Custom Search

Wednesday, January 16, 2008

வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும்

சாமத்தியச் சடங்கு வைக்கிறது நல்லதா கூடாதா ? அப்பிடி வைக்கிறது எங்கட கலாச்சாரமா இல்லையா? பாலச்சந்தர் படத்தில வாறது மாதிரி தேவதை போல அந்தரத்தில தொங்க விட்டு படமெடுக்கலாமா ? இப்பிடி எத்தனையோ பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கு. ஆனால் இந்த பூப்படைதல் என்றால் என்ன? அதன்மூலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுகிற உடல் உள மாற்றங்கள் பற்றிய அக்கறையும் அறிவும் எங்களில் எத்தனை பேருக்கிருக்கு?

யாராவது மகளுக்கு பூப்புனித நீராட்டுவிழா வைக்கிறம் என்று அழைத்தால் எந்தக்கடையில வாழ்த்து மடல் வாங்கிறது எப்பிடி வாழ்த்திறதென்றுதான் ஆராய்கிறார்கள் எங்கட அருமை அண்ணாக்கள் மாமாக்கள் சித்தப்பாக்கள். தெரிந்த நண்பர் ஒருவர் ஒருபடி மேல போய் தான் இப்படியான ஒரு நிகழ்வுக்குப்போனால் “can you demonstrate it please” என்று கேப்பாராம்.ஆக ஒரு பெண் பூப்படைதல் என்பது எல்லாருக்கும் ஒரு நகைச்சுவைக்குரிய விடயம் அப்படித்தானே?

பூப்புனித நீராட்டுவிழா வைப்பதன் அவசியம் பற்றியோ அல்லது அது எங்கட கலாச்சாரம் என்றதெல்லாம் எனக்குத்தெரியாது. ஒரு பெண் பூப்படைந்தால் அவள் திருமணத்துக்கு தயார் அல்லது தாயாகும் தகுதி அவளுடைய உடலுக்கு உண்டு என்று பறைசாற்ற இதை ஒரு குடும்ப நிகழ்வாக நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் புலம்பெயர் மக்களிடையே அது வெவ்வேறு காரணங்களுக்காக நடத்ப்படுகிறது. பெண் பூப்படைதல் என்பது banquet hall வைச்சிருக்கிறவை வீடியோ எடுக்கிறவைக்கெல்லாம் நல்ல வியாபார உத்தி.

ஆனால் அவையைச் சொல்லி என்ன செய்ய? நாங்கள் 20 000 செலவழிக்கத்தயாரா இருக்கிறதால தானே அவை புதுசு புதுசா உத்திகளை அறிமுகப்படுத்தினம். அது கலாச்சாரம் என்றதோ இல்லை ஒரு பெண்ணுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய சடங்கென்றதோ ஒவ்வொருவரின் நம்பிக்கையைப் பொறுத்தது. நிறையப் பரிசுப்பொருள் கிடைக்குமே அம்மா அப்பா இதுவரைக்கும் வேண்டித்தராமல் போனதெல்லாம் மற்றாக்களுக்கு படம் காட்டுறதுக்காகவே வேண்டித்தருவினம் என்ற ஆசையிலயே இங்கத்த சின்னனுகள் சாமத்தியவீடு செய்யறதெண்டால் ஏதோ படம் நடிக்கிற கணக்கில கற்பனை செய்யுதுகள். அப்பிடி கனவில இருக்கிறவைக்கு பூப்படைந்து முதல் ஒன்றிரண்டு மாதத்துக்கு சந்தோசமாத்தானிருப்பினம். பிறகுதானே hormone களின் ஆட்டம் புரியத்தொடங்கும். இப்ப கடைசியா சாமத்தியவீடு செய்யாமல் விட்டவைக்கெல்லாம் ஒரு அரிய வாய்ப்பிருக்கு. அதான் 16வது பிறந்தநாளை பெருசாக் கொண்டாடுறது.உங்களைக்குற்றம் சொல்லி என்ன பயன்?

10 வயசு வரைக்கும் உறவினர்கள் ஒன்றுகூடும் விடுமுறை நாட்களில் ஒன்டா basement ல நின்று விளையாடுற குஞ்சு குருமனெல்லாம் 9 வயசுக்குப்பிறகு தனித்தனி றூமுக்க நிண்டு விளைாயாடுதுகள். கேட்டால் இது “girls talk “ என்று பெட்டையளும் “boys’stuff” என்று பெடியங்களும் சொல்லுதுகள்.

எனக்கு 10 வயசில தெரிஞ்ச விசயங்களை விட இதுகளுக்கு பல மடங்கு தெரியும். ஆனால் முக்கியமாக தெரியவேண்டிய விசயங்கள் தெரியுறேல்ல. 10 வயசு பெடியனுக்கு PSB வேண்டி குடுத்திருக்கு. பெடியன் என்ன செய்யும் அறைக்குள்ள எல்லா மூலையிலயும் நிண்டு பார்ப்பான் எங்க wireless net connection கிடைக்குதெண்டு. பிறகு அந்த மூலைதான் அவன்ர குடியிருப்பு. பிறகென்ன 50 cent ன்ர äyo technology” , ”candy shop” என்று 24 மணித்தியாலயமும் PSP ம் கையுமாத்தான் திரியுறாங்கள். இதுகளைப் பார்த்து பார்த்து பெட்டையள் என்றாலே இப்பிடித்தான் treat பண்ணோனும் என்று அவங்களா ஒரு வரையறை போட்டு வைச்சிட்டு அதன்படி எல்லாத்தையும் பார்க்கிறது.

பள்ளிக்கூடத்தில பெண்களின் மாதவிடாய் சக்கரம் அது எப்பிடி நிகழுது அதால பெண்களுக்கு ஏற்படும் PMS (premenstrual symptoms ) போன்ற மூட் சம்பந்தமான விசயங்களைப் பற்றி ரீச்சர் சொல்லும்போது அவங்களுக்கு எப்பிடி கவனிக்கத்தோணும். தோணாது ஏனென்டால் மனசுக்குள்ள ஏற்கனவே குமைச்சல் இருக்கல்லா. அக்காக்கு மட்டும் 15000 டொலர் செலவளிச்சு சாமத்தியவீடு செய்தவை. எனக்கென்ன செய்தவை.பெட்டையளுக்கென்ன கஸ்டம் சந்தோசமாத்தானே இருக்கினமென்டிட்டு ஒன்று வெளிநடப்புச் செய்றது.

இப்பிடிச்சின்னன்ல இருந்தே பெண்களைப் புரிந்துகொள்றதென்றது தெரிந்தோ தெரியாமலோ புறக்கணிக்கபடுகிறது.இவை பிறகு வளர்ந்துவந்து திருமணம் என்ற பந்தத்தில் ஒரு பெண்ணோடு இணையும்போது அவள் என்னதான் நரகவேதனைப் பட்டாலும் பொருட்படுத்தமாட்டினம்.எல்லாருக்கும் வாறதுதானே என்ற அலட்சியம். சீன் போடுறாள் என்ற எரிஞ்சு விழுறது.இப்பிடி நிறையச் சொல்லலாம். சரி இதுக்கெல்லாம் உண்மையா என்ன காரணம்.


ஒரு பெண் சிசு கருவில் இருக்கும்போதே அவளுக்கு இரண்டு சினைப்பைகள் வளரும்.அவளுக்கு 9 -13 வயதுகளில் estrogen , progesterone என்ற இரண்டு hormone கள் சுரக்கத்தொடங்கும். அப்படி முதன் முதலில் சுரப்பதைத்தான் பூப்படைதல் என்று சொல்றம்.
சரி இதில எரிச்சல் விரக்தி வெறுப்பு வெறுமை இதெல்லாம் எப்பிடி வருதென்று கேக்கிறவர்கள் முதல்ல ovulation period ஐ விளங்கிக்கொள்ள வேணும்.மாதவிடாய்ச் சுழற்சியின் காலம் 28 நாள் முதல் 35 நாள் வரை. மனவுளைச்சல் நேரம் அதாவது அதிகமான கவலை சிந்தனை போன்ற எக்ஸாம் ரைம் அல்லது வேறு சில சந்தர்ப்பங்களில் இந்தச் சுழற்சிக்காலம் 15 நாளாகக் குறைவதுமுண்டு. பெண்களின் உடலிலுள்ள pituitary gland, Follicle secreting hormone (FSH) மற்றும் luteinizing hormone (LH ) போன்றவற்றைச் சுரக்கின்றது. முதல் 15 நாளும் FSH தான் அதிகமாகச் சுரக்கின்றது. 15வது நாள் LH அதிகமாகச்சுரக்கப்படும். அப்படி LH அதிகமாகச் சுரக்க்ப்படும் நாள் அல்லது அடுத்த நாள்தான் Ovulation நிகழ்கிறது.ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 20 சினை முட்டைகள் பெண்ணின் Ovaries ல் முதிர்ச்சியடைகின்றன. அப்படி முதிர்ச்சியடையும் முட்டையோடு fallopian tube ல் ஆணின் விந்து சேர்ந்தால் அது சிசுவாக வளர்கிறது. Ovary ல் இருந்து முதிர்ச்சியடைந்த முட்டை வெளியேறுவதைத்தான் Ovulation என்கிறோம். இந்த முட்டைகளின் ஆயுட்காலம் வெறும் 24 மணித்தியாலம் தான். ஆனால் ஆண்களின் விந்துவின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 7 நாட்கள். ஆணின் விந்து கிட்டத்தட்ட 7 நாட்கள் genital tract அதாவது பெண்ணின் vagina, uterus அல்லது fallopian tube ல் உயிருடன் இருக்கும். ovulation period ல் சினை முட்டையும் விந்தும் fallopian tube ல் சேர்ந்தால் கருவாக வளரும்.

