Custom Search

Tuesday, May 01, 2007

இந்தக்காதல் இருக்கே...

இந்தக்காதல் இருக்கே...சீ அப்பிடியெல்லாம் டிஆர் மாதிரி விளக்கம் சொல்லமாட்டன் நான். ஏனென்றால் எனக்கே இந்தக்காதலைப் பற்றி ஒன்றுமே விளங்கேல்ல.காதல் என்றால் உண்மையா என்ன?அது யாருக்கு வரும்? எப்ப வரும்? ஏன் வரும்? எத்தpனை முறை வரும்? அப்ப அது எப்பிடி தோற்றுப்போகும்? ஏன் எப்பிடித் தோற்கும்? இதெல்லாம் யாருக்காவது தெரியுமா?இல்லாட்டா நீங்களும் என்னைப்போலத்தான் யோசிக்கிறீங்கிளோ?

சத்தியமா எனக்குக் காதல் என்னென்று தெரியாது. கூட விளையாடின பக்கத்து வீட்டுப்பெடியன்ல ஒரு தனிப்பாசம் இருக்குமே. நமக்குள்ள என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் மற்ற நண்பர்கள் மத்தியில் அவனை விட்டுக்கொடுக்காம அவன் உண்மையாவே ஏதும் தப்புச் செய்திருந்தால்கூட அவனுக்காக வாதாடுவமே அது காதலா? அல்லது 10 வயசில எங்களோடு போட்டிக்கு படிச்சவன் ஒருத்தன் மேல ஒரு தனிக்கவனம் இருக்குமே.

என்னடா இவன் நாம எந்தப் போட்டிக்குப் போனாலும் வாறான்.ஒன்றில் அவன் முதலாவதா வருவான் இல்லாட்டி நாமதான் முதலாவது வருவம்.இருவரில் எவர் முதலாவதா வந்தாலும் வெளியில முறைச்சாலும் உள்ளுக்குள்ள சரி பறவாயில்லை அவன்தானே முதலாவதா வந்திருக்கிறான் என்று ஒரு சின்ன சந்தோசம் வந்து மனசின் மூலையில ஒட்டுமே ..அதான் காதலா?

இன்னும் கொஞ்சம் வளர்ந்தபிறகு ரியூசனில் படிக்கிற பெடியங்களில ஒருத்தன் சரியா நாம எந்த மேசையில இருப்பம் என்று தெரிஞ்சு அதற்கு நேரா வந்திருந்துகொண்டு மாஸ்டர் கேள்வி கேக்கிற நேரமெல்லாம் நாம சரியாப் பதில் சொல்றமா இல்லாட்டா உதவி செய்யணுமா என்று ஒழுங்காப் பதில் சொல்லி முடிக்கும் வரைக்கும் ஒரு விதமான ரென்சன்ல இருப்பானே அந்த நேரம் பார்த்து நாம அவனைத் திரும்பிப் பார்த்தா ஒரு நிம்மதிப் புன்னகை ஒளிரும் அவன் முகத்தில..அதான் காதலா?

ரியூசன்ல நடக்கிற வினாடி வினா போன்ற போட்டிகளில் என்னதான் நம்மளோட மல்லுக்கு நின்று கஸ்டப்பட்டுப் போராடி கடைசில பெடியங்கள் தோத்துப் போனா இன்றைக்கு மாட்டினீங்கடா என்று மனசுக்குள்ள நினைச்சுக்கொண்டு அவங்களைத் திரும்பி ஒரு எகத்தாளப் பார்வை பார்க்கும்போது "சரிதான் போடி நீயும் உன்ர தெத்துப்பல்லும்..லுக்கு விட்டதும் காணும் போடி" என்று ஆற்றாமைல திட்டிட்டுப் போனாலும் போற வழியில நம்ம சைக்கிள் ரயர் பஞ்சராகி சைக்கிளை உருட்டிக்கொண்டு போறதைப் பார்த்திட்டு ரியூசன்ல நடந்த போர்மேகம் கலைந்து போனாலும் கொஞ்சம் முறைப்போடயே வந்து தன்ர சைக்கிளைத் தந்திட்டு நம்ம சைக்கிளை வாங்கிக் கொண்டுபோய் ஒட்டிக்கொண்டு வந்து தாறானே...அப்ப தாங்ஸ் என்றும் சொல்லாம ஒரு அசட்டுச் சிரிப்பு வருமே.. அதான் காதலா?

