Custom Search

Monday, April 30, 2007

கண்டு பிடி கண்டு பிடி IV

ஹிந்தித் தெலுங்குப் பாட்டுத் தெரியாதெண்டு சொன்னாக்களுக்காக இந்த முறை கொஞ்சம் இலகுவான தமிழ்ப்பாடல்கள் இடம்பெறுகின்றன.

கண்டுபிடி கண்டுபிடி பாடல்களைக் கண்டுபிடித்த மை பிரண்டுக்கும் விஸ்ணு அண்ணாக்கும் பாராட்டுக்கள்!

மாப்ஸ்க்கும் ஆறுதல் பாராட்டுக்கள் (ஆறுதல் பரிசு போலத்தான் :-))
















Friday, April 27, 2007

அலாதியானது அவர்களுடைய மொழி

பல்ப் எரிஞ்சுதோ மணி அடிச்சிச்சோ கரப்பான் பூச்சி லொள்ளுப்பண்ணிச்சோ அந்தக்குண்டுப் பெடியன் பக்கோடா சாப்பிட்டானோ நான் யாரையும் மிஸ் பண்ணினனோ நிலாவைப் பார்க்க நிலாவில நிலாவும் சிபியும் வந்து "ஒரு களவாணிப்பயல நானும் காதல் செஞ்சேனே" என்னு ஆடிச்சினமோ...அடச்சா மொழி படம் பார்க்காத ஆக்கள் எனக்கு தலையில சுகமில்லை என்று முடிவு பண்ணியிருப்பினம் இப்ப.

அட பெரிய விசயம் ஒன்றுமில்லை...நான் நேற்றுத்தான் மொழி படம் பார்த்தனான்.படத்தைப் பற்றி நான் ஒன்றும் சொல்லேல்ல நீங்களே போய்ப் பார்த்துக்கொள்ளுங்கோ அதை ஆனால் அதைப் பார்த்ததால என்னுறவுகள் சிலருடைய ஞாபகம் தாலாட்டிக் கொண்டேயிருக்கு.

கோபி அம்மான்ர தங்கச்சியின் மகன்.எனக்கும் அவனுக்கும் சில வயதுகள்தான் வித்தியாசம்.அவன் வாய் பேச மாட்டான்.எப்பவுமே ஒரே வயதில் உள்ளவர்களி்டையே ஒரு போட்டி நிலவும்.படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி அம்மம்மா தாத்தாவில் பாசம் காட்டுவதிலும் சரி.எங்களுக்கும் அது விதி விலக்கல்ல.பிறந்ததிலிருந்தே போட்டிதான்.அம்மம்மா என்னைக் கால்ல தலையணி வைத்து ஆட்டி ஆட்டி நித்திரையாக்கிறது அவனுக்குப் பிடிக்காதாம்.நித்திரை மாதிரிப் பாயில படுத்திருந்து போட்டு அம்மம்மா சற்று விலகிப்போனதும் என்ர சொக்கை கடிச்சு வைப்பானாம் இல்ல நுள்ளிப்போடுவானாம்.வளர்ந்து வந்த பிறகும் எங்களுக்குள்ளே அந்தப் போட்டி போகவில்லை.ஆனால் எங்கள் குடும்பத்தில் நாங்களிருவரும் இப்படிச் சண்டை பிடிப்பது அவர்களுக்கு ஒருவகையில் மிகவும் சந்தோசம் ஏன் என்றால் பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு ஒரு குறை இருந்தால் எங்கே மற்ற குழந்தைகள் அதை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கும்.ஆனால் பெரியம்மா சித்தி பிள்ளைகளை விட எனக்கும் கோபிக்கும் இடையில் கொல்லுப்பாடு நடந்தாலும் ஒருவரை ஒருவர் மற்றவர்கள் முன்னிலையில் விட்டுக்கொடுக்க மாட்டோம்.பள்ளிக்கூடம் போற வயது வந்ததும் நான் நேர்சரிக்குப் போகத் தொடங்கி விட்டேன் ஆனால் கோபி வீட்டிலயே இருந்தான்.அது அவனுக்கு முதலில் சரியான கோவம் பிறகு பிறகு என்னுடைய புத்தகங்களை வாங்கி அவனும் படிக்கத் தொடங்கினான்.வெளியாட்கள் ஆரும் வீட்டுக்கு வந்தால் நாங்களிருவரும் கதைக்கிறதப் பார்த்தால் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்.அவனோடு சண்டை பிடிப்பதற்காகவே அவனுடைய மொழியை நான் நன்கு தெரிந்து வைத்திருந்தேன் (இப்ப பரீட்சிர்த்துப் பார்க்க வேண்டும்).


பிறகு நான் பள்ளிக்கூடம் போகத் தொடங்க ஒரு குடும்ப நண்பர் மூலம் கோபியும் கைதடியிலுள்ளு வாய் பேச முடியாத கண் தெரியாதவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அவனும் போகத் தொடங்கினான்.தினமும் போய் வருவது சிரமம் என்பதால் அவன் கைதடியில் தங்கியிருந்து படிக்கத் தொடங்கினான்.அதனால் பள்ளிக்கூட விடுமுறையில் தான் அவனைக் காண முடியும்.அவனுடைய விளையாட்டுப் போட்டி நடைபெறும் நேரம் மாமாக்களுடன் நானும் போவதுண்டு.அவன் படிப்பிலும் நல்ல கெட்டிக்காரன் விளையாட்டிலும் தான்.சில வருடங்கள் கப்டன் ஆகவும் இருந்தான்.நாங்கள் கன பேர் விளையாட்டுப் போட்டிக்குப் போவது அவனுக்கு நல்ல புழுகம்.ஆசிரியர்கள் அவனுடைய நண்பிகள் நண்பர்கள் எல்லோருக்கும் பெருமையோடு அறிமுகம் செய்து வைப்பான்.எனக்குப் பொறாமையாக இருக்கும்.அங்க படிக்கிற பெரிய அண்ணாமாரிலிருந்து சிறியவர்கள் வரை கோபிக்கு நண்பர்கள்.

அவன்ர றூமைப் பார்க்க அப்பிடி ஒரு தனித்துவமான அழகிருக்கும்.ஹாஸ்டல் இருக்கிறதாலயோ என்னவோ அவனுள் பல மாற்றங்கள்.வீட்டுக்குள்ளயும் செருப்புப் பொட்டுக்கொண்டுதான் திரிவான்.விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தால் சைக்கிளில் உள் பாதையால எங்கட வீட்ட வந்திடுவான்.கழுத்தில ஒரு கறுப்பு நூல் அதில அவற்ற அறைச் சாவி தொங்கிக்கொண்டிருக்கும்.தானில்லாத நேரம் தன்ர றூமை யாரும் குப்பையாக்கிப்போடுவினம் என்று பயம்.அவனுக்கு ஒரு அண்ணா 2 தம்பிகள் ஒரு தங்கை.ஒருவருக்கும் அவருடைய அறைக்குப் போக அனுமதியில்லை.சித்திக்குச் செல்லம் ஏனென்றால் மற்றாக்கள் வீட்டைக் குப்பையாக்கினாலும் அவையை அதட்டி வேலை வாங்குவான் கோபி.மொழியில ஜோதிகா கோவம் வரும்போது கண்ணை உருட்டுவா அதே உருட்டல் நான் கோபியிடடமும் பார்த்திருக்கிறன்.அடக்க முடியாத கோபம் என்றால் றூமைப் பூட்டிப்போட்டு நாள் முழுக்க இருப்பான்.



கைவினைப்பொருட்கள் செய்வான்.லக்ஸ் சவர்க்காரம் குண்டூசி பேபி றிபன் இவற்றை வைத்து அழகான பூ வாஸ்கள் போல செய்வான்.றெஜிபோர்ம் ஐ பல உருவங்களில் வெட்டி அவற்றுக்கும் அலங்காரங்கள் செய்வான்.ஊசி மருந்து வாற அந்தக் குட்டிப் போத்தல் இருக்கல்லா அதை எடுத்துச் சுத்தப்படுத்தி றபர் மூடியில் துளையிட்டு நூல் கட்டி அதற்கு மேலே ஸ்ரோ வைத்து ஒன்று செய்வான் (பெயர் மறந்திட்டன்).