அப்படி கருவாக வளரத் தொடங்கும்வரை Ovary ல் estrogen சுரப்பு அதிகமாகவிருக்கும். அப்படி estrogen அளவு கூடும்போது FSH ன் சுரப்பு குறைந்து LH ன் சுரப்பு அதிகமாகிறது.ஆனால் அதுவே கருவாக வளரத்தொடங்கிவிட்டால் estrogen அளவு குறைந்து progesterone ன் அளவு அதிகமாகும்.கருப்பைச்சுவர் பலமானதாக இருந்தால்தான் கரு தங்கியிருக்க முடியும் எனவே கருப்பைச்சுவர் பலமுடையதாக progesterone ன் அளவு அதிகமாகத் தேவைப்படுகிறது. அப்படி முட்டையும் விந்தும் சேராத போது முட்டைகள் கருப்பைச்சுவரில் பதிந்து இரத்தத்துடன் வெளியேறிவிடும். அப்படி கருவாக உருவாகாதபோது progesterone ன் அளவு குறையும். அவ்வாறே பிரசவத்திற்கு பின்னரும் progesterone ன் அளவு குறையும்.அதனாலும் விரக்தி வெறுமை எரிச்சல் எல்லாம் ஏற்படும்.அதைத்தான் postpartum depression என்று சொல்றம்.

இப்படி progesterone, estrogen Follicle secreting hormone (FSH) மற்றும் luteinizing hormone (LH) ன் அளவு கூடிக்குறையும் நேரத்தில் பெண்களின் குணமும் ஒரு நிலையில்லாமல் மாறிமாறி பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாகவே இருக்கும்.அதைப்புரிந்து கொள்ளாமல் கோவக்காரி கொம்பறிமூக்கன் என்று பட்டம் சூட்டி என்ன பிரியோசனம்? ரத்தப்போக்கு, அடிவயிற்றில் மார்பகங்களில் பாரம், வலி, சோர்வு இப்பிடி உடல் உபாதைகள் மாறிமாறி வந்தால் மனம் என்ன செய்யும்?

இயலாமையில் தன்மீதான எரிச்சல், கூட இருக்கிறாக்கள் மேல பரவும்.அமைதியா இருக்கமாட்டாமல் எல்லாத்துக்கும் எரிஞ்சு விழுறது. கடைசில மனக்கவலையைக் கூட்டிப்போட்டு சின்ன சின்ன விசயம் எல்லாத்தையும் பெரிசா பூதாகரமாக்கி யோசிச்சு உடன அழவேண்டியது. திடீர் திடீரென்று அழுதால் பார்க்கிறாக்களுக்கு விசித்திரமா இருக்கும்.உணர்ச்சிகள் கட்டுப்பாடில்லாம தாறுமாறா வெளிப்பட துடிக்கும். தன் மேலயும் கோபம், கூட இருக்கிறாக்கள் மேலயும் கோபம்.என்ன நடக்கும் என்ன செய்யிறம் என்று தெரியாமல் கொலை கூட நடக்கலாம். கூட நடக்கலாம்.எங்கயோ கொலைக்கான காரணம் இப்படியான hormone imbalance என்று குற்றவாளிக்குச் சாதகமாக தீர்ப்புகூடச் சொல்லப்பட்டதாம் ஒரு கொலைவழக்கில்.

அதனால இப்படிப் பெண்களை வன்முறையாளராக்காமல் பெண்களின் கோபத்தை விரக்தியை வெறுமையைப் புரிந்து கொள்ளுங்கள். முடிந்தால் ஆதரவாய் இருங்கள். இல்லையெண்டால் விலகியிருங்கள்.அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்தால் எந்த வலியையும் தாங்கிக்கொள்ள முடியும்.அப்படி ஆதரவு கிடைக்காதபோது தங்கள் கடமைகளை உரிய நேரத்தில் செய்து முடிப்பதற்காக சில பெண்கள் Lybrel , Seasonique போன்ற மாத்திரைகளை உட்கொண்டு இயற்கையாக நிகழும் மாதவிடாய்ச்சுழற்சியை ஒரு வருடத்திற்கொருமுறை அல்லது சில மாதங்களுக்ககொருமுறை நிகழும்படி கட்டுப்படுத்த முயன்று அதன் விளைவாக தங்கள் உயிரையே விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எனவே இன்றைய அம்மாக்கள் உங்கள் மகன்களுக்கு சின்ன வயசில இருந்தே அக்காவை தங்கையை இந்த 5 நாள்ல தொந்தரவு பண்ணாத என்றும் அதற்கான காரணத்தை முடிந்தளவு சொல்லியும் வளர்த்தால் பிற்காலத்தில உங்கட மகன் நல்ல ஒரு கணவனாக மனைவியைப் புரிந்துகொள்ளக்கூடியவனாக தன் மகளுக்கு நல்ல தந்தையாக இருப்பான்.

45 comments:

மங்களூர் சிவா said...

அம்மிணி உங்க பிரச்சனைய சொல்லிட்டீங்க எங்க பிரச்சனைய எங்க சொல்லி அழ!?!?!?

சினேகிதி said...

எங்க சொன்னாலும் கேப்பம் நாங்கள்..வலைச்சரத்திலயும் கூட.

மங்களூர் சிவா said...

வலைச்சரத்துலயா!?!?

அவ்வ்வ்வ்

இங்கயும் ஹார்மோன் பிரச்சனைதான் ஆனா அந்த கருமம் ஹார்மோன் பேரெல்லாம் தெரியாது :((

இன்னைக்கு ஒரு கான்ஃபரன்ஸ்னு சொல்லி ஆப்பீஸ்ல ஸ்டார் ஹோட்டலுக்கு இட்னு போயிட்டாங்க பக்கத்துல ஒரு பாப்பா வந்து உக்காந்துகிச்சு அப்புறம் மீட்டிங்ல என்ன ஆச்சி என்ன பேசினாங்க ஒரு எளவும் புரியலை.

(ஆனா முடிஞ்ச உடனே பஃப்பே மட்டும் ஒரு கட்டு கட்டீட்டேன் மறக்காம)

பாதி உண்மைக்கு மேல சொல்ல முடியல

வேணாம் :(

துளசி கோபால் said...

நல்ல பதிவு.


சடங்கு தேவை இல்லை.

சம்பிரதாயமெண்டால் வீட்டளவில் நடத்திக்கலாம். ஊரைக்கூட்டணுமா? (-:

Anonymous said...

நன்றி சிநேகிதி. இப்படி வெளிப்படையானதும் எளிமையானதுமான எழுத்துக்கள் தமிழில் (ஆகக்குறைந்தது வலைப்பதிவுகளில்) குறைவு.
.....
/நாங்கள் 20 000 செலவழிக்கத்தயாரா இருக்கிறதால தானே அவை புதுசு புதுசா உத்திகளை அறிமுகப்படுத்தினம். /
சாமர்த்திய வீடுகளுக்கு இந்தளவு செல்வாகுமா? இங்கே எந்த சாமர்த்திய வீடுகளுக்கும் போனதில்லையென்பதால் எத்தகை ஆடம்பரத்தோடு நடக்கிறது என்றும் தெரியவில்லை. உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு தோழியின் வீட்டுக்குபோனபோது, சாமர்த்திய வீட்டு அல்பத்தைக் காட்டி அல்பத்தின் செலவு மட்டும் இரண்டாயிரம் டொலர்ஸ் என்றபோதே வாயைப் பிளந்திருந்தேன். அவரின் தாயாரும், தனது மூத்தபிள்ளையின் சாமர்த்திய விழா கடனே இன்னும் தீரவில்லை என்று சொன்னதாகவும் நினைவு; இத்தனைக்கும் அவர்களுக்கு ஐந்து பொம்பிளைப்பிள்ளைகள்.

Unknown said...

+ / - இயற்கை நியதிதானே. பெண்களை துரத்தும் சுரப்பிகள் பசங்களையும் துரத்துகிறது, அதற்கு எதிர் திசையில், பெண்ணிற்கு மன அழுத்தம் என்றால் ஆணுக்கு மன பூரிப்பு, துருதுருப்பு. :)

சொல்லி வளர்ப்பது எத்துணை பயனளிக்கும் எனத்தெரியவில்லை. ஆண்மை என்பது பெண்மையை அரவணைத்துச் செல்வதில் இருக்கிறது, பூப்பில் மட்டுமன்றி, அன்றாட வாழ்வியல் எதிர்ப்புகளை சமாளிக்கவும், இரு மைகளும் கைகோர்த்து செல்ல வேண்டும். சகோதரியோ, நண்பியோ, மனைவியோ... பெண்மை மீதான கரிசனம் கோழைத்தனமாக, ஆணின் இயலாமையாக கட்டமைக்கப்படுகிறது, அந்த கட்டுடைப்புகள் இந்த தலைமுறையில் நடந்தேறி வருகிறது.

பூப்படைந்த பெண்ணின் நிலைப்பாடுகளை பெற்றோரைவிட பிள்ளைகளே அதிகம் அறிந்துவைத்துள்ளனர். பெண்களின் மேலதிக அன்பையும், நம்பிக்கையையும் பெற, மாதாந்திர நாட்களில் அவர்களிடம் கரிசனம் காட்டி, அன்பு செலுத்தினாலே போதும், அது பன்மடங்கு திரும்ப வரும்.

பெண்மையின் மீதான பயம், புதிர் விளைவித்த புரியாமைகள் இன்னமும் தொடர்வது கவலை அளிக்கிறது. அதன் எதிர்விளைவுகள் ஆதிக்கவடிவில் வெளிப்படுகிறது. களையவேண்டிய குற்றச்சிந்தனைகள் இது.

Thekkikattan|தெகா said...

அழகாக உள்வாங்கி மிக முக்கியமான விசயத்தை எளிமையாக சொல்லியிருக்கீங்க. நன்றி!

கண்டிப்பாக நம்மூரில் இந்த மாதந்திர சுழற்சியின் தாக்கம் எந்தளவிற்கு பெண்களை அந்த சமயத்தில் பீடிக்கிறது என்பது தெரியாமலே பல பிரச்சினைகள் எழுகிறது.

