Custom Search

Friday, December 29, 2006

இல்வாழ்வு தந்த இயலாமை

கனமான அந்த அல்பத்தை தூக்க முடியாமல் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு, அங்காலயும் இங்காலயும் சாய்ந்து சாய்ந்து மகள் ஜனனி ஓவர் ஆக்சன் வேற போட்டுக்கொண்டு, “அம்மா அம்மா பிடியுங்கோ” என்று சத்தம் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மேனகாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“இப்ப என்னத்துக்கு ஜனனி இதைத் தூக்கிக் கொண்டு வாறீங்கள்? அம்மாட்டா கேட்டா எடுத்துத் தந்திருப்பன்தானே?”

“அம்மா நான் உங்கட கல்யாண வீட்டுப் படம் பார்த்துக் கனநாள்தானே.. வாங்கோ பார்ப்பம். நான்; அதில நிக்கிற ஆக்களெல்லாம் யார் யாரெண்டு சொல்லுவனாம் நீங்கள் நான் சொல்றதெல்லாம் சரியோ என்று பார்ப்பீங்களாம். சரியோ?”

“ம்... மகாராணி சொன்னா அதுக்கு மறுபேச்சு இருக்கா? சரி சொல்லுங்கோ மகாராணி...”

“உங்களுக்குப் பக்கத்தில நிக்கிறது நேசன் மாமா. அவருக்குப் பக்கத்தில தாத்தாவும் பாட்டியும். இங்கால நிக்கிறது மஞ்சுச் சித்தி.. சரியா?”

“ம்... ஜனனிக்குட்டி கெட்டிக்காரி. சரி இப்ப இந்தப் படத்தில நிக்கிறது யாரெண்டு...”

“அம்மா அம்மா! நாங்கள் எப்ப ஊருக்குப் போவம்? எப்ப பாட்டி வீட்ட போறம்?”
ஜனனி இப்படிக் கேட்டதுதான் தாமதம் மேனகாவுக்கு பழைய நினைவுகள் அலைமோத ஏழு வருடத்துக்கு முதல் நடந்த சம்பவங்களனைத்தும் நினைவில் வந்து போயின.

2000 ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களுக்கான பொருளியல் வகுப்பறை எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும். அதுவும் மேனகா அங்கிருந்தால் எப்பவும் அவளைச் சுற்றி ஒரு கூட்டமிருக்கும். இவர்களுக்குப் பொருளியல் சொல்லித்தரும் வானதி ரீச்சரும் இளவயதினர் என்பதால் பாடநேரம் தவிர்ந்த நேரங்களில் மேனகா குறூப்புடன் அவ்வப்போது அரட்டையடிக்கத் தவறுவதில்லை. அப்படித்தானன்றும் மேனகாவின் நண்பிகள் மேனகா தேர்வு முடிந்ததும் திருமணத்திற்காகக் கனடா செல்லவிருப்பதால் சிறிய ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்து அவளைக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.

“மேனகா கனடா போப்போறம்தானே என்று தேர்வுக்குப் படிக்காம இருந்திடாதயும். திருப்தியாத் தேர்வெழுத வேணும் அப்பத்தான் எங்களுக்குச் சந்தோசம்” என்று சொல்லிக்கொண்டு வானதி ரீச்சரும் வந்து சேர்ந்தார்.

“ஓம் மிஸ். எனக்கு நம்பிக்கை இருக்கு. லொஜிக்கு இல்லாட்டாலும் கட்டாயம் உங்கட பாடத்துக்கு ஏ வரும்.”

“மிஸ்! மேனகா சொல்றதை நம்பாதயுங்கோ... இவள் படிக்கிறதேயில்லை. கனடாவில இருந்து அவான்ர ஆள் ஒவ்வொருநாளும் போன் பண்ணுவார். இவாக்கு இப்ப அவரோட கதைக்கிறதுதான் வேலை. படிக்கிறன் என்று சொல்றதெல்லாம் சும்மா.”

“ஏய் கிருஸ்ணி ! சும்மா இரு. இல்ல மிஸ், படிக்கிறன் மிஸ்.”

“இந்தா மேனகா! Autograph ல sign பண்ணிட்டன். கல்யாணக் கனவில நீர் எங்கட 4A கனவை கலைச்சிடாதயும். கல்வியிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.”

“ஓகே கேர்ள்ஸ். பக்கத்தில எனக்கு வகுப்பிருக்கு. கொஞ்சம் அடக்கி வாசியுங்க என்ன. பாவம் மேனகா, ஒரேயடியாய் நக்கலடிக்காதயுங்கோ.”

“ஓகே மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்று கிருஸ்ணி சத்தமாச் சொல்ல,“உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்று கிருஸ்ணியைப் பார்த்துச் சொல்லிவிட்டு வெளியேறினார் வானதி மிஸ்.

“அவா போய்ட்டா.சொல்லு சொல்லு நீ சொல்லு. என்னவாம் கோபி?”

“சும்மா இருங்கடி... எனக்கு எக்ஸாம் தொடங்கப் போகுது என்று சொல்லிட்டன். இனிம அவர் போன் பண்ண மாட்டார். பண்ணினா றெக்கோட் பண்ணி வைக்கிறன் சரியா.”

“இத்தால் யாவருக்கும் அறியத்தருவது என்னவெனின் ரேளடி மேனகா என நம்மால் அறியப்பட்ட மேனகா தற்போது வெக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள். வெக்க மேனகாவைப் பார்க்கவோர் அரிய சந்தர்ப்பம்.. தவறவிடாதீர்கள் தவறவிடாதீர்கள்.”

“என்னது மேனுக்கு வெக்கமா?”

“ஹேய் றிஹானா, வானதி மிஸ் என்ன சொல்லிட்டுப் போனவா. கொஞ்சநேரம் எல்லாரும் சும்மா இருக்கிறீங்களா? இப்பிடி எல்லாரும் கலாட்டா பண்ணினால் பிறகு நான் கோபியைப் பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேன்.”

“சரிடி. நீ சொல்லத் தொடங்கு. நாங்கள் பேசாம இருக்கிறம்.”

“படம் கொண்டு வரச் சொன்னமே. எங்க?”

“எங்க? எங்க?”

“ஐயோ.. கொண்டு வந்திருக்கிறேன். ஏனிப்பிடி பறக்கிறீங்கள் எல்லாரும்.?”

“ஆ.. நாங்கள் பறக்கேல்ல. நீதான் எங்களையெல்லாம் விட்டிட்டுப் பறக்கப் போறாய்;

காட்டு காட்டு.”

“இதான் மேனுவின்ர மன்மதராசா. எல்லாரும் வடிவாப் பாருங்கோ.”

“இவரைப் பார்த்தா நம்ம சத்தியசீலன் சேர் மாதிரியில்லை?”

“றேனு, உனக்கு எந்தநேரமும் சத்தியசீலன் சேர்ட நினைப்பு. அதான் யாரைப் பார்த்தாலும் உனக்கு அவரை மாதிரியே இருக்கு. என்ன ஒரு பத்து வயசுதானே வித்தியாசம்? எங்கட வீட்டுக்குப் பக்கத்து வீடுதான். நான் உனக்காக சேர்ட அம்மாட்டப் போய் கதைக்கிறன். நீ கவலைப்படாத என்ன?”

“கிருஸ்ணி, உன் திருவாயைக் கொஞ்சம் மூடும்மா. சரி அப்ப நீNPய சொல்லு. கோபி யாரை மாதிரி இருக்கிறார்?”

“கொஞ்சம் விஜய். கொஞ்சம் அஜீத். கொஞ்சம் அருண்குமார். கொஞ்சம் அரவிந்தசாமி கலந்து செய்த கலவையடி கோபி... என்ன மேனு, நான் சொன்னது சரிதானே?”

“அடச்சா... நீ சொன்ன ஆக்களெல்லாரையும் கலந்தா?? சகிக்கவே சகிக்காது. என் கோபியை யாரோடயும் கம்பெயர் பண்ணவேண்டாம். கோபி கோபியை மாதரித்தான். வேற யார் போலயும் இல்ல.”

“ஓ ஓ ஓ... இப்பவே அவர் உன் கோபியாகிட்டாரா? சரிங்க மேடம். இந்தாங்கோ உங்கட கோபியை நீங்களே வைச்சுக்கொள்ளுங்கோ.”

“றேணு இவா இப்பவே இப்பிடியாயிட்டாள். கனடா போய் எங்களுக்கு கடிதம் போடுறதவாவது. எனக்கு நம்பிக்கையில்லை. கணவனே கண்கண்ட தெய்வம். கனடாதான் சொர்க்கம் என்றிருக்கப்போறா பார்.”

“சீ சீ.. அப்பிடியெல்லாமில்லை. கனடாக்குப் போயில்லை... பிளைற்ல ஏறும்போதே உங்களையெல்லாம் மறந்திடுவன்” என்று மேனு சொல்ல றிஹானா றேணு கிருஸ்ணி இப்படி எல்லோரும் மேனுவைத் துரத்த, அடுத்த பாடநேரமும் வந்தது. அன்றைய நாள் என்றைக்குமே மேனகாவால் மறக்கமுடியாத நாளாக அமைந்துவிட்டது. அடுத்த கிழமையே தேர்வும் தொடங்கியது. தேர்வுகள் முடிந்ததும் ஒவ்வொருவரும் பகுதிநேர வேலை கணனி வகுப்புக்கள் என பிஸியாகிவிட்டார்கள்.

மேனகா கனடாவுக்குச் செல்வதாகவிருந்த பிளான் மாறிக் கோபி கொழும்புக்கு வந்து திருமணம் முடிந்ததும் மேனகாவையும் அழைத்துச் செல்வதென ஏற்பாடு. பெற்றோர்கள் சகோதரர்கள் உறவினர்கள் நண்பர்கள் இப்படி எவருமின்றி எங்கோ போய்த் திருமணம் செய்யவேண்டுமா எனக் கவலைப்பட்ட மேனகாவுக்குக் கொழும்பில் வைத்துத் திருமணம் நடைபெற இருப்பது குறித்து அளவில்லா மகிழ்ச்சி. கோபி; கொழும்புக்கு வந்த அடுத்த வாரமே திருமணம் என்று இருவீட்டாரும் தீர்மானித்தார்கள். மேனகா கோபி இருவருக்கும் ஒரு வாரம் ஒரு மணித்தியாலம் போல விரைவாகக் கழிந்தது.

திருமணநாளும் வந்தது. துணையேற்பு விழாவில் உறவினர்கள் எல்லாம் கூடியிருக்க, மேனகாவில் கழுத்தில் கோபி மங்கல நாணை அணிவித்தார். அதன் பிறகு ரெஜிஸ்ரர் பத்திரத்தில் கையொப்பம் வைக்கும் நேரம் பார்த்து கோபியின் அம்மாதான் தொடங்கினார்.

“என்ன சம்பந்தி, பேசினபடி ஐந்து லச்சம் இன்னும் கைக்கு வரேல்லயே. கையெழுத்துப்போட முதல் காசையும் தந்தா நல்லது.”

“என்ன சம்பந்தி சொல்றீங்கள்?? கோபி சீதனம் ஒன்றும் வேண்டாமென்று சொன்னதென்று மேனு சொன்னாளே?”

“என்னது? எல்லாரும் சேர்ந்து எங்களை ஏமாத்தப் பார்க்கிறீங்களோ? என்னடா கோபி இதெல்லாம்?”

“அம்மா மேனகா அன்றைக்கு கதைக்கும்போது தங்கட அண்ணா கடன் வாங்கித்தான் ஐந்து லச்சம் தரோணும் என்று சொன்னா. அதான் நான்... எங்களுக்கு இப்ப என்ன குறையம்மா? அதான் நான் வேண்டாமென்று சொன்னான்.”

