Custom Search

Wednesday, October 08, 2008

ஆட்டிசம்

வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்?

ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப் பெற்றோரைப் போலவும் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு சிறிய வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துக்கொண்டிருந்தவர்களுக்கு எப்போது தம்பிள்ளை தங்களைப் பார்த்துச் சிரிப்பாள், தூக்கச் சொல்லிச் சிணுங்குவாள, தவழ்ந்து வந்து செல்லக் குறும்புகள செய்து தங்களைச் சிரிக்க வைப்பாள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் நாளடைவில் ஏக்கமாக மாறத் தொடங்கி விட்டன. ஏனென்றால் நர்மிதா மற்றக் குழந்தைகளைப் போல ஐந்து ஆறு மாதத்திலேயே பெற்றோரினதும் மற்றோரினதும் முகம் பார்த்துச் சிரிக்கவில்லை. கார்ட்டூன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கவில்லை எவற்றிலுமே ஒரு பிடிப்பில்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பாள். காச்சலோ தடிமனோ வந்தால் கூட தன்னைத் தேற்ற யாரும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிறிதுமற்று இருப்பாள். பேச்சுத்திறன் கூட மிகவும் மட்டுப் படுத்தப் பட்டதாகவே இருந்தது. உதாரணமாக தனக்குப் பசிக்குது "பால் வேணும்" என்று கேட்கத் தெரியாமல் பக்கத்திலிருப்பவிரிடம் "உங்களுக்குப் பசிக்குது பால் குடுங்கோ" என்றுதான் நர்மிதா சொல்வாள்.

தங்களுடைய குழந்தை வளர்ச்சி மற்றைய குழந்தைகளைப் போலில்லாதிருப்பதால் வைத்தியரிடம் அழைத்துச் சென்றபோது நர்மிதாவுக்கு ஆட்டிசம் என்ற மூளைவளர்ச்சிக்குறைபாடு நோய் இருப்பதாக சொல்லிவிட்டார் வைத்தியர்.

உலகில் வாழும் குழந்தைகளில் 1 : 2500 என்ற விகிதத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்கிறார்கள். அன்பு செலுத்துவோரிடத்தில் திரும்ப அன்பு செலுத்தும் தன்மையற்ற சமூகத்தோடு ஒன்றி வாழும் தன்மையற்ற பேச்சுத்திறன் குறைவாகவோ அல்லது முழமையாக இழந்த கற்பனா சக்தி சிறிதுமற்ற இந்த ஆட்டிசம் குழந்தைகளைப் பற்றி முதன் முதலில் தெரிந்து 1943 ல் வெளியுலகத்திற்கு சொன்னவர் Dr.Kanner.

பெண் குழந்தைகளை விட மூன்று மடங்கு அதிகமாக ஆண் குழந்தைகளைத் தாக்குகிறது இந்த ஆட்டிசம். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அநேகமான குழந்தைகளைப் பார்த்தால் தங்களைப் பராமரிப்பவர்களை விட தங்களைச் சுற்றி இருக்கும் சடப்பொருட்கள் மீதே பாசமாக இருப்பார்கள். எந்நேரமும் ஏதாவது பொருளை எடுத்து வைத்து அதன் அளவு, வடிவம், தன்மை பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். தாம் நேசிக்கின்ற பொருளைக் காணாவிட்டால் மூர்க்கமாகிப் பக்கத்திலிருப்பவரைத் தாக்கும் குழந்தைகளுமுண்டு. சில குழந்தைகள் கையால் தரையைப் பிறாண்டுவார்கள் தரையில் கையால் குத்துவார்கள் தலையை ஆட்டி ஆட்டி வித்தியாசமான சத்தம் போடுவார்கள். இந்த ஆட்டிசம் குழந்தைகளிடம் சில அதீத சக்தி இருக்கும். உதாரணமாக மூன்று நான்கு இலக்க எண்களைக் கூட இலகுவாகப் பெருக்கிச்சொல்வார்கள்.

ஆட்டிசத்திற்குரிய காரணமாக Dr.Kanner சொன்னது மரபியல் காரணங்களாகும். ஆனால் அவருக்கு பின்பு வந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் பெற்றோர்களின் சரியான கவனிப்பின்மையால்தான் குழந்தைகளுக்கு இந்த பரிதாப நிலையென்றார்கள். தற்போதுள்ள நிபுணர்கள் பெற்றோர்கள் நிந்திக்கப்பட வேண்டியவர்கள் அல்ல பதிலாக அன்பும் உதவியும் தேவைப்படுபவர்கள் என்கிறார்கள்.

இந்த ஆட்டிசத்திற்கான முக்கியமான ஒரு காரணம் மரபணுக்களாகும். ஓரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருக்கென்றால் அந்தக்குழந்தையின் சகோதரர்களில் ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருக்கோ ஆட்டிசம் இருப்பதற்கான சாத்தியக்கூறு 3 % ஆகும். அதனால்தான் ஆட்டிசம் குழந்தையுள்ள பெற்றோர்களில் சிலர் தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்புவதில்லைப் போலும். ஓரே கரு முட்டையிலிருந்து பிறந்து இரட்டைக்குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் இருந்தால் மற்றக்குழந்தைக்கும் ஆட்டிசம் இருப்பதற்கான சாத்தியக்கூறு 75% ஆகும். எமதுடம்பிலுள்ள 23 சோடி நிறமூர்த்தங்களில் ஆட்டிசத்தோடு தொடர்புடைய நிறமூர்த்தங்கள் 2, 7, 15, மற்றும் X நிறமூர்த்தங்கள் என்று Folstein & Roseb என்ற ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

