Custom Search

Saturday, February 17, 2007

திருவாளர் திருமதி




திருவாளர் திருமதி என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் ஒலிபரப்பாகும் ஓரு புதிய நிகழ்ச்சி.சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.சும்மா ஒரு பொழுது போக்கு நிகழ்சிதான்.முதல் சுற்றை டுயட் றவுண்ட் என்று சொல்கிறார்கள்.அதாவது கணவன் மனைவியிருவரும் தங்களுக்குப் பிடித்த ஒரு பாடலைத் தெரிவு செய்து அதற்கு நடனமாட வேண்டும்.புள்ளிகள் வளங்குவதற்கு பிரத்தியேகமாக அவர்கள் என்ன பொருட்களைப் பயன்படுத்தினார்கள் முகபாவனை தம்பதிகளுக்கிடையேயான அந்நியோன்யம் இப்படி பல அம்சங்களைக் கவனிக்கிறார்கள்.

அடுத்த சுற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குடுக்கும் பட்ஜெட்டில் தம்பதிகள் சொப்பிங் செய்ய வேணும்.இரு தம்பதிகளில் யாருடைய பொருட்கள் பட்ஜெட்டையொட்டியிருக்கிறதோ அவர்களுக்க அதிக புள்ளிகள்.

மூன்றாவது றவுண்டில் தொகுப்பாளர் குடுக்கும் சிற்றுவேசனுக்கு 2 நிமிடத்துக்குள் தம்பதிகள் சண்டை பிடிச்சுச் சமாதானமும் ஆகவேணும்.2 நிமிசத்துக்குள்ள நடக்கிற காரியமா அது?

ஹி ஹி.

இருந்தாலும் தம்பதிகள் சண்டை பிடிக்கிறத பார்க்கிற எங்களுக்கே என்னடா இப்பிடியெல்லாம் சண்டை பிடிப்பினமா என்றிருக்கும்.தொகுப்பாளரைப் பார்த்தா பாவமா இருக்கும்.
இதிலொரு சுவாரிசயமான கதையொன்று சொல்கிறேன்.

போன வாரம் நடைபெற்ற திருவாளர் திருமதியில் ஒரு தம்பதியினர் சண்டை போட்டுக்கொள்ளும்போது மனைவி கணவனை நீ ,போ ,வா என்றெல்லாம் பேசி நிஜமாவே சண்டைபோட்டா.அந்தக் கணவரைப்பார்த்தாப் பாவமா இருக்கும்.அந்த மனைவியைப் பார்த்தா எங்களுக்கு எங்கட சித்தியொராள்ட ஞாபகம் வந்திட்டு.சித்தப்பா கொஞ்சம் அப்பாவி.பெற்றோல் போடுறதுக்குக்கூட சித்திட்டத்தான் காசு கேப்பார்.எல்லாரும் சேர்ந்துதான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.அந்தச்சுற்று முடிந்ததும் நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேட்டா அந்த மனைவிட்ட " என்னங்க உங்க வீட்டுக்காரரைப்போய் நீ வா என்றெல்லாம் பேசுறீங்கிளே அவங்க கோவிச்சுக்கமாட்டாங்களா? உங்களை அடிக்க மாட்டாங்களா?" அதுக்கு அந்த மனைவி "இல்லைங்க அவரு என் அத்தை பையன்.சண்டை வந்தா நான்தான் அவரை அடிப்பேன்" என்று.

எனக்கு தங்கைச்சிக்கு அம்மாக்கு ஒருதருக்கும் சிரிப்புத்தாங்க முடியல. எனக்கு அதுக்குமேல அந்தக்கேள்வியை கேக்காம இருக்க முடியல அதால "இந்த மனைவியைப் பார்த்தா எனக்கொராளின்ர ஞாபகம் வருது..யாரெண்டு சொல்லுங்க பார்ப்பம்" என்று சொல்லி நான் வாய் மூடேல்ல அம்மா தங்கச்சி அப்பா எல்லாருமே நான் நினச்ச சித்தியின்ர பெயரைச் சொல்லிட்டினம்.அன்றைக்கு முழுதும் ஒரே சிரிப்புத்தான்.இதில சிறப்பம்சம் என்னெண்டால் அடுத்த நாள் ஒரு வேலை விசயமா சித்தியும் சித்தப்பாவும் எங்கட வீட்ட வந்தவை.அப்ப எப்பிடியோ இந்த திருவாளர் திருமதி நிகழ்ச்சியைப் பற்றின கதை வந்திட்டு.சித்தி உடன "நேற்று அந்த நாவல் கலர் சாறி கட்டியிருந்தவா நல்லா டான்ஸ் ஆடினா நல்லா உண்மையாச் சண்டை பிடிக்கிற மாதிரியே சண்டை பிடிச்சா என்ன" நாங்களும் எல்லாரும் சிரிப்பையடக்கிக்கொண்டு தலையத்தலைய ஆட்டினம்.

அடுத்த ரவுண்டில் ஏழெட்டு வருசங்களுக்கு முதல் "ஜோடிப்பொருத்தம்" என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் செய்தார்களே ஞாபகம் இருக்கா? அந்த நிகழ்ச்சியில் வருவது போல கணவரைத் தனியாகவும் மனைவியைத் தனியாகவும் கேள்விகள் கேட்பார்கள்.இருவருடைய பதிலும் ஒத்துப்போனால் ஒவ்வொரு கேள்விக்கும் ரூபா 2000.இந்தச்சுற்றில் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகள் மிகவும் சுவாரிசயமானவை.