“நல்லாயிருக்கு.. ரொம்ப நல்லாயிருக்கு. கல்யாணம் முற்றானாலும் தாலிகட்டும் வரைக்கும் உன்னை உவையோட கதைக்கவிட்டது எங்கட தப்புத்தான். உவை தங்கட குணத்தைக் காட்டிப்போட்டினம். மகளைக் கதைக்கவிட்டு உன்னை மயக்கிப் போட்டினம். போனில கதைச்சதுக்கே இப்பிடி மயங்கிட்டாய் நீ. இனிமே நாங்கள் உன்னை மறந்திட வேண்டியதுதான்.”

மேனகாவின் தந்தை மற்றும் ஊhர்ப் பெரியவர்கள் சிலர் சேர்ந்து கோபியின் பெற்றோரைச் சம்மதிக்க வைத்து, திருமணப்பதிவையும் நடத்தி முடித்தார்கள். அதன் பிறகு மேனுவின் அண்ணா நேசன் மூன்று மாதங்களுக்குள் கோபி கனடாவுக்குத் திரும்புவதற்கு முதல் ஐந்து லட்சத்தையும் கொடுத்துவிட்டான். இரண்டு மாதத்தில் மேனகாவும் கனடாவுக்கு வந்துவிட்டாள். ஜனனியும் பிறந்து 7 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அந்தத் திருமணத்தினத்திற்குப் பிறகு கோபியோ, கோபியின் பெற்றோர் உறவினர் என எவருமே மேனகா வீட்டினரோடு பேச்சுவார்த்தையில்லை. சீதனச் சாகரத்தில் இன்றுவரை தங்கைக்கென்று தமையன் கொட்டிக்கொண்டுதான் இருக்கிறான்.மேனகாவும் ஒவ்வொரு வருடமும் ஏதாவது சாக்குச் சொல்லி ஒருமுறையாவது தன் குடும்பத்தினரைச் சென்று பார்க்க முயல்வாள். ஆனால் அந்த முயற்சிகள் கோபியின் பெற்றோரால் வெறும் முயற்சியகளாகவே நின்றுவிடும்.

“அம்மா, இது குட்டித் தாத்தா. இது பெரிய தாத்தா. இது பெரியம்மா. அம்மா, ஏனுங்கட கல்யாண வீட்டல்பத்தில என்னைக் காணேல்ல? ஏனம்மா என்னை வச்சுப் போட்டோ எடுக்கேல்ல? அம்மாமாமாமாமாமா! என்ன நீ நான் பத்துத் தரம் கூப்பிட்டும் காது கேக்கலையா? இரு அப்பா வரட்டும் சொல்றன்.” ஜனனி தோளைத் தொட்டு உலுக்கியதும் நினைவலைகளிலிருந்து மீண்டும் சுயநினைவுக்கு வந்தாள் மேனகா.

அப்போதுதான் நேரத்தைக கவனித்தாள் மேனகா. “அச்சச்சோ, ஜனனிக் குட்டிக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கெல்லோ..? வாங்கோ வாங்கோ வந்து கெதியாச் சாப்பிட்டுப் படுங்கோ. அப்பத்தான் நாளைக்கு விடிய எழும்பலாம்.”

உறக்கத்தில் மீண்டும் கேட்hள் ஜனனி. “அல்பத்தில ஏனம்மா நானில்லை? ஏனம்மா அப்பாக்கும் உங்களுக்கும் இடையில நானில்லை?”

“ம்... ஜனனிக்குட்டி அந்தநேரம் நித்திரையாம். அதுதான் போட்டோவில இல்லையாம்” என்று சொல்லி ஜனனியைத் தூங்க வைத்தாள். அதே கேள்வியைத்தானும் சின்ன வயதில் கேட்டதை அடிக்கடி சொல்லிச் சிரிக்கும் அம்மாவையும் குடும்பத்தாரையும் நினைத்தபடி, ‘இந்த வருசமாவது அவர்களையெல்லாம் பார்க்கமாட்டோமா?’ என ஏக்கத்துடன் காத்திருக்கிறாள் மேனகா.

Friday, December 22, 2006

அழைத்தால் மௌனம் அதுதான் தருணம்

கலாபக்காதலன் படத்திற்கு இசையமைத்த நிருவின் மூங்கில் நிலா (2003) என்ற இசைத்தட்டில் இடம்பெற்ற பல பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது “அழைத்தால் மௌனம்” என்ற பாடல்.உன்னி கிருஸ்ணனின் குரலா அறிவுமதியின் வரிகளா அல்லது நிருவின் இசையா எது என்னைக் கவர்ந்ததென்றறியேன்.ஒருவேளை மூன்றும் சேர்ந்து தந்த மயக்கமோ?

இந்தப்பாடல் தவிர மூங்கில் நிலாவில் இடம்பெற்ற இன்னும் ஐந்து பாடல்கள் எனக்குப்பிடித்தபாடல்களின் பட்டியலில் உள்ளன.அந்தப்பாடல்களையும அழைத்தால் மௌனம் பாடலின் வரிகளையும் இன்று தருகிறேன்.தொடர்ந்து ஏனைய பாடல் வரிகளையும் தருகிறேன். பல காலமாக எழுதவேண்டும் நினைத்த இந்தப்பதிவு இன்றுதான் சாத்தியமாகியுள்ளது.

பாடல்களைக் கேட்க : http://www.raaga.com/channels/tamil/movie/T0000956.html

(1) “திருடா திருடா என்னைத் திருடடா திருடா இதழால் விரல் நுனிகளால் என்னைச் சிற்பமாக்கடா அழகா” -சாரங்கன்

(2) “காதல் போர்க்களம்தானா பார்வை ஆயதம்தானா அழகே இதழ் கொண்டு யுத்தம் செய்வோமா” -சுதன்ராஜ்;

(3) “என் சுவாசம் சேரும் வழியால் புயலாய் வந்தவளே” -சதாபிரணவன்

(4) “பெண்ணே போகாதே இரவை எரிக்காதே நிலவைச் சாம்பலாக்காதே” -பழனிபாரதி ( தமிழ்மணத்தில் எழுதுகின்ற பழனிபாரதியா இவர்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

(5) “புல் நுனியில் பட்டுத்தெறிக்கும் மழைத்துளியில் கரைந்தேன்” -பாவனா


அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம்

திடும் திடும் திடுமென உயிர் விழிக்கும் - அது
கனவுக்குள் வானவில் தொட அழைக்கும்
திடும் திடும் திடுமென உயிர் விழிக்கும் - அது
கனவுக்குள் வானவில் தொட அழைக்கும்
இது முகங்களின்(?) சடுகுடு விளையாட்டு - இருகுயில்களின் மெல்லிய இசைப் பாட்டு
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)

விடும் விடும் விடுமென பயம் தடுக்கும் - அது
உயிருக்குள் மூழ்கிட சுழல் பிறக்கும் (3)
இது துணிகளின் கடலென்னும் பசி பாட்டு???
இனி மழையினில் நெருப்பினைக் குளிப்பாட்டு???

அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் .

Thursday, November 30, 2006

தூக்கம் கண்களைத் தழுவட்டுமே!


“ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்கு தூக்கம் போச்சே...” இப்படித்தான் எங்களில் 25 வீதமானவர்கள் அடிக்கடி பாடிக்கொண்டிருக்கிறம். ஒன்பது வீதமான ஆக்களின் நிலமை இன்னும் மோசம்...அவைக்கு எப்போதுமே நித்திராதேவியோட சண்டைதானாம். படுத்ததுதான் தாமதம் உடனே நித்திரை வந்துவிடும் அல்லது பக்கத்தில இருப்போரை வெட்டினாற்கூடத் தெரியாத மாதிரி நித்திரை கொள்பவர்களும் இருக்கிறார்கள். படுத்துப் பலமணி நேரங்களாகியும் நித்திரை வராமல் கடிகார முள்ளதிர்வதையும் இதயம் துடிக்கும் ஓசையையும் மட்டும் கேட்டுக்கொண்டு கூரையைப் பார்த்துக்கொண்டு ஆந்தைக்குப் போட்டியா விடிய விடிய முழித்துக்கொண்டு இருப்பவர்களுமுண்டு. ஏனிந்த வேறுபாடு? தூக்கமின்மை என்பது ஒருவித வியாதியா? தூக்கமின்மைக்கு என்ன காரணம்? நல்ல நித்திரை கொள்ள என்ன செய்யலாம்?

உணவு ,உடை, உறையுள் ,பாதுகாப்பு, அன்பு மாதிரி நிம்மதியான நித்திரையும் மனிதர்களுக்கு அவசியம்தானே? எவ்வளவு பணம் செலவளித்தும் நல்ல கட்டில் மெத்தையைத்தான் எங்களால் வாங்க முடியும். ஆனால் நல்ல தூக்கத்தை எங்க போய் வாங்கலாம்?

“நல்ல நித்திரைகொண்டு கன காலமாச்சு” என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். “நல்ல நித்திரை” என்பது அவரவருடைய வசதிக்கு ஏற்ப வேறுபடும். சிலருக்கு 5 மணிநேர நித்திரையே போதும் போதுமென்றிருக்கும். சில கும்பகர்ணன்களுக்கு 10 மணிநேர நித்திரையே போதாது போலிருக்கும் (அண்ணா, என்னை மன்னிச்சுக் கொள்ளு).

“நல்லா நித்திரை தூக்கி அடிக்கிற மாதிரி இருக்கும் போய்ப்படுத்தா நித்திரை கொள்ள முடியாமல் இருக்கு. மெதுவாக் கண்ணை மூடி தூங்க முயற்சி செய்து நித்திரை வாற நேரம் பார்த்து முழிப்பு வந்திடும்” இப்படி அர்த்தம் இல்லாமல் பலர் புலம்புவதை யாவரும் கெட்டிருப்போம். இவர் போல் தூக்கம் வராமல் அவதிப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் சில உளவியல் காரணங்களாக இருக்கலாம் அல்லது சுற்றுப்புறச்சூழல் காரணிகளாக இருக்கலாம். மனவழுத்தம், மனக்கவலை, போதைப்பழக்கம் போன்றவற்றால் அவதிப்படுவோர்தான் அதிகம் தூக்கமின்றித் தவிப்ப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவை தவிர உடம்பில் தீராத வலியுடையோர், நுரையீரல் இரத்தப்பை சம்பந்தமான நோயுள்ளோர், இரவு நேர வேலை செய்வோர்கள், நித்திரைக்கான மாத்திரை உட்கொள்வோர்கள், அதிகம் இரைச்சலான/குளிரான/வெப்பமான இடங்களில் வசிப்போர், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவோர் மற்றும் அடிக்கடி caffeine போன்ற பதார்த்தங்களடங்கிய பானங்களை அருந்துவோர் எனப் பலர் தூக்கமின்மையால் அவதியுறுகிறார்கள்...........

தொடர்ந்து வாசிக்க தாயகப்பறவைகள் சரணாலயத்துக்கு வாருங்கள்... :-)
http://www.thayakaparavaikal.com/nalamnadi.php

Saturday, October 07, 2006

Genital Wart

போன இதழில் Bartholin gland cyst பற்றி பார்த்தோம். இந்த இதழில் ஜெனிற்றல் வார்ட் அல்லது condyloma என்று அழைக்கப்படுகின்ற தகாத உடலுறவினால் ஏற்படும் தொற்றுநோய் பற்றி பார்ப்போம்.

பல விநோதங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நம்முடலில் நூற்றுக்கும் அதிகமான பாப்பிலோமாவைரஸ்கள் (papillomavirus) உள்ளன. தோல் சம்பந்தமான நோய்களோடு தொடர்புடைய இந்த வைரஸ்களில் கிட்டத்தட்ட 30 வைரஸ்கள் உடலுறவின்போதே பரப்பப்படுகின்றன. 90 % கருப்பைப் புற்றுநோய்க்குக் கூட இந்த பாப்பிலோமாவைரஸ்களே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது Oral, Genital மற்றும் Anal செக்ஸ் இன் போது பரவும் papillomavirus(6, 11, 30, 42, 43, 44, 45, 51, 52, & 54) உருவாக்கும் வீக்கம் அல்லது அழற்சியே ஜெனிற்றல் வாட்.

