Custom Search

Thursday, October 23, 2008

காவோலை விழுந்தால் குருத்தோலை :-) ம்கும்

என்ர அப்பம்மா 78 வயசில 2 மாசத்துக்கு முதல்தான் ஏஜன்சி மூலம் கனடாவுக்கு வந்தவா.ஏஜன்சி மூலம் வாறதெண்டால் சும்மா லேசுப்பட்ட விசயமில்லையென்டு உங்களுக்குத் தெரியும்தானே.இலங்கைக்காசுக்கு 36லட்சம் குடுத்துக் கூப்பிட்டவை மோன்மார்.இந்த மாதிரிக் காசு விசயங்களில மட்டும் பொம்பிளைப்பிள்ளையள் ஒதுங்கிடுவினம் இந்த சித்தாந்தம் மட்டும் எனக்கு விளங்கேல்லப் பாருங்கோ....எல்லாருக்கும்தானே அவா அம்மா அதெப்பிடி ஆம்பிளைப்பிள்ளையள் மட்டும் செலவேற்கவேணும்.அப்பிடிப் பார்த்தால் என்ர அப்பா பெத்து வைச்சிருக்கிறதுகள் மூன்றும் பெட்டையள் ம் ம் இருக்கட்டும் இருக்கட்டும்..ஆனைக்கொரு காலம் வந்தால் பூஸ்குட்டிக்கும் ஒரு காலம் வரும்தானே.

எங்கட அப்பம்மா இருக்கிறாவெல்லோ அவா 12 (அதான் டசின்) பிள்ளையள பெத்தவா.அப்ப அவாக்கு என்ன குறையிருக்கப்போதென்று கேக்கிறியளா?? அவாக்கு ஒரு குறையுமில்லை.இதில ஒருவிசயத்தை நான் கட்டாயம் சொல்லோணும் அப்பிடிச் சொல்லாட்டா அந்தக்குமரின்ர மனம் குளிராது :-) அந்தக் குமரி வேற யாருமில்ல அப்பம்மான்ர தோழி. அப்பம்மாவை கனடாக்கு கூப்பிட மாறி மாறி அப்பா அத்தை சித்தப்பாவை என்று எல்லாரும் ஸ்பொன்ஸர் செய்திச்சினம் அனால் அவான்ர வயசுக்கு வாற வருத்தங்களால மெடிக்கல் சரிவரேல்ல அதால 5 வருசமா கொழும்பில நிண்டு கடைசியா ஏஜென்சி மூலம் மலேசியாவில வந்து 5 மாசம் நிண்டுதான் கனடாக்கு வந்து சேர்ந்தவா. அப்ப மலேசியால அப்பம்மான்ர அறைத்தோழிதான் அந்த நான் சொன்ன குமரி. குமரிக்கு 80 வயசாம். ஒரு நாள் அப்பா அப்பம்மாக்கு போன் பண்ண அப்பம்மா போனில அழுதிட்டா...நாங்களும் ஏதோ பயத்தில அழுறாவாக்கும் என்று அப்பம்மா கவலைப்படாதயுங்கோ நீங்கள் இந்த முறை என்ர பிறந்தநாளுக்கு வந்திடுவீங்கள் அக்கான்ர கல்யாண நாளுக்கு வந்திடுவீங்கள் என்று சமாதானம் சொல்றம் அப்பத்தான் அவா சொன்னா நான் அதுக்கு அழேல்லப் பிள்ளையள் இவ்வளவு காசு குடுத்திருக்கு இந்த ஏஜென்சி நல்ல பிள்ளை எனக்குச் சீலையெல்லாம் வேண்டி தந்திருக்கு.

பின்ன என்னத்துக்கு அழுறீங்கள்?

கூட இருக்கிற மனுசிக்கு பொறாமை போல சும்மா கறுவிக் கொண்டிருக்கு. எப்ப பார் ஏதும் குறை சொல்லிக்கொண்டு எப்படா அங்க வருவன் எப்ப உங்களையெல்லாம் பார்ப்பன் என்டிருக்கு.

எங்களுக்கும் அப்பிடித்தானிருக்கு. டக்கெண்டு வந்திடுவீங்கள்.