உதாரணமாக
==>கல்லூரிக்காலத்தில் உங்களருகில் அமர்ந்திருப்பவர் ஆணா பெண்ணா?
==>குளிர்காலத்தில் உங்கள் வீட்டு மின்விசிறியின்வேகம் என்ன?
==>உங்களுக்கு வளைகாப்பு எப்போது நடந்தது.
==>ஒரு மாதத்துக்கு உங்கள் வீட்டில் சமையலுக்குப் பாவனையாகும் எண்ணெயின் அளவென்ன?

இந்நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி அதைவிட்டா வேற என்ன இருக்கென்று கேக்கிறீங்கிளா?? உண்மையில திருமணம் செய்து பல வருடங்களான தம்பதிகளுக்கு இப்படி ஒரு பாடலுக்கு நடனமாடவோ அல்லது தங்களுடைய எண்ணங்கள் செயல்கள் எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறது என்பதையோ தெரிந்துகொள்ள விருப்பம் இருந்திருக்குமா?அப்பிடியே விருப்பம் இருந்தாலும் அதை முயற்சித்திருப்பார்களா?அல்லது ஒருவரையொருவர் எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறோம் என்றெல்லாம் யோசிச்சுப் பார்க்கிறார்களா? இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

அப்பா வேலையால வாற நேரமாச்சு பிள்ளையள் எல்லாரும் சத்தம் போடாம இருங்கோ.
அப்பா செய்திகள் பார்க்கவேணும் ரீவி பார்த்தது காணும் போய்ப் படியுங்கோ.
அம்மா இன்றைக்கு முட்டைக்குழம்பு வையுங்கோவன் பிளீஸ்.அப்பாக்கு முட்டைக்குழம்பு பிடிக்காது இன்றைக்கும் இறைச்சிக்கறிதான்.
இப்பிடி எப்வவுமே அப்பா அப்பா என்று உயிரை விடுற அம்மாக்கள் எல்லாம் இன்றைக்கு ரீவில வந்து அழகாகவோ இல்லை சும்மா ஏனோ தானோ என்றோ எப்பிடியோ தைரியமா சன்ரீவி செற்ல நடனம் ஆடினமா இல்லையா?? இருவரும் சேர்ந்து முயற்சித்தால்தான் பரிசு.ஒருவர் மட்டும் திறமையாகப் போட்டியில் கலந்துகொண்டால் அவர்களால் பணத்தையும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பையும் வெல்ல முடியாது.

இந்த அம்மாக்களுக்காகவே எனக்கு இந்த நிகழ்ச்சி பிடிச்சிருக்கு.உங்களுக்கு?

Saturday, February 10, 2007

சிரிக்க சிரிக்க சிரிக்க மட்டுமே.

இன்னும் இருக்கு....வலைப்பதிவில போடலாமா வேண்டாமா என்று யோசிச்சுக் கொண்டிருக்கிறன்...நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?






























ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்கு


படம் : பொறி
பாடியவர்கள் : மதுஸ்ரீ பாலகிருஷ்ணா
இசை : தீனா

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பெ: பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

ஆ: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே!

ஆ: அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே!

பெ: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெ : தேய்பிறை போல் போடும் நக??????
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆ: செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே!

ஆ: பிடித்தவர் தருகிற பரிசுப்பொருளும்
அன்பே அன்பே நீதானே!

பெ: எழுதும் கவிதையில் எழுத்துப்பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

Monday, February 05, 2007

பனியிலும் இளவேனிலிலும்

மக்மாஸ்ரர் பல்கலைக்கழகம்





































Thursday, February 01, 2007

பதின்மவயதுப்பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?

ஹலோ உங்களைத்தான் ! இதை வாசியுங்கோ. .

ஹலோ, சின்னக்கா நான் வத்சலா . ஐயோ இப்ப நான் என்னக்கா செய்வன் ? நிருஜா எங்களையெல்லாம் ஏமாத்திட்டு வீட்டை விட்டிட்டு அந்தப் பெடியனோட போட்டாள் . என்ர ஐயோ எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல . 100 தரம் போன் பண்ணிப்பார்த்திட்டன் நம்பரைப் பார்த்திட்டுக் கட் பண்றாள் போல கிடக்கு .
எங்கோ கேட்டது மாதிரி இருக்கா ? பதின்ம வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள் ? அப்ப கட்டாயம் நிருஜான்ர கதை உங்களுக்குத் தெரியத்தான் வேண்டும் . நிருஜாக்கு இப்பத்தான் 16 வயதாகிறது . 16 வயதிலேயே தன்னால பெற்றோரை விட்டுத் தனியா காதலனுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் . நிருஜாவினுடைய இந்த முடிவுக்கு அவளுடைய பெற்றோர்தான் முழுக்க முழுக்க காரணம் என்றுதான் நான் சொல்வேன் . வாசிக்கிற உங்களுக்கு வேறு கருத்துக்கள் இருக்கக்கூடும் . அதுவும் நீங்கள் ஒரு பதின்ம வயதுப் பிள்ளையின் பெற்றோரா இருந்தால் நிச்சயம் என் கருத்தோட ஒத்துப்போக மாட்டீர்கள் . வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் எங்கே அந்த நாட்டுக் கலாச்சாரத்தோடு ஒன்றிப் போய்விடுவார்களோ என்ற பயத்தில் அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளைப் போட்டு எங்கட பிள்ளைகள் வாழ்க்கையில் தவறான பாதையில் போகக் காரணமாகி விடுகிறோம் .

