Custom Search

Friday, February 23, 2007

ஆணிவேர் - ஜான் உடன் ஒரு நேர்காணல்

இப்பவும் சென்னையில் ஈழம் பற்றி செய்தியை பார்க்கும் போது மனசு பதறுது... இலங்கை ராணுவம் குண்டு வீச்சு என்று செய்தி கேட்டால்... ‘‘ஐய்யோ நம்மளோட ஆணிவேர் படத்தில் நடிச்ச அந்த பாட்டி உயிரோட இருப்பாங்களா? அசிஸ்டென்டாக வேலை பார்த்த அந்த பொடியன் உயிரோட இருப்பானோண்ணுதான் இப்பவும் மனசு பதறுது’’ உடனே போன் போட்டு அவங்களை பிடிச்சு நாலு வார்த்தையாவது பேசிவிடுவேன்’’ என்கிறார் ஆணிவேர் படத்தின் இயக்குநர் ஜாண். இயக்குநர் மகேந்திரனின் மகன். மனைவி மகன் மற்றும் மகளோடு சென்னை தி.நகரில் வசிக்கிறார்.

கேள்வி: ஆணிவேர் முயற்சியின் தொடக்கம் பற்றி...

பதில்: ‘‘நான் சச்சின் படம் பண்ணி முடித்து அது தியேட்டரில் ஒடிக்கொண்டிருந்த போது சுவிட்சர்லாந்தில் 'தமிழ் லீவிங் மீடியா நெட் வொர்க்' நிறுவனத்தை நடத்திவரும் பிரபாகரன் அவர்கள் சச்சின் பார்த்துவிட்டு என்னை அழைத்து விஷ் பண்னினார். அப்புறம் என்னிடம் ஈழத் தமிழர்களுக்காக ஒரு படம் பண்ணித்தர முடியுமா என்று கேட்டார். ஒரு பிலிம் மேக்கரா எனக்கு இலங்கையில் உள்நாட்டு பிரச்சனை தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் இருக்குண்ணு தெரியும், ஆனா அதோட அரசியலோ கடந்த காலம் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் ஈழ மண்ணில் யுத்தம் நிகழ்த்தியிருக்கும் கோர தாண்டவம் பற்றியோ எனக்கு தெரியாது.. ஆனால் ஒரு யுத்த பின்னணியை வைத்து ஒரு சினிமா பண்ணவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. பிரபாகரன் நிறைய புத்தகங்கள், வி.சி.டி என கடந்த கால வரலாற்று ஆவணங்களை கொடுத்தார். முதன் முதலாக ஈழத்தமிழர்கள் அடைந்த துயரங்களை பார்த்தேன். படம் எடுப்பதற்கு முன்னால் ஈழப்பகுதிகளுக்கு போகவேண்டும் என்று சொன்னேன். அங்கே போய் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து மக்களை சந்தித்தேன். ஒவ்வொரு கதைகளும் ஒரு ஈழ சினிமாதான். நிறைய பேரை சந்தித்தேன். நீண்ட நேரம் பலமான அவர்களின் கதையை, வாழ்க்கையை வீடியோவில் பதிவு செய்தேன். நான் பதிவு பண்னின மொத்த விஷவலையும் வெச்சு இரண்டு வருஷத்துக்கு ஒரு மெகா சீரியலே பண்ணலாம். அங்கே ஈழத்தில் இரண்டு விதமான மக்கள் வாழ்கிறார்கள். ஒன்று யுத்தத்தின் நெருக்குவாரத்தை சந்தித்து