Custom Search

Sunday, November 30, 2008

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!


அப்பா தங்கச்சியோட சண்டை பிடிக்காதயுங்கோ - அவள்ட
வயசு அப்பிடி வாய்க்கு வாய்தான் கதைப்பாள். அன்பால எதையும்
செய்ய வைக்கலாம் தொலுக்காரிப்பும் அதிகாரமும் பதின்ம வயதுகளிடம்
எடுபடாது அவளோட அன்பா கதையுங்கோ என்று வழக்கம் போலவே
நான் அவளுக்காக வாதாடுறன் நீங்களும் எப்ப பாரு முறிச்சுபோடுவன்
அடிச்சு போடுவன் வெளில பிடிச்சு விடுவன் என்ன பண்றன் என்று
பண்ணேக்க பாருங்கோ வழக்கம் போல உறுமிட்டுப் போறீங்கள்

அக்கா நீயும் வழக்கம் போல ஏன் நான் அப்பாவோட
வாதாடுறன் என்ற உண்மை தெரியாமல் வழக்கம் போலவே
நானும் நடுகப் பார்க்கிறன் உனக்கு எப்பவும் அப்பாவோட என்ன
அராத்தல்.அவர் சொல்றதை செஞ்சா என்ன குறைஞ்சு போடுவீங்கள்
வாய்க்கு வாய் காட்டிறதில மட்டும் குறைச்சலில்லை என்று
வழக்கம் போல என்னைக் குறை சொல்லிட்டு போறாய்

வழக்கம் போல முத்தம் தருவியா மாட்டியா என்று பார்க்கிறதுக்காகவே
நானும் முத்தம் கேக்குறன். நீயும் வழக்கம் போலவே என்னென்னவோ
எல்லாம் கதைச்சிட்டு வழக்கம் போலவே முத்தம் தராமலே போட்டாய்

அம்மா நீங்க வைத்தியர் இல்லைன்னு தெரிஞ்சும் ஏம்மா என் ஒரு கண்ணு
மட்டும் சிவந்திருக்குன்னு கேக்குறன் நீங்களும் வழக்கம் போலவே அது
ஒன்னுமில்ல நீ கனநேரம் ரீவி பாக்கிறாய் என்று எந்த சமாதானமும்
சொல்லாமல் பேசாம படு என்டிட்டு திரும்பி படுக்கிறீங்கள்.

நானும் வழக்கம்போலவே நான் சந்தோசமா இருக்கிறன் என்று சொல்லித்
நல்ல தருணங்களை எல்லாம் நினைச்சு நினைச்சு தூங்க முயற்சிக்கிறன்.
வழக்கம் போலவே தூக்கம் வராமல் எழுதிக் கொண்டும் இருக்கிறன்.


குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

Wednesday, November 26, 2008

உடம்புக்கு வெளியே வளரும் இதயம்

நான்கு நாட்கள் வயதுடைய ஒரு பெண் குழந்தையின் இதயமும் ஈரலின் ஒரு பகுதியும் உடம்புக்கு வெளியே வளர்கிறதாம். இந்தியாவின் வட பெங்கால் மருத்துவக் கல்லூரி வைத்திய வளாகத்தில் இருக்கின்ற இந்த குழந்தைக்கு சத்திரசிகிச்சை மூலம் இதயத்தையும் ஈரலையும் உடம்புக்குள் செலுத்த முயற்சி நடைபெறுகிறது , ஆனால் இது மிகவும் புதியதாக இருக்கிறது எங்களாலான முயற்சியை செய்து வருகிறோம் என்று கூறுகிறார் குழந்தை வைத்திய நிபுணர் மிரிடுலா சட்டர்ஜி.

படங்கள் எடுக்கப்பட்டது Nove.26.08



Saturday, November 15, 2008

கார், வசந்த முல்லை போல , வாடா வாடா தோழா



கார் பைத்தியங்கள் இரண்டு இருக்குதுகள் வீட்ட. எந்த பேப்பர்ல flyer ல கார் படம் இருந்தாலும் காணும் எடுத்துக்கொண்டு போய் கட்டிலுக்கு கீழ ஒளிச்சு வைச்சிட்டு அப்பா இல்லாத நேரம் கொண்டுவருவினம் கார் படம் வெட்டித்தரச் சொல்லி. படத்கை் காட்டி இது hammer என்று சொல்றளவுக்கு expert ஆயிட்டாங்கள்.இன்டைக்கு labtop ல கார் படம் காட்டுறன் என்று அக்கான்ர மகன்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு வந்து பாட்டுப்பாடினால் கார் காட்டுறன் என்று சொன்னன். றினிஸ் பாட்டுப்பாடுறார் றிஷான் one,two,three சொல்லுறார்.

as.mp3 -

8.55 நிமிடமான ஒலிப்பதிவு சரியா வேலை செய்யாதமாதிரியிருக்கு. முழுவதுமா கேக்க முடியாட்டால் சொல்லுங்கோ.