எங்கட பிள்ளைக்கு இப்பத்தானே 15 வயதாகிறது . அது சின்னப்பிள்ளை அதுக்கு காதல், செக்ஸ் பற்றியெல்லாம் என்ன தெரியப்போகுது என்பதுதான் பலரின் நினைப்பு . ஆனால் எங்கட பிள்ளைகள் வளர்வது நாங்கள் வளர்ந்த மாதிரியான சூழலில் அல்ல என்பதை அநேகமான பெற்றோர்கள் மறந்துவிடுகிறார்கள் . அண்மையில் வடஅமெரிக்கப் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட ஆய்வின்படி அந்தப் பாடசாலையில் படிக்கின்ற 39 வீதமான ஐந்தாம் ஆண்டுப்பிள்ளைகள் தங்களுக்கு செக்ஸ் என்றால் என்னவென்று தெரியும் என்று கூறியிருக்கிறார்கள் . இன்றைய பெற்றோராகிய நீங்கள் பதின்ம வயதில் இருக்கும்போது உங்களுக்கு இருந்த காதல் எண்ணங்கள் புலத்தில் வாழும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒன்பது பத்து வயதுகளிலேயே வந்து விடுகிறது என்பதுதான் உண்மை .

இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு அவர்கள் தாங்களாகவே முன்வந்து காதலைப் பற்றியோ அல்லது செக்ஸ் ஐ பற்றியோ உரையாட முற்படும்போது “ வயசுக்கேத்த மாதிரிக்கதை ” , “ நீ சின்னப்பிள்ளை இதைப்பத்தியெல்லாம் கதைக்கக் கூடாது ” , “ படிக்கிற வயசில படிக்கிற வேலையை மட்டும் பார்க்கவேணும் “ இப்படியெல்லாம் உங்கட பிள்ளைகளைக் கதைக்கவிடாம சுலபமா அந்தத் தருணத்துக்கு தடுத்துவிடலாம் . அப்பாடா கதை இத்தோட நின்றுவிட்டது என்று அப்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விடலாம் . ஆனால் நீ சிந்திக்கிற விதம் சரியில்லை கதைக்கிற விடயம் பிழையானது என்று உங்கள் பிள்ளைகளுடைய சுயத்தை நீங்களே சிதைக்கிறீர்கள் அதனால்தான் அந்தப்பிள்ளைகள் வளர்ந்து பதின்ம வயதுக்கேயானா சந்தேகங்கள் , கேள்விகள் , தேடல்கள் தொடங்கும்போது உங்களிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலகி முடிந்தளவு தன் நண்பர்களோடு நேரத்தை செலவழிக்க நினைக்கிறார்கள் . உங்கள் பிள்ளைகள் பதின்ம வயதில் கொஞ்சம் கொஞ்சமாக ஆணாகவோ , பெண்ணாகவே உடலாலும் உள்ளத்தாலும் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் அவர்களுக்குத் தேவையான ஒரு வழிகாட்டியாக நீங்கள் இல்லாமல் போவதால் தான் நிருஜா போன்ற பிள்ளைகள் 16 வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் .

நிருஜாவினுடைய பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் . திருமணம் செய்துவிட்டோம் பிள்ளைகள் பெற்றுவிட்டோம் அதனால என்னதான் எங்களுக்குள்ள சண்டை வந்தாலும் பிள்ளைகளுக்கா நாங்கள் சேர்ந்துதான் வாழவேண்டும் என்று முட்டாள்தனமாக தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு போலி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் . நிருஜாவுக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலாக பெற்றோரின் வழமையான சண்டையையும் வாக்குவாதங்களையும் பார்த்து பார்த்து ஆண் பெண் உறவென்றால் இப்படித்தான் போல என்ற நினைப்பு . அதானால் தான் வீடு என்ற நரகத்திலிருந்து வெளியேறினாலே போதும் என்ற முடிவெடுக்க வைத்தது .

சின்ரெல்லா போன்ற கதைகளை வாசித்து கற்பனை உலகத்தில் வாழும் நிருஜா போன்றவர்கள் . கண்டதும் காதலில் விழுந்து பின்னர் அந்தக் காதலுக்கு அடிமையாகி காதலனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என யோசித்து யோசித்து அவர்களுக்காகவே வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள் . சின்ன சின்ன விடயங்களுக்குக் கூட உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டும் தங்களுக்குள்ள சண்டை வரக்கூடாது என்பதற்காக செய்யாத தப்புக்குக்கூட தாங்களாகவே முன்வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டும் நண்பர்களுடன் கழிக்கும் நேரங்களைக் கூட காதலனுடன் மட்டுமே கழிக்கவேண்டும் இனிமேல் தான் வாழ்வதே தன் காதலனுக்காகத்தான் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் அவனோடயே கழிக்கவேண்டும் என்ற மாதிரி ஒரு மனப்பிரமையில் அடிமையாகிப் போகிறார்கள் .

நான் இவனுடைய சொந்தம் என்ற எண்ணத்தோடுதான் நிருஜா போன்றவர்கள் தைரியமாக வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் . அதுவே கொஞ்சநாளில் தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுயகௌரவத்தையும் இழந்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு மன்னிப்புக்கேட்பதிலயும் பயத்திலும் குற்ற உணர்விலும் சுழன்று திரும்பவும் வீட்டுக்குச் செல்லக்கூடிய சூழ்நிலையில்லை என முடிவு செய்து சிறுவர் காப்பகங்களில் தஞ்சம் புகவேண்டியவர்களாகின்றார்கள் .

