எழுவோம்! நிமிர்வோம்!
ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளையோரின் கையில் என்பதை நன்குணர்ந்த நம் சகோதரர்கள் இராணுவச்சாவடிகளைத் தாண்டிச்சென்று குண்டுச்சத்தங்களுக்கிடையில் கூட நம்பிக்கையுடன் கல்வி கற்றுத் தேர்ச்சியடைகிறார்கள்.பள்ளிக்கூடங்கள் அகதி முகாகமாகவும் இராணுவ முகங்களாக மாறியபோதும் பாடசாலைக்கட்டிடங்கள் படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்கள் குண்டு வைத்துப் பிச்சு எறியப்பட்டாலும் கூட தமது அயராத முயற்சியாலும் ஆர்வத்தாலும் கல்வி தமிழர்களுக்கு எவ்வளவு முக்கியமானதென்பதை உணர்ந்து நம் சகோதரர்கள் தேர்வுக்குத் தம்மைத் தகுந்த முறையில் தயார்படுத்துவார்கள். ஆனலும் தேர்வு நேரங்களில் தலைதூக்கும் போராட்டச்சிக்கல்களால் தேர்வெழுத முடியாமல் நொந்து போகிறார்கள் சில சகோதரர்கள்.இவ்வாறெல்லாம் தம் தம்பி தங்கைகளின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்படக்கூடாதென்று நமக்காகப் போராடினார்கள் நம் மூத்த சகோதரர்கள்.அவ்வாறு போராடி நமக்காக உயிர்த்தியாகம் செய்த முதல் மாணவரான பொன்னுத்துரை சிவகுமாரன் சயனைட் அருந்தி உயிர் நீத்த நாளைத்தான் நாம் மாணவர் எழுச்சி நாளாக இன்று நினைவுகூர்கின்றோம்.
"கல்வியும் எங்கள் மூலதனம் அதில் கத்தி வைக்கிறது ஆளுமினம்....புத்தகத்தாள்கள் எதிரில் விரிந்தன செத்தவர் முகமே அருகில் தெரிந்தன போருக்குப் படிப்பா படித்திடப்போரா கேள்விகள் " இந்தப் பாடல் வரிகள் 1994ல் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வெளியிடப்பட்ட "விடியலைத்தேடும் பறவைகள்" என்ற இசைத்தட்டில் இடம்பெற்றிருந்தது.இப்பாடலில் குறிப்பிட்டபடி தரப்படுத்தல் மூலம் தங்கள் கல்வியில் ஆளுமினம் கத்தி வைத்ததைப் பொறுக்காது பொங்கியெழுந்தவர்களால் 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.யாழ்.இந்துககல்லூரியில் வணிகத்துறையில் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்த சிவகுமாரண்ணாவும் 1971ம் ஆண்டு இந்த மாணவர் பேரைவையில் இணைந்துகொண்டார்.தரப்படுத்தல் போன்ற சிங்கள அரசின் அடக்கு முறைகள் மீதான மாணவரின் எதிர்ப்பைக் காட்டும்முகமாக உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் உள்ள திறந்தவெளியரங்கில் நடைபெற்ற ஒரு கலைநிகழ்ச்சியின் போது அப்போதைய துணைக்கலாச்சார அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறியின் மோட்டார் வண்டியை வெடிவைத்துத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் சிவகுமாரண்ணா.ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.அதுமட்டுமல்லாது அப்போதைய மேயர் அல்பிரட் துரையப்பாவின் காரை வெடித்துச் சிதற வைத்ததும் சிவகுமாரண்ணாவும் அவருடைய சகாக்களுமே.அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் எதிர்ப்பைக்காட்டவே இத்தயை ஆயுதப்போராட்டங்களில் ஈடுபடவேண்டிய தேவை அன்றைய மாணவர் அமைப்புக்கு இருந்திருக்கின்றது.போராட்ட முறையானது கொள்கைகளை நிலைநிறுத்த இலட்சியங்களை அடையப் பயன்படுத்தப்படும் வழியே தவிர போராட்ட முறையே கொள்கையாகாது என்பதை சிவகுமாரனண்ணாவே கூறியுள்ளார்.