Tuesday, November 11, 2008

கோணப்பா + உளநலம் குன்றியவர்கள் - எண்ணங்கள் சில

எங்கட ஊரில அம்மம்மா வீட்டுக்கு கிட்ட ஒரு அண்ணா இருந்தார். அவற்ற சொந்தப்பெயர்கூட எனக்கு ஞாபகமில்லை ஆனால் எனக்குத் தெரிஞ்சு எல்லாரும் அவரை கோணப்பா அல்லது கொப்பக்கடுவா என்றுதான் கூப்பிடுவார்கள். காலை ஒரு மாதிரி விந்தி விந்தித்தான் நடப்பார். சில நேரம் அவர் சிரிக்கேக்க வாயால உமிழ்நீர் வழியும். சரியான பெரிய நெத்தி அவருக்கு.கிட்டத்தட்ட 16 வயதினிலே சப்பாணி மாதிரித்தான் இருப்பார் பார்க்க. எண்ணை வடியுற ஒழுங்கா இழுக்காத தலை. வாயில எப்பவும் வெத்திலை பாக்கு இல்லாட்ட வீணீர் வடியும். வயிறுக்கு மேல இழுத்துக் கட்டின சாரம். திசைக்கொன்றா இருக்கும் விரல்களும் கோணல் மாணலா வளர்ந்து நிக்கிற நகங்கள். இதான் கோணப்பாவின் வெளித்தோற்றம்.

அம்மம்மா வீட்டுப் பக்கம் நிறையத் தோட்டங்கள் இருக்கு. எல்லாம் எங்கட சொந்தக்காரற்ற தோட்டம்தான். கோணப்பா எப்பவும் யாராவது ஒருவரின் தோட்டத்தில் நின்று ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பார். அவர் அவற்ற வீட்டில நிக்கிறார் என்றால் அன்டைக்கு அவருக்கு வலிப்பு வந்திருக்கு என்றுதான் அர்த்தம்.

அவற்ற அம்மாக்கு அவரை விட இன்னும் நிறையப் பிள்ளையள் இருக்கினம்.கொஞ்சம் கஸ்டப்பட்ட குடும்பம் அதால சில நேரம் அவேன்ர வீட்ட எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்கிறேல்ல. இந்த கோணப்பா ஊரில எல்லாருக்கும் செல்லப்பிள்ளை மாதிரி. ஆற்ற தோட்டத்தில வேலை செய்யுறாரோ அவேன்ர வீட்ட அண்டைக்கு 3 நேரமும் சாப்பிடுவார். சின்ன வயசிலயே அடிக்கடி வலிப்பு வந்ததாலயோ அல்லது வறுமை காரணமோ தெரியா அவரை பள்ளிக்கூடம் அனுப்பேல்ல அவற்ற அம்மா அப்பா.

முந்தி அடிக்கடி வலிப்பு வருமாம். ஆனால் எனக்குத் தெரிஞ்ச காலத்தில எப்பவாவது இருந்திட்டொருக்காத்தான் வலிப்பு வரும். சிலதடவைகள் நானும் போய் புதினம் பார்த்திருக்கிறன் அவருக்கு வலிப்பு வாறதை. வலிப்பு வரத் தொடங்கினதும் ஒரு வித்தியாசமான சத்தம் போடுவார் பிறகு அப்பிடியே விழுந்திடுவார்.கண்ணெல்லாம் ஒரு மாதிரி மேல போய் சொருகி நிக்கும். கை கால் கிடந்து உதறும். வாயால ஒரு பக்கமா எச்சில் நுரை நுரையாத்தள்ளும். பக்கத்தில இருக்கிற கதவுத் திறபை எடுத்து அவற்ற உள்ளங்கைக்குள்ள வச்சால் வலிப்பு கொஞ்ச நேரத்தில குறைஞ்சிடும்.

