Custom Search

Sunday, February 18, 2007

அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு!

வசந்த்தின் இசையில் சுஜீத் மற்றும் ஸ்ரெபியா டன்ஜா ஆகியோரின் குரலில் வெளிவந்திருக்கும் இந்தப்பாடலை எழுதியவரும் சுஜீத் தான். சந்தூரின் உதவியுடன் லண்டனில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது இந்தப்பாடல்.

சுஜீத்தின் சிங்கிள் என்ற அல்பத்தில் இடம்பெற்ற பாடல்களை நீங்கள் ஏற்கனவே சயந்தன் அண்ணாவின் சுஜீத்திடுனான நேர்காணலின் மூலம் அறிந்திருப்பீர்கள்.இன்று கூட வசந்தன் அண்ணா சுஜீத்தின் அடுத்த அல்பத்தில் இடம்பெறுகின்ற ‘விடுதலை” என்ற பாடலின் ஒளிப்பதிவை வசந்தம் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார்.

ஒருதடவை பார்த்தபோதே "இது கதையல்ல நியம்" என்ற இந்தப்பாடல்என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.பாடலைப் பார்க்கும்போது மலேசியத்திரைப்படமான “ஆண்டாள்” கண்முன்னே வந்து போனது.மற்றும் கெல்லி கிளார்க்ஸனின் பாடலொன்று கூட நினைவுக்கு வந்தது.

பாடலாக்கப்பட்ட விதம் காட்சியமைப்புகள் என எல்லாமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.புலம்பெயர் நாடுகளில் பெற்றோர்கள் வேலை வேலை என்று ஓடியோடி யாருக்காக உழைக்கிறோம் என நினைத்து உழைக்கிறார்களோ கடைசியில் அந்தப்பிள்ளைகளின் வாழ்க்கையில் அக்கறை காட்டாமல் அவர்களைப் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஏங்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையைத்தான் இந்தப்பாடலில் சொல்லியிருக்கிறார்கள்.சிறுமி அஞ்சு வேலைக்குச் செல்லும் நேரம் தவிர வீட்டில் ஓய்வெடுக்கும் தந்தையிடமும் சின்னத்திரைக்கிரையாகிப்போன தாயிடமும் பாசத்துக்காக ஏங்கி அது கிடைக்காத பட்சத்தில் நல்ல நண்பர்களைத் தேடுகிறாள் அதுவும் அவளுக்குக் கைகூடவில்லை.வருடங்கள் சில ஆனதும் அன்பு காட்டுமொருவனிடம் காதல்கொண்டு வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்கிறாள்.ஓரு வருடத்தில் தாயுமாகிறாள்.காதல் வாழ்க்கை சலித்து இருவரும் பிரிகிறார்கள்.கடைசியில் பிள்ளையுடன் நேரம் செலவவழித்து வேலையும் போனபின்னர் கடையில் திருடுகிறாள்.மானமும் போய் பிள்ளைளையும் அரசினர் தூக்கிச்செல்ல போதைக்கடிமையாகிப் பின்னர் போறவை வாறவையுடனும் இரவில் திரிய வேண்டிய நிலமைக்குத்தள்ளப்பட்டு வாழப்பிடிக்காமல் இறந்து போகிறாள்.

இது வெறும் கதையல்ல புலம்பெயர் நாடுகளில் பல தமிழ் இளையோரின் உண்மைக்கதை.பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான்.அம்மா அப்பாவிடம் இருந்து கிடைக்கவேண்டிய நியாயமான அன்பு கிடைக்காமல் ஏங்கி ஏங்கியே ஒருநாள் மாண்டு போகிறார்கள்.ஆனால் வெளியில தெரியிற உண்மை??? அந்தப்பெடியன் காங்ஸராம்.அந்தப்பெட்டை பாரில வேலை; டான்ஸ் ஆடுறளாம்.பெடியங்களோட திரியிறாளாம்.கதைக்க நல்லாயிருக்கும்.நீங்கள் குடுக்க வேண்டிய அன்பை அவர்களுக்குக் குடுத்தா அவர்கள் ஏன் அதை வெளியில் தேடிப்போகிறார்கள்.

ம் நான் எங்கயோ தொடங்கி எங்கயோ போயிட்டன்.பாடல்வரிகளைக் கீழே தந்துள்ளேன்.ஓரிரு சொற்கள் விளங்கவில்லை.பிழையிருப்பின் அறியத்தாருங்கள்.


