Custom Search

Monday, June 25, 2007

புதிர் மனிதர்கள்

போன வாரம் பேருந்தில் நடந்த இந்தச் சம்பவம் என்னை யோசிக்க வைத்தது.நீங்களும் இப்படியானவர்களை நிச்சயம் சந்தித்திருப்பீர்கள்.

எங்கள் பார்வைக்கு அந்த மனிதனின் செய்கைகள் பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தன.ஒருவேளை drugs அடிச்சிட்டு வந்திருக்கிறானோ என்றுகூட நான் நினைத்தேன்.இரவு பத்து மணிக்கு பேருந்தில் இருக்கிறவர்களின் காலைத் தட்டிவிட்டிட்டு நிலத்தில கிடக்கிற அழுக்குகளை வெறும் நகத்தால் சுரண்டி எடுத்து ஒரு இடத்தில் போட்டுச்சேர்க்கிறான்.பிறகு காற்சட்டைப்பொக்கற்றில கையை விட்டு வெறும் தண்ணிப்போத்தலை எடுத்து தண்ணி இருக்கிற மாதிரி பாவனை செய்து குடிக்கிறான்.சிகரட்டை எடுத்து பிச்சு பிச்சு தான் சேர்த்து வைச்ச அழுக்கு கும்பிக்கு மேல போடுறான்.பிறகு பக்கத்தில இருக்கிற ஆளிட்ட சிகரட் கேக்கிறான் அவர் தன்னட்ட சிகரெட் இல்லை என்று சொன்னதும் தன்னட்ட இருக்கிற மற்ற சிகரெட்டையும் பிச்சு பிச்சுப் போடுறான்.இவ்வளத்தையும் நான் அவனுக்குப்பின்னால இருக்கிற சீற்ல இருந்து பார்த்துக்கொண்டிருந்தனான் கொஞ்ச நேரத்தில அவன் எனக்குப் பக்கத்தில வந்திருந்துகொண்டு அந்த இடத்தில நிலத்தில இருக்கிற அழுக்கைச் சுரண்டத் தொடங்கிட்டான்.அவன் அங்கால இங்கால திரும்பிறதும் என் காலுக்குப் பக்கத்தில கையை விடுறதும் ஐயோ..எனக்குப் பயம் பிடிச்சிடுச்சு.அவன் ஒருக்கால் மற்றப்பக்கம் திரும்பினதும் என்னை விட்டாக்காணும் என்று நான் எழும்பிப்போய் ஒரு அன்ரிக்குப் பக்கத்தில போய் இருந்தன்.அவா சொன்னா பயப்பிடாத நானும் அவனுக்குப்பக்கத்தில இருந்திட்டுத்தான் எழும்பி வந்தனான்.அவன்ர செய்கைகள் எல்லாம் விசித்திரமாக்கிடக்கு.அவனுக்கு மூளைக்கோளாறோ தெரியேல்ல என்று.

கோடைக்கேற்றறதுபோல உடுப்பு போட்டிருக்கிறான்.ipod ல பாட்டுக்கேக்கிறான்.உடம்பு முழுக்க tatoo..பார்க்க நல்லாத்தானே இருக்கிறான்.ஒரே விசயத்தைத் திரும்ப திரும்ப செய்யுறான் ஒருவேளை Obsessive-Compulsive Disorder மாதிரி என்னவும் இருக்குமோ என்று நான் யோசிச்சுக்கொண்டிருக்கவே அவன்ர ஸ்ரொப் வந்திட்டுப்போல இறங்கிப்போட்டான்.கொஞ்ச நேரத்தில நாங்கள் இருந்த பக்கத்துக்கு வந்த டிரைவர் கேட்டா இங்க என்ன நடந்தது? நாங்கள் அவாக்கு விளக்கம் சொல்ல அவா சொன்னா அவன் இறங்கிப்போகேக்க தன்னட்ட "பஸ் சரியான ஊத்தையா இருக்கு ஒருக்கா கிளீன் பண்ணனும்" garageக்கொண்டு போங்கோ "என்று சொல்லிட்டுப் போறானாம்.அவனை என்னவோ நினச்சோம்....

Thursday, June 14, 2007

கண்டுபிடி கண்டுபிடி VIII

கண்டுபிடி VII க்குச் சரியான பதில்களைச்சொன்ன ரங்கநாதன் மைபிரன்ட் விஷ்ணுஅண்ணா விஜேக்குப் பாராட்டுக்கள்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்டுபிடி vIIIயோடு வந்திருக்கிறேன்.













Monday, June 11, 2007

நிமிர்வு 2007 ம் தாசீசியஸ் மாஸ்டருடனான சந்திப்பும்

தாசீசியஸ் மாஸ்டரை மாலை 4.30 க்கு நான் நந்தியா மற்றுமொரு நண்பனும் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம் ஆனால் லேற் கோச்சி ஒன்றால தாமதாகவே போய்ச்சேர்ந்தோம்.ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் ஏற்கனவே அ.மங்னை அவர்களின் நாடகப்பட்டறை நடந்துகொண்டிருந்தது.வேலை காரணமாக காலையில் நடந்த நாடகப்பட்டறைக்குப் போகமுடியவில்லை.அதே இடத்துக்கு தாசீசியஸ் மாஸ்டரைச் சந்திக்கச் சென்ற போது அங்கே மங்கையையும் பார்வதி மிஸ்சையும் கண்டு கதைத்தபோது சுமதி ரூபனைக் காணாதது நிம்மதியாக இருந்தது:-) கண்டிருந்தால் நாடகப்பட்டறைக்குப் போகாமல் விட்ட குற்ற உணர்வு இன்னும் அதிகமாகியிருக்கும்.

