Custom Search

Saturday, June 25, 2005

பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்……..

-சினேகிதி-

பின்னேரம் 6 மணி இருக்கும் மகளையும் வாசல்ல இருந்து படிக்கச் சொல்லிட்டு பாரதி முத்தத்தில அரிசிமா வறுத்துக் கொண்டிருந்தவா.பொத் பொத்தெண்டு மதிலால நிறையப்பேர் ஏறி விழுற சத்தம் பாரதி அடுப்பையும் அப்பிடியே விட்டிட்டு பிள்ளையையும் வீட்டுக்குள்ள போகச்சொல்லி சைகை காட்டிப்போட்டு தானும் போய்க் கதவைச் சாத்திப்போட்டு யன்னலோரமா நிண்டு கவனிச்சா நாலுபேர் கையில துவக்கோட முதுகில சாரத்தால போர்த்தபடி நிக்கினம்.

ர் ர் என்று மெல்லமா கதவை சுரண்டுற சத்தம்.பாரதிக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது.

சித்தி பாரதிச்சித்தி நான்தான் றஜி வந்திருக்கிறன்….கதவைத் திறக்கிறிங்களே….

லைற்றைப் போட்டிட்டுக் கதவைத்திறந்து விட்டிட்டு தெய்வமே நீயேடா எனக்கு இப்பதான் உயிர் வந்தது.நான் போனமுறை மாதிரி கள்ளனாக்கும் எண்டு நினைச்சிட்டன்.ஆராவது பாத்துத் தொலைக்க முதல் கெதியா உள்ள வாங்கோ பிள்ளையள்.என்ன இந்த நேரத்தில ஆயுதத்தோட வந்திருக்கிறியள்?

சித்தி நாங்கள் நாளைக்கு இரவு மட்டும் இங்கதான் நிக்கவேணும் உங்களுக்கு அதில என்னவும் பிரச்சனையோ ?

சீ சீ நீங்கள் வெளியில வராம இருந்தாச் சரி.

சரியான பசி சாப்பிட என்னவும் இருக்கோ??

அந்த அறையில இருங்கோ பத்து நிமிசத்தில சாப்பாடு தாறன்.

மகள் அண்ணாவுக்கு என்னவும் வேணுமோ எண்டு கேட்டு எடுத்துக்குடுங்கோ.

றஜி அண்ணா நான் இந்த துவக்கை தொட்டுப் பார்க்கட்டே??

ம் கவனமா தொட்டுப் பாரன்.

உங்களோட வந்தா எனக்கும் இப்பிடி ஒன்று துவக்கு தருவினம் என்ன?

நீ அங்க வரவேண்டாம் நீ வந்திட்டா பிறகு உங்கட அம்மாவையும் எங்கட அம்மாவையும் ஆர் பாரக்கிறது.

நீங்கள் நாளைக்கு எங்க போகப்போறிங்களண்ணா?

றஜி பத்து வயதேயான தங்கையின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாத நிலையில் அவளைத் தூக்கிக் கொஞ்சி விட்டுப் பேசாமல் இருந்தார்.

சாப்பாடு ரெடி றஜி.

சித்தி உங்கட கையால சமைச்ச சாப்பாடு சாப்பிடுறது இன்றைக்குத்தான் கடைசி என்று நினைக்கிறன்.

சும்மா இருடா அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது.ஏன் எங்காவது தூரமான இடத்துக்குச் சண்டைக்குப் போகப்போறீங்களே?

இப்ப தெரியாது சித்தி தூரத்துக்குப் போவமோ திரும்பி வருவமோ என்று ... நால்வரும் ஒருவரையொருவர் பாரத்துக் கொண்டார்கள்.

மறுநாள் காலை நன்றாகவே விடிந்தது.நால்வரும் பாரதிக்கு முதலே குளித்து முடித்திருந்தார்கள்.பாரதி எழும்பி வந்தால் முத்தத்தில துளசிச் செடியில சாரம் விரிச்சுக் கிடிந்தது.பாரதிக்கு வந்த கோபத்தில …
றஜி சித்தப்பாவும் ஊரில இல்லை நீங்கள் உப்பிடி நீட்டுக்கு சாரத்தை விரிச்சு வக்க யாராவது பார்த்திட்டு ஆமிக்காரரிட்ட போய்ச் சொன்னால் நான் என்னடா பண்ணுவன்.முதல்ல போய் உதெல்லாம் எடுத்து உள்ளுக்க கொண்டே விரி பார்ப்பம்.

