Custom Search

Tuesday, September 30, 2008

என்னை மட்டும் விட்டுவிட்டு பூமி சுத்துது

கவி : ஹலோ சுமி பிஸியா நீ?

சுமி : இல்ல இராமன் தேடிய சீதை படம் பார்த்துக்கொண்டிருக்கிறன்...சொல்லு.

க: எனக்கென்னவோ ஆயிட்டுது போல இருக்கு. சொறிடி நீ கன தரம் போன் பண்ணியிருக்கிறாய் நான் உன்ர போன் மட்டுமில்ல கொஞ்ச நாள ஒருதற்ற போனும் எடுக்கிறேல்ல.உலகத்திலயே தங்களுக்கு மட்டும்தான் கவலை தங்களுக்குமட்டும்தான் கஷ்டம் என்று நினைச்சுக்கொண்டிருக்கினம் நிறையப்பேர். சும்மா எல்லாரும் சந்தோசமா இருக்கினம் தங்களுக்கு மட்டும்தான் மாறி மாறி ஒரே பிரச்சனையென்ட நினப்பு.

சு: என்ன ஆகிட்டுது உனக்கு ? ஆரைத் திட்டுறாய் இப்ப?

க: ஒருதரையும் இல்ல..பொதுவா சொல்றன். யாரும் என்னட்ட வந்து சோகமாக் கதைச்சால் எனக்கு கோவம் வருது. எல்லாருக்கும் பிரச்சனை இருக்கெண்டு எப்பிடி விளங்கப்படுத்துறது மற்றாக்களுக்கு. ஆனால் இப்ப நான் நினைக்கிறன் கடவுளுக்கும் எனக்கும் தீர்க்கப்படாத கணக்கென்னவும் இருக்கோ தெரியா சும்மா ஒரே என்ர தலையெழுத்தையே அழிச்சு அழிச்சு எழுதிக்கொண்டிருக்கிறார் ..உந்தக் கடவுளுக்கு முதல் lay off குடுக்கோணும் அப்பதான் அவர் திருந்துவார்.

சு: அது சரி கடவுளுக்கேவா???? சரி என்னட்ட சொல்லன் என்னாச்சுனக்கு.

க: வேலைக்குப் போனால் ஒழுங்கா வேலை செய்யமுடியேல்ல மாறி மாறி ஈமெயில் பண்ணினம் அது பிழை இது பிழையென்று. வீட்ட வந்தா என்ன ஒரே labtopயோடயே இருக்கிறாய் முகம் தெரியாத ஆக்களோட மணித்தியாலக் கணக்கா கதையுங்கோ ஆனால் வீட்டில இருக்கிற மனிசரோட ஒரு வார்த்தை கதைக்க நேரமில்லை. பொம்பிளைப்பிள்ளைன்ர அறை மாதிரியே இருக்கு இது..மற்ற வீடுகளிலயும் போய் பாருங்கோ இப்பிடித்தான் வீடு வைச்சிருக்குதுகளே என்று அம்மா அப்பான்ர அர்ச்சனை தாங்க முடியேல்ல. மிச்சத்துக்கு என்ர வயசாக்கள் எல்லாரும் கல்யாணம் கட்டிட்டினமாம் என்ற நச்சரிப்பு வேற.முந்தியெல்லாம் படுத்த உடனே என்னமா நித்திரை வரும் இப்பெல்லாம் படுத்த 3-4 மணித்தியாலத்துக்குப் பிறகுதான் நித்திரை வருது. அம்மா கத்துறாவே என்டிட்டு கடமைக்கு சாப்பிடுறன் என்னத்த சாப்பிட்டாலும் ருசியும் தெரியுறேல்ல.ஒன்றிலயும் அக்கறையில்லை என்று அம்மா பேசுறா. ஜிம் பக்கமே போறேல்ல இப்ப. முகத்தில பருக்கள் வேற வரத்தொடங்கிட்டு. எனக்கே அசிங்கமா இருக்கு பார்க்க.



சுமி : ம்....

கவி : தொடர்ந்து படிக்கிறதா இல்லாட்டா இந்த வேலையையே தொடர்ந்து செய்யிறதா ஒன்றும் தெரியேல்ல. தனிய இருந்து எவ்வளவு யோசிச்சாலும் முடிவெடுக்கேலாம இருக்கு. எடுக்கிற முடிவுகள் தெளிவல்லாமலிருக்கு.என்ன செய்து கொண்டிருக்கிறன் என்ன செய்யப்போறன் ம்கும் எல்லாம் ஒரே சூனியமா இருக்கு.எதிர்காலத்த நினச்சா பயமா இருக்கு. பேசாம செத்துப்போய்டலாம் போல இருக்கு..

