Custom Search

Wednesday, September 24, 2008

அதிபுத்திசாலிக் குழந்தைகள் அசாதாரணமானவர்களா??

லண்டன்ல இருந்து விடுமுறைக்கு வந்திருந்த ஒரு குடும்பம் எங்கட வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார்கள்.எங்கட அப்பாவும் அவேன்ர அப்பாவும் அவை தியேட்டருக்குள்ள போகாமலே படம் பார்த்தது பஸ்ல தொங்கிக்கொண்டு றோட்டால போன பொலிஸ்ட தொப்பி கழட்டி முதல் தடவையா பொலிஸிட்ட அடி வாங்கினது தாத்தா நட்ட கச்சான்களை களவாப் பிடுங்கி கொண்டு போய் வித்துப்போட்டு பிளாவில கள்ளடிச்சது என்டு பழைய கதையள் கதைச்சுக்கொண்டிருந்தினம்.

அம்மாவும் அந்தன்ரியும் அம்மான்ர குட்டித்தோட்டத்தில காய்ச்சிருக்கிற தக்காளி வெண்டி பாவக்காய்களோட ஏதோ கதை நடக்குது. அம்மாக்கு தன்ர ஐயா (அம்மப்பா) வீட்ட வாறாக்களுக்கு மரக்கறிகள் வெங்காயம் குடுத்துவிடுறது போல தன்னால கனடாலயும் செய்ய முடியுதென்டதில பெருமை.இது எங்கட தோட்டத்தில காய்ச்சது என்று சொல்லி ஆக்களுக்குக் குடுக்கேக்க அம்மான்ர முகத்த பார்க்கோணும் சந்திரமுகி ஜோதிகா தோத்தா போங்கோ.

இப்பிடி பெரியாக்கள் எல்லாரும் பிஸியா இருக்கேக்க தங்கச்சியும் வந்திருந்த 2 பிள்ளைகளும் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள் தங்கச்சியோடு. ஒரு பிள்ளை மட்டுடம் ஒண்டும் கதைக்காமல் சும்மா தலையாட்டுறதும் சிரிக்கிறதுமா இருக்குது வாய் திறந்து ஒன்றும் சொல்லாதாம். எல்லாரும் தங்கச்சிக்குத்தான் தோதான ஆக்களா இருக்குதுகள் எண்டதாலதான் நான் சும்மா லாப்டாப்ல ஏதோ முக்கியமான அலுவல் செய்றமாதிரி ஒரே கட்டுரையை 3ம் தரம் வாசிச்சுக்கொண்டிருந்தன். இப்பெல்லாம் தங்கச்சி என்ன கதைக்குறாள் என்ன செய்யிறாள் என்று கண்காணிக் வேண்டியிருக்கு.

எனக்கும் ரொம்ப போரடிக்கிறமாதிரி இருந்திச்சு அதால அந்தக் கதைக்காம இருந்த சுகன்யாவோட கதைப்பம் என்டிட்டு நீங்கள் எத்தினையாம் வகுப்பு படிக்கிறீங்கள் என்று கேட்டன்.லண்டன்ல 8ம் வகுப்பு படிச்சுக்கொண்டிருந்ததாம் இப்ப கனடாலதான் இனிப் படிக்க போறன் என்று சொன்னா.அவை நிரந்தரமாக் கனடால வசிக்க வந்திருக்கினமென்டு தெரிஞ்சுகொண்டன். அப்ப பெரியாளா வந்து என்னவா வர விருப்பமென்டு கேட்டன் (இப்பவே என்ன விடப் பெரியாள்தான் ) தனக்கு ரீச்சரா வரத்தான் விருப்பமாம் ஆனால் தான் ரீச்சரா வந்தால் கடைசி வரைக்கும் தன்ர ரீச்சர்மாதிரி ஆக்களின்ர அழகைப் பார்த்து ஒருதரையும் எடைபோட மாட்டாவாம்.

