Custom Search

Saturday, March 03, 2007

தன்வினை தன்னைச் சுடும்...

இது நான் தாயகப்பறவைகள் பங்குனி இதழ் சமுதாயக்கண்ணோட்டத்துக்காக எழுதியது.இப்ப பிரபாண்ணாட மனசினக்கரே -முதுமையின் பயணம் வாசிச்சதால இதை இங்க பதியணும் என்று தோணிச்சு.

அன்புள்ள அம்மா அப்பாக்கு நிர்மலா எழுதிக்கொள்வது!

அன்புள்ள என்று தொடங்கிட்டன் ஆனால் உண்மையாவே உங்களிருவர் மீதான அன்பு தற்போது மேலோங்கியிருக்கிறதா என்று இப்ப எனக்கு சந்தேகமாயிருக்கு.நான் உடலளவில நலமாகத்தானிருக்கிறேன் ஆனால் உள்ளத்தளவில மிகவும் கூனிக்குறுகிப்போயிருக்கிறேன்.நீங்களிருவரும் நலமாய்த்தானிருப்பீர்கள் அதிலெனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.ஒரு வீட்டு வருமானமா உங்களுக்கு...

நீங்கள் சின்ன மாமாவுக்கெழுதிய கடிதத்தை தற்செயலாகப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அதைப்படித்தது முதல் உங்களிருவர் மீதும் எனக்கிருந்த மதிப்பு அதள பாதாளம் வரை போயிற்று.என்னடா பல வருடங்களிற்குப் பிறகு எழுதும் மடலை இப்படி எழுதியிருக்கிறாளே என யோசிக்கிறீர்கிளா? எல்லாம் உங்கள் பணத்தாசைக்கு ஒரு எல்லையில்லை என்பதைப் புரிந்து கொண்டதன் விளைவுதான்.

ஏனம்மா உன்னைப்பெற்ற தாய் தானே அம்மம்மா? இல்லை உன்னை மட்டும் வாங்கி வளர்த்தாவா?? அம்மம்மாவை பாராமரிக்க உனக்கு முடியாதா? நேரமில்லையா? ஓருவரை வேலைக்கமர்த்தித்தான் அம்மம்மாவைக் கவனிக்க வேண்டுமா? மூத்தமகள் என்று அம்மம்மா உன்மீது எவ்வளவு பாசமாக இருப்பா.அவா இப்ப உனக்குச் சுமையாகிட்ட என்ன? வயசு போன நேரத்தில உன்னை ஒரு சொல்லுக் குறை சொல்லிட்டா என்றா அதை நீ நடுச்சாமம் ஒரு மணிக்கு கட்டயாம் இங்க போன் பண்ணாச் சொல்லாட்டா உனக்குத் தூக்கம் வராதென்ன? நான் கனடாக்கு வந்தே நான்கு வருடங்களாகப்போகின்றன ; இன்னுமா உனக்கு கனடா நேரம் சரியாகப் பிடிபடேல்ல என்ன? மாமாவை மாறி மாறி மாதம் மாதம் உனக்குப் பிறிம்பா அம்மம்மாவைக் கவனிக்கப் பிறம்பாவென்று காசனுப்பினம் தானே பிறகேனம்மா அம்மா அங்க விளுந்திட்டா அந்த எக்ஸ்றே எடுக்கவேணும் இந்த மருந்து வாங்கவேணும் என்று ஓரு சின்ன விசயத்தைக் கூட பணம் கொட்டும் விசமாய் மாத்த பொய்யெல்லாம் சொல்லி மாமாவேன்ர குடும்பத்தில நிம்மதி இல்லாமப் பண்றாய்?

உனக்கொரு வியசம் தெரியுமா? இங்க ஒரு தனி றூமுக்கு ஒரு மாதத்துக்கு குறைந்தது 500 டொலர்களாவது வாடகை குடுக்க வேணும்.அப்பிடிப்பார்த்தா இந்த நாலு வருசத்துக்கும் வாடகை சாப்பாடெல்லாம் சேர்த்தா உங்கத்த காசுக்கு நீ மாமாவுக்கு 25 லட்சத்துக்குக் கூட குடுக்க வேணும்.சின்ன மாமாவோ மாமியோ எப்பவாவது உன்னட்ட ஒரு வாய் இதைப்பற்றிக் கேட்டிருப்பார்களா? ஆனால் ஏனம்மா நீமட்டும் இவ்வளவு சுயநலமாயிருக்கிறாய்?