சுமி : இது எல்லாருக்கும் வாற குழப்பம்தானே. இதுக்குப் போய் சாகுற கதைச்சுக்கொண்டு லூசா நீ. ஏய் அழுறியா நீ..கவி சீ என்ன இது சின்னப்பிள்ளத்தனமா.

எனக்கும்தான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கேல்ல.நானும் தான் வீட்டயும் வேலைலயும் பேச்சு வாங்கிறன் ஒன்டிலயும் கவனமில்ல நிதானமில்ல என்று. தங்கச்சியே என்னைப் பேசுதென்றா யோசிச்சுப் பார்.

நேரத்துக்கு படுக்கிறேல்ல விடிய எழும்பு அறக்கப் பறக்க வேலைக்குப்போறது. ஒழுங்கா சாப்பிடுறேல்ல. வயசுக்கேற்ற முதிர்ச்சியில்லாம சின்னப்பிள்ளைக்கு நிக்கிறன்.. இப்பிடியான குற்றச்சாட்டுகள் எனக்கும் இருக்கு. இதெல்லாம் எல்லாருக்குமிருக்கிற பிரச்சனைதானே. நானும் அநேகமா அடுத்த வருசம் திரும்ப college க்குப்போவன். நீயும் வா தொடர்ந்து படிப்பம். அத விட்டிட்டு இப்பிடி அழாத. பிறகு நான் யாருக்கில்ல போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் என்டு பாடத்தொடங்கிடுவன் பிறகு நீ போனை வச்சிட்டு ஒட வேண்டியது தான்.

கவி : ம்.

சுமி : நான் ஒன்று சொல்லுவன் ஆனால் நீ பிறகு நீயும் உன்ர உளவியல் மண்ணாங்கட்டியும் என்டு திட்டக்கூடாது.

கவி : திட்டமாட்டன் சொல்லு.




சுமி: நீ சொன்ன கவலை நித்திரை பசியின்மை வாழ்க்கை குறித்த பயம் முடிவெடுக்க முடியாமத் தடுமாறுதல் மற்றாக்களிட்ட இருந்து விலகியிருக்கிறது மரணம் பற்றிய எண்ணங்கள் இதெல்லாம் மனவழுத்தம் (depression ) ன்ர அறிகுறிகள். ஆண்களை விட இளம்பெண்கள் தான் 2 மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எங்கள் எல்லாருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில மனவழுத்தத்தைச் சந்திக்கிறம். படிபு்பு காதல் வேலை இப்பிடி எவ்வளவோ விசயங்களை ஒன்றாக சிந்திக்கேக்க இப்பிடியான எண்ணங்கள் தோன்றுவது இயல்புதான். அதால சும்மா பெரிய அறிவாளி மாதிரி கனக்க யோசிக்காமல் நல்ல படமொன்றைப் போட்டு பார். இல்லாட்டா எங்கட வீட்ட வா எங்கயாவது வெளில போட்டு வரலாம். நான் ஏன் இப்பிடியிருக்கிறன் எனக்கென்ன நடந்தது என்று கேட்டால் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். உனக்கு இப்பவாவது போன் பண்ணனும் என்று தோணிச்சே அதே பெரிய விசயம்.

கவி : ம்..நானும் எனக்கு depression ஓ என்டு நினச்சனான் தான் ..அதான் சந்தேகத்தில உனக்கு போன் பண்ணினான். விசரா இருக்கு.. நானிப்பிடியிருக்கிறது எனக்கே பிடிக்கேல்ல..lake shore க்குப் போவமா..

சுமி. 10 நிமிசத்தில வா வீட்டடிக்கு..நிறைய விசயங்கள் சொல்லோணும் உன்னட்ட. depression லயும் chronic depression ( cyclothymic & dysthymic) , bipolar disorder , Seasonal affective disorder(SAD) எண்டெல்லாமிருக்கு. ஒருவிதத்தில பார்த்தால் எல்லாரும் மனவழுத்தத்தோடதான் இருக்கிறம் போல..சரி போனை வைக்கிறன். 10 நிமிசத்தில ரெடியாகிடுவன். நீ வா.

தொடரும்.......

Wednesday, September 24, 2008

அதிபுத்திசாலிக் குழந்தைகள் அசாதாரணமானவர்களா??