கோணப்பா பள்ளிக்கூடம் போய் படிக்கேல்ல ஆனால் அவரோட வேலை செய்யிற மற்றைய கமக்காரர்களின் கைங்கர்யமோ என்னவோ அவர் பத்திரிகைகள் எல்லாம் வாசிப்பார். அரசியல் பற்றிக்கூட விவாதிப்பார் என்று அம்மா சொல்றவா.அப்படி ஒரு அரசியல் பற்றிய விவாதத்தில்தான் அவருக்கு கொப்பக்கடுவா என்ற பட்டப்பெயர் வந்ததாம்.ஊரில உள்ள சின்னப்பிள்ளைகளோடும் அவருக்கு நல்ல சிநேகிதம். தோற்றத்தில் மனநலம் குன்றியவர் போல இருந்தாலும் அவரை யாரும் கிண்டல் பண்ணுவதில்லை. நான் படித்த பாடசாலைக்கருகில் ஒரு பைத்தியம் இருந்தார். எப்பவும் ஒரே இடத்தில் இருப்பார் அவர். பக்கத்திலுள்ள குப்பைகளை பொறுக்கி ஒரு இடமாப் போடுவார். ஒருதரும் அவருக்கு கிட்ட போகாதவரை அவர் நல்லாத்தான் இருப்பார். தப்பித்தவறி கல்லெடுத்தெறிஞ்சு அவரைச் சீண்டினால் காணும் கன தூரத்துக்கு விட்டுத் துரத்துவார்.இன்னொரு பைத்தியம் இருந்தார் கோயிலில்.அவர் ஒரு M.A பட்டதாரி.அவற்ற தங்கச்சி சாதி குறைந்தவருடன் ஓடிப்போட்டா என்டதால அவற்ற அம்மா தற்கொலை செய்திட்டாவாம்.அம்மால அதிக பாசம் வைச்சிருந்த இவர் பைத்தியமாகிட்டார் என்று சொல்வார்கள் ஊரில். அந்தக் கோயில்ல ஒரு பொன்னொச்சி மரமிருக்கு. அந்த மரத்தோடும் அருகிலிருக்கும் மின் கம்பத்தோடும் மட்டும்தான் அவர் பேசுவார்.இப்படியான பைத்தியங்களை பார்த்த எனக்கு கோணப்பாக்கும் பைத்தியமோ என்று சந்தேகம் வரும்..அம்மாட்ட போய் கோணப்பாவுக்கு பைத்தியமா என்று கேட்டால் அம்மா என்னைப் பைத்தியமென்று பேசுவா.

கோணப்பாவுக்கு வலிப்பு மட்டுமின்றி 3 வயதுவரை நடக்கவில்லை 4 வயதுவரை பேச்சு வரவில்லை. வயதுக்கேற்ற மூளை வளர்ச்சியில்லை போன்ற குறைபாடுகளும் இருந்ததாம்.ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மருத்துவம் பார்க்கும் நிலையில் அவரின் குடும்பம் இருக்கவில்லை. இறைவன் விட்ட வழியென்று விட்டிட்டினம் போல. பணம் செலவழித்து மருத்துவம் செய்யவில்லை ஆனால் அவருடைய பெற்றோர் மட்டுமில்ல உறவினர்கள் அயலவர்கள் என எல்லாரும் கோணப்பாவில் பாசமாக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் அவரை ஒரு குறையாகப் பார்க்காமல் குறையுள்ள ஒரு மனிதனாகப் பார்த்திருக்கிறார்கள். அப்படி அவரையும் ஒரு மனிதனாக மதித்ததால் தான் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் அவருடைய பட்டறிவு அவரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது இப்பவும் ஒரு கமக்காரனாக.

