Custom Search

Friday, December 29, 2006

இல்வாழ்வு தந்த இயலாமை

கனமான அந்த அல்பத்தை தூக்க முடியாமல் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு, அங்காலயும் இங்காலயும் சாய்ந்து சாய்ந்து மகள் ஜனனி ஓவர் ஆக்சன் வேற போட்டுக்கொண்டு, “அம்மா அம்மா பிடியுங்கோ” என்று சத்தம் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மேனகாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“இப்ப என்னத்துக்கு ஜனனி இதைத் தூக்கிக் கொண்டு வாறீங்கள்? அம்மாட்டா கேட்டா எடுத்துத் தந்திருப்பன்தானே?”

“அம்மா நான் உங்கட கல்யாண வீட்டுப் படம் பார்த்துக் கனநாள்தானே.. வாங்கோ பார்ப்பம். நான்; அதில நிக்கிற ஆக்களெல்லாம் யார் யாரெண்டு சொல்லுவனாம் நீங்கள் நான் சொல்றதெல்லாம் சரியோ என்று பார்ப்பீங்களாம். சரியோ?”

“ம்... மகாராணி சொன்னா அதுக்கு மறுபேச்சு இருக்கா? சரி சொல்லுங்கோ மகாராணி...”

“உங்களுக்குப் பக்கத்தில நிக்கிறது நேசன் மாமா. அவருக்குப் பக்கத்தில தாத்தாவும் பாட்டியும். இங்கால நிக்கிறது மஞ்சுச் சித்தி.. சரியா?”

“ம்... ஜனனிக்குட்டி கெட்டிக்காரி. சரி இப்ப இந்தப் படத்தில நிக்கிறது யாரெண்டு...”

“அம்மா அம்மா! நாங்கள் எப்ப ஊருக்குப் போவம்? எப்ப பாட்டி வீட்ட போறம்?”
ஜனனி இப்படிக் கேட்டதுதான் தாமதம் மேனகாவுக்கு பழைய நினைவுகள் அலைமோத ஏழு வருடத்துக்கு முதல் நடந்த சம்பவங்களனைத்தும் நினைவில் வந்து போயின.

2000 ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களுக்கான பொருளியல் வகுப்பறை எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும். அதுவும் மேனகா அங்கிருந்தால் எப்பவும் அவளைச் சுற்றி ஒரு கூட்டமிருக்கும். இவர்களுக்குப் பொருளியல் சொல்லித்தரும் வானதி ரீச்சரும் இளவயதினர் என்பதால் பாடநேரம் தவிர்ந்த நேரங்களில் மேனகா குறூப்புடன் அவ்வப்போது அரட்டையடிக்கத் தவறுவதில்லை. அப்படித்தானன்றும் மேனகாவின் நண்பிகள் மேனகா தேர்வு முடிந்ததும் திருமணத்திற்காகக் கனடா செல்லவிருப்பதால் சிறிய ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்து அவளைக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.

“மேனகா கனடா போப்போறம்தானே என்று தேர்வுக்குப் படிக்காம இருந்திடாதயும். திருப்தியாத் தேர்வெழுத வேணும் அப்பத்தான் எங்களுக்குச் சந்தோசம்” என்று சொல்லிக்கொண்டு வானதி ரீச்சரும் வந்து சேர்ந்தார்.

“ஓம் மிஸ். எனக்கு நம்பிக்கை இருக்கு. லொஜிக்கு இல்லாட்டாலும் கட்டாயம் உங்கட பாடத்துக்கு ஏ வரும்.”

“மிஸ்! மேனகா சொல்றதை நம்பாதயுங்கோ... இவள் படிக்கிறதேயில்லை. கனடாவில இருந்து அவான்ர ஆள் ஒவ்வொருநாளும் போன் பண்ணுவார். இவாக்கு இப்ப அவரோட கதைக்கிறதுதான் வேலை. படிக்கிறன் என்று சொல்றதெல்லாம் சும்மா.”

“ஏய் கிருஸ்ணி ! சும்மா இரு. இல்ல மிஸ், படிக்கிறன் மிஸ்.”

“இந்தா மேனகா! Autograph ல sign பண்ணிட்டன். கல்யாணக் கனவில நீர் எங்கட 4A கனவை கலைச்சிடாதயும். கல்வியிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.”

“ஓகே கேர்ள்ஸ். பக்கத்தில எனக்கு வகுப்பிருக்கு. கொஞ்சம் அடக்கி வாசியுங்க என்ன. பாவம் மேனகா, ஒரேயடியாய் நக்கலடிக்காதயுங்கோ.”

“ஓகே மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்று கிருஸ்ணி சத்தமாச் சொல்ல,“உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்று கிருஸ்ணியைப் பார்த்துச் சொல்லிவிட்டு வெளியேறினார் வானதி மிஸ்.