இல்ல மோன நேற்றும் இப்பிடித்தான் அந்த மனுசி என்ன உங்களுக்கு ஒரே போன் வந்து கொண்டிருக்கு என்டு புறுபுறுத்திச்சு பின்ன நான் சொன்னன் எனக்கு கனடால 5 பிள்ளையள் இருக்கினம் அப்ப பிள்ளையள் மருமக்கள் பேரப்பிள்ளையள் எனக்கு எடுப்பினம் தானே என்று சொன்னன். மனுசி கேட்டிச்சு கனடால 5 அப்ப எத்தின பிள்ளையள் என்று. 12 ல இளையவனும் மூத்தவனும் இப்ப இல்ல. நான் அப்பிடிச் சொன்னதுதான் தாமதம் மனுசி சொல்லுது நீயும் என்னைப்போல 2 பிள்ளையோட நிப்பாட்டியிருக்கலாம். உத்தின பிள்ளையள் பெத்ததாலதான் நீ இப்பிடி இருக்கிறாய் என்னைப் பார் 80 லயும் சும்மா எப்பிடி ஜம்மென்று குமரியா இருக்கிறனென்டு.

என்று சொல்லிட்டு அப்பம்மா அழுதிட்டா...அப்பாக்கு தாங்க முடியல சும்மா இரண உதெல்லாம் ஒரு கதையென்டு...அந்த மனுசிக்கு தன்ர பிள்ளையள் போன் பண்ணிக் கதைக்கிறேல்ல என்று கவலையாக்கும்...நீ உதுகளை விட்டிட்டு கெரியெண வாற வழியைப் பார்.

இன்டைக்கு ஏத்துறன் நேற்று ஏத்துறன் என்று ஏஜென்சி ஏத்தி இறக்கி ஒரு மாதிரி அப்பம்மா வாற நாளும் வந்திச்சு. மோன்மாருக்கு இருப்புக்கொள்ளுமே வீட்டில..எல்லாரும் குடும்பம் குடும்பமா Airport க்குப் போனாச்சு அதுவும் 2 மணித்தியாலத்துக்கு முதலே. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் லேற்றா வந்தா அப்பம்மா. 11 வருசத்துக்கு முதல் நாங்கள் பாரத்ததை விட நல்ல வாய்க்கெட்டுப்போய்த்தான் இருந்தா அப்பம்மா. எங்களைக் கண்ட உடன அழுதிட்டா. வன்கூவர்ல இறங்கேக்க கனடாக்கு வந்தாச்சென்டு சொன்னத கேட்டிட்டு அங்க எங்களை எதிர்பார்த்திருக்கிறா எங்கள் ஒருதரையும் காணேல்ல என்டதும் தன்னை எங்கயோ கொண்டுபோய் அடைக்கப்போறாங்கள் என்று நினைச்சிட்டாவாம். எங்கள் எல்லாரையும் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினா.மருமகள்மாரில சும்மா சொல்லக்கூடாது பாசம் அந்த மாதிர ஒவ்வொருதரையும் தேடி தேடிக் கொஞ்சினா. உங்களையெல்லாம் பார்தாப்பிறகுதான் நிம்மதி. இப்ப கூட உதில பாஸ்போர்ட்டையும் பார்த்து என்னையும் பார்த்திட்டு பாஸ்போர்ட் படத்தில பல்லுக் கிடக்கு உனக்குப் பல்லில்லை என்று துருவி துருவிக் கேட்டாங்கள்...எனக்குப் பயம்தான் இருந்தாலும் பல் செற்றைத் தூக்கிக் காட்டினன் விட்டிட்டாங்கள் என்டா.


பரிவாரங்கள் புடைசூழ அப்பம்மா parking lot க்கு வந்தாச்சு இப்ப அவா ஆற்ற ஜீப்ல ஏறுவா என்டது பேரப்பிள்ளையளான எங்களின் மிக முக்கியமா மில்லியன் டொலர் கேள்வி...ஆனால் நான் உங்களுக்குச் சொல்ல மாட்டன் அவா ஆற்ற ஜீப்ல எறினவா என்டு.

Airport ல flight arrival நேரத்துக்கு முதலே போய் காவல் நிக்கிற மண்டைக்காயளுக்கு ஒரு எச்சரிக்கை. parking fee எவ்வளவு என்று முதலே பார்த்து வையுங்கோ ஏன் சொல்றன் என்டால் ஒரு வாகனத்துக்கு 21 டொலர்படி 5 வாகனத்துக்கும் 105 டொலர் parking fee மட்டும் கட்டினாங்கள் .