பெண்கள் பருவமடைந்ததும் ரியூசன்ல பெடியங்களோட சண்டை பிடிக்கிறது கொஞ்சம் குறைஞ்சிடும்.தெற்குப்பக்கமாக ரியூசன் முடிஞ்சு போற பெட்டையள் எல்லாம் ஒருநாள் வடக்குப்பக்கமாக போனால் பெடியங்கள் தங்களுக்குள் ரகசியம் பேசுவாங்கள் 'டேய் அந்தக் கொம்பறிமூக்கன் இன்றைக்கு வரேல்லடா அப்ப அதான் போல " என்றிட்டு ஒரு சிரிப்புச் சிரிப்பாங்கள் அப்ப பெட்டையளுக்கு விளங்கிடும் இவங்கள் கண்டுபிடிச்சிட்டாங்கள் போல என்று.பிறகு அந்தப்பொண்ணு ரியூசனுக்குத் திரும்ப வரத்தொடங்கினதும் பெடியங்கள் கொஞ்ச நாளைக்கு மரியாதை குடுப்பாங்கள் என்னத்துக்கெடுத்தாலும் வாய்காட்டாமல் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவாங்கள்.அப்ப நமக்கும் அவங்களில ஒரு மரியாதை வருமே அதான் காதலா?



(டிஸைன் தாயகப்பறவைகள்)

நாங்கள் படிக்கிறது பெண்கள் பாடசாலையில் அவங்கள் படிக்கிறது ஆண்கள் பாடசாலையில் ஆனாலும் ஆமிச் சென்ரியைக் கடக்கிற நேரம் பார்த்துக் கொஞ்சப் பெடியங்கள் பொடிகார்ட் போல வருவாங்களே பிறகு கடைக்குப்போறது போல வந்து நாங்கள் வீட்டுக்குக்கிட்ட போனதும் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு போவாங்களே.
அப்ப மனசில ஒரு பாதுகாப்புணர்வு வருமே அதான் காதலா?

கூடப்படித்தவர்களுடைய வீட்டிலோ அல்லது ஏதாவது தெரிந்தவர்களின் மரண வீட்டில் எதிர்பாராதவிதமாக கூடப்படிக்கிற ஒரு பெடியன் கண்கலங்கி நிற்பதைப் பார்த்ததும் ஐயோ பெடியங்கள் அழமாட்டாங்கள் என்று நினைச்சமே இவன் என்ன இப்பிடி அழுறான் என்று மனசு அவனோடு போய் ஒரு ஆறுதல் வார்த்தையாவது சொல்லணும் என்று அங்கலாய்க்குமே அதான் காதலா?

மீண்டும் ரியூசனில் சந்திக்கும்போதும் இவன் அன்றைக்கு அழுதவன்டி நான் பார்த்தேன் என்று எங்க மற்றப் பெட்டையளுக்குச் சொல்லி நக்கலடிப்பாளோ என்ற எண்ணம் தனியா ஒருபக்கத்தில ஓடிக்கொண்டிருந்தாலும் "அன்றைக்கு அந்த விபத்தில செத்தவர் என்ர அண்ணான்ர பிரண்ட் அவரும் எனக்கு ஒரு அண்ணா மாதிரித்தான் அவர் எனக்கு ஒரு றோல்மோடல் அவருக்கு இப்பிடி ஆனதை என்னால தாங்கிக்கவே முடியல்ல" என்று தண்ணிகுடிக்கப் போன நேரத்திலயோ அல்லது சோக்(Chalk) எடுக்கப் போன இடத்திலயோ அவசரமா சொல்லிட்டு ஓடிப்போவானே அப்ப வாறதுதான் காதலா?

ஒரு வாணி விழாவுக்கோ அல்லது ஆண்டுவிழாவுக்கோ நடைபெறும் நாடகப் பயிற்சியில் தெரியாமல் முதன்முதலாக குடும்பத்தினர் தவிர்ந்த ஒரு ஆடவனின் கை பட்டுக்கொள்ளும்போது இயல்பாக வரும் ஒரு சிலிர்ப்பு."என்னைத் தீண்டி விட்டாய் திரி தூண்டி விட்டாய்" என்று சிம்பு மாதிரி கையைச் சுத்திக்கொண்டு திரியாவிட்டாலும் சித்தார்த் மாதிரி கையைப் போட்டோகொப்பி எடுத்து வைத்துக்கொள்ளாவிட்டாலும் அந்த சிலிர்பு ஒரு நாளாவதிருக்கும். அப்ப அதான் காதலா?