சின்னமாமி ஊரில சாளி ஓடிக்கொண்டு பள்ளிக்கூடம் போற அழகைப்பார்த்து நானும் ரீச்சரா வரவேணும் என்று ஆசைப்பட்டவ நான்.ஆனால் இங்க மாமி தானும் படிச்சுப் படிச்சு மாமாவுக்கும் உதவி செய்யுறதுக்காகத் தானும் கஸ்டப்பட்டு பக்டரிக்குப் போய் வேலை செய்யுறா. பட்டதாரியான அவாக்கென்ன தலையெழுத்தா இப்படிக் கஸ்டப்படவேணும் என்று? ஆனால் நீ ? நாள் முழுதும் ரீவியைப் பார்த்துக்கொண்டு ஊர் வம்பு கதைச்சுக்கொண்டிருக்கு யாரோ வந்து ஏனோ தானோ என்று அம்மம்மாவை அவசர அவசரமாக் கவனிச்சிட்டுப்போயினம். சின்ன மாமின்ர குடும்பத்தப் பார்த்த உனக்கென் அவ்வளவு இளக்காரம்? உங்ளைப்போல சகோதரங்களிட்டயோ மகளிட்டயோ இரந்து வாழேல்ல என்றதால உன்னை விட அவர்கள் ஒரு படி கீழ என்ற எண்ணம் உனக்கு.இதில உனக்குப் பெருமை வேற.

குட்டி மாமா சின்ன மாமா பெரியமாமா எவருமே உன்னை; இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.அதனால் தான் நீ கேட்கும் போதெல்லாம் முப்பதாயிரம் நாற்பதாயிரம் எனப் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்தப் பணத்தைச் சம்பாதிக்க எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள் என்று தெரியுமா உனக்கு?

சின்ன மாமா நாள் முழக்க ஓய்வெடுக்காமல் இங்கேயிருந்து புளோரிடா வரைக்கும் ட்றக் ஓடிப்போட்டு வந்து சிவனே என்று கொஞ்சநேரம் படுத்தா அந்தநேரம் பார்த்து போன் பண்ணுவாய் நீ. இந்த நேரம் ஏன் அக்கா போன் பண்றா என்று மாமா கவலையோட போனையெடுத்தா நீ அம்மம்மாவைப்பற்றிப் புகார் சொல்றாய்.சா வெக்கமா இருக்கம்மா எனக்குன்னை நினைச்சா. வயசு போகப் போக பெரியவர்களும் குழந்தைகள் போலாவர்கள் என்று சொல்றவை தானே.அப்ப அம்மம்மாவையும் ஒரு குழந்தை போல நினைச்சு அவா சொல்றதுகளை உன்னால தாங்கிக்கொள்ள முடியாதா? மாமாதான் நித்திரைத் தூக்கத்தில உன்ர சின்னத்தனமான புகார்களைக் கேட்ட எரிச்சலில “போனை வையக்கா உனக்கு நேரங்காலம் தெரியாம இப்ப போய் அம்மா பேசிப்போட்டா என்றாய்..நீயுந்தான் தன்னை எப்ப பார்த்தாலும் கரிச்சுக்கொட்டுறாய் என்று அம்மா சொன்னவா அதுக்கா நான் உன்னட்ட என்னவும் விளக்கம் கேட்டனானே” என்று ஒரு கேள்வி திருப்பிக்கேட்டா உடனே போனை அடிச்சு வைச்சிட்டுப் பெரிய மாமாக்குப் போன் பண்ணி அழுது காட்டியிருக்கிறாய்.உடனே பெரிய மாமாவும் விளக்கம் கேக்க வாறார்; விடிஞ்சதும் விடியாததுமாய்.ஏனம்மா இப்பிடியெல்லாம் செய்து ஏற்கனவே வேரறுந்த மரங்கள் போல பனி தேசத்தில இன்னும் அல்லலாடிக்கொண்டிருக்கிற ஆக்களை இன்னும் நோகடிக்கிறாய்.

