Custom Search

Monday, January 14, 2008

உங்கட வீட்ட பொங்கியாச்சா ?

இன்டைக்கு பொங்கலாம் எல்லோ..உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே நானேன் போய் உங்களிட்ட சொல்லுவான். நீங்கள் எல்லாரும் இப்ப பொங்கி பொங்கலை நல்லா ஒரு பிடி
பிடிச்சிருப்பியள் ஆனால் என்ன மாதிரி விடுதியில இருக்கிறாக்களுக்கெல்லாம் cheerios ம் பாலும்தான் பொங்கல் (ஆமா அது ஒவ்வொரு நாளும் சாப்பிடுறது தானே) . நானிப்பிடி
எழுதுறதை என்ர அம்மா மட்டும் வாசிக்கோணும் அவ்வளவுதான் :-) ஆமா நீ வீட்டில நிண்டாலும் பொங்கல் சாப்பிடுற ஆள்தானே என்று கட்டாயம் சொல்லுவா.என்னதான் பொங்ல் பிடிக்காட்டாலும் பொங்கல் நாளுக்கு வீட்டில நிண்டால் ஒரு சந்தோசம்தான் என்ன ? இப்ப பாருங்கோ நான் மட்டும் விடுதில நிண்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறன் ஆனால் வீட்ட அக்கா குடும்பத்தோட அம்மா வீட்ட போய் நிக்கிறா. போனது காணாதெண்டு போன் பண்ணி எனக்கு வெறுப்பேத்துதுகள் பெரிசுகள்தான் இந்தப்பாடெண்டால் அக்கான்ர மகன்கள்
இரண்டுபேரும் என்னை நக்கலடிக்க வெளிக்கிட்டுதுகள். அவை எல்லாரும் ஒன்றா இருந்து fun அடிக்கினமாம் நான் இங்க தனிய நிக்கிறன் என்றதில ஒரு சிரிப்பவைக்கு.

பொங்கல் எனக்கு சாப்பிட விருப்பமில்லை ஆனால் பொங்கலுக்கென்று வேண்டுற கச்சான் kaju nuts இதெல்லாம் உடைச்சு வெட்டி வைக்க முதல் கால்வாசி என்ர வாய்க்குள்ளயும்
கால்வாசி அக்கான்ர வாய்க்குள்ளயும் போயிடும் மிச்சம்தான் பொங்கல் பானைக்குள்ள போகும். (அம்மம்மா என்ன யார் பக்கத்தில இருந்தாலும் எப்பிடி களவாச் சாப்பிடுதென்று
எங்களுக்குத் தெரியுமில்ல :-) ஆனால் சில நேரம் இப்பிடிக் களவாச் சாப்பிடுற சின்ன விசயத்தில தொடங்கி அம்மம்மாக்கு மாமாக்களுக்கென்று யாரிட்டயாவது வாய்காட்டிப்போட்டு
நல்ல நாளதுவுமா நல்லா மண்டகப்படி வாங்கிப்போட்டு நாள் முளுக்க பம்மிக்கொண்டும் சில நேரம் இருப்பம்.

இப்ப மட்டுமில்ல எப்பவுமே எனக்கு பொங்கல் பிடிச்ச சாப்பாடில்ல பொங்கல் மட்டுமில்ல இனிப்பானது எதுவுமே. ஆனால் பொங்கல் என்ற பெயரில நடக்கிற மிச்ச எல்லா விசயமும்
பிடிக்கும்.அம்மா குடும்பத்திலயும் சரி அப்பா குடும்பத்திலயும் சரி நிறையப் பிள்ளையள் அதால எனக்கு நிறைய சித்திமார் சித்தப்பாமார் மாமாமார் மாமிமார் பெரியப்பா அத்தை ;
பொங்கல் போன்ற பண்டிகை நாட்களையொட்டி நிறையக் காசு கிடைக்கும். அது தவிர நிறைய உடுப்புகள் கிடைக்கும். அதுவும் சித்தப்பாமார் அவைக்கு என்ன பிரச்சனை என்டாலும் பெறாமக்களுக்கு உடுப்பு வாங்கிக்குடுக்க பின்நிக்கிறதேயில்லை. புத்தகம் கொப்பி கொம்பாஸ் இப்பிடி நிறையக் கிடைக்கும். வீட்ட பொங்கி முடிஞ்ச கையோட நானும் அக்காவும் அம்மம்மாவீட்ட ஓடிடுவம் ஏனென்டால் எங்கட வீடு மட்டும் கொஞ்சம் தூரத்தில மற்ற மாமாக்கள் சித்தியவைன்ர வீடெல்லாம் ஒரே வளவுக்குள்ள இருக்கும். ஒவ்வொருத்தற்ற வீட்டயும் போய் என்னென்ன நொறுக்குச் சாப்பாடு இருக்கோ அதை எடுத்துக்கொண்டு அம்மம்மான்ர தோட்டக்காணிக்குப் போய் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம். அநேகமா பெடியங்களை விட பெட்டையளுக்குத்தான் நிறையப் பரிசுகள் கிடைக்கும். அதால பொங்கலண்டைக்கு அவங்கள் கொஞ்சம் மூஞ்சையத் தூக்கி வச்சுக்கொண்டு திரிவாங்கள் (இப்ப நினச்சா சிரிப்பா இருக்கு).