மொழி படத்தில பிருதிவ் ஜோவுக்கு குரல் இருந்தா எப்பிடி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்த காட்சி எனக்குப்பிடிச்சது.கோபிக்கு ஒரு நாள் நாங்கள் கதைக்கிற மாதிரிக் கதைக்க ஆசை வந்து நாடியைக் கீழ அமத்திப் பிடிச்சுக்கொண்டு நாங்கள் கதைப்பது போல வாயை அசைத்துப்பார்த்தான் சத்தம் வரவில்லை ஆனால் அதற்காக அவன் வருத்தப்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை.தன்னால கதைக்க முடியவில்லை என்றது அவனுக்கு ஒரு குறையில்லை என்றுதான் நினைக்கிறேன்.எங்கள் எல்லாரைப்போலயும் அவனால் எல்லாம் செய்ய முடியும்.மற்றவர்களுடன் செய்திப்பரிமாற்றம் செய்ய அவனுக்கு மொழியிருக்கு.சுற்று வட்டாரத்தில் எல்லாருக்கும் அவன் சொல்றது விளங்கும்.எங்கட ஊரில ஒரு அன்ரி இருந்தா அவாவும் கதைக்கமாட்டா.ஆனால் அவான்ர பிள்ளைகள் இரண்டும் பயங்கர வாய்.அம்மாவின் அக்காவின் மகளொருவரும் வாய் பேசமாட்டார்.சின்ன வயசில கோபி சித்தின்ர வயித்தில இருக்கும்போது மின்சார அதிர்ச்சி ஏற்பட்டதால் தான் அவனால் பேச முடியவில்லை என்று சொன்னார்கள்.பெரியம்மாவின் மகளுக்கும் அப்படித்தான் ஏதோ காரணம் சொன்னார்கள்.ஆனால் சித்தி திருமணம் செய்தது சொந்த மச்சானை அதனால் ஜெனற்றிக்கல் காரணங்களும் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

எனக்குத் தெரிந்து அவனுக்கு ஒரு நல்ல நண்பி ஒருத்தி இருக்கிறாள்.கூடப்படிக்கிற பெண்.விடுமுறை நேரம் அவளும் வருவதுண்டு.கோபியும் அவளுடைய வீட்டுக்குப்போவதுண்டு.அம்மம்மா வீட்டுக்கு முன்னால தோட்டம்.தோட்டத்துக்க அங்கால மெயின் றோட்.வேலியோட அப்பப்பான்ர சாய்மனைக் கட்டில் இருக்கும் எந்த நேரமும்.அப்பப்பா இல்லாத நேரம் அதில இருக்கிறதுக்கு பெரிய சண்டையே நடக்கும்.கோபின்ர நண்பிக்கும் அந்தச் சாய்மனைக் கட்டிலில் இருக்கப் பிடிக்கும்.அவள் வந்தால் நாங்கள் விட்டுக்கொடுத்து விடுவோம்.சில நேரம் நாங்கள் ஒருதரும் அருகில் இல்லையென்றால் அவர்களிருவரும் மணிக்கணக்கில் றோட்டைப் பார்த்துப் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.ம் ம் இப்படி அவனைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு.அவனுடைய திறமைக்கு கைதடியிலயே அவனைப் படிப்பிக்கச் சொன்னார்களாம்.நாட்டுப்பிரச்சனை மட்டும் இல்லையென்றால் அவனுடைய வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்கும்.இப்ப அவன் ஒரு தையல்மெசின் வாங்கியிருக்கிறானாம்.எப்பவாவது கடிதம் எழுதுவதுண்டு.இந்தியாவிலிருக்கிற மாமா தன்னை அங்கு வரச்சொல்லியிருக்கிறாராம் போகப்போவதாகச் சொல்லியிருக்கிறான்.

Monday, April 23, 2007

கண்டு பிடி கண்டு பிடி III

சற்று மாறுதலுக்காக இம்முறை ஹிந்தி மற்றும் தெலுங்குப்பாடல்களுடன் வந்திருக்கிறேன். இந்தப்பாடல்கள் தமிழிலுமுள்ளன அந்தத் தமிழ்ப்பாடல்களைக் கண்டுபிடியுங்களேன்.அநேகமானவை பிரபலமான பாடல்கள் தான!்

கண்டுபிடி கண்டுபிடி II இல் இடம்பெற்ற நான்கு பாடல்களைக் கண்டுபிடித்த நந்தாவுக்கும் விஜே வுக்கும் பாராட்டுக்கள்!!!













Sunday, April 22, 2007

எல்லாமே அண்ணா என்று...

பாடியவர் : சாகித்தியா
இசை: இசைப்பிரியன்
பாடல்வரிகள்:வீரா
ஒளிப்பதிவு : சீலன்

Thursday, April 19, 2007

தமிழ் Hip Hop பாடல்கள்







மேலும் தமிழ் Hip Hop பாடல்கள் பற்றித் தெரிநது கொள்ளவும் பாடல்களைப் பார்க்கவும் கேக்கவும்.

LITTLE EMPIRE (Canada)
1) VIDEO: LITTLE EMPIRE
2) FAN SITE: http://www.littleempire.ca

SHINE (Norway)
1) VIDEO: http://www.youtube.com/watch?v=lwyN2RCXWvg
2) VIDEO II: http://www.youtube.com/watch?v=FipUJMZAPfo
2) FAN SITE: http://www.myspace.com/shineftloca

YOGI B NACHATHIRA (Malaysia / Singapore / India)
1) VIDEO: http://www.youtube.com/watch?v=xbBsDOzxZlU
2) VIDEO: http://www.youtube.com/watch?v=upxCjdWeIE
3) SONGS: http://www.esnips.com/web/yogib?docsPage=1#files
4) FAN SITE: http://vallavan.macrology.com.my/v4/index.php

HYPERKINETIX (Malaysia / Singapore)
1) VIDEO: http://www.youtube.com/watch?v=I__rOo_xz-w
2) SONGS: http://sujan752.free.fr/Hyperkintetix%2page.htm
3) FAN SITE: http://hyperkinetix5.blogspot.com/
4) FAN SITE: http://sl2uk.com/content/hyperkinetix.shtml

CHAKRASONIC (Malaysia / Singapore)
1) VIDEO: http://www.youtube.com/watch?v=L8BUGtAIeaw

MC SUB-ZERO (UK)
1) VIDEO: http://www.youtube.com/watch?v=J9VK9RgLmew
2) FAN SITE: http://sl2uk.com/content/subzero.shtml

KRISHAN (UK / Sri Lanka)
1) VIDEO : http://www.youtube.com/watch?v=Zh8qg1DPY1A
2) VIDEO : http://www.youtube.com/watch?v=DjUGJ_sJflU
3) VIDEO : http://www.youtube.com/watch?v=9lvExhB146s

M.I.A (UK)
1) VIDEO (feat. TIMBALAND): http://www.youtube.com/watch?v=-VcJMgRJors
2) VIDEO : http://www.youtube.com/watch?v=M9wm_QEIaWs
3) VIDEO : http://www.youtube.com/watch?v=VDSnLcu2HTI
4) VIDEO: http://www.youtube.com/watch?v=buOBteVY2LI&NR=1
5) FAN SITE: http://www.miauk.com/

கண்டுபிடி கண்டுபிடி II

இந்தமுறை பழைய பாட்டுகளும் இருக்கு...போனமுறை எல்லாம் புதுப்பாட்டா இருக்கென்று முறைப்பாடு செய்தாக்கள் இதைக் கண்டுபிடியுங்கோ பார்ப்பம்.













Wednesday, April 18, 2007

உயிராய் மொழியாய் உணர்வில் நிறைந்தாய்...

இது பழைய பாட்டுத்தான் ..உங்களில் பலர் பார்த்திருப்பீர்கிள் அப்படிப் பார்க்காதவர்களுக்காக:-)

Thursday, April 12, 2007

சிஞ்சா மனுசியின் பாட்டுக்குப்பாட்டு

எல்லாருக்கும் வணக்கம்:-)

நீங்கள் அனைவரும் சித்திரைப் பொங்கலுக்கு என்ன சாப்பிடலாம் எந்தச் சட்டை போடலாம் என்று ஆயத்தப்படுத்தி விட்டீர்கிளா?

அந்தக் குதூகலத்தோடு முதன் முதலாக(:-) வலையுலகில் சித்திரைப் பொங்கலன்று சிஞ்சாவின் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியையும் கேட்டு மகிழுங்கள்...இது வெறும் சாம்பிள்தான்:-))



வலையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும் சிஞ்சாவின் பாட்டுக்குப் பாட்டைக் கேட்கத் தவறாதீர்கள்.

வலையுலக வரலாற்றில் முதன் முறையாக (அவற்ற வாழ்க்கையிலயே) வசந்தன் அண்ணாவும் பாட இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மீண்டும் சந்திக்கும் வரை
உங்களன்பின் சிஞ்சா மனுசி கலைக்குழு:-)

Wednesday, April 11, 2007

அழகா அழகா

அய்யனார் அழகுப்பதிவு போடச்சொன்னா மட்டும் கேட்டதைக் குடுக்கல என்று நினைப்பாம் நான் கிறுக்குப்பதிவு போடச்சொன்னதும் போடல்லயாம் அதால நான் பழிவாங்கிடுவனாம் (என்னை என்ன சூட்டி பபா என்று நினைச்சிங்கிளோ )


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயம் அழகாகததான்; தெரிகிறது.கண்ணிரன்டையும் திறந்து வைத்தால் பாரக்கிற எல்லாமே அழகாகத்தான் தோன்றும் ஆனால் அதற்கு மனதில் பாரம் இல்லாமல் இருக்க வேணும்.மனதில 1008 வலிகளை வைத்துக்கொண்டு பூவை, குழந்தைகளைப் பார்த்தாக்கூட அழகாத் தெரிவதில்லை. (அறிமுகம் காணுமோ)

அக்காமாரும் அவேன்ர கிளியும்

எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும்போது எங்கட வீட்டுக்குப்பக்கத்து வீட்டில் ஒரு அழகான அன்பான குடும்பம் வாடகைக்கு வந்தி சிலவருடங்கள் இருந்தார்கள்.அங்க இரண்டு அக்காமார்.இரட்டையர்கள்.பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள்(படம் காட்ட மாட்டன்).தமிழ் சினிமா நடிகைகள் எல்லாம் கிட்டயும் நிக்கேலாது. இருவருக்கும் நீளமான கூந்தல்.நான் படிக்கிற நேரம் போக மிச்ச நேரமெல்லாம் அவேன்ர வீடுதான் என்ர கதி.அவேன்ர கூந்தல்தான் எனக்கு விளையாட்டுப்பொருள்.அவைக்குப் பூப்புனித நீராட்டுவிழா நடந்த அன்று மட்டும் நான் ஒரு 100 தரம் அவையப் பார்த்து இன்றைக்கு நீங்கள் இன்னும் வடிவா இருக்கிறீங்கிள் என்று சொன்னானாம் என்று இப்ப இத்தாலியில இருக்கிற ஒரு அக்கா நடுகலும் சொல்லுவா.

