Custom Search

Monday, March 26, 2007

என்று தணியும்....

நேற்றொரு நண்பன் MSN ல் "வான்படை எழுந்தது சிங்களம் திகைத்தது" என்று போட்டிருந்தான். பலவருடக்கனவு இப்பத்தான் நிறைவேறியிருக்கிறது.ஒரு ஈழத்தமிழ் மகளாக சந்தோசப்பட்டாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ குறிப்பிட்டுச்சொல்ல முடியாதவோர் உணர்வும் கூடவே சேர்ந்தே வருது.ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது போர் ஒரு முடிவுக்கு வரும்..தமிழீழம் கிடைக்கும் ஒருநாள் நிம்மதியாய் ஊருக்குப்போகலாம்.மீண்டும் கிட்டததட்ட பத்து வருடங்களாகப் பிரிந்துபோன நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பழையபடி ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோசமாய்க் கழிக்கலாம் என்ற ஆசை கொஞ்சம் கொஞ்சமா தூர்ந்து போறமாதிரி ஒரு உணர்வு.

இராணுவம் செய்த மாதிரி சிறார்களையோ பாடசாலைகளையோ தொழுகைத்தலங்களையோ குண்டுபோட்டு நம்மவர் அழிக்கவில்லைத்தான் இருந்தாலும் இறந்துபோன மூன்று அதிகாரிகளின் உயிருக்குப்பலியாக இப்பவோ எப்பவோ கொழும்பிலும் அருகிலுள்ள சிங்கள மக்கள் அதிகமாக செறிந்து வாழும் மாத்தளை , கண்டி போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் இனி தினமும் நடுக்கத்துடன்தான் அன்றாட வேலைகளைச் செய்யமுடியும்.எந்த நேரம் யாருக்கு இனவெறி வரும் யாரைக்கொல்வார்கள் யாரைச்சூறையாடுவார்கள் என்ற அச்சம் இருந்துகொண்டேயிருக்கும்.

எட்டு வருடங்களுக்கு முதல் நான் மாத்தளையில் வசித்தபோது ஒரு சமரில் மடிந்த ஒரு இராணுவ வீரரின் பூதவுடல் நாங்கள் வசித்த பகுதியிலிருந்த சகோதரியின் வீட்டுக் கொண்டுவரப்பட்டது.எங்களைப்போல அவர்கள் அழவில்லை மாறாக அரசாங்கத்தையும் பணத்துக்காக மகனை இராணுவத்தில் சேர்த்துவிட்ட தந்தையையும்தான் திட்டினார்கள்.இருந்தாலும் இருந்த ஒரே அண்ணனைப் பறிகொடுத்த சோகத்தை அவர்களுடைய கண்ணில் காண முடிந்தது.நடக்க இருந்த பபிதாக்காவின் திருமணமும் தள்ளிப்போனது.

குடும்பத்திலுள்ள ஒரு உயிரைத் தற்காலிகமாகப் பிரிவதும் நிரந்தரமாகப் பிரிவதும் கொடுமையானது.அதை நான் சொல்லிப்புரிய வைக்கவேண்டியதில்லை..அந்த வலியை ஒருமுறையாவது நாம் அனுபவித்திருப்போம்.இப்போது நாட்டுக்காக வீட்டுக்கொருவரைப் போராட அழைக்கிறார்கள்.இது நான் பிறந்தது முதலே நடந்துகொண்டுதானிருக்கிறது.மாமா, சித்தப்பா என்று தொடங்கி அண்ணா, அக்கா என்று போராட்டத்தில் இணைந்து மாவீரர்களானார்கள்.பிறகு கூடப்படித்தவர்களும் அந்தவழியிலே போய்விட்டார்கள. ஒருவர் போராடப்போயாவது குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரு சில உயிர்களையாவது தமிழீழம் மலரும்போது நிம்மதியாக வாழவைக்க முடியும் என்ற நம்பிக்கையால் இப்ப தம்பி தங்கை மாரை பெற்றோரே போராட்டத்தில் இணைத்துவிடுகிறார்கள்.

