Custom Search

Friday, September 04, 2009

ப்றும் ப்றும்

ஐயோ சிரிச்சு சிரிச்சு என்னால முடியல...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.


Wednesday, September 02, 2009

பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டு


எதையாவது எழுதுவம் எழுதுவம் என்டிட்டு தொடங்கி தொடங்கிப்போட்டு அப்பிடியே நிறைய drafts இருக்கு ஆனால் இது இன்டைக்கு எழுதி முடிக்கிறதெண்டு முடிவெடுத்திட்டன். வந்தியண்ணாக்கு ரொம்ப நன்றி.


2005 வைகாசி மாதத்திலிருந்து எழுதுறனாம் என்டு சொல்லுது என்ர தத்தக்க பித்தக்க றங்குப்பெட்டி சொல்லுது. என்ர ராசா அப்ப எழுதத் தொடங்கி 4 வருசம் முடிஞ்சா?? அடக்கடவுளே.

நான் ஏற்கனவே நடந்து வந்த பாதை தனை திரும்பி பார்க்கிறேன். எண்டொரு பதிவு எழுதினான். அது எழுத வந்து 6 மாசத்தில எழுதின பதிவு.

அந்தப்பதிவு இப்பிடித் தொடங்கி

\\ வைகாசி ,இருபத்தேழாம் திகதி ,2005 தொடங்கிய என் தொடர்வண்டிப் பயணம் 50 தரிப்புகள் கடந்தும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

நிலவு நண்பனின் உதவியோடு பிரயாணத்தை தொடங்கினேன்.டி.சேயின் உதவியோடு தமிழ்மண நட்சத்திரங்களையும் சூடிக்கொண்டேன்.பிறகென்ன கிடுகிடு வேகம்தான்.இடையிடையில பயணக்கழைப்பால் தூங்கியும் இருக்கிறேன்.நித்திரை முழிச்சு வர்ற நேரத்தில நீ யார் என்று கேக்காமல் இருந்த பக்கத்துச்சீட்டு பிரயாணிகள் எல்லாருக்கும் நன்றி.

பிரயாணத்தின் போது கொஞ்ச நேரம் அலட்டியிருக்கிறன்.கொஞ்ச நேரம் படம் காட்டியிருக்கிறன்.மிச்ச நேரம் என் சிற்றறிவுக்குத் தெரிந்த சில உருப்படியான கருத்துக்களைப் பரிமாறியிருக்கிறன்.\\

இப்பிடி முடிஞ்சிருக்கு.


\\ வலைப்பதிய தொடங்கி ஆறு மாதத்தில ஐம்பத்தேழு பதிவ போட்டாச்சு மூன்று பதிவு தூக்கியாச்சு..693 பின்னோட்டம் வாங்கியாச்சு.8344 பேர் தத்தக்க பித்தக்கவுக்கு வந்திருக்கினம்.\\

ஐயோ ஐயோ என்ன கொடுமையிது...எப்பிடித்தான் என்ர இம்சையெல்லாம் தாங்கினிங்கிளோ:) நீங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க!!!

நான் பறவால்ல தம்பி கிருத்திகன் (கீத்) எழுத வந்து 6 மாசத்திலயே 140 பதிவுக்கு மேல எழுதியிருக்கிறாராம் :))

என்ர விண்ணானக் கதை :

கதையாச் சொல்றளவுக்கு எனக்குப் பெருசா ஒண்டும் ஞாபகம் இல்லை. எப்பிடி அறிமுகமாச்செண்டு தெரியேல்ல ஆனால் நிலவுநண்பனின் வலைப்பதிவில் கவிதைகள் படிக்கிற பழக்கமிருந்தது. அவருடைய வலைப்பதிவுக்கு எப்பிடிப்போனான் என்டெல்லாம் ஞாபகம் இல்லை. ஆனால் நிலவுநண்பன் தான் வலைப்பதிவு எப்பிடி ஆரம்பிக்கலாம் என்டெல்லாம் சொல்லித்தந்தவர். அவருக்கு நன்றி. எழுத வர பெரிசா ஒரு காரணமும் இல்லை. இதுவரை எழுதினவை சொல்ற மாதிரி தனிமையெல்லாம் இல்லை. ஆனால் தமிழ் கதைக்க ஒருதரும் இல்லாததாலயா இருக்கலாம்.அதுக்குப்பிறகு நடந்த எல்லாம் தான் உங்களுக்குத் தெரியும்தானே.

இங்க கனடாவில 'தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரி' என்ற கல்லூரியில் தமிழ் படிச்சனான். அங்க ஒரு ஒப்படை தந்தவை. 10 தலைப்பு தந்து அதில் ஒன்றைத் தெரிவு செய்து ஒரு நூல் மாதிரிச் செய்யவேணும். நான் தெரிவு செய்த தலைப்பு " தமிழீழ விடுதலைப்போராட்டம் - தோற்றமும் வளர்ச்சியும்". அந்த ஒப்படைக்காக நான் இணையங்களில் தேடல் புரிந்த காலம் 2001. இப்ப யோசிக்கிறன் நான் எப்பிடித் தேடியிருப்பன் எண்டு. ஆனால் எனக்கு அப்பவே யுனிகோட்ல ரைப் பண்ணத் தெரிஞ்சிருக்குமோ??? சந்தேகமா இருக்கு.

ஓகே இங்க இருந்து தட்டச்சு அனுபவம் தொடங்குது சரியா :)

அந்தக்கல்லூரியில நான் தொண்டராவும் வேலை செஞ்சனான் அப்ப அங்க தமிழ் கீபோட் இருந்தது. அதிலதான் நான் தமிழ் ரைப்பிங் பழகினான். யாரும் எனக்குச் சொல்லித் தரேல்ல ஆனால் ஒருநாள் பொழுது போகாமல் ஒரு தட்டில இருந்த தமிழ் கீபோட் எடுத்துக் கொழுவி கையிலயும் பாமினி எழுத்துரு மாதிரி ஒரு பிறின்ர் அவுட் எடுத்து வைச்சுக்கொண்டு என்னென்னவோ முயற்சியெல்லாம் செய்து நான் ரைப்பிங் பழகினான். நான் சொன்ன அந்த தமிழ்ப் பாடம் ஒரு வருசக் course. வருசக்கடைசிலதான் அந்த ஒப்படை குடுக்கோணும். மிச்சாக்கள் எல்லாம் வேற ஆக்களிட்ட குடுத்து ரைப் பண்ணினவை. அக்கா கையால எழுதிக்குடுத்தவா ( அவான் கையெழுத்து கையால எழுதினாலே ரைப் பண்ணினது போலதானிருக்கும்)

நான் ஏதோ வெறி பிடிச்சது போல நிறைய ரைப்பினான். அம்மா அப்பா மாமா சித்தப்பாவைக்கெல்லாம் அந்த நேரம் எவ்வளவு விசராயிருந்திருக்கும் என்று யோசிக்கிறன். கொஞ்சநாளா அவையை நான் படுத்தின பாடு. பழைய வரலாறு ஒண்டும் தெரியாது தானே அதால குட்டி மணி யாரு? குமரப்பா யாரு என்டு அவையளைப்போட்டு படுத்தியெடுத்திட்டன்.
கடைசில என்ர ஒப்படை 150 பக்கத்துக்கு கிட்ட வந்திட்டுது. எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது. தங்கப்பதக்கம் எல்லாம் தந்தவை ஆனால் அதுக்குப்பிறகுதான் சோகம். ஒரு கண்காட்சி வைச்சவை அப்பத்தான் என்ர ஒப்படையைக் கண்ணால பார்த்தனான். அதுக்குப்பிறகு நோர்வேக்கு அனுப்பிட்டம் அங்க அனுப்பிட்டம் இங்க அனுப்பிட்டம் ...எடுத்துத்தாறம் எண்டிச்சினம். கடைசி வரைக்கும் அதைத் தரவேயில்லை. அது என்ர எத்தின நாள் உழைப்பு. இப்பிடி வடலியெண்டெல்லாம் பதிப்பகம் வருமெண்டு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே புத்தகம் போட்டிருப்பன் சா.