ஊரில இருக்கிறாக்களே குறையுடன் ஒரு மனிதனை மனிதனாக ஏற்றுக்கொண்டிருக்கையில் கனடாவில் சகல மருத்துவ வசதிகளையும் அணுகும் நிலையிருக்கும் ஒரு குடும்பம் தங்கள் மனவளர்ச்சி குன்றிய மகனை வெளியுலகுக்குத் தெரியாமல் மறைத்து வைக்க நினைக்கிறது.எங்கட வீட்டை சில வருடங்களாக வாடகைக்கு விட்டிருந்தோம். கடிதம் எடுப்பதற்காக வீட்டுக்கு வந்தால் கதவை முழுவதுமாக திறக்கமாட்டார்கள் ஒரு சொட்டு திறந்துபோட்டு அந்த இடைவெளியில் கடிதத்தை தருவார்கள். வீடு வாடகைக்கு விட்டு பல மாதங்களாச்சே ஒருக்கா உள்ளுக்க போய் பார்த்திட்டு வரலாம் என்று ஒருநாள் அப்பா போனார். அப்பாவ வீட்டுக்குள்ளயே விடவில்லையாம் இன்னொருநாள் வாங்கோ என்று சொல்லியனுப்பி விட்டார்கள். பிறகும் 2-3 தடவை முயன்ற போது வீட்டில அம்மா அப்பா இல்லை பிறகு வாங்கோ என்றிச்சு அவேன்ர மகள். சரி வீட்டுக்குள்ளதான் விடேல்ல பின் வளவில மரங்களையாவது பார்த்திட்டு போவம் என்று நானும் அப்பாவும் ஒருநாள் போனம். ஒழுங்கா புல்லுகள் வெட்டாமல் பத்தையா இருந்திச்சு. ஆக்கள் இருக்கிற வீடு மாதிரித் தெரியேல்ல. மேல நிமிர்ந்து பார்த்தல் யன்னல் கண்ணாடிக்குள்ள இருந் நெற் பிஞ்சு பிஞ்சு தொங்குது, அப்பாட்ட காட்டினன் .எனக்கு வீட்டில ஏதோ வில்லங்கம் என்று விளங்கிட்டு. முன் பக்கம் வந்து கடிதம் வேண்ட நான்தான் போனன். தற்செயலா உள்ளுக்க பார்த்தால் sofa க்குப்பின்னால பிஞ்ச பேப்பர் துண்டுகள் கச்சான் கோது காஞ்ச பாண் துண்டுகள் இப்பிடி நிறையச் சாமான் குவிஞ்சு போயிருக்கு. நான் நினைக்கிறன் வீட்டுக்கு வாடகைக்கு வந்ததில இருந்து வீடு கூட்டிறதே இல்லையெண்டு. அப்பாட்ட சொன்னன் வீட்டில ஏதோ பிரச்சினையிருக்கு. பக்கத்து வீட்டு அங்கிள்ட்ட போய் கதைச்சம். அப்ப அவர் சொன்னார் தானும் பலமுறை அவையளோட கதைக்க முயற்சி செய்தவராம் முகத்தை திருப்பிக் கொண்டு போடுவினமாம்.

அடுத்த நாள் எனக்கு ஒரு தொலைபேசியழைப்பு வந்தது ஒரு உளவியல் ஆலோசகரிடமிருந்து.

உ.ஆ : என்னம்மா படிப்பு எப்பிடி போகுது? வீட்டில எல்லாரும் நலமா?

நா : படிப்புக்கென்ன அது தன்பாடு நான் என்பாடு.

உ.ஆ : அதுசரி வாடகைக்கு விட்டிருந்த உங்கட பழைய வீடு வித்திட்டிங்கிளோ?

நா : இல்லையே ஏன் கேக்கிறீங்கள்?

உ.ஆ : இல்ல எங்கட இல்லத்துக்கு ஒராக்கள் வந்திருந்தவை. அவை என்னட்ட ஒரு உதவி கேட்டிருக்கினம். அதைப்பற்றி உன்னட்ட சொல்லணும்.

நா : சொல்லுங்கோ முடிஞ்சால் நானும் உதவி செய்றன்.

உ.ஆ: என்ர இல்லத்துக்கு வந்திருந்தார்கள் உங்கட பழைய வீட்டு முகவரியைக் குடுத்து இந்த வீட்டில இருக்கிற ஆக்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமிருந்து தங்களைத் தாங்களே தனிமைப் படுத்தியிருக்கினமாம். அவைக்கு 3 பிள்ளைகள். ஒரு பிள்ளை மனவளர்ச்சி குன்றியது. அவனைப் பார்க்க மிக அமைதியா இருக்கிறான். ஆனால் சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் பயங்கரமா கோவப்படுறான். கோவம் வந்த உடன பக்கத்தில இருக்கிறத எடுத்த மற்றாக்களுக்கு அடிதான். உடன அவனக் கொண்டு போய் அவன ஒரு அறைக்குள்ள பூட்டி வைக்கினம். அந்த அறை யன்னல் நெற்றெல்லாம் கிளிஞ்சிட்டுது. சுவரில கூட சில இடங்களில ஓட்டை ஓட்டையா இருக்கு. அவன்ர கோவத்தை அவன் அறைக்குள்ள இருந்தே காட்டுறான். எங்க அந்த மகனைப் பற்றிய உண்மை வெளில தெரிஞ்சிடுமோ என்று பயந்து முந்தியிருந்த இடத்தை விட்டு இங்க வந்திருக்கினமிப்ப.மற்ற 2 பிள்ளையளையும் பள்ளிக்கூடத்தில தம்பியைப் பற்றி ஒருதருக்கும் சொல்லக்கூடாது நண்பர்கள் ஒருவரையும் வீட்டுக்கூட்டிக்கொண்டு வரக்கூடாதென்று சொல்லிவைச்சிருக்கினம். அதுகளையும் ஒரு இடத்துக்கும் போக விடுறேல்ல,போய் உண்மையை வெளில சொல்லிடுவினம் என்று பயம். சரியான சமையல் சாப்பாடில்லை. தகப்பன் இல்லாத நேரம் அவனைச் சமாளிக்கவே பெரிய கஸ்டப்படினம் ஆனால் நானும் கணவரும் எவ்வளவு சொல்லியும் ஒரு உளவியல் ஆலோசகரின் உதவியை நாட அவர்கள் தயாரில்லை. கிட்டத்தட்ட எங்களையும் emotional blackmail பண்ணித்தான் விட்டார்கள். இந்த விசயம் வெளியில தெரிஞ்சால் குடும்பத்தோட தற்கொலை செய்து கொள்வார்களாம் என்று அவை சொல்லிச்சினம்.இப்பவே ஒரு மகனால கிட்டத்தட்ட மொத்த குடும்பமும் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற 2 பிள்ளைகளும் பெற்றோரிடமிருந்து மனவழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