வெளிநாட்டுக்கோ அல்லது வேறு ஊருக்கோ பிரிந்து செல்ல நேரும்போது இதுவரை ரியூசனில் ஒருநாள் கூட வாய்திறந்து கதைக்காம இருந்த பெடியன் கூட ஆட்டோகிறாப்ல (Autograph) "நாங்கள் இதுவரை பேசிக்கொண்டதில்லை இருந்தாலும் பல தடவைகள் உன் நக்கல்களையும் திறமைகளையும் ரசித்திருக்கிறேன் எப்பவும் இப்படி கலகல என்றிருக்க வேண்டும்" என்று இவன் இப்பிடி எழுதுவானா என்று நம்மைக் கொஞ்சம் ஆச்சரியப்பட வைப்பானே அப்ப கடவுளே இவர்கள் எல்லாரையும் மிஸ் பண்ணப்போறமே பேசாம வாழ்நாள் முழக்க இவர்களில் ஒருவனோடயே இருக்க முடியாதா என்ற எண்ணம் வருமே அதான் காதலா?

பல்லாயிரக் கணக்கான மைல்களைக் கடந்து வந்தாலும் எப்பவாவது கூடப்படிக்கிற ஒரு பெடியன் எங்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும்போது ரியூசனில் படித்த யாரோ ஒருவனின் முகம் நினைவில் வந்து எவ்வளவு காலம் கூடப்படித்தோம் என்னதான் அடிபட்டாலும் அவன் இவனைப்போல இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டதில்லையே என்று நினைப்பமே அதான் காதலா?

பதின்ம வயது நிறைவுபெறும் காலத்தில் ஏதோ உரிமையுள்ளவன் போல "அடியே" என்று கூப்பிட்டுக் கதைப்பவனிடமும் சரி வெளிப்பேச்சுக்காக அல்லாது உண்மையாகவே மனசார உரையாடல்களினிடையே "அம்மா" போட்டுக் கதைப்பவனிடமும் சரி தனிக்கவனம் வரும்.கதையிலயே மயங்கி ஐயோ இவன் கதைக்கிறத உயிருள்ளவரை கேட்டுக்கொண்டேயிருக்கணும் போலத் தோணுமே அதான் காதலா? அதேபோல அம்மவைப் பற்றி வெளிப்படையாகவும் அம்மா தனக்கு முக்கியம் என்பது போலப் பேசுபவர்களிடமும் மரியாதை அதிகரிக்கும். இப்படி அம்மாவை நேசிப்பவன் தன் மனைவியையும் நேசிப்பான் என்று எங்கயோ கேட்ட ஞாபகம் வரும் அதால இவனே நமக்குத் துணையா வந்தா நல்லா இருக்குமே என்று நினைக்கிறமே அதான் காதலா?

இப்படி நான் சொன்ன வற்றில் எதைக் காதல் என்றுறது? உங்களுக்கேதும் விளங்குதா? இதெல்லாம் ஆத்மார்தமான உணர்வுகள்.அப்பப்ப இதை நாங்கள் எல்லாரும் அனுபவிக்கிறோம்.சிலவற்றை பப்பி லவ் என்கிறோம் இன்னும் சிலதை வெறும் கவர்ச்சி என்கிறோம். சிலர் உண்மைக்காதல் என்கிறோம். இன்னும் சிலர் Matured love என்கிறோம். இதில எது சரி எது பிழை என்றது யாருக்குமே சரியாத் தெரியாதென்றுதான் நினைக்கிறன்.

காதல் என்றால் என்ன என்று முன்னோர்கள் யாரும் வரைவிலக்கணம் எழுதி வச்சிட்டுப் போயிருந்தால் வசதியாயிருந்திருக்கும். இது அப்பிடி யாரும் செய்யாததலா நாங்கள் என்ன நினைக்கிறமோ அதான் காதல் என்றாயிடுச்சு அதனாலதான் காதல் தோல்வி என்றால் என்ன என்றே தெரியாம இருக்கிறம்.காதல் என்றால் என்ன என்று முதல் தெரிந்துகொண்டு வாறன் நான் வந்து அடுத்த முறை காதல் தோல்வியென்றால் என்ன என்று சொல்றன்.

தொடரும் .......
தாயகப்பறவைகள் சமுதாயக் கண்ணோட்டத்துக்காக எழுதியது.

49 comments:

சயந்தன் said...

//காதல் என்றால் என்ன என்று முதல் தெரிந்துகொண்டு வாறன் நான் வந்து அடுத்த முறை காதல் தோல்வியென்றால் என்ன என்று சொல்றன்.//

அப்போ அடுத்த பதிவு போடுவதற்கிடையில் காதல் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு விடுவீர்கள். அப்படித்தானே..