அப்பம்மா வந்தாச்சு ..ஆற்ற வீட்ட முதல் போவா? ஆற்ற வீட்ட இன்டைக்கு இரவுக்கு நிப்பா....இந்த விசயத்தில அம்மாக்கள் மகள் பக்கம்...என்னை விடுங்கோ இதப்பற்றி நான் ஒன்டுமெ சொல்லப்போறதில்ல.

அப்பம்மா வந்து 3 நாளாச்சு. எல்லாப்பிள்ளை வீட்டயும் போய் வந்தாச்சு.

அம்மா இந்தாண...இது நான் உனக்கெண்டு செய்து வைச்சதிருக்கிற சங்கிலி.

அம்மா இது நான் உனக்கெண்டு வாங்கின காப்பு.

என்ன கொடுமை சரவணா.

ம் இப்பிடித்தான் எல்லாம் ஆரம்பிக்கும். இனித்தானே இருக்கு விளையாட்டு.

அட்டவணை போட்டாச்சு. வார இறுதி நாட்கள்ல மகள் வீட்ட. மற்ற நாட்கள்ல மகன்கள் வீட்ட அம்மா நிக்கலாம்.

மற்ற எல்லா மருமகள்களும் வேலைக்குப் போறாக்கள் என்ர அம்மாவைத் தவிர.அதனால கிட்டத்தட்ட எல்லா நாளும் அப்பம்மா எங்கட வீட்ட நிக்கிறளவில இருக்கு இப்ப நிலமை.

வயசு போனால் வாற மறதி...கண் பார்வை இப்பிடியான பிரச்சனைகள் இல்லை. இருமல் சளி காலுளைவு நாரிப்பிடிப்பு இதெல்லாமிருக்கு.எத்தின பேரப்பிள்ளை இருக்கினமோ அத்தினபேரும் காலமுக்கி விட்டால் அவாக்கு நல்ல சந்தோசம். ஒருநாள் அண்ணா வீட்ட வர காலை நீட்டிச்சொன்னா ஒரே காலுளைவா இருக்கு மோனை என்று அவன் சும்மா பக்கத்தில இருக்கிற மாதிரி இருந்திட்டு ஒடிட்டான் கள்ளன் நாங்கள் போய்ச் சொன்னம் அவாக்கு பேரன் மாரிலதான் கரிசனம் கூட போ போ போய் கால் பிடிச்சு விடென்டு.

பிள்ளையள்ல பொம்பிளையப்பிள்ளைல பாசம் கூட என்டால் பேரப்பிள்ளைலயும் அப்பிடித்தானே இருக்கோணும்..ஏனப்பிடியில்லை?

அப்பம்மா சாப்பிட வாங்கோ...இங்க வா மேன இந்தப்படியால இறங்கேலதாம் என்னைக் கொஞ்சம் பிடிச்சு இறக்கிவிடு.

பிள்ளை எனக்கு வெண்டிக்காய் கறி போட வேண்டாம். நான் தோஞ்சனான் வெண்டிக்காய் குளிர். இது சூடு. இப்பிடியெல்லாம் தவிர்த்து சொதியோட சாப்பிட்டா. இது தொடர்ந்திச்சு கொஞ்ச நாளைக்கு.பிறகு சளியா இருக்கு முட்டா இருக்கு சோறு சாப்பிட என்டால் நல்ல உறைப்பான சம்பலும் ரசமும் வைமேனை.

மூன்று நேரமும் fresh சமைக்கத் தொடங்கினா அம்மா. பிரிட்ஜ் ல வைச்சு சாப்பிடுறது இல்லாமல் போச்சு.நினைச்ச நேரம் சூப் ரசம் சாம்பார் சம்பல் நண்டுக்கறி கணவாய்க்கறி நெத்தலிச்சொதி...விதம் விதமா சாப்பாடு அப்பம்மாக்கு எங்களுக்கும்தான். வந்த புதுசிலதான் அம்மா செய்தவா. இப்ப அப்பம்மாவும் நல்லாச் சமைப்பா...இப்ப அவாக்கு கனடா பழகிட்டுது. தானா நடப்பா தானே வோஸ்றூமுக்குப் போவா ஆனால் என்ன வோஸ்றூம் போன கிளீன் பண்ணத் தெரியேல்ல இன்னும் அதும் பழகிடுவா கெரில.