அப்ப நான் அந்த ஒப்படையை பாமினி எழுத்துருவிலதான் ரைப் பண்ணினான்.அந்த ஒப்படையைத் திருத்தின ஒரு ஆசிரியர்களில் ஒருவரை அண்மையில சந்திச்சனான். கேக்கணுமென்டு நினைச்சனான் என்ர ஒப்படைக்கு என்ன நடந்தது விபரம் ஏதும் உங்களுக்குத் தெரியுமா என்டு ஆனால் அவேன்ர பின்னவீனத்துவம் பெருங்கதையாடல் எல்லாம் கேட்டதில எனக்கு மூளை விறைச்சுப்போய் எல்லா தொழிற்பாடுகளும் நிண்டிட்டு. ஒன்டுமே கேக்கேல்ல நான்.

வாசிக்கிறாக்கள் நல்லா நற நறக்கிறீங்கிளா?? பதிவெழுத வந்த கதையைச் சொல்லச்சொன்னா இதென்ன கதையென்டு :))

நான் வலைப்பதிவெழுத முதலே யாழ் இணையத்தில் இணைந்திருந்தேன் ஆனால் அங்கும் ஒன்றும் எழுதியதில்லை. ஆனால் பாமினியில் எழுதினால் யுனிகோட்டுக்கு மாற்றலாம் என்று தெரிந்திருந்தது. அதனால் யாழ் மற்றும் சுரதா அண்ணாவின் உருமாற்றிப் பாவித்துத்தான் என்னுடைய முதல் பதிவை எழுதினான். பிறகு யாரோ ஈ கலப்பை பற்றிச் சொல்லித் தந்ததால் இப்ப அதான் பாவிக்கிறன். ஆனால் இந்தக் கலப்பையிலயும் மாடு என்னவோ பாமினிதான். நான் குழப்பியடிக்கிறனோ தெரியா ஆனால் இந்த தொழில்நுட்ப விசயங்கள் பெரிசா தெரியாது. இப்பவும் பாமினியில் ரைப் பண்ணும்போது அ=m , k=ம் , kh=மா என்று எழுதினனோ அதையேதான் செய்றன் ஆனால் என்ன மேல ஒரு பெட்டி கீழ ஒரு பெட்டியெண்டில்லை. ஆங்கில எழுத்திலும் ( comma) போன்றவை எல்லாம் இலகுவாக எழுத முடியுது. அது ஒரு பெரிய நன்மை.


பின்னோட்டங்கள் மற்றும் அனுபவங்கள்.


நான் எழுத வந்த புதிசில சரியான ஓட்டைவாய். நிறைய அலட்டுவன். அதால நல்லதும் நடந்திருக்கு கெட்டதும் நடந்திருக்கு. நிறைய நண்பர்கள் அண்ணர்கள் அக்காக்கள் ஏன் தாத்தா கூட கிடைத்தார். நிறையப்பேர் பின்னோட்டம் போட்டு தனிப்பட்ட முறையிலும் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் எழுதத் தொடங்கினான். அப்ப இருந்த வேகம் இப்ப இல்லை. நேரமும் இல்லை. மற்றது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பிலும் சில மிரட்டல்கள் எல்லாம் அனுப்பினார்கள். எனக்கு மட்டுமில்லாமல் எனக்கு நண்பர்களாக இருந்தவர்களையும் சிலர் காயப்படுத்தினார்கள். என்னிடம் ஐபி பார்க்கும் வசதி இருந்ததில்லை. யார் இதெல்லாம் செய்தார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பவில்லை நான்.

என்னுடைய அலட்டல் பதிவுகளை விரும்பி வாசிப்பவர்கள் சிலர். உளவியல் தொடர்பான பதிவுகளை வாசிப்பவர்கள் சிலர். ஒரு சிலர் இரண்டு விதமான பதிவுகளையும் வாசிப்பார்கள். இப்பிடி 2ஐயும் வாசித்து என்னை அடிக்கடி பப்பாவில் ஏத்துறவா சந்தனமுல்லை :)) இன்னும் எனக்கு உறுதுணையா இருந்தவர்கள் இருப்பவர்கள் நிறையப்பேர்.

அண்மையில் என்னைக் கொஞ்சம் பாதித்த யோசிக்க வைத்தது ஒரு பின்னோட்டம். அண்மையில் நான் "உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்" என்றொரு பதிவெழுதினான். அதில் நான்

\\அண்மையில் ஒரு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு 10 வயதுப்பிள்ளையை அப்பா குளிப்பாட்டினார் என்ற கருத்தை பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் பார்க்க வேண்டுமென்றார் ஒருவர். ஆனால் அந்தாய்வில் பங்குபற்றிய ஒருவர் உண்மையில் சொல்ல வந்த விடயம் என்ர அம்மா சின்ன வயசிலயே செத்திட்டார் அதால 10 வயசுவரைக்கும் என்னைக் குளிப்பாட்டினது என்ர அப்பாதான் என்பதே இதை நாங்கள் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்றதைப் பொறுத்துத்தான் அந்த ஆய்வு அடுத்த கட்டத்துக்குப் போகும். இலங்கை அல்லது இந்தியாவில் பெண் பிள்ளைகள் ஆடையுடன் குளிப்பது வழக்கமென்பதும் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டுவது வழக்கமென்பதும் (அதுவும் 30-40 வருடங்களுக்கு முதல்) அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் அவர்களுடைய வழக்கங்களும் பழக்கங்களும் மாறுபடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.\\

என்று எழுதியிருந்தேன். இதற்கு ஒரு கேவலமான பின்னோட்டம் வந்திருந்தது. இதற்கு நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. அந்தப்பின்னோட்டத்தை வாசித்ததும் கவலையா இருந்தது. பிறகு அதை நான் மறந்திட்டன். ஆனால் இந்தப் பதிவு எழுத தொடங்கினதும் அந்தப்பின்னோட்டம் ஞாபகம் வந்திட்டுது.

இன்னும் சில அனுபவங்கள்
ஆக்களின்ட உண்மையான பெயர் போட்டு பதிவெழுதிய அறிவுக்கொழுந்து நான். வெள்ளவத்தை ராமகிருஸ்ணமிஸனில் ஒன்றாகத் தங்கியிருந்த அக்கா ஒருவர் நான் என் ரீச்சர் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு மூலம் என்னை அடையாளம் கண்டு கொண்டிருந்தார்.

