ஆம்பரலங்காயும் அணிஞ்சில் பழமும்
மலைநாடான் பாலைப்பழத்தைப் பற்றி எழுதினாரா நான் அதைப்போய் வாசிச்சனா இப்ப எனக்கும் நான் ரசிச்சு ருசிச்சு சண்டைபிடிச்சு பிச்சுப் பிடுங்கி சாப்பிட்ட பழம் காய் பற்றியெல்லாம் எழுதவேணும் போல இருந்திச்சா அதான் எழுதினா என்ன குறைஞ்சிடுவன் என்று எழுத வெளிக்கிட்டிட்டன்.
பாலர் வகுப்புப் படிச்ச காலத்தில இருந்தே பள்ளிக்கூடம் போற வழியில ரியூசன் போற வழியில இப்பிடி எப்பெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வீட்டை விட்டுப் போறனோ அப்பெல்லாம் ஆற்றயும் வீட்டுக்காணியிலோ அல்லது தோட்டத்துக்காணியிலோ கைவைக்காமல் வீடு திரும்பினதா ஞாபகம் இல்லை.
என்ன சத்தம் நறநற என்று? இதைப்படிக்கிற யாரோ ஒரு ஆணுடைய பல்லுத்தான் நறநறக்குது.இதுகள் பண்ணின வால்தனத்துக்கெல்லாம் ஊர்க்காரர் எங்களைத்தானே அடிச்சிருக்குதுகள் என்றுதானே மனசுக்குள்ள திட்டுறீங்கள்.சரி சரி மறந்துபோங்கோ மன்னிச்சுடுங்கோ பால்ய சினேகிதிகளை.
இலந்தப்பழம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பாலர் வகுப்புப் படிக்கும்போது ரியூசனுக்குப் போனது தேவா ரீச்சரிட்ட பிறகு அவான்ர தங்கை சாந்தாக்காட்ட.அவேன்ர வீட்டுக்குப் போற வழியில ஒரு இலந்தப்பழ மரம் நிக்குது.மரமோ சரியான உயரம்.நான் என்ர நண்பர்கள் சுஜித்தா சுபாசினி டொம்மா இன்னும் கொஞ்சப்பேர் பாலர் வகுப்பில எவ்வளவு உயரம் இருந்திருப்பம் என்று சொல்லவும் வேணுமா? இலந்தப்பழ மரத்துக்குப் பக்கத்தில கிழங்குக்கு தாக்குறதுக்கா ஊமல்கொட்டை பறிச்சு விட்டிருப்பினம் காணிச்சொந்தக்காரர்.எங்களுக்கு கல்லில கொஞ்சம் பாசம் பாருங்கோ அதால கல்லை விட்டிட்டு ஊமல்கொட்டையை எடுத்து போட்டிக்கு மரத்துக்கு எறிவம்.மரத்தில இருக்கிற கொஞ்ச நஞ்ச பழம் அப்பத்தான் பழுக்கத்தொடங்கியிருக்கிற செம்பழம் எல்லாம் விழும் பாய்ஞ்சு பாய்ஞ்சு பொறுக்கிறது.கொஞ்ச நேரம் மரத்துக்குக் கீழ நிண்டா காணிக்காரர் வந்து “யாரடா அது இலந்தைக்குக் கீழ” என்று சத்தம்போடுவாரெல்லோ.ஒரு விசயம் பாருங்கோ ஒரு நாள் கூட “யாரடி அது மரத்துக்குக் கீழ” அவர் கேட்டதே இல்லை :-) எங்கட குட்டிச்சைக்கிளை மெல்லமா உருட்டிக்கொண்டு ரியூசனுக்குப்போவம்.ம் ம் அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பர்களே...