அவை இரண்டு பஞ்சவர்ணக்கிளி வளர்த்தவை.அந்தக்கிளிகளும் அவையைப்போலவே நல்ல வடிவு.கூண்டைத்திறந்து விட்டாலும் கொஞ்சநேரத்தில அவேட்ட திரும்பி வந்துடுவினம் அந்தக் கிளிகள்.அழகான அந்த அக்காவை விட்டிட்டுப் போக மனமில்லை.

மலைக்காற்றும் ஆற்று நீரும்

சில வருடங்கள் மலைநாட்டில் வாழ்ந்திருக்கிறேன் அல்லவா.அழகான மலைகளையும் அருகே ஓடும் ஆறகளையும் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா.தோட்டப்பக்கம் போறது கொஞ்சம் தூரம்தான் இருந்தாலும் ஏதும் சாக்குச் சொல்லிட்டு பெரியம்மான்ர மகன்களுடன் சேர்ந்து நானும் மலைக்காற்ற வாங்கச் செல்வதுண்டு.கஸ்டப்பட்டு மலையுச்சிக்கு ஏறிப்போய் அண்ணான்ர கடையில சுட்டுக்கொண்டு போன பொலித்தின்( Polyethylene ) பாக் ல காற்றடைச்சு மேல பறக்க விட்டா அது போய்க்கொண்டேயிருக்கும் மேல.அண்ணாக்குத் தெரிந்தவர்களின் தோட்டங்களுக்குச் சென்று வெற்றிலை, மிளகு ,கோப்பி போன்றவற்றைத் தொட்டுத் தொட்டுப் பாரக்கிறது(இப்ப இருக்கிற டிஜிற்றல் கமரா என்னட்ட அப்ப இருந்திருக்கவேணும்.) கஜ+ பழம் நாக்குக் கடிக்கும் என்று தெரிஞ்சும் அவை தரத்தர அளவுக்கதிகமாகச் சாப்பிட்டிட்டு வயித்தத் தடவிக்கொண்டு திரிவன்.இதாலயே நானும் மலைக்கு வாறன் என்றால் என்னை எப்பிடியாவது கழட்டி விடணும் என்று பார்ப்பினம் அண்ணாவை.



மலைக்கோயில் ஒன்றுண்டு.பெயர் சிந்தாக்கட்டி (பிள்ளையாரோ முரகனோ என்று தெரியேல்ல).அந்தக்கோயிலுக்குக் கும்பிடப் போறல்ல ஆனால் புதினம் பார்க்க.அங்க ஏறி நிண்டு பார்த்தா முழு நகரமும் தெரியும்.அதோட மலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருவமாகத் தெரியும்.நக்கிள்ஸ் மலைத்தொடர் பார்க்கப் பார்க்கப் பிடிக்கும். இன்னொரு மலை இருக்கு. அது ஒரு பெண் படுத்திருப்பது போலிருக்கும்.எனக்கு மட்டும்தான் அப்பிடித் தெரிந்ததோ தெரியேல்ல ஏனென்றால் நான் சொன்னபோது எவரும் நம்பவில்லை.அந்தப்பெண்ணின் வயிற்றுப்பகுதியில் மின்சாரக்கம்பம் ஒன்று இருக்கும். அதைப் பார்த்துவிட்டு இதைப்பார்த்தா "பஞ்சமி" நாடகத்தில் வந்த மலை மாதிரியிருக்கென்று சொல்லிக்கொள்வேன்.

களுதாவளை என்றொரு இடம் இருக்கு. அங்க ஒரு காளிகோயிலிருக்கு.அருகே களுதாவளை ஆறு ஓடிக்கொண்டிருக்கும். பல இடங்களில் இருந்து குளிப்பதற்குப் பலர் வருவதுண்டு. ( சல சலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே:-))) அந்தச்சத்தமும் நல்லாயிருக்கும்.அந்த ஆற்றங்கரைக்கு இறங்கிச்செல்லும் பாலம் கூட அழகாக இருக்கும்.பெரிய பெரிய கற்கள் சின்னச் சின்ன மரங்கள் இப்பிடி நிறைய அழகு சேர்த்த அந்த ஆற்றில் குடும்பம் குடும்பமாக பலரும் கதை பேசிக் குளித்துவிட்டு அந்த காளி கோயிலில் பொங்கலிட்டு ஒன்றாக அமர்ந்து உண்பதும் அழகு. பல உயிர்களைக் காவு வாங்கியதும் அந்த அழகான ஆறுதான்.

நுவரெலியாவில் சீதை (அம்மன்) கோயில் ஒன்று உண்டு.அங்கும் ஒரு அழகான ஆறு கோயிலுக்குப்பின்னால் ஓடுகின்றது.அந்த ஆற்றில் அனுமாரின் காலடித்தடம் என்று சொல்லி ஒரு பெரிய பள்ளமிருக்கு.அந்தக்கோயிலுக்குச் செல்பவர்கள் அந்த ஆற்றில் கட்டாயம் இறங்குவார்கள்.சரியான குளிர் அந்தத் தண்ணி.சும்மா தொட்டாலே கால் விறைக்கும்.ஆற்றுக்கு அருகில் ஒரு அழகான ரோஜாத்தோட்டம் ஒன்றுண்டு.என்னைப்போல எல்லாரும் அந்தத் தோட்டத்தில் ஒரு ரோஜாவாவது களவெடுத்திருப்பார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்.

மழலைகள்

இவையப்பற்றி நான் சொல்லவும் வேணுமா?பல வேளைகளில் எரிச்சலூட்டினாலும் அதையும் ரசிக்கவைக்கக் கூடியவர்கள் குழந்தைகள்.செய்யிறதெல்லாம் குழப்படி ஆனாலும் அதில் ஒளிந்திருக்கும் குறும்பு அறிவு மற்றவர்களை அவர்கள் முன்னே மண்டி போட வைத்துவிடும்.இன்று நானும் தங்கையும் ஐஸ்கிறிம் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது வந்து தனக்கும் தீர்த்தச்சொன்னான்.அம்மா சொன்னா அவை சாப்பிடுறது வேண்டாம் இங்க வா பிள்ளைக்கு அம்மம்மா சன்டே (Sundae) தாறன் என்று சொன்னா.அதுக்கு அவன் உடன எனக்கு சன்டே வேண்டாம் இப்பவே தாங்கோ.(சன்டே ஒரு ஐஸ்கிறீம் வகை) இப்படி தினமும் ஒருகதை சொல்லி எங்களைச் சிரிக்க வைப்பான்.



வீட்டுக்குப் பக்கத்தில ஒரு பூங்கா இருக்கு.கோடை காலத்தில குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டுவிட்டுப் பெற்றோர்கள் தங்கட அலுவல்.நாங்கள் வீட்ட நின்டால் நிறையப் புதினம் பார்க்கலாம்.நாய்க்குட்டியோட விழுந்து புரளும் ஒரு குழந்தை.ஒராளைத் தள்ளிவிட்டிட்டு மற்றாள் ஊஞ்சல் ஆடும்.பந்தைத் தூக்கி எங்கட வீட்டை எறிஞ்சுபோட்டு எப்பிடிப் போய் எடுக்கலாம் எட்டு வேலிக்குள்ளால எட்டி எட்டிப் பார்க்கும் ஒராள்.
வேலில படர்ந்திருக்கும் திராட்சைப் பழத்தைப் பறித்து வாயில வச்சிட்டுப் புளி தாங்காமல் வாய் கண் சுழிச்சுக்கொண்டு திரும்பிப்போகும் ஒராள்..இதெல்லாம் ஹோல்ல சோபால இருந்தாலே பார்க்கலாம்.

நீர்வீழ்ச்சி

வத்தளையில்தான் நான் முதல் முதலாக நீர் வீழ்ச்சியைப் பார்த்தது.ஆர்வமிகுதியால் சிலர் சேர்ந்து தண்ணிக்குள்ள இறங்கி பாறைக்குள்ள காலை விட்டிட்டு போஸ் குடுத்துக்கொண்டு நிண்டிருக்கிறம் மாமா வந்து இழுத்தெடுக்கும் வரைக்கும்.(இப்பத்தான் இதை எழுத வச்சவாக்கு மனசால நன்றி சொல்றன்).நிறைய நினைவுகள் வருது.நடுவில பாலம்.இரண்டு பக்கமும் மலையால நீர் வடிந்து கொண்டிருக்கும்.அவதானமா நடந்தால் பாலத்துக்கு கீழ கல்லுவழியே கடந்து போகலாம்.பல முறை முயன்றும் என்னால பாலத்துக்கு அங்கால போக முடிந்ததில்லை.