" ஜீவீதா - அவளை இன்டைக்குப் பார்த்தனான்!" என்டொரு பதிவு எழுதினேன். வலைப்பதிவுகள் மூலமாக அறிமுகமான ஒரு அண்ணா மூலம் அவளுடன் எப்படியும் தொடர்பு கிடைக்கும் என்று நம்பியிருந்தேன் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அவள் உயிரோடு இருந்தால் போதும்.

* வலையுலகில் அறிமுகமான பல நண்பர்களை நேரில் சந்திந்திருக்கிறேன். அது பற்றி பின்னர் ஆறுதலாக எழுதுகிறேன்.


கதை சொல்ல நானழைப்பவர்கள் :


1. சந்தனமுல்லை

2. சகாராத்தென்றல்

3. ஆயில்யன்

4. கோபிநாத்

5. வி.ஜே. சந்திரன்

6. அகிலன்

7. சோமிதரன்

8. கலை

9. தமிழ்நதி

10. டிஜே

11. நிவேதா - ரேகுப்தி



உங்களுக்கான விதிமுறைகள்: ஆனால் நீங்க எப்பிடி வேணுமென்டாலும் எழுதுங்கோ :)

விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட :) பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

Thursday, August 20, 2009

Toronto வில் Tornado






படம் பெறப்பட்டது : www.cp24.ca ( City Pulse 24)

இரவு 7 மணி அப்பிடியிருக்கும் நான் அத்தை வீட்ட நின்டனான். திடிரென்டு பெரிய இரைச்சலுடன் இடியிடிக்க மழை கொட்டத் தொடங்கியது. மரங்கள் எல்லாம் பேயாட்டம் ஆடத்தொடங்கிச்சு. நானிருந்த அறையில இருந்து பார்க்க பக்கத்து வீட்டிலிருந்த மரத்திலிருந்து பியர்ஸ் காய்கள் எல்லாம் காத்துக்குப் பறக்குது. சுவாரிசயமாக் கதைச்சுக்கொண்டிருந்த அத்தை அம்மா அப்பம்மா எல்லாரும் கதையை நிப்பாட்டிட்டு வாசலுக்குப் போட்டினம் புதினம் பார்க்க.

இருளத்தொடங்கியிருந்தது 7 மணியளவில். புயலுடன் கூடிய மழை அடிச்சு ஓய்ஞ்சுது கொஞ்ச நேரத்தில. மழை நிண்டதும் இருளத்தொடங்கியிருந்த வானம் பட்டப்பகல் போல மீண்டும் வெளிச்சமாகியது. என்னதான் நடக்குது எண்டிட்டு செய்தியைப் போய்ப் பார்த்தால் எங்கள் மார்க்கம் ( வீட்டிலிருந்து ஒரு 20 கி.மீ தொலைவில் ) நகரில் சில வீட்டுக்கூரைகள் சேதம் ,அங்கால இன்னும் கொஞ்சம் தள்ளியுள்ள நகரங்களிலும் வீடுகள் சேதம் , ஒருவர் இறந்துவிட்டார் என்று செய்திகள் அறிவித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

புயலுடன் கூடிய மழை ஓய்ந்து விட்டாலும் சாதுவான மழை தூறியபடியே இருக்கிறது. இடி இடித்துக்கொண்டேயிருக்கிறது. வீட்டிலிருந்து அடுத்த தொலைபேசி அழைப்பு வரமுதல் அத்தை வீட்டிலிருந்து வெளிக்கிடோணும் ஆனால் கார் ஓடவும் பயமா இருக்கு. நான் கொண்டு போய் விட்டிட்டு வாறன் என்று சின்ன மச்சான் நக்கல் அடிக்கிறான் ..ரோசம் வந்து வெளிக்கிட்டம் நானும் அம்மாவும். வீட்ட வந்தால் அப்பாவைக் காணேல்ல.

அக்கா சொன்னா நிமல் அண்ணா வீட்டு கூரை எல்லாம் உடைஞ்சிட்டாம் வீடெல்லாம் தண்ணியாம்..அவையைக்கூட்டிக்கொண்டு வர அப்பா போட்டார் என்டு. என்னால நம்ப ஏலாம இருந்தது ஏனென்டால் ஒரு சின்ன விசயத்துக்கும் ரென்சன் ஆகிற / பயப்படுற ஆள் நிமலண்ணா அப்ப நான் நினைச்சன் அக்கா சும்மா வேணுமென்று சொல்றா என்டு. அம்மாவும் சொன்னா ஏனப்படி சொல்றாய் பாவம் நிமல் விளையாட்டுக்கும் அப்பிடிச்சொல்லாத எண்டு.

உண்மையா எந்தக் கெட்டதும் எங்களுக்கு நடக்காதெண்டதுதான் எல்லாற்ற எண்ணமும் ஆனால் அது சிலநேரம் நடந்திடும். அப்பிடித்தான் நிமலண்ணா வீட்ட வந்து நிண்ட அவற்ற நண்பர் ஒராள் கார்ல ஏதோ எடுக்க எண்டு போனவர் ..அவற்ற மனைவியின் அலறல் சத்தம் கேட்டு நிமலண்ணா வெளியில ஓடிப்போனால் வேகமா வந்துகொண்டிருந்த புயல் நிமலண்ணாவை மேல தூக்கி இழுக்குதாம். கீழ நிமலண்ணா , நிமலண்ணான்ர மனைவி ,நண்பரின் மனைவி இவ்வளவு பேரும் அவரை மேல போகவிடாமல் அழுத்திப்பிடிக்கிறார்களாம். ஏற்கனவே புயலில் அள்ளுப்பட்டுக்கொண்டு வந்து மரத்துண்டுகள் , கொப்புகள் மற்றைய பொருட்கள் எல்லாம் இவர்களுக்கு மேல் விழுந்து அழுத்துகிறது...அப்பிடியே மேலெழும்பிய புயல் நிமலண்ணாட வீட்டுக் கூரை ,கதவு யன்னல் எல்லாத்தையும் சேதமாக்கிக் கொண்டு பக்கத்து வீடுகளையும் பதம் பார்த்துக்கொண்டு கொஞ்சம் அமைதியாகிக் கடந்து போகிறது.

என்ன நடந்தது என்று திகைச்சு நிக்கிறதுக்கள்ளயே எல்லாம் நடந்து முடிந்திற்று. இதுவரையில் இந்தப் புயலால் ஒருவர் இறந்திருக்கிறார் காயப்பட்டோர் போன்ற ஏனைய தகவல்கள் இன்னும் வரவில்லை. ஒவ்வொரு ஊர் ஊராக அலையும் இந்தப் புயல் இப்ப எங்க என்ன ஆட்டம் போடுதெண்டு தெரியேல்ல.