ஆகவே முன் கூட்டிய வாழ்த்துக்களும் பின், கூட்டி அள்ளிய அனுதாபங்களும்

நந்தியா said...

ஆகா மொத்தத்தில் நீங்கள் நன்றாக தான் குழம்பியிருக்கின்றீர்கள். அன்றைக்கே தலைக்குள் என்னவோ செய்கின்றது எனும்போதே நினைத்தேன் வயது கோளாறு தான்.
என்றாலும் சினேகிதி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. என்னைப்பொறுத்ததவரையிலும் காதல் என்பது புரியாத புதிர் என்று தான் சொல்லுவேன். சில பப்பி காதல் நிலைத்திருக்கின்றது. சில மஞ்சுவர்ட் காதல் எல்லாம் தொலைந்திருக்கின்றது. முதல் காதல் முதல் முத்தம் என்றுமே அழியாது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ம்ம்ம்...

என்ன நடக்குதுப்பா? ;)

நல்லா எழுதியிருக்கிறீங்க.

அடுத்த பாகத்தையும் போடுங்க. முதல் ஆளா வந்து வாசிச்சிட்டுப் போறன்.

-மதி

சினேகிதி said...

சயந்தன் அண்ணா இது நல்லாயில்ல :-((( வாழத்துக்கள் என்று சொல்லிட்டு அனுதாபத்தையும் அள்ளித்தாறீங்கிள் அதுவும் காதல் பற்றி லெக்ஸர் அடிக்கிற ஆள் இப்பிடிச் சொல்றது நல்லாவேயில்லை.

சினேகிதி said...

நந்தியா என்னதிது:-)) எம்ஸ்ன்ல சொல்றதெல்லாத்தையும் எழுத்தோட தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாதம்மணி:-))

புரியாத புதிர் என்று சொல்லேலாது ஒவ்வொருதரும் ஒவ்வொரு மாதிரிப் புரிஞ்சு வைச்சிருப்போம்.

பப்பி லவ் நிலைக்கிறவை குடுத்து வைச்சாக்கள் அதே மாதிரி மச்சுவர்ட் லவ் நிலைக்காத போற ஆக்களும் பெரிசாக் கவலைப்படாயினம் என்று நினைக்கிறன் ஏனென்றால் அவைதான் மச்சுவர்ட் ஆயிட்டினமே :-))

சினேகிதி said...

\\அடுத்த பாகத்தையும் போடுங்க. முதல் ஆளா வந்து வாசிச்சிட்டுப் போறன்.\\

ஆஹா கிளம்பிட்டாங்கையா :-)) அடுத்த பாகம் எப்பிடி இப்ப போடுறது ...சயந்தன் அண்ணா சொன்னமாதிரி லவ் பண்ணிட்டுப் போடுறன் :-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடக் கொடுமையே..
காதல் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் தவறேதும் இல்லை...

திடீரென்று பட்டாம்பூச்சி சிறகடிக்கும்
நந்தவனத்தில் நிற்கும் பெண்ணாக உணர்வீர்கள்.

ஆனால் காதல் தோல்விஎன்றால் என்ன என்பதை உணர ஆசைப்படுகிறீர்களே ஏன் இப்படி ...வேண்டாம். நீங்களே
எரிமலை நடுவில் இறங்கப் பார்க்கிறீர்களே.

Anonymous said...

ஒருவழிப்பதையாக ஆண்கள் சொல்லக் கேட்டு அலுத்துப்போன விடயத்தை, உங்களைப்போன்ற பெண்கள் சொல்லக்கேட்பது புத்துணர்ச்சியாய் இருக்கிறது. ஆனால் நீங்கள் பட்டியலிட்ட சமபவங்களில் காதல் வருமென்றால் நான் காதலித்ததில் செஞ்சரியைத்தாண்டி வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கின்றேன் என்றுதான் சொல்லவேண்டும்.
.......
மூன்றாம் பாகத்திலையவாது உஙகளின் காதல் கதையை எழுதுவீர்களா,சிநேகிதி :-) ?

சினேகிதி said...

முத்துலட்சுமி என்ன இவ்வளவு சுருக்கமாகச் சொல்லிட்டிங்கிள் காதலைப்ற்றி :-))

ஐயோ ஆளை விடுங்கோ எனக்கு எரிமலைக்குள்ள இறங்கிற ஆசையெல்லாம் இல்லவே இல்லை.

சினேகிதி said...

டிஜே இந்த உலகத்திலதான் இருக்கிறீங்கிளா:-))

புத்துணர்ச்சியா இருக்கா சொல்லுவீங்க சொல்லுவீங்க.