பிறகு கொஞ்சம் வளர்ந்தாப்போல ஸ்கொலர்சிப் ஸ்பெஸல் கிளாஸ் போற வழியிலதான் அணிஞ்சில்பழ மரம் இருக்கு.என்னத்துக்கு அணிஞ்சில் என்று பெயர் வந்திருக்கும் என்று தெரியேல்ல..அணில் சாப்பிடுற பழமாயிருக்குமோ?? எனக்கென்றா அந்த மரத்தில அணிலைப்பார்த்ததா ஞாபகம் இல்லை.அணிஞ்சில் பழமும் ஒரு வித்தியாசமான ரேஸ்ற்தான்.கிட்டத்த றம்புட்டான் பழத்தின்ர உள்ளான் மாதிரி சின்னனா இருக்கும் என்று நினைக்கிறன்.பழத்தை சாப்பிட்ட அணிஞ்சில்பழக் கொட்டையை நிலத்தில தேய்ச்சு ஒரு சிறிய துவாரத்தை உண்டாக்கினா அதில ஒரு விதமான ஓசை வரும் அதை வைச்சு விசிலடிக்கலாம் :-)
இன்னொரு வீட்டில ஜம்புக்காய் இருக்கு.றோஸ் நிற ஜம்புக்காயை விட பச்சை நிற ஜம்புக்காயைத்தான் எனக்குப் பிடிக்கும்.நாங்கள் களவெடுக்காம சாப்பிட்டதெண்டா ஜம்புக்காய்தான்.அந்த வீட்டுக்கார அம்மம்மான்ர பிள்ளைகள் எல்லாரும் கொழும்பில அதால அவாக்கு நாங்கள்தான் பேரப்பிள்ளைகள் மாதிரி ஜம்புக்காய் சீசனில மறக்காம ஒரு பெரிய பாக்ல கொண்டுவந்து தருவா வீட்ட.அத விட நாங்களும் விருப்பமான நேரத்தில போய்ச் சொல்லிட்டு ஆய்ஞ்சு சாப்பிடலாம். எங்கட காணிக்குள்ள காரைக்காயும் சூரைக்காயும் இருக்கு.எங்களுக்குத் தனியா அங்க போறதுக்கு அனுமதியில்லை இருந்தாலும் நிறைய நாள் அப்பப்பாவுக்குத் தெரியாம காணிக்குள்ள நுழைஞ்சிருக்கிறம் சூரைக்காய் பிடுங்க.ஒரு நாள் நாங்கள் காணிக்குள்ள நிக்கிறநேரம் பார்த்து யாரோ வாற சத்தம் கேட்டு பதட்டத்தோட ஓடுபட்டு விழுந்தெழும்பி கைகாலெல்லாம் சிராய்ப்புகளோட ஓடித்தப்பியிருக்கிறம்.
வீட்டில நிக்கிற கொய்யாக்காய் மாதுழம்பழம் நெல்லிக்காய்களையும் விட்டு வைக்கிறதில்லை. நெல்லிக்காயைத் தாத்தா ஏதோ மருந்துக்குப் பாவிக்கிறவர் என்று அம்மாக்கு நாங்கள் சும்மா புடுங்கி எறிஞ்சு விளையாடுறது விருப்பமில்லை அதால அம்மா வீட்டில இல்லாத நேரமாப் பார்த்து நாங்கள் நெல்லிமரத்தில ஏறிடுவம்.அப்பிடித்தான் ஒருநாள் நான் நெல்லிமரத்தில கீழ என்ர நண்பிகள் கொஞ்சப் பேர் சட்டையைத் தூக்கிப் பிடிச்சுக்கொண்டு நிக்கினம் நான் ஆய்ஞ்சு போடுற காய்களைப் பிடிப்பதற்கு.நெல்லிமரம் நிற்பது மதில் கரையோட.எங்கட வீடு தெருவோரத்தில கடைசி வீடு.அங்கால எல்லாம் தோட்டங்கள்.தோட்ட வேலை முடிஞ்சு தியாகண்ணை வந்துகொண்டிருந்தவர் டக்கெண்டு கேற்றைத்திறந்துகொண்டு வீட்டுக்குள்ள வந்ததும் மட்டுமில்லை கேற்றில ஏறி என்னை வலுக்கட்டாயமாத் தூக்கிக்கொண்டு இறங்கிட்டார்.நான் பிலத்த சத்தமா அவரோட வாய்காட்டுறன் “இப்ப என்னத்துக்கு என்னைத்தூக்கினீங்கள் நான் என்ன உங்கட வீட்டு மரத்திலயோ ஏறி நின்டனான்” அது இது என்று ஒரே சத்தம். அவர் ஒன்றும் சொல்லாம நான் நின்ற கொப்பைக் காட்டினார்.நான் நின்ற இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு கோடாலிப்பாம்பு நிக்குது.ஐயோ என்று கத்திக்கொண்டு ஒரே ஓட்டம்.அதுக்குப்பிறகு தியாகண்ணையை எங்க கண்டாலும் அவர் நான் கத்தின மாதிரிக் கதைச்சுக் காட்டுவார் எனக்கு ஐயொ மானம்போகுதே என்று கத்தோணும் போல இருக்கும்.