இது கதையல்ல நியம்! புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!

அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு
ஆகவில்லை இன்னும் பதினைஞ்சு
கேட்டது அவள் பாசம் அன்பாய்ச் சின்ன நேசம்
கிடைக்கலை பாசம் நேசம் வாழ்க்கையாகிப் போனதடா வேசம்
அப்பா அம்மா அவளில் காட்டவில்லை நேசம்
கடையில பணத்துக்கா வாங்கலாம் பாசம்?
அப்பா என்றும் வேலை வரவில்லை காலை மாலை
வந்தால் கூட தூக்கம் அஞ்சு கண்ணில் ஏக்கம்
அப்பா என்னைப் பாருங்கோ அஞ்சு என்று கொஞ்சுங்கோ
அம்மா அம்மா சொல்லுங்கோ அப்பாகிட்டச் சொல்லுங்கோ
அம்மா கண்ணில் கவலை காரணம் பிஞ்சு அஞ்சு இல்லை
அவள் முன்னே சின்னத்திரை அம்மா சின்னத்திரைக்கிரை!
அய்யோ பிஞ்சு பாவம் ஆசை ---- தாகம்
புலம்பெயர் நாட்டிலில்லை ஆரிட்டைத் தேடிப்போகும்

கதையல்ல நியம்! இப் புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!
பிஞ்சு அஞ்சு தனியானாள் பாசத்தைத் தேடிப்போனாள்
பாசம் கிடைக்குமா நேசம் கிடைக்குமா
தனியே அழுகிறாள்!

(இசை)

சொந்த நாடு விட்டு நாடு வந்தாள்
வீட்டில் அன்பிழந்தாள்
------ வாடுகிறாள் நண்பனைத் தேடுகிறாள்
அப்பாவும் மாறவில்லை அம்மாவும் மீளவில்லை
வருடங்கள் ஓடியது வயசும் ஓடியது
வீட்டிலே சேர்ந்திருந்தும் தனிமை வாட்டியது
நண்பர்கள் சேரவில்லை சேர்ந்தவர் சரியில்லை
நல்லவர் தேடிச்செல்லும் வழியும் தெரியவில்லை
என்ன செய்வாள் அஞ்சு இன்னுமவள் பிஞ்சு
அன்பு வந்து போச்சு காதல் என்று பேச்சு
கண்டவுடன் காதல் வீட்டுக்கது மோதல்
வீட்டைவிட்டுப் பிரிந்து குடும்பம் தனியானாள்
வருடமும் போக குழந்தைக்குத்தாயானாள்
சில காலம் போச்சுச் சிக்கல்கள் உருவாச்சு
அன்பு தந்த காதல் எங்கோ ஓடிப்போச்சு
பாசம் வற்றியாச்சு சண்டை முற்றிப்போச்சு
மணவாழ்க்கை முறிந்து உறவு பிரிந்தாச்சு
கைகளிலே மழலை கண்களில் வலி கண்ணில் மழை.

கதையல்ல நியம! புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!
அஞ்சு அவள் தனியானாள் குழந்தை சுமையானாள்
என்ன செய்வாளோ???

(இசை)

அஞ்சோ இன்னும் பிஞ்சு அவளுக்கோர் குஞ்சு
பிள்ளை தந்த பாசம் ஓடிச்சு சில மாசம்
பிள்ளையோட கொஞ்சி கொஞ்சி நேரம் செலவிட
வேலைக்கு நேரம்போச்சு வேலையே ஒருநாள் போச்சு
கைகளில் காசு இல்லை உதவ யாரும் இல்லை
செய்வது என்னவென்று அவளுக்குப் புரியவில்லை
கடையிலே களவெடுத்து மரியாதை மீளவில்லை
அஞ்சு கதை வெளியாச்சு ஊர் முழுக்க இது பேச்சு
அரசுக்கும் கதை போச்சு அஞ்சு பிள்ளை பறிபோச்சு
மறுபடி தெருவில ஊர் சனம் சேரவில்லை
பிள்ளையும் போனதால உயிரில் ஜீவனில்லை
அஞ்சு தடம்புரண்டு போதைக்கடிமையானாள்
வந்தவை போறவையோட ராவில் சுத்தலானாள்
அஞ்சு வாழ்க்கை மாறிப்போச்சு மானம் மலையேறிப்போச்சு