தினம் தினம் மரணத்தோடு இன்னும் சொந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இன்னொரு புறம் புலம் பெயர்ந்து உலகெங்கிலும் தாயகம் பற்றிய கனவுகளோடு வாழ்பவர்கள். ஐம்பதுகளில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இவளவு கொடூரம் நடந்தும் இன்னும் இது சரியாக வெளியுலகத்துக்கு வரவில்லை என்கிற ஏக்கமும் கோபமும் அவங்ககிட்டே இருக்கு. இரண்டு சமூகங்கள் ஒரு பிரச்சனை காரணமாக மோதி அதில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டா அதுக்கு பேர் கலவரம். ஆனா இலங்கையில் காலம் காலமா தமிழர்கள்தானே பாதிக்கப்படுறாங்க. ஆனா இன்றைக்கு வரைக்கும் இலங்கையில் தமிழர்கள் மேல் நடத்தப்படுகிற தாக்குதலை கலவரமாகத்தான உலக மீடியாக்கள் பார்க்குது. இப்படிபட்ட வருத்தங்கள் அவங்களுக்கு இருக்கு. அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட இரண்டாவது ஆயுதமாக சினிமாவை கையிலெடுத்திருக்காங்கண்னு நினைக்கிறேன்.கேள்வி: ஆணிவேர் படம் எடுப்பதற்க்காக நீங்கள் ஈழத்தில் எவளவு காலம் தங்கியிருந்தீர்கள்? அந்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்: கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தங்கியிருந்தேன்.சென்னையில் இருந்து கொழும்புக்கு போய் இறங்கிய போது ஒரு தமிழ் நாளிதழை வாங்கி பார்த்தேன் ‘‘கொல்லப்படுபவர்கள் எல்லாம் புலிகள்’’ என்று தலைப்பு செய்தி போட்டிருந்தார்கள். ஈழத்தில் உள்ள போராளிகளாக உள்ள பொது நிலையினரின் வாழ்க்கையை அந்த தலைப்பு எனக்கு உணர்த்தியது. ஏகப்பட்ட பரிசோதனைகள் கொழும்பில் உலவுகிற ஒவ்வொரு மனிதனும் ஆயுதங்களோடு கண்காணிக்கப்படுகிறான். புல்லட் நிரப்பப்பட்ட ஒப்பன் செய்யப்பட்ட ஏகே 47 நவீன ரக துப்பாக்கிகள் வழியாக ஊர்ந்துதான் கடுமையான கெடுபிடிகளை தாண்டி ஈழத்துக்குள் பிரேவசிக்க முடிந்தது. என்னை அழைத்து வந்த காரோட்டி சொன்னார் ‘‘சார் கை தவறுதலாக பட்டால் கூட அந்த துப்பாக்கியின் குண்டுக்கு யாரோ ஒருத்தர் பலியாக நேரிடும்’’ என்றார். அப்புறம் ஈழத்துக்கு போய் என்னோட பணிகளை கவனித்தேன். அங்கு வாழ்கிற ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் தமிழ் பெண்ணுக்கும் ஒரு கதை இருக்கிறது. அது யுத்தத்தோடு தொடர்புடைய கதை. ஒவ்வொரு மனிதனும் சகோதரியையோ,தாயையோ.