நா : ஓ...நான் யோசிச்சனான் ஏன் நாங்கள் எங்கட வீட்டுக்குள்ள போய் பார்க்கிறதை விரும்பேல்ல..விட்டேற்றியாப் பதில் சொல்லினம் என்று யோசிச்சனான். இப்ப என்ன செய்யப் போறீங்கள்? எங்கட ஆக்கள் ஏன்தான் இப்பிடியிருக்கினமோ? எந்தக் காலத்தில இருக்கினம். ஒரு பிள்ளைக்கு வருத்தம் என்றதுக்காக மொத்தக் குடும்பமும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு ஏனிப்பிடி. மனவளர்ச்சி குன்றிப் பிள்ளை பிறக்கிறதுக்கு மரபியல்,உயிரியல் என்று எத்தனையோ விதமான காரணங்கள் இருக்கலாம். இதைப்பற்றின விழிப்புணர்வு எங்கட ஆக்களுக்கு தேவை. நாலுவிதமாக் கதைக்கிற நாலுபேற்ற கதைக்கு காது குடுக்கத் தேவையில்லை என்று சொல்லுங்கோ. அந்தப்பிள்ளையை உங்கட இல்லத்துக்கு கூட்டிக்கொண்டு போங்கோ.

உ.ஆ : அப்பிடித்தான் நானும் யோசிச்சனான்.நான் நேரில போய் அவேன்ர மகனைப் பார்த்தா பிறகு உனக்கு சொல்றன். அப்பாக்கு மெல்லமா விசயத்தை சொல்லு. வீட்டுக்கு அவர் பார்த்து பார்த்து நிறைய செலவழிச்சவர் என்று தெரியும். .

உ.ஆ : கட்டாயம் எனக்குத் தகவல் சொல்லுங்கோ.அநேகமா வீடு திரும்ப திருத்த வேணும் என்று நினைக்கிறன். அப்பா பாவம்தான்.

Tuesday, November 04, 2008

அல்லலுறும் மக்களுக்காக உங்கள் கண்களைத் திறவுங்கள்

தாயகத்தில் தொடர்ந்தும் எம் உறவுகள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு வருகிறார்கள்.ஏறத்தாழ 300,000 மக்கள் சாதாரண அடிப்படை வசதிகளான உணவு, உடை உறையுள் போன்றவை இல்லாமல் அல்லற்படுகிறார்கள்.

பருவகால மழையிலும் சிக்கி அவதியுறுகிறார்கள். இந்த நிலை தொடரக்கூடாதெனில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நாங்கள் எம் மக்களுக்கான நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை திரும்ப இலங்கைக்கு அனுப்பவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் இதுவரை காலமும் அளித்து வந்த ஆதரவை விட இன்னும் பல மடங்கு அதிகமாக 100% முயற்சி செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

Canadian Humanitarian Appeal for the Relief of Tamils (CanadianHART) என்ற இளையவர்கள் பலரின் ஒன்றிணைந்த திட்டத்தினால் "Open Your Eyes for HART" என்ற கவனயீர்ப்பு வார நிகழ்வு ரொறன்ரோ கனடா கந்தசாமி கோவிலில் ஒன்ராரியோ மற்றும் ஏனைய மாகாணங்களிலுமுள்ள அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஊடகங்களையும் உள்ளடக்கி கனடாத் தமிழ்ச் சமூகத்தால் 1.11.08 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை (31.10.08) கனடா கந்தசாமி கோயில் மண்டபத்தில் தமிழ் இளையோர்களைச் சந்தித்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் இளையவர்கள் எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்யலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டதோடு முதற்கட்டச் செயற்பாடுகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



நேற்று சனிக்கிழமை (01.11.08) பொதுமக்களையும் தமிழ் ஊடகங்களையும் சந்தித்து ஒரு வார காலம் நடைபெறவுள்ள இந்தக் கவனயீர்ப்பு வாரத்தில் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்த முழுமையான பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது, ஆளணி தேவைப்படுகின்றது போன்ற விடயங்கள் விளங்கப்படுத்தப்பட்டது.

