Custom Search

Monday, July 20, 2009

நீ எப்பிடி இருக்கிறாய்?

எல்லாற்ற மனசிலயும் ஏதோ ஒரு கோவம், ஆத்திரம், பயம், கவலை, ஆற்றாமை ,பரிதவிபு்பு, ஆதங்கம், மன ஏக்கம், கையறுநிலை இப்பிடி ஏதோ ஒரு உணர்வு அல்லது எல்லாம் கலந்த ஒரு உண்ர்வு சமீபகாலமா இருந்துகொண்டே இருக்கு. அந்த மனநிலைல இருந்து எப்பிடி வெளில வாறதெண்டுதான் தெரியேல்ல.

கொஞ்சக்காலமாவே எனக்கும் இந்த நிலைதான். யாரை யார் தேற்றுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிலயோ என்னத்திலயோ இருக்கிற கோவத்தை வருத்தத்தை வேறயாரிடமாவது அல்லது ஒரு சடப்பொருள் மேலயோ காட்டிக்கொண்டிருக்கிறம் இல்லையா? நீங்கள் எப்பிடியோ தெரியாது ஆனால் கொஞ்சநாளா நான் நடந்துகொள்ற விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. கிட்டடில ஒருநாள் ஒரு நண்பனிட்ட ஏதோ கேட்டதுக்கு " உம்மோட பெரிய உபத்திரம்" என்று வெகு சாதாரணமா சொன்ன விசயம் நானே எதிர்பாராத அளவிலான வலியைத் தந்தது. உண்மையா கடந்த மாதங்களில் நடந்த விசயங்களால எங்கட மனங்கள் மரத்துப்போயிருக்கும் என்று நினைச்சன் நான். ஆனால் ஒரு சின்ன விசயத்துக்கே உடைஞ்சு போறளவுக்கு மனம் பலவீனமாயிருக்கு என்டதுதான் உண்மை.


Newcomer Youth Mental Health Youth Project க்கு நான் எடுத்த படம்


மரணங்கள் சாதாரணமானவையல்ல ஆனால் ஒராள் இயற்கையா மரணமெய்தினால் அதைக் கொண்டாட 31 நாள் கணக்கு வைச்சிருக்கிறம். அதே ஒரு அவச்சாவு என்டால் 3 மாதத்துக்கு துக்கம் கொண்டாடுறம். ஆனால் குடும்பம் குடும்பமா கிராமம் கிரமமா எங்கட சனம் செத்துப்போனதுக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள்? எத்தின நாள் அழுதனாங்கள்? யாரைப்பார்த்தாலும் யாருக்கு போன் பண்ணினாலும் ஒரே மரணம் பற்றிய செய்திகள். கொஞ்சாக்காலத்தில யார் யார் செத்தது யார் யார் உயிரோட இருக்கினமெண்டதே மறந்திடும் அவ்வளவுக்கும் மனங்கொள்ளாத செய்திகள் தினம் தினம் கேட்டு முடிச்சாச்சு. மரணச்செய்திகள் வந்த மாதிரி இன்னாருக்கு காலி்லை இன்னாருக்கு கையில்லை என்ற செய்திகள் பெருசா வந்துசேரேல்ல. ஒரு கட்டத்தில நேரில் அவர்களைச் சந்திக்கும்போதுதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அப்பிடி ஒரு காலம் வருமா? கட்டுநாயக்கா விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட கண்டன ஊார்வலங்கள் அனைத்தினுடைய ஒளிநாடாக்கள் ஒளிபரப்பப்பட்டு எங்களுடைய திருமுகங்கள் அந்த ஒளிநாடாக்களில் வருகிறதா என்று பார்த்துத்தான் நாட்டுக்குள் விடுகிறார்களாம்.