இப்ப குளிர் தொடங்கிட்டு..அப்பா ஒரு ஜக்கற் வேண்டிக்கொண்டு வந்தார் அப்பம்மாக்கு. நானுது போட மாட்டன்..நான் சிவப்புக்கலரில உடுப்பே போடுறதில்லை ஜக்கற்ற வேண்டியந்திருக்கிறாய் சிவப்பில...என்னட்ட பறையாமல் உன்னையார் போய் வாங்கச் சொன்னது.

அப்பா சிலநேரம் எங்களையே தான் வேண்டிக்கொண்டு வாறதைப் போட வைக்கிறவர் இப்ப அவற்ற அம்மாக்கு முன்னால மண்டிக்கொண்டு நிக்கிறவரைப் பார்க்க எனக்கும் தங்கச்சிக்கு சிரிப்படக்க முடியல்ல.

அப்பம்மா நல்லா நாடகம் பார்ப்பா அதுவும் கஸ்தூரில ஒரு தனிப்பாசம் அவாக்கு.இதாலயே தங்கச்சியும் அப்பம்மாவும் சிலநேரம் முண்டுப்படுவினம். அப்பம்மா நாடகம் பார்க்கிற நேரம் தங்கச்சி ஆங்கிலத் தொடர்கள் எதுவும் பார்க்க வெளிக்கிட்டால் காணும் அப்பம்மா சொல்லுவா உதென்ன உவளுகள் ஒழுங்கான உடும்பும் போடுறேல்ல எல்லாப்பக்கமும் கிழிஞ்சு தொங்குது காதில வயித்தில மூக்கில எல்லாம் தொங்குது. என்ன அருமந்த முகம் ..தலைமயிரைப் பின்னிக் கட்டினா என்னமா இருக்கும்..உதுகள ஏன் பார்க்கிறியள் இது கஸ்தூரி தொடங்கப்போகுது மாத்தடி. ராம் பாவம் எங்கட அப்பம்மாட்ட அந்தாள் வேண்டுற அர்ச்சனையிருக்கே. ஒரு எபிசோட்ல கஸ்தூரிக்கு அசிட் ஊத்திட்டினம் முகத்தில...அப்பம்மா திட்டத்தொடங்கிட்டா. அப்பா சொன்னார் ஏனண கத்திறாய் உது நாடகம்தானே..

ஓமடா எனக்குத் தெரியாதே நாடகமெண்டு அப்பிடியென்டாலும் அவளுக்குக் கொஞ்சமெண்டாலும் பட்டிருக்கும்தானே முகத்தில

இல்லையெண அது தண்ணிதான் உண்மையா ஊத்துறது.

சீ சீ ஆர் சொன்னதுனக்கு...இப்பிடிப்போகும் அப்பம்மாவும் நாடகங்களும்.

மகளின் ஒரு காதல் பிரச்சனையால சொந்தக்காரர் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்து இப்ப சுகம். அங்க போட்டு வந்ததில இருந்து அப்பம்மா எங்கள் எல்லாரும்கும் ஒரே அட்வைஸ் மழை. இங்கத்த பிள்ளையளுக்கு ஒன்றும் தெரியுறேல்ல. பெத்ததுகளை அழ வைச்சுப் பார்க்குதுகள். எங்கட காலத்திலயென்டால் கல்யாணத்தன்னிக்குதான் மாப்பிள்ளையைப் பார்க்கிறது. அதும் ஒன்றும் விளங்காத வயசில கட்டி வைச்சிடுவினம்..எண்டா.
எனக்குப் பொறுக்க முடியேல்ல கேட்டிட்டன் அப்ப நீங்கள் தாத்தாவை லவ் பண்ணேல்லயே.

நாங்கள் எங்க லவ் பண்ணினம்...

அப்ப எப்பிடியப்பம்மா இவ்வளவு பிள்ளையளையும் பெத்தனீங்கள்.

இதென்ன கேள்வி..கல்யாணத்துக்குப் பிறகு ஆர்தான் லவ் பண்ணாமலிருக்கினம் கல்யாணம் கட்டினாப்பிறகு லவ் பண்ணினதுதான். அதுக்கு முதல் உங்களைப் போல லவ் பண்ணவெல்லாம் எங்களை யார் விட்டது.