இன்றைய இந்தச் சூறாவளியால் Vaughan , Maple போன்ற நகரங்களிலிருந்து இதுவரை 120 குடும்பங்கள் அவர்களின் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டிருக்கின்றது. 2 நாட்களுக்கு முதல் எங்கள் பகுதியிலும் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைபட்டிருந்தது. நாளையும் புயலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது வேலைக்குப் போகாமல் விடலாம் போலத்தான் தெரிகிறது.


இப்ப எனக்கு ஞாபகம் வாறது "Dante's Peak" என்ற திரைப்படம் தான். வாழ்வதற்கு சிறந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்ட இடமொன்றில் வெடிக்கவிருக்கும் எரிமலை பற்றி எதிர்வுகூறும் நிபுணரின் கருத்துகளை புறக்கணித்துவிட்ட பின்னர் அந்த இடத்தில் உள்ள மக்கள் படும் துன்பங்களையும் பூகம்பம் , எரிமலை வெடிப்பு வெடிப்புக்கு பின்னர் நடைபெறும் லாவா மக்மாக்களின் களியாட்டம் என எல்லாவற்றையும் வெளிக்கொணர்ந்த படம் அது. பார்த்துப் பல வருடங்களாகியும் பலகாட்டிசிகள் இப்பவும் ஞாபகம் வருது. அதும் முக்கியமா இந்தப்படத்தில போட்டிருக்கிற காட்சியில அந்தக் கொதி பிடிச்ச மேலதிகாரி சாகுற காட்சி. சாவது போல காட்சி இல்லை ஆனால் பாலம் முறிஞ்சிடும்.

அம்மாட்ட நானிந்த படத்தைப் பற்றிச் சொல்றன். அம்மா பல வருடங்களுக்கு முன்பு வடமராட்சியில் ஏற்பட்ட சூறாவளியில் தாத்தான்ர கடையின் கூரையைச் சேதமெதுவும் இல்லாமல் காற்று எப்பிடித் தூக்கிப் பக்கத்து தோட்டத்தில போட்டதெண்ட கதையைச் சொல்றா எனக்கு.

Monday, August 10, 2009

உங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?

{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது }

எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது.

எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் "அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் " என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளிச்சு நிண்டே கேட்கும்?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறேன். ஆனால் எல்லாமே எங்களுடைய மனம்தான் என்று இப்போது தெரிகிறது.

பிறந்ததிலிருந்தே எங்களுடைய மனதில் விதைக்கப்படும் எண்ணங்களே நாங்கள் வளர்ந்து எப்படிப்பட்ட மனிதராக உருவாகிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. ‘என்ர பிள்ளை கெட்டிக்காரி, அவளால் நன்றாகப் படிக்கமுடியும் , அவள் வளர்ந்து தனக்குப் பிடித்த ஒரு துறையில் மிளிர்வாள்’ என்று தாயொருத்தி மற்றவர்களிடம் சொல்வதை அந்தப்பிள்ளை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தப்பிள்ளை பிற்காலத்தில் ஏதோ ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஒருவர் எங்களைப் பற்றி நல்ல விதமாகக் கதைக்கும்பொழுது அது எங்களின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கச் செய்கின்றது.

இந்தச் சுயமதிப்பீடு அல்லது சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள காலமெடுக்கும். ‘நான் என்னைச் சுற்றி இருப்பவர்களால் நேசிக்கப்படுகிறேன், எனக்கென்று சில சிறந்த குணங்களுள்ளன, என்னால் முடியும், என்னால் மற்றவர்களுக்கும் உதவ முடியும்’ போன்ற எண்ணங்கள்தாம் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு தொடர்ந்து உயிர்வாழும் ஆசையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன.

சுயமதிப்பை வளர்த்துக்கொள்ளும் எண்ணங்கள் உருவாகும் வகையில் குழந்தைகளை வளர்க்கும் கடமை பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் தான் அதிகம் அடங்கியிருக்கிறது. அவர்கள் அந்தக் கடமையைச் செய்யத் தவறுகையில் அந்தப் பணி நண்பர்களுடையதாய் அமைகிறது. அம்மா அப்பாவிடம் சரி சமமாகக் கதைக்கப் பழக்க வேண்டும்; எதையும் மனம் திறந்து பெற்றோருடன் உரையாடக் கூடிய இடத்தை வழங்க வேண்டும்; ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.



சில குடும்பங்களில் என்ன நடக்கிறது? பாடசாலையில் குடியமர்வு ஆலோசகராக பணிபுரியும் ஒருவருடன் அண்மையில் உரையாடும்போது அவர் சொன்னார், ‘உண்மையில் இந்தப்பிள்ளைகள் இப்படி ஓராளை ஓராள் அடிச்சுக்கொண்டு சாகிற அளவுக்கு நடந்துகொள்றதுக்கு அவர்களின் பெற்றோரும் ஒருவகையில் காரணம்தான்.’ வெளிநாடுகளில் ஆசிரியர்கள் "என்னைப் பார் , என் கண்ணைப் பார்த்துப் பேசு "என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சில வீடுகளில் "என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிற அளவுக்கு நீ வளந்திட்டியோ " என்று சொல்லி பிள்ளைகளை அடிக்கிறார்கள். அப்போ அந்த பிள்ளை ஆசிரியர் சொல்வதைக் கேட்பதா, பெற்றோர் சொல்வதைக் கேக்கிறதா? ஆசிரியர் கேள்வி கேட்கும்போதெல்லாம் அந்த மாணவன் தலை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை, குனிந்துகொண்டே பதில் சொல்வான். இது தொடர்பாக அந்த குடியமர்வு ஆலோசகர் அவனுடைய தந்தையிடம் பேசும்பொழுது அவர் சொன்னாராம் "நான் என்ர அப்பாவை இதுவரைக்கும் நிமிர்ந்து பார்த்துக் கதைத்ததில்லை. ஆனால் இவன் இப்பவே என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிறான் ,அப்ப இவனை அடிக்காமல் என்ன செய்றது?"

பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு சுயமதிப்பீடு , வெறுப்பு , குழப்பம் , விரக்தி போன்றவற்றோடுதான் வாழ்கிறார்கள்.



பிள்ளைகளிடம் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை அதில் மேலும் ஈடுபடச்செய்து அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை வீட்டுக்கும் நாட்டுக்கு நல்லவர்களாக உருவாக்க வேண்டும். ஆனால் சில பெற்றோர் என்ன செய்கிறார்கள்? பிள்ளைக்கு ஒரு விடயம் சரியாகச் செய்யத் தெரியாவிட்டால் "எருமை மாடு எத்தனைதரம் சொல்லித் தந்தனான் சனியன்… சனியன் " என்று திட்டுவார்கள். இன்னும் சில பெற்றோர் பொது இடங்களில் வைத்தே பல்லை நெறுமிக்கொண்டே, "இண்டைக்கு வீட்ட வா உனக்கிருக்கு" என்று சொல்லும்போது வீடு செல்லும்வரைக்கும் அந்தப்பிள்ளை அதையே நினைச்சு நினைச்சு என்ன நடக்குமோ என்று பயந்து ஏங்க ஏங்க அந்தப்பிள்ளையின் சுயமதிப்பீடு குறைந்து கொண்டே போகும்.