லண்டன்ல இருந்து விடுமுறைக்கு வந்திருந்த ஒரு குடும்பம் எங்கட வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார்கள்.எங்கட அப்பாவும் அவேன்ர அப்பாவும் அவை தியேட்டருக்குள்ள போகாமலே படம் பார்த்தது பஸ்ல தொங்கிக்கொண்டு றோட்டால போன பொலிஸ்ட தொப்பி கழட்டி முதல் தடவையா பொலிஸிட்ட அடி வாங்கினது தாத்தா நட்ட கச்சான்களை களவாப் பிடுங்கி கொண்டு போய் வித்துப்போட்டு பிளாவில கள்ளடிச்சது என்டு பழைய கதையள் கதைச்சுக்கொண்டிருந்தினம்.

அம்மாவும் அந்தன்ரியும் அம்மான்ர குட்டித்தோட்டத்தில காய்ச்சிருக்கிற தக்காளி வெண்டி பாவக்காய்களோட ஏதோ கதை நடக்குது. அம்மாக்கு தன்ர ஐயா (அம்மப்பா) வீட்ட வாறாக்களுக்கு மரக்கறிகள் வெங்காயம் குடுத்துவிடுறது போல தன்னால கனடாலயும் செய்ய முடியுதென்டதில பெருமை.இது எங்கட தோட்டத்தில காய்ச்சது என்று சொல்லி ஆக்களுக்குக் குடுக்கேக்க அம்மான்ர முகத்த பார்க்கோணும் சந்திரமுகி ஜோதிகா தோத்தா போங்கோ.

இப்பிடி பெரியாக்கள் எல்லாரும் பிஸியா இருக்கேக்க தங்கச்சியும் வந்திருந்த 2 பிள்ளைகளும் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள் தங்கச்சியோடு. ஒரு பிள்ளை மட்டுடம் ஒண்டும் கதைக்காமல் சும்மா தலையாட்டுறதும் சிரிக்கிறதுமா இருக்குது வாய் திறந்து ஒன்றும் சொல்லாதாம். எல்லாரும் தங்கச்சிக்குத்தான் தோதான ஆக்களா இருக்குதுகள் எண்டதாலதான் நான் சும்மா லாப்டாப்ல ஏதோ முக்கியமான அலுவல் செய்றமாதிரி ஒரே கட்டுரையை 3ம் தரம் வாசிச்சுக்கொண்டிருந்தன். இப்பெல்லாம் தங்கச்சி என்ன கதைக்குறாள் என்ன செய்யிறாள் என்று கண்காணிக் வேண்டியிருக்கு.

எனக்கும் ரொம்ப போரடிக்கிறமாதிரி இருந்திச்சு அதால அந்தக் கதைக்காம இருந்த சுகன்யாவோட கதைப்பம் என்டிட்டு நீங்கள் எத்தினையாம் வகுப்பு படிக்கிறீங்கள் என்று கேட்டன்.லண்டன்ல 8ம் வகுப்பு படிச்சுக்கொண்டிருந்ததாம் இப்ப கனடாலதான் இனிப் படிக்க போறன் என்று சொன்னா.அவை நிரந்தரமாக் கனடால வசிக்க வந்திருக்கினமென்டு தெரிஞ்சுகொண்டன். அப்ப பெரியாளா வந்து என்னவா வர விருப்பமென்டு கேட்டன் (இப்பவே என்ன விடப் பெரியாள்தான் ) தனக்கு ரீச்சரா வரத்தான் விருப்பமாம் ஆனால் தான் ரீச்சரா வந்தால் கடைசி வரைக்கும் தன்ர ரீச்சர்மாதிரி ஆக்களின்ர அழகைப் பார்த்து ஒருதரையும் எடைபோட மாட்டாவாம்.

அக்காவும் தங்கச்சியும் gifted children படிக்கிற ஒரு பள்ளிக்கூடத்தில படிக்கினமாம்.தான் சாதாரணமான பள்ளிக்கூடத்தில படிக்கிறதாம். இங்கயும் அவையள gifted children படிக்கிற பள்ளிக்கூடமா பார்த்து அனுப்பப்போயினமாம்.



