Custom Search

Wednesday, December 03, 2008

வெள்ளம் + ஞாபகங்கள் + இடப்பெயர்வு



ஊரில இருந்து ஒரு போன் வந்தது. உங்கட வீடு வரைக்கும் வெள்ளம் வந்திட்டுதாம். மாயக்கக் குளம் மேவிப்பாயுதாம். நிறையப்பேர் வீட்டை விட்டுப் போய் சொந்தக்கார வீடுகளில இருக்கினமாம். எனக்குத்தெரிஞ்சு மாயக்கை குளம் ஒருநாளும் கட்டுடைத்துப் பாய்ந்ததில்லை. எங்கட வீடுதான் கடைசி வீடு. வீட்டுக்குப் பின்னால நீட்டுக்குத் தோட்டங்கள். தோட்டக்காணிகள் முடிய ஒரு சின்ன வெளி வெளிக்கு அங்காலதான் இந்தக்குளம். குளப்பக்கம் 2 தரம் போயிருக்கிறன். ஒருக்கால் மருதனார் அண்ணா வந்திருந்தநேரம் போயிருந்தம் எல்லாரும் நடந்து. இன்னொருமுறை கோயிலுக்குப் போயிருந்த நேரம் அப்பிடி அந்தக்குளத்தில என்னதான் இருக்கெண்டு பார்ப்பதற்காக களவாப்போனான். சுத்தவர பாதுகாப்பாக வேலி போல எதுவும் இல்லாததால் சின்னப்பிள்ளைகளை அந்தப்பக்கம் போக விடுவதில்லை. அப்பிடியே நாங்கள் போக முயற்சித்தாலும் தோட்டம் செய்யிற பெரிசுகள் வீட்டில போய் சொல்லிப்போடுங்கள்.

மழைக்காலத்தில வீட்டுக்கு மேல ஏறிநிண்டு பார்த்தால் வழமைக்கு மாறா கடற்கரை போல மாயக்கைத் தண்ணியும் மினு மினு என்று தெரியும். மற்ற நேரங்களில அவ்வளவு தூரத்துக்குத் தெரியாது தண்ணி. மெயின் றோட்ல இருக்கிற பாலத்தால நல்ல force ஆ வாற மழை வெள்ளம் எங்கட வீட்டடியில slow ஆத்தான் போகோணும் ஏனென்டால் எங்கட வீட்டடில ஒரு திருப்பம் ' ட ' வடிவில இருக்கு. நல்ல மழை பெய்து எவ்வளவு வெள்ளம் வந்தாலும் எங்கட கேற்றைத்தாண்டி தெருவெள்ளம் வீட்டுக்குள்ள வாறதில்லை. ஆனால் ஒருமுறை அப்பிடி வந்திருக்கு. எத்தினையாம் ஆண்டு என்டு தெரியாது. எங்கட வீட்டுக்கும் ஒரு பாலம் ((?) சீமேந்தால ஏற்றமா கட்டினதொண்டு) இருக்கு. வெள்ளம் அந்தப்பாலத்தை மேவி ஒரேஒரு தரம் முற்றத்துக்கு வந்திருக்கு. எனக்கு இப்பவும் ஞாபகமிருக்கு வீட்டு வாசல்ல நிண்டுகொண்டு வெள்ளம் நிரம்பி கொஞ்சம் கொஞ்சமா முற்றத்துக்கு வடிஞ்ச வடிஞ்சு வரத்தொடங்கவே நான் கத்தத் தொடங்கிட்டன் வீட்டுக்க வெள்ளம் வருது வீட்டுக்க வெள்ளம் வருதெண்டு. கொஞ்சம் கொஞ்சமா வெள்ளம் நிறையவே வரத்தொடங்கிட்டுது. முற்றத்தில இருந்து 2 படி அதுக்குப்பிறகு ஒரு ஹ~ட்வாசல். அதுக்குப்பிறகுதான் கதவு. கதவு வரைக்கும் வெள்ளம் வரேல்ல ஆனால் முற்றமெல்லாம் தெருவெள்ளம் நிரம்பி நிண்டது. பிறகு அந்த வெள்ளமெல்லாம் வத்தினாப்பிறகு தெருவெள்ளத்தோட சேர்ந்து வந்த கஞ்சல் குப்பை குட்டி குட்டித் தடி ஒற்றைச் செருப்பு இப்படியான பொருள்கள் எல்லாம் இருக்கும் முற்றத்தில.