பெண்ணின் பிறப்புறுப்பின் வாசலில் நுண்ணிய வீக்கமாகத் தொடங்கிப் பின்பு பிறப்புறுப்பைச் சுற்றியும் குதத்திலும் மிகப்பெரிய திரட்சியாகப் பரவத்தொடங்கும். ஆண்களுக்கும் பிறப்புறுப்பின் நுனியில் தொடங்கிப் பின்னர் பீனஸ் சுவர்களிலும் குதத்தைச் சுற்றியும் பரவும் ஆனால் ஜெனிற்றல் வார்ட்டின் அறிகுறிகள் ஆண்களில் குறைவாகவே காணப்படும். Oral செக்ஸ் இல் ஈடுபடுவோருக்கு இந்த ஜெனிற்றல் வார்ட் வாயில் கூட வரலாம். Condom அணிந்த பாதுகாப்பான உடலுறவினில் கூட இந்த papillomavirus தொற்றக்கூடும். இந்த ஜெனிற்றல் வார்ட்டை உருவாக்கும் வைரஸ்கள் ஊடுருவிப் பல மாதங்கள் வருடங்களுக்குப் பிறகு கூட திரட்சிகளை உருவாக்கக்கூடும்.........


தொடர்ந்து வாசிக்க தாயகப்பறவைகள் சரணாலயத்துக்கு வாருங்கள்... :-)

http://www.thayakaparavaikal.com/nalamnadi.php

Friday, September 01, 2006

பார்த்தோலின் கிளான்ட் சிஸ்ற் (Bartholin's Gland Cyst)

- சினேகிதி-



















இந்து : ஹலோ டொக்டர்!

டொக்டர் : ஹலோ இந்து! என்ன இந்த விடிய வெள்ளன என்னத் தேடி வந்திருக்கிறாய்..என்ன விசயம்?

இந்து : அது வந்து டொக்டர்...

டொக்டர் : கமோன் இந்து என்னட்ட என்ன தயக்கம்? உன் அம்மாட்ட சொல்லாத உன் போய்பிரண்ட் ஐ பற்றியே என்னட்ட சொல்லியிருக்கிறாய் இப்ப என்ன புதுசா தயக்கம்?

இந்து : தயக்கம் என்றில்லை..கொஞ்சம் பயம் கொஞ்சம் குழப்பம்..அதான் உங்களிட்ட எப்பிடிக் கேக்கிறதெண்டு..
டொக்டர் : வெளிப்படையாப் பேசினாத்தான் குழப்பம் தீரும். என்ன விசயமம்மா?

இந்து : செக்ஸ்ல ஒருக்காலும் ஈடுபடாத ஆக்களுக்கும் ஜெனிற்றல் வார்ட் வருமா டொக்டர்?

டொக்டர் : இல்லை! ஜெனிற்றல் வார்ட் வாறதுக்கு தகாத உடலுறவு , கருத்தடை மாத்திரை உட்கொள்ளல் போன்ற பல காரணங்கள் இருக்கு. இப்ப உனக்கு குறிப்பா என்ன குழப்பம் என்று தெளிவாச் சொல்லு. அம்மா அப்பா என்னை நம்பி உன்னை இங்க தங்கிப் படிக்க விட்டிருக்கினம். என் தலைல கல்லைத் தூக்கிப் போட்டிடாதம்மா.

இந்து : இல்லை டொக்டர் அன்ரி...ஐ நெவர் காட் செக்ஸ் பட் எனக்கு வந்திருக்கிற கட்டின்ர அறிகுறிகளை வச்சு நான் கூகிள்ல தேடிப் பார்த்தன் . ஜெனிற்றல் வார்ட் ன்ர அறிகுறிகளோட ஒத்துப்போகுது அதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.

டொக்டர் : சரி காட்டு நான் பார்க்கிறன்.

இந்து : இல்லப் பறவாயில்ல நீங்கள் எனக்கு ஒரு பெயின் கில்லர் தாங்கோ. நான் எக்ஸாம் முடிய திரும்ப பின்னேரம் வாறன்.

தொடர்ந்து வாசிக்க தாயகப்பறவைகள் சரணாலயத்துக்கு வாருங்கள்... :-)

http://www.thayakaparavaikal.com/August-nalamnaadi.html

Tuesday, August 01, 2006

இணையத்தள அறிமுகம் - "தாயகப்பறைவைகள்"

இன்றைய இணையில்லா இணைய தொழில் நுட்ப இயக்கத்திற்கு ஏற்றவகையில் உலகின் மற்றைய மொழிகளுக்கும் சமமாய் சற்றும் குறைவில்லாவகையில் எம் தாய் மொழியாம் தமிழில் பெண்களின் உரிமைக்கான குரலை உரத்து சொல்லும் "தாயகப்பறைவைகள்" என்னும் மாத இதழாக இந்த இணைய இதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பெண்களின் பிரச்சனை மட்டுமா?? ஆண்களின் பிரச்சனைகளையும் அம்பலப்படுத்தத்தவும் தயங்க மாட்டோம். அவர்களிற்குமாய் எங்கள் குரல் ஓங்கியே ஒலிக்கும். பலநாட் கனவு சிலநாள் முயற்சி கண்முன்னே தாயகப்பறவைகளாக இணையவானில் பறக்க தாயாரான வண்ணம் இருக்கிறது.

வாசகரின் தேவையறிந்து, ஒரு செய்தி ஊடகம் என்ற கோட்டுக்குள் மட்டும் இன்றி உலக நடப்புகள், விளையாட்டுகள், கலாசாரம், விஞ்ஞான தொழிநுட்பம், என பல்வேறு பரிமாணங்களை எமது மாத இதழ் தாங்கி வருகிறது. அதுமட்டுமல்லாது தமிழ் தெரியாதோரும் பயன்படுத்தும் வகையில் காலப்போக்கில் பல்வேறு மொழிகளிலும் எமது தாயகப்பறவைகள் பறந்து வர உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள வண்ணம் உள்ளன.

இணைய உலகம் ஒரு சமுத்திரம் அதில் சிறு துளியாய் இணைகிறது எங்கள் தாயகப்பறவைகள். எங்கெங்கோ வெவ்வேறு கண்டங்களில் வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு பறவைக்கூட்டம் தாயகப்பறவைகள். கனவுகளைய்க் களைந்து கற்பனைகள் கலைத்து நியம் தேடும் எங்களோடு கூட பயணிக்கவும் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவும். இளைய முதிய எழுத்தாளப் பெருமக்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம்.

இணையத்தள முகவரி:- www.thayakaparavaikal.com

Wednesday, July 26, 2006

கனவாகிப் போனவர்கள்












தமிழமுதத்துக்காக
-சினேகிதி-


அம்மம்மா எனக்கு இன்னுமொரு பிடி சோறு வேணும்.மிளகாயும் சேர்த்து வையுங்கோ.

இந்தாடி ஆத்தா உனக்குத்தராம ஆருக்குக் குடுக்கப்போறன்.

என்ர கையில சோத்தை வைக்கும்போதே அம்மம்மான்ர கண்ணிரண்டும் பொல பொல என்று கண்ணீர் வடிக்குது.

ஏனழுறீங்கள்?? உங்களுக்குச் சோறு காணதென்டோ?? எனக்குக் காணும்.இந்தாங்கோ இதை நீங்கள் சாப்பிடுங்கோ.

அம்மம்மா இன்னும் பெருசா அழத்தொடங்கிட்டா.நானும் அழத்தொடங்கிட்டன்.நானழுறதைப் பார்த்திட்டு அம்மம்மா அழுறதை நிப்பாட்டிட்டா.

அம்மம்மா .. ஏனழுதனீங்கள் ?

இல்லடா சின்னமாமான்ர ஞாபகம் வந்திட்டு....அவனும் உன்னை மாதிரித்தான் குழையல் சோறும் மோர் மிளகாய்ப் பொரியலும் என்றால் இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவான்.இன்றைக்கு மட்டும் என்ர பிள்ளை என்னோட இருந்திருந்தால் என்னையிப்பிடி கஸ்டப்பட விட்டிருப்பானே.

அம்மம்மா நீங்கள் எல்லோ சொன்னீங்கள் சின்னமாமா குட்டிச் சித்தீன்ர கல்யாணவீட்டுக்கு வருவார் எண்டு.ஆனால் அவர் வரேல்லயே.

அவன் இண்டைக்கு வருவான் நாளைக்கு வருவான் என்றுதான் இந்தப் பத்து வருசமாச் சொல்லிக்கொண்டிருக்கிறன்.எனக்குக் கொள்ளிபோடவாவது அவன் வரோணும்.

அம்மம்மா ரியுூசன் ரீச்சர் சொன்னவா உங்கட சின்ன மாமா திரும்ப வர மாட்டார்.உயிரோட இருந்தாத்தானே அவர் வாறதுக்கெண்டு.ஏனம்மம்மா அவா அப்பிடிச் சொன்னவா.
என்ர கடவுளே ....குழந்தைப்பிள்ளையளிட்ட என்ன கதைக்கிறதெண்டு தெரியேல்ல..இதுகளெல்லாம் ஒரு ரீச்சர்.அவாட்ட உன்ன கொம்மா ரியூசனுக்கு விடுறா.ஆவா அப்பிடித்தான் சொல்லுவா கானவிக்குட்டி.நீ இருந்து பாரன் சின்னமாமா ஒருநாளைக்கு வரத்தான் போறார்.அவையிவை சொல்றதையெல்லாம் கேக்காம கெரியாப் போய் படுத்து நித்தா கொள்ளுங்கோ நாளைக்குப் பள்ளிக்கூடமெல்லோ.

சரி அம்மம்மா நீங்களும் படுங்கோ.குட்நைட்.

++++++++++++++++++++++++++++++++++++

அம்மா

ம்

அம்மா

ம்..என்ன கானவி நீ இன்னும் நித்திரை கொள்ளேல்லயோ.

அம்மா சின்னமாமாக்கு என்னைத் தெரியுமோ?

என்ன இப்ப திடீரெண்டு சின்னமாமான்ர ஞாபகம்?

சின்னமாமாக்கு என்னைத்தெரியோமெண்டெல்லோ கேட்டனான் உங்களிட்ட.

உதான் உதான் உந்த முன்கோபமும் வாயும்தான் இன்டைக்கு அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று கூடத்தெரியாமா எங்களெல்லாரையும் அலைக்கழிக்குது.உரிச்சு வச்சு உருவத்தில குணத்தில படிப்பில எல்லாத்திலயும் அவனைப்போலவே வாறாய் நீயும்.

உண்மையாவோம்மா?அப்ப சின்னமாமா என்ன மாதிரியோ இருப்பார்? எங்க பார்ப்பம் படம் காட்டுங்கோ.

அவன்ர படத்தை நடுக அம்மம்மா பார்த்து அழுறா என்று பெரிய மாமா எல்லாப்படங்களையும் கொண்டுபொய் றங்குப்பெட்டிக்க வச்சிட்டார்.பிறகு எடுத்துக் காட்டுறன்.

சரி பின்னச் சொல்லுங்கோ சின்னமாமாக்கு என்னைத் தெரியுமோ தெரியாதோ?