படிக்கிற பிள்ளை எங்க போனாலும் படிக்கும் என்று முந்தி அம்மா சொல்றவா என்று சொன்னன். ஆனால் அது எவ்வளவு உண்மையென்று தெரியேல்ல எனக்கும். சுற்றுச்சூழல் எங்கட வாழ்க்கைமுறை முதல்கொண்டு எல்லாத்திலயும் ஆதிக்கம் செலுத்துறது உண்மையென்டால் படான்கள் எல்லாம் படிக்கிற பள்ளிக்கூடத்தில படிக்கிற பிள்ளை கொஞ்சம் கெட்டிக்காரியா இருந்தாலும் மற்றப் பிள்ளையளோட ஒப்பிட்டுப் பார்த்திட்டு தான்தான் உலகத்திலயே அறிவாளி என்று கிணற்றுத் தவளையாத்தான் நினைச்சுக்காள்ளும். ஊரில எல்லாம் சில பள்ளிக்கூடங்களில்ல A B C D என்று பிரிவுகளிருக்கும். அநேகமா A ப்பிரிவு அதிபுத்திசாலிகளாகவும் B புத்திசாலிகள் என்று ஒரு எண்ணம் பெற்றோருக்கு மாணவர்களுக்கு ஆசிரியருக்கு எல்லாருக்குமிருக்கும். A ப்பிரிவில 10 வதா வாற பிள்ளையின்ர அறிவும் D ப்பிரிவில முதலாம்பிள்ளையா வாற பிள்ளையின்ர அறிவும் ஒரேயளவா இருக்கலாம். ஆனால் முதலாம்பிள்ளைக்குத்தானே மதிப்பு :-)

ஒரு சம்பவம் ஞாபகம் வருது சொல்லாமல் இருக்க முடியேல்ல...கனடால நடந்த ஒரு தமிழர் விளையாட்டுப்போட்டிக்குப் போயிருந்தன்.சின்னப்பிள்ளையளின்ர ஓட்டப்போட்டி முடிவுகள் வந்ததும் சில பெற்றோர்கள் கோவத்தோட நிர்வாகிகளைத் திட்டுற சத்தம் கேட்டிச்சு.மழை வேற பெய்துகொண்டிருந்திச்சு வெளில அப்பிடியிருந்து என்ன விசயம் என்று எட்டிப்பார்த்தால் கொஞ்சம் இடக்குமுடக்கான விசயம்தான். நிறையப்பேர் ஓடுவதற்கு பெயர் குடுத்திருந்ததால் 4-5 குழுவாகப் பிரித்து ஒடவிட்டிருக்கிறார்கள். ஓடும் தூரம் முடிவடையும் இடத்தில கயிறு வைத்துப் பிடித்து முதலாமிடம் 2ம் இடம் 3ம் இடம் என்று எழுதுவதுதான் சாதாரணமாக நடைபெறுவது. இம்முறை அப்படிச்செய்யாமல் எவ்வளவு நேரத்தில் ஓடிமுடிக்கிறார்கள் என்பதை automated timer மூலமாக பதிவு செய்திருக்கிறார்கள். இதைப்பற்றிய போதிய விளக்கம் பெற்றோர்களுக்கோ பங்குபற்றியய பிள்ளைகளுக்கோ அளிக்கப்படவில்லை. நடுவர்ககள் தீர்ப்பை automated timer ன் பதிவுகளிலிருந்து தெரிவு செய்ததால் முதலாவதாக வந்தவர்களெல்லாம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படவில்லை. இதை நான் ஏன் சொல்றன் என்றால் ஒரு குழுவில் ஓடினாக்கள்ல அநேகமானோர் கொஞ்சம் சோம்பேறிகள் என்றால் முதலாவதாக வந்துகொண்டிருப்பவன் திரும்பிப் பார்ப்பான் 2வதா 3 வதா வாறவர்களிடையே அதிக இடைவெளியிருப்பின் இவர்கள் இப்போது என்னை முந்தமாட்டார்கள் என்று முதலாவதா வாறவனும் மெதுவாகத்தான் ஓடுவான். அதமாதிரித்தான் கொஞ்சம் மக்குகளோட படிக்கிற அறிவாளியும் நாளடைவில கொஞ்சம் மக்காயிடுவான் இல்லாட்ட அறிவு வளராமல் இருக்கிற அறிவோடயே இருந்திடுவான்.