மாஸ்டர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.தன் கல்வி தொழில்முறைகளைப் பற்றி நிறையப்பேசினார்.ஆழமான தெளிவான தங்குதடையற்ற பேச்சு.மாஸ'டரைப் பற்றித் தெரியாதவர்கள் பிரபாண்ணாவின் " தாசீசியஸ் பேசுகிறார்...! " ஐ வாசியுங்கோ சரியா.எங்கள் மூவரைப்பற்றியும் கேட்டறிந்துகொண்டு தன் நோட்புக்கில் எழுதி வைத்துக்கொண்டார்.பின்னர் தமிழ்க்குடிலைப்பற்றிய பேச்செழுந்தது.நேரமின்மையால் தமிழ்க்குடிலில் நேரம் செலவழிக்க முடியவில்லை என்றும் தமிழ்க்குடிலை ஒரு 24 மணித்தியால வானொலியாகத் தொடங்கி நியுஸிலான்ட் அவுஸ்ரேலியா தொடக்கம் கனடா வரை தமிழர்கள் செறிந்து வாழும் பாகங்களிலிருந்தும் பலர் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் செயற்திட்டத்தைப்பற்றி்ச் சொன்னார்.கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் ஆகியிருக்கும் தேத்தண்ணி குடிக்ப்போவமா என்றார்.இல்லை நாங்கள்தான் உங்களுக்குத் தேத்தண்ணி வாங்கிக்கொண்டு வந்திருக்கோணும் என்றோம் " ஓ அப்ப கொண்டு வந்தனீங்களா எங்க தாங்கோ தாங்கோ " என்றார் நகைச்சுவையோடு. நாங்கள் நிமிர்வு 2007க்குப் போகவேண்டியிருந்ததால் விடைபெற்றுக்கொண்டோம்.

நிமிர்வு 2007

செல்வி சுபாங்கியும் செல்வன் சிறீயும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வளங்கினார்கள். பொன்.சிவகுமார் அண்ணாவின் நினைவுநாளான மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு நடந்த நிமிர்வு 2007 தமிழ் இளையோரமைப்பைச் சேர்ந்த சர்மி கனடாக் கொடியை ஏற்றி வைக்க ஆரம்பமானது.மேஜர் நித்திலாக்காவின் தாயார் திருமதி.செல்வநாயகம் அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து சிவகுமாரண்ணாவின் படத்திற்கு அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.தொடர்ந்தது அகவணக்கம். அடுத்து செல்வி நிவேதா இராமலிங்கம் " தாய் மண்ணே உனக்கு முதல் வணக்கம் " என்ற பாடலுக்கு வரவேற்பு நடனமாடினார்.தொடர்நது தமிழிளையோரமைப்பைச் சேர்ந்த ஜெனிற் மாணவர் எழுச்சி நாளைப்பற்றிய உரையில் ஆளுமினம் தமிழர்களின் கல்வியில் கத்தி வைத்ததில் தொடங்கி மாணவர்கள் அனைவரும் எமது பிரச்சனைகளை வெளியுலகுக்கு ஓங்கி உரைக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையுட்பட மாணவர் எழுச்சிநாள் பற்றிய பலவிடயங்களைக் கூறிச்சென்றார்.

அடுத்து இடம்பெற்ற நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்தது நிவேதாவின் மாணவர்கள் வழங்கிய "ஆடிப்பாடுவோம் கவலைகள் மறந்தாச்சு புதுக்கவிதையும் பிறந்தாச்சு" என்ற பாடலுக்கான கோலாட்டம்.சிறுமிகள் நன்றாகவே பழக்கியெடுத்திருக்கிறார் நிவேதா.இரண்டு சிறுமிகள் இடையில் தடுமாறினாலும் சமாளித்துக்கொண்டு நல்லதொரு நடன நிகழ்வைத்தந்திருந்தார்கள்.அரங்கு நிறைந்து இருக்கைகள் இல்லாமல் நின்றுகொண்டிருந்தவர்கள் என அரங்கம் நிறைந்த கைதட்டலைப் பெற்றுக்கொண்டார்கள் சிறுமிகள். இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெற்ற போதிலும் எல்லா நிகழ்வுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.என்னைக் கவர்ந் இன்னும் மூன்று நிகழ்வுகள் இளையோரமைப்பினர் வழங்கிய "நிஜம்" என்ற நாடகம். கலாநிதி குலமோகன் ஆசரியரின் மாணவர்கள் வழங்கி "அறுவடை " மற்றும் U OF T மாணவர்கள் வழங்கிய " சிதைப்புக்கள்" என்ற Monologue.