அவர்கள் அங்கிருந்து அனுபவித்த அதே கொடுந்துயரை அவர்கள் அளவுக்கு இல்லாவிடிலும் நாங்களும் அனுபவித்திருக்கிறோம். முந்தின காலங்களில் நடந்த கொடூரமான போர் பற்றிய செய்திகள் படங்கள் காணொளிகள் மக்களைச் சென்றடையவில்லை. ஆனால் இப்ப அங்க இருக்கிற மக்கள் தெரிஞ்சுகொள்ள முதலே நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்களை அவை வந்தடைகின்றன. யுத்தகள படங்களைப் பார்ப்பதால் அப்பிடி என்ன பாதிப்பு வந்திடப்போது என்று நானும் நினைச்சிருக்கிறன் ஆனால் ஒரு கட்டத்துக்குப்பிறகு செய்திகளைப் பார்க்காமல் ஒதுங்கியிருக்க முயற்சித்தபோதும் ஈமெயில் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் மரணங்களையும் இரத்தத்தையும் சதையையும் பார்த்துப்பார்த்து மரணங்கள் சாதாரணம் என்று மனம் பழகிப்போனாலும் அந்த வடுக்கள் எங்களுக்குள்ளேதான் இருக்கு.

வியட்நாம் போரிலிருந்து திரும்பிவந்த போர்வீரர்களின் குணமாற்றங்களைப் படித்தே நெருக்கீட்டுக்குப் பின்னான உளவடு (Posttraumatic stress disorder (PTSD))என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.அது யாருக்கு இருக்கு யாருக்கில்லை என்று சொல்றது என்ர நோக்கமில்லை. ஆனால் எங்கட மனசில ஒரு கொடுந்துயருக்குப்பின்னான வடு இருக்குது என்டது மட்டுமுண்மை. உண்மையா துயர் இன்னும் முடியேல்ல அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கு. இருந்தாலும் கடந்த மாதங்கள் போல எப்பவும் சாவுச்செய்தியும் மரணங்களின் எண்ணிக்கைகளும் வாறதில்ல.

retraumatization என்று சொல்லப்படுகிற கொடுந்துயர் பற்றிய பழைய நினைவுகளால் வரும் மனவுளைச்சலும் ஒரு சிக்கல்தான். உதாரணமா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நாங்கள் படிச்சது வளர்ந்தது எல்லாமே செல்லடிக்குள்ளயும் குண்டுச் சத்தத்திலயும்தான். பள்ளிச்சீருடையோட பங்கருக்குள்ள ஓடியிருக்கிறம் மேசைக்குக் கீழ விழுந்து படுத்திருக்கிறம். அதையே நாங்கள் காணொளிகளில " குத்தப்போறான் படுங்கோ " என்டு கதறிக்கொண்டு குழந்தைப்பிள்ளைகளைப் பாதுகாக்க முயற்சிக்கிற தாய்மாரைப் பார்க்கேக்க எனக்கு என்ர ரீச்சர்மாற்ற ஞாபகம் வாறது. அவையள் கனவிலயும் வாறவை. இது ஒரு சின்ன உதாரணம் தான். இலங்கையை விட்டு வரும்போது பாலியல் ரீதியா மனவுளைச்சலுக்கு்ள்ளாகி அல்லது வன்புணரப்பட்ட ஒரு பெண் இப்ப தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்படும்போது அவளுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்ப வந்து அவளுடைய அன்றாட வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

இந்த வடுக்களிலிருந்து நாங்கள் விடுபடணும். மனசில ஏற்படுற மாற்றங்கள் எங்கட உடம்பையும் பாதிக்கும். மனசு பலவீனமாகேக்க உடம்பின் நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். அப்பிடிக் குறையிறதாலே சாதாரணமா வாற காய்ச்சல் தலைவலி கூட நீண்டநாட்களுக்குத் தொடரும். அதால மனசைப் பலவீனம் அடையாமல் வைச்சிருக்கிறது நல்லது. ஆனால் அது எப்பிடி என்டு எனக்கும் சரியாத் தெரியேல்ல.