இது எல்லோரிடத்திலும் சென்றடைய வேண்டிய விசயம்.

அதற்காக, இதனையே ஒரு சாக்காக வைத்து மேற்கத்திய நாடுகளில் சில பெண்கள் அடிக்கும் அட்டுழீயம் போல இல்லாமலிருந்தால் சரிதான் :).

Anonymous said...

நல்ல பதிவு. பதிவுக்கு நன்றி.

//ஆக ஒரு பெண் பூப்படைதல் என்பது எல்லாருக்கும் ஒரு நகைச்சுவைக்குரிய விடயம் அப்படித்தானே?//
எல்லோருக்கும் என்பது தவறு. இன்றைய காலகட்டங்களில் பெண்ணின் மாதவிடாய் நாட்களில் அவளுடன் பரிவாகவும் பாசமாகவும் இருக்கும் எத்தனையோ கணவன்மார் மற்றும் காதலன்கள் கூட இருக்கிறார்கள். அந்த 3-5 நாட்களை விளங்கிக்கொள்ளாத ஆண்களிடம் அது தவிர்ந்த நாட்களில் அவர்கள் புரியும் படியாக சொல்ல வேண்டியது பெண்களின் பொறுப்பு அல்லவா?. ஏனெனில் பெண்களின் அந்தரங்க விடயங்கள் ஆண்களிடம் வந்து சேருவது எமது சமுதாயத்தில் சற்று கடினம். இதற்க்கு உதாரணமாக டுபுக்கு அவர்கள் நகைச்சுவையாக எழுதிய பதிவைப்( http://dubukku.blogspot.com/2007/06/blog-post_07.html ) பாருங்கள். இது நகைச்சுவையாக இருந்தாலும், இப்படித்தான் நாங்கள் இந்த விடயங்களில் இருந்து தள்ளி வைக்கப்பட்டோம்[(இது எந்த நாட்டாமை இட்ட சாபமோ தெரியவில்லை.)]

//எங்கயோ கொலைக்கான காரணம் இப்படியான ஹொர்மொனெ இம்பலன்cஎ என்று குற்றவாளிக்குச் சாதகமாக தீர்ப்புகூடச் சொல்லப்பட்டதாம் ஒரு கொலைவழக்கில்.//
அப்படியாயின் ஆண்கள் செய்யும் அரைவாசி குற்றங்களுக்கும் Hormone தானே காரணம்!!!!!!???

பெண் பிள்ளை பூப்பெய்தியதும் அதனை ஒரு சடங்காக இல்லாமல் ஒரு விழாவாக கொண்டாடுவதில் இன்று ஆண்களிலும் பார்க்க பெண்களே முன் நிற்கிறார்கள் என்பது எனது கருத்து. அது பற்றி வேறு ஒரு இடத்தில் பேசுவோம். இல்லாவிட்டால் தலைப்பு திசை மாறி விடும்.

பத்மா அர்விந்த் said...

அருமையான பதிவு. இந்த பதிவு இதர்கும் அடுத்த பதிவு குரித்தும் விரிவான பின்னூட்டம் கூடிய சீக்கிரம் எழுதுகிறேன்.

கலை said...

நட்சத்திரமானதுக்கு முதலில வாழ்த்துக்கள்.

நட்சத்திர வாரத்தில நல்ல நல்ல பதிவெல்லாம் போட்டு கலக்குறியள். அதுக்கும் விசேசமாய் வாழ்த்துக்கள். இலங்கை பேச்சுத் தமிழில பார்க்க இன்னும் நல்லாயிருக்கு. :)

இந்த பதிவு சம்பந்தமாய் நானும் முன்பு ஒரு பதிவு போட்டனான். அதை நேரமிருந்தால் இங்க பாருங்கோ.

TBCD said...

யாருமே இதைப் பற்றி கேட்கவில்லை...ஒரு வேளை எனக்குத் தான் வழக்கம் போல புரியவில்லையோ.

//PSB// என்றால் என்ன.

புரியல்ல.தயவு செய்து விளக்கவும்.

நீங்க எந்த ஊர்ன்னு தெரியலை..ஆனா, இங்க தமிழ் நாட்டிலே, கிரமாங்களில் கூட திருமணத்திற்கு முதல் நாளுக்குத் தள்ளப்பட்டுவிட்டது, சடங்கு என்னும், பூப்புனித நீராட்டு விழா.

இன்னும், ஒரு சிலப் பெண்கள், அவைகளை, பெண்ணியம் பேசியும், வேண்டாம், என்கின்றனர் ;)

நீங்கள் சொன்னது உன்மை தான் சிறு வயதில், ஏன், ஆண்களுக்கு இப்படி ஒரு சடங்கு இல்லை. பாருங்கள், பெண்களுக்கு மட்டும், இத்தனை இனிப்பு டப்பா, பலகாரம் என்று பொறாமையில் வெந்து, சண்டைப் போட்டியிருக்கிறேன்.

தலைவலியும், திருகவலியும் தனக்கு வந்தாத் தான் புரியும், என்பதுப் போல், ஆணகளுக்கு இயல்பாகவே மற்றவர் உணர்ச்சிகளை ஒத்துக்கி விடும் மனோபாவம் இருக்கும் என்று எண்ணுகிறேன். வலி தாங்கும் விசயத்தில், ஆணகளுக்கு பெண்கள் மேல் ஒரு ஏளனப் பார்வை எப்போதும் உண்டு. அதுவும் அவ்வப்போது சேர்ந்துக் கொள்ளும்.

taboo விசயத்தை, தொட்டு, அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்..

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

//
எனவே இன்றைய அம்மாக்கள் உங்கள் மகன்களுக்கு சின்ன வயசில இருந்தே அக்காவை தங்கையை இந்த 5 நாள்ல தொந்தரவு பண்ணாத என்றும் அதற்கான காரணத்தை முடிந்தளவு சொல்லியும் வளர்த்தால் பிற்காலத்தில உங்கட மகன் நல்ல ஒரு கணவனாக மனைவியைப் புரிந்துகொள்ளக்கூடியவனாக தன் மகளுக்கு நல்ல தந்தையாக இருப்பான்.
//

இப்படி ஒரே நேர்க்கோட்டில் வரையறை செய்ய முடியுமா... என்று தெரியவில்லை :(

எதிர்மறையாய்...

ஆண் என்கிற புறத்தாக்கம் பெண்ணை ஆளுமை செய்வதை விட, பெண் தனது நிலையை உணர்தலின் மூலமே வலிவுள்ளவாய் மாற இயலும். குறிப்பாக தன்னுள் நடக்கும் மாற்றத்தை பற்றிய அறிவு பெண்ணுக்கு தான் மிக முக்கியமாய் தேவைப்படுகிறது. கழிவிரக்கம் என்கிற நிகழ்வு மிகவும் மோசமானது.

மேற்கத்திய நாடுகளில் ஆண், பெண் எல்லாநிலைகளிலும் போட்டி போடும் போது நீங்கள் சொல்கிற புரிதல் தேவைப்படுகிறதா என்று தெரியவில்லை! ஆனால் தமிழகத்தில் பெண்ணை மாதவிடாய் நிகழ்வின் மூலம் இரண்டாம் நிலையில் வலுவற்றவளாக சித்தரிக்கிறார்கள் (அ) கொச்சைப்படுத்துகிறார்கள் என்பது தான் நிகழ்வு.

இது வலி(அ) வேதனை... புறமானது எனக்கு ஆதரவாய் இருக்க வேண்டும் என்கிற எண்ணவோட்டத்தை... எப்படி பிரதிபலிக்கிறீர்கள்... ஒரு வேளை நீங்கள் பெண்ணாய் இருப்பதாலா?

சினேகிதி said...

மங்களூர் சிவா நீங்கள் சொன்னது வரைக்கும் போதும் :-)

\\சடங்கு தேவை இல்லை.

சம்பிரதாயமெண்டால் வீட்டளவில் நடத்திக்கலாம். ஊரைக்கூட்டணுமா? (-:\\
கொஞ்சம் சத்தமா சொல்லுங்கோ !

டிசே இப்ப $5000- $ 6000 அல்பத்துக்கு..2005 லதான் $5000 இப்ப அதவிடக்கூடத்தான்.

சினேகிதி said...

\\பெண்ணிற்கு மன அழுத்தம் என்றால் ஆணுக்கு மன பூரிப்பு, துருதுருப்பு\\

ஆண்களுக்கும் மனவழுத்தம் இருக்கும்...நீங்களாரும் சொன்னால்தான் நமக்கும் தெரிய வரும்.

\\அதற்காக, இதனையே ஒரு சாக்காக வைத்து மேற்கத்திய நாடுகளில் சில பெண்கள் அடிக்கும் அட்டுழீயம் போல இல்லாமலிருந்தால் சரிதான் :).\\

அப்பிடி என்ன அட்டூழியம் செய்கிறார்கள்?

சினேகிதி said...

சபேஷ்,
டுபுக்குவின் ஆக்கம் முன்னர் வாசித்திருக்கிறேன்.சிறு பெண்கள் சிலர் இப்படியான விழாக்களுக்கு முன்னிற்பது உண்மைதான்...அந்த எண்ணத்தைத் தூண்டி விடுவது நம் பெற்றோர்கள்தான்.

நிருபா என்பவர் எழுதியதை வாசித்துப்பாருங்கள். http://puluthi.blogspot.com/2005/04/pfui-pfui.html

சினேகிதி said...

\\அருமையான பதிவு. இந்த பதிவு இதர்கும் அடுத்த பதிவு குரித்தும் விரிவான பின்னூட்டம் கூடிய சீக்கிரம் எழுதுகிறேன்\\

எழுதுங்கோ வாசிக்க ஆவல்.