அப்ப உனக்கொரு இரண்டரை வயசிருக்கும்.ஒரு சித்திரைப் பொங்கலுக்கு மொறட்டுவலிருந்து வந்து நிண்டவன்.அந்த நேரம் யுனிவர்சிற்றிப் பெடியங்கள் எல்லாரையும் சந்தேகப் பட்டு ஆமிக்காரர் பிடிச்சுக்கொண்டு திரிஞ்சவங்கள்.இவன் சொல்லாமக் கொள்ளாம நேர இங்க வந்திட்டான்.அன்றைக்கிரவே தாத்தா எவ்வளவு கெஞ்சினவர் இவனை உடனே முல்லைத்தீவில அப்பப்பான்ர பண்ணைல போய் நிக்கச் சொல்லி.இந்தப் பிடிவாதம் பிடிச்சவன் யாற்றயும் சொல் கேட்டாத்தானே. விடாப்பிடியா தானிங்கதான் நிப்பன் என்று நிண்டவன்.தாத்தா அடிக்கப்போக பக்கத்தில கிடந்த பானையத் தட்டி விட்டான் அது அம்மியோட போய் அடிபட்ட சத்தத்துக்கு நித்திரையாக்கிடந்த நீ வீரிட்டுக்கத்தத் தொடங்கிட்டாய்.
உன்னில சின்னமாமாக்குச் சரியான விருப்பம்.உன்னையும் தூக்கிக்கொண்டு "எனக்கென்னமும் ஆகோணும் என்று விதியிருந்தால் அது எங்கயிருந்தாலும் நடக்கும்.ஏற்கனவே என் இரண்டு பிரண்ட்ஸ் ஐ உயிரோட என் கண்முன்ன துலைச்சிட்டுத்தான் இங்க வந்து நிக்கிறன்.நான் இப்ப எங்கயும் போறதா இல்லை.என்னோட மல்லுக்கட்டாம உங்கட உங்கட வேலையைப் பாருங்கோ எல்லாரும்" ன்று சத்தம் போட்டிட்டுத் தோட்டத்துக்குப் போனான்.போனவன் போனவன்தான். திரும்பி வரவேயில்லை.

ஏன் திரும்பி வரேல்ல? அப்பா நானிப்பிடி திரும்பி வந்தனான்?

தோட்டத்துக்க நிக்கேக்குள்ள ஆமி வந்து ட்றக் ஸ்டாற் பண்ணேல்ல தள்ள வரச் சொல்லி சின்னமாமாவையும் அவன்ர பிரணட்ஸ் இரண்டுபெரையும் கூட்டிக்கொண்டு போனவங்களாம்.உன்னை பொன்னுத்தாத்தாதான் வீட்ட கூட்டிக்கொண்டு வந்தார்.சின்னமாமா வருவானென்று இரவு முழக்க முத்தத்திலயே சாக்குக்கட்டில்ல இருந்தம் அவன் வரேல்ல.அடுத்த நாள் விடிய பள்ளத்தில கிடந்த அவனோட போன இரண்டுபேற்ற உயிரில்லாத உடம்பைத்தான் கொண்டு வந்தினம்.அன்றைக்கு தாத்தாக்கு முதல் மாரடைப்பு வந்தது.வெத்திலைல மை போட்டுப் பார்த்தவர் சொன்னதைக் கேட்டுக் களுத்துறைச் சிறைச்சாலைக்கு அலைஞ்சலைஞ்சு அங்கயும் இல்லையென்ற அலுப்பிலயே அடுத்த கிழமையே அவர் எங்களையெல்லாம் தவிக்க விட்டிட்டு ஆண்டவனிட்ட போய்ச்சேர்ந்திட்டார். இப்ப பெரிய மாமாதான் தன்ர சுமையைக் குறைக்க சின்னமாமா எப்பவாவது ஒருநாள் வருவான் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.அம்மம்மாக்கு எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சே பிறசர் கூடிக்கொண்டிருக்கு.இனிம நீ அம்மம்மாட்ட மாமாவைப் பற்றிக்கேக்கிறேல்ல சொல்லிப்போட்டன்.

அம்மா பின்ன ஏன் எங்கட ரியுூசன் ரீச்சர் சின்னமாமா உயிரோட இல்லையென்று சொன்னவா?

இத்தின வருசமா வராதவன்...எங்கயாவது உயிரோட இருந்தா ஒரு கடிதமாவது போட்டிருப்பான் தானே.அதான் சனமெல்லாம் அப்பிடிச் சொல்லினம்.

கானவி பத்து மணியாச்சு..அம்மாவும் பொண்ணும் .இன்னும் நித்திரை கொள்ளேல்லப்போல...

இல்லையம்மம்மா இந்தா நித்திரை இதோ பக்கத்தில வந்திட்டுது.நான் நித்தா.

குட்நைட் அம்மா.

குட்நைட் கானவி.

+++++++++++++++++++++++++++++++++++++

கானவி!

என்னம்மா?

நாளைக்கு அம்மம்மான்ர திவசம் அம்மா விடிய எழும்போணும் சமைக்க.றூமுக்க பால் வைச்சிருக்குக் குடிச்சிட்டுப் படுங்கோ. விடிய லெக்ஸர் இருக்கெண்டிட்டு இன்னும் என்ன கம்பியுூட்டர்ல தட்டிக்கொண்டு..

அம்மா இப்ப ஊரில நடக்குறதுகளை வாசிக்க தெச்சு மாமான்ர ஞாபகம் வந்திட்டு..அதான் அவரைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறன்.10 நிமிசத்தில படுக்கிறன்.

கெரியாப்போய்ப் படுங்கோ.குட்நைட்!

குட்நைட்மா.

+++++++++++++++++++++++++++++++++++++

-இந்தச் சின்ன மாமா போல எத்தினபேருக்கு இப்பிடி கனவாய்ப்போன உறவுகளுண்டு. மகனைத்தேடி அம்மா, அண்ணாவைத்தேடி சோதரர்கள், கணவனைத் தேடி மனைவி, தந்தையைத் தேடிப் பிள்ளைகள் ,காதலனைத்தேடி காதலிகள் , நண்பனைத்தேடி நண்பர்கள் இப்படி எத்தனை பேர் காணமால் போன உறவுகளின் நினைவுகளைச் சுமந்தபடி இன்னமும் அவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.-

Wednesday, July 12, 2006

என்ன தான் விசித்திரமோ?

















கரை தேடும் அலை மீண்டு(ம்) கடல் சேர்கிறது
இலைஉ திரும் மரம் மீண்டும் துளிர் விடுகிறது
மண் வீழும் நீரும் ஆவியாய் விண் மீள்கிறது

என்ன தான் விசித்திரமோ?
பிரிந்து போன நம் காதல் மட்டும்
இன்னும் உயிர்ப்படைய வில்லை

தரித்து நிற்கும் புகைவண்டி மீண்டும் பயணிக்கிறது
இடைவேளைக்குப் பின்னரும் திரைப்படம் தொடர்கிறது
நின்று போன யுத்தம் மீண்டும் தொடர்கிறது

என்ன தான் விசித்திரமோ?
நின்று போன நம் காதல் மட்டும்
மறுபடி தொடரவே யில்லை :wink

-சினேகிதி-

கொள்ளையின்பம் தரும் மழலைகள்













எல்லாற்ற வீட்டிலயும் மழலைச்சத்தம் கேட்டிருக்கும் கேட்டுக்கொண்டிருக்கும் இல்லாட்டா இனிம கேக்கும் தானே?அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பண்ணிய குறும்புகளையாவது ரசிச்சிருப்பீங்கள் தானே:-)

எங்கட வீட்டயும் இரண்டு பபாக்கள் இருக்கினம்.இவை செய்யுற ஒவ்வொரு சின்னச் சின்னச் செயல்களும் நல்ல ஒரு கவிதை வாசித்த சுகத்தைவிட கூடச் சந்தோசம் தரக்கூடியவை.அப்படி நான் ரசிச்சு சிரிச்ச சில சந்தர்ப்பங்களை உங்களுக்குச் சொல்கிறேன் அதேமாதிரி நீங்கள் ரசித்தவற்றையும் சொல்லுங்கள்.

சின்னாக்கள் வடிவாக்கதைக்க முதல் திக்கித் திக்கி அரைகுறை வார்த்தைகளால் கதைப்பினம்.
கவினுக்கு இரண்டு வயசு.ஒரு சில வார்த்தைகள் மட்டுமே கதைச்சார் இப்ப " அத்தி அண்ணா பார்க் டொம்மா" என்று ஒவ்வொருநாளும் அஞ்சுமணிக்கு நச்சரிக்கத் தொடங்குவான்.சித்தி அண்ணாவை பார்க்குக் கூட்டிக்கொண்டு போங்கோ என்றதுதான் அதின்ர அர்த்தம்.தம்பி பிறந்தவுடனே எல்லாரும் அண்ணா என்று சொல்லிப்பழக்கித் தன்னைத்தானே அண்ணா என்று கூப்பிடுறார்.

தண்ணில விளையாடுறது எல்லாச் சின்னப்பிள்ளையளுக்கும் விருப்பம் போல.கவிணும் "அண்ணா கும் கும் குளிக்கிப்போ" என்று சொல்லுவார்...இன்று மழை பெய்தபோது ஓடி வந்தார் வந்து " அத்தி தாத்தாக்கார் அப்பாக்கார் மாமாக்கார் கும் கும் அ அ".

ஆதிப்பட அத்தி அத்திக்காய் பாட்டுப்போட்டாத்தான் சாப்பாடு தீத்தலாம்.வானுக்குள்ள பாட்டுப்போட்டா "சுற்றும் விழிச்சுடரே " ,"அத்தி அத்திக்காய் " ,"ரா ரா" இப்பி அவருக்கெண்டு கொஞ்ச பாட்டிருக்கு.பாட்டின்ர ஆரம்ப இசை வரவே அவர் பாடத் தொடங்கிடுவார் மிச்ச பாட்டு. அதே மாதிரி ப்ளு குளூஸ் விக்கிள்ஸ் என்றாக்காணும் சாப்பாடும் வேண்டாம்.

கவின்ர பக்கத்துவீட்டு பிரண்ட்ஸ் கொஞ்சம் பெரிய ஆக்கள்.இப்ப கின்டர்கார்டின் போயினம்.அவேன்ர அம்மம்மா சொல்லுவா இவங்கள பக்கத்தில வச்சுக்கொண்டிருந்தா ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சுக் கதைக்கோணும் என்று.ஒருநாள் தெரியாத்தனமா கெட்டவார்த்தை என்று சொல்லிட்டாவாம் உடனே அவான்ர பேரன்கள் இரண்டு பேரும் ஓ ஓ என்று சொல்லத்தொடங்க தானுடனே "excuse ma french " என்று சொல்ல அவை உடனே "hmm that wasn't french" என்று சிரிக்கினமாம்.
இப்பிடி நீங்கள் ரசித்தவற்றைச் சொல்லுங்கள். :)

-சினேகிதி-

Monday, July 10, 2006

மல்ரிபிள் பேர்ஸனாலிற்றி டிஸ்ஓடர்










இந்தப்பெயர் நமக்குப் புதிதில்லை.தமிழ்ச்சினிமாக்களில் அடிக்கடி தடக்குப்படும் வித்தியாசமான மனநோய்.சந்திரமுகில ஜோதிகா,அந்நியன்ல அம்பி ,பார்த்திபனுடைய ஒரு படம் இப்படி நிறையப் பார்த்து விட்டோம்.

அதிசயமான புதிரான பலர் அறிய ஆவலாயுள்ள உளவியல் சிக்கல்களில் விவாதத்துக்குரியதும் ஆராய்ச்சியாளர்களோடு மல்லுக்கட்டும் ஒரு மனநோய்தான் இந்த MPD.

இவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவருடைய குணாதிசியங்கள் இருக்கும்.ஒவ்வொரு குணாதிசயத்தையும் ஒவ்வொரு "Alter" என்று சொல்வார்கள்.ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு அல்டர் இவர்களில் ஆதிக்கம் செலுத்தும்.உதாரணமா அந்நியனில் விக்ரம் சில நேரம் அந்நியனாகவும் சில நேரம் அப்பாவி அம்பியாகவும் அட்டகாச றெமோகாவவும் வருவாரே.இந்த அல்டரில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் மருத்துவரிடம் வரும் MPD க்கு தன் அல்டர்களைப் பற்றி அநேகமாகத் தெரிந்திருக்காது ஆனால் அல்டர்களுக்கு தம் நிலையான பாத்திரம்(original patient) பற்றியும் தன் மற்ற அல்டர்களைப் பற்றி முழுவிபரமும் தெரியும்.இந்த அல்டர்கள் வேறு வேறு பிரதேசங்களில் வசிக்கும் வெவ்வேறு வயதுடைய வெவ்வேறு இனமாகவோ ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் என்பது மற்றொரு வியப்பூட்டும தகவல்.

MPD உள்ளவர்களை சோதனைக்குட்படுத்தி அறிந்த ஆச்சரியமான உண்மைகளில் இவர்களுக்கு வெவ்வேறு இசை ரசனை, IQ ,வித்தியாசமான ஒவ்வாமைகள் இருப்பதும் அடங்கும்.

இந்த MPD க்கள் தங்கள் சின்ன வயதில் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப் பட்டிருக்கக் கூடும் என்பது உளவியலாளர்களின் கருத்து.இந்த MPDக்களின் அல்டர்கள் இவர்களின் ஒன்பதாவது வயதுக்கு முதலே உருவாகத் தொடங்குகிறார்கள்.ஒவ்வொரு அல்டரும் ஒவ்வொரு விதமான பாலியல் துன்புறுத்தலின்போது வளரத்தொடங்குகிறது.இந்த MPDயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் என்பது கசப்பான உண்மை.

-சினேகிதி-

நீ இல்லாத நான்

உனக்குப் பிடித்த பாடல்களாலும்
உன்னை படித்த நாட்களாலும்
உன்னை வடித்த வரிகளாலும்
திமிருற்ற எந்தன் ஏட்டை
அழித்து விட்டு எனக்கு நானே
சொல்லிக்கொண்டேன நம் காதல்
கலைந்து விட்டதென்று

காலையில் தினமும் கண்சிமிட்டும் பகலவனால்
உன் துளிர்ப்புன்னகைச் சேமிப்பெடுத்து
இன்னமும் ரசிக்கிறேன் சிலிர்க்கிறேன்
இருந்தும் உன்னை விட்டு விலகி விட்டேன்

சில்லென்று மெய் நனைக்கும்
ஒவ்வொரு நீர்த்துளியும்
உன் ஸ்பரிசயமாய் படர்ந்தன
ஆனாலும் உன்னை மறந்து விட்டேன்

உட்கொள்ளுமோர் பருக்கையிலும்
நிராசையாகிப்போன நம் ஆசைகள்
நளினத்தோடு எள்ளி நகையாடின
என்றாலும் நாம் பிரிந்து விட்டோம்

பார்வையில் பாசையில் தூண்டலில்
துலங்கலில் நிறத்தில் மணத்தில்
சுவையில் தூக்கத்தில் கனவில்
நினைவில் எங்குமாக எல்லாமாக
நீக்கமற நீ நிறைந்திருக்கலாம்!

அதனாலென்ன
எனக்கு நீ இல்லாத நான் கிடைத்துவிட்டேனென
உரக்கச் சொல்லிக்கொள்வேன்- உண்மையாகாதா?

-சினேகிதி-

Monday, May 29, 2006

உறவுகள் வாழ்வுக்காய் குரல் கொடு!


நீ காலாற நடந்த நிலமெங்கும் - இப்போ
காலமானவரை சுமக்கும் ஊர்வலம்
விடியும் பொழுதுக்காய் அங்கு நீ இல்லை
விண் ஊர்தி ஏறி நீ பறந்தாய்
விண் ஊர்தி கொண்டழிக்கின்றார்-அங்கு
சருகாகி போகிறதே தாய் நிலம்
மனசில் சஞ்சலம் ஏதும் உனக்கு உண்டா.....!

தாய் எரிய பார்த்திருந்தாய் உன்னை
தாங்கியவர் உடல் நீறாக பார்த்திருந்தாய்
எட்டுத்திசையும் எரிகிறது பார் தாய் நிலம்
இனி விட்டு விட்டு வீணே கிடப்பாயா?
இன்னும் நீ மனிதனா எப்படியென்று சொல்லு!

உனக்காய் வாழ்ந்தது போதும் இனி
எம் உறவுகள் வாழ்வுக்காய் குரல் கொடு
உறவுகள் அழுத கண்ணீரில்
உடல் சிலிர்க்க நீராடுவாயா?
உரிமைக்காய் குரல் கொடேன்
உன்னை ஈன்ற பூமி ஒப்பாரியில் மிதந்தாலும்
உன் செய்நன்றிக்காவும் சேர்த்து கண்ணீர்விடும்......!

-இரசிகை-
Image by -Nitharshan-

உரிமைக்குரல்


உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
உலகத்தின் கண்களுக்கு
உண்மையை கொடுக்க
உரிமைக்காய் எழும் குரல்

புலம் பெயர்ந்த நம்மவர்களே
பறி போகின்றது நம் உரிமைகள் அங்கே
துடிக்கின்றது இளம் குஞ்சுகளின் உயிர்கள்
பறிக்கின்றான் எதிரி அவர்கள் உடமைகளை

நாம் தவழ்ந்து பழகின நிலமாடா அது
நாதிகளாற்று நம் இனம் மடிகின்றது அங்கே
பாடி பாட்டம் விட்டு வட்டம் அடித்த நிலம் அது
பாவிகள் பறிக்கிறார்கள் நம்ம இள வட்டத்தை அங்கு

எம் நிலத்தை இழந்து கொண்டு இருக்கின்றோம்.
எம் உரிமையை இழந்து கொண்டு இருக்கின்றோம்
எம் உணர்வை இழக்கின்றோம் ஆனாலும்
வாழ்கின்றோம் நடைபிணங்களாய் இங்கு

கட்டங்கள் உயர்ந்து நிற்கும் ரொன்றோ மாநகரத்தில்
ஒலிக்கட்டும் நம்ம குரல்கள் உரிமைக் குரல்களாக
இழந்து விட்ட நம் தந்தை நினைப்போம்
தாலியை இழந்து விட்ட நம் அன்னையை நினைப்போம்

கற்பை பறி கொண்ட சகோதரி கதறுகின்றாள் அங்கு
கற்பனைகளுடன் காலத்தை போக்கின்றோம் நாம் இங்கு
காலை இழந்து விட்ட அண்ணன் தவழ்கின்றான் அங்கு
காசு தான் கடவுள் என்று அலைகின்றோம் நாம் இங்கு

போதுமாடா பொறுத்தது போதுமாடா
நம்மவர் துயர் கேட்கையில் எரியுதாடா உள்ளம்
துயில் கொண்டது போதுமாடா
துள்ளி எழுந்து வாடா

படைப்போம் நாம் ஒரு அரண் நம்ம இனத்திற்காக
காப்போம் நாம் சந்தியினரை கொடிய அரக்கரிடம் இருந்து
காத்திருந்தது போதுமாடா
உரக்கச் சொல்லிடுவோம் உரிமைக்குரலால்.

- ரமா -
Image by -Nitharshan-

Saturday, May 06, 2006

90:10 என்றொரு அடிப்படைக் கொள்கை

90:10 என்றொரு அடிப்படைக் கொள்கைஇருக்காமே?உங்கள் எல்லாருக்குமே அது தெரியுமோ? சத்தியமா எனக்குஇதுவரைக்கும் தெரியாது. அம்மா சொல்றவா நான் ஒரு அவசரக் குடுக்கையாம்.என்ன செய்யிறதெண்டாலும் எடுத்தேன் கவுத்தேன் என்று செய்து போட்டு பிறகு இருந்துயோசிக்கிறனாம். பதறாத காரியம் சிதறாதாம் என்று சொல்றவா தான் நான் கேட்டால் தானே.அப்பா ஒரு கதை சொன்னா நான் பத்துக் கதை சொல்லுவன் பிறகு வாய்க்கு வாய் காட்டதா என்று அப்பா பளார் என்று ஒன்று போட்டாப் பிறகு மூஞ்சையைத் துÖக்கி வைச்சுச்கொண்டு கொஞ்ச நேரம் திரிவன்.


சும்மா மாடு சொன்னா கேக்காட்டாலும் மணி கட்டின மாடு சொன்னாக் கேக்கேணும் தானே. ஒரு மணி கட்டின மாடு 90:10 கொள்கை பற்றி எனக்கு சொல்லிச்சுது அதான் நான் உங்கள் எல்லாருக்கும் மாட்டுப் பாசை விளங்காதெண்டு மனித பாசையில சொல்றன் கவனமாக் கேட்டிட்டு வாழ்க்கைக்கு பிரஜோசனமாப் பயன்படுத்துங்கோ என்ன.


ஒரு நாளைக்கு ரெயின் வர லேட்டானா அடுத்த ரெயின் வர இன்னும் ஒரு மணித்தியாலம் ஆகுமெண்டால் அன்றையநாள் வகுப்பு அம்பேல்தான். போற வழியில கார் மக்கர் பண்ணலாம் அல்லது ஒரு வோல்வோ ட்றக் சாரதி நித்திரை தூங்கிக் கொண்டே வந்து காரை இடிக்கலாம். இப்பிடி வாழ்க்கையில எதிர்பாரமா நடக்கிற விசயங்கள் 10% தான் ஆனால் இப்பிடி ஏதாவது நடந்தாப் பிறகு நாங்கள் என்ன செய்ய முடிவெடுக்கிறம் என்றதிலதான் வாழ்க்கையின் மிச்ச90% தங்கியிருக்காம்.


ரெயின் வரத் தாமதமாவதை என்னாலோ, உங்களாலேயோதடுக்க முடியாது. ஆனால் ஒரு மணித்தியாலம் வெள்ளன வெளிக்கிட்டா ஐயோ ரெயின் லேற்றா வந்திட்டுதே இனிம நான் எப்ப வகுப்புக்குப் போய் எப்ப அஸைன்மன்ற் ஐ குடுக்கிறது என்று புலம்புறதை நிப்பாட்டலாம். (வேற வேலை இல்லை 8.30 வகுப்புக்கு 6 மணிக்கா வீட்டை விட்டுப் போறது:-).


சரி இந்த 90% எங்களிலதான் தங்கியிருக்கா என்று பார்ப்பம்.
காலமச் சாப்பாடு எல்லாரும் ஒன்றா இருந்து சாப்பிடுறியள். மகள் கவின்யான்ர கை பட்டு வேலைக்கு வெளிக்கிட்டு நின்ற அப்பான்ர சேர்ட்டில மேசையில கிடந்த தேத்தண்ணி ஊத்துப்பட்டிடுத்து. தேத்தண்ணிய ஊத்தோணும் என்று கவின்யா ஊத்தேல்ல. எதிர்பாராத விதமா நடந்தது இது. ஆனால் அடுத்து அப்பா என்ன செய்யிறது என்றது அப்பான்ர கையிலதானிருக்கு.


ஒரு வேலை ஒழுங்காச் செய்யத் தெரியாது.இப்பவும் சூட்டி பபாவுக்கு நிக்கிறது.கண்டறியாத ரீவி ஒன்று. ரீவியை ஆவென்று பாத்துக் கொண்டு தேத்தண்ணிய அருமந்த சேர்ட்டில ஊத்தியாச்சு.


அவள் என்ன வேணுமென்றா ஊத்தினவள்.பள்ளிக்கூடம் வெளிக்கிட்ட பிள்ளைய அழ வைச்சாச்சு. - இது அம்மா.


எல்லாம் உன்னாலதானப்பா. தேத்தண்ணியக் கொண்டு வந்து நுனி மேசையில வைக்க வேண்டியது பிறகு மகாராணிக்கு வக்காலத்து வாங்கிறது.