ஆனால் பாடசாலையில் பிள்ளை ஒரு பிழை விட்டால் ஆறுதலாக பொறுமையாக விளங்கப்படுத்தி அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அவர்களாகவே தங்களுக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்து அந்தச் செயலை செய்ய வைத்து விட்டு, "பார்த்தாயா திரும்ப முயற்சி செய்தபோது உன்னால் அந்தக் காரியத்தை எளிதாகச் செய்ய முடிந்ததல்லவா" என்று பாராட்டி ஒரு பேனாவைக் கொடுத்து அந்தப்பிள்ளையின் சுய மதிப்பீட்டை வளர்க்கிறார்கள். இது எல்லாப்பெற்றோரையும் குறை கூறி எல்லா ஆசிரியரையும் தலையில் தூக்கி வைக்கும் முயற்சியில்லை. ஆனால் பொதுவாகவே மாணவர்களிடம் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பள்ளியிருக்கிறது. ஆனால் பிள்ளைகளிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று பெற்றோருக்குச் சொல்லித்தர எந்தப்பள்ளியியும் இல்லை.

பிறந்த குழந்தைக்குக் கூட அம்மாவின் தொடுகையில் , பார்வையில் அன்பிருக்கிறதா, கோபம் இருக்கிறதா, கவலையிருக்கிறதா என்று இனம்காண முடியும். தன்னைச்சுற்றி நடக்கும் விடயங்களில் இருந்தே தன்னை வளர்த்துக்கொள்ளும். எனவே குழந்தையின் முன்னால் எப்போதும் சந்தோசமாகத் தென்படுங்கள். நான் நேசிக்கப்படுகிறேன் என்று அந்தக் குழந்தை உணரவேண்டும். உணர்தல் வேறு உணர்த்தப்படுதல் வேறு. குழந்தை தானாகவே உணரவேண்டும்.

இந்தக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது அக்காவின் மகன் விளையாட்டில் தோற்றுவிட்டதால் றிமோட்டை எறிந்துவிட்டு அழுதுகொண்டு ஓடி வந்து கதவைப் பூட்டிக்கொண்டான்.

இப்போ, "நீ தோத்துவிட்டாய் ந ந ந ந" என்று சின்னப்பிள்ளைகள் நெழிப்பது போலும் பழிக்கலாம். அல்லது “தோத்துப்போறதும் ஒருவிதமான பாடம் தான் நீங்கள் போனதடவை நல்லா விளையாடி வென்றனீங்கள்தானே என்று உற்சாகப்படுத்தித் திரும்ப விளையாட வைக்கலாம். விளையாட்டாக நெழித்துப் பழிக்கும்போதும் சுயமதிப்பீடு குறைக்கப்படும். ஆனால் முன்பு வென்றதை நினைவுபடுத்தி, உற்சாகப்படுத்தி மீண்டும் விளையாட வைக்கும்போது அப்பிள்ளையின் சுயமதிப்பீடு அதிகரிக்கப்படும். ‘இதென்ன சாதாரணமான விளையாட்டுப் பற்றியது இதில் என்ன இருக்கு’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் குழந்தை வளர்ந்துவந்து வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் தோல்வி ஏற்படும்போது அதன் சுயமதிப்பீடு அவ்வளவாகப் பாதிக்கப்படாது; ஏனென்றால் அந்தப்பிள்ளைக்குத் தெரியும் தன்னால் இதிலிருந்து மீளமுடியுமென்று.



உயர்ந்த சுயமதிப்பீடு உள்ளவர்கள் எப்போதும்:

*பிறரை மட்டுமே நம்பியிருக்கமாட்டார்கள்.
*என்னால் முடியும் என்று பெருமையுடனும் சுதந்திரமாகவும் வாழ்வார்கள்.
*பொறுப்புடன் கடமைகளைச் செய்வார்கள்.
*எப்போதும் தேடலுடன் புதியவற்றைத் தேடிக்கற்றுக் கொள்வார்கள்.
*மகிழ்ச்சியையும் சோகத்தையும் சரிசமமாக எதிர்கொள்வார்கள்.
*கோபத்தையும் எரிச்சலையும் கையாளத் தெரிந்திருப்பார்கள்.
*மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.



குறைந்த சுயமதிப்பீடு உள்ளவர்கள்:
*புதிதாக எதையும் செய்யப் பயப்படுவார்கள்.
*என்னை யாருக்கும் பிடிக்கவில்லை,நான் யாருக்கும் தேவையில்லை என்று எண்ணுவார்கள்.
*தன் பிழைக்கும் மற்றவர்களையே குறை கூறுவார்கள்.
*தன்னையும் தன் திறமைகளையும் குறைத்தே மதிப்பிடுவார்கள்.
*கோபம், கவலை, மகிழ்ச்சி இப்படி எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டுவார்கள்.
*சட்டென்று யாரையும் நம்புவார்கள். நம்பி அவர்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள்.


சுயமதிப்பீட்டை அதிகரிக்க என்ன செய்யலாம்?

*இயலாமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து திறமைகளை அடையாளம் கண்டு அவற்றில் ஈடுபடல்.

*பக்கத்திலிருப்பவர்களின் கருத்தை விட யாருக்கு சுயமதிப்பீடு அதிகரிக்க வேண்டுமோ அவர்களை மட்டும் கணக்கிலெடுத்தல்.

*என்னைச் சுற்றியிருப்பவர்களால் "நான் நானாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன்" என்று காட்டுதல்.

*பிழை விடலாம், எல்லோரும் பிழை விட்டிருக்கிறார்கள் என்று தாங்கள் விட்ட பிழைகளையும் பகிர்ந்துகொள்ளல்.

*தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது நான் உன்னிலும் பெரியவன் , நான் உன் சரி பிழைகளை அடையாளம் காணும் உயர்ந்த நிலையிலிருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளாமலிருத்தல்.

*அந்நபரால் செய்து முடிக்கக்கூடிய சின்னச் சின்ன நோக்கங்களையும் , குறிக்கோள்களையும் நினைவூட்டல்.

*குறிக்கோள்களைப் படிப்படியாகத்தான் அடைய முடியும் என்று நினைவூட்டல்.

*எப்போதும் அந்நபரின் நேர் தன்மைகளை(Positiveness), திறமைகளைப் பற்றி உரையாடுதல்.

*பிழை விட்ட காரியத்தை அடுத்த முறை எப்படி இன்னும் திறம்படச் செய்யலாம் என்று அந்நபரோடு சேர்ந்து கலந்துரையாடி நல்ல வழிகளைக் கண்டடைதல்.

*முன்பு நடந்த விடயங்களில் இருந்து பட்டறிதல்.



உன்னையறிந்தால் – நீ

உன்னையறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை

வணங்காமல் நீ வாழலாம்.

