Custom Search

Monday, December 03, 2007

நெசமாத்தான் சொல்றியா?

தாயகப்பறவைகள் மார்கழி இதழுக்கு எழுதியது:

You faget! இதை நீங்களும் பல இடங்களில பல இளமாக்களிட்ட இருந்து கேட்டிருப்பீங்கள். சில பேருக்கு மட்டும் அதின்ர உண்மையான அர்த்தம் விளங்கியிருக்கும். ஆனால், மற்றவை ஏதோ சின்னப்பிள்ளையள் கெட்ட வார்த்தையில திட்டுதுகள் எண்டு நினைச்சிருப்பீங்கள். இன்னும் சில பேர் அதை கண்டுகொள்ளாமலே விட்டிருப்பீங்கள். சிலபேர் மனசுக்குள்ள திட்டினாலும், சின்னப்பிள்ளையள் விளையாட்டுத்தனமாச் சொல்லிட்டுதுகள் எண்டு நினைப்பீங்கள். என்ன அர்த்தம் எண்டு சொல்லாமலே கனக்க கதைக்கிறன் என்ன?

faget மற்றும் cocho போன்ற வார்த்தைகள், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஒரு ஆணைக் குறிக்கும் சொற்களாகும். இந்த சமூகமானது சொற்களால் வன்முறை செய்யக் கற்றுக் கொண்டுள்ள சமூகமாகும். நம்மில் பலர், கோபத்தின் உச்சத்தில் நாம் உதிர்க்கும் சொற்கள், சக மனிதரை எந்தளவு பாதிக்கிறது என்பதை அறிவதில்லை. சிலர், பிறர் மனதைத் துன்புறுத்திப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, தமிழில் தூசணச் சொற்களை சிறுவர்கள் உச்சரிக்கும் போது அது பாரதூரமாகக் கருதப்படுகிறது. அதே, ஆங்கிலத்திலோ அல்லது புலம்பெயர்ந்து வாழும் அந்நாட்டு மொழிகளிலோ சொல்லும் போது அது கவனிக்கப்படுவதில்லை. சிலவேளை அவற்றின் அர்த்தம் புரியாததால் கூட இருக்கலாம். அல்லது, வேற்றுமொழிகளில் சொல்கிற போது அச்சொற்களின் தாக்கத்தை உணராததால் கூட இருக்கலாம்.

தாயால், தந்தையால், சகோதரர்களால் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால், அதாவது யார் யாரையெல்லாம் ஒருவன் அதிகமாக நேசித்தானோ, நம்பினானோ, தான் யார் அருகாமையில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தானோ - அவர்களே அவனைப் பாலியல் துஷ்பிரயோகத்துக் குள்ளாக்கி - அவனுக்கு அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை மட்டுமன்றி மானுட சமூகத்தின் மீதான நம்பிக்கையையே தகர்த்தெறியும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டவனைக் குறிக்கும் ஒரு சொல்லை, நாம் எவ்வளவு சாதாரணமாக எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி உடனே சொல்லிவிடுகின்றோம். பாலியல் துஷ்பிரயோகத்திக்கு உள்ளானவனைப் பார்த்து இந்தச் சொல்லை யாரும் சொன்னால், அவனுக்கு எவ்வளவு வலியேற்படுமோ - அதேயளவு அல்லது அதை விட அதிகமான வலியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படாதவனைப் பார்த்துச் சொல்லும்போது நாம் ஏற்படுத்துகின்றோம். தமிழில் இதனை "தீயால் சுட்ட புண் ஆறும் ஆறாது நாவால் சுட்ட புண்" என்று மிகப்பொருத்தமாக முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். இச் சொற்களின் பொருள் புரியாதவர்கள் என்றால், என்றோ ஒருநாள் faget என்ற சொல்லின் அர்த்தம் தெரியவரும்போது அவர்களின் நெஞ்சில் எங்கேயோ முள் தைக்கும். அர்த்தம் புரியாமல் பயன்படுத்துபவர்கள், ஆண்களை மட்டுமே குறிக்கும் இச்சொல்லை பெண்களைக் குறிக்கவும் பயன்படுத்துவதைக் காணலாம்.