குடும்பத்தாக்களோட பொங்ல் கொண்டாடி முடிய தூரத்துச் சொந்தக்காரர் வீட்டயும் அயலவர் தெரிஞ்சாக்கள் வீட்டயும் போறது. அங்க போய் எனக்கு என்ர சித்தப்பா பொங்கலுக்கு
புதுக் கொம்பாஸ் வேண்டித்தந்தவர். அப்பா பொங்கல் வாழ்த்தும் காசும் அனுப்பினவர் கொழும்பு மாமா மங்குஸ்தான் பழம் கொண்டு வந்தவர் என்று அதுவரை கிடைச்சதெல்லாத்தையும் விளம்பரப்படுத்துறது அங்க இருக்கிற எங்கட வயசாக்களும் தங்கட பங்குக்கு எங்கட குட்டிச் சித்தப்பா லண்டன்ல இருந்து ஏதோதோ அனுப்பினவர் என்று சொல்லுவினம். வீட்ட போய் அம்மாவ நச்சரிக்கிறது ஏனம்மா எங்கட சுவிஸ் மாமா எங்களுக்கொண்டு அனுப்பேல்ல. அம்மா சொல்லுவா அவை அவேன்ர குட்டிச்சித்தப்பாவோட கதைக்கிறதேயில்ல உனக்குச் சும்மா சொல்லியிருக்கினம். ( யாரிட்டயும் ஏதும் வேண்டுறதிலயே நிக்கிறாள் என்று நினைக்கிறீங்களென்ன :-) சின்ன வயசில எப்பிடியிருந்தனோ அதைத்தானே சொல்ல முடியும் :-) ).

இவைதவிர பொங்கல் என்றால் எனக்கு ஞாபகம் வாறது எங்கட ஊரில இருக்கிற பிள்ளையார் கோயில் வையிரவர் கோயில் மற்றும் பாலாச்சி. வீட்டுப்பொங்கல் முடிய கோயில்லயும் போய் பொங்குவினம் அம்மாமார். நாங்கள் மரத்தில மாங்காய் காய்ச்சிருக்கோ பலா மரத்தில பூ பூத்திருக்கோ எப்ப காய் வரும் நிலத்தில நிண்டுகொண்டு ஆயுறமாதிரிக்காய்க்குமோ என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பம். ஆனால் அது பொறுக்காது அம்மா மாருக்கு சாணி காணாது பாலாச்சி வீட்ட போய் இன்னும் கொஞ்சம் சாணி வேண்டிக்கொண்டு வரச்சொல்லுவினம். மஞ்சள் தூள் எடுத்துக்கொண்டுவா அது வேணும் இதுவேணும் என்று ஆக்கினைப் படுத்துவினம். ஆக்கினை என்டு நினச்சதாலயோ என்னவோ இப்ப பொங்கல் என்றாலே நினைவுகள்
மட்டும்தானிருக்கு.

இப்பிடித்தான் ஒரு பொங்கலுக்கு முதல்நாளிரவு வெடி வேண்டிக்கொண்டு வந்து தந்திட்டு அண்ணா போராடப் போறன் என்று கடிதம் எழுதி வச்சிட்டுப் போட்டான். அடுத்த நாள் பொங்கல் பொங்கலோ பொங்கல்தான். பெரியப்பா பாவம் ஊாரில உள்ள எல்லாக்காம்புக்கும் திரிஞ்சுபோட்டு இரவு வந்தார் வீட்ட அவன் திரும்ப வரமாட்டானாம் என்டு.

பொங்கலண்டைக்கு எல்லாரையும் பானையில அரிசி போடச் சொல்லறவையெல்லா?? ஏதோவொரு தாயகப்படத்தில பொங்கல்பானையில அரிசி போட்டுக்கொண்டிருக்கும்போது பொம்மர் அடிச்சு அந்தக் குடும்பத்தில எல்லாரும்(?) சாவினம் யாருக்காவது ஞாபகம் இருக்கா என்ன படமென்று?

ஊரைவிட்டு வந்தாப்பிறகு பொங்கல் அதுபாட்டுக்கு வந்த சுவடு தெரியாமல் வந்து போகுது. பொங்கல் வரப்போகுதென்ற ஆரவாரமும் இல்லை எதிர்பார்ப்புமில்ல. எடுத்ததுக்கெல்லாம்
புதுச்சட்டை போட்டுப் பழகி புதுசாப் போடோணும் என்ற ஆசையும் வாறேல்ல. இங்க ஸ்காபுறோவில ரெடிமேற் பொங்கல்பானை விற்கிறார்கள். ஊரில பொங்கல்சாமான் என்று லிஸ்ட் போட்டு வேண்டினமாதிரிக் கஸ்டப்படத்தேவையில்ல. பொங்கலுக்குத்தேவையான எல்லாம் தருவினம் அதை வேண்டி கிச்சின்ல பொங்கலைப் பொங்கி விருப்பம் என்றால் சாப்பிடலாம் இல்லாட்டி பொங்கி வைச்சிட்டு தேவையான ஆக்கள் போட்டுச் சாப்பிடுங்கோ என்டிட்டு வேலைக்குப்போறாக்கள் போகலாம். பள்ளிக்கூடம் போறாக்கள் போகலாம். வீட்டில
இருக்கிறாகள் பொங்கல் வாழ்த்துச் சொல்ல வாற தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளித்துக்கொண்டு சன் ரீவியில் நயன்தாராவின் முதல் பேட்டியை அல்லது TVI ல ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். இல்லாட்டி என்னைப்போல நடுச்சாமத்தில கணனிக்கு முன்னால கொட்டாவி விட்டுக்கொண்டு எதையாவது டொக்கு டொக்கெண்டு தட்டிக்கொண்டிருக்கலாம் :-)

என்னதான் சொன்னாலும் தைப்பொங்கல் தைப்பொங்கல்தான்!
பொங்கல்பொங்கல் வாழ்த்துக்களுடன் -சிநேகிதி-

Saturday, January 12, 2008

வணக்கம் வணக்கம் வணக்கம் !!!

எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்? எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும் இனிய பொங்கல் வாழ்த்துக்களும். பொங்கல் பொங்கி சாப்பிட்டாச்சா ? பொங்கினாக்கள் எனக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்கோ என்ன:-)பொங்கல் நாளுக்கு வீட்ட நிக்காம விடுதிக்கு வந்திட்டன். நின்டிருந்தால் அப்பாட்ட கொஞ்சம் காசடிச்சிருக்கலாம். சரி விடுவம் ..தமிழ்மணத்தில பொங்கல் வாரத்தில நட்சத்திர போனஸ் கிடைச்சிருக்கே என்று சந்தோசப்பட்டுக்கிறன்.

ஆனால் என்ன என்னை அநேகமா நீங்கள் மறந்துபோன நேரமாப் பார்த்து நட்சத்திர வாரத்தில் எழுதுமாறு தமிழ்மண நிர்வாகத்தினர் அழைத்திருக்கிறார்கள். இது யாருடைய அதிஸ்டம் அல்லது துரதிஸ்டம் என்று எனக்குத் தெரியாது. நான் நிறைய எழுதவேணும் என்று ஆசைப்பட்டது ஒரு காலம். ஆர்வம் என்றது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்குது. எழுதுறது மட்டுமில்ல எதிலயுமே ஆர்வத்தின் ஆயுட்காலம் வரவரக் குறைஞ்சு கொண்டே போகுது. இதுக்கு ஏதாவது மருந்திருக்கா?

கார்த்திகை மாத நடுவில் இடைக்காலத் தேர்வுகளும் மற்ற பாடங்களின் assignments, term papers இப்படி பல dead-lineகளும் கனவில கூட பயமுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒருநாளில் “தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்க அன்புடன் அழைக்கிறோம்” என்று ஒரு மெயில் வந்தது. நிறைய தகவல்களின் சேர்க்கையால் மூளை கொஞ்சம் கொஞ்சமா செயலிழக்கத் தொடங்கியிருந்த சாமவேளையில நித்திரை தூங்கிறதும் மடிக்கணணியின் சூடு தாங்காமல் திடுக்கிட்டு எழும்பி திரும்ப படிக்கிறதுமா இருந்த ஒரு இரவில்தான் அந்த மெயில் வந்திருந்தது. என்ன எழுதுறன் என்ற யோசனையே இல்லாம “மன்னிக்கோணும் எனக்கு ஜனவரியில அடுத்த semester தொடங்கிடும் எழுத நேரம் இருக்காது ” என்று பதிலெழுதிட்டன். மெயிலனுப்பின பிறகுதான் யோசிச்சன் கிறிஸ்மஸ் விடுமுறையெண்டு ஒண்டிருக்கல்லோ அந்த நேரம் எழுதி வச்சிட்டு ஜனவரியில post பண்ணலாம்தானே எண்டு. எனக்கு மூளை கொஞ்சம் தாமதாவே செயல்படுது என்றத நிரூபிக்கிற மாதிரி நான் நினைத்ததையே பிரதிபலிக்கிற மாதிரி தமிழ்மண நட்சத்திர நிர்வாகியிடமிருந்து அடுத்த மெயில் வந்தது. சரியென்டு நட்சத்திர வாரத்தில எழுதுறன் என்று சொல்லிட்டன். ஆனால் விடுமுறைக்கு வீட்ட போன நேரம் வீட்டில இணைய வசதி இல்லாதால நான் நினைத்தமாதிரி எழுத முடியாமல் போச்சு. இப்ப விடுதிக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமா எழுதுறன். அதால நிறையத் திட்டாதயுங்கோ என்னை plzzz.

எழுத வந்த புதுசில 2005 ல நினைக்கிறதெல்லாத்தையும் எழுதிக்கொண்டிருந்தன். அப்ப இந்த நட்சத்திர எழுத்தாளர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டிருக்கிறன். இன்னும் ஒருக்காலும் நட்சத்திரமாகேல்லயா என்று கேட்ட ஆக்களுக்கு நாமளும் ஒருநாளைக்கு நட்சத்திரமாவமில்ல அப்ப பார்த்துக்கிறன் உங்களையெல்லாமெண்டு மனசுக்குள்ள நினச்சிருக்கிறன். ஆனால் பிறகு அந்த ஆசையில்லாமல் போட்டுது.