"நிஜம்" யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படும் இன்னல்களைக் கருவாகக்கொண்டது.சமூக நிகழ்வுகளில் அக்கறை கொண்ட திறமையான மாணவர்களின் வாழ்க்கை இராணுவத்தினரால் எப்படி சீரழிக்கப்படுகிறதென்பதை இந்த நாடகத்தின் மூலம் காட்டியிருந்தார்கள்.அப்பா இல்லாத குடும்பத்தை ரியூசன் குடுத்து அந்தப் பணத்தில் தானும் படித்துக்குடும்பத்தையும் காப்பாற்றும் மாணவன் சிவா தன் கண்முன்னே தன் நண்பன் வெள்ளை வானில் கடத்தப்படுவதைப் பார்த்துக்கொதித்துப் போய் அடுத்த முறை இராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையும்போது அவர்களை எதிர்க்கிறான்.இன்னொரு நண்பன் இராணுவத்தினரைப் பார்த்துக் கூழை கும்பிடு போடுகிறான்.அதற்கு சிவா "எங்கட உரிமையை நாங்கள் கேக்க நீ ஏன்டா பூஞ்சிப் பூஞ்சி அவங்களிட்டப் போறாய்" என்று கேப்பான் அதற்கு நண்பனோ "டேய் நாங்கள் இப்பிடியே இருந்தா எப்படா graduate பண்றது " என்று ஆதங்கப்படுவான். அடுத்த காட்சியில் சிவாக்குப்பிடித்த மீன் குழம்பு சமைத்து வைத்துக்கொண்டு காவலிருக்கும் அம்மாவும் படித்துக்கொண்டிருக்கும் தங்கையும்.சிவா கல்லூரியால் வந்த கோலத்தைப் பார்த்துத்தாய் சண்டை போடுவாள் "நீ ஏன் அவங்கட வம்புக்குப் போறாய்? எனக்கு இருக்கிறது நீ ஒரு பிள்ளை " அதற்கு சிவாவோ " அம்மா இஞ்ச வாண எல்லாரும் எனக்கொரு பிள்ளை என்று அழுதா அப்ப ஆர்தாண இவங்களைத் தட்டிக்கேட்கிறது : நீ வீட்டைப் பார்க்கிறாய் நான் நாட்டை நினைக்கிறான்" என்பான்.சிவா சாப்பிட அமரும்போது இராணுவத்தினர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாய் தங்கையின் கண்முன்னே சிவாவைக்கொல்ல தாயாக நடித்திருந்த சுமி ஒரு கத்து கத்தினா ஐயொ எனக்குக் கண்ணால தண்ணி வந்திட்டு அப்பிடியொரு நடிப்பு. பல்கழைக்கழக மாணவர்களுடைய பெயர் விரிவுரையாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் வளாகச்சுவரில் ஒட்டப்பட்டது பாடசாலை மாணவி இராணுவத்தினரால் கடத்தப்பட்டது என அனைத்து நிகழ்வுகளையும் பிரதிபலித்த இந்த " நிஜம் " சிறப்பான நெறியாள்கையுடன் அரங்கேறப்பட்டிருந்தது. நாடகத்தின் முடிவில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட கடத்தப்பட்வர்களின் பெயர் தாங்கிய அட்டைகளை ஏந்திய படி அனைவரும் நிற்க அவர்கள் கொல்லப்பட்ட கடத்தப்பட்ட விபரங்கள் வாசிக்கப்பட்டது.இந்த நாடகத்தின் சிறப்பு என்னவெனில் நாடகம் முழுதும் ஆங்கிலத்தில் Narrator ஒருவர் திரைக்குப்பின்னால் நின்று வாசித்ததுதான்.நிமிர்வுக்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் சொல்ல வந்த செய்தி நிச்சயமாகச் சென்றடைந்திருக்கும். இந்த நாடகத்தை இன்னும் பல சர்வதேச மேடைகளில் ஏற்றவேண்டும்."கொண்டாட்டம்" போன்ற பல்கலாச்சார மக்கள் கூடும் நிகழ்வுகளில் எல்லாம் இப்படியான நாடகங்களுக்கு இடம்கொடுத்தால் எம் பிரச்சனைகளை இலகுவாக மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

"அறுவடை "

நகைச்சுவையாகப் பலசேதிகளைச் சொல்லிற்று.

இரண்டு வயோதிபர்களின் உரையாடலோடு தொடங்கியது.அவர்கள் 'Donut' ஐ சீனிவடை என்று கதைத்ததை நினைத்தால் இப்பவும் சிரிப்பு வருது.அறுவடை என்று எழுதியதை இங்கு தமிழ் படிக்கும் ஒரு சிறுவனை வாசிக்கச்சொல்வார்கள் அவன் அருவடை அறுவாடை என்று திக்குவான் அப்பொழுது அங்கு வரும் ஒரு அக்கா முத்தமிழைப் பற்றி அழகாகச்சொல்வார் அப்ப அங்கு வரும் இன்னொரு சிறுவனும் சேர்ந்துகொண்டு சும்மா பிலம் காட்டதயுங்கோ எங்களுக்கும் செந்தமிழ் தெரியும் இப்ப பாருங்கோ " நீ முத்தமொன்று குடுத்தால் முத்தமிழ் வெக்கப்பட்டுச் சிரித்தால் செந்தமிழ் பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்" என்று டான்ஸ் ஆடுவாங்கள் 2 பேரும். அந்த அக்கா சொன்ன வரிகளில் ஒன்று "எங்கள் வயலில் இப்பொழுது விதைக்பட்டிருப்பது நெல்மணிகளல்ல எம்முறவுகள்".அறுவடையின் இடையில் இரண்டு நடனமும் இடம்பெற்து" ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை" மற்றும் " ஆண்டாண்டு காலமதாய் நாமாண்டு வந்த பூமி ".

அடுத்து U OF T மாணவர்கள் வழங்கிய "சிதைப்புக்கள்". கல்லறையிலிருந்து எழுந்து வரும் நால்வர் தங்களுடைய கதையைச் சொல்லுவதா அமைந்திருந்தது இந்த Monologue. ஒரு மீனவர் தன் அன்பான மனைவியும் குழந்தைகளும் தானில்லாமல் என்ன அல்லல் படுகிறார்களோ எனத்தொடங்கி "எங்கள் கடலில் மீன் பிடிக்க எங்களுக்கு உரிமையில்லையாம் கொண்டிட்டாங்கள் என்னைக் கொண்டிட்டாங்கள்" என்று அழுதழுது தன் கதையைக் கூறினார்.உணர்ச்சியோடு கதைத்த அவர் திடீரென்று பேப்பரைப் பார்த்து வாசித்தது அவருடைய வேகத்தைக் குறைத்துவிட்டது.
அடுத்து 15 வயதுப் பள்ளி மாணவியொருத்தி தன் கற்பு கயவர்களால் சூறையாடப்பட்டதென்பதை அதிக வார்த்தைகளின்றித் தன் நடிப்பாலும் "வலிக்கிறது வலிக்கிறது" என்று நிஜமான வலியோடும் கதறினார்.மற்றுமொரு மாணவன் தன் கல்விகற்கும் உரிமை பறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவனுடைய கதை.அடுத்து ஒரு பெண்போராளியின் கதை(?).

அதற்குப் பிறகும் பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட "நிமிர்வு 2007 " மலரும் இன்னும் கைக்கு வரவில்லை கிடைத்ததும் அதுபற்றிச் சொல்கிறேன்.[படங்கள் விரைவில்....]

