மாவீரர் நீங்களே...…
-சினேகிதி-
அளவில்லா ஆனந்தத்தோடு அண்ணன்
படை சேர்ந்தாய் அண்ணாவே
பூநகரி மணலாறு கிளிநொச்சி
எனக்களம்பல கண்டாய்
இன்று நீயும் மாவீரன்
வீட்டருகில் நீ வெடித்துச் சிதறினாய்
உள்ளம் வலிக்கத்தான் செய்தது
உன் சோதரர்கள் உனக்குச் சொல்லவில்லையா
அது இராணுவம் ரோந்து வரும் நேரமென்று
யார்யாரோவெல்லாம் ஆறுதல் சொன்னார்கள்
அம்மாவும் விசும்பல்களை நிறுத்திவிட்டாள்
அழுது ஆற்றாமை தீர்த்தால்
இராணுவ இராஜமரியாதையையும்
ஏற்கவேண்டி இருக்குமே
ஐயர் வந்து சாந்தி செய்தார் - நீ
சிதறிப்போன சந்தில்
எங்களுக்குத் தெரியும் தமிழீழம் ஒன்றுதான்
உங்களுக்கு ஆத்ம சாந்தியென்று
இரு தசாப்தங்கள் ஆகிவிட்டன ஆனாலும்
உங்கள் கனவுகள் நனவாகவில்லை
ஓ மாவீரவே உங்களுக்கு
விடியலின்பூபாளம் கேட்கிறதா?
தானைத்தலைவரின் தங்குதடையற்ற
தலைமையில் உம் சகாக்களின்
போராற்றல் பேராற்றலாய்
பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறதே
அது உங்களுக்குத் தெரிகின்றதா?
உங்கள் நாமகரணங்களை தகர்க்க
சில புல்லுருவிகள் - பணத்துக்காகப்
பதவிக்காகப் பல்லிளித்துப் பறந்தாலும்
பற்றுறுதி கொண்ட வேங்கைகளுக்குப்
பக்கபலமாகத் திரளும் பல வேர்களாய்
மாணவர் சக்தி உலகெங்கும் திரள்கிறதே
அதை நீங்கள் அறிவீர்களா?
அதனால்தான் சொல்கிறேன்
“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்”.
1 comments:
நன்றி ஜீவா சக்தி.
Post a Comment