நுவரெலியாப் பக்கம் போற வழியெல்லாம் பெரிய பாறையிலிருந்து நீர் வடிந்துகொண்டிருக்கும்.அதுதான் அங்கு வாழ்பவர்களுக்குக் குளிப்பிடம்.றோட்ல நிண்டு குளித்துக்கொண்டு நிப்பார்கள்.நான் சிலநேரம் நச்சரிப்பதுண்டு வானை நிப்பாட்டுங்கோ நாங்களும் இறங்கி ஒருக்காக் கிட்டப்போய்ப்பார்ப்பம் என்று.



இங்க நயகரா நீர்வீழ்ச்சிக்குக் கொஞ்சம் அருகாமையில்தான் இருக்கிறோம்.நான்கு தடவைகள் போயிருக்கிறேன்.நயகரா நீர் வீழ்ச்சியை இரவில் பகலில் எப்ப பார்த்தாலும் அழகுதான்.வைரமுத்துவையே கவிபாட வைச்சதாச்சே. நயகரா நீர்வீழ்ச்சியில விக்டோரியா தினத்தன்று Fire works நடக்கும்.அன்று நீர்வீழ்ச்சி பலவித வண்ண நிறங்களாலான ஒளியூட்டப்பட்டு கண்ணைக்கவரும்.விக்டோரியா தினத்தன்று அல்லது முதல்நாள் அடுத்தநாள் என் பிறந்தநாள் வருவதால் அன்று அங்கு போகும் சந்தர்ப்பம் தானாகவே எனக்குக் கிடைக்கும்.

காணும்..என்னை விட்டா நான் நாள் முழுக்க எழுதிக்கொண்டிருப்பன்.

அழகை ஆராதிக்க நான் அழைப்பவர்கள்

விஜே
நந்தியா
ஷ்ரேயா

கானமும் கதையும் I

வணக்கம்!

இன்றொரு கானமும் கதையும்் கொண்டு வந்திருக்கிறேன் உங்களுக்காக.

இல்வாழ்வு தந்த இயலாமை என்ற இந்தக்கதையை நீங்கள் ஏற்கனவே தத்தக்க பித்தக்கவில, தமிழமுதத்தில,் அல்லது யாழ்களத்தில் வாசித்திருக்கக்கூடும்.

இது வெறும் முயற்சிதான்..நானும் என் தங்கையும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறோம்.

தங்கையின் குரல் தெளிவாகப் பதிந்துள்ளது நான் றக்கோட் பண்ணிக்கொண்டு கதைத்தாலயோ என்ன தெளிவாக இல்லை.

ஒலிக்கலவையகம் : சிஞ்சா மனுசி கலையகம்.







நந்தியாவின் வாடாமல்லிகைத்தோட்டம்

வணக்கம்

யாழ் களத்தில் அறிமுகமான சகோதரி ஒருவர் வலையுலகத்திற்கு வர விரும்பினார்..அழைத்து வந்திருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தியது போல நந்தியாவையும் ஊக்கப்படுத்துவீர்கள் தானே:-))

நந்தியாவின் வாடாமல்லிகைத்தோட்டத்துக்குச் செல்ல : www.nanthiya12.blogspot.com

Tuesday, April 10, 2007

ஆணம் + சொதி + கரைவலை + மற்றும் பல.














ஒரு முயற்சியாக நானும் வசந்தனண்ணாவும் விஜேவும் இணைந்து ஒரு குரல்பதிவு போட நினைத்ததன் விளைவு இந்தப்பதிவு.

எனக்குத்தெரியாத கரைவவலை ஆணம் போன்ற பல விடயங்களை அறிந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது.

என்னையும் சோமியண்ணாவையும் விட மிகவும் அழகாக வசந்தனண்ணா அம்மாப்பாட்டு பாடியிருக்கிறார்...அது தவிர இருவரும் பல சுவையான தகவல்களைச் சொல்லியிருக்கினம் கேளுங்கோ.

பின்குறிப்பு:கண்டுபிடி கண்டுபிடி போட்டில வெற்றி பெற்ற தர்சனுக்குப் பரிசாக நான் வைக்காத சொதி வழங்கப்படும்.

Saturday, April 07, 2007

கண்டுபிடி கண்டுபிடி

இந்த ஆறு பாடல்களினதும் ஆரம்ப வரிகளைச் சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு
த்ததக்கபித்தக்கவின் 2வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடைபெறும் அனைத்துப் போட்டிகளுக்குமான பரிசளிப்பு விழாவில் தகுந்த பரிசு வழங்கப்படும்.

















Bartholin's Gland Cyst ...அப்பிடின்னா??

இந்து : ஹலோ டொக்டர் !

டொக்டர் : ஹலோ இந்து ! என்ன இந்த விடிய வெள்ளன என்னத் தேடி வந்திருக்கிறாய் .. என்ன விசயம் ?

இந்து : அது வந்து டொக்டர் ...

டொக்டர் : கமோன் இந்து என்னட்ட என்ன தயக்கம் ? உன் அம்மாட்ட ; சொல்லாத உன் போய்பிரண்ட் ஐ பற்றியே என்னட்ட சொல்லியிருக்கிறாய் இப்ப என்ன புதுசா தயக்கம் ?

இந்து : தயக்கம் என்றில்லை .. கொஞ்சம் பயம் கொஞ்சம் குழப்பம் .. அதான் உங்களிட்ட எப்பிடிக் கேக்கிறதெண்டு ..

டொக்டர் : வெளிப்படையாப் பேசினாத்தான் குழப்பம் தீரும் . என்ன விசயமம்மா ?

இந்து : செக்ஸ்ல ஒருக்காலும் ஈடுபடாத ஆக்களுக்கும் ஜெனிற்றல் வார்ட் வருமா டொக்டர் ?


டொக்டர் :
இல்லை ! ஜெனிற்றல் வார்ட் வாறதுக்கு தகாத உடலுறவு , கருத்தடை மாத்திரை உட்கொள்ளல் போன்ற பல காரணங்கள் இருக்கு . இப்ப உனக்கு குறிப்பா என்ன குழப்பம் என்று தெளிவாச் சொல்லு . அம்மா அப்பா என்னை நம்பி உன்னை இங்க தங்கிப் படிக்க விட்டிருக்கினம் . என் தலைல கல்லைத் தூக்கிப் போட்டிடாதம்மா .

இந்து : இல்லை அன்ரி ... ஐ நெவர் காட் செக்ஸ் பட் எனக்கு வந்திருக்கிற கட்டின்ர அறிகுறிகளை வச்சு நான் கூகிள்ல தேடிப் பார்த்தன் . ஜெனிற்றல் வார்ட் ன்ர அறிகுறிகளோட ஒத்துப்போகுது அதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு .

டொக்டர் : சரி காட்டு நான் பார்க்கிறன் .

இந்து : இல்லப் பறவாயில்ல நீங்கள் எனக்கு ஒரு பெயின் கில்லர் தாங்கோ . நான் எக்ஸாம் முடிய திரும்ப பின்னேரம் வாறன் .
டொக்டர் : இந்து இது விளையாட்டில்ல . யு ஓகே ?

இந்து : யா ஐ ஆம் ஓகே . நான் எக்ஸாம் முடிய வாறன் .


டொக்டர் :
ம் குட்லக்டா .

இந்து : தாங்ஸ் ! போட்டு வாறன் !

டொக்டர் : ( மனசுக்குள்ள ) இந்தக்காலப் பிள்ளையள எப்பிடித்தான் வளர்க்கிறது ?

இந்ந்துக்கு என்ன பிரச்சனையாயிருக்கும் ?? ம் ம் எதுக்கும் அவசரப்பட்டு தாயக்குப் போன் பண்ண வேண்டாம் . பின்னேரம் இந்து வர இன்னொருக்கா கதைச்சுப் பார்ப்பம் .

பரீட்சை மண்டபத்தில் :
கண்காணிப்பாளர் : இந்த கணிதப் பரீட்சை முடிய இன்னு 1.30 மணித்தியாலங்கள் உள்ளன .

( இந்து கையை உயர்த்தி தன்னுடைய வினாத்தாளைக் கண்காணிப்பாளரிடம் குடுத்துவிட்டு இருக்கையை விட்டு எழும்ப முயற்சித்து சோர்ந்துபோய் தோல்வியுற்று மீண்டும் அமர்கிறாள் .)

கண்காணிப்பளர் : என்னாச்சு இந்து . கடைசி நான்கு கணக்கும் செய்யேல்லயா ?

இந்து : -------

கண்காணிப்பாளர் : இந்து இந்து ... என்னாச்சு .

இந்துவிடமிருந்து பதிலில்லை . மூச்சு மட்டும் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது .

அடுத்த 15 நிமிடங்களில் இந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்னும் மயக்கத்தில் இருக்கிறாள் . தகவலறிந்து வந்த இந்துவின் டொக்டர் அன்ரி காலையில் நடந்த உரையாடலை தலைமை வைத்தியருக்கு விளக்கி தன்னையே இந்துவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி பெற்று இன்னும் சில தாதியருடன் துணையுடன் இந்துவின் உடலைப் பரிசோதனை செய்கிறார் .



அடுத்த ஒரு மணி நேரத்தில் கண்விழித்த இந்துவின் தலையைக்கோதியபடி டொக்டர் அன்ரி .