சில நேரம் வேலையில ஒரு ஆலோசகரா மற்றாக்களுக்கு ஆலோசனை வழங்கிற எனக்கு எனக்கு ஆலோசனை தர யாருமில்லையா என்று யோசிச்சிருக்கிறன். யார் யாரையோ நீங்கள் எப்பிடியிருக்கிறீங்கள் என்று கேக்கிறம். ஆனால் ஒருநாள் எங்கட நெருங்கின நண்பர்களையோ எங்கட குடும்பத்தினரையோ மனசார உண்மையான அர்த்தத்தோட நீங்கள் நல்லா இருக்கிறீங்கிளா? மனசும் உடம்பும் நல்லா இருக்கா என்று கேக்கிறமா? மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கோ பார்ப்பம். நான் அப்பிடிக் கேட்டதில்லை என்னையும் யாரும் கேட்டதில்லை.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களில் ஈடுபட்டதால நேரமின்மை ஒரு பிரச்சனை. அல்லது இருக்கிற நேரத்தையும் எப்பிடி அட்டவணைப் போட்டு பயன்படுத்தலாம் என்று தெரந்துகொள்ளாமல் இருக்கிறன். வீட்டிலுள்ளவர்களினதும் சரி வெளியிலுள்ளவர்களினதும் சரி அவர்களுடைப பிரச்சனைகளையும் என் தலையில போட்டுக்கொள்றது மிகப்பெரிய பிரச்சனை. எல்லாத்துக்கும் மேல "NO: இல்லை என்னால முடியாது என்று சொல்லத் தெரியாமலிருக்கிறது". இப்பிடியிருக்கிறதால மற்றவர்களின் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ற மாதிரி எனக்கென்ன பிரச்சனை என்ற தெளிவில்லாதது அப்பிடியே தெரிந்தாலும் அதை வெளிப்படையா பகிர்ந்துகொள்ளாமல் இருக்கிறது.

எல்லாருக்கும் ஏதொ ஒரு சுமை ஏதொ ஒரு பிரச்சனை. எங்களில எத்தினை பேர் பக்கத்தில இருக்கிறாளைப் பார்த்து நேசத்தோட கதைக்கிறம். ஏதோ கடமைக்கு hello how are you? என்டிட்டு எங்கட வேலையைச் செய்றம். நான் புலம்பிறனோ என்டு தோணுது ஆனால் ஒரு வேளை மற்றவர்கள் இப்பிடி நினைச்ச நேரத்தில நான் அவைக்கான இடத்தையோ நேரத்தையோ குடுக்காமல் இருந்திட்டனோ தெரியாது ஆனால் நான் யாரிட்டயும் மனம் விட்டுப்பேசோணும் என்று நினைக்கிற தருணத்தில சுற்றியிருக்கிறவர்கள் எல்லாமே தங்கட சுமைகளைச் சுமப்பதில் பிஸியாக இருக்கினம். யாராவது நீ எப்பிடி இருக்கிறாய் ? நல்லா இருக்கிறியா என்று கேக்க மாட்டினமா என்டு நான் நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சது இதே நிலையில மற்றாக்களும் இருக்கினமெண்டு.

நீங்களும் இப்பிடி உணர்ந்தால் இந்தப்பாட்டைக் கேளுங்கோ :

வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது...
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்து ஒன்றும் போகாது...

உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது...
பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது!மிச்சம் அடுத்த கிழமை:)

அடுத்த கிழமை என்ன எழுதப்போறன் எண்டு தெரியாது ஆனால் ஏதும் எழுதணும் என்டு மட்டும் தெரியுது.

11 comments:

தமிழன்-கறுப்பி... said...

\\
ஆனால் ஒருநாள் எங்கட நெருங்கின நண்பர்களையோ எங்கட குடும்பத்தினரையோ மனசார உண்மையான அர்த்தத்தோட நீங்கள் நல்லா இருக்கிறீங்கிளா? மனசும் உடம்பும் நல்லா இருக்கா என்று கேக்கிறமா
\\

நான் கேட்டிருக்கிறேன், கதைத்திருக்கிறேன் சினேகிதி..

என்னால வேறு எதையும் செய்ய முடியாவிட்டாலும் ஆகக்குறைந்தது சில உண்மையான வார்ததைகளை பேசவும் குறைந்த பட்ச நம்பிக்கையைத்தானும் உண்டு பண்ணவும் முயற்சித்திருக்கிறேன்.