நன்றி கலை இணைப்புக்கும் வாழ்த்துக்கும். வாசிப்பேன்.

\\//PSB// என்றால் என்ன\\
PSP என்று எழுதியிருக்கோணும் : PSP: PlayStation Portable

சினேகிதி said...

\\மேற்கத்திய நாடுகளில் ஆண், பெண் எல்லாநிலைகளிலும் போட்டி போடும் போது நீங்கள் சொல்கிற புரிதல் தேவைப்படுகிறதா என்று தெரியவில்லை! \\

பாரி அரசு,
போட்டி அவசியம் எப்போதுமே..ஆனால் உடல் ஒத்துழைக்காதபோது மனம் மட்டும் எப்பிடி திடமா இருக்க முடியும்?? இந்த நாட்களில் மனைவியை சகோதரியை காதலிலை அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுங்கள் என்றுதான் மேற்கத்தைய நாடுகளிலும் ஆண்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

cheena (சீனா) said...

இந்தச் சடங்கு செய்யும் பழக்கம் - பூப்படைந்ததை ஒரு மா பெரும் விழாவாகக் கொண்டாடி, உலகுக்கே பறை சாற்றும் வழக்கம் மாற வேண்டும். உறவுக்கு மட்டும் அறிவித்தால் போதும்.

மற்றப்டி, பூப்ப்டைந்த இளம்பெண்களுக்கு, அதைப் பற்றிய அறிவை ஊட்ட வேண்டியது தாய் உட்பட, வீட்டில் உள்ள பெண்களின் தலையாய கடமை.

பதிவு - பதிவின் நோக்கம் - பாராட்டுக்குறியது.

Yogi said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சினேகிதி !

இந்தப் பழக்கம் எங்கள் ஊர்ப்பக்கம் (இராமநாதபுரம்) கிராமங்களில் கூட குறைந்திருப்பதாகவே தெரிகிறது. குழாய் கட்டி போஸ்டர் ஒட்டும் வழக்கம் இப்போதெல்லாம் காண முடிவதில்லை.

ஆனால் குழந்தைகளுக்கு இரண்டு மூன்று முறை மொட்டை போட்டு காது குத்தி மொய் வசூல் செய்வது இன்னமும் தொடரத்தான் செய்கிறது. :)

Divya said...

அருமையான பதிவு!
மிக அழகாக, எளிமையாக எழுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்!

குசும்பன் said...

சில புரிகிறது சில புரியவில்லை, இதுக்குதான் பாலியல் கல்வி வேண்டும் என்று சொல்கிறார்களே!!!

ஆனால் ஒரு பெண்ணின் வலியினை புரியவைத்து இருக்கிறீர்கள்.

Anonymous said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சினேகிதி

//மேற்கத்திய நாடுகளில் ஆண், பெண் எல்லாநிலைகளிலும் போட்டி போடும் போது நீங்கள் சொல்கிற புரிதல் தேவைப்படுகிறதா என்று தெரியவில்லை! ஆனால் தமிழகத்தில் பெண்ணை மாதவிடாய் நிகழ்வின் மூலம் இரண்டாம் நிலையில் வலுவற்றவளாக சித்தரிக்கிறார்கள் (அ) கொச்சைப்படுத்துகிறார்கள் என்பது தான் நிகழ்வு.//

அய்யா, பாரி.அரசு நல்ல கேள்வி தான். நானெல்லாம் விளையாட்டில் இருந்தவள், பயிற்சியின் போதும், போட்டிகளின் போதும் அந்த நாட்களுக்கென்று தனியாக எந்த சமாதானமும், என் கனவுகளை விட்டுக்கொடுத்தும் போனதில்லை, அப்போதெல்லம் அது பெரிய விசயமாகத்தோணாது, அப்படி செய்யும் பெண்களைப்பார்த்து கிண்டல் கூட செய்துள்ளேன். ஆனால் அது எல்லாமே முட்டாள் தனம் என்று இப்பொது தான் புரிகின்றது, இன்று தோழி சொல்லியிருப்பதைப்போல் சிறு கோபங்களும், சின்ன பிரச்சனையை பெரிதாக்கி அழுவதும் நடப்பது தான் ஆச்சரியம், ஏனென்றால் அது இன்றைய வாழ்வின் தாக்கம். எல்லாம் நன்றாகப்போகும் போது, அல்லது போவதாக நம்பும் போது எந்த பிரச்சனையும் மனதைப்பாதிக்காது. வலுவற்றவளாக சித்தரிக்கிறார்கள், கொச்சைப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் இல்லை உண்மையை அதன் காரணங்களுடன் ஏற்றுக்கொள்கின்றார்கள்.

//இது வலி(அ) வேதனை... புறமானது எனக்கு ஆதரவாய் இருக்க வேண்டும் என்கிற எண்ணவோட்டத்தை... எப்படி பிரதிபலிக்கிறீர்கள்... ஒரு வேளை நீங்கள் பெண்ணாய் இருப்பதாலா?//

அய்யா, உண்மையாகச் சொல்கின்றேன், இந்த பிரச்சனையினால் தான் பெண்கள் அந்த நாட்களில் அப்படியிருக்கின்றார்கள் என்பது சிலப்பெண்களுக்கே தெரியாது. என் சகோதரன் இதே கருத்தை கூறும் முன் நான் கூட அந்த வழியில் யோசிக்கவில்லை என்பதே உண்மை.

இ.கா.வள்ளி

கோபிநாத் said...

நல்ல பதிவு சினேகிதி...

\\அது கலாச்சாரம் என்றதோ இல்லை ஒரு பெண்ணுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய சடங்கென்றதோ ஒவ்வொருவரின் நம்பிக்கையைப் பொறுத்தது.\\\

சரியாக சொல்லியிருக்கிங்க...

இதில் வேதனை என்வென்றால் சினிமாவில் இந்த விஷயத்தை கொச்சை படுத்துவது தான்.

எளிமையான எழுத்து நடைக்கு பாராட்டுகள் ;)

கண்மணி/kanmani said...

அருமையான பதிவு
இப்போவெல்லாம் பெண்பிள்ளைகள் இதை அங்கீகரிப்பதில்லை.எனவே முன்னளவு விமரிசைப் படுத்தப் படாமல் அடக்கியே வாசிக்கப் படுகிறது.
ஆனாப் பாருங்க இந்த வீணாப் போன திரைப்படங்களில் இன்னமும் காட்டுகிறார்கள்.
அதுமட்டுமில்லை சமீபத்திய படமொன்றில் தனுஷ் 'வளர்மதி வயசுக்கு வந்துட்டா' னு போஸ்டர் அடிச்சி ஓட்டி ஆடிப் பாடுவது போல வரும்.
சம்மந்தப் பட்ட ஆண்/பெண் களுக்கு அவர்களின் உடல் வளர்ச்சி,மாற்றம் குறித்த விழிப்புணர்வு தேவையே.
ஆனாலும் ரொம்பப் பொடிசுகளுக்கு எப்படி புரிய வைப்பது?
என் தங்கையோட மாமியார் வீட்டில் இன்னமும் அந்த நாட்களில் ஒதுங்கி இருக்கனும்.சின்னப் பிள்ளை ஏன் அம்மாவைத் தொடக் கூடாதுனு கேட்க, இவ சொன்னா நான் சாணியை மிதிச்சிட்டேன்னு.
மறு மாசம் இப்படியான சமயத்தில் அந்தப் பிள்ளை கேட்டுதாம் அடிக்கடி ஏன் சாணியை மிதிக்கிறே பாத்து நடக்கக் கூடாதா?

Anonymous said...

"ஒரு பெண் சிசு கருவில் இருக்கும்போதே அவளுக்கு இரண்டு சினைப்பைகள் வளரும்.அவளுக்கு 9 -13 வயதுகளில் estrogen , progesterone என்ற இரண்டு hormone கள் சுரக்கத்தொடங்கும். அப்படி முதன் முதலில் சுரப்பதைத்தான் பூப்படைதல் என்று சொல்றம்.

சரி இதில எரிச்சல் விரக்தி வெறுப்பு வெறுமை இதெல்லாம் எப்பிடி வருதென்று கேக்கிறவர்கள் முதல்ல ovulation period ஐ விளங்கிக்கொள்ள வேணும்.

மாதவிடாய்ச் சுழற்சியின் காலம் 28 நாள் முதல் 35 நாள் வரை. மனவுளைச்சல் நேரம் அதாவது அதிகமான கவலை சிந்தனை போன்ற எக்ஸாம் ரைம் அல்லது வேறு சில சந்தர்ப்பங்களில் இந்தச் சுழற்சிக்காலம் 15 நாளாகக் குறைவதுமுண்டு.

பெண்களின் உடலிலுள்ள pituitary gland, Follicle secreting hormone (FSH) மற்றும் luteinizing hormone (LH ) போன்றவற்றைச் சுரக்கின்றது. முதல் 15 நாளும் FSH தான் அதிகமாகச் சுரக்கின்றது. 15வது நாள் LH அதிகமாகச்சுரக்கப்படும். அப்படி LH அதிகமாகச் சுரக்க்ப்படும் நாள் அல்லது அடுத்த நாள்தான் Ovulation நிகழ்கிறது.

ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 20 சினை முட்டைகள் பெண்ணின் Ovaries ல் முதிர்ச்சியடைகின்றன. அப்படி முதிர்ச்சியடையும் முட்டையோடு fallopian tube ல் ஆணின் விந்து சேர்ந்தால் அது சிசுவாக வளர்கிறது. Ovary ல் இருந்து முதிர்ச்சியடைந்த முட்டை வெளியேறுவதைத்தான் Ovulation என்கிறோம்.

இந்த முட்டைகளின் ஆயுட்காலம் வெறும் 24 மணித்தியாலம் தான். ஆனால் ஆண்களின் விந்துவின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 7 நாட்கள். ஆணின் விந்து கிட்டத்தட்ட 7 நாட்கள் genital tract அதாவது பெண்ணின் vagina, uterus அல்லது fallopian tube ல் உயிருடன் இருக்கும். ovulation period ல் சினை முட்டையும் விந்தும் fallopian tube ல் சேர்ந்தால் கருவாக வளரும்."