“அவா போய்ட்டா.சொல்லு சொல்லு நீ சொல்லு. என்னவாம் கோபி?”

“சும்மா இருங்கடி... எனக்கு எக்ஸாம் தொடங்கப் போகுது என்று சொல்லிட்டன். இனிம அவர் போன் பண்ண மாட்டார். பண்ணினா றெக்கோட் பண்ணி வைக்கிறன் சரியா.”

“இத்தால் யாவருக்கும் அறியத்தருவது என்னவெனின் ரேளடி மேனகா என நம்மால் அறியப்பட்ட மேனகா தற்போது வெக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள். வெக்க மேனகாவைப் பார்க்கவோர் அரிய சந்தர்ப்பம்.. தவறவிடாதீர்கள் தவறவிடாதீர்கள்.”

“என்னது மேனுக்கு வெக்கமா?”

“ஹேய் றிஹானா, வானதி மிஸ் என்ன சொல்லிட்டுப் போனவா. கொஞ்சநேரம் எல்லாரும் சும்மா இருக்கிறீங்களா? இப்பிடி எல்லாரும் கலாட்டா பண்ணினால் பிறகு நான் கோபியைப் பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேன்.”

“சரிடி. நீ சொல்லத் தொடங்கு. நாங்கள் பேசாம இருக்கிறம்.”

“படம் கொண்டு வரச் சொன்னமே. எங்க?”

“எங்க? எங்க?”

“ஐயோ.. கொண்டு வந்திருக்கிறேன். ஏனிப்பிடி பறக்கிறீங்கள் எல்லாரும்.?”

“ஆ.. நாங்கள் பறக்கேல்ல. நீதான் எங்களையெல்லாம் விட்டிட்டுப் பறக்கப் போறாய்;

காட்டு காட்டு.”

“இதான் மேனுவின்ர மன்மதராசா. எல்லாரும் வடிவாப் பாருங்கோ.”

“இவரைப் பார்த்தா நம்ம சத்தியசீலன் சேர் மாதிரியில்லை?”

“றேனு, உனக்கு எந்தநேரமும் சத்தியசீலன் சேர்ட நினைப்பு. அதான் யாரைப் பார்த்தாலும் உனக்கு அவரை மாதிரியே இருக்கு. என்ன ஒரு பத்து வயசுதானே வித்தியாசம்? எங்கட வீட்டுக்குப் பக்கத்து வீடுதான். நான் உனக்காக சேர்ட அம்மாட்டப் போய் கதைக்கிறன். நீ கவலைப்படாத என்ன?”

“கிருஸ்ணி, உன் திருவாயைக் கொஞ்சம் மூடும்மா. சரி அப்ப நீNPய சொல்லு. கோபி யாரை மாதிரி இருக்கிறார்?”

“கொஞ்சம் விஜய். கொஞ்சம் அஜீத். கொஞ்சம் அருண்குமார். கொஞ்சம் அரவிந்தசாமி கலந்து செய்த கலவையடி கோபி... என்ன மேனு, நான் சொன்னது சரிதானே?”

“அடச்சா... நீ சொன்ன ஆக்களெல்லாரையும் கலந்தா?? சகிக்கவே சகிக்காது. என் கோபியை யாரோடயும் கம்பெயர் பண்ணவேண்டாம். கோபி கோபியை மாதரித்தான். வேற யார் போலயும் இல்ல.”

“ஓ ஓ ஓ... இப்பவே அவர் உன் கோபியாகிட்டாரா? சரிங்க மேடம். இந்தாங்கோ உங்கட கோபியை நீங்களே வைச்சுக்கொள்ளுங்கோ.”

“றேணு இவா இப்பவே இப்பிடியாயிட்டாள். கனடா போய் எங்களுக்கு கடிதம் போடுறதவாவது. எனக்கு நம்பிக்கையில்லை. கணவனே கண்கண்ட தெய்வம். கனடாதான் சொர்க்கம் என்றிருக்கப்போறா பார்.”

“சீ சீ.. அப்பிடியெல்லாமில்லை. கனடாக்குப் போயில்லை... பிளைற்ல ஏறும்போதே உங்களையெல்லாம் மறந்திடுவன்” என்று மேனு சொல்ல றிஹானா றேணு கிருஸ்ணி இப்படி எல்லோரும் மேனுவைத் துரத்த, அடுத்த பாடநேரமும் வந்தது. அன்றைய நாள் என்றைக்குமே மேனகாவால் மறக்கமுடியாத நாளாக அமைந்துவிட்டது. அடுத்த கிழமையே தேர்வும் தொடங்கியது. தேர்வுகள் முடிந்ததும் ஒவ்வொருவரும் பகுதிநேர வேலை கணனி வகுப்புக்கள் என பிஸியாகிவிட்டார்கள்.