வெள்ளம் ஓரளவுக்கு வத்தினாப்பிறகு வீடுகளில் உள்ள என்னைப்போல சின்னாக்களத்தான் பாண் வேண்டிக்கொண்டுவர அனுப்புவினம் வீட்டில. நாங்கள் 2-3 பேர் பக்கத்துவீட்டாக்கள்
எல்லாம் சேர்ந்து ஒராளை ஒராள் பிடிச்சுக்கொண்டு போறது கடைக்கு. கடைக்குப்போய் கடையில ஆற்ற வீட்டில எந்த மரம் முறிஞ்சது போன்ற தகவல்களையும் சேர்த்து
வேண்டிக்கொண்டு போவம். வெள்ளத்தில சைக்கிள் ஓடியிருக்கிறீங்கிளா? உருட்டிக்கொண்டு போனாலும் சரி ஓடிக்கொண்டுபோனாலும் சரி சைக்கிள் றிம்ல பட்ட வெள்ளம் பள்ளிச்சீருடை எல்லாம் நல்ல வடிவா தெளிக்கும்.

வெள்ளம் முற்றாக வடிந்தபின் தெருவில் திட்டுத் திட்டாக ஊத்தையெல்லாம் கழுவப்பட்டு வெள்ளை மண் மினுங்கிக்கொண்டிருக்கும். அந்த மண்ணை அள்ளி அள்ளி முற்றத்தில
போடுறது. எல்லாற்ற வீட்டுக்கும் முன்னால ஒராள் மண்வெட்டியால நின்டு அள்ளி அள்ளி வாழில போட போட மற்றாக்கள் கொண்டுபோய் கொட்டுறது. தெருவில நீட்டுக்கு நிண்டு
ஆக்கள் கதைக்கிறது நல்ல பம்பலா இருக்கும். அந்தத் தெருவுக்குள்ள இருந்தாக்கள் விவசாயம் செய்றேல்ல. ஆனால் நான் ஏற்கனவே சொன்னமாதிரி எங்கட வீட்டுக்குப்பின்னால முழுக்க நீட்டுக்கு தோட்டக்காணிகள் தான். வேற ஊார் ஆக்களும் அங்க பயிர் நட்டிருப்பினம். எங்களுக்கு மழையால பெருசா இழப்பில்லை. ஆனால் கஸ்டப்பட்டு வெங்காயத்தை நட்ட ஆக்களுக்கு நட்ட கொஞ்ச நாளிலயே மழை கொட்டிச்சுதெண்டால் தோட்டம் செய்றாக்கள் பாவம்தானே. அவையள் நாங்கள் தெருவில நின்டு கும்மியடிக்கிறதைப் பார்த்து உங்களுக்கென்ன கொண்டாட்டம்தான் நாங்கள் இனிப்போய்ப் பார்த்தால்தான் தெரியும் பயிரின்ர நிலமை என்டிட்டுப் போவினம்.

இந்தியன் ஆமி அட்டூழியம் செய்த காலத்திலயும் எங்கட ஊர் மொத்தமா இடம் பெயராமல் சில வயசுபோன ஆக்கள் ஊரில இருந்தவையாம். 92 ல என்று நினைக்கிறன் வடமராட்சியாக்கள் எல்லாரையம் தென்மராட்சி பக்கம் போகச்சொல்லி அறிவுப்பு வந்தநேரம் அநேகமா எல்லாரும் இடம்பெயர்ந்தவை. ஆனால் இப்ப இந்த மாயக்கை குளம் நிரம்பி தோட்டங்களைத்தாண்டி ஊருக்குள்ள வந்ததால எல்லாரும் வீடுகளை விட்டிட்டு வேற எங்கயோ எல்லாம் போய் இருக்க வேண்டிய நிலமை.


வன்னியில் இந்த வெள்ளக்காட்டுக்க மக்கள் வாழும் கூடாரங்களின் படங்களைப் பார்க்கேக்க ஊறிப்போன நிலத்தில அடுப்பு மூட்டி எப்பிடித்தான் சமைச்சு சாப்பிட முடியுதோ? மேல மட்டும் கூடாரம் கீழ நிலத்தில ஒன்டுமே இல்ல. எங்க படுக்கிறது?இதெல்லாம் காணாதெண்டு கிளஸ்டர் பாம் வேற பாவிக்கிது இலங்கை இராணுவம். ஆரிட்ட போய்ச் சொல்றது.

