Custom Search

Tuesday, August 14, 2007

காணாமல் போன ஒரு கொப்பியிலிருந்து...

ஆவணி 9, 2001

கடந்த சனிக்கிழமை

அன்றைய வகுப்பு வழமையிலிருந்து சிறிதே மாறுபட்டதாக இருந்தது.ஆம்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கழைக்கழகத்திலிருந்து வந்திருந்த விரிவுரையாளர் ஒருவர்தான் அன்று எங்களுக்கு வகுப்பெடுத்தார்.அவர் தன்னைப்பற்றிய அறிமுகம் எதுவுமின்றி எங்கள் வகுப்பைப் பற்றி விசாரரித்தார்.பின்னர் மெல்ல சங்க காலத்துக்குள் நுழைந்தார்.

இலக்கியம் என்றால் கடந்தகாலச் சமுதாயத்தைத் தெரிவுக்கும் ஒரு காலக்கண்ணாடி என்று கூறினார்.சங்க இலக்கியத்தில் வரும் அகப்பாடல், புறப்பாடல் பற்றி விளக்கினார்.அதாவது அகப்பாடலில் காதல் பேசப்படுகிறது அதை அனுபவித்துத்தான் உணரலாம் புறப்பாடலில் போர் மற்றும் வீரம் , கொடை என்பன பற்றி பேசப்படுகிறது இதை விளங்கப்படுத்தலாம் என்றார்.

அடுத்து சங்கப்பாடல்களில் தமிழ்ப்பண்பாடு எவ்வாறிருந்தது என்று கூறிவிட்டுத் திருமணமுறைகள் பற்றிப் பேசத்தொடங்கினார்.திருமணத்துக்கு முதலில் தலைவன் தலைவி என்றழைக்கப்பட்டவர்கள் திருமணத்துக்குப்பின்னர் கணவன் மனைவி என்று அழைக்கப்படுகிறார்கள்.அக்காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே ஏற்றுக்கொள்ளப்பபட்ட முறையாக இருந்தது.பின்னர் Monogamy ,Polygamy,Polygyny,Polyandry பற்றி நீண்டது அவருடைய உரை.

நீலகிரியில் "தோடர்" என்ற பழங்குடி மக்களிடம் ஒரு பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் செய்துகொள்ளும் முறை இருந்துள்ளது.அந்த ஊாரில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ஒரே பெண்ணைச் பல சகோதரர்கள் சேர்ந்து மணம் செய்யும் முறையே அதிகமாம்.நீலகிரியில் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையை எடுத்துச்சென்று எருமைப்பட்டியின் வாசலில் கிடத்திவிட்டு அப்பட்டியைச் சுற்றி நின்று தாரை தப்பட்டை போன்ற கிராமத்து வாத்தியங்களை முழங்கச்செய்வார்களாம்.உடனே எருமைகள் ஆவேசம் கொண்டு பட்டியைப் பிரித்துக்கொண்டு தறி கெட்டு ஓடுமாம்.அப்படி ஒடும் எருமைகளின் காலில் மிதிபட்டுச் இறக்காமலிருந்தால் அந்தப்பெண் குழந்தைகளைக் கொல்லாமல் பாதுகாப்பாக வளர்ப்பார்களாம்.இதனால் இவ்வாறு உயிர் தப்பிய பெண்கள் மிகவும் குறைவானதால் இத்திருமணமுறை அங்கே அவசியமாயிற்று.அதோடு சேர்த்து அக்காலத்திலிருந்து வந்ததும் தற்காலத்தில் சில இடங்களில் உள்ளதுமான உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றிக் கூறினார்.இராஜஸ்தான் மாநிலத்திலத்தில்தான் இந்த உடன்கட்டை ஏறும் இவ்வழக்கம் வலுப்பெற்றிருந்தது. "கணவனை இழந்தால் காட்டுவது இல்" என்ற கூற்று நெடுஞ்செழிய மன்னன் இறந்ததும் கோப்பெருந்தேவி உடனிறக்கும் முன்னர் கூறியதாம் : அதாவது ஒரு கணவனை இழந்த பெண்ணுக்கு நான் அண்ணாவாக அப்பாவாக இருப்பேன் என்று ஆறுதல் சொல்லுவது போல நானுனக்குக் கணவனாக இருப்பேன் என்று சொல்லமுடியாதாம்.அதனால் தான் பெண்கள் உடன்கட்டை ஏறினார்களாம்.