மேனகா கனடாவுக்குச் செல்வதாகவிருந்த பிளான் மாறிக் கோபி கொழும்புக்கு வந்து திருமணம் முடிந்ததும் மேனகாவையும் அழைத்துச் செல்வதென ஏற்பாடு. பெற்றோர்கள் சகோதரர்கள் உறவினர்கள் நண்பர்கள் இப்படி எவருமின்றி எங்கோ போய்த் திருமணம் செய்யவேண்டுமா எனக் கவலைப்பட்ட மேனகாவுக்குக் கொழும்பில் வைத்துத் திருமணம் நடைபெற இருப்பது குறித்து அளவில்லா மகிழ்ச்சி. கோபி; கொழும்புக்கு வந்த அடுத்த வாரமே திருமணம் என்று இருவீட்டாரும் தீர்மானித்தார்கள். மேனகா கோபி இருவருக்கும் ஒரு வாரம் ஒரு மணித்தியாலம் போல விரைவாகக் கழிந்தது.

திருமணநாளும் வந்தது. துணையேற்பு விழாவில் உறவினர்கள் எல்லாம் கூடியிருக்க, மேனகாவில் கழுத்தில் கோபி மங்கல நாணை அணிவித்தார். அதன் பிறகு ரெஜிஸ்ரர் பத்திரத்தில் கையொப்பம் வைக்கும் நேரம் பார்த்து கோபியின் அம்மாதான் தொடங்கினார்.

“என்ன சம்பந்தி, பேசினபடி ஐந்து லச்சம் இன்னும் கைக்கு வரேல்லயே. கையெழுத்துப்போட முதல் காசையும் தந்தா நல்லது.”

“என்ன சம்பந்தி சொல்றீங்கள்?? கோபி சீதனம் ஒன்றும் வேண்டாமென்று சொன்னதென்று மேனு சொன்னாளே?”

“என்னது? எல்லாரும் சேர்ந்து எங்களை ஏமாத்தப் பார்க்கிறீங்களோ? என்னடா கோபி இதெல்லாம்?”

“அம்மா மேனகா அன்றைக்கு கதைக்கும்போது தங்கட அண்ணா கடன் வாங்கித்தான் ஐந்து லச்சம் தரோணும் என்று சொன்னா. அதான் நான்... எங்களுக்கு இப்ப என்ன குறையம்மா? அதான் நான் வேண்டாமென்று சொன்னான்.”

“நல்லாயிருக்கு.. ரொம்ப நல்லாயிருக்கு. கல்யாணம் முற்றானாலும் தாலிகட்டும் வரைக்கும் உன்னை உவையோட கதைக்கவிட்டது எங்கட தப்புத்தான். உவை தங்கட குணத்தைக் காட்டிப்போட்டினம். மகளைக் கதைக்கவிட்டு உன்னை மயக்கிப் போட்டினம். போனில கதைச்சதுக்கே இப்பிடி மயங்கிட்டாய் நீ. இனிமே நாங்கள் உன்னை மறந்திட வேண்டியதுதான்.”

மேனகாவின் தந்தை மற்றும் ஊhர்ப் பெரியவர்கள் சிலர் சேர்ந்து கோபியின் பெற்றோரைச் சம்மதிக்க வைத்து, திருமணப்பதிவையும் நடத்தி முடித்தார்கள். அதன் பிறகு மேனுவின் அண்ணா நேசன் மூன்று மாதங்களுக்குள் கோபி கனடாவுக்குத் திரும்புவதற்கு முதல் ஐந்து லட்சத்தையும் கொடுத்துவிட்டான். இரண்டு மாதத்தில் மேனகாவும் கனடாவுக்கு வந்துவிட்டாள். ஜனனியும் பிறந்து 7 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அந்தத் திருமணத்தினத்திற்குப் பிறகு கோபியோ, கோபியின் பெற்றோர் உறவினர் என எவருமே மேனகா வீட்டினரோடு பேச்சுவார்த்தையில்லை. சீதனச் சாகரத்தில் இன்றுவரை தங்கைக்கென்று தமையன் கொட்டிக்கொண்டுதான் இருக்கிறான்.மேனகாவும் ஒவ்வொரு வருடமும் ஏதாவது சாக்குச் சொல்லி ஒருமுறையாவது தன் குடும்பத்தினரைச் சென்று பார்க்க முயல்வாள். ஆனால் அந்த முயற்சிகள் கோபியின் பெற்றோரால் வெறும் முயற்சியகளாகவே நின்றுவிடும்.

