Custom Search

Wednesday, April 11, 2007

அழகா அழகா

அய்யனார் அழகுப்பதிவு போடச்சொன்னா மட்டும் கேட்டதைக் குடுக்கல என்று நினைப்பாம் நான் கிறுக்குப்பதிவு போடச்சொன்னதும் போடல்லயாம் அதால நான் பழிவாங்கிடுவனாம் (என்னை என்ன சூட்டி பபா என்று நினைச்சிங்கிளோ )


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயம் அழகாகததான்; தெரிகிறது.கண்ணிரன்டையும் திறந்து வைத்தால் பாரக்கிற எல்லாமே அழகாகத்தான் தோன்றும் ஆனால் அதற்கு மனதில் பாரம் இல்லாமல் இருக்க வேணும்.மனதில 1008 வலிகளை வைத்துக்கொண்டு பூவை, குழந்தைகளைப் பார்த்தாக்கூட அழகாத் தெரிவதில்லை. (அறிமுகம் காணுமோ)

அக்காமாரும் அவேன்ர கிளியும்

எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும்போது எங்கட வீட்டுக்குப்பக்கத்து வீட்டில் ஒரு அழகான அன்பான குடும்பம் வாடகைக்கு வந்தி சிலவருடங்கள் இருந்தார்கள்.அங்க இரண்டு அக்காமார்.இரட்டையர்கள்.பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள்(படம் காட்ட மாட்டன்).தமிழ் சினிமா நடிகைகள் எல்லாம் கிட்டயும் நிக்கேலாது. இருவருக்கும் நீளமான கூந்தல்.நான் படிக்கிற நேரம் போக மிச்ச நேரமெல்லாம் அவேன்ர வீடுதான் என்ர கதி.அவேன்ர கூந்தல்தான் எனக்கு விளையாட்டுப்பொருள்.அவைக்குப் பூப்புனித நீராட்டுவிழா நடந்த அன்று மட்டும் நான் ஒரு 100 தரம் அவையப் பார்த்து இன்றைக்கு நீங்கள் இன்னும் வடிவா இருக்கிறீங்கிள் என்று சொன்னானாம் என்று இப்ப இத்தாலியில இருக்கிற ஒரு அக்கா நடுகலும் சொல்லுவா.

அவை இரண்டு பஞ்சவர்ணக்கிளி வளர்த்தவை.அந்தக்கிளிகளும் அவையைப்போலவே நல்ல வடிவு.கூண்டைத்திறந்து விட்டாலும் கொஞ்சநேரத்தில அவேட்ட திரும்பி வந்துடுவினம் அந்தக் கிளிகள்.அழகான அந்த அக்காவை விட்டிட்டுப் போக மனமில்லை.

மலைக்காற்றும் ஆற்று நீரும்

சில வருடங்கள் மலைநாட்டில் வாழ்ந்திருக்கிறேன் அல்லவா.அழகான மலைகளையும் அருகே ஓடும் ஆறகளையும் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா.தோட்டப்பக்கம் போறது கொஞ்சம் தூரம்தான் இருந்தாலும் ஏதும் சாக்குச் சொல்லிட்டு பெரியம்மான்ர மகன்களுடன் சேர்ந்து நானும் மலைக்காற்ற வாங்கச் செல்வதுண்டு.கஸ்டப்பட்டு மலையுச்சிக்கு ஏறிப்போய் அண்ணான்ர கடையில சுட்டுக்கொண்டு போன பொலித்தின்( Polyethylene ) பாக் ல காற்றடைச்சு மேல பறக்க விட்டா அது போய்க்கொண்டேயிருக்கும் மேல.அண்ணாக்குத் தெரிந்தவர்களின் தோட்டங்களுக்குச் சென்று வெற்றிலை, மிளகு ,கோப்பி போன்றவற்றைத் தொட்டுத் தொட்டுப் பாரக்கிறது(இப்ப இருக்கிற டிஜிற்றல் கமரா என்னட்ட அப்ப இருந்திருக்கவேணும்.) கஜ+ பழம் நாக்குக் கடிக்கும் என்று தெரிஞ்சும் அவை தரத்தர அளவுக்கதிகமாகச் சாப்பிட்டிட்டு வயித்தத் தடவிக்கொண்டு திரிவன்.இதாலயே நானும் மலைக்கு வாறன் என்றால் என்னை எப்பிடியாவது கழட்டி விடணும் என்று பார்ப்பினம் அண்ணாவை.மலைக்கோயில் ஒன்றுண்டு.பெயர் சிந்தாக்கட்டி (பிள்ளையாரோ முரகனோ என்று தெரியேல்ல).அந்தக்கோயிலுக்குக் கும்பிடப் போறல்ல ஆனால் புதினம் பார்க்க.அங்க ஏறி நிண்டு பார்த்தா முழு நகரமும் தெரியும்.அதோட மலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருவமாகத் தெரியும்.நக்கிள்ஸ் மலைத்தொடர் பார்க்கப் பார்க்கப் பிடிக்கும். இன்னொரு மலை இருக்கு. அது ஒரு பெண் படுத்திருப்பது போலிருக்கும்.எனக்கு மட்டும்தான் அப்பிடித் தெரிந்ததோ தெரியேல்ல ஏனென்றால் நான் சொன்னபோது எவரும் நம்பவில்லை.அந்தப்பெண்ணின் வயிற்றுப்பகுதியில் மின்சாரக்கம்பம் ஒன்று இருக்கும். அதைப் பார்த்துவிட்டு இதைப்பார்த்தா "பஞ்சமி" நாடகத்தில் வந்த மலை மாதிரியிருக்கென்று சொல்லிக்கொள்வேன்.

