அலாதியானது அவர்களுடைய மொழி
பல்ப் எரிஞ்சுதோ மணி அடிச்சிச்சோ கரப்பான் பூச்சி லொள்ளுப்பண்ணிச்சோ அந்தக்குண்டுப் பெடியன் பக்கோடா சாப்பிட்டானோ நான் யாரையும் மிஸ் பண்ணினனோ நிலாவைப் பார்க்க நிலாவில நிலாவும் சிபியும் வந்து "ஒரு களவாணிப்பயல நானும் காதல் செஞ்சேனே" என்னு ஆடிச்சினமோ...அடச்சா மொழி படம் பார்க்காத ஆக்கள் எனக்கு தலையில சுகமில்லை என்று முடிவு பண்ணியிருப்பினம் இப்ப.
அட பெரிய விசயம் ஒன்றுமில்லை...நான் நேற்றுத்தான் மொழி படம் பார்த்தனான்.படத்தைப் பற்றி நான் ஒன்றும் சொல்லேல்ல நீங்களே போய்ப் பார்த்துக்கொள்ளுங்கோ அதை ஆனால் அதைப் பார்த்ததால என்னுறவுகள் சிலருடைய ஞாபகம் தாலாட்டிக் கொண்டேயிருக்கு.
கோபி அம்மான்ர தங்கச்சியின் மகன்.எனக்கும் அவனுக்கும் சில வயதுகள்தான் வித்தியாசம்.அவன் வாய் பேச மாட்டான்.எப்பவுமே ஒரே வயதில் உள்ளவர்களி்டையே ஒரு போட்டி நிலவும்.படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி அம்மம்மா தாத்தாவில் பாசம் காட்டுவதிலும் சரி.எங்களுக்கும் அது விதி விலக்கல்ல.பிறந்ததிலிருந்தே போட்டிதான்.அம்மம்மா என்னைக் கால்ல தலையணி வைத்து ஆட்டி ஆட்டி நித்திரையாக்கிறது அவனுக்குப் பிடிக்காதாம்.நித்திரை மாதிரிப் பாயில படுத்திருந்து போட்டு அம்மம்மா சற்று விலகிப்போனதும் என்ர சொக்கை கடிச்சு வைப்பானாம் இல்ல நுள்ளிப்போடுவானாம்.வளர்ந்து வந்த பிறகும் எங்களுக்குள்ளே அந்தப் போட்டி போகவில்லை.ஆனால் எங்கள் குடும்பத்தில் நாங்களிருவரும் இப்படிச் சண்டை பிடிப்பது அவர்களுக்கு ஒருவகையில் மிகவும் சந்தோசம் ஏன் என்றால் பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு ஒரு குறை இருந்தால் எங்கே மற்ற குழந்தைகள் அதை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கும்.ஆனால் பெரியம்மா சித்தி பிள்ளைகளை விட எனக்கும் கோபிக்கும் இடையில் கொல்லுப்பாடு நடந்தாலும் ஒருவரை ஒருவர் மற்றவர்கள் முன்னிலையில் விட்டுக்கொடுக்க மாட்டோம்.பள்ளிக்கூடம் போற வயது வந்ததும் நான் நேர்சரிக்குப் போகத் தொடங்கி விட்டேன் ஆனால் கோபி வீட்டிலயே இருந்தான்.அது அவனுக்கு முதலில் சரியான கோவம் பிறகு பிறகு என்னுடைய புத்தகங்களை வாங்கி அவனும் படிக்கத் தொடங்கினான்.வெளியாட்கள் ஆரும் வீட்டுக்கு வந்தால் நாங்களிருவரும் கதைக்கிறதப் பார்த்தால் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்.அவனோடு சண்டை பிடிப்பதற்காகவே அவனுடைய மொழியை நான் நன்கு தெரிந்து வைத்திருந்தேன் (இப்ப பரீட்சிர்த்துப் பார்க்க வேண்டும்).
பிறகு நான் பள்ளிக்கூடம் போகத் தொடங்க ஒரு குடும்ப நண்பர் மூலம் கோபியும் கைதடியிலுள்ளு வாய் பேச முடியாத கண் தெரியாதவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அவனும் போகத் தொடங்கினான்.தினமும் போய் வருவது சிரமம் என்பதால் அவன் கைதடியில் தங்கியிருந்து படிக்கத் தொடங்கினான்.அதனால் பள்ளிக்கூட விடுமுறையில் தான் அவனைக் காண முடியும்.அவனுடைய விளையாட்டுப் போட்டி நடைபெறும் நேரம் மாமாக்களுடன் நானும் போவதுண்டு.அவன் படிப்பிலும் நல்ல கெட்டிக்காரன் விளையாட்டிலும் தான்.சில வருடங்கள் கப்டன் ஆகவும் இருந்தான்.நாங்கள் கன பேர் விளையாட்டுப் போட்டிக்குப் போவது அவனுக்கு நல்ல புழுகம்.ஆசிரியர்கள் அவனுடைய நண்பிகள் நண்பர்கள் எல்லோருக்கும் பெருமையோடு அறிமுகம் செய்து வைப்பான்.எனக்குப் பொறாமையாக இருக்கும்.அங்க படிக்கிற பெரிய அண்ணாமாரிலிருந்து சிறியவர்கள் வரை கோபிக்கு நண்பர்கள்.