உறவுகளையோ இழந்த கதைகள் ஏராளமாக இருக்கிறது. ஒரு கலைஞனாகவோ மனிதனாகவோ இதற்க்கெல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று எனக்கு தெரியவில்லை. ஒரு தாயை சந்தித்தேன் அவங்களோட மகனை சில வருடங்களாகவே காணவில்லை. பின்னர் செம்மணி புதை குழி மர்மங்கள் வெளிபட்ட போது அதில் அவங்களோட மகனும் கொலை செய்யப்பட்டாராம். அதே மாதிரி இன்னொருத்தங்க ஒரு கதை சொன்னாங்க. ஒரு நாள் ஆர்மிக்காரன் வருகிறான் என்று எல்லோரும் ஒடியிருக்காங்க அப்படி ஒடினபிறகு பார்த்தா அவங்களோட குழந்தையை மிஸ் பண்னிட்டாங்க பதறிப்போய் பார்க்கும் போது அந்த குழந்தையை எரிந்து கொண்டிருந்த தீயில் போட்டிருக்காங்க. அதே மாதிரி தன்னோட தாய் இறந்து போயிட்டாங்க எனபது கூட தெரியாமல் தாயோட மார்பில் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையின் கதை ஒன்றை ஒரு டாக்டர் சொன்னாங்க. அவங்க அந்த சமூகத்தோட மனச்சாட்சி மாதிரி ஏண்ணா?அவங்கதானே யுத்தத்தால பாதிக்கப்பட்ட மக்களை நேரடியா பார்க்கிறாங்க மருத்துவம் செய்றாங்க. ஒரு நாள் ஷெல் அடிக்கும் போது குழந்தையோட பதுங்கின தாய்க்கு தோளில் நல்ல காயம் ஏற்ப்பட்டிருக்கு அந்தம்மாவுக்கு அவசரமா ஒரு ஆப்பரேஷன் பண்ணவேண்டும் அவங்ககிட்டே மயக்க மருந்து எடுத்துக்கோங்க கிட்டத்தட்ட நான்கு மணிநேரமாவது ஆகும என்று டாக்டர் சொன்னபோது ‘‘வேணாம் அவளவு நேரம் குழந்தை பால் குடிக்காம இருக்க முடியாது.மயக்க மருந்து இல்லாமலே பண்ணுங்க’’ எனறு சொல்லி மயக்க மருந்து இல்லாமலே அந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கு இதை மனத்தைரியமா எடுத்துக்கறதா?இல்லை போர் இப்படி ஒரு மன இறுக்கத்தை அந்த மக்களிடம் ஏற்ப்படுத்தியிருக்குண்னு நினைக்கிறதாண்னு தோணலை...தர்ஷினி கொலை செய்யப்பட்டது பற்றி ஒரு ஆசிரியரிடம் பேசினேன் அவங்க சொன்னதும் நான் பார்த்ததும் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது காரணம் மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது அவங்களோட ஒவ்வொரு அடியும் இராணுவத்தால் கண்காணிக்கப்படுவதும் பரிசோதனை என்கிற பெயரில் கொடூரமான வக்கிரமான வதைகளுக்கு ஆட்படுவதும் இன்றும் தொடர்கிறது.அதை நேரில் என்னால் பார்க்க முடிந்தது.கேள்வி: இத்தகைய கொடுமைகளை ஒரு ஆவணப்படமாகவோ, இல்லை ஒரு கட்டுரையாகவோ எழுதிவிட முடியும் ஆனால் புனைவுகள் கொண்ட ஒரு சினிமாவாக இதை எப்படி எடுக்க முடியும்?