இன்று இங்க சரியான மழை...காலையிலிருந்து ஒரே இடியும் மின்னலும்.காலையில் பஸ் எடுக்கச்செல்லும்போதுதான் முதலாவது இடிச்சத்தம் கேட்டது.உடனே மனசு கனடாவலிருந்த ஊருக்குப்போய்விட்டது.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலாய் குண்டுச்சத்தம் கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறன்.பாலர் வகுப்புப் படிக்கேக்க தூரத்திலதான் குண்டுச்சத்தம் கேக்கும் எங்கயோ சண்டை நடக்குது என்று பேசாமல் இருப்பம்.பிறகு பிறகு பக்கத்திலயே ஆமி வந்திட்டான்.எந்தப்பக்கம் சூடுச் சத்தம் கேட்டாலும் அம்மா, அம்மம்மா சத்தம் கேட்ட பக்கத்தில இருக்கிற சொந்தக்காரரை தெரிஞச்hக்களை நினைச்சு கடவுளே அவைக்கு ஒன்றும் நடக்கக்கூடாதென்று உள்ள எல்லாக்கடவுள் மாரிட்டையும் கெஞ்சுவினம்.பிறகு வளர வளர எல்லாமே பழகிப்போச்சு.குண்டுச் சத்தம் கேட்டாலும் பயம் இல்லாமல் போயிற்று.ஒருமுறை பாடசாலையில் ஆறாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று பயங்கர சத்தங்கள்.அந்த நேரம் வெளியில நின்டனாங்கள் எங்கட வகுப்பில எல்லாரும் உடன கீழே விழுந்து படுத்திட்டம்.செல் கூவிக்கொண்டு போறது தெரியுது.அன்றைக்கு நெல்லியடி சென்றஸ்கூல் பள்ளிக்கூடத்துக்கருகில் இரு தரப்பினரும் சந்தித்துக்கொண்டதாலதான் அந்த அடிபாடு.கொஞ்ச நேரத்தில ஸ்கூல் விட்டிட்டுது.வீட்ட போய்க்கொண்டிருக்கிறம் கொஞ்ச ஆக்கள் சேர்ந்து.வீட்டுக்கு கிட்டப் போட்டம்.ஸ்கூலடியிலதான் சண்டை என்று கேள்விப்பட்டு எல்லாற்ற அம்மாமாரும் கோயிலடியில வந்து எங்களைக் காணேல்ல என்று கவலைல பார்த்துக்கொண்டு நிக்கினம் நாங்களும் பாலத்தால இறங்கிறம் சைக்கிள்ல, எங்களுக்கு மேல வந்த ஹெலியில
இருந்து நெருப்புப்பொறி விழுந்து மேல கறன்ட் வயர்ல பட்டு வயர் தொங்கிக்கொண்டு வருது அப்ப நினைச்சம் நாங்கள் எல்லாரும் சாகப்போறம் என்று ஆனால் ஒருதருக்கும் ஒன்றுமே நடக்கேல்ல.

எங்கட வீடுதான் கடைசி வீடு அதால எங்கட வீட்டு முன் பக்க மதிலால பார்த்தா மெயின்றோட்டால ஆமி போறதையும் பார்க்கலாம்.வீடுகளுக்கு அடுத்து தோட்டங்கள்.தோட்டங்கள் முடியிற இடத்தில ஒரு சின்னத்தெரு ..அதாலதான் அண்ணைமார் போய் வாறவை.பின் பக்க மதிலடியில வந்துநின்று ஆமி ரோந்து போறதை நோட்டம் விடலாம்.அப்பிடி ஒருநாள் சிலபேர் வந்துநின்று பார்த்துக்கொண்டு நிண்டதை ஹெலி கண்டிட்டுதோ இல்லை சும்மா சுட்டாங்களோ தெரியாது சுடத்தொடங்கிட்டினம்.அந்தநேரம் பார்த்து நான் சிவப்புக்கலர் தண்ணிக்கானோட நின்டனான் முத்தத்தில..அம்மா நினச்சா நான் அதில படம் காட்டிக்கொண்டு நின்டதாலதான் சுட்டதென்று எனக்கு நல்ல பேச்சு.ஏற்கனவே எண்பத்தேழாம் ஆண்டு ஹெலி அடிச்சதில அக்காக்கு காலில காயம் பட்டு திரும்ப திரும்ப வெட்டி வெட்டி ஒரு அரிசியளவில் சன்னங்கள் எடுக்கிறது.அப்ப எனக்கும் அப்பிடி நடந்திடும் என்று கவலைல எனக்கு அடியும் விழுந்திச்சு.