“அம்மா, இது குட்டித் தாத்தா. இது பெரிய தாத்தா. இது பெரியம்மா. அம்மா, ஏனுங்கட கல்யாண வீட்டல்பத்தில என்னைக் காணேல்ல? ஏனம்மா என்னை வச்சுப் போட்டோ எடுக்கேல்ல? அம்மாமாமாமாமாமா! என்ன நீ நான் பத்துத் தரம் கூப்பிட்டும் காது கேக்கலையா? இரு அப்பா வரட்டும் சொல்றன்.” ஜனனி தோளைத் தொட்டு உலுக்கியதும் நினைவலைகளிலிருந்து மீண்டும் சுயநினைவுக்கு வந்தாள் மேனகா.

அப்போதுதான் நேரத்தைக கவனித்தாள் மேனகா. “அச்சச்சோ, ஜனனிக் குட்டிக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கெல்லோ..? வாங்கோ வாங்கோ வந்து கெதியாச் சாப்பிட்டுப் படுங்கோ. அப்பத்தான் நாளைக்கு விடிய எழும்பலாம்.”

உறக்கத்தில் மீண்டும் கேட்hள் ஜனனி. “அல்பத்தில ஏனம்மா நானில்லை? ஏனம்மா அப்பாக்கும் உங்களுக்கும் இடையில நானில்லை?”

“ம்... ஜனனிக்குட்டி அந்தநேரம் நித்திரையாம். அதுதான் போட்டோவில இல்லையாம்” என்று சொல்லி ஜனனியைத் தூங்க வைத்தாள். அதே கேள்வியைத்தானும் சின்ன வயதில் கேட்டதை அடிக்கடி சொல்லிச் சிரிக்கும் அம்மாவையும் குடும்பத்தாரையும் நினைத்தபடி, ‘இந்த வருசமாவது அவர்களையெல்லாம் பார்க்கமாட்டோமா?’ என ஏக்கத்துடன் காத்திருக்கிறாள் மேனகா.

Friday, December 22, 2006

அழைத்தால் மௌனம் அதுதான் தருணம்

கலாபக்காதலன் படத்திற்கு இசையமைத்த நிருவின் மூங்கில் நிலா (2003) என்ற இசைத்தட்டில் இடம்பெற்ற பல பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது “அழைத்தால் மௌனம்” என்ற பாடல்.உன்னி கிருஸ்ணனின் குரலா அறிவுமதியின் வரிகளா அல்லது நிருவின் இசையா எது என்னைக் கவர்ந்ததென்றறியேன்.ஒருவேளை மூன்றும் சேர்ந்து தந்த மயக்கமோ?

இந்தப்பாடல் தவிர மூங்கில் நிலாவில் இடம்பெற்ற இன்னும் ஐந்து பாடல்கள் எனக்குப்பிடித்தபாடல்களின் பட்டியலில் உள்ளன.அந்தப்பாடல்களையும அழைத்தால் மௌனம் பாடலின் வரிகளையும் இன்று தருகிறேன்.தொடர்ந்து ஏனைய பாடல் வரிகளையும் தருகிறேன். பல காலமாக எழுதவேண்டும் நினைத்த இந்தப்பதிவு இன்றுதான் சாத்தியமாகியுள்ளது.

பாடல்களைக் கேட்க : http://www.raaga.com/channels/tamil/movie/T0000956.html

(1) “திருடா திருடா என்னைத் திருடடா திருடா இதழால் விரல் நுனிகளால் என்னைச் சிற்பமாக்கடா அழகா” -சாரங்கன்

(2) “காதல் போர்க்களம்தானா பார்வை ஆயதம்தானா அழகே இதழ் கொண்டு யுத்தம் செய்வோமா” -சுதன்ராஜ்;

(3) “என் சுவாசம் சேரும் வழியால் புயலாய் வந்தவளே” -சதாபிரணவன்

(4) “பெண்ணே போகாதே இரவை எரிக்காதே நிலவைச் சாம்பலாக்காதே” -பழனிபாரதி ( தமிழ்மணத்தில் எழுதுகின்ற பழனிபாரதியா இவர்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

(5) “புல் நுனியில் பட்டுத்தெறிக்கும் மழைத்துளியில் கரைந்தேன்” -பாவனா


அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம்

திடும் திடும் திடுமென உயிர் விழிக்கும் - அது
கனவுக்குள் வானவில் தொட அழைக்கும்
திடும் திடும் திடுமென உயிர் விழிக்கும் - அது
கனவுக்குள் வானவில் தொட அழைக்கும்
இது முகங்களின்(?) சடுகுடு விளையாட்டு - இருகுயில்களின் மெல்லிய இசைப் பாட்டு
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)

விடும் விடும் விடுமென பயம் தடுக்கும் - அது
உயிருக்குள் மூழ்கிட சுழல் பிறக்கும் (3)
இது துணிகளின் கடலென்னும் பசி பாட்டு???
இனி மழையினில் நெருப்பினைக் குளிப்பாட்டு???

அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் .