என்ன செய்வாள் அஞ்சு இன்னுமவள் பிஞ்சு
என்ன செய்தும் முடியேல்ல பாசம் நேசம் கிடைக்கேல்ல
கண்ணாடி முன்னால நின்று இருந்தென்ன பயன்?
வாழ்ந்தென்ன பயன்? கேட்க கேள்விக்குப் பதிலில்லை
வாழ்வை முடிப்பதில் பிழையில்லை கதறினாள் அஞ்சு
அவள் குடிக்கிறாள் நஞ்சு!
வாழும்போது உதவாதவர் சாகும்போது தடுக்கிறார்
அவளையள்ளிக்கொண்டு வைத்தியரிடம் சேர்க்கிறார்
அஞ்சு அவள் விழி திறக்கப் பிள்ளை நிற்கக் காண்கிறாள்
ஐயொ என்னிடம் வருமோ என்று விழியிறுக்கி மூடுகிறாள்
உயிர் துறக்க மூடுகிறாள் !

(இசை)


இது கதையல்ல நியம! புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!

அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு.
21 comments:

Prince Ennares Periyar.S said...

நேற்றே எனக்கு மின்னஞ்சல் வந்தது பார்த்தேன். உண்மைகள் சுடும்..மிகவும் சுட்டது.
"அவள் பெயர் அஞ்சு..சின்னஞ்சிறு பிஞ்சு"

சினேகிதி said...

வணக்கம் பிறின்ஸ்.முதல் தடவையாக வந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜி said...

இந்தப் பாடலை நான் பதிவிடணும்னு நெனச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள முந்திக்கிட்டீங்க. இருந்தாலும் நான் போடுவேன் :)))

சினேகிதி said...

\\இந்தப் பாடலை நான் பதிவிடணும்னு நெனச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள முந்திக்கிட்டீங்க. இருந்தாலும் நான் போடுவேன் :))) \\

வாங்க ஜி.உங்களுடைய பார்வை வித்தியாசமாக இருக்கலாம்தானே.நீங்களும் இந்தப்பாடலைப் பதிவிடுங்க நான் வந்து பார்க்கிறன் :-)

Anonymous said...

உண்மையை வலியோடு சொல்லியிருக்கு இந்த பட்டு, ஆனாலும் வேலை வேலை என்றிருக்கும் அப்பாக்களுக்கும்ம, சீரியலே கதி என்றிருக்கும் அம்மாக்களுக்கும் இந்தமாதிரி பட்டுக்கள் பார்க்க நேரம் ஏது?

கானா பிரபா said...

//அப்பா அம்மா அவளில் காட்டவில்லை நேசம்
கடையில பணத்துக்கா வாங்கலாம் பாசம்?//

அவையிக்கு "பாசம்" மெகா சீரியல் பார்க்கவே நேரம்போகுது , இதுக்குள்ள என்னென்டு பிள்ளையைப் பார்க்கிறது.

நல்ல பாடல், பதிவுக்கு நன்றி. சுஜித் ஜீ நல்லதொரு கலைஞர்

சினேகிதி said...

\\உண்மையை வலியோடு சொல்லியிருக்கு இந்த பட்டு, ஆனாலும் வேலை வேலை என்றிருக்கும் அப்பாக்களுக்கும்ம, சீரியலே கதி என்றிருக்கும் அம்மாக்களுக்கும் இந்தமாதிரி பட்டுக்கள் பார்க்க நேரம் ஏது? \\

வாங்க நர்மதா!
உங்களுக்குத்தெரிஞ்ச அம்மா அப்பாக்களை உக்கார வைச்சு எப்பிடியாவது இந்தப் பாட்டை பார்க்க வைச்சிடுங்க :-)

சினேகிதி said...

\\அவையிக்கு "பாசம்" மெகா சீரியல் பார்க்கவே நேரம்போகுது , இதுக்குள்ள என்னென்டு பிள்ளையைப் பார்க்கிறது. \\

பிரபாண்ணா ..பாசம் என்றொரு சீரியல் இருக்கா என்ன?

செல்வநாயகி said...

ஒருநிமிடம் உலுக்கிவிட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி.

சினேகிதி said...

\\ஒருநிமிடம் உலுக்கிவிட்டது.\\

உண்மை அப்பிடித்தானேயிருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இலக்கியன் said...