நான் பட்டியலிட்ட சம்பவங்களில காதல் வருமென்று சொல்லேல்ல ..மற்றவை சொல்றதை வைச்சும் படங்களில பார்க்கிறதை வைச்சும் பார்த்தால் இந்தச் சந்தர்ப்பங்களில எல்லாம் காதல் வரணுமே என்று நினைச்சன் அப்பிடிப் பார்த்தா சென்ஞ்சரி நீங்கள் மட்டுமில்ல பல பேர் அடிச்சிருப்பினம்.

சயந்தன் said...

//ஆனால் நீங்கள் பட்டியலிட்ட சமபவங்களில் காதல் வருமென்றால் நான் காதலித்ததில் செஞ்சரியைத்தாண்டி வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கின்றேன் என்றுதான் சொல்லவேண்டும்.//

ஒரே நேரத்தில ஆறு நான்கு எல்லாம் அடிச்சிருப்பார் போல.. :)

சின்னக்குட்டி said...

உங்களுக்கேற்பட்ட பருவ கிளர்ச்சிக்கான வடிகாலுக்கு நாகரிகமான தேடுதல் தான் உந்த சம்பவங்களூடான உருவாக்கிய சொல் வடிவமான காதலும் கத்தரிக்காயும்

Anonymous said...

சினேகிதிக்கு அப்பவே வாழ்த்துச்சொல்ல நினைச்சனான். அதுதான் காதலில கரைகண்டு அடுத்த பாகத்தை எழுத.

தமிழினி.

வி. ஜெ. சந்திரன் said...

//லவ் பண்ணிட்டுப் போடுறன்//

//ஐயோ ஆளை விடுங்கோ எனக்கு எரிமலைக்குள்ள இறங்கிற ஆசையெல்லாம் இல்லவே இல்லை//

இறங்கி தான் பாக்கிறது ஒருக்கா :))

பொய் சொல்ல கூடா உண்மைக்கும் நல்லா எழுதி இருக்கிறீங்க

உதிலை வாறதெல்லாம் தான் காதலெண்டா ...... ஒவ்வொருத்தரும் கணக்கு வழக்கில்லாம வச்சிருப்பினமாக்கும்

Anonymous said...

சினேகிதி வணக்கம்,

காதலைபற்றி நிறைய கேள்விகள் கேட்டு, கேள்விகளால் ஒரு வேள்வி செய்து இருக்கிறீங்கள்... காதலைப் பற்றிய எனது பார்வையை இங்கு விரிவாக எழுதமுடியாது.. யாழில் இதை கொண்டுவந்து ஒட்டுங்கள்.. எனதும், மற்றும் மற்றவர்களிடம் கேட்டறிந்த அனுபவங்களில், நீங்கள் இங்கு கேட்ட பல கேள்விகளிற்கான விடைகளை எழுதுகின்றேன்...

நன்றி!

Anonymous said...

Love for yourself and find it out!!

That's the only way.

-VeeranVijayan.

கானா பிரபா said...

கானா பிரபா அண்ணை பாட ஆரம்பிக்கிறார்: மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது, பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி (தமிழ்பித்தனில்லை) அலையவைப்பது.

வி. ஜெ. சந்திரன் said...

//கானா பிரபா அண்ணை பாட ஆரம்பிக்கிறார்: மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது, பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி (தமிழ்பித்தனில்லை) அலையவைப்பது.//

ஆகா அனுபவசாலி சொல்லிரப்பா
;-)

U.P.Tharsan said...

ம்... ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது... ஒன்னுமே புரியல உலகத்தில..

(நானும் என் பங்குக்கு பாடியிருக்கிறன்)
:-))

கொழுவி said...

மொழி படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
தலைக்குமேல் மின்குமிழ் எரியும்.
மணியடிக்கும் சத்தம் கேட்கும்.
அதுதான் காதல்.
__________________
சின்னக்குட்டியர்,
காதலைப் பற்றிக் கதைக்கிற இடத்தில அதைப்பற்றி மட்டும் கதையுங்கோ.
பிறகேன் வேறவிசயங்களையும் இழுத்தாறியள்.

Anonymous said...

நம்பாத நம்பாத சில ஆணுகளை நம்பாத,
லேடி லேடி, நான் கேடி கேடி

நந்தியா said...

