Custom Search

Sunday, November 02, 2008

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலமும்

கடந்த வெள்ளிக்கிழமை ரொரன்டோ Crowne Plaza Hotel ல் "Refugees, Forced Migration and Mental Health – Recovery from Trauma and De-stigmatization of Mental Illness
" என்ற கருவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலம் தொடர்புடைய psychosis, schizophrenia, Autism போன்ற விடயங்களை குடும்பங்கள் சமூகங்கள் மன நல நிபுணர்கள் எவ்வகையில் அணுகிகிறார்கள் என்பது தொடர்பான விடயங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திலும் உளநலம் தொடர்பான பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக நோக்கப்படுவதால் இவ்வகையான உளநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்போது சம்மந்தப்பட்டவர்களின் சமூக கலாச்சாரப் பின்னணிகளை கவனித்தில் எடுக்க வேண்டுமா? ஆட்டிசம் போன்ற உளநலக்குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , புலம்பெயர்ந்து கனடா போன்ற நாடுகளில் வாழும் லற்றின் அமெரிக்க ,சோமாலிய ,சூாடானிய மற்றும் தமிழ் மக்கள் உளநலக்குறைகளை எவ்வாறு உள்வாங்கிக்கொள்கிறார்கள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்தது இம்மாநாடு.

Centre for Addiction and Mental Health ஐச் சேர்ந்த Dr.Laura Simich பேசும்போது ஆண்டுக்கு 220 000 வரையான மக்கள் கனடாவில் குடியேறுகிறார்கள். இவர்களில் 50% மக்கள் ஒன்ராரியோ மாகாணத்தில் குடியேறுகிறார்கள். ரொரன்டோ போன்ற மக்கள் செறிந்து வாழும் நகரங்களில் வாழும் மக்களில் தாய் நாட்டில் நடைபெறும் போர் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் மற்றைய மக்களோடு ஒப்பிடும்போது அதிகளவான மனவழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் ஆனால் ஏனையவர்களோடு ஒப்பிடுகையில் உளநலம் தொடர்பான பிரச்சனைகளுக்காக ஆலோசனை பெறுவதிலும் ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் இவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே உள்நாட்டு போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலோடு சொந்த நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் புலம்பெயர்ந்து தாம் குடியேறும் நாடுகளில் தொடர்ந்தும் மனவுளைச்சலுக்குள்ளாக வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறார்கள். புலம்பெயர்ந்து வரும் இவர்களில் 33.3% மக்கள் Post Traumatic Stress Disorder (PTSD)க்குள்ளாகிறார்கள். 5%மக்கள் (Major Depression) மனவழுத்தத்துக்குள்ளாகிறார்கள்.புலம்பெயர் நாட்டில் நிச்சமற்ற ஒரு வாழ்க்கையைத் தொடங்கும் இவர்கள் சமூக ரீதியில் கலாச்சார ரீதியில் பொருளாதார ரீதியில் புதிய சூழலில் பல இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள். உதாரணமாக புதிய மொழியைப்பயில ஒரு வேலையைத் தேடிக்கொள்ள தகவல்களை அறிந்துகொள்ள தனிமைப்படுத்தப்படுதலில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள சொந்தநாட்டில் விட்டு வந்த உறவுகளைப் பற்றி கவலையைப்போக்க இங்குள்ள சமூகத்தினரோடு தம்மை இணைத்துக்கொள்ள இவர்கள் போராட வேண்டியுள்ளது.குறிப்பாக ஏற்கனவே பொருளாதார வசதியோடு சொந்தநாட்டில் வாழ்ந்த உயர்கல்வி கற்றவர்கள் மற்றும் பெண்கள் முதியோர்களுக்கு புதிதாக இன்னொரு நாட்டில் குடியேறி அந்த நாட்டுச் சூழலுக்கு தம்மை இவைவாக்கப் படுத்துதல் கூடுதல் சவாலாக இருப்பதாக Dr.Laura Simich குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்து வரும்போது அவர்கள் சுமந்து வந்த எதிர்பார்ப்புகள் முற்றுமுழுதாக நிறைவேறாது போகும்போதும் குடியேறிய நாட்டில் வாழும் பல்கலாச்சாரமக்களோடு தாமும் இருகலாச்சாரத்தையும் பின்பற்றும் மக்களாக வாழவேண்டி இருப்பதாலும் இனவாதத்தை எதிர்கொள்ளவேண்டியிருப்பதாலும் அவர்கள் தொடர்ந்தும் மனவுளைச்சலோடு வாழ்கிறார்கள். அதனால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உடல் உள நல சேவைகளைப் புரிய முன்வந்தாலும் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் மனநிலையை ஏனையோரிடம் பகிர்ந்துகொள்ளவோ உதவிகோரவோ முன்வராமல் ஒருவித (resilient) எதிர்ப்பபையே காட்டுகிறார்கள் என்றார்.