யாராவாது எக்ஸோறாப்பழம் சாப்பிட்டு இருக்கிறீங்கிளா? ஓருதரும் சிரிக்க வேண்டாம் ஓகே.நான் மட்டுமில்லை என்ர பிரண்ட்ஸ்ம் சாப்பிட்டு இருக்கினம்.அந்தப்பழம் சிவப்பாகிக் கறுப்பாகும் ஆனால் அது கறுப்பாக முதலே நாங்கள் சாப்பிட்டுடுவமே :-)
கனடாவில் ஒரு பாகிஸ்தான் கடையில் இலந்தப்பழம் நாவல் பழம் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறன் இப்ப அந்தக் கடையைத்தான் போய்த் தேடவேணும்.
பிறகு எனக்குப் பதின்மூன்று வயதிருக்கும்போது மாத்தளைக்கு போயிட்டம்.அங்க இந்த இலந்தப்பழம் எல்லாம் இல்லை.அங்க ரியூசனுக்குப் போன ரீச்சர் வீட்ட வெரலிக்காய் மரம் இருக்கு. வெரலிக்காய் ஒரு கசப்பு உவர்ப்பு எல்லாம் மிக்ஸ் பண்ணின மாதிரி ஒரு ரேஸ்ற் பச்சை நிறத்தில இருக்கும். உப்புத்தண்ணில ஊறப்போட்டு தூள் தடவி விற்பார்கள் கடைகளில் பேருந்துகளில்.நினைக்கவே வாயூறுது.பழமும் சாப்பிடலாம் எனக்குக் காய்தான் விருப்பம்.
மற்றது ஆம்பரலங்காய்.ரீச்சற்ற மாமிக்கு எங்களைக் கண்டாலே பிடிக்காது ஏனென்றால் ரீச்சர் எங்களை ஆய்ஞ்சு சாப்பிடுங்கோ என்று விட்டிடுவா நாங்களும் உப்பு தூளெல்லாம் கொண்டுபோய் ரீச்சற்ற மாமிக்கு காட்டிக் காட்டி சாப்பிடுவம்.பிறகு கேள்விப்பட்டம் ரீச்சற்ற மாமி சுங்கான் குடிக்கிறதுக்காக ஆம்பரலங்காய் பக்கத்து வீட்டு ஆக்களுக்கு விக்கிறவாவாம் அதில நாங்கள் ஆப்பு வைச்சதாலதான் எங்களை அவாக்குப் பிடிக்காதென்று.
இன்னும் பழங்கள் காய்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு.நீங்களும் உங்களுக்குப் பிடித்த பழம் காய்களைப் பற்றிச் சொல்லுங்கோ.
{இந்தப்திவு எழுதி கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்களுக்கு என்னால பப்ளிஸ் பண்ண முடியாம இருந்தது.இப்பிடி(550 Could not open: Read-only file systemblog/43/44/9) ஒரு வந்துகொண்டே இருந்தது பிறகு தானாச் சரியாயிட்டு.வேற யாருக்கும் இந்தப்பிரச்சனை இருந்ததா? }
34 comments:
//ரிய+சனுக்கு//
திருத்தவும்
நல்லாத் தான் எழுதியிருக்கிறியள், நீங்கள் ஒரு ஞானப்பழம் ;-)
உங்களின் பழ, காய் அனுபவத்தைக் கேட்டிருந்தீர்கள், ஏற்கனவே மாம்பழப்பதிவு போட்டாச்சு, ஐஸ்பழமும் பிடிக்கும்.
சயந்தன், வசந்தன் சிரிக்கவேண்டாம், ஊரிலை "காய்" என்பதற்கு இன்னொரு அர்த்தம் இருக்கு ;-)
{//ரிய+சனுக்கு//
திருத்தவும்}
திருத்தியாச்சு.
\\சயந்தன், வசந்தன் சிரிக்கவேண்டாம், ஊரிலை "காய்" என்பதற்கு இன்னொரு அர்த்தம் இருக்கு ;-) \\
ஏனவை 2 பேருக்கும்தான் காய் என்றால் என்ன அரத்தம் தெரியுமோ? எனக்கும் தெரியுமே. "டேய் உன்ர காய் வருதுடா" இது நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறம் :-) மற்றது போன காரியம் காயா பழமா என்று கேக்கிறதல்லோ.