அடுத்த 10 நிமிசத்தில அப்பா வேலைக்கு ஆயத்தம் ஆனா கவின்யா அழுதும் முடிக்கேல்ல சாப்பிட்டும் முடிக்கேல்ல.
எனக்கு நேரம் போட்டுது. அழுதது காணும் கார் ஸ்ரார்ட்டில நிக்குது கெரியா வா கவின்யா.


காருக்கயும் அவளைத் திட்டாதயுங்கோ. போட்டு வாங்கோ.-இது அம்மா.

கவின்யாவக் கொண்டு போய் பள்ளிக்கூடத்தில விட்டிட்டு வேலைக்கு போற அவசரத்தில 120ல ஓட வழியில மாமா மறிச்சு ஒரு 100 டொலருக்கு ரிக்கற் தந்து விட்டார் போனஸாக. பள்ளிக் கூட வாசல்ல கவின்யாவ இறக்கி விட கோவத்தில கவி போட்டு வாறன் அப்பா என்று சொல்லாமப் போக, கோவம்,வருத்தம் எல்லாம் கூடிட்டுது. வேலைக்கு அரை மணித்தியாலம் தாமதமாப் போய் அங்கயும் பத்தாதக்கு யாரோடயும் சத்தம் போட்டு ...சா தேவையா இதெல்லாம்? தெரியாம தேத்தண்ணி தட்டுப்பட்டு ஊத்துப்பட்டதில தொடங்கி எங்க வந்து நிக்கிறார் அப்பா.


இதுக்கு யார் காரணம்?தேத்தண்ணியா?கவின்யாவா?அம்மாவா?ரிக்கற் தந்த மாமாவா? இல்லாட்டா அப்பாவா?
அப்பாதான் காரணம்.

தேத்தண்ணி ஊத்துப்பட்ட உடனே அப்பா கோவப்பட்டு சத்தம் போட்ட அந்த சில வினாடிகளதான் எல்லாத்துக்கும் காரணம்.


அப்பா கவியில கோபப்படாம, பறவாயில்ல கவிம்மா... இனிம இப்பிடி கவலைனமா இருக்கக் கூடாது. பள்ளிக்கூடம் போற நேரத்தில கட்டாயம் ரீவி பார்க்கோணுமோ.வந்து பார்க்கலாம் என்ன. நீங்கள் வெளிக்கிட்டாச்சா? அப்பா இரண்டு நிமிசத்தில உடுப்பு மாத்திக் கொண்டு ஓடி வாறன். அம்மா எனக்கு இன்னொரு ரீ போடுங்கோ.


கவியை ஸ்கூல்ல விட கவி அப்பா போட்டு வாறன் பின்னேரம் மாமா வீட்ட போறம் தானே? ஓம் போறம். மூன்றரைக்கு வெளில வந்து நில்லுங்கோ கவி அப்பா வாறன் ஏத்த. அப்பா வேலைக்குப் போய் நிம்மதியாய் வேலை செய்திட்டு வீட்ட வாறார்.


அப்பா தேத்தண்ணி ஊத்துப் பட்டதுக்காக கோபப்பட்டுக் கத்தினார். அப்பிடி கத்தாம கவியை இனிம இப்பிடிச் செய்யக் கூடாதெண்டு சொல்லியிருக்கலாம்.


இப்பத்தான் 90:10 தெரியுமே.. . யாராவது உங்களைப் பற்றி குறைவாச் சொன்னா உடன நீங்கள் எந்த விதத்திலயும் குறையப் போறதில்லை. உடனே ஆத்திரப்பட்டுசத்தம் போட்டால் வீணா மனஉளைச்சல் தான் மிஞ்சும். அவசரத்தில செய்யுற எதுவுமே நல்ல முடிவைத் தாறதில்லை.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சும்மாவா சொல்லி வைச்சிருக்கினம்?அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டிட்டு பிறகு கவலைப்படுறது. மேலாளரோட சண்டை பிடிச்சிட்டு வேலையை விட்டிட்டு வாறது. பிறகு வேலை போச்சே என்று கவலைப்படுறது.கவலைப்படுறத விட்டிட்டு அடுத்த வேலையைத் தேட அந்தச் சக்தியை பயன்படுத்தச் சொல்லித்தான் 90:10 சொல்லுது.


நண்பர்களோட வாக்குவாதப்படுவானேன் பிறகு அநியாயமா நல்ல ஒரு நட்பைத் தொலைச்சிட்டன் என்று புலம்புவானேன்?என்ன காரியம் செய்ய முதலும் 90:10 கொள்கையை ஒரு கணம் ஞாபகப்படுத்தி இனிமேலாவது நல்லாயிருப்பமே.


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்:-)

Thursday, May 04, 2006

இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்..




சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது.இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிற சந்தர்ப்பம் இன்று எனக்கு வாய்த்தது.அதால நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொல்லோணும் என்ன.

அப்ப எனக்கொரு மூன்று வயசிருக்கும்.அம்மாவும் அப்பாவும் வீட்ட இல்லை நானும் அக்காவும் அம்ம்மா வீட்டதான் நின்டனாங்கள்.அம்மாவும் அப்பாவும் வீட்ட வந்திட்டினம் அம்மம்மா சாய்மனைக் கட்டில்ல தடியோட இருக்க நானும் அக்காவும் ஹ_ட்வாசல்ல முழசிக் கொண்டிருக்கிறம்.அம்மா வந்ததுதான் தாமதம் அம்மம்மா போட்டுக்குடுக்கத் தொடங்கிட்டா.

அம்மம்மா: பிள்ளை இஞ்ச வந்து பார் உன்ர பெட்டையள் இரண்டும் என்ன செய்திருக்குதுகள் என்று.

அம்மா: என்ன இண்டைக்கு ஆற்ற ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்?

அம்மம்மா: அதில்லை இன்டைக்கு இரண்டும் சம்பல் இடிச்சு வைச்சிருக்குதுகள்.என்ன சம்பல் தெரியுமே? புவுண் சம்பல்.

அம்மா:என்னம்மா? புவுண் சம்பலோ?

அம்மம்மா:அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து காப்பு சிமிக்கி எல்லாத்தையும் கழட்டி உரலுக்கை போட்டு இடிச்சு வைச்சிருக்குதுகள்.

உரலுக்கு நசிஞ்சு போய்க் கிடந்த எல்லாத்தையும் அம்மம்மா எடுத்துக் கொண்டு வந்து காட்டினா அவ்வளவும் தான் தெரியும் அடுத்த நிமிசம் புக்கத்தில நின்ற செவ்வரத்தையை முறிச்சு இரண்டு பேருக்கும் நல்ல வெளுவை.

அடுத்த திருவிழா ஒரு புpறந்த நாள் விழாக்குப் போட்டு வந்த இரவு நடந்தது.வீட்டுக்குள்ள வரும்வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.அப்பா நல்லாத்தான் கதைச்சுக் கொண்டு வந்தவர்.வீட்டுக்குள்ள வந்த உடன கதிரைல தூக்கி இருத்தினார்.இருத்திப்போட்டு பிரம்பு எடுத்துக்கொண்டு வந்தார்.

அப்பா:இரண்டு பேரும் கையை நீட்டுங்கோ.

நானும் அக்காவும் : ஏனப்பா நாங்கள் ஒரு குழப்படியும் செய்யேல்லயே.

அப்பா: கைய நீட்டைச் சொன்னான்.

இரண்டு பேருக்கும் மூன்று மூன்றடி.

அப்பா: எத்தினாள் சொன்னான் உடைஞ்ச பலூனை வைச்சு விளையாட வேண்டாம்.முட்டை விட வேண்டாம் என்று.பிரவீனாக்கு பலூன் துண்டு தொண்டைல ஒட்டி என்ன நடந்தது என்று தெரியும் தானே.இனிம பலுனைக் கண்டாலே இந்த அடிதான் ஞாபகம் வரோணும்.

ஒரு நாள் நாங்கள் பக்கத்து வீட்டு பிள்ளையள் எல்லாரும் சேர்ந்து உக்கிப் போன மண்ணெண்ணை பரலுக்கு மேல உருண்டு விளையாடினாங்கள்.பரலில படுத்துக்கொண்டு காலால உருட்டினா இது உருளும்.எத்தின பேர் இந்த விளையாட்டு விட்டிருப்பியள்.அதில கிடந்த ஒரு உக்கின இரும்புத் துண்டு அக்காக்கு குத்தி இரத்தம் வந்திட்டுது.டாக்குத்தர் மாமாட்ட போய் மருந்தெல்லாம் போட்டிட்டு வந்திட்டு இரண்டு பேருக்கும் விளாசல் தான்.

பிறகொருநாள் அக்கா நெல்லி மரத்தில ஏறி நின்டுகொண்டு நெல்லிக்காய் ஆய்ஞ்சு போட போட நான் கீழ நின்று பொறுக்கிக் கொண்டு நிண்டனான்.அக்கா ஒருநாள் நான் அங்கர் மா களவெடுத்து சாப்பிட்டத அம்மாட்ட கோள்மூட்டிட்டா அந்தக் கோவத்தில சும்மா அவாவை வெருட்டுறதுக்காக அக்கா நீ நிக்கிற கொப்புக்குப் பின்னால கோடாலிப் பாம்பு நிக்குது என்று ஒரு பொய்யைச் சொன்னன்.அவா பயத்தில பலன்ஸ் இல்லாம தொபுக்கடீர் என்று விழுந்திட்டா.பெரிய உயரம் இல்லை நெல்லி மரம் ஆனால் விழுந்த இடத்தில இருந்த கல்லு உள்ளங்கையில குத்திட்டுது அவாக்கு.அன்டைக்கும் எனக்கு புூசைதான்.

இன்னொருநாள் உப்பிடித்தான் கோயில் திருவிழா நெரிசல்ல "அம்மா அப்பான்ர சைக்கிள் டைனமோவைக் களவெடுத்தது இந்த மாமா தான " என்று நான் கத்திட்டன்.அவருக்கு ஒரு மாதிரிப் போட்டுது.அம்மாக்கு ஏன்தான் என்னை கோயிலுக்குக் கூட்டிக் கொண்டுவந்தம் என்று ஆயிடுச்சு. என்னைக்.கோயிலுக்குள்ள கூட்டிக்கொண்டே போய் இறுக்கி நுள்ளி விட்டா.

இன்னும் நிறைய சளார் பளார் சடீர் எல்லாம் இருக்கு.ஆனால் இனிம நீங்கள் சொல்றதைக் கேப்பம்..நான் நிப்பாட்டுறன் நீங்கள் உங்கட வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்துங்கோ.

-சினேகிதி-

Wednesday, May 03, 2006

உன்னை எனக்குப் பிடிக்கும் என்னை உனக்குப் பிடிக்கும்


நாங்கள் எல்லாருமே தினம் தினம் எத்தின பேரை பார்க்கிறம் பழகிறம் ஆனால் ஒரு சிலரைத்தான் நல்ல நண்பர்களாகவோ காதலன் காதலியாகவோ அல்லது இன்ன பிற உறவுகளாகவோ ஏற்றுக்கொள்ளுறம். ஏன் நாங்கள் சில பேரை மட்டும் நேசிக்கிறோம்? சில பேரை வெறுக்கிறோம்? எங்கட விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கும் அகக்காரணிகள் புறக்காரணிகள் எவை?

முதலாவது காரணம் பரிச்சயம்.ஒரு பொருளாயிருந்தாலும் நபராயிருந்தாலும் ஏற்கனவே பழக்கம் என்றால் கூடுதலான நாட்டம் காட்டுவம்.யாரையும் அடிக்கடி சந்திச்சா அவையிலுள்ள நேசம் மதிப்பு எல்லாம் அதிகமாகும் என்று உளவியல் ஆராய்ச்சியாளர்களான சொல்லினம்.