20 வருடமாக சூடான் நாட்டில் நடந்துவரும் போர் காரணமாக ரொரன்ரோ போன்ற நகரங்களில் வாழும் மக்களில் அரசாங்க சமூக நல உதவிப்பணம் பெற்று வாழும் மக்களில் 77% ஆனோர் அந்தப் பணம் தங்களுக்குப் போதவில்லை என்று கூறியிருக்கிறார்கள் ஏனெனில் அந்தப் பணத்தில் தங்கள் அன்றாடத் தேவைகளையும் நிறைவு செய்து சூடான் நாட்டில் இன்னலுறும் தங்கங் மக்களுக்குத் தேவைாயான பண உதவிகளைத் தங்களால் செய்ய முடியாதுள்ளதென்று தெரிவித்துள்ளார்கள். இனபேதம் பார்க்கும் வேலைத்தளங்களில் தங்களுக்கு வேலை கிடைக்காதால் தங்கள் வாழ்க்கையே பெரும்பாடாய் இருக்கிறது. அதனால் தங்களைப்ற்றி மட்டும் சிந்திக்கும் சொந்த நாட்டிலுள்ளவர்களை மறக்கச் செய்யுமளவுக்கு கனடா தங்களைச் சுயநலவாதிகளாக்குகிறதென்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழர்களைப் பற்றிக் குறிப்பிட்டவை : 1983 முதல் போராட்டம் நடைபெறுகிறது. போரால் மக்கள் உள்நாட்டிலேயே பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளார்கள். 1980 தொடக்கம் தமிழ் மக்கள் கனடாவுக்கு அகதிகளாக வருகிறார்கள். ரொரன்டோவில் மட்டும் 200 000 தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். 61% மக்கள் கனடாவுக்கு வரமுதல் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் அல்லது வாழ்வில் ஒருமுறையாவது அகதிமுகாமில் வாழ்ந்திருக்கிறார்கள்.32% மக்கள் மிகவும் குறைந்தளவு ஆங்கிலம் பேசுபவர்கள்.33% மக்கள் மனவுளைச்சலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களைச் சந்தித்திருக்கிறார்கள். 36%மக்கள் PTSD ல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்(PTSD யால் பாதிக்கப்பட்ட பெண்களின் % இன்னும் அதிகம்).இவர்களில் 3% மக்களே PTSD யிலிருந்து மீள்வதற்கான ஆலோசனையைப் பெற்றிருக்கிறார்கள்.2004 ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்துக்குப் பின் ரொரன்டோ வாழ் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உளநோய்கள் அதிகமாயிருப்பதாக Dr.Laura குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டைப்பற்றிய ஏனைய தகவல்களை தொடர்ந்தும் எழுதுவேன்.ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்லி இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.இன்று Canadian Multicultural Radio (CMR) ல் சமூக நிகழ்வுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் ஒரு உடல் உள நல ஆய்வு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார் :

ஒருவர் : நீங்களா இப்ப CMR ல் உளநல ஆய்வு பற்றி கதைச்சனீங்கள்
நான் : ஓம் சொல்லுங்கோ.

ஒருவர் : கனடாக்கு பிள்ளையளைக் கூப்பிடத் தெரிஞ்ச எங்களுக்கு எங்கட பிள்ளையயளை எப்பிடி வளர்க்கிறதென்டும் தெரியும். எங்கட பிள்ளையை எப்பிடி வளர்க்கிறதென்டு நீங்கள் எங்களுக்குச் சொல்லித்தரவேண்டாம் சரியோ. உங்கட உளநலத்தை எப்பிடிப் பாதுகாக்கிறதென்டதைப் பற்றி மட்டும் நீங்கள் கவலைப்படுங்கோ.

என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டார். அவர் சொன்னதற்குப் பதில் சொல்லும் வாய்ப்பும் இல்லையெனக்கு.நான் சொன்ன உடல் உள நல ஆய்வுக்கும் பிள்ளை வளர்ப்புக்கு துளியளவும் தொடர்பில்லை அப்பிடியிருந்தும் அவர் என்ன விளங்கி அவர் அப்படிச் சொன்னாரோ அது அவருக்கு மட்டும்தான் வெளிச்சம்.

Dr.Laura சொன்னதுபோல இவர்கள் ஏன் இவ்வளவு resilient ஆக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.முந்தின காலத்திலதான் மனோ தத்துவம் பேசியவர்களை உயிரோடு எரித்தார்களாம். இந்தக்காலத்திலும் மக்கள் இப்படி எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டுக்கொண்டும் உதவி கோரவும் ஆலோசனைகள் பெறவும் பின் நிற்பதால் யாருக்கென்ன லாபம் என்று யோசித்துப் பார்த்தால் ------------.