களுதாவளை என்றொரு இடம் இருக்கு. அங்க ஒரு காளிகோயிலிருக்கு.அருகே களுதாவளை ஆறு ஓடிக்கொண்டிருக்கும். பல இடங்களில் இருந்து குளிப்பதற்குப் பலர் வருவதுண்டு. ( சல சலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே:-))) அந்தச்சத்தமும் நல்லாயிருக்கும்.அந்த ஆற்றங்கரைக்கு இறங்கிச்செல்லும் பாலம் கூட அழகாக இருக்கும்.பெரிய பெரிய கற்கள் சின்னச் சின்ன மரங்கள் இப்பிடி நிறைய அழகு சேர்த்த அந்த ஆற்றில் குடும்பம் குடும்பமாக பலரும் கதை பேசிக் குளித்துவிட்டு அந்த காளி கோயிலில் பொங்கலிட்டு ஒன்றாக அமர்ந்து உண்பதும் அழகு. பல உயிர்களைக் காவு வாங்கியதும் அந்த அழகான ஆறுதான்.

நுவரெலியாவில் சீதை (அம்மன்) கோயில் ஒன்று உண்டு.அங்கும் ஒரு அழகான ஆறு கோயிலுக்குப்பின்னால் ஓடுகின்றது.அந்த ஆற்றில் அனுமாரின் காலடித்தடம் என்று சொல்லி ஒரு பெரிய பள்ளமிருக்கு.அந்தக்கோயிலுக்குச் செல்பவர்கள் அந்த ஆற்றில் கட்டாயம் இறங்குவார்கள்.சரியான குளிர் அந்தத் தண்ணி.சும்மா தொட்டாலே கால் விறைக்கும்.ஆற்றுக்கு அருகில் ஒரு அழகான ரோஜாத்தோட்டம் ஒன்றுண்டு.என்னைப்போல எல்லாரும் அந்தத் தோட்டத்தில் ஒரு ரோஜாவாவது களவெடுத்திருப்பார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்.