காயம் பட்டாக்களுக்கு உடன தெரியாதாம்.அக்காக்கு காயம் பட்டதே தெரியாதாம்.அவாக்கு அப்ப என்ன 6 வயதிருக்கும்.விளையாடிக்கொண்டு நிண்டவவாம்.ரத்தக்கறையைப்பார்த்திட்டு யாருக்கு காயம் என்று தேடித்தான் அக்காக்கு காயம் பட்டிருக்கென்று கண்டுபிடிச்சவையாம்.பல வருடங்களுக்குப்பிறகு 95 ல் என்று நினைக்கிறேன்..அக்கா ஒருநாள் ஸ்கூhல வந்து அம்மா மொழிக்குப் பக்கத்தில ஏதேப உருளுது என்று சொல்லிப் பக்கத்து வீட்டு டொக்டர் அங்கிள் வீட்ட போனா அவரும் பார்த்திட்டு ஓம் பிள்ளை ஏதோ கிடக்கு என்று சொல்லி கொஸ்பிற்றலுக்குக் கொண்டுபோய் திரும்ப வெட்டி ஒரு ஒருசதம் அளவுக்கு இன்னொரு செல் துண்டு கிடந்து எடுத்தது.அம்மா அதைப் பத்திரமா வச்சிருந்தவா பிறகு ஊரை விட்டு வெளிக்கிடும்போது எறிஞ்சு போட்டா.

சாவகச்சேரியில கவிதா மச்சாளின்ர அப்பா குண்டு பட்டு இறந்திட்டார் என்று செத்த வீட்டுக்குப் போனம்.அவேன்ர வீட்டைக் கண்கொண்டு பார்க்கேலாது.100 இடத்தில ஓட்டை கிடந்திச்சு.அவை சன்னங்கள் எல்லாத்தையும் பொறுக்கி ஒரு லாச்சி நிறையச் சேர்த்து வச்சிருந்தவை.

பங்கரில ஒளியுறதைப் பற்றியும் சயந்தனண்ணா எழுதியிருந்தார்.எங்கட வீட்டில பங்கரே இல்லை.டொக்டர’ அங்கிள் வீட்டு வேப்ப மரத்துக்கு கீழ ஒரு பெரிய பங்கர் அங்கதான் அந்த ஏரியாவில இருக்கிற நிறைய ஆக்கள் வருவினம் பங்கரில ஒளியுறதுக்கு.ஆனால் எங்களுக்கு அது ஒரு விளையாட்டிடம் மாதிரி.திருவலகை கொஞ்சச் சாப்பாட்டு சாமான் எல்லாம் அதுக்குள்ள இருக்கும்.பொரிவிளாங்காய் ஞாபகம் இருக்கா? கடிச்சாலும் கடிபடாது.தொடர்நது குண்டடிபட்டா அன்றைக்கு முழுக்க பங்கருக்குள்ளதான் எல்லாரும்.ஆனால் பெருசுகள் எங்களைச் சத்தம் போடாம இருக்கச்சொல்லுவினம் நாங்கள் எங்கட பாடு.

ஒருநாள் ஊராக்கள் எல்லாரும் நிலா வெளிச்சத்தில கோயில் வாசல்ல இருக்கிற பலாமரத்துக்கு கீழ இருந்து கதைச்சுக்கொண்டிருந்தம்.சில நேரம் சாமம் சாமமா அதில இருந்து கதைப்பம்.அப்பிடி ஒருநாள்தான் 91 என்றுதான் நினைக்கிறன்.ஹெலில அறிவித்தல் வந்திச்சு எல்லாரயும் தென்மராட்சிக்குப் போகச்சொல்லி.ஊரில இருக்கிறாக்கள் ஒருதரும் வெளிக்கிடுற பிளானில்லை.கடைசியா வேறவழியில்லாம சாவகச்சேரிக்குப்போனம்.இடம்பெயர்ந்தது அந்த அனுபவம் மட்டும்தான்...இதைப்பற்றிப் பிறகு எழுதணும்.

உண்மையா இன்றைக்கு எழுத நினைச்சது வேற.அதயும் சொல்றன்.போர் என்று ஒன்று இல்லாம இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று யோசிச்சுப்பார்த்தன்.