" என்ன குறைவைச்சம் நாங்கள் ? வேலைக்குப்போய் வந்த அலுப்பில கூட ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டுபொய் விட்டிட்டு காருக்குள்ள எத்தினை நாள் படுத்து நித்திரை கொண்டிருப்பன் . ஒருநாள் முழுக்க நான் கஸ்டப்பட்டு உழைச்ச காசென்றும் பாராம எல்லாப்பிள்ளைகளைப் போல என்ர பிள்ளையும் சந்தோசமா இருக்க வேணும் என்று Baby phat ஜக்கற் , சப்பாத்து , நகைகள் , செல்போன் என்று எல்லாம் அவளுக்குப் பிடிச்ச பிரான்ட் நேமில வாங்கிக்குடுத்தனே இப்பிடிப்பண்ணிட்டுப் போய்ட்டாளே"
என்று ஒரு காலத்தில நீங்களும் புலம்பாம இருக்க வேண்டும் என்றால் உங்கள் பிள்ளைகளின் கருத்துக்களுக்கும் ஆசைகளுக்கும் மதிப்புக்கொடுங்கள் . தேவையான சுதந்திரம் கொடுங்கள் . அவர்களையும் உங்களுடைய எல்லா உரையாடல்களிலும் கலந்து கொள்ள வையுங்கள் . அவர்களுடைய எண்ணம் தவறானது என்று தோன்றினால் அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை விளக்கிவிட்டு முடிவை அவர்களையே எடுக்க விடுங்கள் . எல்லாத்துக்கும் மேலாக உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள் .

தாயகப்பறவைகள் ஜனவரி இதழுக்காக எழுதியது.

http://thayakaparavaikal.com/samudhayaalasal.php

- சிநேகிதி -

Wednesday, January 24, 2007

இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்



இரண்டாவது தமிழியல் மாநாடு
இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்


தொறொன்ரோ பல்கலைக்கழகம்

தொறொன்ரோ பல்கலைக்கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னாசிய கற்கைகளுக்கான நிறுவனத்தில் மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை மாநாடு இடம்பெறவுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் மிக அதிக அளவில் வாழும் நகரங்களில் ஒன்றாகத் தற்போது தொறொன்ரோ விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழியல் கற்கைகளுக்கான ஓரு முக்கிய நகராகவும் தொறொன்ரோவை உருவாக்கி வருகிறது.

இந்த ஆண்டின் மாநாட்டுக் கட்டுரைகள், தமிழ் வழங்கும் இடங்களது வரலாற்றின் ஒட்டுமொத்த அடையாளம், சமூகத் தொடர்பு, அகழ்வாராய்ச்சி ஆய்வுகள், பண்டை இலக்கியங்கள், இடைக்கால சமய வழமைகள், “தேசியமும்” இக்காலப் புரிதல்களும் எழுச்சியும் போன்றவற்றை தற்கால தென்னிந்தியா, ஈழத்தின் சமூக மற்றும் பண்பாட்டு அடையாள மாற்றங்கள் வழியாக ஆய்வு செய்கின்றன. அத்துடன் கனடா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் வாழும் புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் வளர்ச்சியையும் பண்பாட்டு வழமைகளையும் கட்டுரைகள் ஆராய்கின்றன.

அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, மலேசியா, நியூசிலாந்து, இலங்கை, அமெரிக்காவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இந்த மாநாட்டில் கட்டுரைகள் படைக்கின்றனர். மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது சுகாதாரம், சமயம், சமூகவியல், அரங்கக் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய இணையத்தளம்: www.chass.utoronto.ca/~tamils இந்த இணையத்தளத்தில் மாநாடு, பங்கேற்கும் பேராளர்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. மேல் விவரங்களுக்குத் தொடர்புகொள்க: tamils@chass.utoronto.ca

அமைப்புக்குழு:

பேராசிரியர் செல்வா கனகநாயகம் (தொறொன்ரோ பல்கலைக்கழகம்)

பேராசிரியர் சேரன் (வின்சர் பல்கலைக்கழகம்)

கலாநிதி தர்ஷன் அம்பலவாணர்

Tuesday, January 23, 2007

ஆம்பரலங்காயும் அணிஞ்சில் பழமும்

மலைநாடான் பாலைப்பழத்தைப் பற்றி எழுதினாரா நான் அதைப்போய் வாசிச்சனா இப்ப எனக்கும் நான் ரசிச்சு ருசிச்சு சண்டைபிடிச்சு பிச்சுப் பிடுங்கி சாப்பிட்ட பழம் காய் பற்றியெல்லாம் எழுதவேணும் போல இருந்திச்சா அதான் எழுதினா என்ன குறைஞ்சிடுவன் என்று எழுத வெளிக்கிட்டிட்டன்.

பாலர் வகுப்புப் படிச்ச காலத்தில இருந்தே பள்ளிக்கூடம் போற வழியில ரியூசன் போற வழியில இப்பிடி எப்பெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வீட்டை விட்டுப் போறனோ அப்பெல்லாம் ஆற்றயும் வீட்டுக்காணியிலோ அல்லது தோட்டத்துக்காணியிலோ கைவைக்காமல் வீடு திரும்பினதா ஞாபகம் இல்லை.