..கானா பிரபா அண்ணை பாட ஆரம்பிக்கிறார்: மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது, பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி (தமிழ்பித்தனில்லை) அலையவைப்பது.
....ஃஃஃஃஃ

ஆகா கானா பிரபா அங்கு பாடத் தொடங்கிய இந்தப் பாட்டை இன்னும் மறக்கலையோ?
தமிழ் பித்தனாக்காவிட்டாலும் உங்களை ஒரு நல்ல பாடகனாக அக்கி இருக்கிறாங்களே அவாவிற்க ஒரு ஓ போடுவோமா சினேகிதி

அருண்மொழிவர்மன் said...

அற்புதமான பதிவு....
அந்த ட்யூஷன் நினைவுகள் தான் என்னை இன்னும் துரத்தி அடிக்கிது.... 10 வருடங்களாக தொடர்பற்ற நிலையிலும் என்னை ந்னைவுகளை ஓயாது மீட்கும் அதுதான் சிலவேளை காதல் என்பதோ.............என்னுடைய தொடக்க கால பதிவொன்றில் எழுதி இருப்பேன் "அதற்கு கீழாக சற்று மெல்லிய எழுத்துகளில் ஆனால் பிரகாசமாக அந்த தேவதையின் பெயர். காதல் பழசாவதும் இல்லை, தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை" அது தான் ஞாபகம் வருகுது......"http://solvathellamunmai.blogspot.com/2006_09_01_archive.html

மங்கை said...

எப்படியோ எல்லார்த்தையும் கொசுவத்தி சுத்த வச்சுடீங்க... நான் சுத்தினேன்ப்பா...:-))))

எல்லாம் ரசிச்சு ரசிச்சு நியாபகம் வச்சு இருக்கீங்க,,,அப்ப இது தான் காதல்னு வச்சுக்குவோம்..:-))

Anonymous said...

சின்னக்குட்டியர் காதலில் அடிக்கடி டக்கெடுத்து பெயிலானவர் போல அதுதான் உப்பிடி அழுகிறார்

Anonymous said...

கருமம் கருமம், சின்னக்குட்டி தந்த லவ் லெட்டரில் நிறைய எழுத்துப்பிழை, இந்த லட்சணத்தில அவருக்கு காதலாம்

Chandravathanaa said...

சினேகிதி,
காதல் பற்றிய உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் எனக்கும் பதில் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்ததில் எழுத்தாய் தர முடிந்ததைத் தருகிறேன்.
காதல் ஒரு போர் போன்றது>பெண்ணின் காதல் உணர்வுகளைப் படிப்பதில் புத்துணர்வு கிடைக்கும் என்பது போல டிசே யும் எழுதியுள்ளார்.

உங்களிடமிருந்து ஒரு உதவியையும் எதிர் பார்க்கிறேன். எனது பதிவுகளைப் படிக்க முடியவில்லை. வெறுமே வெள்ளையாக வருகிறது என ஒரு சிலர் தெரிவித்துள்ளார்கள். என்ன பிழை என்பதை என்னாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. முழுமூச்சாக இருந்து ரெம்பிளேட்டை ஆராய்வதற்கும் நேரமும் பொறுமையும் இல்லை. உங்களால் எனது பதிவைப் படிக்க முடிகிறதா எனப் பார்த்துச் சொல்லுங்கள்.

http://manaosai.blogspot.com/>
தமிழ்மணத்தினூடு வரும் போது சற்றுத் தாமதமாக வருவது போலவே எனக்குத் தெரிகிறது.

மற்றவர்களும் முடிந்தால் எனக்குத் தெரியப் படுத்துங்கள்.
இங்கேயோ அல்லது எனது மின்னஞ்சல் முகவரிக்கோ.
மின்னஞ்சல் - chandra1200 at gmail.com

நன்றி

Anonymous said...

நம்ப தோஸ்து சி.கு..லெட்டர் கொடுத்து எல்லாம் சொறிஞ்சிணடு டைம் வாஸ்ட் பண்ணமாட்டாங்க

டிரக்ட்டாவே டைம் எடுத்து டைம் கொடுத்திடுவாங்கா

சினேகிதி said...

சின்னக்குட்டி உங்களு் கருத்துக்கு நன்றி.

தமிழினியக்கா எப்பவே வாழ்த்துச் சொல்லணும் என்று நினச்சீங்கள்?
மொத்தத்தில என் காதல் கதை என்று முடிவே பண்ணியாச்சா????
யாரப் பார்த்தாலும் காதல் தோல்வியென்று புலம்பினம் அதான் இப்பிடிணெயாண்டு எழுதத் தொடங்கினான் ஆனால் அறிமுகமே நிறையவா வந்திட்டு.