உன்னையும் அப்பாவையும் விட இங்க எல்லாரும் கஸ்டமான வாழ்க்கைதான் வாழ்கிறார்கள் என்று சொன்னால் நம்பவா போறாய் நீ..உனக்கு எண்ணாமல் காசனுப்பிட்டு தாங்கள் ஒவ்வொரு டொலரையும் எண்ணி எண்ணிச் செலவழிக்கிறார்கள்.மாமாவைக் கஸ்டப்படுத்தக்கூடாதென்றதுக்காக நான் பார்ட் ரைம் வேலை செய்கிறேன் ஆனால் நீ மற்றாக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கால் மேல கால் போட்டுக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்றாய்.

அப்பா வீடு வாங்குற அலுவலாய் என்ர பிரண்ட்ட அங்கிளைப் போய்ப் பாரத்து நீர்கொழும்பில முப்பது லட்சத்துக்கு ஒரு வீடு ஓகே பண்ணிட்டாராமே.இதைப்பற்றி யாராவரு ஒரு மாமாவுக்காவது மூச்சு விடேல்ல நீங்கள் இரண்டு பேரும்.
ஏனம்மா அம்மம்மாவுக்குப் புதுசுh சஸ்டேஜன் மா வாங்கினதையே சொல்லிக்காட்டுற ஆள் நீ வீடு வாங்கப்போறம் என்றதை மட்டும் ஏனம்மா சொல்லேல்ல? மாமாவேட்ட இருந்து கொள்ளையடிச்ச காசென்று எல்லாருக்கும் தெரிஞ்சிடுமென்றா?

அக்கான்ர கல்யாணத்துக்குக் காணாது காணாதென்று எத்தினதரம் திரும்ப திரும்பப் போன் பண்ணினீங்கிளே அப்பா அப்ப இல்லாத காசு இப்ப மட்டும் எங்க இருந்து வந்திச்சு? கொள்யைடிச்ச காசுதானே. நீங்கள் கழுத்தில கையில எல்லாம் மினுங்க மினுங்கப் போட்டுக்கொண்டு எனக்கு கனடாவில மூன்று இளிச்சவாய் மச்சான்கள் இருக்கிறாங்கள் என்றதைச் சொல்லாமல் சொல்ற மாதிரி பவுசு காட்டிக்கொண்டு திரிய மாமாக்கள் இங்க என்ன பாடு படவேண்டிக்கிடக்கு.

சா உங்கள் இரண்டு பேரையும் அம்மா அப்பாவா அடைய நானும் அக்காவும் போன பிறப்பில என்ன புண்ணியம் பண்ணினமோ தெரியேல்ல.அக்காவது லண்டனில நிம்மதியா இருக்கட்டும்.இந்த செமஸ்டரோட என்ர படிப்பு முடியுது. நிம்மி கொழும்புப்பக்கம் வருவாள்;.அவள்ட கல்யாணத்தைச் சாட்டியும் மாமாவேட்ட் காசு வறுகலாம் என்று கனவிலயும் நினைக்காதயுங்கோ.அப்பிடியே நான் வந்தாலும் உங்களோட இருக்க மாட்டன். மாமாவை அம்மம்மாவை இங்க கூப்பிட எவ்வளவு முயற்சி செய்தும் அம்மம்மான்ர பிடிவாதத்தால அது நடக்கேல்ல ஆனால் நான் அங்க வந்து எப்பிடியாவது அம்மம்மாவைச் சம்மதிக்க வைச்சிடுவன்.அது முடியாமல் போனால் நான் வந்து அம்மம்மாவைக் கூட்டிக்கொண்டுபோய் வேற எங்கயும் வச்சுப் பார்ப்பன்.

கடைசிக்காலத்தில நீங்கள் இரண்டுபேரும் களவா வாங்கின வீட்டைக் கட்டிப்பிடிச்சுகொண்டிருங்கோ.நீ அம்மம்மாவை அன்பாப் பார்த்தது போல நீங்கள் வாங்கப்போற வீடு உங்கள் இரண்டுபேரையும் அக்கறையோட பார்த்துக்கொள்ள என் வாழ்த்துக்கள்.

-சினேகிதி-

11 comments:

Anonymous said...

Good post.

கானா பிரபா said...