இப்பெல்லாம் எழுத்துக்கும் என்னைப் பிடிக்காமல் போச்சு எனக்கும் அதை இப்ப பிடிக்கிறேல்ல. அப்பப்ப தாயகப்பறவைகளுக்கு மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறன். நிறைய எழுதவேணும் என்று எனக்கு நானே சொல்றதும் அது நடக்காமல் போறதும் வழமையாகிட்டு. இனிமேலாவது செயலுக்கு அதிகமுக்கியத்துவம் குடுக்கிறன். ஒவ்வொரு lecture லயும் interesting ஏதாவது படிச்சால் இதைப்பற்றி எழுதவேணும் என்று குறிச்சு வச்ச விசயங்கள் என்ர gmail draft ல நிரம்பிக்கிடக்கிறதுதான் மிச்சம். எழுதுவதற்கான நேரமும் ஆர்வமும் தான் இல்லை. இப்ப வலுக்கட்டாயமாக என்னைக் கெஞ்சிக்கேட்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறன். இதை எழுதி முடிக்கிறதுக்குள்ள நான் எத்தின தரம் பாட்டுப் பார்ப்பன், msn க்குப் போவன், சாப்பிடுவன், தேத்தண்ணி குடிப்பன் என்றதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒருநாளைக்கு ஒரு பதிவாவது எழுதவேணும் என்ற முடிவில இருக்கிறன். இனி எல்லாம் என்ர மனசைப் பொறுத்தது.
ஆனால் ஒரு விசயம். நான் final exam க்குப் படிக்கும்போது கூட இவ்வளவு கரிசனையாப் படிச்சதில்ல ஆனால் நட்சத்திர வாரத்துக்கு ஒழுங்கா எழுதவேணும் என்று நினைச்சதில இருந்து கட்டில் நிறைய என்ர பாடப்புத்தகங்களும் மடிக்கணனியின் desktop முழுவதும் பழைய lecture slides எல்லாம் நிறைஞ்சு கிடக்கு. என்னால முடிஞ்சளவுக்கு இந்த வாரத்தை உருப்படியா பிரயோசனமாக்கணும் என்றுதான் நினைக்கிறன். பிழைகள் ஏதாவது வந்திட்டால் சுட்டிக்காட்டுங்கோ. குட் லக்.

Monday, December 03, 2007

நெசமாத்தான் சொல்றியா?

தாயகப்பறவைகள் மார்கழி இதழுக்கு எழுதியது:

You faget! இதை நீங்களும் பல இடங்களில பல இளமாக்களிட்ட இருந்து கேட்டிருப்பீங்கள். சில பேருக்கு மட்டும் அதின்ர உண்மையான அர்த்தம் விளங்கியிருக்கும். ஆனால், மற்றவை ஏதோ சின்னப்பிள்ளையள் கெட்ட வார்த்தையில திட்டுதுகள் எண்டு நினைச்சிருப்பீங்கள். இன்னும் சில பேர் அதை கண்டுகொள்ளாமலே விட்டிருப்பீங்கள். சிலபேர் மனசுக்குள்ள திட்டினாலும், சின்னப்பிள்ளையள் விளையாட்டுத்தனமாச் சொல்லிட்டுதுகள் எண்டு நினைப்பீங்கள். என்ன அர்த்தம் எண்டு சொல்லாமலே கனக்க கதைக்கிறன் என்ன?

faget மற்றும் cocho போன்ற வார்த்தைகள், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஒரு ஆணைக் குறிக்கும் சொற்களாகும். இந்த சமூகமானது சொற்களால் வன்முறை செய்யக் கற்றுக் கொண்டுள்ள சமூகமாகும். நம்மில் பலர், கோபத்தின் உச்சத்தில் நாம் உதிர்க்கும் சொற்கள், சக மனிதரை எந்தளவு பாதிக்கிறது என்பதை அறிவதில்லை. சிலர், பிறர் மனதைத் துன்புறுத்திப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, தமிழில் தூசணச் சொற்களை சிறுவர்கள் உச்சரிக்கும் போது அது பாரதூரமாகக் கருதப்படுகிறது. அதே, ஆங்கிலத்திலோ அல்லது புலம்பெயர்ந்து வாழும் அந்நாட்டு மொழிகளிலோ சொல்லும் போது அது கவனிக்கப்படுவதில்லை. சிலவேளை அவற்றின் அர்த்தம் புரியாததால் கூட இருக்கலாம். அல்லது, வேற்றுமொழிகளில் சொல்கிற போது அச்சொற்களின் தாக்கத்தை உணராததால் கூட இருக்கலாம்.

தாயால், தந்தையால், சகோதரர்களால் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால், அதாவது யார் யாரையெல்லாம் ஒருவன் அதிகமாக நேசித்தானோ, நம்பினானோ, தான் யார் அருகாமையில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தானோ - அவர்களே அவனைப் பாலியல் துஷ்பிரயோகத்துக் குள்ளாக்கி - அவனுக்கு அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை மட்டுமன்றி மானுட சமூகத்தின் மீதான நம்பிக்கையையே தகர்த்தெறியும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டவனைக் குறிக்கும் ஒரு சொல்லை, நாம் எவ்வளவு சாதாரணமாக எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி உடனே சொல்லிவிடுகின்றோம். பாலியல் துஷ்பிரயோகத்திக்கு உள்ளானவனைப் பார்த்து இந்தச் சொல்லை யாரும் சொன்னால், அவனுக்கு எவ்வளவு வலியேற்படுமோ - அதேயளவு அல்லது அதை விட அதிகமான வலியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படாதவனைப் பார்த்துச் சொல்லும்போது நாம் ஏற்படுத்துகின்றோம். தமிழில் இதனை "தீயால் சுட்ட புண் ஆறும் ஆறாது நாவால் சுட்ட புண்" என்று மிகப்பொருத்தமாக முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். இச் சொற்களின் பொருள் புரியாதவர்கள் என்றால், என்றோ ஒருநாள் faget என்ற சொல்லின் அர்த்தம் தெரியவரும்போது அவர்களின் நெஞ்சில் எங்கேயோ முள் தைக்கும். அர்த்தம் புரியாமல் பயன்படுத்துபவர்கள், ஆண்களை மட்டுமே குறிக்கும் இச்சொல்லை பெண்களைக் குறிக்கவும் பயன்படுத்துவதைக் காணலாம்.