Friday, August 07, 2009

Men's Brain VS Women's Brain

Wednesday, July 29, 2009

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்

கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படி பேஸ்போல் மட்டையாலும் சுத்தியலாலும் மொட்டைக்கத்தியாலும் கொடூரமாகக் கொலை செய்ய இவர்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது? தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள்? மற்றைய மக்களிடையேயும் கொலைகள் நடக்கின்றனதான். சமீபத்தில் கனடியர்களான ஆப்கான் நாட்டைச் சேர்ந்த 4 பெண்களின் மரணம் சர்ச்சையை கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை குடும்பம்தான் கொலை செய்ததாக ("Honor killing ") கிடைத்த தகவலின் படி விசாரணை நடக்கிறது தற்பொழுது ஆனால் அது கொலைதான் என்று நிரூபிக்கும் முதலே ஒவ்வொருதரும் ஒவ்வொருவிதமாகக் கதை கட்டுகிறார்கள். இதற்கு முதலும் சில வருடங்களுக்கு முன்னர் பஞ்சாப் பெண் ஒருவர் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டார்.

தமிழர் அல்லது ஆப்கான் போன்ற சிறுபான்மை இனமக்களிடையே இடம்பெறும் பிரச்சனைகள் பூதாகரமாக்கப்படுவதோடு "தமிழ் இளைஞர் கொலை " அல்லது "ஆப்கான் பெண்கள் கொலை" என்று போடுவார்கள் பத்திரிகையில். கொலை கொள்ளை என்று வரும்போது அவர்கள் கனடியர்களாகப் பார்க்கப்படுவதில்லை. அண்மையில் அமெரிக்காவில் 29 வயதான ஒருவருக்கு 21 பிள்ளைகள் இருக்காம் என்ற செய்தியை வெகு சாதாரணமாக ஒரு சாதனை போல எழுதியிருந்தார்கள் அதை வாசித்த ஒரு முஸ்லிம் நண்பி சொன்னாள் இதே ஒரு முஸ்லிம் ஆண் செய்திருந்தால் இவர்கள் என்னவெல்லாம் எழுதியிருப்பார்கள் என்று.

அண்மையில் ஒரு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு 10 வயதுப்பிள்ளையை அப்பா குளிப்பாட்டினார் என்ற கருத்தை பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் பார்க்க வேண்டுமென்றார் ஒருவர். ஆனால் அந்தாய்வில் பங்குபற்றிய ஒருவர் உண்மையில் சொல்ல வந்த விடயம் என்ர அம்மா சின்ன வயசிலயே செத்திட்டார் அதால 10 வயசுவரைக்கும் என்னைக் குளிப்பாட்டினது என்ர அப்பாதான் என்பதே இதை நாங்கள் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்றதைப் பொறுத்துத்தான் அந்த ஆய்வு அடுத்த கட்டத்துக்குப் போகும். இலங்கை அல்லது இந்தியாவில் பெண் பிள்ளைகள் ஆடையுடன் குளிப்பது வழக்கமென்பதும் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டுவது வழக்கமென்பதும் (அதுவும் 30-40 வருடங்களுக்கு முதல்) அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் அவர்களுடைய வழக்கங்களும் பழக்கங்களும் மாறுபடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

அதேபோல children aid socity யால் தேவையில்லாமல் தண்டிக்கப்பட்ட கதை இங்கு நிறையச் சமூகங்களில் உண்டு. தமிழர்களிடம் மட்டுமல்ல மற்றைய 4மூகங்களிலும் children aid socity எண்டாலே பிள்ளை பிடிகாறர் என்றமாதிரியான பயமுண்டு. மற்றைய மக்களின் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததால் பலர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எல்லாத்தையும் சொல்ல முடியவில்லை ஆனால் உதாரணத்துக்கு பிள்ளை கக்கா இருந்ததும் அம்மா இல்லாத நேரம் அப்பா கழுவி விடுவது சாதாரணமாகத்தான் எனக்குப் படுகிறது ஆனால் அது அசாதாரணமாக மற்றவர்களால் பார்க்கப்படலாம். இப்படி பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுச் சட்ட திட்டங்களால் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது தண்டனைக்கு மிக அருகில் போய் மனவுளைச்சல் பட்டவர்கள் உள்ளார்கள். உண்மையில் இதுக்கெல்லாம் என்ன காரணம்? யார் தப்பு?

மற்றது Dating Violence பற்றியது : தமிழ் இளைஞர்கள் தங்கள் காதலிகளைக் கொடுமைப்படுத்துகிறார்களாம். எல்லாச் சட்டமும் ஆய்வுகளும் பெண்களுக்கே உதவி செய்யுது. ஆண்களைப் பற்றிக் கவனிக்க ஒருதருமில்லை என்றும் சொல்லலாம்தான். எங்காவது ஒரு சில இடங்களில் நடப்பதை வைச்சுக்கொணடு ஒரு முடிவுக்கும் வரேலாது ஆனால் பல தசாப்த காலமாக யுத்த தேசத்திலிருந்து வந்த இந்தச் சந்ததிக்கும் இங்கு நடக்கும் வன்முறைகளுக்கும் dating violence க்கும் தொடர்பிருக்கா என்ற ரீதியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதாவது ஒரு காரசாரமான சண்டையில் காதலியைக் கை நீட்டி அடிப்பது, பெருந்தெருவில் இறக்கி விட்டுவிட்டு வருவது, உடலுறவுக்குச் சம்மதிக்காதபோது வார்த்தைகளால் நோகடிப்பது, வேறு பெண்களைக் கூட்டிக்கொண்டு வந்து நீ உடலுறவுக்குச் சம்மதிக்காட்டால் நானிப்படித்தான் செய்வன் என்பது இன்ற இந்தப்பட்டியல் நீள்கிறது.

இங்கு நான் எழுதியது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுடைய அனுபவங்கள் என்ன?

Monday, July 20, 2009

படங்கள் NYMH











கனடாவுக்கு 5 வருடத்துக்குள் வந்த இளையவர்களைப் பற்றித்தெரிந்துகொள்ளும் நோக்கில் University of Toronto வும் Access Alliance Multicultural Health and Community Services ம் சேர்ந்து நடத்திய Sri Lanka , Columbia , Afghanistan & Sudan ஆகிய நான்கு இடங்களிலிரிந்தும் புலம்பெயர்ந்து ரொரன்டோவில் வசிக்கும் இளையோர்கள் பற்றி ஆய்வின் முடிவில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் படக்கண்காட்சியும் இடம் பெற்றது. அந்தக் கண்காட்சியில் இடம் பெற்ற படங்கள்.

முதல் 4ம் நான் எடுத்தது. 5வது கூட்டாளி எடுத்த படம்.

நீ எப்பிடி இருக்கிறாய்?

எல்லாற்ற மனசிலயும் ஏதோ ஒரு கோவம், ஆத்திரம், பயம், கவலை, ஆற்றாமை ,பரிதவிபு்பு, ஆதங்கம், மன ஏக்கம், கையறுநிலை இப்பிடி ஏதோ ஒரு உணர்வு அல்லது எல்லாம் கலந்த ஒரு உண்ர்வு சமீபகாலமா இருந்துகொண்டே இருக்கு. அந்த மனநிலைல இருந்து எப்பிடி வெளில வாறதெண்டுதான் தெரியேல்ல.