வணக்கம் சினேகிதி

என் பதிவில் வந்த பின்னூட்டத்தைப் பார்த்தமபோது உங்கள் பதிவை எதிர்பார்த்தேன். சீக்கிரமாகவே எழுதிவிட்டீர்கள். நம்மூர் மொழி நடையில் இன்றைய யதார்த்தம் தொனித்தது உங்கள் பதிவில்.

சினேகிதி said...

நன்றி பெயர் குறிப்பிடாத நண்பருக்கு!

பிரபாண்ணா இது நான் இரு வாரங்களுக்கு முதல் தாயகப்பறவைகளுக்காக எழுதியது உங்களுடைய பதிவை வாசித்ததும் என் இங்கும் போடவேண்டும் என்ற எண்ணம் வந்தது.

வி. ஜெ. சந்திரன் said...

புலம் பெயர் நாடுகளில் உள்ள உறவுகளை பணம் காய்க்கும் மரமாக நினைக்கும், ஒரு போக்கு இருக்கத்தான் செய்கிறது. அத்தோடு உறவுகளிடையே ஆனா ஒருவித பிணக்கையும் பேசி இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

அதே நேரம் போரும், அதனால் பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்க்கை, மேலும் மேலும் மக்களை புலம் பெயர் உறவுகளில் தங்கி இருக்க செய்கிறது.

சினேகிதி said...

\\அதே நேரம் போரும், அதனால் பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்க்கை, மேலும் மேலும் மக்களை புலம் பெயர் உறவுகளில் தங்கி இருக்க செய்கிறது\\

உண்மைதான் விஜே.

சோமி said...

அன்புள்ள சினேகிதிக்கு,
இது ஒரு சமுகவியல் சிக்கல்.நீங்க்கள் எழுதிய பக்கம் ஒருபுறம்.மறு புறத்தில் இன்மொன்று உள்ளது. இங்கே தமிழ்நாட்டில் நான் சந்தித்த நிரைய அப்பா அம்மா அழுகிற அழுகையிருக்கே.அதிலும் அப்பாவின் அடிமையாய் இருந்து இப்ப பிள்ளையள் எல்லாரும் வெளிநாடு போனதுக்குப் பிறக்கு. அன்பாக ஒரு பிள்ளை பேசாதா எண்டு ஏங்கித் தவிக்கும் அம்மக்களைப் பார்த்திருகிறன்.முதல் சந்திப்பிலேயே புதியவனான என்னிடம் தன் சோகத்தை மறைக்க முடியாமல் அழுதிருகிறார்கள்.
காசு அனுப்புறம்தானே பிறகென்ன..........இது பிள்ளைகள் அம்மாவுக்குச் சொல்லும் பதில்....முடிந்தால் அத்தகைய சோகக் கதையொன்றையும் உங்களுக்குச் சொல்லுறன்

நீங்க சொல்லும் அவலமும் உண்மை.வெள்ளவத்தை சந்தையில் மட்டுமெல்ல சென்னை வளசரவாக்கதிலும் பொருட்களின் விலையும் வீட்டு வாடகையும் உயர்ந்து போனதுக்கு காரணம் கண் மண் தெரியாத செலவுதான். சும்மா இருக்க வருகிற காசு ஒரு சமூகத்தையே பாழாக்கும் அவலம் நடக்குது....

Jeyapalan said...

ஊரிலிருக்கும் பலர் வெளிநாடுகளில் காசு லேசு என்று தான் நினைக்கிறார்கள். அதனால் ஊதாரிகளுமாகிறார்கள்.
நல்ல விசயம்.

சினேகிதி said...

வணக்கம் சோமி...நீங்கள் சொல்றதும் உண்மைதான்.பாசத்துக்காக ஏங்குற பெற்றோர்களைப்பற்றி தமிழ்நதி ஒரு கதை எழுதியிருந்தவா.

எனக்குத்தெரிந்த ஒரு உறவினர்கள் இங்கு படும் பாட்டைப் பார்த்துதான் நான் இதை எழுதியதே.அவர்கள் இந்தக்குளிரிலும் ஒரு நிலவறையில் இருந்துகொண்டு காசு சேர்த்து அக்காக்கு அனுப்ப அவா அங்க இருந்துகொண்டு செய்யுற நாட்டாமைத்தனம் நல்லாவே இல்லை.