என்னிலும் இளைய என் சகோதரர்களுடன் கதைக்கும்போது அல்லது விளையாடும்போது, சர்வசாதாரணமாக "you faget", "cocho head" போன்ற வார்த்தைகளைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிலர் உண்மையான அர்த்தத்தைச் சொன்னதும் அப்படிச் சொல்வதை நிறுத்திக்கொள்வார்கள். சிலரைப் பொறுத்தவரையில், உரையாடலினிடையே அப்படிச் சொல்வது ஒரு நாகரீகம். இளையோர் பேச்சு வழக்கில் கலந்துபோய்விட்ட ஒன்று. இதற்கு அவர்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. இன்றைய ஊடகங்களும் ஒரு காரணம். இது தான் இளையோர் மொழி என்கிற தோற்றப்பாட்டை உருவாக்கி / பரப்பி வைத்துள்ளன. இந்த விம்பம் உடையுமட்டும் இளையோரும் அதனை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இந்நேரத்தில், ஏனோ எனக்கு "ஜோடி நம்பர் 1" நடுவர்களின் "சான்ஸே இல்ல பிச்சிட்டிங்க", "கிழிச்சிட்டிங்க" போன்ற சொற்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.

இப்படி நம்பிக்கைக்குரியவர்களால் சிறுவயதில் பாலியல் ரீதியில் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு, பதின்மவயதிலிருந்தே ஆண் பெண் என்ற பாகுபாடின்றி யாரையுமே நம்ப முடிவதில்லை. எவருடனும் நெருங்கிப்பழக முயற்சி செய்வதில்லை. அவர்களுடைய ஒதுக்கத்தை புரிந்துகொண்டு யாராவது தாங்களாக முன்வந்து அவர்களுடன் நெருங்கிப் பழகத்தொடங்கினால், அதை அவர்களால் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. "ஏன் என்னிடம் நெருங்கிப் பழக முயற்சி செய்கிறார்கள்" என்று யோசித்து யோசித்து, ஒருவேளை தன்னுடைய abuser போலவே தன்னுடலைத்தான் விரும்புகிறார்களோ என்றெண்ணுவார்கள். யாரும் அவர்களிடத்தில் அன்பாயிருந்தால், அதற்குப் பதிலாக தன்னிடம் அவர்கள் எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று சிந்திப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் பாலியல் ரீதியானதாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்து, எவரையும் அவ்வளவு சீக்கிரத்தில் தம்மை நெருங்க விடமாட்டார்கள். விதிவிலக்காக, இப்படி பாதிக்கப்பட்டவர்களை ஒருவர் உண்மையாக நேசித்து, அவர்களிருவரும் ஒன்றுகூட முயற்சிக்கும்போது பழைய நினைவுகள் எல்லாம் வந்து நர்த்தனமாடும். மனதைக் குழப்பும். உளவியல் குழறுபடிகளை உண்டுபண்ணும். குறிப்பாக, உடலுறவின் போது பெண் ஆளுமைமிக்கவளாகச் செயற்படின், அது அவர்கள் மனதை உறுத்தும். பழைய சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, பயத்துடனான எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி மனதில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும்.

8 -10 வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் முதல் பதின்ம வயதில் பாதிக்கப்பட்டவர்கள் வரை அவர்களுடைய abuser இன் தாக்கம் மிகவும் அழுத்தமானதாக இருக்கும். அந்த ஆழமான மனப்பதிவு, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் நினைவுக்கு வந்து தொல்லைகொடுக்கும். அந்த மனப் பாதிப்பிலிருந்து மீள முடியாதவர்களாக உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக தம்மை உருவகித்துக் கொள்வார்கள். அதைச் சமநிலைப்படுத்திக் கொள்ள நடக்கும் மனப்போராட்டத்தின் வெளிப்பாடு, சமூகத்தளத்தில் அவர்களை வேறுபடுத்திக் காட்டும்.

இப்படி நடந்துகொள்பவரை சமூகத்திலிருந்து புறக்கணித்து ஒதுக்கி வைக்காமல், அவர்களின் சூழலை, மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும். அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை, உளவியல் ரீதியாக அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதன்மூலம் அவர்களை இயல்புநிலைக்கு மீட்டெடுக்க முடியும். எனவே, ஒவ்வொரு இயல்புநிலை மீறிய செயற்பாட்டுக்குப் பின்னாலும், ஏதோ ஒரு உளவியல் தாக்கம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். அதேபோல், நமது ஒவ்வொரு செயற்பாட்டின் மூலமும், நம்மிடமும் பிறரிடமும் நாம் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பதையும், சில சந்தர்ப்பங்களில் அது மிக மிக அழுத்தமாக அவர்கள் மனதில் பதிவாகிவிடும் என்பதையும் உணர்ந்துகொள்வது அவசியம்.