//ஏனவை 2 பேருக்கும்தான் காய் என்றால் என்ன அரத்தம் தெரியுமோ? எனக்கும் தெரியுமே. "டேய் உன்ர காய் வருதுடா" இது நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறம் :-) //
பதிவ வாசிச்சுக்கொண்டிருக்கேக்க நான் நினைச்சது, நீங்களும் ஒரு பேக்காய் தான் என்டு :)). விபரமான விளக்கங்களுக்கு பிறகு வாறன்
பதிவு கலக்கல்.
வணக்கம் மலைநாடான்.
வாங்க வாங்க வந்து விளக்கம் சொல்லுங்க விபரமா.
உங்களாலதான் என்னால இந்தப்பதிவு எழுத முடிஞ்சது.இல்லாட்டா இப்பிடி ஒரு எண்ணமே வந்திருக்காது.இப்ப இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ என்று நினைக்கிறன்.புளியம்பழம் நாவற்பழம் ஈச்சம்பழம் அண்ணாமுண்ணாப் பழம் இன்னும் நிறைய :-)
சரியான பழங்களா இருக்கிறீங்களப்பா எல்லாரும்! :O))
எனக்கும் வெரளு நல்ல விருப்பம். கம்பகா போனா ஒண்டில் வெரளு இல்லாட்டி நமிநங். (நமிநங்கைப் பற்றி எதோ ஒரு பதிவில எழுதியிருந்தனான். மறந்து போனன் எதெண்டு!) அதுகளுக்குப் பிறகுதான் பலாப்பழத்திலயோ விளாம்பழத்திலயோ கை வைக்கிறது. 'வெரளு'ட தமிழ்ப்பெயர் என்ன?
velvet கோதணிந்த கடுபுளியம்பழம் கண்டுகொள்ளப்படவேயில்லை என்பதைக் கண்டிக்கிறேன். (அத்துடன் jam பழமும்)
நாவற்பழம் கனடாவில கிடைக்குதா? நறநற..
வெரளுக்குத் தமிழ்ல பெயர் இருக்குதா? எனக்குத் தெரியாது.
பலாப்பழம் மீசாலைல மட்டும் நிலத்தோட முட்டிக்காய்க்குது ஏன் எங்கட வீட்ட மட்டும் நான் கீழ நிண்டு ஆயுற மாதிரி காய்க்காயாம் என்று பலா மரத்தோட சண்டை போட்டுப் பார்த்தன் அது என்னைக் கண்டுக்கவே இல்லை ஸ்ரேயா.
புளியம்பழத்தை மறக்கேல்ல அதைப்பற்றி எழுத நிறைய இருக்கு.நாங்கள் விளையாடுற இடமே புளியமர நிழலாக்கும்.ஆறுதலா எழுதணும் அதைப்பற்றி.
யாம்பழத்தை எப்பிடி மறந்தன்.யாம்பழம் புடுங்குறதுக்காக வீட்டு ஹ+ட்ஸ்ல எல்லாம் ஏறியிருக்கிறன்.
நாவற்பழம் கனடாவில ஒருமுறைதான் வாங்கியிருக்கிறம்.இப்ப அந்தக்கடை எங்கயோ நான் எங்கயோ இருக்கிறன்.
எனக்கு இத்தனை காய்களைத் தெரியாது.
நானறிஞ்சது பெரியப்பா வீட்டில நிண்ட ரோஸ் கலர் ஜம்புக்காயையும்,
புங்குடுதீவில டியூசனுக்குப் போற வழியில வனாந்தரக் காணியொண்டில நிண்ட வடிவான புளியமரத்தையும்,
வீட்டில நிண்ட ரெண்டு மாமரத்தையுந்தான்.
இதில புளியமரம் வீட்டிலயிருந்து கனக்கத் தூரத்திலயெண்ட படியா வீட்டாக்கள் பாக்கிறது கஸ்டம். என்ன, யாராவது சொந்தக்காறர் பாத்திட்டுப் போய் வத்தி வைச்சாத்தான். சொப்பர் சைக்கிளையும் உருட்டியண்டு எல்லாரும் களத்தில இறங்கிருவம். இப்பவும் இங்க கடையில புளியங்காய், புளியம்பழம் (கோதோட இருக்கிறதுகள்) பாத்தா ஊர்ப்புளிய மரந்தான் நினைவுக்கு வரும். இதுக்குப்பிறகு புளியமரத்தில புளியமிலை அரும்பில இருந்து புளியங்காய், புளியம்பளம் வரைக்கும் மொட்டை தட்டின புளியமரம் ஹொனலூலுவில டவுண் டவுனில லிலியோகலானி எண்ட ஹவாய்க்கான கடைசி இராணியின்ர மாளிகைக்குப் பக்கத்தில இருந்த புளிய மரம்.