வாசு சின்னராசா மாஸ்டரின் மாணவிகள் "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லைப்போராடுமா" என்ற பாடலுக்கு வழங்கிய நடனத்தாலோ என்னவோ இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்துவி்ட்டது.உங்களுக்காக.

Sunday, June 10, 2007

எழுவோம்! நிமிர்வோம்!

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளையோரின் கையில் என்பதை நன்குணர்ந்த நம் சகோதரர்கள் இராணுவச்சாவடிகளைத் தாண்டிச்சென்று குண்டுச்சத்தங்களுக்கிடையில் கூட நம்பிக்கையுடன் கல்வி கற்றுத் தேர்ச்சியடைகிறார்கள்.பள்ளிக்கூடங்கள் அகதி முகாகமாகவும் இராணுவ முகங்களாக மாறியபோதும் பாடசாலைக்கட்டிடங்கள் படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்கள் குண்டு வைத்துப் பிச்சு எறியப்பட்டாலும் கூட தமது அயராத முயற்சியாலும் ஆர்வத்தாலும் கல்வி தமிழர்களுக்கு எவ்வளவு முக்கியமானதென்பதை உணர்ந்து நம் சகோதரர்கள் தேர்வுக்குத் தம்மைத் தகுந்த முறையில் தயார்படுத்துவார்கள். ஆனலும் தேர்வு நேரங்களில் தலைதூக்கும் போராட்டச்சிக்கல்களால் தேர்வெழுத முடியாமல் நொந்து போகிறார்கள் சில சகோதரர்கள்.இவ்வாறெல்லாம் தம் தம்பி தங்கைகளின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்படக்கூடாதென்று நமக்காகப் போராடினார்கள் நம் மூத்த சகோதரர்கள்.அவ்வாறு போராடி நமக்காக உயிர்த்தியாகம் செய்த முதல் மாணவரான பொன்னுத்துரை சிவகுமாரன் சயனைட் அருந்தி உயிர் நீத்த நாளைத்தான் நாம் மாணவர் எழுச்சி நாளாக இன்று நினைவுகூர்கின்றோம்.

"கல்வியும் எங்கள் மூலதனம் அதில் கத்தி வைக்கிறது ஆளுமினம்....புத்தகத்தாள்கள் எதிரில் விரிந்தன செத்தவர் முகமே அருகில் தெரிந்தன போருக்குப் படிப்பா படித்திடப்போரா கேள்விகள் " இந்தப் பாடல் வரிகள் 1994ல் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வெளியிடப்பட்ட "விடியலைத்தேடும் பறவைகள்" என்ற இசைத்தட்டில் இடம்பெற்றிருந்தது.இப்பாடலில் குறிப்பிட்டபடி தரப்படுத்தல் மூலம் தங்கள் கல்வியில் ஆளுமினம் கத்தி வைத்ததைப் பொறுக்காது பொங்கியெழுந்தவர்களால் 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.யாழ்.இந்துககல்லூரியில் வணிகத்துறையில் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்த சிவகுமாரண்ணாவும் 1971ம் ஆண்டு இந்த மாணவர் பேரைவையில் இணைந்துகொண்டார்.தரப்படுத்தல் போன்ற சிங்கள அரசின் அடக்கு முறைகள் மீதான மாணவரின் எதிர்ப்பைக் காட்டும்முகமாக உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் உள்ள திறந்தவெளியரங்கில் நடைபெற்ற ஒரு கலைநிகழ்ச்சியின் போது அப்போதைய துணைக்கலாச்சார அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறியின் மோட்டார் வண்டியை வெடிவைத்துத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் சிவகுமாரண்ணா.ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.அதுமட்டுமல்லாது அப்போதைய மேயர் அல்பிரட் துரையப்பாவின் காரை வெடித்துச் சிதற வைத்ததும் சிவகுமாரண்ணாவும் அவருடைய சகாக்களுமே.அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் எதிர்ப்பைக்காட்டவே இத்தயை ஆயுதப்போராட்டங்களில் ஈடுபடவேண்டிய தேவை அன்றைய மாணவர் அமைப்புக்கு இருந்திருக்கின்றது.போராட்ட முறையானது கொள்கைகளை நிலைநிறுத்த இலட்சியங்களை அடையப் பயன்படுத்தப்படும் வழியே தவிர போராட்ட முறையே கொள்கையாகாது என்பதை சிவகுமாரனண்ணாவே கூறியுள்ளார்.



சிவகுமாரனண்ணாவோடு அவருடைய கடைசிக்கணங்கள் வரை கூடவிருந்தவரும் இன்றைய எழுத்தாளருமான குரு.அரவிந்தன் அவர்கள் சிவகுமாரனண்ணாவைப்பற்றிச் சொல்லும் சேதிகள் பலவுள்ளன.1974ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் சிவகுமாரண்ணாவின் பங்களிப்பும் முக்கியமானது.இம்மாநாட்டில் தொண்டராகவிருந்த சிவகுமாரண்ணாவும் அவருடைய தோழர்களும் மாநாட்டின் இறுதிநாளில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நேரடியாகப்பார்த்தவர்கள்.அம்மக்கள் பரிதாபமாகக் கொல்லப்படுவதற்கு காரணகர்த்தாகவிருந்த அன்றைய உதவிப் பொலிஸ் அதிபர் சந்திரசேகராவிற்கு பாடம் கற்பிக்க சிவகுமாரனண்ணாவும் அவருடைய தோழர்கள் சிலரும் திட்டமிட்டார்கள் ஆனால் அந்தத்திட்டத்தில் அந்தப்பொலிஸ் அதிகாரி தப்பிவிட்டதால் சிவகுமாரண்ணாவும் அவர் சகாக்களும் தனிப்படையமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பொலிஸாரால் தேடப்பட்டனர். பொலிஸிடம் இருந்து தப்பிக்க சிவகுமாரன் அண்ணா மற்றும் அவருடைய சகாக்களான மகேந்திரன், யுவராசா, டேவிட் (கி.பி.அரவிந்தன்) ஆகிய நால்வரும் கோப்பாய் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் நீர்வேலியில் வைத்துப் பொதுமக்கள் இவர்களைக் கொள்ளைக்காரர் என நினைத்துத் துரத்த ஒருவாறு அவர்களிடம் தாங்கள் யாரென்பதைப் புரியவைத்துத் தொடர்ந்து முன்னேறிச்செல்லும்போது பொலிஸ் சுற்றிவளைப்புக்கு ஆளாகிவிடுகின்றனர்.நால்வரும் நான்கு திசையில் சிதறி ஓடியவேளையில் டேவிட்டைத்தவிர மற்றைய மூவரும் பொலிஸின் கையில் சிக்கிவிட சிவக்குமாரண் அண்ணா சயனைட் அருந்திவிடுகிறார்.மற்றவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட சிவக்குமாரனண்ணா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்.சிகிச்சை பலனளிக்காமல் சிவகுமாரண்ணா மருத்துவமனையிலேயே உயிர்துறந்தார்.