அக்காவும் தங்கச்சியும் gifted children படிக்கிற ஒரு பள்ளிக்கூடத்தில படிக்கினமாம்.தான் சாதாரணமான பள்ளிக்கூடத்தில படிக்கிறதாம். இங்கயும் அவையள gifted children படிக்கிற பள்ளிக்கூடமா பார்த்து அனுப்பப்போயினமாம்.படிக்கிற பிள்ளை எங்க போனாலும் படிக்கும் என்று முந்தி அம்மா சொல்றவா என்று சொன்னன். ஆனால் அது எவ்வளவு உண்மையென்று தெரியேல்ல எனக்கும். சுற்றுச்சூழல் எங்கட வாழ்க்கைமுறை முதல்கொண்டு எல்லாத்திலயும் ஆதிக்கம் செலுத்துறது உண்மையென்டால் படான்கள் எல்லாம் படிக்கிற பள்ளிக்கூடத்தில படிக்கிற பிள்ளை கொஞ்சம் கெட்டிக்காரியா இருந்தாலும் மற்றப் பிள்ளையளோட ஒப்பிட்டுப் பார்த்திட்டு தான்தான் உலகத்திலயே அறிவாளி என்று கிணற்றுத் தவளையாத்தான் நினைச்சுக்காள்ளும். ஊரில எல்லாம் சில பள்ளிக்கூடங்களில்ல A B C D என்று பிரிவுகளிருக்கும். அநேகமா A ப்பிரிவு அதிபுத்திசாலிகளாகவும் B புத்திசாலிகள் என்று ஒரு எண்ணம் பெற்றோருக்கு மாணவர்களுக்கு ஆசிரியருக்கு எல்லாருக்குமிருக்கும். A ப்பிரிவில 10 வதா வாற பிள்ளையின்ர அறிவும் D ப்பிரிவில முதலாம்பிள்ளையா வாற பிள்ளையின்ர அறிவும் ஒரேயளவா இருக்கலாம். ஆனால் முதலாம்பிள்ளைக்குத்தானே மதிப்பு :-)

ஒரு சம்பவம் ஞாபகம் வருது சொல்லாமல் இருக்க முடியேல்ல...கனடால நடந்த ஒரு தமிழர் விளையாட்டுப்போட்டிக்குப் போயிருந்தன்.சின்னப்பிள்ளையளின்ர ஓட்டப்போட்டி முடிவுகள் வந்ததும் சில பெற்றோர்கள் கோவத்தோட நிர்வாகிகளைத் திட்டுற சத்தம் கேட்டிச்சு.மழை வேற பெய்துகொண்டிருந்திச்சு வெளில அப்பிடியிருந்து என்ன விசயம் என்று எட்டிப்பார்த்தால் கொஞ்சம் இடக்குமுடக்கான விசயம்தான். நிறையப்பேர் ஓடுவதற்கு பெயர் குடுத்திருந்ததால் 4-5 குழுவாகப் பிரித்து ஒடவிட்டிருக்கிறார்கள். ஓடும் தூரம் முடிவடையும் இடத்தில கயிறு வைத்துப் பிடித்து முதலாமிடம் 2ம் இடம் 3ம் இடம் என்று எழுதுவதுதான் சாதாரணமாக நடைபெறுவது. இம்முறை அப்படிச்செய்யாமல் எவ்வளவு நேரத்தில் ஓடிமுடிக்கிறார்கள் என்பதை automated timer மூலமாக பதிவு செய்திருக்கிறார்கள். இதைப்பற்றிய போதிய விளக்கம் பெற்றோர்களுக்கோ பங்குபற்றியய பிள்ளைகளுக்கோ அளிக்கப்படவில்லை. நடுவர்ககள் தீர்ப்பை automated timer ன் பதிவுகளிலிருந்து தெரிவு செய்ததால் முதலாவதாக வந்தவர்களெல்லாம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படவில்லை. இதை நான் ஏன் சொல்றன் என்றால் ஒரு குழுவில் ஓடினாக்கள்ல அநேகமானோர் கொஞ்சம் சோம்பேறிகள் என்றால் முதலாவதாக வந்துகொண்டிருப்பவன் திரும்பிப் பார்ப்பான் 2வதா 3 வதா வாறவர்களிடையே அதிக இடைவெளியிருப்பின் இவர்கள் இப்போது என்னை முந்தமாட்டார்கள் என்று முதலாவதா வாறவனும் மெதுவாகத்தான் ஓடுவான். அதமாதிரித்தான் கொஞ்சம் மக்குகளோட படிக்கிற அறிவாளியும் நாளடைவில கொஞ்சம் மக்காயிடுவான் இல்லாட்ட அறிவு வளராமல் இருக்கிற அறிவோடயே இருந்திடுவான்.