என்னிலும் இளைய என் சகோதரர்களுடன் கதைக்கும்போது அல்லது விளையாடும்போது, சர்வசாதாரணமாக "you faget", "cocho head" போன்ற வார்த்தைகளைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிலர் உண்மையான அர்த்தத்தைச் சொன்னதும் அப்படிச் சொல்வதை நிறுத்திக்கொள்வார்கள். சிலரைப் பொறுத்தவரையில், உரையாடலினிடையே அப்படிச் சொல்வது ஒரு நாகரீகம். இளையோர் பேச்சு வழக்கில் கலந்துபோய்விட்ட ஒன்று. இதற்கு அவர்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. இன்றைய ஊடகங்களும் ஒரு காரணம். இது தான் இளையோர் மொழி என்கிற தோற்றப்பாட்டை உருவாக்கி / பரப்பி வைத்துள்ளன. இந்த விம்பம் உடையுமட்டும் இளையோரும் அதனை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இந்நேரத்தில், ஏனோ எனக்கு "ஜோடி நம்பர் 1" நடுவர்களின் "சான்ஸே இல்ல பிச்சிட்டிங்க", "கிழிச்சிட்டிங்க" போன்ற சொற்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.

இப்படி நம்பிக்கைக்குரியவர்களால் சிறுவயதில் பாலியல் ரீதியில் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு, பதின்மவயதிலிருந்தே ஆண் பெண் என்ற பாகுபாடின்றி யாரையுமே நம்ப முடிவதில்லை. எவருடனும் நெருங்கிப்பழக முயற்சி செய்வதில்லை. அவர்களுடைய ஒதுக்கத்தை புரிந்துகொண்டு யாராவது தாங்களாக முன்வந்து அவர்களுடன் நெருங்கிப் பழகத்தொடங்கினால், அதை அவர்களால் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. "ஏன் என்னிடம் நெருங்கிப் பழக முயற்சி செய்கிறார்கள்" என்று யோசித்து யோசித்து, ஒருவேளை தன்னுடைய abuser போலவே தன்னுடலைத்தான் விரும்புகிறார்களோ என்றெண்ணுவார்கள். யாரும் அவர்களிடத்தில் அன்பாயிருந்தால், அதற்குப் பதிலாக தன்னிடம் அவர்கள் எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று சிந்திப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் பாலியல் ரீதியானதாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்து, எவரையும் அவ்வளவு சீக்கிரத்தில் தம்மை நெருங்க விடமாட்டார்கள். விதிவிலக்காக, இப்படி பாதிக்கப்பட்டவர்களை ஒருவர் உண்மையாக நேசித்து, அவர்களிருவரும் ஒன்றுகூட முயற்சிக்கும்போது பழைய நினைவுகள் எல்லாம் வந்து நர்த்தனமாடும். மனதைக் குழப்பும். உளவியல் குழறுபடிகளை உண்டுபண்ணும். குறிப்பாக, உடலுறவின் போது பெண் ஆளுமைமிக்கவளாகச் செயற்படின், அது அவர்கள் மனதை உறுத்தும். பழைய சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, பயத்துடனான எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி மனதில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும்.

8 -10 வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் முதல் பதின்ம வயதில் பாதிக்கப்பட்டவர்கள் வரை அவர்களுடைய abuser இன் தாக்கம் மிகவும் அழுத்தமானதாக இருக்கும். அந்த ஆழமான மனப்பதிவு, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் நினைவுக்கு வந்து தொல்லைகொடுக்கும். அந்த மனப் பாதிப்பிலிருந்து மீள முடியாதவர்களாக உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக தம்மை உருவகித்துக் கொள்வார்கள். அதைச் சமநிலைப்படுத்திக் கொள்ள நடக்கும் மனப்போராட்டத்தின் வெளிப்பாடு, சமூகத்தளத்தில் அவர்களை வேறுபடுத்திக் காட்டும்.

இப்படி நடந்துகொள்பவரை சமூகத்திலிருந்து புறக்கணித்து ஒதுக்கி வைக்காமல், அவர்களின் சூழலை, மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும். அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை, உளவியல் ரீதியாக அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதன்மூலம் அவர்களை இயல்புநிலைக்கு மீட்டெடுக்க முடியும். எனவே, ஒவ்வொரு இயல்புநிலை மீறிய செயற்பாட்டுக்குப் பின்னாலும், ஏதோ ஒரு உளவியல் தாக்கம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். அதேபோல், நமது ஒவ்வொரு செயற்பாட்டின் மூலமும், நம்மிடமும் பிறரிடமும் நாம் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பதையும், சில சந்தர்ப்பங்களில் அது மிக மிக அழுத்தமாக அவர்கள் மனதில் பதிவாகிவிடும் என்பதையும் உணர்ந்துகொள்வது அவசியம்.