இப்ப என்னோட படிக்கிற நண்பர்கள் சிலர் நாங்கள் சின்னவயசில இருந்தே நண்பர்கள் என்று சொல்லும்போது எரிச்சல் எரிச்சலா வருது.நாங்களும்தான் சின்ன வயசில இருந்தே பல கனவுகளோட ஒன்றாய் வளர்ந்தோம் படித்தோம் ,அழுதோம், சிரித்தோம் ஆனால் இப்ப பிடுங்கி நடப்பட்ட செடிகள் போல எங்கெங்கயோ வாழுறம்.ஜெசி ,ஜெயந்தி, வாசு, வசா ,லுசா ,வித்தி ,கோதா, கார்த்தி இப்பிடி ஒரு குறூப்.எல்லாரும் அஞ்சு ஆறாம் வகுப்பில இருந்தே ஒரே யுனிவர்சிற்றுக்குப்போவம் என்ற கனவில திரிஞ்சனாங்கள்.சொன்னா நம்பமாட்டிங்கள்.எங்களில நிறையப்பேர் பத்துப் பதினொரு வயதிலயே இது ஹொஸ்டல்ல போயிருக்கும்போது பாவிக்க என்று நிறைய பொருட்கள் வாங்கி வச்சனாங்கள்.ஆனால் இன்றைக்கு நானிங்க.மற்றவர்களும் எங்கயோ எல்லாம் சிதறிப்போயிருக்கிறம்.ஜசி அம்மாக்கு கான்ஸர் வந்து இறந்துபோனதால படிப்பையே நிப்பாட்டிட்டு மற்றவர்களுடைய தொடர்பையும் விடுத்து நத்தைபோல வாழுறாள்.ஜெயந்தி ரெக்னிக்ல் கொலேஜ்ல.வா
சு ஸ்ரீபாதா கொலேஜ், வசா செய்தா மெடிசின்தான் என்று இரண்டாந்தரம் A/L எடுத்து இப்ப யாழ் பல்கலைக்கழகத்தில எப்பவாவது நடக்கிற வகுப்புக்கு போய்க்கொண்டு..வித்தி எங்கயோ சித்தமருத்துவம் படிக்கிறாள்.லுசா பாங்ல வேலை.கோதா கார்த்தி என்ன செய்யினம் என்றே தெரியா.எப்பவாவது ஒரு போன்.அதிசயமா ஒரு கடிதம்.இப்பிடித்தானிருக்கிறம் இப்ப.

அங்க பட்டதாரிகள் என்று மரியாதையாக அழைக்கபட்ட பலர் புலம்பெயர் நாடுகளில் காஸ் ஸ்ரேசனிலும் pizza டெலிவரியும் செய்துகொண்டிருப்துதான் கொடுமை.திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்குப் பௌதீகம் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் இப்ப இங்க ஒரு பக்டரியில வேலை செய்யுறா.ஈழப்போருக்கு உதவி செய்த ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கபட்ட பலர் பெற்றவர்களின் இறுதிச்சடங்கில் கூடக் கலந்துகொள்ள முடியாமல் புலம்பெயர் நாடுகளில் இருந்து புழுங்குவது ஒருவிதக்கொடுமை என்றால் போரால ஏற்படுகின்ற மனவுளைச்சல்களும் வடுக்களும் அதவிடக்கொடுமை.

சிறார்கள் வெளிச்சக்கூடு வாங்கவும் தேவையில்லை.இந்த வெளிச்சக்கூடு பற்றிய பதிவு பற்றி நான் யோசிச்ச விசயமிது.ஆமி மாமா கொஞ்சநேரம் அழுதவர் என்றொரு வரி வரும்.நான் நினைக்கிறன் அவர்களுக்கும் ஒரு மூலையில் கொஞ்ச இரக்க குணம் இருக்கும்தானே அப்ப தாங்கள் இந்தச் சின்னஞ்சிறார்களைச் சீரழிப்பது போலத் தங்கள் குழந்தைககளையும் யாரும் சீரழிக்கக்கூடும் என நினைத்திருப்பாரோ அந்த ஆமி மாமா?

பெண்கள் சூறையாடப்படவும் தேவையில்லை.அந்த ரணத்தோடு உயிர் வாழவும் தேவையில்லை.ஒருமுறை சூறையாடப்பட்டவர்கள் பிறகு சாதாரண வாழ்க்கை வாழுதல் என்பது எவ்வளவு சாத்தியமென்று தெரியவில்லை.பிற்காலத்தில் இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படக்கூடிய மனநிலைபிறழ்தலுக்கு கூட இதுபோன்ற அக்கிரமங்கள்தான் காரணம்.ஆண்களும் எந்தவிதமான வக்கிர சோதனைகளுக்கும் உட்படத்தேவையில்லை.பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்ட்ட சிறுவர்கள் கூட பிற்காலத்தில் ஆக்ரோசமுடைய கணவனாகவோ தந்தையாகவோ மாறுதலுக்குக் கூட சின்ன வயதில் ஏற்பட்ட மாறாத வடுக்கள்தான் காரணம்.