வரும் திங்களிலிருந்து, வீட்டில் வேலைத்தளத்தில் பேருந்தில் என எல்லா இடங்களிலும் உங்கள் அயலவரிடம் எங்கள் நாட்டில் மக்கள் படும் இன்னல்களைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல 10,000 ரொறன்ரோ வாழ் மக்கள் தங்கள் அயலவர் இருவருக்கு எங்கள் தாயக உறவுகள் படும் அல்லல்களை எடுத்துச் சொன்னால் 20,000 மக்களால் எங்கள் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். அப்படியே படிப்படியாக எல்லாச் சமூகத்தினரையும் எங்கள் குரல்கள் சென்றடையும் என விளக்கப்பட்டது.

மக்களின் வசிப்பிடங்கள் வேலைத்தளங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் போன்றவற்றில் இடம்பெயர்ந்த மக்களின் நிலையை எடுத்துச் சொல்லும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் கவனயீர்ப்பு நிகழ்வினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

செவ்வாய் ஆரம்பித்து பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களுக்குச் சென்று ஆதரவுக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுதல் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களைச் சந்தித்து தாயகத்தில் மக்கள் படும் இன்னல்களையும் தற்போதைய நிலவரங்களையும் அவர்களுக்கு எடுத்தியம்புதல் மற்றும் ஆதரவுக் கடிதம் பெறுதல் போன்றன இடம்பெறும் என்று கூறப்பட்டது.

புதன் முதல் வெள்ளி வரை 72 மணித்தியால கண்காட்சியும் காட்சிப்படுத்தலும் இடம்பெறும். இது வன்னியில் மக்கள் இடம்பெயர்ந்து எப்படியான ஒரு சூழலில் வாழ்கிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதாகக் காட்டி உண்மையான இடப்பெயர்வை ஏனைய சமூகத்தினருக்கு காட்டுவதாக அமையவிருப்பதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து 72 மணித்தியாலம் இடம்பெறவுள்ள இந்த மாதிரி இடப்பெயர்வின் போது பொது மக்களின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுவதாக விளக்கப்பட்டது.

www.tamilidpcrisis.org என்ற இணையத்தளத்தினை மற்ற சமூக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த இணையத்தளத்திலுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு இளையவர்களின் இந்த முன்னெடுப்பினை வெகுவாகப்பாராட்டினர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு இளையவர்களும் பொதுமக்களும் எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்ற அறிவுறுத்தல்களையடுத்து 'நாம் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து இன்று எமது நாட்டில் புலம்பெயர்ந்த எமது உறவுகள் இன்னல் துடைக்கும் இப்பரப்புரையில் எம்மையும் இணைத்துக்கொள்கிறோம்; காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது எனும் வாக்கிற்கமைய செயற்படுவோம் என்றும் எம்மோடு எம்முறவுகளையும் இணைத்து எம்மாலான உதவிகளைச் செய்வோம் என்றும் குரல்வளை நெரிக்கப்படும் எம்முறவுகளின் குரலாக நாம் குரலெழுப்புவோம் என்றும் உறுதி கூறுகிறோம்" என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உலகின் பல பாகத்திலும் செறிந்து வாழும் உறவுகளே அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதிற்கிணங்க நாமனைவரும் ஒன்றுகூடி உலக மக்களுக்கு எம்மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் எடுத்தியம்புவோம். அல்லலுறும் எம்முறவுகளின் குரலாக நாமிருப்போம். ஒன்றுபடுவோம். செயற்படுவோம்.