பதில்: ஆணிவேர் படத்தை புனைவு என்று என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் நடந்தெல்லாம் உண்மையாக இருக்க எப்படி புனைவாகிவிடும்? நிகழ்ந்த சம்பவங்களை புனைவு என்கிற ஒரு வடிவத்துக்குள் கொண்டு வந்திருகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் ஆணிவேரை புனைவு என்று சொலவதே வேதனையாகத்தான் இருக்க முடியும். தலைமுறை தலைமுறையாக கொல்லப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகிற மக்களின் நிஜமான கதைகளை அப்படி புனைவு என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு போக முடியாது. இது உண்மைக்கதை.

கேள்வி: பெரும்பாலான பாத்திரங்களாக ஈழத்தமிழர்களே நடித்திருக்கிறார்கள். ஆனால் மதுமிதாவையும்,நந்தாவையும் தமிழகத்திலிருந்து அழைத்து போய் ஏன் நடிக்க வைத்தீர்கள்? அதிலும் ஈழத்தமிழர்களே நடித்திருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்குமே?

பதில்: ஆணிவேர் படத்தை ஒரு பட்ஜெட் படமென்றோ பட்ஜெட் இல்லாத படமென்றோ சொல்லிவிட முடியாது. தவிரவும் இந்த படத்தை எடுக்கும் போதே இதை இந்தியாவில் ரிலீஸ் பண்ணமுடியாது என்று தோன்றியது. புலம் பெயர்ந்து அய்ரோப்பிய நாடுகளில் வாழும் மக்களும் இதை பார்ப்பாங்களா என்று அப்போ தெரியவில்லை. அதனால் பார்வையாளர்களை முதலில் தியேட்டருக்கு அழைத்துவரும் ஒரு முயற்சியாகத்தான் தெரிந்த முகமாக இருக்கட்டுமே என்றுதான் மதுமிதாவை அதில் நடிக்க தேர்ந்தெடுத்தேன். ஒரு நாள் நந்தாவே என்னை தேடி வந்தார் ‘‘நீங்க ஈழத்தமிழர்கள் பற்றி ஒரு படம் பண்றீங்களாமே அதில் எனக்கும் ஒரு ரோல் வேணும் என்றார்’’ அதனாலதான் ஆர்வமாக இருந்த அவரை இதில் நடிக்க வைத்தேன். மதுமிதாவும் நந்தாவும் இந்த படத்துக்கு கொடுத்த ஒத்துழைப்பை நான் நினைக்கும் போது உண்மையிலே மகிழ்ச்சியாக இருக்கு. காரணம் மதுமிதா தெலுங்கு காரங்க... ஈழ மக்களோட கஷ்டங்களை தெரிஞ்சி புரிஞ்சுக்கிட்டு நடிச்சாங்க, நானும் சரி கேமிராமேன் சஞ்சயையும் சரி நடிகர்களும் சரி யாருமே சம்பளம் பேசிட்டு வேலை பார்க்கவில்லை. அவங்க கொடுத்ததை வாங்கிட்டோம். முதன் முதலா யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்குண்னுதான் நினைக்கிறேன். அப்புறம் ஆணிவேர் படத்தில் நடிச்ச மற்ற நடிகர்களின் நடிப்பை சொல்லியாகணும். கையில்லாதவங்க...ஊனமானவங்க...என்று ஏராளமானவர்கள் என்னோட ஒன்பது மாதம் இருந்தாங்க. நடிப்பை அவங்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.. நிகழ்வுகளை ஞாபகப்படுத்திவிட்டாலே போதும் சிறப்பாக செய்வார்கள். ஒரு அம்மாவை அழச்சொல்லி கேட்டேன். அவங்களால அழ முடியவில்லை காரணம் யுத்தத்தில் அவங்களோட மூன்று குழந்தைகளை பலிகொடுத்திருக்காங்க. அழுவதற்க்கு கண்ணீர் இல்லாத வற்றி வரண்டு போன வாழ்கை அவங்களோடது. யாழ்குடாவை சிங்கள இராணுவம் ஆக்ரமித்த போது மொத்தமாக ஐந்து இலட்சம் மக்கள் இரவோடு இரவாக கால்நடையாக யாழை விட்டு வெளியேறுகிற காட்சியை எடுக்க வேண்டும். அதை செய்யுங்கள் என்றதும் அவர்களாகவே வீட்டில் போய் பாத்திரபண்டங்கள், பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக புலம் பெயர்ந்தார்கள். அந்த மக்களையே இந்த படத்தில் நடிக்க வைத்ததுதான் இந்த படத்தோட சிறப்பு. தவிரவும் இது முதல் படம்.

இனி அவர்களிடமிருந்தெ படங்கள் வர வேண்டும். அதோட ஒரு முன்னோட்டமாகவும் இது இருக்கலாம் இல்லையா? என்னதான் இருந்தாலும் அவங்க அந்த மண்னில் வலிகளோடு வாழ்கிறவர்கள் அவங்கிட்டேயிருந்து இப்படியொரு படைப்பு வரும் போது அது இன்னும் சிறப்பாக இருக்கும்ணு நினைக்கிறேன்...


கேள்வி: இது யுத்தத்துக்கு எதிரான படமா?