ஹா ஹா அப்பிடி வாங்கோ வழி்க்கு அப்ப நீங்கள் தாத்தாவை லவ் பண்ணினீங்கள்.

இவளின்ர கதையைப் பாருங்கோ என்று சிரிச்சுக்கொண்டு நல்லா வெக்கப்பட்டா அப்பம்மா ..அதோட எனக்கு நுள்ளிப்போட்டா...நான் அதுக்குப்பிறகு இடம் மாறி இருந்திட்டன்.

தங்கச்சி கேட்டாள் தாத்தாக்கு உங்கள விட 23 வயசு கூடவெல்லோ..ஏன் நீங்கள் அவரை கல்யாணம் கட்டினீங்கள்..ஏன் லவ் பண்ணினீங்கள்.

உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கென்ன...இப்பிடி பக்கத்தில இருந்துகொண்டு கேள்வி கேக்கிறீங்கள் சிரிக்கிறீங்கள். எங்களையார் கேள்வி கேக்க விட்டவை பதில் யார் சொல்லுவினம்.பெரியாக்கள் கதைக்கிற பக்கமே நாங்கள் போகேலாது. அம்மா 6 வயசிலயே செத்திட்டா என்று கண் கலங்கினா. சொந்தக்காரர் சொல்லிச்சினம் நானும் கழுத்தை நீட்டிட்டன். மனுசன் என்னை நல்லாத்தானே வச்சிருந்தது. பரியாரின்ர மனிசி என்று ஊரிலயும் எனக்கு நல்ல மரியாதை. சொத்து சுகம் பூமி நிலம் என்று நல்லாத்தானே இருந்தம். இப்பத்தான் எல்லாம் யார் யாரோ அனுபவிக்குதுகள்.

அப்பம்மா அப்ப தாத்தா நல்லவர்தானே பின்ன ஏன் நீங்கள் 10 வருசமா கதைக்காமல் இருந்தனீங்கள்.

அவற்ற குசும்புக் கதையள் வர வரக்கூடிட்டுது. அவர் கதைச்சிருக்கலாம்.

ஆகா அப்பவே ஈகோப் பிரச்சனையா..ம்.

இப்பிடிச்சும்மா பம்பலாப் போகுது பொழுது. அவாக்கு சில விசயங்கள் தெரியாதென்டு விளங்கப்படுத்தப்போய் மூக்குடைபட்டிருக்கினம் சிலர்.

ஒருநாள் வெளில போன ஒரு இடத்தில இருந்த வோஸ்றூம்ல இருந்த கொமட்ல flush பண்றது கொஞ்சம் வித்தியாசம்..பொதுவா ஒரு பிடியிருக்கும் இது ஓரு குட்டி button இருக்கும் கருஞ்சிவப்பா.. பெருசா தெரியாது கண்ணுக்கு. அத்தை போட்டுவந்து சொன்னா எப்பிடி flush பண்றதென்று முதல் தெரியேல்ல ..தேடிப்பார்த்தனான் வித்தியாசமா இருக்கெண்டு சொன்னா. உடன அப்பம்மா சொன்னா என்ன உனக்கு அந்த button தெரியேல்லயே.எனக்கே வடிவாத் தெரியுது..மலேசியாலயும் இப்பிடித்தான்.

இன்னொருநாள் அப்பம்மா ஒரே இருமிக்கொண்டிருந்தா. வேற ஆக்களின்ர வீட்டில நிண்டனாங்கள் பின்ன நடுக இருமுறா என்டிட்டு அத்தை gum குடுத்திட்டுச் சொன்னா அம்மா இது விழுங்கக் கூடாது..சுவை போன பிறகு வெளில துப்பிடணும். அப்பம்மா வேண்டி வாய்ல போட்டிட்டு அட இது சுவிங்கம்..இதை எப்பிடிச் சாப்பிடணும் என்று எனக்குத் தெரியாதே..இதையேன் நான் விழுங்கப் போறன்.நீங்கள் எல்லாம் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீங்கள் ஹா? தெரியாமல்தான் கேக்கிறன் ஊரில நீ சுவிங்கம் சாப்பிட்டதில்லையே?
அத்தையைப் பார்க்ப பாவமாய் இருந்திச்சு..அத்தை சொன்னா பிறகு நீங்கள் விழுங்கிப்போட்டு முதல்லயே நீ சொல்லியிருக்கலாம் என்டுவீங்கள் அதான் சொன்னனாண.
அந்த வீட்ட விட்டு வரேக்க அத்தை கேட்டா அம்மா gum துப்பிட்டியே..இல்ல கொடுப்புக்குள்ள ஒட்டி வைச்சிருக்கிறன். இருமலோட விழுங்கிடப்போறாய் துப்பண..அடி விசரி நான் எப்பவோ வோஸ்றூம்ல துப்பிட்டன.