www.tamilidpcrisis.org
info@tamilidpcrisis.org
416-838-9637

Sunday, November 02, 2008

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலமும்

கடந்த வெள்ளிக்கிழமை ரொரன்டோ Crowne Plaza Hotel ல் "Refugees, Forced Migration and Mental Health – Recovery from Trauma and De-stigmatization of Mental Illness
" என்ற கருவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலம் தொடர்புடைய psychosis, schizophrenia, Autism போன்ற விடயங்களை குடும்பங்கள் சமூகங்கள் மன நல நிபுணர்கள் எவ்வகையில் அணுகிகிறார்கள் என்பது தொடர்பான விடயங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திலும் உளநலம் தொடர்பான பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக நோக்கப்படுவதால் இவ்வகையான உளநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்போது சம்மந்தப்பட்டவர்களின் சமூக கலாச்சாரப் பின்னணிகளை கவனித்தில் எடுக்க வேண்டுமா? ஆட்டிசம் போன்ற உளநலக்குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , புலம்பெயர்ந்து கனடா போன்ற நாடுகளில் வாழும் லற்றின் அமெரிக்க ,சோமாலிய ,சூாடானிய மற்றும் தமிழ் மக்கள் உளநலக்குறைகளை எவ்வாறு உள்வாங்கிக்கொள்கிறார்கள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்தது இம்மாநாடு.

Centre for Addiction and Mental Health ஐச் சேர்ந்த Dr.Laura Simich பேசும்போது ஆண்டுக்கு 220 000 வரையான மக்கள் கனடாவில் குடியேறுகிறார்கள். இவர்களில் 50% மக்கள் ஒன்ராரியோ மாகாணத்தில் குடியேறுகிறார்கள். ரொரன்டோ போன்ற மக்கள் செறிந்து வாழும் நகரங்களில் வாழும் மக்களில் தாய் நாட்டில் நடைபெறும் போர் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் மற்றைய மக்களோடு ஒப்பிடும்போது அதிகளவான மனவழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் ஆனால் ஏனையவர்களோடு ஒப்பிடுகையில் உளநலம் தொடர்பான பிரச்சனைகளுக்காக ஆலோசனை பெறுவதிலும் ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் இவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே உள்நாட்டு போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலோடு சொந்த நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் புலம்பெயர்ந்து தாம் குடியேறும் நாடுகளில் தொடர்ந்தும் மனவுளைச்சலுக்குள்ளாக வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறார்கள். புலம்பெயர்ந்து வரும் இவர்களில் 33.3% மக்கள் Post Traumatic Stress Disorder (PTSD)க்குள்ளாகிறார்கள். 5%மக்கள் (Major Depression) மனவழுத்தத்துக்குள்ளாகிறார்கள்.புலம்பெயர் நாட்டில் நிச்சமற்ற ஒரு வாழ்க்கையைத் தொடங்கும் இவர்கள் சமூக ரீதியில் கலாச்சார ரீதியில் பொருளாதார ரீதியில் புதிய சூழலில் பல இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள். உதாரணமாக புதிய மொழியைப்பயில ஒரு வேலையைத் தேடிக்கொள்ள தகவல்களை அறிந்துகொள்ள தனிமைப்படுத்தப்படுதலில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள சொந்தநாட்டில் விட்டு வந்த உறவுகளைப் பற்றி கவலையைப்போக்க இங்குள்ள சமூகத்தினரோடு தம்மை இணைத்துக்கொள்ள இவர்கள் போராட வேண்டியுள்ளது.குறிப்பாக ஏற்கனவே பொருளாதார வசதியோடு சொந்தநாட்டில் வாழ்ந்த உயர்கல்வி கற்றவர்கள் மற்றும் பெண்கள் முதியோர்களுக்கு புதிதாக இன்னொரு நாட்டில் குடியேறி அந்த நாட்டுச் சூழலுக்கு தம்மை இவைவாக்கப் படுத்துதல் கூடுதல் சவாலாக இருப்பதாக Dr.Laura Simich குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்து வரும்போது அவர்கள் சுமந்து வந்த எதிர்பார்ப்புகள் முற்றுமுழுதாக நிறைவேறாது போகும்போதும் குடியேறிய நாட்டில் வாழும் பல்கலாச்சாரமக்களோடு தாமும் இருகலாச்சாரத்தையும் பின்பற்றும் மக்களாக வாழவேண்டி இருப்பதாலும் இனவாதத்தை எதிர்கொள்ளவேண்டியிருப்பதாலும் அவர்கள் தொடர்ந்தும் மனவுளைச்சலோடு வாழ்கிறார்கள். அதனால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உடல் உள நல சேவைகளைப் புரிய முன்வந்தாலும் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் மனநிலையை ஏனையோரிடம் பகிர்ந்துகொள்ளவோ உதவிகோரவோ முன்வராமல் ஒருவித (resilient) எதிர்ப்பபையே காட்டுகிறார்கள் என்றார்.