இப்ப நான் உங்களை எப்படி இருக்கிறியள் என்று கேட்கப்போவதில்லை, அதனை சம்பிரதாயமாக கேட்பதில் கிஞ்சித்தும் விருப்பம் இல்லாதவன் நான்.

அடுத்த பதிவை அடுத்த கிழமைதான் எழுதோணும் எண்டில்லை...

வி. ஜெ. சந்திரன் said...

பல சந்தர்ப்பங்களில் பலரின் பிரச்சனைகளை பொறுமையோடு கேட்டிருக்கிறேன். ஆனால் அதே போல என்னால் என்னுடைய பிரச்ச்னைகளை யாருடனும் மனம் விட்டு பேசி உரையாட மனம் வருவதில்லை. அதற்கு ஒரு காரணம் ஏன் என் பிரச்சனைகளை சொல்லி அவர்களுக்கு பிரச்சனை கொடுப்பான் என்பது. இரண்டாவது என் பிரச்சனைகளை ஒருவருக்கு சொல்ல, அவர் இன்னொருவருக்கு சொல்ல என தேவையற்ற பிரச்சனைகள்.

என் வேலைகள் ஒரு புறம் இருந்தாலும், அண்மைய நிகழ்வுகளுக்கு பின் யாருடனும் அதிகம் பேச விருப்பம் வருவதில்லை. மாததில் 2 முறையாகிலும் கதைத்து வந்த பல நாடுகலிலும் பரந்து இருக்கும் நண்பர்களுடன் கதைத்து நீண்ட நாட்கள் ஆகிறது.

நீங்கள் எழுதியிருக்கும் பல கருத்துக்கள் பலருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் சினேகிதி...


உண்மையில் இந்த PSTD யின் விளைவுகளை நானும் யோசித்துப் பார்ப்பதுண்டு. யுத்தங்களால் ஏற்பட்ட நேரடிப் பாதிப்புகளைத் தவிர்த்து இது போன்ற பாதிப்புகள் நெடுங்காலத்துக்கு தொடரப் போகின்றன. புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்கள் ஓரளவுக்கு மன உளைச்சல் சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறக்கூடியதாய் இருக்கும். ஆனால் இலங்கையில் இருப்பவர்களுக்கு அது கூட கிடைக்கப்போவதில்லை. (முகாம்களில் இருப்பவர்களுக்கு உயிர் வாழும் உரிமை கூட இருக்கின்றாதா என்பதே கேள்விக்குறிதான்...)

கோபிநாத் said...

\\ யாராவது நீ எப்பிடி இருக்கிறாய் ? நல்லா இருக்கிறியா என்று கேக்க மாட்டினமா என்டு நான் நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சது இதே நிலையில மற்றாக்களும் இருக்கினமெண்டு.
\\

உண்மை...ஏதே ஒரு தயக்கம் இருந்துக்கிட்டே இருக்கு...பார்போம் எப்போ உடையுதுன்னு.

\\அடுத்த கிழமை என்ன எழுதப்போறன் எண்டு தெரியாது ஆனால் ஏதும் எழுதணும் என்டு மட்டும் தெரியுது.\\

;) தொடர்ந்து எழுதுங்கள்..

'இனியவன்' என். உலகநாதன் said...

நல்லா எழுதியிருக்கீங்க.

சந்தனமுல்லை said...

நன்றி சிநேகிதி...உங்க நேரமின்மைப் பிரச்சினை தெரிஞ்சாலும் போஸ்ட் போட சொல்லாம இருக்க முடியலை..அதனால அடுத்த போஸ்டும் தமிழன் - கறுப்பி சொன்னதை வழிமொழியறேன்! இந்த வடுக்களிடமிருந்தும் துயரங்களிலிருந்தும் நீங்களும் தடுப்பு முகாம்களிலிருப்பவரும் விடுபடவேண்டுமென்பதுதான் எங்களின் அவாவும்! நல்ல இடுகை! அந்த படம் ஒரு வலியை ..தனிமையை..சோகத்தை உணர்த்துகிறது எனக்கு!