என்ன சத்தம் நறநற என்று? இதைப்படிக்கிற யாரோ ஒரு ஆணுடைய பல்லுத்தான் நறநறக்குது.இதுகள் பண்ணின வால்தனத்துக்கெல்லாம் ஊர்க்காரர் எங்களைத்தானே அடிச்சிருக்குதுகள் என்றுதானே மனசுக்குள்ள திட்டுறீங்கள்.சரி சரி மறந்துபோங்கோ மன்னிச்சுடுங்கோ பால்ய சினேகிதிகளை.

இலந்தப்பழம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பாலர் வகுப்புப் படிக்கும்போது ரியூசனுக்குப் போனது தேவா ரீச்சரிட்ட பிறகு அவான்ர தங்கை சாந்தாக்காட்ட.அவேன்ர வீட்டுக்குப் போற வழியில ஒரு இலந்தப்பழ மரம் நிக்குது.மரமோ சரியான உயரம்.நான் என்ர நண்பர்கள் சுஜித்தா சுபாசினி டொம்மா இன்னும் கொஞ்சப்பேர் பாலர் வகுப்பில எவ்வளவு உயரம் இருந்திருப்பம் என்று சொல்லவும் வேணுமா? இலந்தப்பழ மரத்துக்குப் பக்கத்தில கிழங்குக்கு தாக்குறதுக்கா ஊமல்கொட்டை பறிச்சு விட்டிருப்பினம் காணிச்சொந்தக்காரர்.எங்களுக்கு கல்லில கொஞ்சம் பாசம் பாருங்கோ அதால கல்லை விட்டிட்டு ஊமல்கொட்டையை எடுத்து போட்டிக்கு மரத்துக்கு எறிவம்.மரத்தில இருக்கிற கொஞ்ச நஞ்ச பழம் அப்பத்தான் பழுக்கத்தொடங்கியிருக்கிற செம்பழம் எல்லாம் விழும் பாய்ஞ்சு பாய்ஞ்சு பொறுக்கிறது.கொஞ்ச நேரம் மரத்துக்குக் கீழ நிண்டா காணிக்காரர் வந்து “யாரடா அது இலந்தைக்குக் கீழ” என்று சத்தம்போடுவாரெல்லோ.ஒரு விசயம் பாருங்கோ ஒரு நாள் கூட “யாரடி அது மரத்துக்குக் கீழ” அவர் கேட்டதே இல்லை :-) எங்கட குட்டிச்சைக்கிளை மெல்லமா உருட்டிக்கொண்டு ரியூசனுக்குப்போவம்.ம் ம் அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பர்களே...

பிறகு கொஞ்சம் வளர்ந்தாப்போல ஸ்கொலர்சிப் ஸ்பெஸல் கிளாஸ் போற வழியிலதான் அணிஞ்சில்பழ மரம் இருக்கு.என்னத்துக்கு அணிஞ்சில் என்று பெயர் வந்திருக்கும் என்று தெரியேல்ல..அணில் சாப்பிடுற பழமாயிருக்குமோ?? எனக்கென்றா அந்த மரத்தில அணிலைப்பார்த்ததா ஞாபகம் இல்லை.அணிஞ்சில் பழமும் ஒரு வித்தியாசமான ரேஸ்ற்தான்.கிட்டத்த றம்புட்டான் பழத்தின்ர உள்ளான் மாதிரி சின்னனா இருக்கும் என்று நினைக்கிறன்.பழத்தை சாப்பிட்ட அணிஞ்சில்பழக் கொட்டையை நிலத்தில தேய்ச்சு ஒரு சிறிய துவாரத்தை உண்டாக்கினா அதில ஒரு விதமான ஓசை வரும் அதை வைச்சு விசிலடிக்கலாம் :-)

இன்னொரு வீட்டில ஜம்புக்காய் இருக்கு.றோஸ் நிற ஜம்புக்காயை விட பச்சை நிற ஜம்புக்காயைத்தான் எனக்குப் பிடிக்கும்.நாங்கள் களவெடுக்காம சாப்பிட்டதெண்டா ஜம்புக்காய்தான்.அந்த வீட்டுக்கார அம்மம்மான்ர பிள்ளைகள் எல்லாரும் கொழும்பில அதால அவாக்கு நாங்கள்தான் பேரப்பிள்ளைகள் மாதிரி ஜம்புக்காய் சீசனில மறக்காம ஒரு பெரிய பாக்ல கொண்டுவந்து தருவா வீட்ட.அத விட நாங்களும் விருப்பமான நேரத்தில போய்ச் சொல்லிட்டு ஆய்ஞ்சு சாப்பிடலாம். எங்கட காணிக்குள்ள காரைக்காயும் சூரைக்காயும் இருக்கு.எங்களுக்குத் தனியா அங்க போறதுக்கு அனுமதியில்லை இருந்தாலும் நிறைய நாள் அப்பப்பாவுக்குத் தெரியாம காணிக்குள்ள நுழைஞ்சிருக்கிறம் சூரைக்காய் பிடுங்க.ஒரு நாள் நாங்கள் காணிக்குள்ள நிக்கிறநேரம் பார்த்து யாரோ வாற சத்தம் கேட்டு பதட்டத்தோட ஓடுபட்டு விழுந்தெழும்பி கைகாலெல்லாம் சிராய்ப்புகளோட ஓடித்தப்பியிருக்கிறம்.