பல்கழைக்கழக மாணவர்கள் சிலர் ருசி பற்றிய ஒரு ஆராய்ச்சிக்கு என்று சொல்லி கூப்பிட்டுட்டு வேற ஒரு ஆராய்ச்சி செய்தவையாம {இந்த ஆராய்ச்சியாளர்களே இப்பிடித்தான்.மில்கிறம் செய்த அதிகாரிகளுக்கு எவ்வளவு தூரம் ஒருவர் பணிந்து போவார் என்ற ஆராய்ச்சி பற்றி யாருக்குத் தெரியும்? இன்னொருநாள் அதைப்பற்றி சொல்றன்}.ஆராய்ச்சியின் போது ஒவ்வொரு அறையிலயும் போய் ஒவ்வொரு குடிவகையையும் ருசி பார்க்க வேண்டும்.இந்த ஆராய்ச்சியின போது சில பேர் பத்துக்கு மேற்படட தடவைகள் சந்தித்துக் கொண்டார்களாம் சில பேர் ஒன்றிரண்டு தடவைகள் சந்தித்துக் கொண்டார்களாம. ஆராய்ச்சி முடிவில் நடந்த ஒரு சின்ன கணக்கெடுப்பில் ஆராய்ச்சியின் போது நிறைய தடவைகள் சந்தித்துக் கொண்டவர்களை அதிகமாகப் பிடிக்கும் என்றும் குறைய தடைவ சந்தித்தவர்களை குறைவாகப் பிடிக்கும் என்றும் பங்குபற்றியவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதான் " நண்பனே எனக்குக் காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ" என்று ஜோதிகா பாடினவவோ (பாடல் வரிகள் யாற்றயோ தெரியேல்ல). அதிகமாகப் பிடிக்கும் என்றும் குறைய தடைவ சந்தித்தவர்களை குறைவாகப் பிடிக்கும் என்றும் பங்குபற்றியவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதான் " நண்பனே எனக்குக் காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ" என்று ஜோதிகா பாடினவவோ (பாடல் வரிகள் யாற்றயோ தெரியேல்ல).

200 பெண்களிடம் ஒரு 7 வயதுக்குழந்தையின் படமும் அந்தக் குழந்தை பாடசாலையில் மற்றக் குழந்தைகளுடன் சண்டை பிடிப்பது அடிப்பது பற்றிய விபரங்களும் குடுத்திட்டு அந்தக் குழந்தையைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள் என்று கேட்டினமாம்.. இந்த 200 பேரில் சிலரிடம் பார்த்தாலே கொஞ்சத் தோன்றும் அழகான குழந்தையின் படமும் சிலரிடம் வடிவில்லாத குழந்தையின் படமும் குடுத்திச்சினமாம்.(குழந்தைகள் எல்லாம் வடிவுதானப்பா அடிக்க வராதயுங்கோ).வடிவான குழந்தையைப் பார்த்தவை சொல்லிச்சினமாம் ஓ இந்தப்பிள்ளையைப் பார்த்தால் நல்ல பிள்ளையைத் தெரியுது.இந்த வயசுக்கான குழப்படிதானே அதான் மற்றப் பிள்ளையளை அடிச்சிருக்கும் வளர வளர நல்ல பிள்ளையா வரும் என்று.வடிவில்லாத பிளளைன்ர படத்தை பார்த்தாக்கள் சொல்லிச்சினமாம் ஓ இதப்பார்த்தாலே தெரியுதே இது கூடப்படிக்கிற பிள்ளையளுக்கெல்லாம் அடிக்கிற நுள்ளுற பிள்ளைதான்.அதின்ர கண்ணப் பாருங்கோ இது வளர்ந்தும் ஒரு காவாலியாத்தான் வரும் என்று சொல்லிச்சினமாம். இதாலதான் ஆசிரியர் ரீச்சர்மாரெல்லாம் வடிவான பிள்ளையளில கூட அன்பாயிருக்கிறவையோ?

ஆ 200 பேரும் பெண்கள் தானே.அவைக்கு புற அழகுதான் முக்கியமாக்கும் என்று சொல்ற ஆக்களுக்குத்தான் இது. 60 ஆண் மாணவர்களிடம் மாணவிகளின் கட்டுரை ஒன்றை மதிப்பீடு செய்யக் குடுத்தார்களாம். கட்டுரைத்தாளில நல்ல வடிவான மாணவிகளின் படமும் கொஞ்சம் வடிவான மாணவிகளின் படமும் இணைத்துக் குடுத்தவை ஆனால் எல்லாருக்கும் குடுத்த கட்டுரை ஒரே கட்டுரை.நல்ல வடிவான ஆக்கள் எழுதின கட்டுரைக்கு நிறைய புள்ளிகள் வாரி வளங்கினார்களாம்.இதையெல்லாம் தெரிஞ்சதாலதான் பல்கழைக்கழகங்களில் TA ஆக வாற ஆக்களுக்கு பயிற்சி வழங்கும்போது இந்த மாதிரியான தேர்வு எல்லாம் வைக்கிறது.கட்டுரைகள் மற்ற தேர்வுத்தாள்கள் திருத்தக் குடுக்கும்போதெல்லாம் கவர் பேஜ் ஐ எடுத்து வச்சிட்டுத்தான் திருத்தோணும் என்று சொல்லிக் குடுக்கிறவை.எத்தினபேர் அத எல்லாம் கடைப்பிடிக்குதுகளோ யாருக்குத் தெரியும். இத விட மோசமான கண்டுபிடிப்பு என்னென்றால் நீதிமன்றத்தில தீர்ப்பு வழங்கும் போதும் இந்த புற அழகு ஒரு காரணியாயிருக்கென்று உளவியளல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லினம்.வடிவான ஆக்களுக்கு கிடைக்கிற தண்டனை வடிவில்லாத ஆக்களோட ஒப்பிடும்போது குறைவாயிருக்காம்.

ஓராளை பிடிச்சுப்போக இன்னொரு காரணம் பழக்கவழக்கங்களிலும் குணாதிசயங்களிலும் உள்ள ஒற்றுமை.எங்களை மாதிரி கதைக்கிற யோசிக்கிற ஆக்களைப் பாரத்தா அவைய எங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? ஆதி படத்தில மழையில ஐஸ்கிறீம் குடிக்கிறதால விஜய திரிசாவுக்குப் பிடிக்கும் அப்பிடித்தான் இதுவும் ஹா ஹா.

மற்ற காரணம் நாங்கள் நேசிக்கிற நபர் எங்களை நேசிக்கிறாரா இல்லையா என்றது.சில பேரை முதற்சந்திப்பிலயே பிடிக்கும்.சில பேரை வாழ்நாள் முழக்கப் பிடிக்காது.சில பேரை ஆரம்பத்தில பிடிக்காட்டிலும் பழகப் பழக பிடிக்கும்.ஒரு ஆராய்ச்சியின் போது ஒராளைப் பற்றி இன்னொராள் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள வச்சார்களாம்.உதாரணமா என்னப் பற்றி நீங்கள் ஒராளுக்கு சொல்றதை நான் உங்களுக்குத் தெரியாம கேட்டுக்கொண்டிருக்கிறன் என்று வைப்பமே:

1.நீங்கள் என்னப் பற்றி நல்லதா எதுவுமே சொல்லேல்ல.
2.என்னப் பற்றி எல்லாமே நல்லதாத்தான் சொன்னீங்கள்.
3.நல்லதாச் சொல்லத் தொடங்கி கடைசியா பிளேற்ற மாத்தீட்டிங்கள்.
4.கெட்ட குணங்களைச் சொல்லி ஆனால் சினேகிதி நல்லவா அவாட்ட நிறைய நல்ல குணங்கள் இருக்கு என்று என்ர நல்ல குணங்களைச் சொல்லி முடிக்கிறீங்கள்.

என்னப்பற்றி நல்லதா சொல்லி கடைசில கவுத்த ஆளைத்தான் நான் அதிகமா வெறுப்பன்.அதே நேரம் குறையைச் சொல்லத் தொடங்கி நிறைகளைச் சொல்லி முடிச்ச ஆளைத்தான் அதிகமாக நேசிப்பேன்.மற்ற இரண்டு ஆக்களும் இந்த இரண்டு பேருக்கும் இடையில வருவினம்.

கடைசிக் காரணி என்னென்றால் ஒராளைப் பற்றி எங்களுக்கு முதல்ல என்ன தெரிய வருதோ அதை வச்சுத்தான் எங்களுக்கு அந்த நபரை எவ்வளவு பிடிக்கும் பிடிக்காது என்று தீர்மானிக்கிறமாம்.அதான் நேர்முகத் தேர்வுப் போகும்போதெல்லாம் அறிவுரை சொல்வார்களே.ஒரு ஆராய்ச்சியின் போது ஒராளைப் பற்றிய விபரம் இரண்டு பந்தியில எழுதி கொஞ்ச ஆக்களிட்ட குடுத்தினமாம்.அரைவாசிப் பேரிட்ட குடுத்த விபரத்தில் முதலாவது பந்தியில் ஒருவரின் நல்லியல்புகளிருந்தன.மற்றாக்களிட்ட குடுத்த விபரத்;தில முதல் பந்தியில கெட்ட இயல்புகளையும் இரண்டாவது பந்தியில நல்லியல்புகளையும் சொல்லியிருந்தார்கள்.முதல்ல நல்ல குணங்களை வாசிச்சவையில 78% ஆக்கள் ல அந்த X ஐ நல்லவன் என்று சொல்லிச்சினமாம்.கெட்ட குணங்களை முதல்ல வாசிச்சவையில 18% ஆக்கள் அந்த X ஐ நல்லவன் என்று சொல்லிச்சினமாம்.

-சினேகிதி-

Thursday, March 09, 2006

உருகுதே உருகுதே ....















கண்டேன் கண்டேன்
சூரியனைக் கண்டு உருகி உச்சி
குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு
சிலிர்க்க கண்டேன் -அது
ஆதவன் அணைப்பில்
சிணுங்கவும் கண்டேன்


சினேகிதின்ர குட்டிக்கவிதை எப்பிடி இருக்கு ?

Sunday, February 26, 2006

நட்சத்திரங்கள் என் சொந்தம்


{எல்லாருக்கும் வணக்கம்.கனநாட்களுக்குப்பிறகு தமிழ்மணப்பக்ம் வாறன்.எல்லாரும் நலமா?என்னை மறக்கேல்ல தானே:-)}



நகைச்சுவைக்கதம்பத்தில் "தேவதையைக் கண்டேன்" படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி.

"என்ன பாபு சைக்கிளுக்கெல்லாம் போர்வை போர்த்து விடுறாய்...ஆ கொசுவர்த்தி வேறயா..முத்தமா...வயித்தெரிச்சலைக் கிளப்பிறாங்களே.."

"பின்ன அது உமா வாங்கிக் கொடுத்த சைக்கிள்."

அடுத்த காட்சியில் தனுஸ்... நட்சத்திர யன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார். ஏனென்று கேட்டால், அந்தப் பாட்டில்தானே தேவயானியும் சரத்குமாரும் ஓகோ என்று பெரியாட்களானாவையாம்.

நேற்றைய நாள் எனக்கு அந்த நகைச்சுவைக்காட்சில தான் தொடங்கினது.விருந்தினர்கள் என்னறையில தங்கியிருந்ததால் நான் நேற்று தங்கச்சியின்ர அறையிலதான் தூங்க வேண்டியிருந்தது. கன காலத்துக்குப்பிறகு யன்னலோரமாய் நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் தூங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறன். பக்கத்தில அம்மாவேன்ரே அறையில இருந்து நட்சத்திர இரவு வானொலி நிகழ்ச்சி காற்றோடு கலந்து வந்தது.

இப்படி நேற்றைய பொழுதில் நட்சத்திரங்கள் பலமுறை வந்து போனதால் இரவுப்பொழுதிலும் நட்சத்திரங்களுடன் எனக்குண்டான உறவு பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உலா வரத் தொடங்கின.

