உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்
கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படி பேஸ்போல் மட்டையாலும் சுத்தியலாலும் மொட்டைக்கத்தியாலும் கொடூரமாகக் கொலை செய்ய இவர்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது? தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள்? மற்றைய மக்களிடையேயும் கொலைகள் நடக்கின்றனதான். சமீபத்தில் கனடியர்களான ஆப்கான் நாட்டைச் சேர்ந்த 4 பெண்களின் மரணம் சர்ச்சையை கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை குடும்பம்தான் கொலை செய்ததாக ("Honor killing ") கிடைத்த தகவலின் படி விசாரணை நடக்கிறது தற்பொழுது ஆனால் அது கொலைதான் என்று நிரூபிக்கும் முதலே ஒவ்வொருதரும் ஒவ்வொருவிதமாகக் கதை கட்டுகிறார்கள். இதற்கு முதலும் சில வருடங்களுக்கு முன்னர் பஞ்சாப் பெண் ஒருவர் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டார்.
தமிழர் அல்லது ஆப்கான் போன்ற சிறுபான்மை இனமக்களிடையே இடம்பெறும் பிரச்சனைகள் பூதாகரமாக்கப்படுவதோடு "தமிழ் இளைஞர் கொலை " அல்லது "ஆப்கான் பெண்கள் கொலை" என்று போடுவார்கள் பத்திரிகையில். கொலை கொள்ளை என்று வரும்போது அவர்கள் கனடியர்களாகப் பார்க்கப்படுவதில்லை. அண்மையில் அமெரிக்காவில் 29 வயதான ஒருவருக்கு 21 பிள்ளைகள் இருக்காம் என்ற செய்தியை வெகு சாதாரணமாக ஒரு சாதனை போல எழுதியிருந்தார்கள் அதை வாசித்த ஒரு முஸ்லிம் நண்பி சொன்னாள் இதே ஒரு முஸ்லிம் ஆண் செய்திருந்தால் இவர்கள் என்னவெல்லாம் எழுதியிருப்பார்கள் என்று.
அண்மையில் ஒரு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு 10 வயதுப்பிள்ளையை அப்பா குளிப்பாட்டினார் என்ற கருத்தை பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் பார்க்க வேண்டுமென்றார் ஒருவர். ஆனால் அந்தாய்வில் பங்குபற்றிய ஒருவர் உண்மையில் சொல்ல வந்த விடயம் என்ர அம்மா சின்ன வயசிலயே செத்திட்டார் அதால 10 வயசுவரைக்கும் என்னைக் குளிப்பாட்டினது என்ர அப்பாதான் என்பதே இதை நாங்கள் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்றதைப் பொறுத்துத்தான் அந்த ஆய்வு அடுத்த கட்டத்துக்குப் போகும். இலங்கை அல்லது இந்தியாவில் பெண் பிள்ளைகள் ஆடையுடன் குளிப்பது வழக்கமென்பதும் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டுவது வழக்கமென்பதும் (அதுவும் 30-40 வருடங்களுக்கு முதல்) அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் அவர்களுடைய வழக்கங்களும் பழக்கங்களும் மாறுபடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
அதேபோல children aid socity யால் தேவையில்லாமல் தண்டிக்கப்பட்ட கதை இங்கு நிறையச் சமூகங்களில் உண்டு. தமிழர்களிடம் மட்டுமல்ல மற்றைய 4மூகங்களிலும் children aid socity எண்டாலே பிள்ளை பிடிகாறர் என்றமாதிரியான பயமுண்டு. மற்றைய மக்களின் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததால் பலர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எல்லாத்தையும் சொல்ல முடியவில்லை ஆனால் உதாரணத்துக்கு பிள்ளை கக்கா இருந்ததும் அம்மா இல்லாத நேரம் அப்பா கழுவி விடுவது சாதாரணமாகத்தான் எனக்குப் படுகிறது ஆனால் அது அசாதாரணமாக மற்றவர்களால் பார்க்கப்படலாம். இப்படி பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுச் சட்ட திட்டங்களால் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது தண்டனைக்கு மிக அருகில் போய் மனவுளைச்சல் பட்டவர்கள் உள்ளார்கள். உண்மையில் இதுக்கெல்லாம் என்ன காரணம்? யார் தப்பு?
மற்றது Dating Violence பற்றியது : தமிழ் இளைஞர்கள் தங்கள் காதலிகளைக் கொடுமைப்படுத்துகிறார்களாம். எல்லாச் சட்டமும் ஆய்வுகளும் பெண்களுக்கே உதவி செய்யுது. ஆண்களைப் பற்றிக் கவனிக்க ஒருதருமில்லை என்றும் சொல்லலாம்தான். எங்காவது ஒரு சில இடங்களில் நடப்பதை வைச்சுக்கொணடு ஒரு முடிவுக்கும் வரேலாது ஆனால் பல தசாப்த காலமாக யுத்த தேசத்திலிருந்து வந்த இந்தச் சந்ததிக்கும் இங்கு நடக்கும் வன்முறைகளுக்கும் dating violence க்கும் தொடர்பிருக்கா என்ற ரீதியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதாவது ஒரு காரசாரமான சண்டையில் காதலியைக் கை நீட்டி அடிப்பது, பெருந்தெருவில் இறக்கி விட்டுவிட்டு வருவது, உடலுறவுக்குச் சம்மதிக்காதபோது வார்த்தைகளால் நோகடிப்பது, வேறு பெண்களைக் கூட்டிக்கொண்டு வந்து நீ உடலுறவுக்குச் சம்மதிக்காட்டால் நானிப்படித்தான் செய்வன் என்பது இன்ற இந்தப்பட்டியல் நீள்கிறது.
இங்கு நான் எழுதியது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுடைய அனுபவங்கள் என்ன?