வீட்டில நிக்கிற கொய்யாக்காய் மாதுழம்பழம் நெல்லிக்காய்களையும் விட்டு வைக்கிறதில்லை. நெல்லிக்காயைத் தாத்தா ஏதோ மருந்துக்குப் பாவிக்கிறவர் என்று அம்மாக்கு நாங்கள் சும்மா புடுங்கி எறிஞ்சு விளையாடுறது விருப்பமில்லை அதால அம்மா வீட்டில இல்லாத நேரமாப் பார்த்து நாங்கள் நெல்லிமரத்தில ஏறிடுவம்.அப்பிடித்தான் ஒருநாள் நான் நெல்லிமரத்தில கீழ என்ர நண்பிகள் கொஞ்சப் பேர் சட்டையைத் தூக்கிப் பிடிச்சுக்கொண்டு நிக்கினம் நான் ஆய்ஞ்சு போடுற காய்களைப் பிடிப்பதற்கு.நெல்லிமரம் நிற்பது மதில் கரையோட.எங்கட வீடு தெருவோரத்தில கடைசி வீடு.அங்கால எல்லாம் தோட்டங்கள்.தோட்ட வேலை முடிஞ்சு தியாகண்ணை வந்துகொண்டிருந்தவர் டக்கெண்டு கேற்றைத்திறந்துகொண்டு வீட்டுக்குள்ள வந்ததும் மட்டுமில்லை கேற்றில ஏறி என்னை வலுக்கட்டாயமாத் தூக்கிக்கொண்டு இறங்கிட்டார்.நான் பிலத்த சத்தமா அவரோட வாய்காட்டுறன் “இப்ப என்னத்துக்கு என்னைத்தூக்கினீங்கள் நான் என்ன உங்கட வீட்டு மரத்திலயோ ஏறி நின்டனான்” அது இது என்று ஒரே சத்தம். அவர் ஒன்றும் சொல்லாம நான் நின்ற கொப்பைக் காட்டினார்.நான் நின்ற இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு கோடாலிப்பாம்பு நிக்குது.ஐயோ என்று கத்திக்கொண்டு ஒரே ஓட்டம்.அதுக்குப்பிறகு தியாகண்ணையை எங்க கண்டாலும் அவர் நான் கத்தின மாதிரிக் கதைச்சுக் காட்டுவார் எனக்கு ஐயொ மானம்போகுதே என்று கத்தோணும் போல இருக்கும்.

யாராவாது எக்ஸோறாப்பழம் சாப்பிட்டு இருக்கிறீங்கிளா? ஓருதரும் சிரிக்க வேண்டாம் ஓகே.நான் மட்டுமில்லை என்ர பிரண்ட்ஸ்ம் சாப்பிட்டு இருக்கினம்.அந்தப்பழம் சிவப்பாகிக் கறுப்பாகும் ஆனால் அது கறுப்பாக முதலே நாங்கள் சாப்பிட்டுடுவமே :-)

கனடாவில் ஒரு பாகிஸ்தான் கடையில் இலந்தப்பழம் நாவல் பழம் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறன் இப்ப அந்தக் கடையைத்தான் போய்த் தேடவேணும்.

பிறகு எனக்குப் பதின்மூன்று வயதிருக்கும்போது மாத்தளைக்கு போயிட்டம்.அங்க இந்த இலந்தப்பழம் எல்லாம் இல்லை.அங்க ரியூசனுக்குப் போன ரீச்சர் வீட்ட வெரலிக்காய் மரம் இருக்கு. வெரலிக்காய் ஒரு கசப்பு உவர்ப்பு எல்லாம் மிக்ஸ் பண்ணின மாதிரி ஒரு ரேஸ்ற் பச்சை நிறத்தில இருக்கும். உப்புத்தண்ணில ஊறப்போட்டு தூள் தடவி விற்பார்கள் கடைகளில் பேருந்துகளில்.நினைக்கவே வாயூறுது.பழமும் சாப்பிடலாம் எனக்குக் காய்தான் விருப்பம்.

மற்றது ஆம்பரலங்காய்.ரீச்சற்ற மாமிக்கு எங்களைக் கண்டாலே பிடிக்காது ஏனென்றால் ரீச்சர் எங்களை ஆய்ஞ்சு சாப்பிடுங்கோ என்று விட்டிடுவா நாங்களும் உப்பு தூளெல்லாம் கொண்டுபோய் ரீச்சற்ற மாமிக்கு காட்டிக் காட்டி சாப்பிடுவம்.பிறகு கேள்விப்பட்டம் ரீச்சற்ற மாமி சுங்கான் குடிக்கிறதுக்காக ஆம்பரலங்காய் பக்கத்து வீட்டு ஆக்களுக்கு விக்கிறவாவாம் அதில நாங்கள் ஆப்பு வைச்சதாலதான் எங்களை அவாக்குப் பிடிக்காதென்று.

இன்னும் பழங்கள் காய்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு.நீங்களும் உங்களுக்குப் பிடித்த பழம் காய்களைப் பற்றிச் சொல்லுங்கோ.