மாங்காயெண்டால், எங்கட வீட்டுக்குப் பின்னுக்கிருந்த மாமரத்தில ஒரு ஆள் உக்கார்ர மாதிரி மூண்டு கொப்புகள் பிரிஞ்சு போற இடத்தில ஏறி இருந்தண்டு வீட்டிலயிருந்து களவாய்க்கொண்டுபோன உப்பு மிளகாய்த்தூள் தட்டில மாங்காயைத் தொட்டுத் தொட்டுத் தின்னோணும். ச்சா... நினைக்கவே வாயூறுது..
உங்களுக்கும் மலைநாடானுக்கும் லேசான கடுப்போட நன்றி சொல்லிக்கொள்ளுறன். ;)
வெரளுக்கு, வெருளிக்காய் என்பதும் அம்பிரலங்காய் (சிங்களமக்கள் இதிலே கறி சமைப்பார்கள்) காட்டு மாங்காய் என்பதும் உண்டு. காட்டுமாங்காயை வெட்டி உப்புத்தண்ணிக்குள்ளே ஊறவிட்டுக் கடையிலே போத்தலிலே வைத்திருப்பார்கள். சிலவேளை அப்படியாக ஊறவிட்டதை எடுத்து கொச்சிக்காய்த்தூளையும் சேர்த்துப் பிரட்டியும் விற்பனைக்கு இருக்கும். அம்பிரலங்காய்தானா,
இவை தவிர, இன்னும் பட்டுப்புளி எனப்பதும் கடும்புளி, கூழாம்பழம் என்பனவும் பட்டியலிலே சேரவேண்டும். இல்லை, வழக்குப் போடுவேன்.
சினேகிதி,
இந்தப் படங்களில இருக்கிறது நீர்தானோ எண்டு பாரும்.
காய் பற்றி அறிஞ்சுவைச்சிருக்கிறீர். நீர் பேய்க்காய்தான்.
கானாபிரபா, அதென்ன எங்கள் ரெண்டு பேரின்ர பேரை இதுக்க இழுக்கிறீர்?
என்னமோ காய்களை பற்றி அதிகம் தெரிந்த "காய்"கள் கதைக்கிறீர்கள். எனக்கு தெரிந்த காய்கள் மிக சொர்பமே. கொழும்பிலே வாழ்ந்ததனால் நிறைய மிஸ் பண்ணீட்டமோ என்று நினைக்க தோன்றுகிறது.:-((
//"டேய் உன்ர காய் வருதுடா" இது நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறம்:-)//
அடடா இதுவுமா!? ஏகப்பட்ட "காய்" விசயம் தெரிந்திருக்கிறதுபோல. :-))
'காய்'ஐ 'மிஸ்' பண்ணியும் விடாமல் முதலாவது காதல்கடிவதை எழுதி அறுக்கும் ஆள் நீர்தான் ஐஸே தர்ஷன்
வணக்கம் மதி அக்கா!
வடிவான புளிய மரமா?? அதுசரி பேய் பிசாசு யாரும் மேக்கப் போட்டுக்கொண்டு நிண்டவையோ? புளி காய்க்க முதலே அரும்போடயே அடிச்சு சாப்பிட்டனீங்களோ?? நாங்களும்தான்.புளியம்பழ ஆசையில ஒரு புளியங்கண்டைக்கொண்டு வந்து மதில்கரையில நட்டு அது பூக்கத்தொடங்க பூவையே பிச்சுச் சாப்பிட்டமா அதால அது காய்க்கத் தொடங்க முதலே மதில் வெடிச்சிடும் எண்டு அம்மம்மா புடுங்கி எறிஞ்சிட்டா :-(
மாங்காயெண்டால் அது கிளிச்சொண்டு மட்டும்தான் என்ர பேவரிட் :-)
சிநேகிதி!