சுகன்யாவைப் பற்றிக் கதைச்சிட்டு எங்கயோ போனாச்சு...சுகன்யாக்கு தான் அக்கா தங்கையை விட ஏதோ ஒரு விதத்தில அழகிலயோ அறிவிலயோ குறைந்தவள் என்ற எண்ணம் வந்து சேர்ந்திருக்கு. அதுக்கு யாரோ ஒரு ரீச்சர் அல்லது பெற்றோர்கள் சகோதரிகளோ காரணமா இருக்கலாம். என்னதான் பெரிய அறிவாளியாக் காட்டிக்கொண்டாலும் எல்லாருக்குள்ளயும் ஒரு
முட்டாள்தனம் தாழ்வுசச்சிக்கல் எல்லாம் ஒளிஞ்சுகொண்டுதானிருக்கும். gifted students ம் ஒரு சில குறிப்பிட்ட துறைகளில்தான் சிறந்து விளங்குவார்கள் ஆனால் உம்மள மாதிரி என்னை மாதிரியாக்கள் பல துறைகளில்ல சிறப்பாக இல்லையென்றாலும் திறமையுடன்தானிருக்கிறம். ஆனால் gifted students களைப் பாருங்கள் சில நேரங்களில் அவர்கள் முற்று முழுதாக gifted ஆட்களுடனும் பொருந்தாமல் சாதாரணமானவர்களுடனும் பொருந்தாமல் அந்தரத்தில் தத்தளிக்கிறமாதிரி தோணும் எனக்கு ..நீங்கள் அப்பிடி நினைக்கேல்லயா சுகன்யா.

நானும் அப்பிடி நினைச்சிருக்கிறன்தானக்கா சில நேரம் ஆனால் gifted student ஆ இருக்கோணும் என்டு எனக்கும் ஆசை.
நாங்கள் எல்லாருமே ஒருவிதத்தில் தனித்துவமானவர்கள் சுகன்யா.gifted student என்ற label ஓடதான் இருக்கோணும் என்டு அவசியமா என்ன...நீங்கள் நிறைய வாசியுங்கோ . ரீச்சர் சொல்றதை மட்டும் படிக்காமல் இன்னும் கொஞ்சமா தேடி ஆழமா விருப்பத்தோட படியுங்கோ. மற்றவர்களுக்கு நீங்கள் படிச்சதை விளங்கப்படுத்துற அளவுக்கு உங்களை தெளிவா வச்சிருங்கோ. மற்றவர்களுக்கு முன்மாதிரியா இருங்கோ. நிறையக் கேள்விகளைக் கேளுங்கோ பதில்களைத் தேடுங்கோ.ஒரே மாதிரியான புத்தகங்களை வாசிக்காமல் புதிய விசயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு ஏற்கனவே தெரிந்து கொண்ட விடயங்களில் உங்களைத் தகவமைச்சுக் கொள்ளுங்கோ...பிறகு அடுத்தமுறை என்னைக் காணேக்க நீங்களும் gifted student ஆக உணர்வதாக நீங்களே என்னட்ட சொல்லுவீங்கள்.

நீங்கள் நல்லாக் கதைக்கிறீங்கள் அக்கா...நிச்சயமா அடுத்த முறை உங்களை காணேக்க நீங்களே என்னைப் பார்த்து ஆச்சரியப்படுவீங்கள் சந்தோசப்படுவீங்கள்.

(ம் எனக்கு நல்லாக்கதைக்க மட்டும்தான் தெரியும்...அட்வைஸ் பண்றது ரொம்ப சுலபம்-இதை நான் சுகன்யாட்ட சொல்லேல்ல)

11 comments:

துளசி கோபால் said...

ரொம்ப நல்லவிதமாத்தான் உபதேசம் செஞ்சுருக்கீங்க. அதுகே உங்களைப் பாராட்டத் தோணுது.

ஆமாம். எங்கே கனகாலமாக் காணேலை?

படிப்பு எப்படி இருக்கு?

என்றும் அன்புடன்,
பெரியம்மா

சோமி said...

ம் எனக்கு நல்லாக்கதைக்க மட்டும்தான் தெரியும்...///

ம்......:))

உளவியல் ரீதியிலான தாழ்வுச் சிக்கல் இருபது உண்ண்மைதான்.

எங்கள் வகுப்பில் 5ம் வகுப்பு புலமைப் பரிசிலில் கொஞ்சம் நல்ல மதிப்பெண்பெற்ர சித்தியடந்த மாணவர்கள் மட்டுமே படித்தோம்...மற்றவகுபுகளில் அப்படியில்லை ஒரு சிலர் மட்டுமே புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடந்தவர்கள் இருந்தார்கள்.....இது நான் சாதாரனதரம் முடிக்கும் வரை இருந்தது..