இந்தப் பகுதியில் நீங்கள் சில தவறுகளை விட்டுள்ளீர்கள்.

* FSH என்பது (follicle stimulating hormone)பெண்கள் பிறக்கும் போது அவர்களின் சூலகம் எனப்படும் கட்டமைப்பில் உள்ள முதன்னிலை முட்டைக் கலங்களை வளரத்தூண்டும் ஓமோன்)- FSH என்பதற்கு தவறான விரிவாக்கம் வழங்கியுள்ளீர்கள்.

* பொதுவாக ஒரு மாதத்துக்கு ஒரு முட்டை என்றுதான் முட்டையின் பூரண முதிர்ச்சி அமையும். 20 முட்டைகள் ஒன்றாக முதிர்ச்சி அடைந்து ஒரே மாதத்தில் வெளியாவதில்லை.

(சில அசாதாரண சந்தர்ப்பங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகள் வெளியிடப்படலாம். அதன் ஒரு நிலையில் தான் ஒரே கருத்தரிப்பில் இரட்டைக் குழந்தைகள், பல குழந்தைகள் பிறக்க வாய்ப்புருவாகின்றன.)

* மதாவிடாச் சக்கரம் 28- 30 நாள் வரையும் தான் அமையும். 35 நாளுக்கு என்று போவது அசாதாரணம்.

* முட்டை பலோபியன் குழாயில் விடப்பட்டு 24 மணி நேரத்துக்கு அதிகமாகவும் உயிர் வாழும். முட்டை கருக்கட்டின் அது பலோபியன் குழாயிலேயே முதல் முளைய நிலை கலப் பிளவுகளை காண்பிக்கிறது. கருப்பையில் முளையம் பதிய குறைந்தது ஒரு வாரமாவது எடுக்கும். இதன் போது முட்டை முளைய நிலையில் பலோபியன் குழாயில் தான் உயிரோடு இருக்கும்.

* ஆண்களின் புணரிக்கலங்களான விந்துகள் கூடியது 72 மணி நேரங்கள் பெண்ணின் இனப்பெருக்க அங்கத்துள் உயிருடன் இருக்கும். 7 நாட்கள் என்பது தவறானது. :)

* உடல் இரசாயன மாற்றங்களின் விளைவாக பெண்களின் உள மாற்றங்கள் நிகழ்வது மட்டுமன்றி பெண்களின் உடல் வெப்பநிலையும் இக்காலத்தில் மாற்றங்களைக் காணும்.

* பெண்கள் இப்படியெல்லாம் தமக்கு உபாதைகள் இருக்கின்றன என்பதைக் கூட ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லையே. ஆண்களோடு மல்லுக்கு நின்றால் எப்படி ஆண்கள் இவர்களைப் புரிஞ்சு கொள்ளுறது. :)

* அன்பா அணுகிற ஆண்களையே சந்தேகிக்கிற பெண்களும் உலகத்தில இருக்கினம். அதற்கும் இவைதான் காரணமா..??!

* மொத்ததில் உங்கள் ஆக்கம் பெண்ணாக பெண்ணின் நிலையைச் சொல்ல முற்பட்டிருக்கிறீங்க. ஆனால் நீங்கள் சொன்னதைக் காட்டிலும் தெளிவாக மனித உயிரியல் சொல்லி இருக்கிறது.

தேவையானவர்கள் மனித உயிரியல் (Human biology) அல்லது மனித உடற்தொழிலியல் (Human physiology) நூல்களைப் படியுங்கள்.

நன்றி.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

//
அய்யா, உண்மையாகச் சொல்கின்றேன், இந்த பிரச்சனையினால் தான் பெண்கள் அந்த நாட்களில் அப்படியிருக்கின்றார்கள் என்பது சிலப்பெண்களுக்கே தெரியாது. என் சகோதரன் இதே கருத்தை கூறும் முன் நான் கூட அந்த வழியில் யோசிக்கவில்லை என்பதே உண்மை.

இ.கா.வள்ளி
//
நன்றி இ.கா.வள்ளி!
அப்புறம் ஒரு வேண்டுகோள் இந்த அய்யா! எல்லாம் வேண்டாமே :) நான் இன்னும் பெடியன் தான் :))

நான் கேள்விகளை எழுப்பிய திசை எதிர்மறை ஏனென்றால்...

உளவியல்/மனோவியல் வலியை/வேதனையை பற்றிய அறிவை பெறுவதையே சிறந்த தீர்வாக வைக்கிறது.

நன்றி!

சினேகிதி said...

\\மற்றப்டி, பூப்ப்டைந்த இளம்பெண்களுக்கு, அதைப் பற்றிய அறிவை ஊட்ட வேண்டியது தாய் உட்பட, வீட்டில் உள்ள பெண்களின் தலையாய கடமை.\\

சில விசயங்கள் வீட்டுப்பெண்களுக்கே தெரியாது சீனா! அவர்களுடைய அம்மா பாட்டிகள் சம்பிரதாயம் சடங்கு என்று சொன்னதையே இவர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

\\ஆனால் குழந்தைகளுக்கு இரண்டு மூன்று முறை மொட்டை போட்டு காது குத்தி மொய் வசூல் செய்வது இன்னமும் தொடரத்தான் செய்கிறது. :)\\

மொட்டை போடுவது ஏன்?? அதற்கும் ஏதாவது காரணமிருக்கும்.
பால் பருக்குதல் என்றொரு சடங்கிருக்கல்லா? ஆதி கால மக்களும் இந்தச் சடங்கு செய்திருக்கிறார்கள். முபுதி tribe என்றழைக்கப்பட்டிருக்கிறது. தாய்மாமனுக்குப் பதில் தந்தைதான் முதல் திண்ம உணவு? (solid food ) ஊட்டிவிடுவது என நினைக்pகறேன். ஜமாலனுக்குத் தெரிந்திருக்கும் இதுபற்றிய மேலதிக தகவல்கள்

சினேகிதி said...

நன்றி திவ்யா குசும்பன்.
\\இந்த பிரச்சனையினால் தான் பெண்கள் அந்த நாட்களில் அப்படியிருக்கின்றார்கள் என்பது சிலப்பெண்களுக்கே தெரியாது. என் சகோதரன் இதே கருத்தை கூறும் முன் நான் கூட அந்த வழியில் யோசிக்கவில்லை என்பதே உண்மை.

இ.கா.வள்ளி
\\

வள்ளி அதிஷ்டகார அக்கா நீங்கள் :-)

சினேகிதி said...
This comment has been removed by the author.
சினேகிதி said...

நன்றி கண்மணி ,கோபிநாத்.

\\மறு மாசம் இப்படியான சமயத்தில் அந்தப் பிள்ளை கேட்டுதாம் அடிக்கடி ஏன் சாணியை மிதிக்கிறே பாத்து நடக்கக் கூடாதா\\

:-)))


பொய் சொன்னால் இப்பிடித்தான் :-) பொடிசுகளுக்கு எல்லாம் தெரியுமிப்ப நீங்கள் பெரிசுகளுக்குச் சொல்லறதுபோலவே சொல்லலாம் என்று நினைக்கிறன்.
திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் வந்த ஆடுறா ராமா என்ற வளர்மதிக்கு poster ஒட்டுற பாடலின் மெட்டோ என்னவே தெரியா எனக்கந்தப் பாடல் பிடிக்கும். சேவல் கூட்டங்கள் மீற்றிங் போடுங்க குசுpயா கூத்தாடுங்க என்றெல்லாம் வரும் அந்தப் பாடலில் :-).

சினேகிதி said...

அநாநி நண்பருக்கு,

\\FSH என்பது (follicle stimulating hormone)பெண்கள் பிறக்கும் போது அவர்களின் சூலகம் எனப்படும் கட்டமைப்பில் உள்ள முதன்னிலை முட்டைக் கலங்களை வளரத்தூண்டும் ஓமோன்)- FSH என்பதற்கு தவறான விரிவாக்கம் வழங்கியுள்ளீர்கள்.\\


FSH க்கு நீங்கள் குடுத்த விரிவாக்கம்தான் சரி. நன்றி.

\\20 முட்டைகள் ஒன்றாக முதிர்ச்சி அடைந்து ஒரே மாதத்தில் வெளியாவதில்லை.\\

கிட்டத்தட்ட 20 முட்டைகள் உருவாகின்றன . அதில் ஒன்று சிலநேரம் ஒன்றுக்கு மேற்பட்டவை முதிர்ச்சியடைகின்றன.

ripest egg ஐ எப்படித் தமிழில் சொல்லுவீர்கள? matured egg ஐ எப்படிச் சொல்வீர்கள்?

\\மதாவிடாச் சக்கரம் 28- 30 நாள் வரையும் தான் அமையும். 35 நாளுக்கு என்று போவது அசாதாரணம்.\\

மாதவிடாய்ச் சுழற்சியின் காலம் 28 நாள் முதல் 35 நாள் வரை என்றுதான் நான் எழுதியிருந்தேன். அது ஒரு range. 28 லிருந்து 35 நாளுக்குள் எதுவாக இருந்தாலும் அது சாதாரணம் என்றுதான் நான் நினைக்கிறேன். சிலருடைய மாதவிடாய் சுழற்சி 60 நாட்களள் வரை எடுக்கிறது அது அசாதாரணம் (இவர்கள் எந்தவித OCS ம் எடுத்துக்கொள்ளாதவர்கள்).

\\ஆண்களின் புணரிக்கலங்களான விந்துகள் கூடியது 72 மணி நேரங்கள் பெண்ணின் இனப்பெருக்க அங்கத்துள் உயிருடன் இருக்கும். 7 நாட்கள் என்பது தவறானது. :)\\

National Institute for Clinical Excellence 2004: 27 ன் படி விந்து 7 நாட்கள் வரை பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியில் உயிர் வாழும்.