Thursday, November 01, 2007

PIT நவம்பர் மாத புகைப்படப் போட்டிக்கு!

St.Lawrence river - whale watching க்குச் செல்லும் வழி



பழைய கியுபெக் நகர சாலை






குறிப்பு : படங்களனைத்தும் வானுக்குள்ள இருந்து எடுத்ததால வான் கண்ணாடியில இருந்து கையடையாளம் வேற அடையாளங்களெல்லாம் இருக்கு கண்டுக்காதீங்க சரியா.

முதலிரண்டு படங்களும் போட்டிக்கு.

Saturday, October 20, 2007

இந்தப் பாட்டு எந்தப் படத்தில??

இந்த fusion dance ஐப் பாருங்கோ ஒருக்கா. ஜோடி #1 மாதிரி ஒரு நிகழ்ச்சி என நினைக்கிறேன்.
11 வயசு செளமியாட நடனத்திறமையைப் பாருங்க. ஆமா "உனக்கும் எனக்கும் ஆனந்த் விடிய விடிய சொர்க்கம்... " எந்தப் படத்தில இந்த பாட்டு?

.

என்னத்த சொல்வேனுங்க..

Friday, October 05, 2007

கண்டுபிடி கண்டுபிடி X

அநேகமா சினிமாப்பாடல்களோடு வரும் கண்டுபிடி கண்டுபிடி இதுதான் கடைசியா இருக்குமெண்டு நினைக்கிறன் :-) இனி தாயகப்பாடல்களும் சோமி அண்ணா சொன்னது போல பாடல்களும் (கூத்து மற்றும் நாட்டார் பாடல்களும்) தேடிப்பார்க்கிறன்.

g3,தர்சன் மற்றும் மைபிரண்டுக்குப் பாராட்டுக்கள்.










Saturday, September 15, 2007

கண்டுபிடி கண்டுபிடி IX

கண்டுபிடி கண்டுபிடி 8 ன் சரியான பாடல்கள்

1 - என் செல்லப்பேரு அப்பிள் (போக்கிரி)
2 - தச்சுக்கோ தச்சுக்கோ தங்கமே தச்சுக்கோ ( பொன்னியின் செல்வன்)3
3 - நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே (வேட்டையாடு விளையாடு)
4 - சங்கம் வைத்துக் காதல் வளர்த்த(கருப்புசாமி குத்தகை்காரர்)
5 - அழகா அழகா (By 2)


3 வது பாடலைக் கண்டுபிடித்த கதிரவனுக்குப் பாராட்டுக்கள்!

இந்தமுறைக்கான பாடல்கள் இதோ!













Friday, September 14, 2007

KFC & Taco Bell ல் எலிகளின் அட்டகாசம்

கொஞ்சம் பழசுதான்!

Tuesday, September 11, 2007

Paul ன்ர கதை II

8 அல்லது 9 வயதிலேயே தனக்கு மற்றவர்கள் மீது ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேணும் என்ற எண்ணம் வந்ததாம்.மற்றவர்களால் தன்மீது ஆதிக்கம் செலுத்தமுடியுமென்றால் தன்னாலும் அது முடியுமென்று தன் குடும்பத்தினரை கஸ்டப்படுத்துவதற்காகவே தான் ஒழுங்காகப் பாடசாலைக்குச் செல்லாமல் தீய நட்புகளைத் தேடினானாம்.கடைகளில் சிறிய திருட்டில் ஆரம்பித்துப் பின்னர் 12 வயதில் கார் றேடியோ போன்றவற்றை திருடி ஒரு கூட்டத்துடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியில் தங்க வெளிக்கிட்டானாம்.15 வயதில் மீண்டும் foster home வாழ்க்கை ஆரம்பமானது.அன்றிரவு தன் காதலியுடன் ஒரு சின்ன விசயத்துக்காகச் சண்டை போட்டுத் தோற்றுப்போன ஆத்திரத்தில் போதைமருந்து உட்கொண்டுவிட்டு foster home க்கு வந்தபோது அங்கே வசித்த ஒரு 6 வயதுச் சிறுமியைத் தான் sexual abuse க்குள்ளாக்கியதையும் தானா அப்படி நடந்துகொண்டேன் என்று தன்னால் நம்பமுடியவில்லையென்கிறான்.

சரியான சாட்சியங்களில்லாததாலும் தான் அப்படி அந்தச் சிறுமியிடம் நடந்துகொண்டதற்கு தான் சிறுவயதில் sexual abuse க்குள்ளாக்கப்பட்டது ஓரு காரணமாக இருக்கலாம் என்று தான் foster home mother க்குச் சொன்னதாலும் தன்னை அவர்கள் counselling க்கு அனுப்பினார்களாம்.தான் counselling க்குச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் கூட கனவில் வன்மமான எண்ணங்கள் வந்ததாம்.சிறுவர்களையும் சிறுமிகளையும் தன்னால் கனவில் கூட அப்பிடி நினைத்துப்பார்க்க முடியவில்லையாம் அத்தோடு கனவில் நடப்பது போல நிஜத்திலும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சியாக தன் நாளங்களை அறுத்துக்கொண்டானாம்.