நாங்கள் படித்த வகுப்புக்குதான் நல்ல ஆசிரியர்கள் அதிகம் வர விருப்படுவர்..பள்ளியில் நாடகம் நடிப்பதில் இருந்து விஞ்ஞான,கணித பொது அறிவு போட்டிகள் வரை எல்லாவற்றிற்கும் ஏன் சாரணர் இயக்கதில் சேர்பதற்க்கும் எங்கள் வகுபில்தான் ஆட்டகளை எடுத்தார்கள்.

தங்களை கணகில் கூட எடுக்காமல் எல்ல வாய்ப்புகளும் பெஸ்ட் கிளாசுக்கே போகிறது என்கிற மன உளைச்சல் மற்ற வகுப்பு மாணவர்களிடம் நிறயவே இருந்தது. அவர்களிடம் இருக்கு8ம் திறமை எங்களுக்கூட தெரியாமலெ போனது....எந்த போட்டிக்கும் எங்கள் வகுபிலேயே ஆட்டகள் இருபார்கள். ஒரு சில விளையாட்டுக்களுக்கும்...நாங்கள் விருபட்டு சும்மா கொடுத்த சில சின்ன நாடகக் கதாபத்திரங்களை மட்டுமே அவர்கள் செய்ய முடிந்தது.

கோபிநாத் said...

நன்றாக தான் சொல்லியிருக்கிங்க..;))

எனக்கு ஒரு டவுட்டு gifted students அப்படின்னா யாரு??

Anonymous said...

தலைப்ப பாத்திட்டு உங்கள மாதிரி ஒராளிட்ட உளவியல் பற்றின அறிவியல் பூர்வமான, ஆய்வுகளின் அடிப்படையிலான கட்டுரை ஒண்டத்தான் எதிர்பார்த்தன். ஆனா இப்பிடி அலட்டல் பதிவா இருக்கு. பறவால்ல எல்லாரும் எதிர்பார்க்கிற மாதிரி நீங்க எழுதமுடியுமா என்ன. உங்களுக்கு எது பிடிக்குதோ அத தானே எழுதலாம்.

காரூரன் said...

*\\(ம் எனக்கு நல்லாக்கதைக்க மட்டும்தான் தெரியும்...அட்வைஸ் பண்றது ரொம்ப சுலபம்-இதை நான் சுகன்யாட்ட சொல்லேல்ல)\\*

ஒருவர் மன நிலை அறிந்து நடத்தல் மனித நேயம். பெற்றோர்களே பிள்ளைகளை ஒப்பிடுதல் பார்த்திருக்கின்றேன். பாடசாலைகளில் "gifted program" இல் படித்தாலும், பல்கலைக்க்ழகத்தில் படிக்கும் படிப்புத்த்தான் வாழ்க்கையை தீர்மானிக்கும். நல்லா உபதேசிக்கிறீர்கள்!. ஆனால் இப்படியும் உபதேசம் சொல்பவர்கள் உண்டு. கவனம்!

எனக்கு தெரிந்தவர் அடிக்கடி சொல்வார் " தான் மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று தன் தந்தை சொல்வார் என்பார். அவர் மனிதர்களை மாடு மேய்ப்பது போல் நடத்துவதை பார்த்திருக்கின்றேன் அவரும் உபதேசம் பண்ண பார்த்திருக்கின்றேன். தந்தை தீர்க்கதரிசி போலும்!

சினேகிதி said...

`ஹலோ பெரியம்மா எப்பிடி இருக்கிறீங்கள்...கனகாலமாவா காணாமல் போயிருக்கிறேன் நான்..இடைக்கிடை வாறனான்.ஒரு கட்டப் படிப்பு முடிஞ்சுது இன்னும் நிறைய இருக்கு படிக்க.

சினேகிதி said...

சோமியண்ணா நீங்கள் சொன்னமாதிரித்தான் அநேகமா எல்லாப் பள்ளிக்கூடங்களிலயும் நடக்கிறதெண்டு நினைக்கிறன்..ஆங்கில நாடகம் என்டால் A வகுப்பு வினாடிவினா என்றால் A என்று எல்லாத்துக்கும் A தான்.

கோபிநாத் நீங்கள்தான் gifted student.

சினேகிதி said...