உண்மைகளை வலியோடு சொல்லும் பாடல் பதிவிட்ட சிநேகிதிக்கு நன்றி

Anonymous said...

உண்மைகளை வலியோடு சொல்லும் பாடல் பதிவிட்ட சிநேகிதிக்கு நன்றி

வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி உங்கள் அறிமுகத்துக்கு நன்றி. உண்மைகள் எல்லா நேரத்திலையும் சந்தோசத்தை தராது
அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம்.

மாசிலா said...

வணக்கம் சிநேகிதி.
சென்ற முறை இந்த பதிவை படித்த போதே என் கருத்துகளை சொல்ல வேண்டும் என நினைத்தேன். அனாலும் கொஞ்சம் தயங்கினேன். இருந்தாலும் இப்போது இதோ : ஒரு தகப்பன் என்கிற கோணத்தில். பெற்றோர்களை இப்படி பொதுப்படையாக திறமை அற்றவர்கள் என சித்தரித்து இருப்பது என் மனதை கொஞ்சம் வலிக்கவே செய்தது. கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், நாடு, பாரம்பரியம் என இன்னும் பலவான வாழ்க்கை அடையாளங்கள், வழி காட்டிகள் ஆகியவைகளை தொலைத்துவிட்டு கண்காணா மண்ணில். வேரினத்து மக்களுடன், ஏதெதோ மொழிகளில் பேசிக்கொண்டு போகும் இடம் தெரியாமல், வாழும் இடமும் தெரியாமல் அவர்களும் கடின வாழ்க்கை வாழ்பவர்கள்தான் என்பதை புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கலாச்சார, பண்பாட்டு இடர்பாட்டினால் (cultural clash) உண்டான விணைகள் இவை. உங்கள் பதிவின் 'அஞ்சு' எந்த அளவுக்கு பாதிக்க பட்டிருக்கிறாளோ, அதைவிட அதிகமாகவே மனதளவில் பெற்றோர்களும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு தமது மண்ணின், மூதாதையர்களின் வாழ்க்கை முறைகள், கலாச்சாரம், பண்பாடு, மொழி என போன்ற கல்விகளை கற்றுக்கொடுக்க முடியாமல், அந்நியனது மரபுகளை கற்கும தம் பிள்ளைகளை நினைத்து நிறைய குடும்பங்களில் பெற்றோர்கள் வேதனையில் அமைதியாக கருகுவதும் உண்டு. தன் சொந்த நாடில், மண்ணில் இல்லாமல் இப்படி அந்நியனாய் பிள்ளைகள் எதிரில் காட்சி அளிப்பது ஒன்றும் பெருமை தரும் விடயம் அல்ல. இப்படி இன்னும் நிறைய அடுக்கி கொண்டே போகலாம். இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். மீதம் உங்கள் கருத்து கண்டு.
அன்புடன் மாசிலா.

சினேகிதி said...

வணக்கம் மாசிலா
இம்முறையாவது தயங்காமல் உங்கள் கருத்தை முன்வைத்ததற்கு நன்றிகள்!

பெற்றோர்களைத் திறமையற்றவர் என்று சொன்னதாக நான் கருதவில்லை.பெற்றோர்கள் திறமையற்றவராக இருந்திருந்தால் இப்படி ஒரு அந்நிய நாட்டில் தாங்களும் குடியேறித் தங்கள் குழந்தைகளையும் ஆளாக்க நினைத்தல் என்பது முடியாத காரியம். நீங்கள் சொன்ன மாதிரி பெற்றோருக்கும் தங்கள் விழுமியங்களையிழந்து வாழ்கிற மனவுளைச்சல் இருக்கத்தான் செய்கிறது ஆனால் அதை அவர்கள் போக்கிக்கொள்ள தேடும் வழிதான் பிள்ளைகளை இப்படி பெற்றோரிருந்தும் அநாதையாக்கி விடுகிறது.அப்பாக்குப் பொருளாதாரச்சிக்கல் அதால எந்நேரமும் வேலை வேலை என்று திரிவதால் குழந்தையைக் கொஞ்சக்கூட நேரமில்லை.

அம்மாக்கு ஊரில இருந்த மாதிரி ஊர் முழுக்கச் சொந்தக்காரர் தெரிந்தவர்கள் என ஆக்களில்லை அதால அம்மாக்குத் தொலைக்காட்சிதான் எல்லாம் ஆனால் நாளடைவிலை "செல்விக்கு என்ன நடக்கும்" "அபிக்கு என்ன நடக்கும்" என்ற நினைப்பிலையே அஞ்சு போன்ற பிஞ்சுகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.