நானே ஆச்சரியப்படும்படி மூன்று நான்கு வயதில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அண்மையில் நடந்த மாதிரி கண்ணெதிரே வந்து போயின.

அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். பாலா அங்கிள் பரா அன்ரி சுந்தி மாமா சாந்தன் மாமா இன்னும் சிலர் இரவு கூடியிருந்து எனக்கு அப்ப விளங்காத பெரிய பெரிய கதையெல்லாம் கதைப்பினம். அம்மா பழங்களரிந்து தருவா. கொண்டே குடுத்திட்டு பரா அன்ரின்ர மடியில இருந்து, “அப்பிடியென்டாலென்ன.. ஏன் அப்பிடிச் சொன்னவை?” இப்பிடி வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருப்பன். என்ர வாயை மூட அவாவும் ஏதாவது சொல்லிச் சமாளிப்பா.

பரா அன்ரிதான் எனக்கு முதல் முதலாக நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தவா. “அங்க பாரு, அதில நல்ல வெளிச்சமா தெரியுது அதான் சுக்ரன்.. விடிஞ்சாப் பிறகும் அந்த நட்சத்திரம் இருக்கும்... அங்க பார,; அதில ஒரு வேட்டைக்காரன் அம்பு விடுற மாதிரி இருக்கு. இங்க பார், விருச்சிகம்..” இப்பிடியெல்லாம் சொல்லுவா.

சின்னப்பிள்ளையளிட்ட ஒரு பிடிவாதக்குணம் இருக்கும். தாங்கள் நினச்சதைதான் செய்வினம்... சொல்லுவினம். ஒரு இரண்டு வயசுப் பிள்ளைக்கு ஒன்று இரண்டு சொல்லிக் கொடுத்திட்டு, அடுத்த நாள் “அச்சாக்குட்டியெல்லே... ஒன்று இரண்டு சொல்லிக் காட்டுங்கோ” என்று கேட்டுப்பாருங்கோ. “ஆ ஆ ஆ” என்று காது கேக்காத மாதிரி இருப்பினம்... வாற விசரில நீங்கள் திரும்ப ஒன்று இரண்டு சொல்லச் சொல்லிக் கேக்கமாட்டிங்கள்.. ஆனா தங்களுக்கு விருப்பமான நேரம் தங்கடபாட்டில சொல்லுப்படும்.. “ஒன்ரு ரன்று மூன்ரு..”

அதைப்போல நான் பரா அன்ரிக்கு மட்டும்தான் குட்நைற் சொல்லுவனாம். பரா அன்ரி கொஞ்ச வருசத்தில யாரோ சுட்டுச் செத்திட்டா. நான் நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவான்ர ஞாபகம்தான் வரும.;
எல்லாற்ற ஊரிலயும் ஒரு கோயில்... கோயிலுக்கு முன்னால ஏதோ ஒரு மரம் இருக்கும். அப்பிடித்தான் எங்கட ஊரிலயும் ஒரு பிள்ளையார் கோயில். முன்னால ஒரு பலாமரம். அங்கதான் ஊராக்கள் இரவு இருந்து விடுப்புக் கதைப்பினம். நான் அக்கா, சுபாசினி, சுஜி, சிந்து, கவி, யனா, நிமல், டொம்மா... இப்பிடி நிறையப் பேர்.

எங்கள எல்லாம் விளையாட விட்டுப்போட்டு அங்கால அம்மாக்களின்ர மகாநாடு நடக்கும். அப்ப பரா அன்ரி எனக்குக் காட்டின நட்சத்திர உருவங்கள் பற்றியெல்லாம் நான் என்ர குறூப்புக்கு சொல்லிக்கொண்டிருப்பன். பிறகு அக்கான்ர குறூப் ஒருபக்கம், சின்ன குறூப் ஒருபக்கம் பிரிஞ்சு விளையாடுவம். இதையெல்லாம் நினைச்சா அது ஒரு அழகிய நிலாக்காலம்தான்.

சண்டை நடக்கும்போதும் நாங்கள் ஒரு அஞ்சு குடும்பம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பங்கர் கிண்டினாங்கள். சண்டை நேரத்தில அந்த பங்கர்தான் எங்களுக்குப் பள்ளிக்;கூடம். விளையாட்டுத்திடல் எல்லாம். திருவலகை, திரிபோசா, மா, சீனி.. ஹி ஹி... அதான் சாப்பாடு. அங்க யாரும் செல் விழுந்து சாகேல... தப்பித் தவறி விழுந்திருந்தா எல்லாரும் சேர்ந்து செத்திருப்பம்.

வேப்ப மரத்துக்குக் கீழதான் பங்கர். பங்கருக்குப்போற வழி வீட்டில இருந்துதான் துவங்கும். வெளீல நிண்டு பார்த்தா பங்கர் இருக்கெண்டே தெரியாது. அப்பிடித்தான் ஒருநாள் பயங்கரச்சண்டை. புக்காரா சகடை எல்லாம் இரைஞ்சுகொண்டு போனது. செல் கூவிக்கொண்டு போனது.
அடுத்த நாள் ஒரே அமைதி. பார்த்தா நோட்டீஸ் விட்டிருக்கு. வடமராட்சி சனம் எல்லாம் தென்மராட்சிக்குப் போகவேணுமாம். ஊராக்களுக்குப் போற எண்ணமே கிடையாது. நாங்கள் ஒரு காலமும் வெளிக்கிட்டதில்லை.. இந்தியன் ஆமி வந்தநேரம்கூட நாங்கள் இங்கதானே இருந்தனாங்கள் என்று எல்லாரும் கதை. நாங்கள் எங்கட பாடு.

எங்களுக்கெல்லாம் அப்ப அது ஒரு பம்பல் மாதிரி. ஆக்கள் கூடியிருக்கிறதே ஒரு விளையாட்டு மாதிரி. ‘போறேல்ல’ என்று முடிவெடுத்த உடனே அம்மாக்கு கண்ணெல்லாம் கலங்கிட்டுது.

இந்தியன் ஆமி வந்தநேரம் அக்காக்கு கால்ல செல் பட்டதால அம்மாக்கு பயம். சரியெண்டு எல்லாரும் சாவகச்சேரிக்குப் போறதெண்டு முடிவாச்சு. இரவு ஒன்றரைக்கு மாமாவோட நானும் அக்காவும் அம்மாவும் அன்ரியும் ஒரு சைக்கிள்ல. இப்பிடி எல்;லாரும் சேர்ந்து சைக்கிள்ல வெளிக்கிட்டம். எங்கயோ ஒரு இடத்தில கொஞ்ச நேரம் நின்றிட்டு திரும்பக் கொஞ்ச நேரம் சைக்கிள உருட்டிக்கொண்டு போனம். ஆமிக்காரன்ர பரா லைற் வெளிச்சம் மாறி மாறி வந்துகொண்டு இருந்திச்சு.

சில பேர் கதைச்சுக்கொண்டு வந்தினம். சில பேர் வீட்டில இருக்கிற ஆட்டுக்குட்டி கோழிக்குஞ்சையெல்லாம் நினைச்சுக்கொண்டாக்கும் மௌனமா நடந்தினம். நான் சைக்கிள்ல சொகுசா இருந்துகொண்டு நட்சத்திரங்களோட கதை.

“அம்மா, பரா அன்ரி சொன்ன அந்த வேட்டைக்காரனைக் காணேல்ல.”

“வாய மூடிக்கொண்டு வாடி.. சும்மா நொய் நொய் எண்டு கொண்டு.. நாளைக்கு உயிரோட இருப்பமோ தெரியேல்ல, இப்பத்தான் வேட்டைக்காரனைத் தேடுறா.”

நாங்கள் சாவகச்சேரிக்குப் போய் மாமாவீட்டதான் இருந்தனாங்கள். பக்கத்து வீட்டில தயா என்றொரு பெடியன். மனவளர்ச்சி குன்றியதால அவன் செய்யிற வேலையெல்லாம் சிரிப்பா இருக்கும். சாத்திரம் சொல்லுறன் என்று போட்டு திருநீறு எடுத்துகொண்டுவந்து எதிர்பார்க்காத நேரம் தலையில கொட்டிப்போடுவான். சில நேரம் வீட்ட நின்றிட்டு சொல்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு ஓடிடுவான். அங்க இருந்த ஒரு மாதமும் தயாதான் கூட்டு. நாங்கள் திரும்ப ஊhருக்கு வர தயாவையும் வேற எங்கேயோ போட்டினம்.
அங்க இருந்த நேரம் பலா மரத்தில ஏறி பலாப்பழம் புடுங்கியிருக்கிறன்" :-) எங்கட ஊரில எல்லாம் பலா மரம் இல்லை.

ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ விஞ்ஞானப் புத்தகத்தில நட்சத்திரக்கூட்டங்கள் உருவங்கள் பற்றி ஒரு பாடம் இருக்கு. அப்ப புத்தகத்தில போட்டிருப்பினம், ஆசிரியர் மாணவர்கள் இரவுவேளையில் ஒன்று கூடி நட்சத்திரங்களைப் பற்றிப் படிக்கிறதென்டு... அக்கா வேற அப்பிடி ஒருநாள் இரவு போனவா. அதால நான் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனான். என்ர வயசு பிள்ளைகள் குடுத்து வைக்கேல்ல போல. ஊரில சண்டையும் ஊரடங்குச்சட்டமும் மாறி மாறி வாறதால இரவு போயிருந்து வான் வெளியில நட்சத்திரங்களையும் வால் நட்சத்திரத்தையும் பார்க்கிற நாள் எங்களுக்கு வரவே இல்லை.

இப்பிடி நட்சத்திரங்களுடனான என் உறவு வெளிநாடு என்று வெளிக்கிட்ட பிறகு நிலவறை வாழ்க்கையில் துண்டிக்கப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு தூங்கச்சென்றதால், நான் மேல சொன்ன ஞாபகங்கள் எல்லாம் வந்து போயின... அந்தக் கொஞ்சநேர சந்தோசம்கூடப் பொறுக்காமல் பனி கொஞ்சம் கொட்டத்தொடங்க நட்சத்திரங்கள் என்னோடு விடைபெறாமலே போய்விட்டன.

ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்.
ம்... கனக்கக் கதைக்க வேணும். அந்த நாள் எப்ப வருமோ? :)


-சினேகிதி-

Friday, January 13, 2006

நிறம்


ஒரு நாள் ஒரு பிறவுண் நிற ஆள் கடை ஒன்றில தேத்தண்ணி வாங்கி குடிக்கப் போனாராம் அப்ப அங்க இருந்த எல்லாரும் வெள்ளையாக்களாம்.பக்கத்தில நின்ற வெள்ளையாள் சொன்னாராம் நிற ஆக்களை யாருள்ளுக்க விட்டது என்று.


உடன அந்த பிறவுண் ஆள் அவரைப் பார்த்து சொன்னாராம் நான் பிறக்கும்போதே பிறவுண்தான் வளரும்போதும் பிறவுண்தான்.வருத்தம் வரும்போதும் பிறவுண் தான்.வெயிலிலும் பிறவுண்தான் பனியிலும் பிறவுண்தான்.இறக்கும்போதும் பிறவுண் தான்.

ஆனால் நீங்கள் பிறந்தபோது பிங் வளரும்போது வெள்ளை வருத்தம் வந்தா பச்சை வெயில்ல சிவப்பு குளிரில நீலம்/சிவப்பு இறக்கும்போது நாவல். ஆனால் மற்ற ஆக்களில நிறம் பார்க்கிற வல்லமை உங்களிட்ட இருக்கு என்று சொல்லிப்போட்டு தேத்தண்ணி குடிக்கத் தொடங்கினாராம்.

-From a Fwd-
Pic from: http://fakoamerica.typepad.com/photos/uncategorized/racism.jpg