\\தலைப்ப பாத்திட்டு உங்கள மாதிரி ஒராளிட்ட உளவியல் பற்றின அறிவியல் பூர்வமான, ஆய்வுகளின் அடிப்படையிலான கட்டுரை ஒண்டத்தான் எதிர்பார்த்தன். ஆனா இப்பிடி அலட்டல் பதிவா இருக்கு. பறவால்ல எல்லாரும் எதிர்பார்க்கிற மாதிரி நீங்க எழுதமுடியுமா என்ன. உங்களுக்கு எது பிடிக்குதோ அத தானே எழுதலாம்.\\

எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய வெளிக்கிட்டால் நமக்கு பிடிச்சத செய்யமுடியாது.

சினேகிதி said...

காரூரன் இப்ப என்னதான் சொல்றீங்கள்?

U.P.Tharsan said...

டாக்டர் அம்மாவட்ட வந்து முதல் நோயாளி அகப்பட்டிருக்கிறார். கூடிய சீக்கிரமே அரை வைத்தியராக வாழ்த்துக்கள்.

//நீங்கள் நல்லாக் கதைக்கிறீங்கள் அக்கா...நிச்சயமா அடுத்த முறை உங்களை காணேக்க நீங்களே என்னைப் பார்த்து ஆச்சரியப்படுவீங்கள் சந்தோசப்படுவீங்கள்.//

நோயாளி சரண்டர்

//நான் சும்மா லாப்டாப்ல ஏதோ முக்கியமான அலுவல் செய்றமாதிரி ஒரே கட்டுரையை 3ம் தரம் வாசிச்சுக்கொண்டிருந்தன்.//

automated timer, 2வதா 3 வதா வாறவர்களிடையே அதிக இடைவெளியிருப்பின் இவர்கள் இப்போது என்னை முந்தமாட்டார்கள் என்று முதலாவதா வாறவனும் மெதுவாகத்தான் ஓடுவான். என்று சொல்லும் பந்தியை நானும் 3,4 தடவை வாசித்துபார்த்துவிட்டேன். விளங்கவேயில்லை.

அதைவிட இது..............................
//ஒருவர் மன நிலை அறிந்து நடத்தல் மனித நேயம். பெற்றோர்களே பிள்ளைகளை ஒப்பிடுதல் பார்த்திருக்கின்றேன். பாடசாலைகளில் "gifted program" இல் படித்தாலும், பல்கலைக்க்ழகத்தில் படிக்கும் படிப்புத்த்தான் வாழ்க்கையை தீர்மானிக்கும். நல்லா உபதேசிக்கிறீர்கள்!. ஆனால் இப்படியும் உபதேசம் சொல்பவர்கள் உண்டு. கவனம்!

எனக்கு தெரிந்தவர் அடிக்கடி சொல்வார் " தான் மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று தன் தந்தை சொல்வார் என்பார். அவர் மனிதர்களை மாடு மேய்ப்பது போல் நடத்துவதை பார்த்திருக்கின்றேன் அவரும் உபதேசம் பண்ண பார்த்திருக்கின்றேன். தந்தை தீர்க்கதரிசி போலும்!// உண்மையில் எனக்கு விளங்கிக்கொள்ளும் அறிவு குறைவா? இல்லை நான் மப்பில இருக்கிறனா? :-))

எனினும் உளவியல் பதிவுகளுடன் மீண்டும் மீண்டு(எதிலிருந்தோ) வந்ததில் சந்தோசம்.

Kiruthikan Kumarasamy said...

சினேகிதி...
நீங்கள் கேட்டபடியால் பதிவு படிக்க வந்தனான். ஊரில மற்றப் பள்ளிக்கூடங்கள் பற்றித் தெரியேல்லை, ஆனால் ஹாட்லியில ஏ, பி, சி, டி வகுப்பில எந்தப் பாகுபாடும் இருக்கிறேல்லை. அவையள் ஆங்கில அகர வரிசைப்படி பேர் மட்டும்தான் பாத்து வகுப்புப் பிரிக்கிறது. உதாரணத்துக்கு ஸ்கொலர்ஷிப்ல வடமராட்சியிலையே கூட மாக்ஸ் எடுத்த பொடியன் ‘சி' வகுப்பில படிச்சான், ஒ/எல் வரைக்கும். அவனைவிட 18 மாக்ஸ் குறைய எடுத்த நான் 'பி' வகுப்பில படிச்சனான்... இந்த ‘ஏ', ‘பி', ‘சி', ‘டி' வகுப்புப் பிரிக்கிறது பற்றி நான் தனியா ஒருக்கா எழுதிறன் நேரம் கிடைக்கேக்க... உண்மையிலேயே அப்பிடி திறமையின் அடிப்படையில் வகுப்புப் பிரித்தார்களா எங்கட ஊரில்??? என்னால் நம்ப முடியவில்லை.