ஊரிலுள்ளவர்களினதும் சரி புலம்பெயர்ந்தவர்களினதும் சரி கல்வி கற்கும் உரிமை நசுக்கப்படத்தேவையில்லை.என்னோட கூடப்படித்த பெடியங்களில் ஒராளைத்தவிர மற்ற எவருமே உயர்கல்வி கற்கவில்லை.ஒன்பது வருடங்களுக்குப்பிறகு தீபன் என்ற நண்பனை ஒரு ஒன்றுகூடலில் சந்திக்கநேர்ந்தது.அன்றுதான் தெரிந்துகொண்டேன் பலர் போராட்டத்தில் இணைந்திருப்பதையும் சிலர் பாதுகாப்புத்தேடி துபாய் போன்ற நாடுகளில் வேலை செய்துகொண்டிருப்பதையும்.கனடாவிலிருக்கிற தீபனாவது படிக்கிறான் என நினைத்தேன் ஆனால் அவனும் மலேசியாவில் வேலை செய்துகொண்டிருந்துவிட்டு இப்பத்தான் இங்க வந்ததாம் இனிம கடனையடைக்க இரண்டு வேலை செய்யவேண்டுமாம்.நான் குறிப்பிட்டவர்களெல்லாம் எங்களோடு எப்பவுமே எல்லா விசயத்திலயும் போட்டி போடுபவர்கள்.எங்களைப்போலவே பல கனவுகளுடனே படித்தவர்கள் தான்.

சில தினங்களுக்கு முன்னர் இங்குள்ள ஒரு யுனிவர்சிட்டியில் நடந்த ஒரு நிகழ்வின்போது விடுதலையைப் பற்றி ஒரு றாப் பாடல் பாடியதற்காக சில தமிழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.அவர்கள் விடுதலையானது பற்றி இன்னும் தெரியவில்லை.

உயிர்ச்சேதங்களைப்பற்றியும் அம்மா அப்பா இல்லாது வளரும் குழந்தைகளைப்பற்றியும் சொல்லவே தேவையில்லை.போரால் ஏற்பட்ட, நானிங்கு சொல்லாமல் விட்ட நிறை பிரச்சனைகளுமுண்டு.

[நானிப்ப இவற்றை போர் என்று ஒன்று இல்லாமல் விட்டால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்ற ஒரு நப்பாசையில்தான் இதை எழுதினேன் எனவே போரின் அவசியம் என்ன என்று தெரியாதது காரணமில்லை என சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....பதிவு கொஞ்சம் நீளமாப் போயிற்று அத்தோடு தொடர்பில்லாத மாதரியும் இருக்கு :-(( ]

13 comments:

ஜோ/Joe said...

படிக்க படிக்க மனதுக்கு பாரமாக இருக்கு .என்ன செய்ய!

Anonymous said...

My Heart.Its Paining after reading this post.

வடுவூர் குமார் said...

உயிர்ச்சேதங்களைப்பற்றியும் அம்மா அப்பா இல்லாது வளரும் குழந்தைகளைப்பற்றியும் சொல்லவே தேவையில்லை.போரால் ஏற்பட்ட, நானிங்கு சொல்லாமல் விட்ட நிறை பிரச்சனைகளுமுண்டு.
பள்ளிக்கு போகாமல் தினம் ஒரு ஊர் என்று போய்கொண்டிருக்கும் நம் மக்களை பார்க்கும் போது மனம் கணக்கிறது.
பலவற்றை சொல்லாமல் விட்டதே,நல்லது.

கானா பிரபா said...

சினேகிதி

வலிக்கும் நிஜங்கள், ஏற்கனெவே எனக்கு இந்த அனுபவங்கள் 95 வரை வாய்த்தாலும் இன்றும் மனசை இறுக்குகின்றது உங்கள் பதிவை வாசித்ததும்.

என் அனுபவப் பதிவு

http://kanapraba.blogspot.com/2006/08/blog-post.html

சுந்தரவடிவேல் said...

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டேயிருங்கள். ஏனென்றால், எங்களில் நிறையப் பேருக்கு இந்த நிகழ்வுகளெல்லாம் இப்போதேனும் தெரியட்டும். நன்றி!