மாத்தளையில இருந்தனீங்களோ? அப்ப எது பள்ளிக்கூடம், மந்தண்டாவளையோ, பாக்கியலட்சுமியோ? :)
பெயரிலி சொல்வது போல்,அம்பரலங்காய் என்பது சிங்கள மொழியில் மருவிய பெயரே. உதுக்கு காட்டு மாங்காய் என்பது சரியாக இருக்கும். சிங்களத்தில் 'அம்பகஸ்' என்றால் மாங்காய் என்று பொருளாக்கும்.
யாழ்ப்பாணத்தாக்கள் சாப்பிடாத இன்னொரு பழம், தேன் கதலி அல்லது சீனிக்கதலி வாழைப்பழம். சிங்களப்பகுதியில் கிடைக்கும். நல்ல சின்ன வடிவான வாழைப்பழம்.
மற்றது நீங்கள் சாதாரண புளியைப்பற்றிச் சொல்லுறியள். ஷ்ரேயா கொடும்புளியப் பற்றிச் சொல்லுறா என்டு நினைக்கிறன்.
வெரளுக்கு தமிழில் விரலிக்காய் என்பதாக ஞாபகம்.
ஆளப் பாக்கேக்கையே நினச்சன் சின்னனில மரம், மரமாத் தாவித் தான் திரின்ச்சிருப்பா எண்டு;-)
\\இவை தவிர, இன்னும் பட்டுப்புளி எனப்பதும் கடும்புளி, கூழாம்பழம் என்பனவும் பட்டியலிலே சேரவேண்டும். இல்லை, வழக்குப் போடுவேன். \\
பட்டுப்புளியும் எனக்கு நல்ல விருப்பம். எத்தினை நாள் ஸ்கூல் பாக்ல குட்டிக் குட்டி பாக்ல சாப்பிடாம மறந்துபோய் வச்சிருந்த பட்டுப்பு எடுத்து எறிஞ்சு இருப்பன்.
கடும்புளி என்று எதைச்சொல்றது?? மறந்து போனன்.கூழாம்பழமும் ஞாபகமில்லைப் பெயரிலி.
\\சினேகிதி,
இந்தப் படங்களில இருக்கிறது நீர்தானோ எண்டு பாரும்\\
வசந்தனண்ணா என்ர படமெல்லாம் வச்சிருக்கிறீங்கள் யார் தந்தது? சும்மா சொல்லக்கூடாது என்னை மாதிரியே இருக்கு அந்தப்பிள்ளை.ஆரது?
\\'காய்'ஐ 'மிஸ்' பண்ணியும் விடாமல் முதலாவது காதல்கடிவதை எழுதி அறுக்கும் ஆள் நீர்தான் ஐஸே தர்ஷன் \\
இதென்ன தர்சனுக்கும் பெயரிலிக்குமான சங்கேத பாசையா?? ஒன்றுமே விளங்கேல்ல.
\\சிநேகிதி!
மாத்தளையில இருந்தனீங்களோ? அப்ப எது பள்ளிக்கூடம், மந்தண்டாவளையோ, பாக்கியலட்சுமியோ? :)
\\
வணக்கம் மலைநாடான்.மாட்டுப்பட்டிட்டன் போல இருக்கே.மந்தண்டாவளைல எனக்குத் தெரிஞ்சு பெடியங்கள்தானே படிச்சவை.பாக்கியலக்ஸ்மி தான்.நீங்கள் எங்க படிச்சனீங்கள்? மந்தண்டாவளைலதான் எங்களுக்கு ரியூசன் நடக்கிறது.
\\ஆளப் பாக்கேக்கையே நினச்சன் சின்னனில மரம், மரமாத் தாவித் தான் திரின்ச்சிருப்பா எண்டு;-) \\
இந்த அற்புதன் என்ற பெயரைப்பார்த்தவுடனேயே டவுட் ஆ இருந்தது.பிறகு சின்னக்குட்டிக்கு அற்புதன் மருமகன் என்று வாசிச்சாப்பிறகு இன்னும் டவுட் இப்ப கன்பர்ம் ஆகிட்டு. நீங்கள் தானே அந்த மாம்பழத்தால பிரச்சனை உருவாக்கின ஆள்?
ஓமோம். நான் கொடுபுளி/கடுபுளியைத் தான் சொன்னனான்.
தர்சன் கவலைப்படாதிங்க. எனக்கும் இவை கதைக்கிற பழங்களில முக்காவாசியைத் தெரியாது!
பெயரிலி,
நீர் சொல்லும் கூழாம்பழம் பலாப்பழத்தின் ஒரு வகையா அல்லது கூழா மரத்தின் பழமா?