அடுத்து உலகளாவிய விழுமியமான விருந்தோம்பல் எவ்வாறு சங்ககாலத்திலும் அதற்கு பின்னரும் இருந்ததென்று சொன்னார்.இளையான்குடிமாற நாயனார் தன் வறுமையிலும் வீட்டுக்கூரையை ஒடித்து விறகாகவும் குப்பைக்கீரையைக் கறியாக்கி முதல்நாள் விதைத்த நெல்மணிகளைப் பொறுக்கி குற்றி சோறு பொங்கி இறையடியாருக்கு எப்படி அமுது படைத்தார் என சுவைபடச்சொன்னார்.அடுத்து சிறுத்தொண்டர் சமைத்த பிள்ளைக்கறி பற்றியும் கூறினார்.ஒரு பெண் தன் கணவனோடு சேர்ந்துதான் விருந்தோம்பல் செய்யவேண்டுமாம்.மாதவி வீட்டிலிருந்து வீடு திரும்பிய கோவலனிடம் நீங்கள் இல்லாததால் நான் புரவலர்க்கு அமுது படைக்கும் தகுதியில்லாமல் எவ்வளவு துன்பப்பட்டேன் என்று கண்ணகி புலம்பினாராம்.

அடுத்த விழுமியம் வாய்மை.


-தொடரும்-

5 comments:

வவ்வால் said...

//மாதவி வீட்டிலிருந்து வீடு திரும்பிய கோவலனிடம் நீங்கள் இல்லாததால் நான் புரவலர்க்கு அமுது படைக்கும் தகுதியில்லாமல் எவ்வளவு துன்பப்பட்டேன் என்று கண்ணகி புலம்பினாராம்.//

அப்படிலாம் அந்த காலத்திலே இருந்து இருக்காங்களா, இப்போ குடும்பத்தோட இருந்தாலும் எதாவது பிச்சைகாரன் போய் கேட்டா கூட நாயை அவுத்துள்ள விடுறாங்க , அதை விட பல பெண்களின் கணவன்மார்கள் வலைகுடா நாடுகளுக்கோ அல்லது வேறு எங்கோ வேளை நிமித்தம் போய்டுறாங்களே அப்போ அவங்களும் இது போல வருத்த படுறாங்களா(இந்த காலத்துல யாரு அடுத்தவனுக்கு சோரு போடலைனு வருத்தப்படுறா) , உங்க தமிழ் ஆசிரியரிடம் கேட்டு சொல்லுங்க!

Anonymous said...

இதன் மூலம் தாங்கள் தமிழ் சமூகத்திற்கு என்ன சொல்கின்றீர்கள் என அறியலாமா?. ஏன் ஒண்ணாங் கிளாசில சொல்லிக் கொடுத்த பாட்டிக் கதை நினைவுக்கு வரவில்லையா?

புள்ளிராஜா

சினேகிதி said...

புள்ளிராஜா ஒண்ணாங்கிளாஸ்ல சொல்லிக்குடுத்ததும் ஞாபகம் இருக்கு அதை எழுதினா பிறகு கருவில இருக்கேக்க படிச்சது ஞாபகம் இல்லையா என்று கேப்பீங்களோ.

தீரன் said...

மீண்டும் ஒரு சிறு தமிழ் வகுப்பறைக்குச் சென்று வந்த மாதிரி இருந்தது.... பண்டைய காலத்தில் இருந்த விருந்தோம்பல் போன்ற நல்ல பழக்க வழக்கங்கள் , மாறி வரும் அவசர உலகத்தில் எடு படாமல் போனது குறித்து வருத்தமே!

Jazeela said...

//உடனே எருமைகள் ஆவேசம் கொண்டு பட்டியைப் பிரித்துக்கொண்டு தறி கெட்டு ஓடுமாம்.அப்படி ஒடும் எருமைகளின் காலில் மிதிபட்டுச் இறக்காமலிருந்தால் அந்தப்பெண் குழந்தைகளைக் கொல்லாமல் பாதுகாப்பாக வளர்ப்பார்களாம்.// என்ன கொடுமை இது. இந்த முறை இப்போதில்லை என்று நம்பலாம்.

//ஒரு பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் செய்துகொள்ளும் முறை// இந்த முறை இன்னும் உ.பி. & பீகாரில் இருப்பதாக அறிகிறேன்.