தெரப்பிக்குச் சென்று வந்ததால் தான் இப்போது தன் இறந்தகாலத்தை மறந்து நிம்மதியாக இருக்கிறானாம்.தனக்கு ஆண் நண்பர்களும் பெண் நண்பர்களும் இருக்கிறார்களாம்.வளர்ந்த ஆண்கள் அதாவது X ன் வயதையொத்த (>30) ஆண்களைத் தன்னைச் சாதாரணமாகத் தீண்டினால் கூட தனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்து தொல்லைப்படுத்துவதால் இயன்றளவு அப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்த்து வருகிறானாம். பெண்களுடன் டேற்றிங் செல்லும்போது தன்னைப் பற்றித் தான் அதிகம் சொல்வதில்லையாம்.Foster home ல் வாழும் தன்னைப் போலவே மற்றவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டானாம்.தாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்களாம்.

இரவில் தூங்கும்போது யன்னல்கள் எல்லாம் மூடியுள்ளதா என்று பார்த்துவிட்டுத்தான் தன்னால் தூங்க முடிகிறதாம். முன்பு sirens ஒலி கூடத் தன் தூக்கத்தை கெடுப்பதில்லையாம் ஆனால் இப்பொழுதெல்லாம் ஒருவர் மூச்சு விடும் ஒலிகூடத் தன்னை டிஸ்ரப் பண்ணுதாம்.அதனால் தான் ஒரு பெண்ணோடு பழகி உடலுறவு வரை செல்ல தனக்குக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் தேவைப்படுகிறதாம்.அதனாலோ என்னவோ தற்போது தனக்கு காதலி என்று யாரும் இல்லையாம்.

தெரப்பிக்குச் சென்றதால் தான் தற்போது normal ஆக இருக்கிறானாம்.தனது social worker உடன் தன்னால் மனம்விட்டுப் பேச முடிகிறதாம்.ஒரு snowball போல தன்னுள் வளர்ந்துவந்த வன்மக் குணம் இல்லாது போய் தன்னால் தன் நிகழ்காலத்தையம் எதிர்காலத்தை நேசிக்கக் கூடியதாக உள்ளதாம். சில வருடங்களில் தான் ஒரு truck driver ஆக இருப்பானாம். ஒரு இரவுப்பறவையாக நீண்ட பெருந்தெருக்களில் தனியாகச் சுதந்திரமாக ஒரு truck driver ஆகப் பயணம் செய்தாலும் தனக்கென்று குடும்பம் அமைத்துக்கொள்ள ஆவலாக இருக்கிறானாம்.தன்னைப் போன்றவர்களுக்கு குடும்பம் மிகவும் அவசியமாம் அதுவும் முக்கியமாகத் தன் தாய்க்கு குடும்பம் என்றால் என்னவென்று உணர்த்தும் அவசியம் தனக்குண்டாம்.


குறிப்பு : Dón't Tell - The Sexual Abuse of Boys என்ற புத்தகத்திலுள்ள பல உண்மைக் கதைகளில் ஒன்றே Paul ன் கதை.Michel Dorais ஆல் French ல் எழுதப்பட்ட இந்தப் புத்தம் Isabel Denholm Meyer ஆல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Monday, September 10, 2007

Paul ன்ர கதையை எப்பிடிச் சொல்றது?

Sexual abuse ஆ ? ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்று நானும் நினச்சதில்ல உங்களில் சிலரைப் போல. ஆனால் Paul ன் கதையை வாசிச்ச பிறகு என்னால அதை உங்களுக்குச் சொல்லாமலிருக்க முடியேல்ல. இதையெல்லாம் ஏன் எழுதுவான்? என்ன லாபம் என்று கேக்க வேண்டாம். இதைத்தான் இதை வாசிக்கிறது மூலம் உங்களால யாராவது ஒருவர் abuse பண்ணுப்படாமல் போகலாம் அல்லது ஏற்கனவே பாதிக்கப்ட்ட ஒருவருடன் மனம் விட்டுப் பேச இந்தப் பதிவு உங்களுக்கு உதவலாம்.

அவனைப் பார்த்தால் வெகு சாதாரணமாத்தானிருப்பான். ஆனால் அவனுக்குள் பல போராட்டங்கள், பல விடை தேடிச் சலித்துப்போன கேள்விகள், குழப்பங்கள் என்று கிட்டத்தட்ட தன்னையே வெறுத்து துன்புறுத்திப் பார்க்கும் ஒரு மனநிலை.தன்னைத்தானே பச்சோந்தி என்று குறிப்பிடுகிறான் அவன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ தன்னைத் தன் பலவீனங்களோடும் இயலாமைகளுடனும் ஏற்றுக்கொள்வார்களோ என்ற குழப்பத்தில் தன்னுடைய உண்மைத் தன்மையை வெளிக்காட்டாமல் தன்னை ஒரு சாதாரணனாகத் தான் மற்றவரிடத்தில் காட்டிக்கொள்வதாகச் சொல்கிறான்.