குழந்தைக்கு கருவிலோயோ அல்லது பிறந்த உடனேயே கொடுக்கப்படும் றுபெல்லா தலிடோமைட் போன்ற மருந்துகளால் ஏற்படும் பின்விளைவுதான் ஆட்டிசம் எனச் சில நிபுணர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக 1960 களில் கர்ப்பிணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தலிடோமைட் என்ற மருந்து அக்கர்ப்பிணிப்பெண்களின் குழந்தைகளின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்ததும் நாளடைவில் அக்குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை MRI பரிசோதனைக்குட்படுத்தியபோது சாதாரண குழந்தைகளின் மூளையை விட ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையின் அளவு பெரிதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டிசம் குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் மூளை அளவு சாதாரணமாகத்தானிருக்கும் ஆனால் இரண்டு வயதுக்குப்பிறகு மூளையின் முக்கிய பகுதியான Cerebellum என்ற பகுதியிலுள்ள white matter மற்றும் cerebral hemispheres இல் உள்ள Grey matterன் அளவும் அதிகரிக்கிறது. அதேபோல cerebellar cortex லுள்ள ஒருவித நரம்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 31 வீதம் குறைகிறது. எங்களுடைய அசைவுகளை நிர்ணயிக்கும் Cerebellum பகுதியில் ஏற்படும் மாற்றங்களும் ஆட்டிசத்திற்குரிய காரணமாகும் என நிபுணர்கள் கண்டுபிடித்திருந்தாலும் குறிப்பாக மூளையிலுள்ள குறைபாடுகளுக்கும் ஆட்டிசக் குழந்தைகள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு அறிகுறிகளுக்கும் இடையேயான தொடர்பு இன்னமும் தெளிவாக அறியப்படவில்லை.

அநேகமான மூளை சம்பந்தப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட வருத்தங்களுக்கு நிரந்தரமான தீர்வு இல்லாதது போலவே ஆட்டிசத்துக்கும் நிரந்தரமான தீர்வு இல்லை.ஆனால் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய பேர்ஸனல் ரியுட்டர் போன்றோரை வைத்து முறையான பயிற்சி கொடுத்து வந்தால் நாளடைவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முன்னேற்றம் காணலாம் .நான் ஏற்கனவே சொன்னதுபோல சில குழந்தைகளிடம் உள்ள அபார சக்தியை வளர உதவி செய்தால் அந்தக் குழந்தைகளாலும் சாதனை படைக்கலாம்.

8 comments:

கலை said...

இதுவரை அறிந்து கொள்ளாத ஒரு நோயை பற்றி அறிந்து கொண்டேன். எனக்கும் இது கொஞ்சம் இருக்கோ என்றும் யோசிக்கிறேன்.

கோபிநாத் said...

புதிய தகவல்...நன்றி ;)

காரூரன் said...

சில குடும்பங்களில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பராமரிப்பதற்கு சிரமப்பட்டு கணவன், மனைவி பிரிவினையில் முடிந்ததையும் பார்த்திருக்கின்றேன். வளர்ந்த நாட்டில் , ஆட்டிசத்திற்கு ஒன்ராரியோ மானிலத்தின் சுகாதார சலுகை இல்லை. பிரத்தியேகமான வசதியுள்ள பாடசாலையில் $2500 மாதம் தேவைப்படுகின்றதாம். எல்லோரினாலும் முடியுமா?
நல்ல தகவல் சினேகிதி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

சிநேகிதி,
நல்லா எழுதி இருக்கீங்க. ஆடிசம் ஒரு புரியாத புதிர். என் மகளுக்கும் இந்த பாதிப்பு உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் ஒருவரைப்போல் மற்றொருவர் இருப்பதில்லை. சில குணங்கள் பொதுவானவை. பாதிப்புக்கான காரணங்கள் ஏதும் நிரூபிக்க படவில்லை.

இதனால் ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். நிறைய பொறுமை தேவை. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. ஆனால் காயப்படுதுபவர்கள்தான் அதிகம்.

Anonymous said...

ஆட்டிசிசம்? Autism?
இப்படியான சொற்களை தமிழில் எழுதும் போது அவற்றுக்கான ஆங்கிலச்சொல்லை அடைப்புக்குறிக்குள் எழுதினால் நல்லது.

நல்ல கட்டுரை. நீங்கள் எழுதுகிற கட்டுரைகளில் அநேகமாக கவனித்திருக்கிறன்.... நீங்கள் ஒரு சம்பவத்தை முதலில் விளக்கி அல்லது ஒரு சம்பவத்தினூடாக உளவியல் பற்றிய விடயங்களை சொல்வது. அது மிக வரவேற்கத் தக்க விடயம். தொடர்ந்தும் இப்படியான ஆக்கங்களை எழுதுங்கள்.

சினேகிதி said...

கலைவாணி எல்லாத்தையும் வாசிக்கும்போது நமக்கும் இது இருக்கா என்று யோசிக்கத்தோன்றும். இந்நோய்களுக்கு 10 அறிகுறிகள் இருக்கென்றால் அவற்றில் 5 அறிகுறிகள் இருந்தால் நோய் இருக்கென்று சொல்லலாம். ஆனால் 4 அறிகுறி இருந்தால் இருக்கு ஆனால் இல்லை..இல்லை ஆனால் இருக்கென்று S.J.சூர்யா மாதிரித்தான் சொல்லோணும் :-)

சினேகிதி said...

காரூரன் நீங்கள் சொன்ன மாதிரியான எல்லாச் சிக்கல்களும் ஆட்டிசம் மட்டுமில்ல குழந்தைகளுக்கு வருத்தம் வந்தால் மற்ற சிக்கல்களும் தவிர்க்க முடியாதிகிறது. புரிந்துணர்வுதான் தேவை.