வீரன் விஜயன் சூப்பர் பேருங்க :-)) நன்றி உங்கள் கருத்துக்கு.விஜே நான் தோத்துப்போறதில உங்களுக்கொரு சந்தோசம் ஹா ?

மாப்ஸ் உங்கட விளக்கம் வாசிச்சன் நன்றி.

சினேகிதி said...

பிரபாண்ணா இது கொஞ்சம் கூட நல்லாயில்லை :-)))

பாருங்கோ உங்களைப் பார்த்து தர்சன் வேற பாடத்தொடங்கிட்டார் தேவையா இதெல்லாம்.

அட டி.ராஜேந்தரும் வந்திருக்காரா :-))

Thillakan said...

நல்லாயிருக்கு ;)

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்.

Anonymous said...

மன்மத லீலையை வென்றார் உண்டோ? உண்டோ? உண்டோ?

வசந்தன்(Vasanthan) said...

கானா பிரபா மெல்பேணிலயே உந்தப் பாட்டைப் பாடத் தொடங்கீட்டாரோ?
இல்லாட்டி காலம் கடந்து இப்பதான் 'ஞானம்' வந்து பாடத் தொடங்கியிருக்கிறாரோ?

அம்மான்,
நீர் மெல்பேணில தங்கியிருந்த காலத்தில உமக்கு எதிர்வீட்டுக்காரராய் இருந்தவை நம்மட ஆக்கள்.
மாட்டுப்பட்டீரோ இல்லையோ?
;-) ;-)

பயப்படாதையும். ஒண்டும் பறையமாட்டன்.

அற்புதன் said...

சினேகிதி நல்லா எழுதி இருக்கியள்,என்னெண்டு இப்படி சின்ன சின்ன நினைவுகளை எல்லாத்தையும் நாபகம் வச்சிருகியள் எண்டு நினைப்பது உண்டு.
உங்கள் பதிவுகள் பல நேரங்களில் இப்படியான சின்னச் சின்ன இனிய நினவுகளைக் கொண்டு வரும்.

காதல் உணர்வு என்பதே நாமாக கட்டியமைப்பது தானே? ஆகவே இனிய உணர்வுகள் அனுபவங்கள் எல்லாம் காதல் தானோ?

ஆனா தமிழ்ச் சமுதாயத்தில் காதல் என்றால் ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும் என்றும் அதுவும் கலியாணம் செய்யப் போறவரைத் தான் காதலிக்க வேணும் எண்டும் ஒரு கருத்து இருக்கு அல்லோ, இது பற்றி என்ன நினைக்கிறியள்.ஏனெண்டா அதால பல காதல்களை மறுதலித்தவர்களும் இருக்கினம்.அதாவது சிக்சர், பவுண்டரி எண்டு அடிச்சு விளயாடாதவை.

கானா பிரபா said...

//வசந்தன்(Vasanthan) said...

அம்மான்,
நீர் மெல்பேணில தங்கியிருந்த காலத்தில உமக்கு எதிர்வீட்டுக்காரராய் இருந்தவை நம்மட ஆக்கள்.
மாட்டுப்பட்டீரோ இல்லையோ?//

அடப்பாவி கானா பிரபா, உனக்கு உள்வீட்டுக்குள்ளேயே எதிரிகளா.
மேனே வசந்தன்
நாங்கள் உடன்படிக்கை ஒண்டு போடுவமா?

கொழுவி said...

//காதல் என்றால் ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும் என்றும் அதுவும் கலியாணம் செய்யப் போறவரைத் தான் காதலிக்க வேணும் எண்டும் ஒரு கருத்து இருக்கு அல்லோ,//

அப்பிடி பார்த்தால் இங்கு அரை வாசி பேர் கல்யாணம் கட்டியிருக்க மாட்டினம்.

Vasanthan said...

கானா பிரபா said...

//அடப்பாவி கானா பிரபா, உனக்கு உள்வீட்டுக்குள்ளேயே எதிரிகளா.
மேனே வசந்தன்
நாங்கள் உடன்படிக்கை ஒண்டு போடுவமா? //

பிரபாண்ணை,
அதுக்கென்ன? போட்டாப் போச்சு. (எனக்கும் ஒரு பாதுகாப்புத்தானே?)
இதுபற்றித் தனியக் கதைப்பம்.

நளாயினி said...

காதல் யாரைத்தான் விட்டுது.இப்படியே மனசை தொல்லைப்படுத்தும்.

பொன்ஸ்~~Poorna said...