அப்புறம் ஒரு விசயம் சொல்ல மறந்திட்டன் அந்தக் குமரி தோழி இருக்கிறா தானே அவா கனடாக்கு வாறா என்டு தெரியும். ஆனால் அப்பம்மான்ர அதிஸ்டம் அவா சித்தப்பா வீட்டுக்கு பக்கத்து வீட்டு அன்ரின்ர மாமி :-) அப்பம்மாவும் அவாவும் கனடால சந்திக்கேக்க ஒரு சிற்றுவேஸன் ஸோங் போடட்டே " என்னம்மா கண்ணு செளக்யமா"

17 comments:

துளசி கோபால் said...

//படத்தில பல்லுக் கிடக்கு உனக்குப் பல்லில்லை என்று துருவி துருவிக் கேட்டாங்கள்...எனக்குப் பயம்தான் இருந்தாலும் பல் செற்றைத் தூக்கிக் காட்டினன் விட்டிட்டாங்கள் என்டா.//

இது:-))))))))))))

சந்தனமுல்லை said...

:-))

#BMN said...

// அப்பம்மாவும் அவாவும் கனடால சந்திக்கேக்க ஒரு சிற்றுவேஸன் ஸோங் போடட்டே " என்னம்மா கண்ணு செளக்யமா" //

ரசித்தேன்...
ஆனாலும் நிறைய வார்த்தை புரியவில்லை! :(

கோபிநாத் said...

\\பிள்ளையள்ல பொம்பிளையப்பிள்ளைல பாசம் கூட என்டால் பேரப்பிள்ளைலயும் அப்பிடித்தானே இருக்கோணும்..ஏனப்பிடியில்லை?
\\

குட் கெஸ்டின்...உங்களுக்கு பாட்டி வயசு ஆகும் போது தெரியும்...இல்லைன்னா அடுத்த பிறவியில ஆண் பிள்ளையாக பிறந்திடுங்கள்..;))

பாட்டியோட நினைவுகள் படிக்க படிக்க என்னோட பாட்டி நினைவுக்கு வராங்க ;)

\\அப்பம்மா அப்ப தாத்தா நல்லவர்தானே பின்ன ஏன் நீங்கள் 10 வருசமா கதைக்காமல் இருந்தனீங்கள்.\\

யப்பா!!!!! ;)

கோபிநாத் said...

\\நுள்ளிப்போட்டா\\


அப்படின்னா!!??

காரூரன் said...

சினேகிதி,
எழுத்திலை இன்னும் வடமராட்சி பேச்சு நடை இருக்கின்றது.
*\\ இலங்கைக்காசுக்கு 36லட்சம் குடுத்துக் கூப்பிட்டவை மோன்மார்\\*
பெற்றவர் மனம் புண்பட்டால் பிள்ளைகள் வாழமுடியாது என்பார்கள்!, சிலர் பெற்றவர்களை பராமரிக்காமல் அம்மா பகவானை கும்பிட்டு விட்டு பாத பூசை செய்தால் போதும் என்று இருப்பினம். என்றும் விலை மதிக்க முடியாதது உண்மையான உறவுகள்.

சினேகிதி said...

\\//படத்தில பல்லுக் கிடக்கு உனக்குப் பல்லில்லை என்று துருவி துருவிக் கேட்டாங்கள்...எனக்குப் பயம்தான் இருந்தாலும் பல் செற்றைத் தூக்கிக் காட்டினன் விட்டிட்டாங்கள் என்டா.//

இது:-))))))))))))\\

அதான் பெரியம்மா ;-)

சினேகிதி said...