பிறந்தது முதல் 2 ஆண்டுகள் அம்மம்மாவுடனும் பின்னர் 7 வயது வரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு உறவினர்களுடனும் வளர்ந்தான்.அதாவது வளர்ந்துவரும் ஒரு செடியை இடம் மாற்றி மாற்றி நட்டால் என்ன நடக்கும்?? அத்திவாரம் அடிக்கடி ஆட்டம் காணுமில்லைாயா? அவன் பந்தாடப்பட்டான்.இறுதியில் 7 வயதில் foster home ல் சேர்க்கப்பட்டான்.அங்கு போனதும் அவன் இவ்வளவு நாளாக யாரை அம்மா என்று நினைத்தானோ அது தன் உண்மையான அம்மா இல்லையென்ற உண்மை அவனுக்குத் தெரிய வருகின்றது.அப்பா யாரென்று ஆரம்பித்திலிருந்து அவனுக்குத் தெரியாது தற்போது அம்மா என்ற உறவும் பொய்த்துப்போக தன்னை தன் உறவினர்கள் எல்லாம் ஏமாற்றிவிட்டதாக நினைத்து அவர்களை வெறுக்கத் தொடங்குகிறான்.அம்மாவாக நினைத்தவர் அன்ரியாகிவிட அன்ரியாக இருந்தவர் அம்மா என்றாக அவனுக்கு உறவுகள் புரிபடவில்லை.

இந்நேரத்தில் அம்மாவின் நண்பராக அறிமுகமாகிறார் X. பழைய உறவுகள் பொய்த்துப்போக புதிதாக வந்த X ஐ ஏனோ Paul க்குப் பிடித்துப்போய்விட X அவனுடைய நண்பனாக ஆசானாக Mentor ஆக தன்மேல் அக்கறை காட்டும் ஒரோயொரு ஜீவனாக நினைக்கிறான் Paul.X Paul ஐ விளையாட அழைத்துச்செல்வது வழக்கம்.அப்படிச் சென்றபொழுது ஒரு பூங்காவில் வைத்துத்தான் முதன்முறையாக Paul ஐ கிச்சு கிச்சு மூட்டுவது போல தொடங்கிப் பின்னர் எல்லை மீறியுள்ளது.Paul க்கு ஓரளவுக்கு நடப்பது என்னென்று விளங்கினாலும் தனக்கு நெருக்கமாகவுள்ள ஒரேயுறவையும் இழக்க விரும்பாமல் வெறும் விளையாட்டுப் போல என்று ஆரம்பத்தில் சகித்திருக்கிறான். தனக்கது violent touching ஆகத் தெரியாததாலும் X தானாகவே ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுவார் என்று நினைத்தும் அவர் மது அல்லது போதை வஸ்துவின் வேலையால் தன் கட்டுப்பாட்டை இழந்து நடந்துகொள்கிறார் போல என்று பல காரணங்களைத் தனக்குத்தானே அறிவுறுத்தியாகச் சொல்கிறான் ஏனென்றால் அவனிருந்த சூழ்நிலையில் X உடன் வெளியில் போய் வருவதுதான் அவனுக்கு இருந்த ஒரு பொழுதுபோக்கு.



முதல் தடவை நடந்தபோது காரணங்களைத் தேடியவனுக்கு 2ம் முறையும் X நடந்துகொண்ட விதம் அப்படி நினைக்க விடவில்லை.X வேணுமென்றே அப்படிச் செய்கிறார் என்பதை அவன் புரிந்துகொண்டான்.இருந்தாலும் Paul X ன் மீது கொண்டிருந்த பாசம் அவனைக்கட்டிப் போட்டது.இப்போதும் கூட அவனால் X ஐக் குற்றம் சொல்ல முடியவில்லை.அவனைப் பொறுத்தவரைக்கும் X தன் மீது அளவு கடந்த பாசம் செலுத்தியவர்.மீண்டும் சில நாட்கள் இது தொடர Paul தன் மறுப்பை மெல்ல வெளிப்படுத்தினான்.அதன் பிறகு X அவனை வெளியே அழைத்துச்செல்வதில்லை அதனால் Paul மிகவும் கவலைப்பட்டான்.தன்னை X ஓதுக்குவதையும் தன்னோடு கதைக்காமலிருப்தையும் அவனால் தாங்க முடியவில்லை.ஒரு பக்கம் தனக்கு sexual abuse லிருந்து விடுதலை என்று மகிழ்ச்சியாகவும் X ஐப் பார்க்க முடியாது போனது கவலையாகவும் இருந்ததாம்.

X foster home க்கு வருவதை நிறுத்திக்கொண்டான்.Paul அவனை நேசித்ததாலும் தன் குடும்பத்தின் முன்னிலையில் அவன் அவமானப்படக்கூடதென்றும் அவன் ஜெயிலுக்குப் போகக்கூடாதென்றும் நினைத்து Paul தனக்கு நடந்ததை யாரிடமும் சொல்ல முற்படவில்லை.கொஞ்சம் வளர்ந்தபின் பாடசாலையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் குழந்தைகளோடு உறவு வைத்துக்கொள்ள விரும்புவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது தன்னால் அங்கு இருக்க முடியாது போனதால் தான் பாத்றூமில் போய் நின்றுவிட்டு வந்தானாம்.அவனுக்கென்று ஒரு நண்பர் கூட்டம் உருவாகிய பொழுதுதான் அவன் புரிந்து கொண்டான் தான் மட்டுமல்ல தன் நண்பர்களும் நெருங்கிய உறவினர்களாலயே sexual abuse க்குள்ளாக்கப்பட்டிருப்பதை. இதை விட ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அவனுக்கு. தன்னுடைய தாத்தாவே ஒரு sexual abuser என்றதும் அவர் தன் மகள்களையே sexual abuse க்குள்ளாக்கியதையும் அவர்தான் தன் தந்தை என்பதைத் தெரிந்துகொண்டதிலிருந்து அவன் போக்கே மாறிவிட்டது.


-இப்போதைக்கு முடியாது..தொடரும்-