மழலைகள்

இவையப்பற்றி நான் சொல்லவும் வேணுமா?பல வேளைகளில் எரிச்சலூட்டினாலும் அதையும் ரசிக்கவைக்கக் கூடியவர்கள் குழந்தைகள்.செய்யிறதெல்லாம் குழப்படி ஆனாலும் அதில் ஒளிந்திருக்கும் குறும்பு அறிவு மற்றவர்களை அவர்கள் முன்னே மண்டி போட வைத்துவிடும்.இன்று நானும் தங்கையும் ஐஸ்கிறிம் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது வந்து தனக்கும் தீர்த்தச்சொன்னான்.அம்மா சொன்னா அவை சாப்பிடுறது வேண்டாம் இங்க வா பிள்ளைக்கு அம்மம்மா சன்டே (Sundae) தாறன் என்று சொன்னா.அதுக்கு அவன் உடன எனக்கு சன்டே வேண்டாம் இப்பவே தாங்கோ.(சன்டே ஒரு ஐஸ்கிறீம் வகை) இப்படி தினமும் ஒருகதை சொல்லி எங்களைச் சிரிக்க வைப்பான்.வீட்டுக்குப் பக்கத்தில ஒரு பூங்கா இருக்கு.கோடை காலத்தில குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டுவிட்டுப் பெற்றோர்கள் தங்கட அலுவல்.நாங்கள் வீட்ட நின்டால் நிறையப் புதினம் பார்க்கலாம்.நாய்க்குட்டியோட விழுந்து புரளும் ஒரு குழந்தை.ஒராளைத் தள்ளிவிட்டிட்டு மற்றாள் ஊஞ்சல் ஆடும்.பந்தைத் தூக்கி எங்கட வீட்டை எறிஞ்சுபோட்டு எப்பிடிப் போய் எடுக்கலாம் எட்டு வேலிக்குள்ளால எட்டி எட்டிப் பார்க்கும் ஒராள்.
வேலில படர்ந்திருக்கும் திராட்சைப் பழத்தைப் பறித்து வாயில வச்சிட்டுப் புளி தாங்காமல் வாய் கண் சுழிச்சுக்கொண்டு திரும்பிப்போகும் ஒராள்..இதெல்லாம் ஹோல்ல சோபால இருந்தாலே பார்க்கலாம்.

நீர்வீழ்ச்சி

வத்தளையில்தான் நான் முதல் முதலாக நீர் வீழ்ச்சியைப் பார்த்தது.ஆர்வமிகுதியால் சிலர் சேர்ந்து தண்ணிக்குள்ள இறங்கி பாறைக்குள்ள காலை விட்டிட்டு போஸ் குடுத்துக்கொண்டு நிண்டிருக்கிறம் மாமா வந்து இழுத்தெடுக்கும் வரைக்கும்.(இப்பத்தான் இதை எழுத வச்சவாக்கு மனசால நன்றி சொல்றன்).நிறைய நினைவுகள் வருது.நடுவில பாலம்.இரண்டு பக்கமும் மலையால நீர் வடிந்து கொண்டிருக்கும்.அவதானமா நடந்தால் பாலத்துக்கு கீழ கல்லுவழியே கடந்து போகலாம்.பல முறை முயன்றும் என்னால பாலத்துக்கு அங்கால போக முடிந்ததில்லை.

நுவரெலியாப் பக்கம் போற வழியெல்லாம் பெரிய பாறையிலிருந்து நீர் வடிந்துகொண்டிருக்கும்.அதுதான் அங்கு வாழ்பவர்களுக்குக் குளிப்பிடம்.றோட்ல நிண்டு குளித்துக்கொண்டு நிப்பார்கள்.நான் சிலநேரம் நச்சரிப்பதுண்டு வானை நிப்பாட்டுங்கோ நாங்களும் இறங்கி ஒருக்காக் கிட்டப்போய்ப்பார்ப்பம் என்று.இங்க நயகரா நீர்வீழ்ச்சிக்குக் கொஞ்சம் அருகாமையில்தான் இருக்கிறோம்.நான்கு தடவைகள் போயிருக்கிறேன்.நயகரா நீர் வீழ்ச்சியை இரவில் பகலில் எப்ப பார்த்தாலும் அழகுதான்.வைரமுத்துவையே கவிபாட வைச்சதாச்சே. நயகரா நீர்வீழ்ச்சியில விக்டோரியா தினத்தன்று Fire works நடக்கும்.அன்று நீர்வீழ்ச்சி பலவித வண்ண நிறங்களாலான ஒளியூட்டப்பட்டு கண்ணைக்கவரும்.விக்டோரியா தினத்தன்று அல்லது முதல்நாள் அடுத்தநாள் என் பிறந்தநாள் வருவதால் அன்று அங்கு போகும் சந்தர்ப்பம் தானாகவே எனக்குக் கிடைக்கும்.

காணும்..என்னை விட்டா நான் நாள் முழுக்க எழுதிக்கொண்டிருப்பன்.

அழகை ஆராதிக்க நான் அழைப்பவர்கள்

விஜே
நந்தியா
ஷ்ரேயா

11 comments:

வி. ஜெ. சந்திரன் said...