\\ஆண்களோடு மல்லுக்கு நின்றால் எப்படி ஆண்கள் இவர்களைப் புரிஞ்சு கொள்ளுறது. :)\\

இரண்டுபேர் சேர்ந்தாத்தான் மல்லுக்கட்ட முடியும் :-) ஆண்களோடு மல்லுக்கு நிக்கவேணும் போல அந்நேரத்தில அவர்களுக்குத் தோணினால் என்ன செய்றது :-) நீங்கள் மல்லுக்கு நிக்காமல் இருக்கக்கூடாதோ :-)

மற்றது அன்பா அணுகிற ஆண்களைச் சந்தேகிப்பது பற்றித் தெரியவில்லை.

ஆனால் அன்பென்றது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தப்படும். நீங்கள் அன்பென்று நினைப்பது ஓருவேளை மற்றவருக்கு அன்பாகத் தெரியாமலிருக்கலாம்.

சத்தம் போட்டுக் கதைக்கிறது எடுத்ததுக்கெல்லாம் கத்துறது உங்கள் சுபாவம் அதாவது அப்பிடி இருப்பதுதான் உங்கள் மொழியில் அன்பென்றால் அதை மற்றவருக்குப் புரியி வைக்கவேண்டும் என நினைக்கிறேன் :-)

\\தேவையானவர்கள் மனித உயிரியல் (Human biology) அல்லது மனித உடற்தொழிலியல் (Human physiology) நூல்களைப் படியுங்கள்.\\

தவறைச் சுட்டிக்காட்டியதற்கும் விளக்கங்களுக்கும் நன்றி நண்பரே.

Anonymous said...

\\20 முட்டைகள் ஒன்றாக முதிர்ச்சி அடைந்து ஒரே மாதத்தில் வெளியாவதில்லை.\\

///கிட்டத்தட்ட 20 முட்டைகள் உருவாகின்றன . அதில் ஒன்று சிலநேரம் ஒன்றுக்கு மேற்பட்டவை முதிர்ச்சியடைகின்றன.

ripest egg ஐ எப்படித் தமிழில் சொல்லுவீர்கள? matured egg ஐ எப்படிச் சொல்வீர்கள்?///

தப்பு. முட்டைகளில் primary follicle, secodary follicle இவற்றில் oocyte எனப்படும் முதன்னிலை முட்டைக் கலமே fsh இன் தூண்டலின் பின் முதிர்ச்சியடைகின்றன. இவற்றில் வெகு சிலவே முழு முட்டையாக வளர்கின்றன. மாதத்தில் பொதுவாக ( வழமைக்கு மாறானதை பொது என்று கொள்வதில்லை) 1 முட்டை என்று வெளியிடப்படுகிறது. 20 என்பது மிகத்தவறான தகவல். 20 primary follicles என்ன அதற்கு மேலும் முதிர்வடையத் தூண்டப்படலாம். ஆனால் பெரும்பாலும் ஒன்றுதான் முழு வளர்ச்சியடைந்து முட்டையாக வெளியிடப்படும்.

http://en.wikipedia.org/wiki/Folliculogenesis

http://en.wikipedia.org/wiki/Ovulation

\\மதாவிடாச் சக்கரம் 28- 30 நாள் வரையும் தான் அமையும். 35 நாளுக்கு என்று போவது அசாதாரணம்.\\

///மாதவிடாய்ச் சுழற்சியின் காலம் 28 நாள் முதல் 35 நாள் வரை என்றுதான் நான் எழுதியிருந்தேன். அது ஒரு range. 28 லிருந்து 35 நாளுக்குள் எதுவாக இருந்தாலும் அது சாதாரணம் என்றுதான் நான் நினைக்கிறேன். சிலருடைய மாதவிடாய் சுழற்சி 60 நாட்களள் வரை எடுக்கிறது அது அசாதாரணம் (இவர்கள் எந்தவித OCS ம் எடுத்துக்கொள்ளாதவர்கள்).///

பொதுவாக 30 நாட்கள்க்குள் வழமையானது என்று கொள்வார்கள். அதற்கு மேல் என்றால் oligomenorrhea நிலை என்பார்கள். சில நூல்கள் 35 நாட்களுக்கு மேல் என்றும் இதை வரையறுத்துள்ளன.

\\ஆண்களின் புணரிக்கலங்களான விந்துகள் கூடியது 72 மணி நேரங்கள் பெண்ணின் இனப்பெருக்க அங்கத்துள் உயிருடன் இருக்கும். 7 நாட்கள் என்பது தவறானது. :)\\

///National Institute for Clinical Excellence 2004: 27 ன் படி விந்து 7 நாட்கள் வரை பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியில் உயிர் வாழும்.///

பொதுவாக 72 மணி நேரங்கள் தான். 7 நாட்கள் என்பது பொதுவானதல்ல. சில சந்தர்ப்பங்களில் 7 நாட்களுக்கு அவை தென்படலாம். ஆனால் உயிரோடு அதாவது கருக்கட்டும் இயல்போடு இருக்கும் என்பதை எப்போதும் எதிர்பார்க்க முடியாது. அதாவது 72 மணி நேரத்துக்குள் இருக்கும் இயல்போடு ஒப்பிடும் போது அதன் இயல்பு மாறுபட்டிருக்கும்.பலவீனமாக இருக்கும்..! நீங்கள் கூறியது போல 7 நாளைக்கு சேமிச்சு வைக்கப்பட்டு இருக்கும் என்பது ஏற்புடையதல்ல.

காரணம் அதற்குத் தேவையான சக்தியை அவை பெண்ணின் உடலில் இருந்து பெறமுடியாது என்பதால்..!

\\ஆண்களோடு மல்லுக்கு நின்றால் எப்படி ஆண்கள் இவர்களைப் புரிஞ்சு கொள்ளுறது. :)\\

///இரண்டுபேர் சேர்ந்தாத்தான் மல்லுக்கட்ட முடியும் :-) ஆண்களோடு மல்லுக்கு நிக்கவேணும் போல அந்நேரத்தில அவர்களுக்குத் தோணினால் என்ன செய்றது :-) நீங்கள் மல்லுக்கு நிக்காமல் இருக்கக்கூடாதோ :-)///

ஆண்களுக்கு ரென்சன் இருக்காதோ..??! பெண்களுக்கு மட்டும் தானா ரென்சன்..??! :-)

///மற்றது அன்பா அணுகிற ஆண்களைச் சந்தேகிப்பது பற்றித் தெரியவில்லை.

ஆனால் அன்பென்றது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தப்படும். நீங்கள் அன்பென்று நினைப்பது ஓருவேளை மற்றவருக்கு அன்பாகத் தெரியாமலிருக்கலாம்.

சத்தம் போட்டுக் கதைக்கிறது எடுத்ததுக்கெல்லாம் கத்துறது உங்கள் சுபாவம் அதாவது அப்பிடி இருப்பதுதான் உங்கள் மொழியில் அன்பென்றால் அதை மற்றவருக்குப் புரியி வைக்கவேண்டும் என நினைக்கிறேன் :-)///

ஏன் பெண்கள் கத்திறதில்லையா?? ரெம்ப அநியாயமா இருக்கிறது உங்கள் வாதம். ரென்சன் வந்தா எல்லாரும் தான் கத்துவனம். தங்கள் சத்தம் தான் எடுபட வேணும் என்று. :-)

கானா பிரபா said...

//கோபிநாத் said...
சரியாக சொல்லியிருக்கிங்க...

இதில் வேதனை என்வென்றால் சினிமாவில் இந்த விஷயத்தை கொச்சை படுத்துவது தான்.

எளிமையான எழுத்து நடைக்கு பாராட்டுகள் ;)//

நம்ம தல சொன்னா சரியா தான் இருக்கும் ;-)

தென்றல் said...

எளிமையாக சொல்லியிருக்கீங்க. நன்றி,சிநேகிதி!

மு. மயூரன் said...

அச்சில் வெளிவரும் இதழ்கள் சிற்றிதழ்களின் எழுத்து நடையும் சட்டகங்களும் அப்படியே வலைப்பதிவுகளிலும், அதன் தொழிநுட்ப இயலுகைகளை கவனத்தில் கொள்ளாமல் பின்பற்றப்பட்டுவரும் இடைமாறு காலகட்டத்தில், இப்படிச்சொல்வது உங்களை சோர்வடையச்செய்துவிடக்கூடாது சினேகிதி, தமிழ் இணைய எழுத்திற்கான புதிய வீச்சையும் , வடிவத்தையும் உங்கள் இந்தப்பதிவில் நான் காண்கிறேன்.

இந்த நட்சத்திர வாரத்தின் உங்கள் பதிவுகள் அனைத்தும் பெறுமதியானவை.

பதிவின் உள்ளடக்கம் தொடர்பாக,

பாலியல் கல்வி என்பது இங்கே இலங்கையைப்பொறுத்தவரை வெறும் உடற்கூற்றியலாக, உயிரியலாக உறுப்புக்களின் விஞ்ஞானமாக மட்டுமே கற்பிக்கப்படும் வரட்டுப்போக்கொன்று இருக்கிறது.

அடுத்த பக்கத்தில் மேற்கில் எழுதி வைக்கப்பட்டவற்றை அப்படியே கொண்டுவந்து கருத்தரங்குகளில் ஒப்பிக்கும் என் ஜீ ஓ தனம்.

பாலியல் முரண்பாடு, வேறுபாடு, பாலியல், அதன் உளவியல், அதன் அழகியல், போன்றவற்றை கற்கும், பாழ்வில் நடைமுறைப்படுத்துமளவுக்கு சிறுவர்களையும் இளைஞர்களையும், முதியோரையும் பயிற்றுவிக்கும் கல்விமுறை ஒன்று காலத்தின் தேவையாகி நிற்கிறது.