கொஞ்சக்காலமாவே எனக்கும் இந்த நிலைதான். யாரை யார் தேற்றுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிலயோ என்னத்திலயோ இருக்கிற கோவத்தை வருத்தத்தை வேறயாரிடமாவது அல்லது ஒரு சடப்பொருள் மேலயோ காட்டிக்கொண்டிருக்கிறம் இல்லையா? நீங்கள் எப்பிடியோ தெரியாது ஆனால் கொஞ்சநாளா நான் நடந்துகொள்ற விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. கிட்டடில ஒருநாள் ஒரு நண்பனிட்ட ஏதோ கேட்டதுக்கு " உம்மோட பெரிய உபத்திரம்" என்று வெகு சாதாரணமா சொன்ன விசயம் நானே எதிர்பாராத அளவிலான வலியைத் தந்தது. உண்மையா கடந்த மாதங்களில் நடந்த விசயங்களால எங்கட மனங்கள் மரத்துப்போயிருக்கும் என்று நினைச்சன் நான். ஆனால் ஒரு சின்ன விசயத்துக்கே உடைஞ்சு போறளவுக்கு மனம் பலவீனமாயிருக்கு என்டதுதான் உண்மை.


Newcomer Youth Mental Health Youth Project க்கு நான் எடுத்த படம்


மரணங்கள் சாதாரணமானவையல்ல ஆனால் ஒராள் இயற்கையா மரணமெய்தினால் அதைக் கொண்டாட 31 நாள் கணக்கு வைச்சிருக்கிறம். அதே ஒரு அவச்சாவு என்டால் 3 மாதத்துக்கு துக்கம் கொண்டாடுறம். ஆனால் குடும்பம் குடும்பமா கிராமம் கிரமமா எங்கட சனம் செத்துப்போனதுக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள்? எத்தின நாள் அழுதனாங்கள்? யாரைப்பார்த்தாலும் யாருக்கு போன் பண்ணினாலும் ஒரே மரணம் பற்றிய செய்திகள். கொஞ்சாக்காலத்தில யார் யார் செத்தது யார் யார் உயிரோட இருக்கினமெண்டதே மறந்திடும் அவ்வளவுக்கும் மனங்கொள்ளாத செய்திகள் தினம் தினம் கேட்டு முடிச்சாச்சு. மரணச்செய்திகள் வந்த மாதிரி இன்னாருக்கு காலி்லை இன்னாருக்கு கையில்லை என்ற செய்திகள் பெருசா வந்துசேரேல்ல. ஒரு கட்டத்தில நேரில் அவர்களைச் சந்திக்கும்போதுதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அப்பிடி ஒரு காலம் வருமா? கட்டுநாயக்கா விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட கண்டன ஊார்வலங்கள் அனைத்தினுடைய ஒளிநாடாக்கள் ஒளிபரப்பப்பட்டு எங்களுடைய திருமுகங்கள் அந்த ஒளிநாடாக்களில் வருகிறதா என்று பார்த்துத்தான் நாட்டுக்குள் விடுகிறார்களாம்.

அவர்கள் அங்கிருந்து அனுபவித்த அதே கொடுந்துயரை அவர்கள் அளவுக்கு இல்லாவிடிலும் நாங்களும் அனுபவித்திருக்கிறோம். முந்தின காலங்களில் நடந்த கொடூரமான போர் பற்றிய செய்திகள் படங்கள் காணொளிகள் மக்களைச் சென்றடையவில்லை. ஆனால் இப்ப அங்க இருக்கிற மக்கள் தெரிஞ்சுகொள்ள முதலே நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்களை அவை வந்தடைகின்றன. யுத்தகள படங்களைப் பார்ப்பதால் அப்பிடி என்ன பாதிப்பு வந்திடப்போது என்று நானும் நினைச்சிருக்கிறன் ஆனால் ஒரு கட்டத்துக்குப்பிறகு செய்திகளைப் பார்க்காமல் ஒதுங்கியிருக்க முயற்சித்தபோதும் ஈமெயில் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் மரணங்களையும் இரத்தத்தையும் சதையையும் பார்த்துப்பார்த்து மரணங்கள் சாதாரணம் என்று மனம் பழகிப்போனாலும் அந்த வடுக்கள் எங்களுக்குள்ளேதான் இருக்கு.

வியட்நாம் போரிலிருந்து திரும்பிவந்த போர்வீரர்களின் குணமாற்றங்களைப் படித்தே நெருக்கீட்டுக்குப் பின்னான உளவடு (Posttraumatic stress disorder (PTSD))என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.அது யாருக்கு இருக்கு யாருக்கில்லை என்று சொல்றது என்ர நோக்கமில்லை. ஆனால் எங்கட மனசில ஒரு கொடுந்துயருக்குப்பின்னான வடு இருக்குது என்டது மட்டுமுண்மை. உண்மையா துயர் இன்னும் முடியேல்ல அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கு. இருந்தாலும் கடந்த மாதங்கள் போல எப்பவும் சாவுச்செய்தியும் மரணங்களின் எண்ணிக்கைகளும் வாறதில்ல.

retraumatization என்று சொல்லப்படுகிற கொடுந்துயர் பற்றிய பழைய நினைவுகளால் வரும் மனவுளைச்சலும் ஒரு சிக்கல்தான். உதாரணமா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நாங்கள் படிச்சது வளர்ந்தது எல்லாமே செல்லடிக்குள்ளயும் குண்டுச் சத்தத்திலயும்தான். பள்ளிச்சீருடையோட பங்கருக்குள்ள ஓடியிருக்கிறம் மேசைக்குக் கீழ விழுந்து படுத்திருக்கிறம். அதையே நாங்கள் காணொளிகளில " குத்தப்போறான் படுங்கோ " என்டு கதறிக்கொண்டு குழந்தைப்பிள்ளைகளைப் பாதுகாக்க முயற்சிக்கிற தாய்மாரைப் பார்க்கேக்க எனக்கு என்ர ரீச்சர்மாற்ற ஞாபகம் வாறது. அவையள் கனவிலயும் வாறவை. இது ஒரு சின்ன உதாரணம் தான். இலங்கையை விட்டு வரும்போது பாலியல் ரீதியா மனவுளைச்சலுக்கு்ள்ளாகி அல்லது வன்புணரப்பட்ட ஒரு பெண் இப்ப தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்படும்போது அவளுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்ப வந்து அவளுடைய அன்றாட வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

இந்த வடுக்களிலிருந்து நாங்கள் விடுபடணும். மனசில ஏற்படுற மாற்றங்கள் எங்கட உடம்பையும் பாதிக்கும். மனசு பலவீனமாகேக்க உடம்பின் நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். அப்பிடிக் குறையிறதாலே சாதாரணமா வாற காய்ச்சல் தலைவலி கூட நீண்டநாட்களுக்குத் தொடரும். அதால மனசைப் பலவீனம் அடையாமல் வைச்சிருக்கிறது நல்லது. ஆனால் அது எப்பிடி என்டு எனக்கும் சரியாத் தெரியேல்ல.