சிநேகிதி,
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க :) படித்ததும் எனக்கும் என் பள்ளி, கல்லூரி நட்புகள் நினைவுக்கு வந்திட்டது.

[சோகமான விசயம் என்னன்னா அப்படி நினைவுக்கு வந்த நண்பன்ல ஒருத்தன், நேத்து திருமணப் பத்திரிக்கையை நீட்டுறான் :( ]

யாழ்_அகத்தியன் said...

நல்லா எழுதியிருக்கிறீங்க

அற்புதன் said...

//காதல் என்றால் ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும் என்றும் அதுவும் கலியாணம் செய்யப் போறவரைத் தான் காதலிக்க வேணும் எண்டும் ஒரு கருத்து இருக்கு அல்லோ,//

//அப்பிடி பார்த்தால் இங்கு அரை வாசி பேர் கல்யாணம் கட்டியிருக்க மாட்டினம்.//

அதுவும் உண்மை தான்.கேள்விய மாத்திக் கேட்டிருக்க வேணும்.
'நித்திய காதலர்கள்' பற்றி என்ன நினைக்கிறியள்?

சினேகிதி said...

நித்தியக்காதலர்களைப்பற்றி என்ன நினைக்கிறது...குடுத்துவச்சவை அவை.

கானா பிரபா said...

நித்தியக் காதலர்களுக்காக இந்தப்பாட்டு
http://www.musicindiaonline.com/p/x/s6OgGVny5S.As1NMvHdW/

சினேகிதி said...

பிரபாண்ணா உங்களுக்கு லொள்ஸ் கூடிப்போச்சு...நான் நினைக்கிறன் அற்புதன் அண்ணா "நித்தியக்காதலர்கள்" என்று சொன்னது மாறாத (சாகாத) காதல் என்ற அர்த்தத்தில் :-))

நீங்கள் நினைக்கிறமாதிரி இல்லை அந்தக்காதல்...எதுக்கும் அற்புதன் அண்ணா நீங்களே வந்து "நித்தியக்காதல்" என்றால் என்னென்று சொல்லிடுங்கோ!

த.அகிலன் said...

மிக நல்ல நினைவுகள் சினேகிதி.எனக்கு முதல் வந்தாக்கள் எல்லோரும் சொல்லு சொல்லெண்டு சொல்விட்டு போயிருப்பதாலும் நான் இதோடு நிறுத்திக் கொள்றன்.

அது சரி கடைசியா அந்த அனானி கொமன்ர விட்டிருக்கிறீங்களே... காதல்ல தோல்விஅடைஞ்ச அனுபவத்தை பெற்று விட்டீர்கள் போல இருக்குதே...

எப்ப இந்த பதிவு போடப்பட்டதென்கிற திகதியை தேடித்தேடி பார்த்தேன் கண்டுபிடிக்கமுடியவில்லை.

சினேகிதி said...

யா யா காதல்ல தோல்வியடைஞ்சிட்டன் அதைப் பற்றி எழுதி என்ர ரசிகர்களின்ர மனசைக் காயப்படுத்த வேண்டாம் என்டு எழுதாமல் விட்டிட்டன் (சும்மா சாட்டு எழுதாமல் விட்டதுக்க).

இடையில கொஞ்சநாள் பின்னோட்டங்கள் எதுவும் என்ர மெயிலுக்கு வரவில்லை அதால ஒருநாள் ப்ளாக்கர் கணக்குக்குப் போய் பார்க்க அங்க சில பின்னோட்டங்கள் இருந்தது அதோட இந்த ~ஹாப்லாக் ம் 50 இருந்திருக்கு நான் தவறுதலா select all ஐ click பண்ணி எல்லாத்தையும் பப்ளிஸ் பண்ணிட்டன் இனி 50 ஐயும் அழிக்க வேற வேலையில்ல :-))

ஏனுங்கோ பதிவுக்குக் கீழ தான் Posted by சினேகிதி at Tuesday, May 01, 2007 " இப்பிடி இருக்குதே :-))

Anonymous said...

:)))))))) nice one.
காதல் என்றால் என்ன என்று விவேக் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொன்று சொல்லுவார். அதில் ஒன்று "காதல் ஒரு கழட்டிப் போட்ட செருப்பு size சரியா இருந்தால் யார் வேணுமென்றாலும் மாட்டிக் கொள்ளலாம்".

சினேகிதி said...

vivek sonal sariyathan irukum sabesan :-)

தாயுமானவள் said...

நீங்கள் எழுதிய அந்த காதல் தருணங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. நீங்கள் எழுதிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் என்ட வாழ்வில் நடந்தது போன்டுள்ளது.