பதில்: ஆமாம் பிரபாகரன் என்னிடம் சொன்ன போது ஒரு விஷயத்தை தெளிவாக சொன்னார். இந்த படம் முழுக்க முழுக்க ஈழத்தமிழர்கள் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டும் என்றார். அவங்களோட வேதனைகள் மட்டும் உலகத்துக்கு தெரியவேண்டும் என்றார். யாருக்கும் எந்த ஒரு அமைப்புக்கும் ஆதரவாகவோ எதிராகவோ இது இருக்க கூடாது என்றார். அதனாலதான் இந்த படத்தில் குழந்தைகளையும் பெண்களையும் மையப்படுத்தி கதை சொல்லியிருக்கோம். யுத்தத்தின் கொடூரங்களை, கந்தகம் ஈழத்தில் பிறக்கிற குழந்தைகளை கூட எப்படி ஊனமாக்கிவிடுகிறது என்பதை, அவங்களோட மனநிலையை எப்படி பாதிக்கிறது என்பதையும் சொல்லொயிருக்கிறோம். ஒரு விஷயம் தெரிந்தது இராணுவம் வெறும் குண்டு அல்லது ஆயுதங்களை மட்டுமல்ல பெண் உடலையும் தமிழருக்கெதிரான தாக்குதலுக்கு பயன் படுத்துகிறது. அதோட தொடர்ச்சிதான் பாலியல் வன்முறைகள், மாணவிகளை மனசளவில் கூச வைக்கிற சோதனைகள். இம்மாதிரி பிரச்சனைகளை பேசுவதாலும் இம்மக்களின் கோரிக்கை நியாமானது என்பதை படத்தை பார்க்கிறவர்களே புரிந்து கொள்வார்கள்.


கேள்வி: தமிழ் சினிமா என்றால் அது சென்னை கோடம்பாக்கத்தில் உற்பத்தியாகிற சினிமாதான். அந்த நிலையை இது எட்டுமா?வியாபார ரீதியாக வெற்றி பெற்றால்தானே அடுத்தடுத்து படங்கள் எடுக்க முடியும்?

பதில்: வியாபார நோக்கங்கள் எதுவும் இல்லாமல்தான் இந்த படத்தை எடுத்தோம். கோடம்பாக்கத்தில் ஒரு சினிமா எடுத்தால் நான்கு ஜெனரேட்டர் கேட்டாலும் கிடைக்கும் காரணம் அதோட பண புழக்கம் அப்படி. ஈழத்தில் போய் ஷ§ட் பண்னினப்போ ஒரு கிரேன். டிராலி, லைட்ஸ் என எதுவுமே கிடையாது. காலையில் சில மணிநேரம் மாலையில் சில மணிநேரம் என்றுதான் ஷ§ட் பண்னினோம். குறைந்த செலவில் ஒரு படத்தை பண்ணியதன் காரணம் அடுத்தடுத்து இதுமாதிரி முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றுதான். மற்றபடி நம்மூர்(கோடம்பாக்கம்)சினிமா மாதிரி வர்த்தக நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படமல்ல. இந்த படம் நன்றாக ஒடி வசூலானாலும் அதுவும் இப்படி ஒரு முயற்சிக்குத்தான் செலவிடப்படுமே தவிர வேறெதற்கும் அல்ல...கேள்வி: மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்',சந்தோஷ் சிவனின் 'டெரரிஸ்ட்' படமெல்லாம் அவங்களோட பிரச்சனைகளை பேசியிருக்கா? அது அவங்களுக்கு திருப்தியா இருக்கா...?