சினேகிதி said...

\\படிக்க படிக்க மனதுக்கு பாரமாக இருக்கு .என்ன செய்ய! \\

வாங்க ஜோ...

உண்மையான கொடுமைகளைப் பற்றி நான் சொல்லவேயில்லை இங்க....இதெல்லாம் என்னோடு தொடர்புபட்ட மேலோட்டமான பிரச்சனைகள் ஆதங்கங்கள் ஏக்கங்கள் அவ்வளவே.உண்மையில் போரால் ஏற்பட்ட இழப்புகள் எழுத்திலடக்க முடியாதவை.

சினேகிதி said...

வாங்க அனானி உங்கள் கருத்துக்கு நன்றி.

\\பள்ளிக்கு போகாமல் தினம் ஒரு ஊர் என்று போய்கொண்டிருக்கும் நம் மக்களை பார்க்கும் போது மனம் கணக்கிறது.
பலவற்றை சொல்லாமல் விட்டதே,நல்லது. \\

வடுவூர்குமார் தத்தக்க பித்தக்கவிற்கு உங்களை வரவேற்கிறேன்.

எதுவுமே பக்கத்தில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்று சொல்றது உண்மைதான்.

சினேகிதி said...

பிரபாண்ணா இது நான் கன நாளாக எழுதத் தொடங்கி சில காரணங்களால் பதியப்படாமல் இரு;ந்தது.நேற்று பலவிசயங்களையும் சேர்த்து எழுதிவிட்டேன்.நிறைய வெட்டி வச்சிருக்கிறன் தனிப்பதிவாப்போட.

உங்களுடைய பதிவை நான் வாசிக்கவில்லைப் போலிருக்கிறது.வாசிக்கணும்.

வாங்க சுந்தர்..தொடர்ந்து சொல்கிறேன் நானும்.விஜே- (http://viriyumsirakukal.blogspot.com/2007/03/4.html#comments)

ஸ்ரேயா, சயந்தன் அண்ணா, பிரபாண்ணா போன்றோரும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள் வாசித்துப்பாருங்கள்.

சோமி said...

சிநேகிதி, பதிவு சொஞ்சம் நீண்டு விட்டது என்பது உண்மைதான். ஆனால் நான் வாசித்த உங்களின் பதிவுகளில் குறிப்பிடத்தகுந்ததாக இதை உணருகிறேன்.
கொஞ்சம் ஒழுங்கு படுத்தி எழுதினால் இந்த வலிகள் ஒரு நல்ல படைப்பாகும். எங்கள் வலிகளையும் உணர்வுகளையும் கருத்துகளையும் சொல்ல அந்த படைப்புகள் நிச்சம் தேவை.

பொன்ஸ்~~Poorna said...

:(((

இது கொஞ்சம் மேலோட்டமான இடுகை மாதிரி தான் இருக்கிறது.. இருப்பினும், சுந்தர் சொல்வது போல் அடிக்கடி எழுதிக் கொண்டிருங்கள்.. போரின் கொடூரங்கள் தெரியாத என் போன்றோருக்கு எப்போதேனும் ஏதாவது ஒரு இடுகை மனதில் தைக்கலாம்..

சினேகிதி said...

வாங்க பொன்ஸ்...உதுகளை எழுதுறது கொஞ்சம் கஸ்டமான விடயம் ..சென்ஸ்டிவான விசயம் யாரையும் புண்படுத்தக்கூடாதெல்லோ...ஆனால் எழுதத்தான் வேணும் அப்பதான் மற்றவர்களுக்குத் தெரிய வரும்.

சினேகிதி said...

சோமியண்ணா ...ஆறுதலா நிதானமா எழுதினா வடிவா எழுதலாம்.. இது நான் அவசரத்தில எழுதியே தீரணும் என்று எழுதிறது பிறகு ஆறுதலா அதை திருத்த நேரம் வாறேல்ல அப்பிடியே பதிஞ்சிடுவன்.
நன்றி இனிம உங்களுக்கு அனுப்பிவிடுறன் எடிற் பண்ண.

தாயுமானவள் said...

"இப்ப பிடுங்கி நடப்பட்ட செடிகள் போல எங்கெங்கயோ வாழுறம்" என்ற ஒரு வாக்கியம் மொத்த சோகத்தையும் மரத்தின் வேர் போல என் மனதில் இருத்திவிட்டுப்போனது. மிகச்சரியாக பதிந்திருக்கிறீர்கள்.