5 comments:

சந்தனமுல்லை said...

ம்ம்..:(. இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதா? நல்ல பதிவு! புதிய செய்திகளை அறிந்துக்கொண்டேன்!

Anonymous said...

உள நலம் என்பதைப் பற்றி உலகின் இந்த கோடியில் வசிக்கும் சமூகங்களில் அவ்வளவாக முக்கியமான விடயம் இல்லை. ஏதாவது பிரச்சினை குடும்பத்தில் இருந்தாலும் 'தெரபி' என்பதை பெரும்பாலோர் நாடுவதில்லை. மாறாக இன்னும் மூடி மறைக்கிறார்கள.

கனடாவின் புதுக்குடிவாளர்கள் கோபம் கொள்வதர்க்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நல்ல பதிவு. நன்றி.

சினேகிதி said...

\\ம்ம்..:(. இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதா? நல்ல பதிவு! புதிய செய்திகளை அறிந்துக்கொண்டேன்!\\

பிரச்சனைகள் இருக்கு ஆனால் நாங்கள்தான் அதை ஒப்புக்கொள்ள தயாரில்லை.

\\உள நலம் என்பதைப் பற்றி உலகின் இந்த கோடியில் வசிக்கும் சமூகங்களில் அவ்வளவாக முக்கியமான விடயம் இல்லை. ஏதாவது பிரச்சினை குடும்பத்தில் இருந்தாலும் 'தெரபி' என்பதை பெரும்பாலோர் நாடுவதில்லை. மாறாக இன்னும் மூடி மறைக்கிறார்கள.

கனடாவின் புதுக்குடிவாளர்கள் கோபம் கொள்வதர்க்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நல்ல பதிவு. நன்றி.\\

நாங்களே மூடிமறைச்சிட்டு நாங்களே கோவப்பட்டு என்னத்த சாதிக்கப்போறம்?

Anonymous said...

உங்கட உளவளத்தை முதலில பேணுங்கோ. வெளிநாட்டுக்கு ஓடிவரத் தெரிஞ்ச எங்களுக்கு, ஏஜென்சிக்கு காசுகட்டி பிள்ளையள கூப்பிடத் தெரிஞ்ச எங்களுக்கு எங்கட உளவளத்த கவனிக்கத் தெரியும். எங்கட உளவளம் நல்லாத் தான் இருக்கு. ஏனெண்டா எங்கட சமூகக் கட்டமைப்பு அப்பிடி. எங்கட கலாச்சாரம் அப்பிடி. நாங்கள் மனோதிடத்தோடயும் கட்டுப்பாட்டோடயும் இருக்கிறம். எங்களுக்கு மனநோயள் வராது. நீங்கள் வெளிநாட்டுக்கு வந்து கண்டதுகளயும் படிச்சுப்போட்டு உங்கட அறிவுசீவித்தனத்த எங்கட மக்களில காட்ட வெளிக்கிடாதேங்கோ.

எத்தின குண்டுகளையும், இரத்தங்களையும், சதையளையும், கற்பழிப்புகளையும் பாத்திட்டு, சித்திரவதையளயும் அனுபவிச்சிட்டு வந்தனாங்கள். இன்னும் நாங்கள் மனம் பிறழேல.... எங்கட மக்களுக்கு மனநோயே வராது.... ஏனெண்டா எங்களுக்கெல்லாருக்கும் வித்தியாசமா செய்யப்பட்ட மூளை இருக்கு.... நாங்கள் தமிழர்கள்... நாங்கள் தமிழர்கள்.... மனநோயள் எங்கள அண்டவே அண்டாது......... அரோகரா.....

Anonymous said...

உள.. என்ற ஒரு சொல் வந்தாலே பைத்தியம் எண்டுதான் நாங்கள் விளங்கி கொள்ளுவம். எங்களுக்கு விசரெண்டு நினைச்சியளோ.. ? உதெல்லாம் சரிபட்டு வராது. இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை ? உங்கடை வேலையை பாருங்கோ - எங்களுக்கு கொஞ்சம் கூடிப்போச்சு என்றால் பெத்து வளத்த பிள்ளையளையே வெட்டிக் கொல்லுவம். தெரியும்தானே லண்டனில நடந்தது.

உதுக்கெல்லாம் என்னத்துக்கு மருந்து ? எல்லாம் கனடா முருகன் பிள்ளையார் அம்மா பகவான் மாதா யேசு எல்லாரும் பாத்துகொள்ளுவினம்.