தமிழ் மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதம் ஏந்திய விடுதலைப்போரே உகந்த வழியெனக்கண்டு அரசாங்கம் மீதான எதிர்ப்பைப் பல இடங்களில் துணிவோடு காட்டிக் கிட்டத்தட்ட மூன்றுவருடங்கள் சிறையில் கழித்த சிவகுமரானண்ணா 1974ம் ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி சயனைட் அருந்தி மகத்தான தன்னுயிரைத் தமிழ் மக்களுக்காக தியாகம் செய்தார்.அவர் வழி வந்த பல்லாயிரக்கணக்கான அக்காக்களினதும் அண்ணாக்களினதும் கனவு நினைவேற தொலைநோக்குப்பார்வையோடு இன்றுவரை போராடும் எம் சகோதரர்களுக்கு நாமும் தோள்கொடுக்க வேண்டும்.

தமிழீழத் தேசியத்தலைவர் கூட "'மனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது. ஆணிவேர் போன்றது. போரும் கல்வியும் இணைந்த ஒரு வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார். எனவே உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் மாணவர்களாகிய நாம் ஒன்றுகூடி உலகமக்களுக்கு எம்மீதான அரசின் அடக்குமுறையை எடுத்தியம்புவோம்.தொழில்நுட்பரீதியாக அறிவியல்ரீதியாக இன்னும் என்னென்ன வழிகளிலெல்லாம் எம்மால் தாயக விடிவுக்கு உதவ முடியுமோ அவ்வுதவிகள் எல்லாவற்றையும செய்வோமென்று இந்த மாணவர் எழுச்சி நாளில் மாணவர்கள் நாம் உறுதியெடுத்துக்கொள்வோம்.ஒன்று சேர்வோம்.எழுவோம்.நிமிர்வோம்.

Friday, June 08, 2007

எனக்குக் கேட்டிச்சு!

இரவு நேரப் பயணம் ஒன்றின் போது வீடுபோய்ச் சேர இன்னும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இருக்கிறதே என தூங்க முயற்றி செய்து கொண்டிருந்த போது என்னை ஈர்த்த உரையாடலிது.முன்னாலிருந்தவர்கள் புதுசாக்கட்டிக்கிட்ட ஜோடி என்று நினைக்கிறேன்.நான் பின்னாலிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லையோ அல்லது என் காதில் இருந்த ஹெட்போனைப் பார்த்துவிட்டு எனக்குக் கேக்காதென்று நினைத்துக் கதைத்தார்களோ யாமிறியோம் பராபரமே.

பெண் : தள்ளி இருடா எனக்கு விசரக் கிளப்பாத!

ஆண்: தொடங்காத இப்ப.இப்ப நான் என்னத்த செஞ்சிட்டன் என்று மூஞ்சை இந்தளவுக்கு நீண்டிருக்கு.

பெ : நான் ஆசையா வாங்கின அந்த கிளாஸ் வாஸை கவனமா வச்சிருக்கத்தெரியாம அதை ரெயின்ல ஏற முதலே உடைச்சுப்போட்டு இப்ப ஒன்றுமே நடக்காத மாதிரிக் கேள்வி வேற.

ஆ: இப்ப என்ன அந்தக் கிளாஸ் போலவே நாளைக்கே நானொன்று வேண்டித்தந்தா சரியா.

பெ :

ஆ: என்ன சத்தத்தையே காணம்.

பெ:

:ஓகே என்னோட கதைக்கவேண்டாம்.நானிந்தப் பேப்பரோட கதைக்கிறன்.
ஹேய் சுபோ இங்க பார் இன்றைக்கு யாரோ ஒரு தமிழாள் தன்ர மகள் மகளி்ன்ர boy friend மற்றது இன்னும் சில பெடியளுக்கு மேல ஜீப் ஏத்தினதென்று காலம நியூஸ்ல சொன்னதெல்லா அதப்பற்றி இதில இருக்கு.ம் ம் எல்லாரும் என்ன மாதிரி நல்லவனா இருப்பினமா.அத்தைன்ர நல்ல மனசுக்கு என்னைப்போல ஒரு தங்கமான மருமகன் வந்து வாச்சிருக்கிறன்.எனக்குத்தான் குடுப்பின இல்ல அத்தை மாதிரி இல்லாம இப்பிடி ஒருத்தி எனக்கு பொண்டாட்டியா வந்து வச்சிருக்கு. oh no அந்தப்பெடியன்ர படம் போட்டிருக்கு.பெடியன வடிவாப்பார் உங்கட சொந்தக்காரப் பெடியன் நிமால் மாதிரிக்கிடக்கு!

பெ: வட் ? காட்டுங்கோ ஒருக்கா.அவன்தான்.ஐயோ பாவம் சுகுணான்ரி.அம்மாக்குத் தெரியுமோ தெரியாது.அம்மாக்கொருக்கா போனடியுங்கோ.