சில நேரம் வேலையில ஒரு ஆலோசகரா மற்றாக்களுக்கு ஆலோசனை வழங்கிற எனக்கு எனக்கு ஆலோசனை தர யாருமில்லையா என்று யோசிச்சிருக்கிறன். யார் யாரையோ நீங்கள் எப்பிடியிருக்கிறீங்கள் என்று கேக்கிறம். ஆனால் ஒருநாள் எங்கட நெருங்கின நண்பர்களையோ எங்கட குடும்பத்தினரையோ மனசார உண்மையான அர்த்தத்தோட நீங்கள் நல்லா இருக்கிறீங்கிளா? மனசும் உடம்பும் நல்லா இருக்கா என்று கேக்கிறமா? மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கோ பார்ப்பம். நான் அப்பிடிக் கேட்டதில்லை என்னையும் யாரும் கேட்டதில்லை.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களில் ஈடுபட்டதால நேரமின்மை ஒரு பிரச்சனை. அல்லது இருக்கிற நேரத்தையும் எப்பிடி அட்டவணைப் போட்டு பயன்படுத்தலாம் என்று தெரந்துகொள்ளாமல் இருக்கிறன். வீட்டிலுள்ளவர்களினதும் சரி வெளியிலுள்ளவர்களினதும் சரி அவர்களுடைப பிரச்சனைகளையும் என் தலையில போட்டுக்கொள்றது மிகப்பெரிய பிரச்சனை. எல்லாத்துக்கும் மேல "NO: இல்லை என்னால முடியாது என்று சொல்லத் தெரியாமலிருக்கிறது". இப்பிடியிருக்கிறதால மற்றவர்களின் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ற மாதிரி எனக்கென்ன பிரச்சனை என்ற தெளிவில்லாதது அப்பிடியே தெரிந்தாலும் அதை வெளிப்படையா பகிர்ந்துகொள்ளாமல் இருக்கிறது.

எல்லாருக்கும் ஏதொ ஒரு சுமை ஏதொ ஒரு பிரச்சனை. எங்களில எத்தினை பேர் பக்கத்தில இருக்கிறாளைப் பார்த்து நேசத்தோட கதைக்கிறம். ஏதோ கடமைக்கு hello how are you? என்டிட்டு எங்கட வேலையைச் செய்றம். நான் புலம்பிறனோ என்டு தோணுது ஆனால் ஒரு வேளை மற்றவர்கள் இப்பிடி நினைச்ச நேரத்தில நான் அவைக்கான இடத்தையோ நேரத்தையோ குடுக்காமல் இருந்திட்டனோ தெரியாது ஆனால் நான் யாரிட்டயும் மனம் விட்டுப்பேசோணும் என்று நினைக்கிற தருணத்தில சுற்றியிருக்கிறவர்கள் எல்லாமே தங்கட சுமைகளைச் சுமப்பதில் பிஸியாக இருக்கினம். யாராவது நீ எப்பிடி இருக்கிறாய் ? நல்லா இருக்கிறியா என்று கேக்க மாட்டினமா என்டு நான் நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சது இதே நிலையில மற்றாக்களும் இருக்கினமெண்டு.

நீங்களும் இப்பிடி உணர்ந்தால் இந்தப்பாட்டைக் கேளுங்கோ :

வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது...
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்து ஒன்றும் போகாது...

உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது...
பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது!



மிச்சம் அடுத்த கிழமை:)

அடுத்த கிழமை என்ன எழுதப்போறன் எண்டு தெரியாது ஆனால் ஏதும் எழுதணும் என்டு மட்டும் தெரியுது.

Tuesday, March 31, 2009

War Torn Island



http://www.youtube.com/watch?v=o7HsMWj7_5U

Monday, March 30, 2009

The silent horror of the war in Sri Lanka - Arundhati Roy


The horror that is unfolding in Sri Lanka becomes possible because of the silence that surrounds it. There is almost no reporting in the mainstream Indian media — or indeed in the international press — about what is happening there. Why this should be so is a matter of serious concern.


From the little information that is filtering through it looks as though the Sri Lankan government is using the propaganda of the ‘war on terror’ as a fig leaf to dismantle any semblance of democracy in the country, and commit unspeakable crimes against the Tamil people. Working on the principle that every Tamil is a terrorist unless he or she can prove otherwise, civilian areas, hospitals and shelters are being bombed and turned into a war zone. Reliable estimates put the number of civilians trapped at over 200,000. The Sri Lankan Army is advancing, armed with tanks and aircraft.


Meanwhile, there are official reports that several ‘‘welfare villages’’ have been established to house displaced Tamils in Vavuniya and Mannar districts. According to a report in The Daily Telegraph (Feb 14, 2009), these villages ‘‘will be compulsory holding centres for all civilians fleeing the fighting’’. Is this a euphemism for concentration camps? The former foreign minister of Sri Lanka, Mangala Samaraveera, told The Daily Telegraph: ‘‘A few months ago the government started registering all Tamils in Colombo on the grounds that they could be a security threat, but this could be exploited for other purposes like the Nazis in the 1930s. They’re basically going to label the whole civilian Tamil population as potential terrorists.’’


Given its stated objective of ‘‘wiping out’’ the LTTE, this malevolent collapse of civilians and ‘‘terrorists’’ does seem to signal that the government of Sri Lanka is on the verge of committing what could end up being genocide. According to a UN estimate several thousand people have already been killed. Thousands more are critically wounded. The few eyewitness reports that have come out are descriptions of a nightmare from hell. What we are witnessing, or should we say, what is happening in Sri Lanka and is being so effectively hidden from public scrutiny, is a brazen, openly racist war. The impunity with which the Sri Lankan government is being able to commit these crimes actually unveils the deeply ingrained racist prejudice, which is precisely what led to the marginalization and alienation of the Tamils of Sri Lanka in the first place. That racism has a long history, of social ostracisation, economic blockades, pogroms and torture. The brutal nature of the decades-long civil war, which started as a peaceful, non-violent protest, has its roots in this.


Why the silence? In another interview Mangala Samaraveera says, ‘‘A free media is virtually non-existent in Sri Lanka today.’’


Samaraveera goes on to talk about death squads and ‘white van abductions’, which have made society ‘‘freeze with fear’’. Voices of dissent, including those of several journalists, have been abducted and assassinated. The International Federation of Journalists accuses the government of Sri Lanka of using a combination of anti-terrorism laws, disappearances and assassinations to silence journalists.


There are disturbing but unconfirmed reports that the Indian government is lending material and logistical support to the Sri Lankan government in these crimes against humanity. If this is true, it is outrageous. What of the governments of other countries? Pakistan? China? What are they doing to help, or harm the situation?


In Tamil Nadu the war in Sri Lanka has fuelled passions that have led to more than 10 people immolating themselves. The public anger and anguish, much of it genuine, some of it obviously cynical political manipulation, has become an election issue.


It is extraordinary that this concern has not travelled to the rest of India. Why is there silence here? There are no ‘white van abductions’ — at least not on this issue. Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian government’s long history of irresponsible dabbling in the conflict, first taking one side and then the other. Several of us including myself, who should have spoken out much earlier, have not done so, simply because of a lack of information about the war. So while the killing continues, while tens of thousands of people are being barricaded into concentration camps, while more than 200,000 face starvation, and a genocide waits to happen, there is dead silence from this great country.


It’s a colossal humanitarian tragedy. The world must step in. Now. Before it’s too late.