20 வருடமாக சூடான் நாட்டில் நடந்துவரும் போர் காரணமாக ரொரன்ரோ போன்ற நகரங்களில் வாழும் மக்களில் அரசாங்க சமூக நல உதவிப்பணம் பெற்று வாழும் மக்களில் 77% ஆனோர் அந்தப் பணம் தங்களுக்குப் போதவில்லை என்று கூறியிருக்கிறார்கள் ஏனெனில் அந்தப் பணத்தில் தங்கள் அன்றாடத் தேவைகளையும் நிறைவு செய்து சூடான் நாட்டில் இன்னலுறும் தங்கங் மக்களுக்குத் தேவைாயான பண உதவிகளைத் தங்களால் செய்ய முடியாதுள்ளதென்று தெரிவித்துள்ளார்கள். இனபேதம் பார்க்கும் வேலைத்தளங்களில் தங்களுக்கு வேலை கிடைக்காதால் தங்கள் வாழ்க்கையே பெரும்பாடாய் இருக்கிறது. அதனால் தங்களைப்ற்றி மட்டும் சிந்திக்கும் சொந்த நாட்டிலுள்ளவர்களை மறக்கச் செய்யுமளவுக்கு கனடா தங்களைச் சுயநலவாதிகளாக்குகிறதென்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழர்களைப் பற்றிக் குறிப்பிட்டவை : 1983 முதல் போராட்டம் நடைபெறுகிறது. போரால் மக்கள் உள்நாட்டிலேயே பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளார்கள். 1980 தொடக்கம் தமிழ் மக்கள் கனடாவுக்கு அகதிகளாக வருகிறார்கள். ரொரன்டோவில் மட்டும் 200 000 தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். 61% மக்கள் கனடாவுக்கு வரமுதல் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் அல்லது வாழ்வில் ஒருமுறையாவது அகதிமுகாமில் வாழ்ந்திருக்கிறார்கள்.32% மக்கள் மிகவும் குறைந்தளவு ஆங்கிலம் பேசுபவர்கள்.33% மக்கள் மனவுளைச்சலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களைச் சந்தித்திருக்கிறார்கள். 36%மக்கள் PTSD ல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்(PTSD யால் பாதிக்கப்பட்ட பெண்களின் % இன்னும் அதிகம்).இவர்களில் 3% மக்களே PTSD யிலிருந்து மீள்வதற்கான ஆலோசனையைப் பெற்றிருக்கிறார்கள்.2004 ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்துக்குப் பின் ரொரன்டோ வாழ் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உளநோய்கள் அதிகமாயிருப்பதாக Dr.Laura குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டைப்பற்றிய ஏனைய தகவல்களை தொடர்ந்தும் எழுதுவேன்.ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்லி இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.இன்று Canadian Multicultural Radio (CMR) ல் சமூக நிகழ்வுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் ஒரு உடல் உள நல ஆய்வு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார் :

ஒருவர் : நீங்களா இப்ப CMR ல் உளநல ஆய்வு பற்றி கதைச்சனீங்கள்
நான் : ஓம் சொல்லுங்கோ.

ஒருவர் : கனடாக்கு பிள்ளையளைக் கூப்பிடத் தெரிஞ்ச எங்களுக்கு எங்கட பிள்ளையயளை எப்பிடி வளர்க்கிறதென்டும் தெரியும். எங்கட பிள்ளையை எப்பிடி வளர்க்கிறதென்டு நீங்கள் எங்களுக்குச் சொல்லித்தரவேண்டாம் சரியோ. உங்கட உளநலத்தை எப்பிடிப் பாதுகாக்கிறதென்டதைப் பற்றி மட்டும் நீங்கள் கவலைப்படுங்கோ.

என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டார். அவர் சொன்னதற்குப் பதில் சொல்லும் வாய்ப்பும் இல்லையெனக்கு.நான் சொன்ன உடல் உள நல ஆய்வுக்கும் பிள்ளை வளர்ப்புக்கு துளியளவும் தொடர்பில்லை அப்பிடியிருந்தும் அவர் என்ன விளங்கி அவர் அப்படிச் சொன்னாரோ அது அவருக்கு மட்டும்தான் வெளிச்சம்.

Dr.Laura சொன்னதுபோல இவர்கள் ஏன் இவ்வளவு resilient ஆக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.முந்தின காலத்திலதான் மனோ தத்துவம் பேசியவர்களை உயிரோடு எரித்தார்களாம். இந்தக்காலத்திலும் மக்கள் இப்படி எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டுக்கொண்டும் உதவி கோரவும் ஆலோசனைகள் பெறவும் பின் நிற்பதால் யாருக்கென்ன லாபம் என்று யோசித்துப் பார்த்தால் ------------.