13 comments:

சந்தனமுல்லை said...

ம்ம்ம்..என்ன சொல்றதுன்னு தெரியலை..கடைசியில ரொம்ப சோகமா மனசை கனக்க வச்சீட்டிங்க! ஆனா உங்க சின்னவயசு மழைக்கால நினைவுகள் நல்லாருந்தது! குறும்புக்கார சிநேகிதி!

தமிழன்-கறுப்பி... said...

அப்ப மாயக்கை ஆள் எண்டு சொல்லுங்கோ...

அது சரி மழைக்கால ஞாபகங்கள் எப்பொழுதும் ஒரு மாதிரியானவை தான்...

தமிழன்-கறுப்பி... said...

உண்மைதான் வன்னியில் இருக்கிற சனம்; மனசு மரத்துப்போய் இருக்குதுகள்...:(

தமிழன்-கறுப்பி... said...

சில நாட்கள் இணையத்துக்கு வர முடியேல்லை அதுக்குள்ள இத்தனை பதிவுகள் கடும் வேகமா இருக்கிறியள்,
கனநாளைக்கு பிறகு திரும்பவும் அதே வேகம்...எழுதுறியள் போல..

சந்தனமுல்லை said...

//ஆனால் கஸ்டப்பட்டு வெங்காயத்தை நட்ட ஆக்களுக்கு நட்ட கொஞ்ச நாளிலயே மழை கொட்டிச்சுதெண்டால் தோட்டம் செய்றாக்கள் பாவம்தானே. //

ம்ம்..ஆமா! முதலில் பாதிக்கப் படுபவர்கள் விவசாயிகள்தான்! :( அதுவும் பருவம் தப்பி பெய்யும் மழையில் அவர்கள் வருமானமே கேள்விக்குறியாகி விடுகிறது!

தமிழ் மதுரம் said...

இளமைக்கால நினைவுகள் பசு மரத்தாணி போல எம் மனதில் எப்போதும் நிலையாகப் பதிந்து விடும். அவ் அற்றினை அடிக்கடி மீட்டிப் பார்ப்பதே மனதுக்கு சந்தோசம். வன்னியில் உள்ள மக்கள் பற்றி ஆதங்கப்படும் உங்கள் கூற்று நியாய பூர்வமானது. அவர்களுக்கு எப்போது தான் விடிவு கிடைக்குமோ?? அவர்கள் முகங்களிலும் எப்போதுதான் சந்தோச மழை தூவுமோ????????

ஹேமா said...

சிநேகிதி மழை போலவே மனம் நிரம்பிய நினைவுகளும் வேதனைகளும்.மழை கொட்டி வெள்ளமாய் பாயேக்கையும் எங்கட ஊரும் ஊரின் நினைவுகளும் தேங்கிக் கிடக்கு எங்கட மனக் கிடங்குகளுக்குள்ள.

Anonymous said...

யாழ்பாண்த்து மொழிநடை நல்லா இருக்கு.............

கரவைக்குரல் said...

நிஷா என்ற பெயரோடு வந்து எங்கள் மக்களை கஷ்டத்தில் இட்ட்டுச்சென்றிருக்கிறது.எத்தனை கஷ்டங்களை தான் எம் மக்கள் அனுபவிக்கிறார்களே என்று இறைவன் கூட எண்ணும் காலம் எப்போது தான் வருமோ?
உங்கள் கருத்துக்கள் எங்கள் மனதை தொட்டிருக்கின்றன.

சாந்தி நேசக்கரம் said...

மழைக்கால நினைவுகள் எப்போதும் மனசுக்கள் தூறலிட்டுக் கொண்டேயிருக்கும். சினேகிதியின் மழைக்கால ஞாபகங்கள் எனக்குள்ளும் தூறிக்கொண்டிருக்கிறது.

சாந்தி

சந்தனமுல்லை said...

http://sandanamullai.blogspot.com/2009/01/blog-post_08.html - இப்பதிவில் உங்களுக்கொரு விருது!!

தேவன் மாயம் said...

இளமைக்கால நினைவுகள் பசு மரத்தாணி போல எம் மனதில் எப்போதும் நிலையாகப் பதிந்து விடும். அவ் அற்றினை அடிக்கடி மீட்டிப் பார்ப்பதே மனதுக்கு சந்தோசம்///

நல்லா எழுதியிருக்கீங்க...

வாசகி said...

மழைக்கால நினைவுகள் நல்லாருந்தது சிநேகிதி!