{இந்தப்திவு எழுதி கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்களுக்கு என்னால பப்ளிஸ் பண்ண முடியாம இருந்தது.இப்பிடி(550 Could not open: Read-only file systemblog/43/44/9) ஒரு வந்துகொண்டே இருந்தது பிறகு தானாச் சரியாயிட்டு.வேற யாருக்கும் இந்தப்பிரச்சனை இருந்ததா? }

Friday, January 19, 2007

உதிர்கின்ற இலையதனில் மரணத்தின் பயமில்லை

இசை : நிரு
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ் + சுஜாதா
வரிகள் : சுதன்ராஜ்

ஆ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் -அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா- பருவம்
எழுதுகோல் ஆனால் உயிரே -உயிர்
கொண்டு கவிதை நெய்வோமா

ஆ:
இதயத்திலெழுகின்ற உயிரோசை நீதானே
காதலின் முகவரி நீதானே

ஆ+பெ:
அன்பே என் கவிதையின் முதல்வரி நீதானே

பெ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

ஆ:
புன்னகை செய்வோமா
பூக்களைக் கொய்வோமா
வன்முறை இல்லாத
ஓர் உலகம் காண்போமா

பெ:
ப+வுக்குள் வாழ்வோமா
புவியோடு சேர்வோமா
புயலிங்கு வந்தாலும்
எதிர் கொண்டு நிற்போமா

ஆ:
உதிக்கின்ற சூரியனில்
விடியலின் களைப்பில்லை
உதிர்கின்ற இலையதனில்
மரணத்தின் பயமில்லை

ஆ+பெ:
ஒளிபோல இலை போல நாம்
காதல் செய்வோம் வா அன்பே

ஆ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ+பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

ஆ:
ஆகாயம் ஆவோமா
அடிவானில் சாய்வோமா
ஆழ்கடல் நாம் சென்று
சிப்பிக்குள் வாழ்வோமா

பெ:
காற்றாகித் தொலைவோமா
காடெங்கும் அலைவோமா
காலத்தை நமதாக்கி
அமைதியை அடைவோமா

ஆ:
விதிகொண்ட வாழ்வினை
மதிகொண்டு வெல்வோமா
விடியாத பொழுதினை
விடைகண்டு ஆழ்வோமா

ஆ+பெ:
இமை சேரும் செயல்போல நாம்
காதல் செய்வோம் வா அன்பே

ஆ+பெ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ+பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

ஆ+பெ:
இதயத்திலெழுகின்ற உயிரோசை நீதானே
காதலின் முகவரி நீதானே

ஆ+பெ:
அன்பே என் கவிதையின் முதல்வரி நீதானே

ஆ+பெ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ+பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

Monday, January 15, 2007

விரல் மீட்டும்போது வீணை நாதம் தரும்

ஏற்கனவே நான் சொன்னது போல மூங்கில் நிலா அல்பத்தில் இடம்பெற்ற எனக்குப்பிடித்த இன்னுமோர் பாடலின் வரிகள் இதோ.

இசை : நிரு
பாடல்வரிகள் : சாரங்கன்
பாடியவர்கள் : அனுராதா சிறீராம் & மாதங்கி

திருடா திருடா- எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
திருடா திருடா எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
விரல் மீட்டும்போது
வீணை நாதம் தரும்
காற்று நுழையும்போது
மூங்கில் ஓசை தரும்
நீ தீண்டும் போதுதான் என்
பெண்மைக்கு அர்த்தம் வரும்


சந்திக்கின்ற போது எல்லாம்
சின்னச்சின்ன சில்மிசம் செய்வாய் (2)
போதும் போதும் என்றபோதும்
எல்லை கடந்து எங்கோ செல்வாய்
உதடுகள்தான் வேண்டாம் சொல்லும்
உள்ளம்தான் ஏங்கிக்கொள்ளும் (2)
இடைவெளியின்றி -உந்தன்
வெப்பம் வேண்டும்
திருடா திருடா-எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
விரல் மீட்டும்போது
வீணை நாதம் தரும்
காற்று நுழையும்போது
மூங்கில் ஓசை தரும்
நீ தீண்டும் போதுதான் என்
பெண்மைக்கு அர்த்தம் வரும்

ஈரமான ஆடைசொட்டும்
நீரில் கூட தீயின் வெப்பம் (2)
இமைகளிரண்டும் மூடுவதில்லை
இதுதானா இளமைத்தொல்லை
நிலவோடு இரவில் இனிமை
நீயுமில்லை இரவும் கொடுமை (2)
தீரும் தாகம் உன்னைச் சேரும் நேரம்
திருடா திருடா-எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
விரல் மீட்டும்போது
வீணை நாதம் தரும்
காற்று நுழையும்போது
மூங்கில் ஓசை தரும்
நீ தீண்டும் போதுதான்
என் பெண்மைக்கு அர்த்தம் வரும்.

பொங்கலோ பொங்கல்

தாயகப்பறவைகள் பொங்கல் சிறப்பு மலருக்காக - சிநேகிதி-

தாயகத்திலிருந்த போது பொங்கல் எப்போது வரும் எத்தனை புத்தாடைகளணியலாம் எத்தனை வீட்டுப் பொங்கலை ருசி பார்க்கலாம் என்று எதிர்பார்ப்புகள் எத்தனை.அம்மாவோட பாட்டியோட பொங்கல் நாள் பார்த்து வாய்காட்டி ஏதாவது மண்டகப்படி வாங்கினாத்தான் அந்த வருசப் பொங்கலே கொண்டாடின மாதிரியிருக்கும்.