காரூரன் said...

*\\ ஆனால் ஒருநாள் எங்கட நெருங்கின நண்பர்களையோ எங்கட குடும்பத்தினரையோ மனசார உண்மையான அர்த்தத்தோட நீங்கள் நல்லா இருக்கிறீங்கிளா? மனசும் உடம்பும் நல்லா இருக்கா என்று கேக்கிறமா?\\

நான் கேட்டிருக்கின்றேன். உண்மையான நண்பனிடம் நாம் தோற்றுவிடுவதில்லை. சரியோ, பிழையோ மனம் விட்டுப் பேசினால் கனம் விட்டுப் போகும் என்பார்கள். செய்வது சிறியது என்றாலும் மனமுவந்து செய்ய வேண்டும் என்று நம்புவன். நம்மை பாவித்துக் கொள்பவர்கள் எப்போதும் இருப்பார்கள், அதையிட்டு வருந்தி பிரயோசனம் இல்லை.

சினேகிதி said...

ஊரில காம்ப்ல இருக்கிறாக்களை கேக்கும்போது இருக்கிற உள்ளுணர்வு இங்க இருக்கிறாக்களை கேக்கும்போது இருப்பதில்லை என்றுதான் சொல்றன் நான். உதாசீனம்....இவை வெளிநாட்டில இருக்கினம் இவைக்கென்ன பிரச்சினை என்ற எண்ணம்.

அதேபோலத்தான் எங்கயோ தூரத்தில இருக்கிறாக்களுக்கு மறக்காம பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவம் ஆனால் பக்கத்தில இருக்கிறவர்களிடம் சொல்வதில்லை.

சினேகிதி said...

\\பல சந்தர்ப்பங்களில் பலரின் பிரச்சனைகளை பொறுமையோடு கேட்டிருக்கிறேன். ஆனால் அதே போல என்னால் என்னுடைய பிரச்ச்னைகளை யாருடனும் மனம் விட்டு பேசி உரையாட மனம் வருவதில்லை. அதற்கு ஒரு காரணம் ஏன் என் பிரச்சனைகளை சொல்லி அவர்களுக்கு பிரச்சனை கொடுப்பான் என்பது. இரண்டாவது என் பிரச்சனைகளை ஒருவருக்கு சொல்ல, அவர் இன்னொருவருக்கு சொல்ல என தேவையற்ற பிரச்சனைகள்.
\\


அதே அதே...கனபேருக்குப் பொருந்தும்.

சினேகிதி said...

\\உண்மையில் இந்த PSTD யின் விளைவுகளை நானும் யோசித்துப் பார்ப்பதுண்டு. யுத்தங்களால் ஏற்பட்ட நேரடிப் பாதிப்புகளைத் தவிர்த்து இது போன்ற பாதிப்புகள் நெடுங்காலத்துக்கு தொடரப் போகின்றன. புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்கள் ஓரளவுக்கு மன உளைச்சல் சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறக்கூடியதாய் இருக்கும். ஆனால் இலங்கையில் இருப்பவர்களுக்கு அது கூட கிடைக்கப்போவதில்லை. \\

இங்கிருப்பவர்களுக்கு ஆலோசனை கிடைக்கும்தான் ஆனால் அதைப் பெற யார் யார் தயாராக இருக்கிறார்கள்?

எங்களுக்கு ஒரு பாதிப்புமில்ல..மனப்பிறள்வும் இல்ல நாங்கள் நல்லாத்தானிருக்கிறம் என்டுதான் சொல்லுவினம்.

இந்தப்பாதிப்புகள் என்ன என்ன விதத்தில தொடரப்போகுதெண்டத நினைச்சாத்தான் கவலையா இருக்கு.

சினேகிதி said...

அதான் கோபிநாத்...கருங்கல்லா என்ன? முயற்சி செய்து பாருங்க உடைச்சிடலாம்.

நன்றி முல்லை, இனியவன் ,காரூரன்.