//அய்யனார் அழகுப்பதிவு போடச்சொன்னா மட்டும் கேட்டதைக் குடுக்கல என்று நினைப்பாம் நான் கிறுக்குப்பதிவு போடச்சொன்னதும் போடல்லயாம் அதால நான் பழிவாங்கிடுவனாம் //

விடாதங்கோ சினேகிதி கட்டாயம் கேக்க வேண்டிய கேள்வி ;)

//வத்தளையில்//

மலை நாட்டிலும் ஒரு வத்தளை இருகோ எனக்கு கொழும்புக்கும் கட்டு நாயக்காக்கும் இடையிலை இருக்கிற வத்தளையை தான் தெரியும்.

வி. ஜெ. சந்திரன் said...

//அழகா அழகா//

ஆரா கூப்பிடுறியள் ;)

அய்யனார் said...

//அய்யனார் அழகுப்பதிவு போடச்சொன்னா மட்டும் //

சினேகிதி!
நான் கைல அரிவாள் வச்சிக்கிட்டு கேட்டதால பயந்துபோய் எழுதி இருப்பாங்கன்னு நெனைக்கிறேன் நம்ம பேர் எஃபக்ட் அந்த மாதிரி :)

/விடாதங்கோ சினேகிதி கட்டாயம் கேக்க வேண்டிய கேள்வி ;)/

சந்திரன் இதுக்கு பேர்தான் எரிகிற தீயில எண்ணெய் விடுறதா? :)

தமிழ்நதி said...

மக்களே!என்ன நடக்குது இங்கே? வி.ஜே.சந்திரன்!இருக்கு ஆப்பு உங்களுக்கு... நானும் சிநேகிதியும் எவ்வளவு சிநேகிதமாய் இருக்கிறம். குழப்புறன் குழப்புறன் எண்டு ஓட்டத்திலை திரியிறீங்கள்:)

சிநேகிதி!மலைநாடு எனக்கும் பிடிக்கும். அதிலையும் நுவரெலியாவின் அழகில் ஒரு மயக்கமே உண்டு. போகும் வழியெங்கும் சின்னச் சின்ன நீர்வீழ்ச்சிகளும் அபாய வளைவுகளும் பாதையோரப் பூக்களும் பசுமைப் பள்ளத்தாக்குகளும்... அங்கு வாழக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.

தென்றல் said...

சினேகிதி,
உங்கள் எழுத்து நடை ரொம்ப அழகா இருக்கு!

நயகரா புகைபடம் அருமை!

முத்துலெட்சுமி said...

கிளி கதை ரொம்ப நல்லா இருக்கு.
:)
\\அக்காமாரும் அவேன்ர கிளியும்//
தலைப்போட
சின்ன கதை போல இருந்ததா படிக்க ,அதான் கதை என்று சொல்லிவிட்டேன்.

சினேகிதி said...

VJ :-))) ayanaar eatho kekirar:-)))

oral ungaluku aapu vaika poravam:-))

muthulachumi n thenral vaango vaango:-)))

நந்தியா said...

சினேகிதி உங்களின் அழகோ அழகு தான் சீ உங்கள் ரசிப்பின் அழகு ரொம்ப நல்லாயிருக்கு.

சினேகிதி said...

\\சினேகிதி உங்களின் அழகோ அழகு தான் சீ உங்கள் ரசிப்பின் அழகு ரொம்ப நல்லாயிருக்கு.\\

nakkal irukadum ammani enga ungada alaku pathivu?

மாப்பு said...

வணக்கம் சினேகிதி,

வத்தளையா அல்லது மாத்தளையா? மலைநாட்டில் வத்தளை என்று ஒரு இடம் இருக்கின்றதா? யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் நீர்வீழ்ச்சியை முதன்முதலாக பார்க்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா?

பக்கத்தில் இருந்தும் ஆக நான்கு தடவைகளா நயாகரா போல்ஸ்க்கு போய் இருக்கின்றீர்கள்? ஏன் கார் ஓடத்தெரியாதா? ஊரில் சைக்கிள் ஓடுவதுபோல் காரில் இரண்டு உலக்கு உலக்கினால் நயாக்கரா போல்ஸ் வந்துவிடுமே?

நட்புடன்,

மாப்பு

சினேகிதி said...

hi maaps...malainaadilaum oru Vatale iruku...malainaadanida keduparpam melathaika thagavalkaluku.