அவன்ர றூமைப் பார்க்க அப்பிடி ஒரு தனித்துவமான அழகிருக்கும்.ஹாஸ்டல் இருக்கிறதாலயோ என்னவோ அவனுள் பல மாற்றங்கள்.வீட்டுக்குள்ளயும் செருப்புப் பொட்டுக்கொண்டுதான் திரிவான்.விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தால் சைக்கிளில் உள் பாதையால எங்கட வீட்ட வந்திடுவான்.கழுத்தில ஒரு கறுப்பு நூல் அதில அவற்ற அறைச் சாவி தொங்கிக்கொண்டிருக்கும்.தானில்லாத நேரம் தன்ர றூமை யாரும் குப்பையாக்கிப்போடுவினம் என்று பயம்.அவனுக்கு ஒரு அண்ணா 2 தம்பிகள் ஒரு தங்கை.ஒருவருக்கும் அவருடைய அறைக்குப் போக அனுமதியில்லை.சித்திக்குச் செல்லம் ஏனென்றால் மற்றாக்கள் வீட்டைக் குப்பையாக்கினாலும் அவையை அதட்டி வேலை வாங்குவான் கோபி.மொழியில ஜோதிகா கோவம் வரும்போது கண்ணை உருட்டுவா அதே உருட்டல் நான் கோபியிடடமும் பார்த்திருக்கிறன்.அடக்க முடியாத கோபம் என்றால் றூமைப் பூட்டிப்போட்டு நாள் முழுக்க இருப்பான்.
கைவினைப்பொருட்கள் செய்வான்.லக்ஸ் சவர்க்காரம் குண்டூசி பேபி றிபன் இவற்றை வைத்து அழகான பூ வாஸ்கள் போல செய்வான்.றெஜிபோர்ம் ஐ பல உருவங்களில் வெட்டி அவற்றுக்கும் அலங்காரங்கள் செய்வான்.ஊசி மருந்து வாற அந்தக் குட்டிப் போத்தல் இருக்கல்லா அதை எடுத்துச் சுத்தப்படுத்தி றபர் மூடியில் துளையிட்டு நூல் கட்டி அதற்கு மேலே ஸ்ரோ வைத்து ஒன்று செய்வான் (பெயர் மறந்திட்டன்).
மொழி படத்தில பிருதிவ் ஜோவுக்கு குரல் இருந்தா எப்பிடி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்த காட்சி எனக்குப்பிடிச்சது.கோபிக்கு ஒரு நாள் நாங்கள் கதைக்கிற மாதிரிக் கதைக்க ஆசை வந்து நாடியைக் கீழ அமத்திப் பிடிச்சுக்கொண்டு நாங்கள் கதைப்பது போல வாயை அசைத்துப்பார்த்தான் சத்தம் வரவில்லை ஆனால் அதற்காக அவன் வருத்தப்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை.தன்னால கதைக்க முடியவில்லை என்றது அவனுக்கு ஒரு குறையில்லை என்றுதான் நினைக்கிறேன்.எங்கள் எல்லாரைப்போலயும் அவனால் எல்லாம் செய்ய முடியும்.மற்றவர்களுடன் செய்திப்பரிமாற்றம் செய்ய அவனுக்கு மொழியிருக்கு.சுற்று வட்டாரத்தில் எல்லாருக்கும் அவன் சொல்றது விளங்கும்.எங்கட ஊரில ஒரு அன்ரி இருந்தா அவாவும் கதைக்கமாட்டா.ஆனால் அவான்ர பிள்ளைகள் இரண்டும் பயங்கர வாய்.அம்மாவின் அக்காவின் மகளொருவரும் வாய் பேசமாட்டார்.சின்ன வயசில கோபி சித்தின்ர வயித்தில இருக்கும்போது மின்சார அதிர்ச்சி ஏற்பட்டதால் தான் அவனால் பேச முடியவில்லை என்று சொன்னார்கள்.பெரியம்மாவின் மகளுக்கும் அப்படித்தான் ஏதோ காரணம் சொன்னார்கள்.ஆனால் சித்தி திருமணம் செய்தது சொந்த மச்சானை அதனால் ஜெனற்றிக்கல் காரணங்களும் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