சித்தி கோவிக்காதங்கோ.நான் போகும்போது உங்கட சிரிச்ச முகத்தைத்தான் பார்க்கவேணும்.

நீ வந்ததிலிருந்து கதைக்கிறது ஒண்டும் சரியாப்படல எனக்கு.எல்லாரும் வாங்கோ பாணும் சம்பலும் சாப்பிடுவம்.

காலம சாப்பிட்டிட்டு அறைக்குள்ள போனவங்கள் இன்னும் வெளில வரேல..மகள் போய் மத்தியானச் சாப்பாடு றெடியெண்டு சொல்லுங்கோ.

அம்மா அம்மா றஜியண்ணா பெரிய படம் ஒன்று வைச்சுக்கொண்டு மற்ற அண்ணாவைக்கு ஏதோ படிப்பிக்கிறார்.

பொழுதுசாயிற நேரம்தான் அறையை விட்டு வெளில வந்தவை சாப்பிட்டிட்டு கொஞ்ச நேரம் இருந்து கதைச்சிட்டுப் போட்டு வாறம் எண்டு சொல்லிட்டு துவக்கு எல்லாம் எடுத்துக்கொண்டு போட்டினம்.

அவையள் போய்க் கொஞ்ச நேரத்தால சூட்டுச் சத்தம் கேட்டது.

பாரதியக்கா பாரதியக்கா….

என்ன நிமல் ஏனிப்பிடி ஓடி வாறாய்?

நாவலடிச் சந்தியில பெடியளும் ஆமியும் நேர சந்திச்சிட்டாங்களாம்.உங்கட றஜி அண்ணாவை வேற எங்கயோ காம்ப் அடிக்கப் போகேக்க அம்பிட்டிட்டனமாம்.பக்கத்தில நிண்ட ஆறேழு ஆமியைச் சுட்டுப்போட்டு வயித்தில கிறனைற்றை வச்சு அமத்திப் போட்டினமாம்.ஆரும் தப்பேல்ல என்று கோபாலு மாமா சொன்னவர்.

9 comments:

கிஸோக்கண்ணன் said...

உண்மைச் சம்பவமோ சினேகிதி?

சினேகிதி said...

ஆமாம் கிஸோண்ணா.

அவதாரம் viji said...

onra iranda ippadi pala
kathaikal undu nam naadil..
Nanri Sinekithi.......

சினேகிதி said...

இப்படிப்பல கதைகள் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக் கிடப்பது உண்மையே.
அது சரி அவதாரம் எங்கே உங்கள் படைப்புக்கள்?

Karunaa said...

சிநேகிதி,நல்லகதை.நம்மெல்லோருக்கும் அநுபவமாகிய கதைதான்.

இளங்கோ said...

சினேகிதி, நல்லதொரு பதிவு. இன்னும் சொல்லப்படாத எத்தனையோ கதைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன. தெரிந்தவர்கள்/அனுபவித்தவர்கள் எல்லாம் இவற்றையெல்லாம் எழுத்தில் பதிவு செய்ய முன்வரவேண்டும்.

ஜெயச்சந்திரன் said...

சினேகிதி நன்றி. இப்படி ப்ல சம்பவங்கள். யாருக்கும் தெரியாதூ உள்ளது.

கரிகாலன் said...

நன்றாக இருக்கிறது.இப்படி சம்பவங்கள் பல உண்டு.வெளிச்சத்துக்கு
கொண்டுவந்ததுக்கு நன்றிகள்.
இன்னும் நிறைய எழுதுங்கோ.!!!!!!!

===== கரிகாலன்======

சினேகிதி said...

பின்னூட்டமிட்ட கிஸோ, அவதாரம், கருணா ,இளங்கோ, குமுழி, கரிகாலன் மற்றும் வாசித்த அனைவருக்கும் நன்றி.