நான் சொல்லும் கூழாமரம் நல்ல விசாலமாக வளரக்கூடியது. பழம் நாவற்பழம் அளவில் இருக்கும். உள்ளே றம்புட்டான் போல சதைப்பிடிப்புக்கொண்ட பழம். புளிப்புச்சுவை. நிறையத் தின்றால் நாக்கு வெடிக்கும்.
பலாப்பழத்திலும் ஒருவகையை இப்படிச் சொல்வர். அந்தப்பழம் வெட்டிச்சாப்பிட முடியாது. கையால் பிய்த்துச் சாப்பிடவேண்டும்.. அதன் சுளைகள் கூழாக இருக்கும். வாயில்போட்டு உறிஞ்சினாச்சரி.
//பலாப்பழத்திலும் ஒருவகையை இப்படிச் சொல்வர். அந்தப்பழம் வெட்டிச்சாப்பிட முடியாது. கையால் பிய்த்துச் சாப்பிடவேண்டும்.. அதன் சுளைகள் கூழாக இருக்கும். வாயில்போட்டு உறிஞ்சினாச்சரி.//
வசந்தன்!
அது கூழன்பிலாவல்லோ.
கடும்புளி என்று சில இடங்களிலே சொல்லப்படுவது, பட்டுப்புளியே (சிலவேளைகளிலே அதனுள்ளிருக்கும் பட்டுப்புழு அல்ல ;-))
வசந்தன் நான் சொல்வது கூழா மரத்தின் பழத்தினை. கூழன் பலாப்பழத்தினை அல்ல. ("பலாப்பலத்திலே கூழன் - வர்க்கன் என்று சாதிவேறு இப்போது ஒழி(ளி)ந்துவிட்டதா?" என்று பதிவு யாரேனும் இதுவரை போடவில்லையா?;-)). கூழன்பலா பழத்துக்காக அல்ல, பொரிக்கவோ கறிவைக்கவோ பலாக்கொட்டைக்காகத்தான் பிரபல்யம். நான் சொல்லிக்கொள்வது நீங்கள் சொல்லும் கூழா மரத்தின் பழத்தினைத்தான். (
சிநேகிதி, எனக்கும் தர்ஷனுக்குமிடையே ஏதும் உள்வீட்டுச்செய்தி இல்லை. இவர் இத்தனை காதல் கவி தைக்கின்றார் (நீங்களும் பின்னூட்டுவீர்கள்); காயை மிஸ் பண்ணியோ, மிஸ்ஸைக் காய் பண்ணியோ எப்படி இக்கடிவதை செய்தல் இவருக்குச் சாத்தியமாகிறதெனக் கேட்டேன் ;-)
//"பலாப்பலத்திலே கூழன் - வர்க்கன் என்று சாதிவேறு இப்போது ஒழி(ளி)ந்துவிட்டதா?" என்று பதிவு யாரேனும் இதுவரை போடவில்லையா?//
நீங்க வேற . ஈழத்தில் அப்பிடியும் சாதியள் இருந்ததென்டு வெளிக்கிடப் போகினம்:))
ஓம். அது கூழன் பிலாதான். ஆனா கூழாம்பழம் எண்டு சொல்லிப் பழகிப்போட்டுது.
நீங்கள் சொல்லிறமாதிரி அது கறிக்கும் பிரபலம்தான்.
புளியங்குளத்தில (இது ஜெயசிக்குறு புகழ் புளியங்குளமன்று, ஒட்சுட்டான் - முள்ளியவளை றோட்டில வாற புளியங்குளம்) நிறைய கூழன் பிலாக்களும் முருங்கை மரங்களும் இருக்கு. சொல்லிவைச்ச மாதிரி ஒரேகாலத்திலதான் ரெண்டுமே காய்க்கும். சொல்லிவைச்ச மாதிரி நாங்களும் அந்த போகம் முடியுமட்டும் பிலாக்கொட்டை - முருங்கைக்காய் கூட்டுக்குழம்புதான் (1997 இல்). அப்போது ஜெயசிக்குறு தொடங்கி நெடுங்கேணி கைப்பற்றப்பட்டதால் அரைவாசிக் கிராமத்தவர்கள் வேறிடம் போய்விட்டார்கள். வீட்டில்மட்டும் ஒருவர் நிற்பார்.
இடியப்பமும் சொதியும் போல, பிலாக்கொட்டையும் முருங்கைக்காயும் ஒரு நல்ல கூட்டணி.