எனக்குத் தெரிந்து அவனுக்கு ஒரு நல்ல நண்பி ஒருத்தி இருக்கிறாள்.கூடப்படிக்கிற பெண்.விடுமுறை நேரம் அவளும் வருவதுண்டு.கோபியும் அவளுடைய வீட்டுக்குப்போவதுண்டு.அம்மம்மா வீட்டுக்கு முன்னால தோட்டம்.தோட்டத்துக்க அங்கால மெயின் றோட்.வேலியோட அப்பப்பான்ர சாய்மனைக் கட்டில் இருக்கும் எந்த நேரமும்.அப்பப்பா இல்லாத நேரம் அதில இருக்கிறதுக்கு பெரிய சண்டையே நடக்கும்.கோபின்ர நண்பிக்கும் அந்தச் சாய்மனைக் கட்டிலில் இருக்கப் பிடிக்கும்.அவள் வந்தால் நாங்கள் விட்டுக்கொடுத்து விடுவோம்.சில நேரம் நாங்கள் ஒருதரும் அருகில் இல்லையென்றால் அவர்களிருவரும் மணிக்கணக்கில் றோட்டைப் பார்த்துப் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.ம் ம் இப்படி அவனைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு.அவனுடைய திறமைக்கு கைதடியிலயே அவனைப் படிப்பிக்கச் சொன்னார்களாம்.நாட்டுப்பிரச்சனை மட்டும் இல்லையென்றால் அவனுடைய வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்கும்.இப்ப அவன் ஒரு தையல்மெசின் வாங்கியிருக்கிறானாம்.எப்பவாவது கடிதம் எழுதுவதுண்டு.இந்தியாவிலிருக்கிற மாமா தன்னை அங்கு வரச்சொல்லியிருக்கிறாராம் போகப்போவதாகச் சொல்லியிருக்கிறான்.
7 comments:
மொழி படதில் சொன்ன மொழியிலும் நீங்கள் அதிகம் தெரிந்திருக்கிறீர்கள்.
சினேகிதி மொழி படத்தை பார்த்தவுடன் உடனே ஒரு பதிவு. அருமையான பதிவு.
உங்கள் ஒன்று விட்ட சகோதரனின் சந்தோசமான வாழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்.
நல்ல தலைப்புடன் கூடிய கனதியான பதிவு, முகப்பில் ஏதாவது படம் போட்டிருந்தால் நன்று
வணக்கம் சினேகிதி,
நீங்கள் எழுதியதை வாசிக்க நானும் கோபியுடன் அருகில் இருந்தது போன்ற உணர்வு வந்தது. சுமையான சோகங்கள் சிலவேளைகளில் கேட்பதற்கு சுகமாக இருக்கலாம். ஆனால், ஆண்டவன் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு குறையை கொடுத்தால் அவருக்கு இன்னொரு வழியையும் திறந்துதான் விடுகின்றான். நாம் வாழும் வாழ்க்கையில் காணாத சந்தோசத்தை, மனநிறைவை கோபி தன் வாழ்வில் பெறக்கூடும். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி!
மாப்பு
விஜே நக்கல் இல்லைத்தானே:-)
நன்றி நந்தியா!
பிரபாண்ணா படம் போடணும் என்றுதான் யோசித்தேன் இப்ப போடுறன்.
உண்மை மாப்ஸ் கோபிக்கு நிறைய விசயங்களில் ஆர்வமிருக்கு.
சிநேகிதி.... நல்ல ஒரு பதிவு...
நான் அடிக்கடி யோசித்துப் பார்ப்பேன்... இப்படியானவர்களின் உலகம் எப்படி இருக்கும் என்று. அண்மையில் சமாதான காலத்தில் நான் ஊர் சென்ற பொழுது ஒரு கண் தெரியாத ஒரு பெண் (25 வயது) என்னுடன் அங்கு வந்திருந்தார்... அவரில் முதலில் எனக்கு பரிதாபமாக இருந்தது... ஆனால் பின்னர் பழகப் பழக அவர் எவ்வளவு சந்தோசமாக, சிறிய கவலையும் தன்னைப் பற்றி (வெளிக்காட்டாது??) இல்லாது இருக்கிறார் என்று வியப்பாக இருந்தது...
இப்பொழுது அவர் வன்னியில் கண் தெரியாத, மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அங்கிருந்தே கற்பிக்கின்றார்... இவரை எண்ணிப் பார்த்த பொழுது எனக்குத் தோன்றியது... எமக்குக் கை கால் கண்,காது, மூக்குச் செவி என அனைத்தும் ஒழூங்காக இருந்தும் செய்யாத ஒன்றை இவர் செய்கின்றாரே என சந்தோசமாகவும் பேருமையாகவும் இருந்தது...
என் கண்ணிற்கு அவர்... மிகவும் உயர்ந்த மனிதனாகத் தெரிந்தார்.
Post a Comment