பெ: ஹலோ அம்மா நியூஸ் கேட்டனீங்கிளே.ஜீப்பால ஏத்தினது நிமாலுக்கம்மா.பேப்பரில படம் கிடக்கு.பாவமம்மா அவை.சுகுணான்ரி வேற இப்பத்தான் ஓரளவுக்குச் சுகமாகிக்கொண்டு வாற இதைப் பார்த்தா திரும்ப ஹோமாவுக்கே போடுவா.நிமாலுக்கு மண்டைக்க ஓன்றுமில்லையே.ஏற்கனவே அவன் அந்த gang பெடியங்களக் காட்டிக்குடுத்ததென்று அவங்கள் அவனுக்குக் குறி வச்சுப் போட்ட fire bomb ஆல அம்மாவும் தங்கச்சியும் எரிகாயங்களால ஹொஸ்பிற்றல்ல இருக்கினம் இந்த நேரத்தில இவனேன் girl friendஓட பார்க்குப் போனவன்.

(கதை கேக்க நான் பாட்டை pause பண்ணிட்டுக் கதை கேட்டுக்கொண்டிருந்தன் ஆனாலும் அம்மா கதைக்கிறது எனக்கு கேக்கல)

பெ: ஓமண சண் பேப்பரில கவர் ஸ்ரோரியே இதான்.அந்த girl இரண்டு நாளா வீட்டயே போகேல்லயாம்.தாயும் தேப்பனும் தமக்கையும் தேடித்திரிஞ்சவையாம் இவன்ர ஸ்கூலுக்குப் பக்கத்தில இருக்கிற பார்க்ல இரண்டுபேரும் வேற சில பிரண்ட்ஸ்ம் கதைச்சுக்கொண்டிருந்தவையாம்.கண்ட உடன கோவத்தில அப்பிடியே கொண்டுபோய் ஜீப்பை ஏத்திப்போட்டாராம்.படத்தில நிமால் போட்டிருந்த உடுப்பெல்லாம் கிளிஞ்சுபோய் அழுதுகொண்டிருக்கிறான் .பார்க்கவே விசராக்கிடக்கு.நான் பேப்பர் கொண்டுவாறன் பாரண நீயே.

பெ: தேப்பனைப் பொலிஸ் பிடிக்கேக்க டான்ஸ் ஆடினவராம் சிரிச்சவராம் என்று பொலிஸ் மென்ரல் அசெஸ்மென்ற் கேட்டிருக்கினமாம்.
ஏனம்மா அவைக்கு மட்டும் இப்பிடியெல்லாம் நடக்குது.எனக்குத் தெரிஞ்சு நிமால் நல்ல பெடியன் தானே.இப்ப பாருங்கொ இந்த girl friend பிரச்சனையாலதான் fire bomb போட்டதென்டு கதைக்கப்போகுதுகள் சனங்கள்.சும்மாவே சிங்கள gang ஒன்றும் இல்லாம் தமிழ் gang தான் என்று சொல்லிக்கொண்டு திரியிறவைக்கெல்லாம் இது அவல் குடுத்த மாதிரி. ம் சரி கொஞ்ச நேரத்தில வீட்ட வாறம்.bye.

ஆ: நிமால் பாவம்.அந்த girl ன்ர தேப்பன் இனி வெளில வாறது கஸ்டம் தான்.
பெ: கோவத்தில இல்லாட்டி மனவுளைச்சல் அதுஇதென்று சொல்லி வெளில வந்தால்?
ஆ: நான் நினைக்கேல்ல. triple attempted murder!

பிறகு அவைன்ர ஸ்டாப் வந்திட்டு இறங்கிப்போட்டினம்.

மனிதராய் இருத்தல் தமிழராய் விளங்கல்

3வது தமிழியல் ஆய்வு மாநாடு, தொறொன்டோ மே 15- 17, 2008

3வது தமிழியல் ஆய்வு மாநாடு 2008 மே 15, 16, 17ம் நாட்களில் தொறொன்டோ நகரில் இடம்பெறும். இந்த மாநாட்டை தொறொன்டோ பல்கலைக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்துகின்றன. மாநாட்டில் கட்டுரை வழங்க விரும்பும் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், அவைக்காட்சிக் கலைகளில் ஈடுபட்டு உழைப்போர், தமிழியல் செயற்பாட்டாளர்கள் போன்ற அனைவரிடம் இருந்தும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன.

2008ம் ஆண்டுக்கான மாநாட்டின் ஆய்வுப் பொருள், “மனிதராய் இருத்தல்;
தமிழராய் விளங்கல்” என்பதாகும்.

எப்போதும் எங்கேயும் பொருந்தி வரக்கூடிய வகையில் மானுடம் என்பதையும் அடையாளம் என்பதையும் கற்பனை செய்ய முடியுமா என்ற கேள்வியைப் புலமையாளர் பலர் எழுப்பி வருகின்றனர். “மானுடம்”, “மனிதராய் இருந்தல்”, “ஆழ்நிலை” போன்ற எண்ணக்கருக்கள் தமிழ் வழங்கும் நாடுகளிலும் இடங்களிலும் தமிழ் மரபுகள் ஊடாகவும் காலந்தோறும் எவ்வாறு உருவகப்படுத்தப்பட்டு வந்துள்ள? எவ்வாறு நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன? மானுடத்தின் தமிழ் முகங்களும் படிமங்களும் பற்றிய நமது பண்பாட்டு இலக்கியப் புரிந்துகொள்ளல்கள் யாவை? இந்தப் புரிந்து கொள்ளலின் அறிவுசார்ந்த மற்றும் புலமை சார்ந்த வரலாறுகள் யாவை? தமிழ் மரபில் பரந்து விரிந்த மானுடம் என்பது எப்போதாவது குறிப்பாகப் பேசப்பட்டுள்ளதா? ”தான் அல்லது தன்னிலை” என்பது எவ்வாறு கட்டியமைக்கப்படுகிறது? இத்தகைய கட்டமைப்பு தமிழ் மரபில் எவ்வாறு மாற்றம் பெற்று வந்துள்ளது? ஆண், பெண், பாலினம், சாதியம் போன்றன எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன? போன்ற கேள்விகளுக்குக் கட்டுரையாளர்கள் சிறப்புக் கவனம் தருவது நல்லது. கூடவே பின்வரும் கேள்விகளிலும் கவனம் செலுத்தலாம்.