நீங்கள் சொல்லுங்கோ சோகக்கதையை.

\\சும்மா இருக்க வருகிற காசு ஒரு சமூகத்தையே பாழாக்கும் அவலம் நடக்குது.... \\

எனக்கே அப்பா இந்தவருசம் தான் செல்போன் வாங்கித்தந்தவர் ஆனால் ஊரில இருக்கிற என்ர சில கஸின்ஸ்ட்ட செல்போனிருக்கு.எரிச்சல்தான் எனக்கு.

சினேகிதி said...

\\ஊரிலிருக்கும் பலர் வெளிநாடுகளில் காசு லேசு என்று தான் நினைக்கிறார்கள். அதனால் ஊதாரிகளுமாகிறார்கள்.
நல்ல விசயம்.
\\

வணக்கம் செயபால்..என்ன பெயரில வடமொழிச்சொல் இருக்கக்கூடாதெண்ட முடிவா?? அப்பிடிப்பார்த்தா என்ர பெயரைத் தமிழ்ல கூப்பிட்டா நல்லாவே இருக்காது :-(


கலோ சொல்லி கிலோல வாங்கிறதெண்டு சொல்றதல்லா.

U.P.Tharsan said...

//எனக்கே அப்பா இந்தவருசம் தான் செல்போன் வாங்கித்தந்தவர் ஆனால் ஊரில இருக்கிற என்ர சில கஸின்ஸ்ட்ட செல்போனிருக்கு.எரிச்சல்தான் எனக்கு.
//

அண்மையிலே ஸ்கைப் புண்ணியத்திலயும் என்னுடைய அப்பா அம்மாவுடைய நச்சரிபுகளும் தாங்கமுடியாமல் கொழும்பு 15 (வெள்ளவத்தை) இருக்கும் எங்களுடைய அத்தையுடன் webcam மூலம் முகம்காட்டும் படலம் நடந்தது. அவர்கள் கதைத்து நையாண்டி பண்ணி டாட்டா காட்டி முடிந்ததும் எங்கவீட்டு தொழில்நுட்ப தலை நானும் அங்கத்தைய தொழில்நுட்ப தலை என்னுடைய மச்சான் காரணம் இருந்து கதைக்கத் தொடங்கினோம். சற்று நேரம் தொடர்ந்த கதையில் நீ என்ன கைத்தொலைபேசி வைத்திருக்கிறாய் என்று கேட்டான். நான் ஒரே பதிலாய் Sony Ericsson என்று முடித்து கொண்டேன். அவன் சொன்னான் நானும் அதுதான் வைத்திருக்கிறேன்.K800 Model என்று சாதாரனமாக சொல்கிறான். நான் இங்க வைத்திருப்பது அதனுடன் ஒப்பிடும் போது ஒரு டப்பா! அதற்குள் அவர் அடுத்ததாக வந்த புது Model வாங்க வேண்டுமாம். இத்தனைக்கும் அத்தை பாவம் எனக்கு ஒரே தங்கை அவள். அவள் சாப்பாட்டுக்கு கஸ்டப்பட கூடாது என்று எங்க வீட்டிலே இருந்து 3 அல்லது 4 மாதத்துக்கு ஒரு முறை அத்தைக்கு காசு போகிறது. அதைவிட வைத்தெரிச்சல் அதிலே அரைவாசிக்க மேல் என்னுடைய காசு. :-((

சினேகிதி said...

\\சற்று நேரம் தொடர்ந்த கதையில் நீ என்ன கைத்தொலைபேசி வைத்திருக்கிறாய் என்று கேட்டான். நான் ஒரே பதிலாய் Sony Ericsson என்று முடித்து கொண்டேன். அவன் சொன்னான் நானும் அதுதான் வைத்திருக்கிறேன்.K800 Model என்று சாதாரனமாக சொல்கிறான். நான் இங்க வைத்திருப்பது அதனுடன் ஒப்பிடும் போது ஒரு டப்பா! அதற்குள் அவர் அடுத்ததாக வந்த புது Model வாங்க வேண்டுமாம். \\

சரி சரி ரொம்ப பீல் பண்ணாம ஒரு புது செல்போனை வாங்கிட்டுத்திரும்ப வெப்காம்ல ஷோ ஓப் காட்டுறதுதானே.