நுங்கு , வெற்றிலைக்கேணி ஸ்பெஸல் ஈச்சம்பழம், நாகர்கோவில் நாவற்பழம், ஆலம்பழம் இதுகளைபபற்றி யாராவது வலைப்பதிவில எழுதியிருக்கினமா?
விளிமாங்காயும் ஞாபகம் வருது.
என்னாச்சு ஸ்ரேயாவுக்கு?? ஒருக்கா விளிமாங்காய் தெரியுமா? பிறகு விளிமாங்காய் ஞாபகம் வந்திருச்சு.
எனக்கெண்டா "ஆகா ஞாபகம் வந்திருச்சே ஆசையில் ஓடிவாறேன் விளிமாங்காய் வாங்கித்தாரும்" என்று பாடுறீங்களோ என்று சந்தேகமா இருக்கு.அது சரி விளிமாங்காய் என்றால் என்ன?
\\இடியப்பமும் சொதியும் போல, பிலாக்கொட்டையும் முருங்கைக்காயும் ஒரு நல்ல கூட்டணி\\
இடியப்பமும் சொதியுமா? பிலாக்கொட்டையும் முருங்கைக்காயுமா?? எனக்கு கறுப்பின்ர ஞாபகம் வந்திடுத்து..வேற யாரும் கறுப்பியை மிஸ் பண்றீங்கிளா?
சரி சரி.. ஒரு பின்னூட்டத்தை அழிச்சு விடுறன். :O)
விளிமாங்காய் கொத்தாய்க் காய்க்கும். தாவரவியற் பேரெல்லாம் தெரியாது. மேலதிக விவரம்/படங்கள் தெரிந்தவர் காட்டலாம்/சொல்லலாம்.
\\சரி சரி.. ஒரு பின்னூட்டத்தை அழிச்சு விடுறன். :O)
விளிமாங்காய் கொத்தாய்க் காய்க்கும். தாவரவியற் பேரெல்லாம் தெரியாது. மேலதிக விவரம்/படங்கள் தெரிந்தவர் காட்டலாம்/சொல்லலாம்.
\\
அழிச்சிருக்கத்தேவையில்லை ஷ்ரேயா. நான் கேள்விப்பட்டதில்லை விளி மாங்காய் ..வேறு பெயர் ஏதும் இருக்கோ தெரியேல்ல.மலைநாடான் வசந்தனண்ணா இன்னும் பழங்கள் பற்றித் தெரிந்த பழங்களே வந்து சொல்லுங்க விளி மாங்காய் பற்றி.
கொவ்வைப்பழம் மாதிரி இருக்கும் ஆனால் சரியான புளி பச்சை நிறத்தில காய்க்கிறது.ஒரு கொடியிலதான் காய்க்கிறதென்று நினைக்கிறன்.கறியும் வைக்கலாம்.அந்தக்காய் யாருக்காவது தெரியுமா?
//\\'காய்'ஐ 'மிஸ்' பண்ணியும் விடாமல் முதலாவது காதல்கடிவதை எழுதி அறுக்கும் ஆள் நீர்தான் ஐஸே தர்ஷன் \\//
பெயரிலி அண்ணே எனக்கு சுத்த தமிழில் எழுதினாலே அவ்வளவு விளங்காது.இதுக்குள்ள இது என்ன ?
//தர்சன் கவலைப்படாதிங்க. எனக்கும் இவை கதைக்கிற பழங்களில முக்காவாசியைத் தெரியாது!//
அட என்னைபோல் என்னும் ஒருவரா!ஏன் நீங்களும் ஊர் அனுபவங்களை தவறவிட்டவரா?
//காயை மிஸ் பண்ணியோ, மிஸ்ஸைக் காய் பண்ணியோ எப்படி இக்கடிவதை செய்தல் இவருக்குச் சாத்தியமாகிறதெனக் கேட்டேன் ;-) //
உஸ் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க...(வடிவேல் பாணியில் படிக்கவும்) வேறு என்ன சொல்ல :-))
\\உஸ் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க...(வடிவேல் பாணியில் படிக்கவும்) வேறு என்ன சொல்ல :-))
\\
பிரபாண்ணா ஒரு பக்கம் நீரொரு பக்கம் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க!! இது இனிம வடிவேலு ஸ்டைல் என்றது போய் உங்கட ஸ்டைலா ஆகப்போகுது.
Post a Comment