==> மத நிலைப்பட்ட, மதம் சார்பற்ற தன்னிலைகளுக்கான ஊற்றுக்கள் எவை?

==> மனிதராய் இருத்தலுக்கான சடங்கியல் சார்ந்த காரணிகள் யாவை?

==> அச்சு, எழுதிய எழுத்து, பாடங்கள் (text) போன்றன எவ்வாறு தனி மனிதர்களின்
பங்களிப்புகளையும் வெளிப்பாட்டையும் மாற்றியமைத்துள்ளன?

==> புவியியலுக்கும் நிலக்காட்சி அமைப்புக்கும் தனிமனித அடையாளங்களுக்கும் இடையே
எவ்வகையான உறவுகள் சாத்தியம்?

==> கருத்தியலுக்கும் பாகுபாட்டியலுக்கும் இடையே எத்தகைய உறவு இருக்க முடியும்?

==> தனிமனித உரிமைகளுக்கும் கூட்டு உரிமைகளுக்கும் இடையேயான உறவுகள்,
சிக்கல்கள் எவ்வாறு தமிழ்ச் சூழலில் வெளிப்பாடு கொள்கின்றன? குறிப்பாக, பாலினம்,
சாதியம் தொடர்பாக இத்தகைய உரிமைகளின் ஊடாட்டங்கள், சிக்கல்கள் என்ன?

==> புலம்பெயர்வு, அழைந்துழல்வு, கலப்பு போன்றவை அடையாளம், இனங்காணல்
என்பவற்றின் தமிழ் வெளிப்பாடுகளை எவ்வாறான தாக்கத்தை செலுத்துகின்றன?


ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க விரும்புவோர், தமது ஆய்வுக் கட்டுரைத் தலைப்பையும் 300 சொற்களுக்கு மேற்படாமல் ஆய்வுக் கட்டுரையின் பொழிப்பையும் 2007 ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்படலாம்.

Plenary Speakers:
Prof. Vidya Dehejia, Columbia University, New York
Prof. David Shulman , Hebrew University, Jerusalem

Abstract Submission by August 31, 2007 to tamils@chass.utoronto.ca

மேலதிக விவரங்களுக்கு: www.chass.utoronto.ca~tamil
tamils@chass.utoronto.ca

Wednesday, June 06, 2007

முரண்

ஒரு linguistics prof படிப்பிச்சுக்கொண்டிருக்கிறார் :
" ஆங்கில மொழியில் 2 negative சொற்கள் சேர்ந்து ஒரு positive அர்த்தத்தைத் தரும். வேறு சில மொழிகளில், உதாரணமாக ரஸ்ய மொழியில் 2 negative சொற்கள் சேர்ந்து ஒரு negative அர்த்தத்தைத்தான் தரும். எந்த மொழியிலுமுள்ள 2 positive சொற்கள் சேர்ந்து ஒரு negative அர்த்தத்தை தரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது"

என்று அந்த prof சொல்லி முடிக்க கடைசி பெஞ்ச்ல இருந்து (பிரபாண்ணா இல்லை) ஒரு குரல் " yea,right" என்று சொல்லிச்சாம்.

Monday, June 04, 2007

உறைப்பு சாப்பிட்டால் அல்சர் வருமா ?

அம்மா இன்றைக்கு என்ன சாப்பாடு?

இட்லி அவிக்கப் போறன் ஜசி நீ இன்றைக்குச் சாம்பார் வை பாப்பம்.


சாம்பாரா?? சாம்பாரோட யார் சாப்பிடுவினம்..எனக்கும் அப்பாவுக்கும் நான் கூட்டு அரைக்கிறன் ஓகே.

தாத்தாவும் முந்தி உப்பிடித்தான் தேங்காய் போடாமல் தனிய மிளகாயையும் வெங்காயத்தையும் போட்டு அரைச்சுப்போட்டுக் கூட்டு அரைச்சு சாப்பிட்டிட்டு உறைப்புத் தாங்கேலாம நாக்கை நீட்டிக்கொண்டிடு திரியிறவர் பிறகு அல்சர் வந்து எவ்வளவு கஸ்டப்பட்டவர் எனக்குத்தானே தெரியும்.கூட்டும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் பேசமா சாம்பார் வைக்கிறதுக்கு மரக்கறி வெட்டு நான் வந்து வைக்கிறன் சாம்பார்.

கூட்டுச் சாப்பிடுறதுக்கும் அல்சருக்கும் என்னம்மா சம்பந்தம்?? அல்சர் வாறதுக்கு Helicobacter pylori என்ன பக்ரீரியாதான் காரணம் என்று சில அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்கினம் தெரியுமோ..உறைப்புச்சாப்பிட்டால் அல்சர் வருமென்டு சும்மா என்னைப் பேக்காட்டதயுங்கோ சரியோ.

ஓமடி ஓம் உன்னைப்பேக்காட்டுறன் நான்.கொப்பரும் நீயும் நான் சொன்னாக் கேக்கவே போறீங்கிள்.பக்ரீரியா முக்கியமான காரணிதான் இருந்தாலும், உறைப்புச்சாப்பாடு சாப்பிடுறது, எந்தநேரமும் எதைப்பற்றியாவது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது, விடிஞ்சாப் பொழுதுபட்டால் எண்டு எந்த நேரமும் கம்புயூட்டருக்கு முன்னாலயே தவம் கிடந்து போட்டு காலமச் சாப்பாட்டை மத்தியானமும் மத்தியானச் சாப்பாட்டை பின்னேரமும் இரவுச்சாப்பாட்டை நடுச்சாமத்திலயும் சாப்பிடுற உன்னை மாதிரி ஆக்களுக்கும், எதுக்கெடுத்தாலும் கோவப்படுற அப்பா மாதிரி ஆக்களுக்கும் அல்சர் வாறதுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமா இருக்கெண்டும் அதைப்பற்றி ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கென்றும் அதே விஞ்ஞானிகள்தான் சொல்லியிருக்கினம்.


