புலி மாமாக்களின்ர பாட்டு ஞாபகம் வந்திடுச்சு.

-சினேகிதி-

தளராத துணிவோடு களமாடினாய்

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ இந்தி
அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது
தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது
தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்
தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது (2)
கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது (2)
இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது
உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

சிங்களத்துப் படைகளோடு போராடினாய் (2)
வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் (2)
பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் (2)
இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் (2)

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ
இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ


ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2)
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் (2)
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்
பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் - சாவை
எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்
பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்
பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு
கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு
அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்
அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

Thursday, June 09, 2005

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

“பூவே உனக்காக” படத்தில் இடம்பெற்ற “ஆனந்தம் ஆனந்தம் பாடும்” என்ற பாடலில் சில மாற்றங்களை செய்து எட்டு வருடங்களுக்கு முன்பு நான் படித்த பாடசாலையில் நடந்த ஆசிரியர் தின விழாவிற்கு சில அக்காமார் பாடினார்கள்.எனக்கு அவர்கள் மாற்றிய வரிகள் சரியாக ஞாபகம் இல்லை இருந்தாலும் இயன்றளவு ஞாபகப்படுத்திச் சில மாற்றங்களுடன் எழுதியிருக்கிறேன்.

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசான் புகழைப் பாடும்

ஆயிரம் ஆயிரம் காலம்
உங்கள் சேவைகள் ஞாபகம் ஆகும்
வகுப்பிலே உம்மைத்தானே தேடுவோம்
கல்வியைப் பாடி பாடி வாழ்த்துவோம்
நீர் வரும் பாதையில்
பூக்களாய் பூத்திருப்போம்

உம்மைப் போன்ற ஆசான்கள்
கனிவாய்ப் பாடம் கற்பித்தால்
கணிதம் கூட சுகமாகும்
கல்வி நல்ல வரமாகும்
உம் வாழ்வில் செல்வங்கள்
எல்லாம் ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்
ஆசான் உம் புன்னகை என்றும்
சந்தோசம் தந்திடவேண்டும்
ஆசைக் கல்வி கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கமாகுமே

இன்னும் நூறு ஞென்மங்கள்
படிக்க வேண்டும் பாடங்கள்
கல்வியோடு வேதங்கள்
ஐந்து என்று கூறுங்கள்.

தமிழீழச் சுதந்திரக் காற்று
எம் வாசல் வந்திட வேண்டும்
மாணவர் நாம் உம் வாசல்
வருவோமே மீண்டும் மீண்டும்
நீர் கண்ட கனவுகள் எல்லாம்
நியமாக செய்வோம் நாமே

- சினேகிதி -