பிள்ளைகள் தங்கள் மூதாதையர்களின் கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்ளமாட்டோம் அடம் பிடிக்கிறார்கள் என நினைக்கிறீர்கிளா?? எந்தெந்த இடத்தில எப்பிடியான பண்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் எந்த மொழியைப் பேச வேண்டும் என்று சின்ன வயசில் இருந்தே பழக்க வேண்டும்.அதை விட்டிட்டுப் பிள்ளைகள் பருவ வயதுக்கு வந்த பின்னர்தான் பண்பாடு சொல்லிக்கொடுக்க வேணும் என்ற நினைப்புச் சில பெற்றோருக்கு வரும்.
தன் வயதையொத்த பிள்ளைகளுடன் இருக்கும்போது அந்த வயதுக்குரிய கதையை செய்கைகளைத்தான் பிள்ளைகள் செய்வார்கள் ஆனால் அதே பிள்ளைகள் பாட்டி பாட்டனுடன் அழகாகத் தமிழில் அன்பாகக் கதைப்பதில்லையா? அவர்களுடன் மரியாதையாகப் பழகுவதில்லையா?

பிள்ளைகளுக்காகத்தான் நிறையப்பெற்றோர் தங்களுடைய பல சுகங்களைத் தியாகம் செய்கிறார்கள் என்பதுண்மைதான் ஆனால் அதற்காக அடிப்படையன்புக்காகக் குழந்தைகளை ஏங்க வைத்துவிட்டுப்பின்னர் வருத்தப்பட்டுப் பிரயோசனமில்லை.குழந்தைகளுடைய சின்னச் சின்ன ஆசைகளைப் ப+ர்த்தி செய்யாமல் அவர்களுடன் போதியளவு நேரம் செலுத்தாவிட்டால் அவர்களுடைய மனதில் அம்மா அப்பா என்ற நினைப்பே ஆட்டம் காணத்தொடங்கும்.அதை நீங்கள் இடையில் புரிந்துகொண்டு வேலையை விட்டுவிட்டு நாள் கணக்காக அவர்களுடன் செலவழித்தாலும் அந்த ஏக்கம் வடு வாழ்நாள் முழுக்க இருக்கும்.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முதல் " தற்குறி " என்ற சொல்லைப் பயன்படுத்தி யாரோ ஒரு பெற்றோரைப் புண்படுத்தியதற்காக வருத்தப்பட்டேன் நான் அப்படி இனிமேலும் நடக்க்கக்கூடாது எனமே மாசிலா உங்களுடைய மிச்சக் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்.

சினேகிதி said...

விஜே இலக்கியன் பெயர் குறிப்பிடாத நண்பர் மூவரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Dubukku said...

நெஞ்சைத் தொட்டது பாடல்.
இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/02/25/anju/

சினேகிதி said...

\\நெஞ்சைத் தொட்டது பாடல்.
இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/02/25/anju/ \\

oh..nanri dubukku.

வைசா said...

இந்தப் பதிவு எப்படியோ இப்போதுதான் என் கண்ணில் பட்டது. பிள்ளைகளோடு நல்ல நண்பர்களாக இல்லாமல் அவர்களுக்கென்று தமது நேரத்தை ஒதுக்காமல் பணத்தை சம்பாதித்துத்தான் என்ன பயன்?

நல்ல பதிவு, சிநேகிதி.

வைசா

மாசிலா said...

வணக்கம் சிநேகிதி,
எனது எதிர்கருத்தை தெரிவிக்க உள்ளே வரலாமா?

சினேகிதி said...

\\இந்தப் பதிவு எப்படியோ இப்போதுதான் என் கண்ணில் பட்டது. பிள்ளைகளோடு நல்ல நண்பர்களாக இல்லாமல் அவர்களுக்கென்று தமது நேரத்தை ஒதுக்காமல் பணத்தை சம்பாதித்துத்தான் என்ன பயன்?

நல்ல பதிவு, சிநேகிதி.\\

நன்றி வைசா!

\\வணக்கம் சிநேகிதி,
எனது எதிர்கருத்தை தெரிவிக்க உள்ளே வரலாமா? \\

மாசிலா உங்கட பதிலை நான் எப்பவோ எதிர்பார்த்தேன்.