இந்து : அன்ரி நானெப்பிடி கொஸ்பிற்றலுக்கு வந்தனான் ? என்ர எக்ஸாம் பேப்பர் .

டொக்டர் : எக்ஸாம் அடுத்த ஸெமஸ்டரும் செய்யலாம் . இப்ப நீ ஓய்வெடு . நான் போய் இரண்டுபேருக்கும் குடிக்க ஏதும் வாங்கிக்கொண்டுவாறன் .

இந்து : இல்ல அன்ரி நான் திரும்பவும் எக்ஸாம் ஹோலுக்கு ... ஐயொ அம்மா .. ஆ ஆ ..

டொக்டர் : ஹேய் இப்ப ஏன்மா கட்டிலை விட்டு இறங்கினாய் ? எழும்பாத எண்டு சொல்லத் திரும்பினன் அதுக்குள்ள பார் .. திரும்ப பிளீடிங் ஆயிற்று .

இந்து : ஐயோ என்ன அன்ரி இது ... எனக்கே உயிரே போயிடும் போல இருக்கு . இவ்வளவு பிளீடிங்கா இருக்கு .. என்னை என்ன செய்தனீங்கள் .

டொக்டர் : உனக்கு வந்திருக்கிறது Genital wart இல்லை . பார்த்தோலின் கிளான்ட் சிஸ்ற் (Bartholin's Gland Cyst). அவசரமா ஒரு சின்ன சத்திரசிகிச்சைசெய்ய வேண்டியதாப் போயிற்று . கவலைப்படாத நான்தான் செய்தனான் . உண்மையா இன்றைக்கு வேற இரண்டு male doctors தான் கடமைல இருக்கினம் .

இந்து கேவிக்கேவி அழத்தொடங்க டொக்டர் சமாதானப்படுத்தி ..

டொக்டர் : என்ன இந்து ? உண்மையிலேயே வலியிலதான் அழுகையா ? இல்லாட்டி .. ... இதப்பாரு இந்து நானொரு டொக்டர் . எப்ப இந்த வெள்ளைக் கோர்ட்டைப் போடுறமோ அப்ப எங்களுக்கு இது ஆண் இது பெண் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை . நானும் உனக்கு அம்மா மாதிரித்தானே . அழுகையை நிப்பாட்டு முதல்ல .


இந்து : ம் என்னால தாங்க முடியேல்ல அதான் அழுதிட்டன் ... அன்ரி பார்த்தோலின் கிளான்ட் சிஸ்ற எண்டால் என்ன ?

டொக்டர் : கொஞ்சம் இரு .. உன்னை வேற றூமுக்கு மாத்தோணும் . அ சையாம அப்பிடியே இரு . உடம்பைப் புண்ணாக்காத . நான் ஆறுதலா எல்லாம் சொல்றன் .
--------------------------------------------------------------------------------------------------------
டொக்டர் : எங்கட வெஜினா வாசல்ல இருக்கிற இரண்டுபக்க லபியாவில இருக்கிற குட்டிச் சுரப்பிதான் இந்த பார்த்தோலின் கிளான்ட் . இந்தச்சுரப்பிக்குள்ள குட்டி குட்டி நாளங்கள் இருக்கு . வெஜினாவை வளவளப்பா வச்சிருக்கிற ஒரு திரவத்தை இந்த சுரப்பிதான் சுரக்கும் . சில பேருக்கு சில நேரங்களில் எங்கட தோலில இருக்கிற அல்ல வெயினாவில இருக்கிற தேவையில்லாத கிருமிகளால அல்லது இந்த சுரப்பியின் நாளங்கள் திரட்சியடைவதால் அழற்சி ஏற்படும் . அதாவது இந்த சுரப்பி வீங்கத் தொடங்கும் . இது வெஜினாவிலதான் வரவேணுமென்றில்லை . உடலின் மென்மையான எப்பாகத்திலும் வரலாம் . சில பேருடைய வீக்கம் வலியில்லாம ஒரு ஒருசதமளவுக்கு சின்னனா இருக்கும் . சிலருக்கு ஒரு தோடம்பழம் அளவுக்கு வளரும் . இந்த அழற்சி வளர ஒரு சில மணித்துளிகள் காணும் . என்ர சொல்லைக்கேக்காம எக்ஸாம் ஹோலில்ல போய் ஒரே இடத்தில நீ இருந்ததால உனக்கு வந்த வீக்கம் ஒரு கோல்ப் பந்தின்ர அளவுக்கு வளர்ந்திட்டு . நீ எப்பிடித்தான் காலைல நடந்து போனீயோ தெரியேல்ல . வலியே இருக்கேல்லயா ?

இந்து : வலி இருந்ததுதான் செமஸ்டர் வேஸ்ட் ஆகக்கூடாதெண்டுதான் எக்ஸாமுக்குப் போனான் .

டொக்டர் : வீக்கத்தில ஒரு சின்ன துவாரம் போட்டு அழற்சியில இருந்த திரவத்தை முழக்க வெளியேற்றியாச்சு . ஒரு கிழமைக்கு உனக்கு வலி இருக்கும் .

டொக்டர் : ரொம்ப வலியா இருந்தா ஒரு இன்ஜெக்சன் போடுறன் கொஞ்ச நேரம் நித்திரை கொள்றியா ?

இந்து : இல்லை நீங்கள் தொடர்ந்து சொல்லுங்கோ .


டொக்டர் :
இந்த அழற்சி திரும்ப வாறதுக்கு சான்ஸ் இருக்கு . அப்பிடி திரும்ப வந்தா Catheter என்ற சின்ன ரியுூப் ஐ அந்த அழற்சிக்குள்ள இரண்டு மூன்று கிழமைக்கு வச்சு பாரத்தோலின் சிஸ்ற் ஐ கரைக்க வேணும் . உனக்கு திரும்ப வரக்கூடாதெண்டு கடவுளிட்ட கேள் . இப்ப நானுனக்கு செய்தது marsupialization . ஒரு சின்ன துவாரம் போட்டு கட்டியை உடைச்சு எல்லா அழுக்கையும் எடுத்தாச்சு . கொஞ்ச நாளைக்கு டிஸ்சார்ஜ் இருக்கும் . தினமும் கொஞ்சநேரம் bathuab க்குள்ள தண்ணியைத் திறந்து விட்டிட்டு இருக்கவேணும் . அதெல்லாம் நான் பார்த்துக்கொள்றன் . கவலைப்படாத நல்லா மாறினாப்போல அம்மாட்ட சொல்லலாம் சரியா . நானிப்ப றவுண்ட்ஸ் முடிச்சிட்டு வாறன் . ஓகே .

இந்து : சரி அன்ரி .
_____________________________________________________________
தோழிகளே இப்பிடி நமக்கு துரதிஸ்டவசமா வாற வருத்தங்களைப் பற்றி கனக்க யோசிச்சு உங்களையும் குழப்பி கூட இருக்கிறவையையும் கஸ்டப்பட வைக்காம உடலின் எப்பாகத்திலும் சந்தேகப்படக்கூடிய வலியோ வீக்கமோ என்ன வந்தாலும் உடனடியாக உங்கள் மருத்துவரோட தொடர்பு கொள்ளுங்கள் . இந்துவைப்போல கடைசிவரை குழம்பிக்கொண்டிருந்து மேலும் மேலும் வருத்தத்தை வளர்க்காதீர்கள் . அடுத்த முறை ஜெனிற்றல் வார்ட் பற்றி விரிவாகப் பார்ப்போம் .

Friday, April 06, 2007

எனது பார்வையில் அணங்கு, தோற்றமயக்கம், அடையாளம் I & II

போன வருடம் போக முடியாமல் போன உயிர்ப்பூ நாடக அரங்கப்பட்டறையின் நாடக நிகழ்வுக்கு இம்முறை போயே ஆகவேண்டும் என்று போய்ச்சேர்ந்தேன்.சுமதிரூபனின் (சுமதி ரூபன் தான் நம்ம கறுப்பி :-))இயக்கத்தில் மேடையேறப்போகும் நாடகங்கள் என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடனே முன்னிருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன்.வழமையான தமிழ்நிகழ்வில் நடைபெறும் விளக்கேற்றுதல் போன்ற கலாச்சார நிகழ்வுகளெதுவும் இன்றி சிறிய அறிவுப்புடன் முதல் நாடகம் ஆரம்பமானது கொஞ்சம் நிம்மதியாகவிருந்தது (விரைவா வீட்ட போகலாம் எல்லோ).அணங்கு அடையாளம் 1 தோற்றமயக்கம் அடையாளம் 2 என நான்கு நாடகங்கள் இடம்பெற்றன. நான்கு நாடகங்களையும் சுமதி ரூபன் இயக்கியுள்ளார்.ஒளி சத்தியசீலன்.ஒலியமைப்பு ரூபன் இளையதம்பி.மேடை உதவி ஈஸ்வரி.

நிகழ்ச்சி நிரலில் இருந்த அதே வசனங்களை அப்படியே அறிவிப்பாளர் ராதிகா சுதாகர் வாசித்தாரர். பக்கத்திலிருந்த சில இளையவர்கள் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் முன்னாலிருந்த ஒரு நடுத்தரவயதுப் பெண்மணி சத்தம்போடாமல் இருக்கச்சொல்ல இளையவர்களும் பேப்பரில இருக்கிறதைத்தானே அவா வாசிக்கிறா என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து கதைத்து முடித்தார்கள்.