ஆனால் புலம் பெயர்ந்து வாழும் சூழலில் பொங்கல் அதுபாட்டுக்கு வந்த சுவடு தெரியாமல் வந்து போகுது.சாணி வாங்கிக்கொண்டு வந்து முத்தத்தை முதல் நாளே மெழுகி வைக்கத்தேவையில்லை.மெழுகி வைச்ச வட்டத்துக்குள் என்ன விளையாட்டு என்று பாட்டிமாரிட்ட திட்டுவாங்கத் தேவையில்லை.அதிகாலை எழும்பி கொஞ்சம் மஞ்சள்ல கொஞ்சம் அரிசிமாவில கோலம் போடத் தேவையில்லை.பொங்கல் பொதி என்று பொங்கலுக்குத் தேiவாயான எல்லாப் பொருட்களுமடங்கிய பொதியை வாங்கிக் கொண்டுவந்து நாங்களும் தமிழர்கள் பொங்கல் என்றொரு பண்டிகை எங்களுக்கு இருக்கு என்றதுக்காகத்தான் பொங்கல் பொங்கி சாப்பிட்டு விட்டு படிக்கச் செல்வோர் பாடசாலைக்கும் மற்றவர்கள் வேலைக்கும் சென்று வர நேரம் சரியாகயிருக்கும்.

நேரமும் வசதியும் இருப்போர்இ தங்கள் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களோடு இருப்பவர்கள் பொங்கல் என்றால் என்ன அதை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று தெரிந்து சந்தோசமாகக் கொண்டாடுகின்றார்கள்.

சங்க காலத்திலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது ஆனாலும் எப்போது இந்தப் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வழக்கம் எப்போது தொடங்கியதென்று எங்கும் அறுதியாகச் சொல்லப்படவில்லை.தைநீராடும் வழக்கம் சங்க காலத்திலிருந்து பின்பற்றப்படுவதால் பொங்கலும் சங்க காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சங்க காலத்தில் வாழ்ந்த கன்னிப் பெண்கள் மார்கழி தொடக்கம் அம்மனுக்கு விரதம் இருந்து தை மாதத்தில் விரதத்தை முடித்துக்கொள்வார்;கள்.இவ்வாறு கன்னிப் பெண்கள் மண்ணினால் செய்யப்பட்ட அம்மன் சிலையை வழிபட்டு வந்தால் தைமாதத்தில் விவசாயத்துக்குத் தேiவாயான மழையை அதிகமாகப் பொழியும் என்பது சங்க கால மக்களின் நம்பிக்கை.

பல்லவர் காலத்தில் பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான தைநீராடுதல் முக்கியமாகக் கருதப்பட்டிருக்கின்றது.ஆண்டாள் பாடிய திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளின் திருவெம்பாவை போன்றவற்றில் தைநீராடுதல் பற்றிய பல குறிப்புக்களுண்டு.

வீரராகவர் கோயிலிலுள்ள ஏடொன்றில் குலொத்துங்க சோழ மன்னன் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கென தன் நிலங்களைக் கோயில்களுக்குப் பரிசாக வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் மூன்றுநாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது போகிப்பண்டிகையோடு ஆரம்பமாகிறது.அறுவடைக்கு முதல் நிகழும் சிறப்புப் ப+சை உழுவதற்கு அறுவடைக்குப் பயன்படுத்தும் கருவிகள் இயந்திரங்கள் போன்றவற்றைச் சுத்தம்செய்து சந்தனமிடல் மற்றும் தேவையற்ற பண்டங்களை சுற்றுப்புறச்சூழலிலிருந்து அப்புறப்படுத்துதல் போன்றன போகிப்பண்டிகையின் முக்கிய அம்சங்கள்.அடுத்த நாள் உழவர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.பொங்கல் பொங்கி விவசாயத்துக்கு உதவி செய்யும் சூரியனுக்குப் படைப்பதும் பின்னர் சூரியனுக்குப் படைத்த பொங்கலை அடுத்த நாள் மாட்டுப் பொங்கலன்று மாட்டுக்குக் கொடுப்பதும் வழக்கம்.

மாட்டுப்பொங்கலன்று அநேகமான கிராமங்களில் மணிகட்டப்பட்ட மாடுகள் குளிப்பாட்டப்பட்டு கொம்புகளுக்கு வர்ணம் பூசப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு ஜில் ஜில் என்று ஒலியெழுப்பிக்கொண்டு கம்பீரமாய்த் திரிவது கண்கொள்ளாக்காட்டிசிதான்.

இந்த மாடுகளைப்பற்றி ஒரு சுவாரிசயமான கதையுண்டு.ஓரு நாள் சிவபெருமான் தன் வாகனமாகிய எருமைக்கடாவிடம் ஒரு வேலை செய்யச் சொன்னாராம். “நீ ப+மிக்குச் சென்று அங்கு வாழும் மக்களை எண்ணெய் தேய்த்துத் தினமும் நீராடி மாதத்தில் ஒருமுறை உணவருந்தச் சொல்” என்று சொன்னாராம்.ப+மிக்கு வந்த எருமைக்கடா தவறுதலாகத் தினமும் உணவருந்தி மாதத்திலொருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்குமாறு சொல்லிவிட்டதாம்.இதனால் கோபம் கொண்ட சிவன் தினமும் உணவருந்துவதற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கு உதவியாக நீ ப+மியிலேயே தங்கி நிலங்களை உழுதுகொண்டு இருக்கக் கடவாய் என்று சபித்து விட்டாராம்.

நல்ல கதை என்ன? ம் வாசிச்சது காணும் போய் பொங்கல் வேலையைப் பாருங்கோ.

ம் ம் எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே.

-பொங்கல் வாழ்த்துக்களுடன் சிநேகிதி-