அம்மா விட்டால் அல்சரைப் பற்றி என்ர ஓர்கானிக் கெமிஸ்ரி வாத்தியை விட நல்லாவே லெக்சர் அடிப்பீங்கள் போல இருக்கு. சரி சரி தொடங்கிட்டிங்கிள் மிச்சத்தையும் சொல்லி முடியுங்கோ.அல்சரைப் பற்றி வேற என்ன தெரியும் அம்மா?

எனக்கென்ன தெரியும்..அல்சர் என்றது வயிற்றுப்பகுதியில முன் சிறுகுடல் பக்கமா எந்தநேரமும் வலி இருந்துகொண்டே இருக்கும். சாப்பிட ஏலாது. எப்பவும் வயிறு முட்டச் சாப்பாடு இருக்கிற மாதிரி இருக்கும். பசிக்காது, சிலருக்கு மயக்கமாவும் இருக்கும். சிலருக்கு இரத்தவாந்தி கூட வருமாம்.

அம்மா வடஅமெரிக்காவில மட்டும் ஒரு வருசத்தில 4 மில்லியனிலிருந்து 5 மில்லியன் ஆக்கள் அல்சரால பாதிக்கப்படுகிறார்களாம்.1980ம் ஆண்டு வரை மருத்துவர்கள் எல்லாரும் இந்த அல்சருக்கு எங்கட வயித்தில கூடுதலான அமிலம் சுரக்கிறதுதான் காரணம் என்று நினைச்சுக்கொண்டிருந்தவையாம், அதோட நீங்கள் சொன்ன காரணங்கள் போல கோபப்படுறது புகைத்தல் மற்றும் மதுப்பழக்கம் மற்றும் மனவழுத்தம் போன்றவையும் அல்சர் வாறதுக்குக் காரணம் என்று சொன்னவையாம். வயிற்றில சுரக்கிற அமிலத்தின்ர அளவைக் கட்டுப்படுத்தினா அல்சர் வராதென்று நினைச்சு அல்சரால பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான சத்திரசிகிச்சை செய்தவையாம். பிறகு 1990 ம் ஆண்டு Tagamet, Zantac என்று 2 மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால அல்சர் வந்தா சத்திரசிகிச்சை செய்யணும் என்ற நிலை மாறிட்டுதாம் ஆனால் அல்சர் ஒருக்கா வந்து மாறினாலும் அது திரும்பவும் வந்து கரைச்சல் பண்றதால திரும்ப திரும்ப வைத்தியம் பார்க்க வேண்டியதாப்போச்சாம்.

ஏன் ஜசி இந்த வயித்தில நிறைய அமிலம் சுரக்கிறதைப் பற்றிக் கதைக்கேக்க சன் ரீவில போற விளம்பரம் ஏதும் ஞாபகம் வந்திச்சா உனக்கு?

எது? ஒரு அலுவலகத்தில தன்ர கேர்ள்பிரண்டை முதலாளி திட்டுறதைப் பொறுக்காம COOLZ எடுத்துக்கொண்டு போய் முதலாளின்ர முகத்தில ஊத்தினதும் முதலாளிக்கு அசிடிற்றி பிரச்சனை தீர்ந்து அவர் கூல் ஆகிடுவாரே..அந்த விளம்பரம் தானே.

ம் ம் அதே தான். அது சரி இந்த அல்சர் பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன?

அம்மா நான் முதலே சொன்னமாதிரி அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் Helicobacter pylori என்ற பக்ரீரியாவாலதான் அல்சர் வருதென்று கண்டுபிடிச்சாலும் அதற்கான அன்ரிபயோற்றிக்ஸ் 1995ம் ஆண்டுதான் பாவனைக்கு வந்ததாம். ஏனென்றால் அந்தநேரம் இருந்த மருந்து தயாரிக்கிற நிறுவனங்கள் இந்த Helicobacter pylori பக்ரீரியா பற்றின ஆராய்ச்சியில அக்கறை காட்டாம விலை குறைவான Tagamet, Zantac போன்ற மருந்துகளையே உற்பத்தி செய்துகொண்டிருந்தனவாம். பிறகு 1995 ல Helicobacter pylori அன்ரிபயோற்றிக்ஸால 86 % அல்சர் திரும்ப வாறதைத் தடுக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டதால இப்ப இந்த Erythromycin, Ampicillin, Amoxicillin போன்ற அன்ரிபயோற்றிக்ஸ்களைப் பயன்படுத்துகிறார்களாம். சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லினமம்மா 13 வருசமா இழுத்தடிக்காம முதலே அன்ரிபயோற்றிக்ஸ்களை உற்பத்தி செய்றதில மருந்து தயாரிக்கிற நிறுவனங்கள் ஆர்வம் காட்டியிருந்தால் ஒரு வருசத்துக்கு அல்சருக்காக சத்திரசிகிச்சை போன்றவற்றில் விரயமாகும் பணத்தில் 600 மில்லியனிலிருந்து 800 மில்லியன்வரை மிச்சப்படுத்தியிருக்கலமாம்.

அல்சர் ஐ பற்றி எல்லாத்தையும் தெரிஞ்சுவைச்சுக்கொண்டுதான் இப்ப நீ கூட்டரைக்க வெளிக்கிட்டனி என்ன உங்களைத் திருத்தவே முடியாது...எங்க பார்ப்பம் சாம்பார் எந்த நிலமைல கிடக்கெண்டு.

அம்மா இப்ப நில்லுங்கோ ஓடிவாறன்...எஸ்கேப்.


தாயகப்பறவைகள் - யூன் இதழ்