முதலாவது நாடகமான அணங்கு ஆரம்பமானது.பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து குழந்தைகள் ஆரவாரப்படும் சத்தம்.உடனே சிலர் அமைதியாகவிருங்கள் நாங்கள் மியுசியத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம்...சத்தம்போட்டுக் கதைக்கக்கூடாதென்றார்கள்.மியுசியத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ணகி சிலை சீதையின் சிலை மணிமேகலையின் சிலை போன்றன இருந்தன.அந்தச்சிலைகளைப் பற்றிக்கேட்ட குழந்தைகளுக்கு அழகாக ஆங்கிலத்தில் அவர்கள் மூவரைப்பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது.கண்ணகியை அறிமுகப்படுத்தும்போது சிறீலங்காவில் சிங்களவர்கள் "பத்தினித்தெய்வ" என்று வழிபடுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டது.

அடுத்த காட்சியில் இக்காலப்பெண்ணான சத்யா தன் கணவரான கோபியுடன் மனஸ்தாபப்பட்டு "கோபி என்னை விட்டுப்போகாதயுங்கோ" என்று கெஞ்சுவா பிறகு தனிமையில் என்ர பிரச்சனைகளிலிருந்து வெளியேற என்ன வழி என்று யோசனை செய்து கொண்டிருக்கும்போதே வேறொரு உலகமான கண்ணகி சீதை மணிமேகலை மூவரும் வசிக்கும் இடத்துக்கு வந்துவிடுவார்.

அங்கே கற்பில் சிறந்தது தான்தான் அதனால் தான் தன்னைப் பத்தினித்தெய்வமாக வழிபடுகிறார்கள் என வாதாடுவார் கண்ணகி சீதையோ நான்தான் பாக்கியம் செய்தவள் உலகமே ஏகபத்தினிவிரதன் என்று போற்றும் இராமனைக் கணவனாக அடைந்தவள் என்று கூறுவார்.அதற்கு இக்காலப் பெண்ணான சத்யா இந்தக்காலத்தில எல்லா ஆண்களுமே இராவணன்தான் என்பார்."அப்பவும் என்ர மாமி சொன்னவா கணவனைச் சீலைத்தலைப்பில முடிஞ்சு வைக்கவேணும் என்று நான்தான் தப்பு பண்ணிட்டன் அதான் அவர் அவளிட்ட போயிட்டார் என்று கண்கலங்குவா" சத்யா.அதற்கு கண்ணகி எதற்கும் கவலைப்படாதே நீ போய் உன் கணவரோடு சந்தோசமாக வாழத்தொடங்கு என்று சொல்ல சீதையும் சேர்ந்துகொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக இருப்பாய் என்று கூறுவார்.உடனே மணிமேகலையோ பற்றுக்களைத் துறந்துவிடு அதுதான் உண்மையான சந்தோசமான வாழ்க்கைக்கு அத்திவாரம் என்பார்.

சத்தியா மீண்டும் தன் கணவரின் சந்தேக புத்தியைச் சொல்லி அழ ஆரம்பிப்பா.நாங்கள் வாடகைக்கு இருக்கிற வீட்டுக்காரர் ஒருமுறை பேஸ்மன்றுக்கு ஏதோ திருத்தவென்று வந்தவர் தவறுதலாய் சிகரெட் பிடிச்சுப்போட்டு அடிக்கட்டையை கீழே போட்டிட்டு போட்;டார் அதுக்குக் கோபி யாரோட படுத்தனீ என்று என்னை அடிக்கிறார் என்று அழுவா.உடனே மணிமேகலை சத்யாவைத் துறவுபூணும்படி அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கு கண்ணகியும் சீதையும் சேர்ந்;து "நீ பரத்தவள் குலத்தில் வந்தவள் குலமகள் அல்ல" என்று உரக்கச் சொல்வார்கள்.மணிமேகலை அமைதியாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வேறொரு பெண்ணை நாடிச் சென்ற உன் கணவருக்காக காத்திருந்து அவன் மீண்டும் வரும்போதெல்லாம் உன் சொத்துக்களை வாரி வழங்கி பின்னர் அவனை ஏற்றுக்கொண்டவள் நீ.உன் கணவருக்குப் பாண்டிய மன்னன் தீர்ப்பு வழங்கும்போது நீதிதவறியதற்காக ஒரு மாநகரையே எரித்த சுயநலக்காரியான நீ குற்றமற்றவளா? நீ கற்புக்கரசியா?என்று கேக்க கண்ணகி கூனிக்குறுகி தன் தவறை ஒப்புக்கொண்டு தனக்கான தண்டனை என்ன என்று கேட்பார்.அதற்கு மணிமேகலை உனக்கான கோயில்கள் இடிக்கப்பட வேண்டும்.பட்டிமன்றங்களிலிருந்தும் சரித்திரங்களிலிருந்தும் உன் பெயர் நீக்கப்பட வேண்டும்.நீ பெண்களுக்கான சரியான வழிகாட்டியல்ல என்று தீர்ப்புவழங்குவார்.

அடுத்ததாக சீதையும் தன் கதையின் மறுபக்கத்தைச் சொல்வார்.சூரியன் வானத்திலிருக்கும்போது சூரியனும் சந்திரன் இருக்கும்போது சந்திரனும் நான் கற்புள்ளவள் என்பதற்கு சாட்டிசிக்காரர்கள்.அவர்கள் இருவரும் இல்லாதபோது அக்னி பகவான்தான் என் கற்புக்குச் சாட்சி. தன் தம்பியான லக்ஸ்மணணின் படுக்கையில் கிடந்ப வளையல்களைப் பார்த்துக் கூடப்பிறந்த தம்பியையும் என்னையும் சந்தேகப்பட்டவர்தான் இராமர் என்று ஒப்புக்கொள்வார்.இராமரின் பெயரால் நடக்கும் உயிர்ச்சேதங்கள் நிறுத்தப்படவேண்டும் இராமர் கோயில்களும் உடைக்கப்படவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்படும்.

கிட்டத்தட்ட இதே பார்வையில் தமிழ்நதியும் காவியப்பெண்களைக் கேள்விப் படுத்தியிருந்தது உங்களுக்கு ஞாபகம் வருகிறது.



இவற்றையெல்லாம் கேட்டபிறகு சத்யா தன் பிரச்சனைக்குப் பொறுமை விவாகரத்து மறுமணம் தற்கொலை இவையெல்லாம் முடிவாகாது என்ற முடிவுக்குவந்து துறவுதான் சிறந்த வழி எனத் தீர்மானித்துக் கண்ணகி சீதை இருவரையும் அழைத்துக்கொண்டு மணிமேகலையிடம் போய்ச் சேர்ந்து தியானத்தில் ஈடுபடுவார்கள்.அப்பொழுது மணிமேகலையின் தியானத்தில் உதயகுமாரன் தோன்றுவார்.தியானத்திலே மணிமேகலைக்கும் உதயகுமாரனுக்குமான இடையில் இடம்பெறும் உடலுறவு மிக அழகான நடன அசைவுகளால் சித்தரிக்கப்பட்டதுதான் இந்த நாடகத்தின் சிறப்பே."காமகோள" சுதர்சன் துரையப்பாவின் உதிவியோடு இந்த நடனத்தை அமைத்தவரும் மணிமேகலையாகப் பாத்திரமேற்ற தர்சினி வரப்பிரகாசம் தான்.அணங்கு நாடகத்தில் மிகச்சிறப்பான வேடம் தர்சினிக்குத்தான் வாய்த்திருக்கிறது.


உண்iமாயாகவே மணிமேகலை இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றும் சாந்தமான முகவமைப்பு தர்சினியினுடையது.இக்காலப்பெண்ணாக நடித்த சத்யா தில்லைநாதன் கண்ணகியாக யசோதா கந்தையா சீதையாக பவானி சத்யசீலன் உதயகுமாரனாக றெஜி இமானுவல்பிள்ளை ஆகியோரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்கள்.

அடுத்ததாக அடையாளம் 1 என்ற ஒரு வித்தியாசமான நாடகம் இடம்பெற்றது.2300 வருடங்களுக்கு முதல் கிரீக் நாட்டுக் கவிஞரான நுரசipனைநள என்பவரால் ஆநனநய என்ற நாடகத்தின் பாதிப்பாக கனடாவில் அதிகமாக நிகழும் மனவுளைச்சலால் பாதிக்கபட்ட ஈழத்துத் தமிழ்ப்பெண்களின் தற்கொலை பற்றிச் சொல்கிறது இந்த நாடகம்.

ஆண் பெண் உறவின் அடையாளத்தைக்குறிக்க மேடையின் ஒரு மூலையில் சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மொழி இனம் சாதி என்ற எந்தப்பாகுபாடுமின்றி மனிதன் என்ற இனம் மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற அங்கலாய்க்கும் ஒரு பெண் தன் கதையைச் சொல்கிறாள்.ஊர் ஊராய் ஓடி இந்த உடம்பில உயிரைத்தக்க வைக்கப் பாடுபட்டு இறுதியில் திருமணம் என்றபெயரில் ஒரு சித்திரவதைக்கூடத்துக்கு அனுப்பப்படுகிறாள்.அனுபவங்கள் வெறுமையும் கொடுமையுமாகவே அமைந்துவிடுகிறது.