பதில்: ஒரு சினிமாவை எடுத்து ஈழத்தமிழர்களுக்கு நாம உதவாம இருந்தாலும் போதும். ஆனால் அவங்களை ஒரு சினிமா எடுத்து இழிவு படுத்த கூடாது. நான் பெயரை சொல்ல மாட்டேன். சில படங்கள் ஈழத்தமிழ் பெண் போராளிகளை இழிவு படுத்தியிருக்கிறதாகத்தான் அவங்க நினைக்கிறாங்க. ‘முக்கியமான ஒரு தலைவர் என்னிடம் சொன்னார் ‘‘எங்களோட பெண்கள் உங்களோட சினிமாவில் வருகிற மாதிரி நடந்துக்க மாட்டாங்க’’ -என்றார். நான் அங்கு தங்கியிருந்த நாட்களிலும் அவரோட வார்த்தைகள் உண்மை என்று தெரிந்தது.. காரணம் நான் சிலரிடம் இவளவு பிரச்சனை இருக்கே நீங்க ஏன் இந்த மண்ணை விட்டு போகக்கூடாது? என்று கேட்டேன். இன்ணைக்கு நாங்க கஷ்டப்படலாம் ஆனா என்றாவது ஒரு நாள் எங்களுக்கு இல்லாட்டியும் எங்களோட சந்ததிக்கு விடுதலை கிடைக்கும் அதனாலதான் என்கிறார்கள். ஈழத்தமிழர்கள் பற்றி படம் எடுப்பவர்கள் முதலில் அவங்களோட வாழ்க்கைப் பாடுகளை தெரிஞ்சிருக்கணும். ஏன் போராடுறாங்க அவங்க யாருங்கறெதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு கத்துக்கிட்டு படம் பண்ண வேண்டும். இல்லாட்டி சும்மா இருக்கணும்.


கேள்வி: உங்களோட அப்பா படத்தை பார்த்துட்டு என்ன சொன்னார்?

பதில்: படம் பணறதுக்கு முன்னாடியே அவர் சொன்னது. ஈரான் படங்கள் என்றால் கொரியாவின் படங்களென்றால் ஒரு தனித்தன்மை இருக்கும். அதுமாதிரி இது ஈழ மண்ணோட படம் அவங்களோட வாசனை என்னவோ அதன்படி பண்ணு. சராசரி தமிழ் சினிமா மாதிரி இதை பண்னிடாதே என்றார். எடுத்து முடிச்சிட்டு சிங்கப்பூரில் வைத்து அவருக்கு காட்டினேன் கொஞ்சம் யோசனைகள் சொன்னார். நல்லாயிருக்குண்னு பாராட்டினார்...


எழுதியவர்: டி. அருள் எழிலன்
நன்றி : சலனம்

5 comments:

அருட்பெருங்கோ said...

சிநேகிதி,

இந்த நேர்காணலை விகடனில் வாசித்ததாக நினைவு!

Anonymous said...

பல தடவைகள் வாசித்திருக்கேன்...சந்தோசமாக இருக்கும் எங்களை பற்றி புரிந்தவர் ஒருவர் பேசும் போது...

U.P.Tharsan said...

என்ன சினேகிதி புதுபுளக்கருக்கு மாறிய பின் நீங்களும் மாறிவிட்டீர்களா? பாட்டு, படித்த பேட்டிகள், ச்ச்ச்சும்மா எல்லாம் போட்டு அறுக்கிறீங்க.:-(( கூட பதிவு போட்டால் பரிசு ஏதாவது தருகிறார்களா? :-)) சினேகிதியுடைய தத்தக்க பித்தக்கவா இது!!!!!!! :-o

சினேகிதி said...

வாங்கோ அருட்பெருங்கோ....நான் சலனத்தில்தான் வாசித்தேன்.

தூயா எல்லாம் வந்திருக்கிறா அதிசயமா :-)

தர்சன் நான் மாறல :-) பாட்டு சும்மா...பேட்டி என்னைப்போல வாசிக்காத ஆக்களிருப்பினம் என்று நினைச்சுப் போட்டன் பட் என்னைத்தவிர எல்லாரும் வாசிச்சிருக்கிறீங்க போல சந்தோசம்.

சா தத்தக்க பித்தக்க இமேஜையே கெடுத்திட்டனோ...அடடா :-(

Kuppusamy Chellamuthu said...

Do you know where I can get to watch this movie? (sorry for English, not tamil font in this PC). Is it available on the web? I could not get in the town where I live.