மாதப்போக்குக்காலங்களில் பெண்ணுக்கு அரவணைப்புத்தேவை என்ற கருத்துக்கு மாற்றாக, அது சுயபச்சாதாபத்தையும் இயலாமையையும் உருவாக்குவதாக, தன்னைப் பெண் பலவீனமாக உணருவதற்கான குறியீடாக அமைவதாக அளிக்கப்பட்ட பின்னூட்டம் கவனதிற்குரியது.

Anonymous said...

//அச்சில் வெளிவரும் இதழ்கள் சிற்றிதழ்களின் எழுத்து நடையும் சட்டகங்களும் அப்படியே வலைப்பதிவுகளிலும், அதன் தொழிநுட்ப இயலுகைகளை கவனத்தில் கொள்ளாமல் பின்பற்றப்பட்டுவரும் இடைமாறு காலகட்டத்தில், இப்படிச்சொல்வது உங்களை சோர்வடையச்செய்துவிடக்கூடாது சினேகிதி, தமிழ் இணைய எழுத்திற்கான புதிய வீச்சையும் , வடிவத்தையும் உங்கள் இந்தப்பதிவில் நான் காண்கிறேன்.//

என்ன சொல்ல வாறீங்க???? ஒண்ணுமே புரியல உலகத்தில....

Anonymous said...

சினேகிதி,
பதிவு அருமையிலும் அருமை.
மாதவிடாய், பாலியல் பற்றி எழுதும் போதே நினைத்தேன்.
பலர் பின்னூட்டம் இடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதிலும் குறிப்பாக ஆண்கள்.
//மேற்கில் எழுதி வைக்கப்பட்டவற்றை அப்படியே கொண்டுவந்து கருத்தரங்குகளில் ஒப்பிக்கும் என் ஜீ ஓ தனம். //
அதை வேறுபடுத்தி கூறுவீர்களா? அவர்களின் கருத்துகள் பொய்யென கூறுகிறீர்களா?

//பாலியல் முரண்பாடு, வேறுபாடு, பாலியல், அதன் உளவியல், அதன் அழகியல், போன்றவற்றை கற்கும், பாழ்வில் நடைமுறைப்படுத்துமளவுக்கு சிறுவர்களையும் இளைஞர்களையும், முதியோரையும் பயிற்றுவிக்கும் கல்விமுறை ஒன்று காலத்தின் தேவையாகி நிற்கிறது.//
யாராவது புதுசா இவை பற்றி வலைப்பதிவொன்று ஆரம்பிக்கலாமே. அது பற்றிய அறுவு உள்ளவர்கள் தயவு செய்து எழுதுங்கள்.

//அன்பா அணுகிற ஆண்களைச் சந்தேகிப்பது பற்றித் தெரியவில்லை.//
அன்பாய் அணுகுவது போல நடிப்பவர்களை எப்படி இனங்காண்பது?
எனக்கு காதலர் இருப்பது தெரிந்தும் சற்று வித்தியாசமாக என்னை ஒருவர் அணுகுகின்றார். மிகவும் வெளிப்படையாக கதைப்பது போன்று பாலியல் பற்றியே அதிகம் கதைக்கின்றார். இதுவரை தவறான நடவடிக்கைகள் எதிலும் அவர் ஈடுபடாவிட்டாலும் அவரது பேச்சில் எப்போதும் பாலியல் விடயங்களே இருக்கும். அவர் என்னுடன் அப்படி கதைப்பதில் எனக்கு விருப்பமில்லை என்று தெரிந்த பின்ன்ரும் அது பற்றியே கதைக்கிறார். எனது காதலருக்கு இது பற்றி சொன்ன போதும் அவர் இது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. சிலர் பாலியல் பற்றிக் கதைப்பதிலே இன்பம் அடைவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஒருவேளை அப்படி ஏதாவது இருந்தால் நான் என்ன செய்ய முடியும்.
அதிலும் குறிப்பாக அடிக்கடி ஈ-மெயில் வேறு அனுப்புகிறார். நண்பி என என்னை அழைத்தாலும் கடித வரிகள் காதலிக்கு எழுதுபவை போல இருக்கிறது. எனது மடியில் படுத்திருப்பது போன்று நினைப்பதாக கூட எல்லாம் எழுதுகிறார். நான் என்ன செய்ய முடியும்? எனது மனம் தான் அவரைத் தப்பாக நினைக்கிறதா? அவர் என்னுடன் ஒரு முறை கூட தப்பாக நடக்க முயற்சித்ததில்லை. ஆயினும் யதார்த்தமாக தொடுவது போன்று தொட்டு பேசுவார். எனக்கு அருவருப்பாக இருக்கின்றது. என்னால் என்ன செய்ய முடியும்? சில வேளை பார்த்தால் என்னில் தான் பிழை இருப்பது போல் தோன்றுகின்றது. அவர் மிகவும் சமூக அக்கறை உள்ளவர். சமூகப் பிரச்சனை பற்றியே அதிகம் பேசுவார். அவர்கள் மிகவும் உயர்வானவர்கள் தானே. அப்படியான ஒருவர் தப்பாக நடப்பாரா?
அதே நேரம் அவர் என்னைப் போல பல பெண்களிடம் நடந்து கொள்வதாக கேள்விப்பட்டேன். இதை பற்றி யாராவது எனக்கு தெளிவு படுத்துங்கள்.
எனது பெயரைப் போடவில்லை. சும்மா ஒரு பெயரைப் போடுகின்றேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நான் அரைச் சதம் போட்டவன்,அம்மா
அக்கா,தங்கச்சி, மனைவி என நெருங்கிய பெண் உறவுகளுடன் வாழ்ந்தும், நீங்கள் குறிப்பிட்ட அவர்கள் ஹோமோன் விடயமெதுவுமே தெரியாமலே வாழ்ந்துவிட்டேனா??தெரிய விடாமலே
வாழ வைக்கப்பட்டேனா??
ஆனால் ஒன்று ஞாபகம் அம்மா, அக்கா ஏதாவது குசு குசுத்துக கதைப்பார்கள், நாங்கள் நிற்கும் போது
நிறுத்தி விடுவார்கள்.அக்காவுக்கு இருந்த இடத்துக்கு சாப்பாடு போகும்.
இதற்கு மேல் என் விளையாட்டுக் குணம் ஆராய முற்படவில்லை.
மேலும் புனித நீராட்டென்றதும் ஞாபகம் வந்தது.
என் உறவினர் சில தினங்களுக்கு முன்
லண்டனில் இருந்து மகள் பூப்பெய்திய விபரம் கூறி, பெரிசாக செய்யும் நோக்கம் எனக்கில்லை(உண்மை),ஆனால் இது நான் மாத்திரம் எடுக்கும் முடிவல்ல என்றார்.
அதாவது இவர் பெற்றோர்,மனைவி பெற்றோர் எல்லோரும் முடிவெடுக்க
வேண்டு மென்றார்.
அப்போ பிள்ளையின் முடிவு என்ன? என்றேன். அது சனம் பிறைன் வாஸ் பண்ணிப்போடுங்கள் என்றார்.
பூனைக்கு மணி கட்டுவது யார்??
அது இனிமேல் அம்மா,அப்பா ஆகும் இளைஞர் சமுதாயத்தின் கையில் தான் உண்டு.

ஒரு பொடிச்சி said...

சிநேகிதி எழுதியது://எனவே இன்றைய அம்மாக்கள் உங்கள் மகன்களுக்கு சின்ன வயசில இருந்தே அக்காவை தங்கையை இந்த 5 நாள்ல தொந்தரவு பண்ணாத என்றும் அதற்கான காரணத்தை முடிந்தளவு சொல்லியும் வளர்த்தால் பிற்காலத்தில உங்கட மகன் நல்ல ஒரு கணவனாக மனைவியைப் புரிந்துகொள்ளக்கூடியவனாக தன் மகளுக்கு நல்ல தந்தையாக இருப்பான்.//

சங்கீதா பின்னூட்டததில: //மாதவிடாய், பாலியல் பற்றி எழுதும் போதே நினைத்தேன்.
பலர் பின்னூட்டம் இடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதிலும் குறிப்பாக ஆண்கள்.//

பாலியல் பற்றி பேசுவதையே ஒரு குற்றமாகப் பார்க்கிற சமூகந்தான் அதனால் நடக்கிற நிறைய குற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது. இது பேசப்படுவதும் இதில நிறைய ஆண்கள் + பெண்கள் பங்கெடுப்பதும் முக்கியமானது. பெண்களப்பற்றி/பெண் உடல் பற்றி பெண்களுக்கே நிறையத் தெரியாது. இதில் ஆண்களுக்கு எப்படி/யார் விளங்கப்படுத்துவது?
இந்த மாதிரியான கட்டுரைகளூடான உரையாடல்கள்தான் ஆண்-பெண் வேறுபாடுகளை மாற்றக் கூடிய புரிதல்களை ஏற்படுத்தும்.

பேசப்படாத விடயங்கள, அலட்டிக் கொள்ளாம, எளிமையா அழகாக விளங்கப்படுத்தி எழுதிறதுக்கும், நட்சத்திர வாரத்தில பயனுள்ள பலவற்றை எழுதியதற்கும் நன்றிகள் சிநேகிதி.. நேரங் கிடைக்கும் போது தொடர்ந்தும் எழுதுங்கள்.
****
1997 ம் ஆண்டு அப்பிடி எண்டு நினைக்கிறன். இங்க 'மருத்துவம்' என்றொரு சஞ்சிகை கனடிய தமிழ் மருத்துவர்களால் கொண்டரப்பட்டது. நல்லதொரு சஞ்சிகை.
அதில நீங்கள் எழுதிறத ஒத்த இதர நிறைய விடயங்கள ஒரு பெண் வைத்தியர் தொடர்ந்து எழுதினார். பிறகு போதிய ஆதரவில்லாததால சஞ்சிகை வர்றது நிண்டுட்டுது.(முக்கியமாய்ப் பெண்களைப் பொறுத்தவரை) இங்குள்ள சூழலில் இன்னும் இப்படியான கட்டுரைகளுக்கான (அறிவூட்டலிற்கான) தேவை நிறைய உள்ளது. i am happy to see u r writing these with ur studies workload. thanks again.