சில குழந்தைகள் குதூகலமாகச் சிரித்து "ஓரம்மா கடைக்குப்போனா ஒரு டசின் பென்சில் வாங்கிவந்தா அதன் நிறமென்ன" என்று விளையாடுவதைப் பார்த்ததும் தானும் சின்னவயதில் இப்படித்தானே சிரித்துச் சந்தோசமாக இருந்தேன் என்று நினைத்துப்பார்க்கிறாள் அந்தப்பெண்.அப்பொழுதுதான் அவளை முதன் முதலாகப் பெண் என அடையாளம் காட்டுகிறது சித்தப்பா என்ற உறவு."சித்தப்பா விடுங்கோ என்னை விடுங்கோ" என்று திமிறி ஓட முடியாமல் தனக்குள்ளே அழும் அந்த அழுகை" பார்வையாளர்கள் எல்லாரையும் ஒருமுறை உலுக்கியிருக்கும்.

இந்தநாடகம் சுமதி ரூபனின் தனிநடிப்பாலாமைந்தது.அவரே பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் பின்னர் அந்தப்பெண் படும் வேதனையை வெளியே இருந்து பார்க்கும் மக்களாகவும் நடித்தார்.ஆண்கள் போராடப்போனால் வீரமென்று போற்றும் அதே சமுதாயம்தான் பெண்கள் போராடப்போனால் குடும்பப்பிரச்சனைகள் போன்றவற்றையே முதன்மையாக்கிப் பேசவும் செய்கின்றது என்றும் பின்னர் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு பெண்ணின் தற்கொலைக்கான காரணத்தை எப்படி பலர் பல விதமாகத் திரித்துக் கதைப்பார்கள் எனவும் தெளிவாகத் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார் சுமதி ரூபன்.

1.அந்தப்பிள்ளையை ஊரில ஆமிக்காரர் கொஞ்சநாள் பிடிச்சு வச்சிருந்தவங்களாம் அவங்கள் அந்தப்பிள்ளையை என்ன செய்தாங்களோ யாருக்குத் தெரியும்..முதல் பிள்ளை பிறந்நததில இருந்தே ஒரு மாதிரித்தான் இருந்தது பாவம் இப்பிடி அநிநாயமாச் செத்துப்போச்சு.

2.இல்லையே நான் வேற மாதிரியெல்லோ கேள்விப்பட்டனான் என்று தற்கொலைக்கு இன்னொரு காரணம் கற்பிக்கப்படும்.

பின்னர் மின்னல் விழுந்து எரிஞ்சு நான் சாகமாட்டனே.ஆற்றில குதிச்சுச் மூச்சுத்திணறிச் சாவமோ என்று தற்கொலைக்கான பல வழிகளையும் யோசித்து விட்டு "ஐயோ என் குஞ்சுகள் பாவமே" என்று அரற்றுவாள்.அப்பொழுது இன்னொரு பெண்குரல் இந்தப்பெண்ணைச் சமூகநலமையமொன்றில் உதவி பெறும்படி அறிவுறுத்தும்.அதற்கு இந்தப்பெண் அப்ப கல்யாணம் என்றது பொய்யா?? எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை எனக்கு என்ன செய்யிறதென்று தெரியும் என்பாள்.தன் குழந்தைகளை அழைத்து " அம்மா சொன்னாக் கேப்பிங்கள் தானே..அம்மா உங்களுக்கு நல்லதுதானே செய்வன்" என்று சொல்லும்போதே தன் குழந்தைகளின் முகத்தைப்பார்த்ததும் மீண்டும் சாக மனம் வராது தன் குழந்தைகளைக் கொஞ்சுவாள்.தன் மகளைப் பார்த்து அம்மா இல்லாமல் நீ வளரமாட்டாய் உன்னைச் சீரழிச்சிடுவாங்கள் என்று சொல்லும்போது மகளாக நடித்த அந்தச் சின்னப் பெண்ணின் கண்ணில் பலநூறு கேள்விகள்.சந்தோசமான உலகத்துக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன் என்று சொல்லிக் குழந்தைகளையும் தன்னோடு மரணத்துள் திணிப்பதாக முடிகிறது அடையாளம் 1. ஏற்கனமே சுமதி ரூபனின் குறும்படமொன்று சிறுமியொருவர் வீட்டில் வாடகைக்கிருக்கும் ஒரு அண்ணாவால் பாலியல் வதைக்குள்ளாவது பற்றியும் மற்றொரு குறும்படமான "மனுசி" பெண்கள் சில ஆண்களால் ஒரு இயந்திரமாகப் பார்க்கப்படுவது பற்றியும் பேசியிருந்தன.மீண்டும் அவருடைய அடையாளம் 1 என்ற இந்த நாடகம் கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் நடக்கும் பெண்கள் பிரச்சனைகள் பற்றி எடுத்தியம்புகிறது.இந்த நாடகத்தைப் பார்க்கும்போது உண்மையாகவே தன் குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களுக்கு அந்த முடிவை எடுக்க எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்..அந்த முடிவை எடுக்கு முன்னர் அவர்களுடைய மனதில் எத்தனைவிதமான போராட்டங்கள் நடந்திருக்கும் என்று கண்முன்னே காணக்கூடியதாகவிருந்தது.


தோற்றமயக்கம்

நான்கு நாடகங்களிலும் என்னை மிகவும் கவர்ந்தது தோற்றமயக்கம் தான். என்னை மட்டுமல்ல அநேகமானோரைக் கவர்ந்து என்று சொல்லலாம் காரணம் இந்த நாடகத்தில் பங்கேற்று நடித்த சத்யா தில்லைநாதன் அபிராமி சஞ்ஜெய் பவானி சத்யசீலன் மூவரும் போட்டி போட்டிக்கொண்டு நடித்ததுதான்.இந்த நாடகம் யுஅநசiஉயn டீரககயடழ என்ற நாடகத்தின் தழுவல். நாடகம் ஆரம்பமாக முதலே கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெறும் என்று சொல்லப்பட்டதால் சுமதி ரூபன் அப்படி யாரைத் திட்டப்போறா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால் சீதையாக அணங்கு நாடகத்தில் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த பாவனி சத்யசீலன் இதில் தையல்காரியாக வெற்றிலை போட்டுக் குதப்பியபடி ஏத்திக் கட்டிய புடைவையுடன் "நாசமாப்போவான் கோதாரி விழ" என்று திட்டிக்கொண்டே வந்தா மேடையில.எனக்கு வேற 10 தரம் அண்ணா போன் பண்ணிட்டான் வெளியில வரச்சொல்லி..பேசமா எழும்பிப்போவமா என்று யோசிச்சுக்கொண்டிருக்கும்போதே தையல்காரியின் வேலைக்காரப்பெண்ணாக சத்யா வந்தார்.சத்யாவின் பரட்டைத் தலையும் வாய் சுழிப்பும் கண் பார்வையும் கழுத்தைத் திருப்பி திருப்பி ஒரு மாதிரிப் பார்ப்பதுவும் என்னை இருக்கையை விட்டு எழும்ப விடேல்ல.சத்யா எங்க இருந்துதான் இந்த நடிப்பைக் கற்றுக்கொண்டாரோ தெரியவில்லை.நடிப்புக்கா துளியும் கஸ்டப்பட்டதாக தெரியவில்லை ...இயல்பான நடிப்பு.

இந்நாடகத்தின் கதை மிகவும் சுருக்கமானது.ஒரு பணக்காரக் கிழவியின் வீட்டு அலுமாரியில் இருக்கும் சிவிப்புச்சீலையைக் களவெடுத்து விற்றுப் பணமாக்குவதுதான் தையல்காரியின் நோக்கம்.சத்யாவுக்குத்தானும் களவெடுக்கப் போகவேண்டுமென்றாசை ஆனால் சத்யா சின்னப்பெண் என்று அவருடைய முதலாளியம்மா சத்யாவைத் தன்னுடன் வரவேண்டாமென்று சொன்னதும் சத்யா மூஞ்சையத் தூக்கி வச்சுக்கொண்டிருப்பா.சத்யாவைச் சிரிக்க வைப்பதற்காக முதலாளியம்மா "ரசனிக்காரன்ர படம் ஓடுதாம் பார்க்ப்போவமே" என்று கேக்க சத்யா கி கி என்றொரு சரிப்புச் சிரிப்பா அதைக் கேட்ட முழுப்பேருக்கும் சிரிப்புத்தான்.முதலாளியம்மா றேடியோவ ஒன் பண்ண முதலே திரைக்குப்பின்னாலிருந்து பாட்டு ஒலிக்கத் தொடங்கிவிட்டது. " ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று பாடல் ஒலிக்கும்போதே சத்யா தும்புக்கட்டையை எடுத்துக்கொண்டு டான்ஸ் ஆடி ஆடி வீட்டைக் கூட்டுவா.ஏமாளிப்பெண்ணாக ஒரு குழந்தையின் குதூகலத்தோடு முதலாளியம்மாவையே சுற்றிவரும் பெண்ணாக சத்யா திறம்பட நடித்துள்ளார்.தையல்காரியின் நடிப்பும் அவர் பிரயோகிக்கும் "சிங்காரி அடி சக்கையென்டானாம்" இப்படியான வார்த்தைகளும் தலைக்;குக் குளித்துவிடடு வரும் வேலைக்காரப் பெண் சத்யாவைத் தன் பிள்ளைபோல ஓடிக்கலோன் பவுடர் எல்லாம் போட்டு விடுவது சத்யா ஒவ்வொரு நிமிசத்துக்கும் "நானும் வரட்;டே இரவைக்கு" என்று கேட்பதும் பார்வையாளர்களின் மத்தியில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டேயிருந்தது.