சந்தனமுல்லை நீங்கள் பண்ணின சினிமா விளையாட்டு இன்னும் எழுதல ...எழுதுறன் :-)

மித்ரா குட்டி என்ன செய்றது எழுதத் தொடங்கினால் சுத்த தமிழ் மறந்து போகுது..என்ன விழங்கல என்று சொல்லுங்கோ உங்கட பாசை தெரிஞ்சவை யாரும் விளக்கம் சொல்லுவினம்.

சினேகிதி said...

\\குட் கெஸ்டின்...உங்களுக்கு பாட்டி வயசு ஆகும் போது தெரியும்...இல்லைன்னா அடுத்த பிறவியில ஆண் பிள்ளையாக பிறந்திடுங்கள்..;))\\

கோபிநாத் ,
இது நல்ல கதை இதுக்காக எல்லாம் நான் பாட்டியாகோணுமே. அதென்னவோ தெரியேல்ல தாத்தாக்கும் சரி அப்பம்மாக்கும் சரி பேரப்பெடியங்கள் என்டால் காணும். நுள்ளிப்போட்டா என்டத எப்பிடி நான் விளங்கப்படுத்த...உங்கட ஊரில கிள்ளிறதென்று சொல்றவையோ தெரியா.

சினேகிதி said...

\\சினேகிதி,
எழுத்திலை இன்னும் வடமராட்சி பேச்சு நடை இருக்கின்றது.
* சிலர் பெற்றவர்களை பராமரிக்காமல் அம்மா பகவானை கும்பிட்டு விட்டு பாத பூசை செய்தால் போதும் என்று இருப்பினம். என்றும் விலை மதிக்க முடியாதது உண்மையான உறவுகள்.

\\

அப்பம்மாவோட கதைச்சு கதைச்சு வடமராட்சிப் பேச்சுநடை உயிரோட இருக்குது. இந்த அம்மா பகவான்ட posters பல்கழைக்கழக notice bulletin boards களிலயும் கண்டனான். அவாவ பற்றிக் கொஞ்சம் தெரிஞ்சுகொள்ளத்தான் வேணும்.

deep said...

//...இப்பத்தான் எல்லாம் யார் யாரோ அனுபவிக்குதுகள்//

;-)
இப்ப உங்கட அப்பம்மா இடையில ஒருநாட்டில நிண்ட, அதே சிற்றுவேஸனில இருக்கிற,
'வருவாவா வர மாட்டாவா' என்கிற மாதிரியாய்ப் போகிற எங்கட அம்மம்மாவை நினைவுபடுத்தியது.. நம்பிக்கையாய் இருந்தது, சீக்கிரம் இங்க வந்திருவா எண்ட மாதிரி :-)
அந்தத் தலைமுறையோட இருந்தாலே ஒரு சந்தோசம்தான் !
after reading this post, i miss my ammamma, more.. waiting for her arrival.
'ny way; gud posts.. keep on writing!

கோபிநாத் said...

\\\நுள்ளிப்போட்டா என்டத எப்பிடி நான் விளங்கப்படுத்த...உங்கட ஊரில கிள்ளிறதென்று சொல்றவையோ தெரியா.\\

ஒஒ...நானும் அந்த மாதிரி கிள்ளு எல்லாம் வாங்கியிருக்கேன் ;))

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல்...:)

தமிழன்-கறுப்பி... said...

அப்ப நீங்கள் குடும்பத்தோட என்ன ஊரோட கனடாவுல இருக்கிறியள் எண்டு சொல்லுங்கோ
எனக்கும்தான் அப்பற்ரை ஆக்கள் இருக்கினம் ஆனா...

தமிழன்-கறுப்பி... said...

....நான் எப்ப கனடா வருவனெண்டுதான் தெரியயில்லை...

தமிழன்-கறுப்பி... said...

ஊர்த் தமிழ் எனக்கே மறந்து போய்கொண்டிருக்கு நீங்கள் தொடர்ச்சியா எப்படியப்பா எழுதுறியள்...?!

சினேகிதி said...

ஊர் தமிழ் எப்பவும் மறக்கிறேல்ல...கதைக்கேக்க அப்பிடி வாறேல்ல இப்ப அப்பம்மா இருக்கிறதால அவா எங்களை நக்கலடிப்பா பின்ன அவாவ நக்கலடிக்க நாங்களும் அவா கதைக்கிற மாதிரி கதைக்கிறது :-)