சினேகிதி said...

\\நம்ம தல சொன்னா சரியா தான் இருக்கும் ;-)\\

அப்ப வால் சொன்னாப் பிழையா :-)

சினேகிதி said...

\\இப்படிச்சொல்வது உங்களை சோர்வடையச்செய்துவிடக்கூடாது சினேகிதி, தமிழ் இணைய எழுத்திற்கான புதிய வீச்சையும் , வடிவத்தையும் உங்கள் இந்தப்பதிவில் நான் காண்கிறேன்\\

மயூரன் அண்ணா நீங்கள் பாரட்டுறீங்கிளா சாடுறீங்கிளா ?

நீங்கள் சொன்ன பின்னோட்டம் கவனத்தில் கொள்ளப்பட்டது.

சினேகிதி said...

\\மேற்கில் எழுதி வைக்கப்பட்டவற்றை அப்படியே கொண்டுவந்து கருத்தரங்குகளில் ஒப்பிக்கும் என் ஜீ ஓ தனம். //
அதை வேறுபடுத்தி கூறுவீர்களா? அவர்களின் கருத்துகள் பொய்யென கூறுகிறீர்களா\\

மயூரன் அண்ணா சங்கீதா உங்களைத்தான் கேக்கிறா வந்து பதில் சொல்லுங்கோ.

\\யாராவது புதுசா இவை பற்றி வலைப்பதிவொன்று ஆரம்பிக்கலாமே. அது பற்றிய அறுவு உள்ளவர்கள் தயவு செய்து எழுதுங்கள்.
\\

ஆகா...நீங்களும் வாங்கோ தொடங்குவம்.

சங்கீதா, உங்களுக்கு காதலர் இருப்பது தெரிந்தும் அப்படி ஒருவர் நடந்து கொள்கிறார் என்றால் அவர் நட்பாகத்தான் பழகுறாரோ தெரியவில்லை.

மடியில படுக்கிறதெண்டு எல்லாப் பெடியங்களுக்கும் ஆசையிருக்கும். அவங்கள் நட்பையும் காதலையும் பெருசாக் குழப்புறேல்ல அவங்களுக்கு வித்தியாசம் தெரியுறேல்லயாக்கும்.

என்ன சொல்ல சங்கீதா? நீங்கள் சொன்ன குணம் எல்லாம் எனக்கத் தெரிஞ்ச ஒராளிட்டயும் இருக்கு. நான் அவனிட்ட கேட்டனான் ஆனால் தான் காதலர் இருக்கிறவைட்ட எல்லாம் தான் அப்பிடிக் கதைக்கிறேல்ல என்று சொல்றான்.

சினேகிதி said...

\\அதாவது இவர் பெற்றோர்,மனைவி பெற்றோர் எல்லோரும் முடிவெடுக்க
வேண்டு மென்றார்.
அப்போ பிள்ளையின் முடிவு என்ன? என்றேன். அது சனம் பிறைன் வாஸ் பண்ணிப்போடுங்கள் என்றார்.
பூனைக்கு மணி கட்டுவது யார்??
அது இனிமேல் அம்மா,அப்பா ஆகும் இளைஞர் சமுதாயத்தின் கையில் தான் உண்டு.
\\

சில வீடுகள்ல அப்பா மாருக்குப் பிடிக்காது சில இடத்தில அம்மா மாருக்குப் பிடிக்காது. எங்கட உறவினர் வீட்டிலயும் பேச்சுவார்த்தை நடக்குது :-) இந்த கோடை விடுமுறைக்குள்ள ஒரு முடிவுக்கு வந்திடுவினம் :-)

சினேகிதி said...

\\பாலியல் பற்றி பேசுவதையே ஒரு குற்றமாகப் பார்க்கிற சமூகந்தான் அதனால் நடக்கிற நிறைய குற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது. இது பேசப்படுவதும் இதில நிறைய ஆண்கள் + பெண்கள் பங்கெடுப்பதும் முக்கியமானது. பெண்களப்பற்றி/பெண் உடல் பற்றி பெண்களுக்கே நிறையத் தெரியாது. இதில் ஆண்களுக்கு எப்படி/யார் விளங்கப்படுத்துவது?
இந்த மாதிரியான கட்டுரைகளூடான உரையாடல்கள்தான் ஆண்-பெண் வேறுபாடுகளை மாற்றக் கூடிய புரிதல்களை ஏற்படுத்தும்.
\\


எங்களுக்கே எங்கட உடம்பைப் பற்றி மட்டுமில்ல மனதைப் பற்றியும் நிறைய விசயங்கள் விளங்கேல்ல!

சங்கீதா சொன்னமாதிரி தெரிஞ்சாக்கள் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி இதுகளைகப் பற்றி எழுதலாம்தான்.

Anonymous said...

வணக்கம் சினேகிதி,

தற்செயலாக நீங்கள் எழுதிய இந்தப்பதிவை பார்த்தேன்.

அதில்... எனக்கு தெரிஞ்ச ஒரு நண்பர் சாமத்தியவீட்டுக்கு போனால் "கான் யூ டெமொன்ஸ்ரேட் இட்" எண்டு கேட்பாராம் எண்டு எழுதி இருந்தீங்கள். அந்த நண்பர் எண்டு என்னைத்தான் குறிப்பீட்டீங்களோ தெரியாது.

நான் யாழில் ஒரு கருத்தாடலில் கிருபன் அண்ணை பகிடியாக "யூ டிட் இட்" எண்டு சொல்லி வாழ்த்து சொல்லலாம் எண்டு சொன்னதுக்கு ஏன் இப்பிடியும் சொல்லலாம் எண்டு பகிடியாக எழுதி இருந்தன். ஆனா எவரையாவது அப்படி நான் எழுதினது பாதித்து இருந்தால் மன்னித்து கொள்ளவும்.

உண்மையில் நான் பெண்கள் சார்பாக வாதாடுபவன். எனது கருத்துக்களை வாசித்தவர்களுக்கு தெரிஞ்சு இருக்கும். நான் பெண்கள் பக்கம் நிக்கிறன் எண்டு என்னுடன் பலர் கோபித்து சண்டைக்கு எல்லாம் வந்து உள்ளார்கள்.

சரி விசயம் என்ன எண்டால் வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும் என்பது ஆண்களுக்கும் இருக்கிது எண்டு நான் நினைக்கிறன்.

வெளியில் வெளிக்காட்டப்படாவிட்டாலும் சிறுவனாக இருந்து வாலிபத்தை அடையும்போது பல்வேறு குழறுபடிகளை ஆண்களும் தங்கள் வாழ்வில் சந்திக்கின்றார்கள்.

ஆண்கள் வயதுக்கு வருவது என்பது.. நான் உடலியல் ரீதீயாக மட்டும் இன்றி... மனநிலையையும் சேர்த்து சொல்லிறன்.

உதாரணத்துக்கு... ஊரில எத்தனையோ பெடியங்கள் O/L இல 8 டி - எல்லாப்பாடத்துக்கும் அதிவிசேட சித்தி பெற்று பிறகு.. A/L இல எல்லாப் பாடமும் குண்டு அடிக்கிறது - பெயில் ஆகிறது யாழ்ப்பாணத்தில வழமை. இதுகூட ஆண்கள் வயதுக்கு வருவதன் ஒரு பாதிப்பு - உதாரணமாக கொள்ளலாம் எண்டு நினைக்கிறன்.

பெண்களிற்கு ஆண்களை விட இளம் வயதில் மனம் பக்குவப்படுகின்றது அல்லது பாலியல் உணர்வுகள் வெளிக்காட்டப்படுவதாய் இருந்தாலும்... ஆண்களிற்கு சிறிது சிறிதாக பூதாகரமாக தோன்றும் பாலியல் கோளாறுகள் அவர்கள் வாழ்க்கையையே சூரையாடுகின்றது என்பது எத்தின பேருக்கு தெரியுமோ தெரியாது.

சுருக்கமாக சொன்னால் ஆண்களிற்கு சுமார் 15 - 18 வயது இடைவெளி ஒரு கண்டம் எண்டு சொல்லவேணும்.

மேலும்.. பெண்களின் பிரச்சனைகள் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது போல் ஆண்களின் பிரச்சனைகள் பிரபலப்படுத்தப்படப் படவில்லையோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

பெண்களின் பிரச்சனைகள் - உள் உணர்வுகள் ஆண்களிற்கு விளங்காமல் இருப்பது இயற்கையாகவே ஒரு குறைபாடே! இதுக்கு ஆண்களை சொல்லி குற்றம் இல்லை. கடவுளை வேணுமெண்டால் குற்றம் சொல்லலாம்.

பெண்களின் உள் உணர்வுகளை ஒரு ஆண் புரிந்துகொள்ளுவது, புரிந்து நடப்பது என்பது ஒரு சாதாரணவிடயம் இல்லை. எல்லாராலும் முடியாது. ஏனென்றால் இயற்கையில் வரையறைகள் அப்படிப்பட்டது.

இதுபோலவே.. ஆண்களின் உள் உணர்வுகளையும் பெண்கள் புரிந்துகொள்வது என்பது எல்லாராப் பெண்களாலும் அல்லது எல்லாச் சந்தர்ப்பத்திலும் முடியாது.

இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால் உலகத்தில புருசன், பெண்சாதி.. காதலன் காதலி... இவர்களுக்க ஒரு பிரச்சனையும் வராது. வந்தாலும் சுமுகமாக தீர்ந்துவிடும்.

நன்றி! வணக்கம்!