முதலாளியம்மாவுக்கும் வேலைக்காரப்பெண்ணுக்கும் இடையில் களவெடுக்கப்போக கூட்டுச்சேர வரும் ஊரிலுள்ள இன்னொரு பெண்ணாக அபிராமி சஞ்செய் நடித்திருந்தார்.அபிராமிக்கு இதுதான் முதல் மேடையனுபவம் என்பது நம்பமுடியவில்லை.சிறப்பாக நடித்திருந்தார்.சத்யாவை விட்டிட்டுத் தானும் தையல்காரியும் சீலையைக் களவெடுக்கப்போகலாம் என்பது அபிராமியின் ஐடியா.அதற்காகச் சத்யாவை சத்யாவின் வீட்டுக்குப் போகச்சொல்லிவிட்டு அன்றிரவு அபிராமியும் தையல்காரியும் களவெடுக்கப்போக ஆயத்தமாக இருப்பார்கள்.அப்பொழுது சத்யா அரக்கப் பரக்க கையில் ஒரு பார்சலுடன் ஓடி வருவா வந்து "முதலாளியம்மா களவெடுக்கப்போகவேண்டாம் அங்க நிறைய ஆக்கள் நிக்கினம்" என்று சொல்லிட்டு "முதலாளியம்மா இதில ஒரு சீலையிருக்கு இதை நானுங்களுக்கு விக்கப்போறன்" என்று சொல்லவே அபிராமி தையல்காரியை இழுத்துக்கொண்டு போய்.."பெட்டையப் பார்த்திங்கிளே ஆருக்குக் கதை விடுறாள் கச்சிதமாக் காரியத்தை முடிச்சிட்டு வந்து இப்ப எங்களை ஏமாத்தப் பார்க்கிறாள்..கையில பார்சலைப் பார்த்திங்கிளோ அவள் அங்க போய்ச் சிவப்புச்சீலையை எடுத்திட்டாள்" என்று தையல்காரியிட்டச் சொல்லவும் அவாவும் அதை நம்பி ஆத்திரத்தில சத்யாவைத் திட்டிப்போட்டு பக்கத்தில கிடந்த அயன்பொக்ஸ் ஐ எடுத்துச் சத்யான்ர காதருகில சுட்டுப்போடுவா.சத்யாவும் "ஏன் என்னைப் பேசுறீங்கள் ஏன் என்னைப் பேசுறீங்கள்" என்று பிதற்றிக்கொண்டு மயங்கிடுவா.அபிராமி பார்சலைப் பிரிச்சுப் பார்த்தால் அதில சிவப்புப் புடைவை இல்லை மாறாக வேறொரு புடைவைதானிருக்கும்.தையல்காரி சத்யா பேச்சு மூச்சில்லாமக் கிடக்கிறதப் பார்த்திட்டு "என்ர ராசாத்தி எழும்படி ஐயோ நான் என்ன செய்வன்" என்ற கதறுவா.."ஆராவது வாங்கோவன் என்ர செல்லத்தைக் காப்பாத்துங்கோ" என்று கத்துவா அபிராமி அந்த இடத்தை விட்டு ஓடிடுவா.


அடையாளம் 2

நடிப்பைப் பார்க்கும்போது தோற்றமயக்கம் என்னைக் கவர்ந்தது போல் கதை வரிசையில் என்னைக் கவர்ந்தது அடையாளம் இரண்டு என்ற குறுநாடகம்தான்.பெண்களை அடிமையாக வைத்திருத்தல் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பாதிக்கும் என்று சொல்கிறது.தாயான சுமதி ரூபனுக்கு நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் மகனும்.சின்ன வயதிலிருந்தே மகனை வைத்து பெண்களை அடிமையாக வளர்க்கிறார் தாயார்.மகன் பெண்கள் நால்வரையும் கயிறு கட்டி மேய்ப்பார்.பெண்கள் வளர்ந்ததும் நால்வருக்கும் திருமணம் நடக்கிறது.அம்மாவுக்கும் வயசாகிக்கொண்டே போகிறது.நான்காவது பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது.அம்மாக்கு மிகவும் வயசாகிவிட்டது.மகனுக்குத் திருமணம் ஆனதாகக் காட்டுப்படவில்லை.இறுதியில் "பெட்டையள் ஒருதரும் திருமணத்துக்குப்பிறகு இந்தப்பக்கம் திரும்பியும் பார்க்கேல்ல எனக்கும் வயசாகிட்டு என்னையும் நீதாண்டா பராமரிக்கணும்" என்று தாயார் சொல்லும்போதே மகன் தரையில் சுரண்டு விழுந்துவிடுவான்.ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் நடக்கும்போதும் அவர்களை முன்னர் கட்டியிருந்த கயிற்றை அண்ணனுக்கு மேலே சுற்றிவிட்டுச் செல்வார்கள்.நான் நினைக்கிறேன் ஆண்களுக்கு பெற்றோராலும் சகோதரிகளாலும் ஏற்றப்படும் சுமையை அந்தக் கயிறு சித்திரிக்கிறதென்று.

நான்கு நாடகங்களும் முடிந்த பின்னர் கேள்விகள் கேட்பதற்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் நேரம் ஒதுக்ப்பட்டது.அடையாளம் 1ல் அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்வது போல காட்டியது ஆண் கொடுமைப்படுத்தியதாலா அல்லது மனவுளைச்சலால என்று ஒருவர் கேட்டார் அதற்கு இயக்குனர் சுமதி ரூபன் அது கனடாவில் நடந்த ஒரு உண்மைக்கதையைத்தான் நாடகத்தில் அப்படியே காட்டியுள்ளேன் என்றார்.அதே நாடகத்தில் பெண்கள் போராடப்போவது பற்றிய அவரது கருத்துப் பற்றி நான் கேட்டதற்கு அவர் சொன்ன விளக்கம் எனக்கு ஆச்சரியமாகவிருந்தது ஆனால் அது உண்மையெனப் பின்னர் அறிந்துகொண்டேன்.ஈழப்போராட்டத்திலிருந்து விலகிய பெண்களின் திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அப்பெண்களின் சகோதரிகளுக்குத் திருமண ரீதியாக வரும் பிரச்சனைகள் பற்றியும் அறியக்கூடியதாகவிருந்தது.

அணங்கு நாடகத்தில் இறுதியில் மணிமேகலை உதயகுமாரனுடன் தியானத்தில் ஒன்றுசெருவது போலக் காட்டுவதன் மூலம் இயக்குனர் பெண்களின் பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறாரா என ஒருவர் கேட்டார் அதற்குப் பார்வையாரளர் பகுதியிலிருந்து " அதைப் பலவீனம் என்று சொல்லாமல் பெண்களுக்கும் உணரச்சிகள் இருக்கென்றும் எடுத்துக்கொள்ளலாம் என்று" ஒரு பதில் வந்தது. தொடர்ந்தும் நடைபெற்ற கருத்துப்பரிமாற்றத்தில் கலந்துகொள்ளமுடியாமல் போயிற்று.இப்படியான நாடக நிகழ்வுகளில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற சுமதி ரூபனின் ஆதங்கத்தை இனிவரும் நிகழ்வுகளில் ஆண்கள் தீர்த்து வைப்பீர்கள் தானே:-)

Thursday, April 05, 2007

நீ இல்லாத நான்






நானெழுதிய இந்தக் கவிதை(?)யை ஏற்கனவே இங்கு பதிந்திருக்கிறேன்.இன்னு அற்புதன் குடுத்த ஐடியாவின் படி குரல்பதிவாக இடுகிறேன்.

எப்பிடி இருக்கென்று சொல்லுங்கோ.

Wednesday, April 04, 2007

அன்புள்ள தாயகமே ஆசை மகன் எழுதும் மடல்...






இன்றைய ஒலிப்பதிவில் சஞ்சீவ்காந்த் இன் உராய்வு என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எனக்குப்பிடித்த "கடிதம்" "ஈழம்" என்ற இரண்டு கவிதைகளை உங்களுக்காகத் தருகின்றேன்."கடிதம்" என்ற கவிதை நோர்வேயில் வெளியிடப்பட்ட "இராகம் 2001" என்ற இசைத்தட்டில் ஒரு பாடலாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்குப்பிடித்திருந்தால் எனக்குப்பிடித்த மற்றைய கவிதைகளையும் இங்கே பதிவிடும் எண்ணமுள்ளது.

Monday, April 02, 2007

சுக்குப்பக்கு சுக்குப்பக்கு கூ கூ





உண்மையா அந்த 2 பாட்டும் இந்தச் சுக்குப்பக்கு சுக்குப்பக்கு கூ கூவும் தான் முதலில றக்கோட் பண்ணினது சில தொழில்நுட்பக்கோளாறுகளால இப்ப பதிவிடுறன்.