சிவகுமாரனண்ணாவோடு அவருடைய கடைசிக்கணங்கள் வரை கூடவிருந்தவரும் இன்றைய எழுத்தாளருமான குரு.அரவிந்தன் அவர்கள் சிவகுமாரனண்ணாவைப்பற்றிச் சொல்லும் சேதிகள் பலவுள்ளன.1974ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் சிவகுமாரண்ணாவின் பங்களிப்பும் முக்கியமானது.இம்மாநாட்டில் தொண்டராகவிருந்த சிவகுமாரண்ணாவும் அவருடைய தோழர்களும் மாநாட்டின் இறுதிநாளில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நேரடியாகப்பார்த்தவர்கள்.அம்மக்கள் பரிதாபமாகக் கொல்லப்படுவதற்கு காரணகர்த்தாகவிருந்த அன்றைய உதவிப் பொலிஸ் அதிபர் சந்திரசேகராவிற்கு பாடம் கற்பிக்க சிவகுமாரனண்ணாவும் அவருடைய தோழர்கள் சிலரும் திட்டமிட்டார்கள் ஆனால் அந்தத்திட்டத்தில் அந்தப்பொலிஸ் அதிகாரி தப்பிவிட்டதால் சிவகுமாரண்ணாவும் அவர் சகாக்களும் தனிப்படையமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பொலிஸாரால் தேடப்பட்டனர். பொலிஸிடம் இருந்து தப்பிக்க சிவகுமாரன் அண்ணா மற்றும் அவருடைய சகாக்களான மகேந்திரன், யுவராசா, டேவிட் (கி.பி.அரவிந்தன்) ஆகிய நால்வரும் கோப்பாய் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் நீர்வேலியில் வைத்துப் பொதுமக்கள் இவர்களைக் கொள்ளைக்காரர் என நினைத்துத் துரத்த ஒருவாறு அவர்களிடம் தாங்கள் யாரென்பதைப் புரியவைத்துத் தொடர்ந்து முன்னேறிச்செல்லும்போது பொலிஸ் சுற்றிவளைப்புக்கு ஆளாகிவிடுகின்றனர்.நால்வரும் நான்கு திசையில் சிதறி ஓடியவேளையில் டேவிட்டைத்தவிர மற்றைய மூவரும் பொலிஸின் கையில் சிக்கிவிட சிவக்குமாரண் அண்ணா சயனைட் அருந்திவிடுகிறார்.மற்றவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட சிவக்குமாரனண்ணா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்.சிகிச்சை பலனளிக்காமல் சிவகுமாரண்ணா மருத்துவமனையிலேயே உயிர்துறந்தார்.
தமிழ் மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதம் ஏந்திய விடுதலைப்போரே உகந்த வழியெனக்கண்டு அரசாங்கம் மீதான எதிர்ப்பைப் பல இடங்களில் துணிவோடு காட்டிக் கிட்டத்தட்ட மூன்றுவருடங்கள் சிறையில் கழித்த சிவகுமரானண்ணா 1974ம் ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி சயனைட் அருந்தி மகத்தான தன்னுயிரைத் தமிழ் மக்களுக்காக தியாகம் செய்தார்.அவர் வழி வந்த பல்லாயிரக்கணக்கான அக்காக்களினதும் அண்ணாக்களினதும் கனவு நினைவேற தொலைநோக்குப்பார்வையோடு இன்றுவரை போராடும் எம் சகோதரர்களுக்கு நாமும் தோள்கொடுக்க வேண்டும்.
தமிழீழத் தேசியத்தலைவர் கூட "'மனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது. ஆணிவேர் போன்றது. போரும் கல்வியும் இணைந்த ஒரு வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார். எனவே உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் மாணவர்களாகிய நாம் ஒன்றுகூடி உலகமக்களுக்கு எம்மீதான அரசின் அடக்குமுறையை எடுத்தியம்புவோம்.தொழில்நுட்பரீதியாக அறிவியல்ரீதியாக இன்னும் என்னென்ன வழிகளிலெல்லாம் எம்மால் தாயக விடிவுக்கு உதவ முடியுமோ அவ்வுதவிகள் எல்லாவற்றையும செய்வோமென்று இந்த மாணவர் எழுச்சி நாளில் மாணவர்கள் நாம் உறுதியெடுத்துக்கொள்வோம்.ஒன்று சேர்வோம்.எழுவோம்.நிமிர்வோம்.
1 comments:
Post a Comment