சுகன்யாவைப் பற்றிக் கதைச்சிட்டு எங்கயோ போனாச்சு...சுகன்யாக்கு தான் அக்கா தங்கையை விட ஏதோ ஒரு விதத்தில அழகிலயோ அறிவிலயோ குறைந்தவள் என்ற எண்ணம் வந்து சேர்ந்திருக்கு. அதுக்கு யாரோ ஒரு ரீச்சர் அல்லது பெற்றோர்கள் சகோதரிகளோ காரணமா இருக்கலாம். என்னதான் பெரிய அறிவாளியாக் காட்டிக்கொண்டாலும் எல்லாருக்குள்ளயும் ஒரு
முட்டாள்தனம் தாழ்வுசச்சிக்கல் எல்லாம் ஒளிஞ்சுகொண்டுதானிருக்கும். gifted students ம் ஒரு சில குறிப்பிட்ட துறைகளில்தான் சிறந்து விளங்குவார்கள் ஆனால் உம்மள மாதிரி என்னை மாதிரியாக்கள் பல துறைகளில்ல சிறப்பாக இல்லையென்றாலும் திறமையுடன்தானிருக்கிறம். ஆனால் gifted students களைப் பாருங்கள் சில நேரங்களில் அவர்கள் முற்று முழுதாக gifted ஆட்களுடனும் பொருந்தாமல் சாதாரணமானவர்களுடனும் பொருந்தாமல் அந்தரத்தில் தத்தளிக்கிறமாதிரி தோணும் எனக்கு ..நீங்கள் அப்பிடி நினைக்கேல்லயா சுகன்யா.

நானும் அப்பிடி நினைச்சிருக்கிறன்தானக்கா சில நேரம் ஆனால் gifted student ஆ இருக்கோணும் என்டு எனக்கும் ஆசை.




நாங்கள் எல்லாருமே ஒருவிதத்தில் தனித்துவமானவர்கள் சுகன்யா.gifted student என்ற label ஓடதான் இருக்கோணும் என்டு அவசியமா என்ன...நீங்கள் நிறைய வாசியுங்கோ . ரீச்சர் சொல்றதை மட்டும் படிக்காமல் இன்னும் கொஞ்சமா தேடி ஆழமா விருப்பத்தோட படியுங்கோ. மற்றவர்களுக்கு நீங்கள் படிச்சதை விளங்கப்படுத்துற அளவுக்கு உங்களை தெளிவா வச்சிருங்கோ. மற்றவர்களுக்கு முன்மாதிரியா இருங்கோ. நிறையக் கேள்விகளைக் கேளுங்கோ பதில்களைத் தேடுங்கோ.ஒரே மாதிரியான புத்தகங்களை வாசிக்காமல் புதிய விசயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு ஏற்கனவே தெரிந்து கொண்ட விடயங்களில் உங்களைத் தகவமைச்சுக் கொள்ளுங்கோ...பிறகு அடுத்தமுறை என்னைக் காணேக்க நீங்களும் gifted student ஆக உணர்வதாக நீங்களே என்னட்ட சொல்லுவீங்கள்.

நீங்கள் நல்லாக் கதைக்கிறீங்கள் அக்கா...நிச்சயமா அடுத்த முறை உங்களை காணேக்க நீங்களே என்னைப் பார்த்து ஆச்சரியப்படுவீங்கள் சந்தோசப்படுவீங்கள்.

(ம் எனக்கு நல்லாக்கதைக்க மட்டும்தான் தெரியும்...அட்வைஸ் பண்றது ரொம்ப சுலபம்-இதை நான் சுகன்யாட்ட சொல்லேல்ல)

Saturday, September 13, 2008

காஞ்சிவரம் எப்பிடி காஞ்சிபுரமாச்சு ?

அம்மா நான் பிரகாஸ்ராஜ் ஐக்கண்டனான் :-)

வேலையால நேர வீட்ட போகாமல் லேற்றாப் போனாலே வீண் பிரச்சனைதான் அதான் போன் பண்ணின உடனேயே பிரகாஸ்ராஜ் ஐக் கண்டனான் என்று சொல்லிட்டன். அப்பிடிச் சொன்னதும் அம்மாட்ட இருந்து அடுத்து வரவேண்டிய கேள்வியான 'ஏன் பிள்ளை போனால் போற போற இடத்திலயே இருக்கிறதே வீட்ட போன் பண்ணோனும் என்று நினைக்கிறேல்லயே ' கேள்வி வரேல்ல. ஆ...அவர் எங்க வந்தவர்? படம் எடுத்ததோ? படம் எல்லாம் எடுக்கேல்ல என்ர போன்ல ஏதோ பிரச்சனை கமெரா வேலை செய்யாதாம். அங்கால மற்ற போனைத் தூக்கி வைச்சுக்கொண்டு தங்கச்சி கத்திக்கேக்குது ஏன் என்னைக் கூட்டிக்கொண்டு போகேல்ல...விஜய் ஜேசுதாசையும் பிரகாஸ்ராஜையும் விசாலையும் பார்க்கோணுமென்று ஆசை அதில விஜய் ஜேசுதாசைப் பார்த்திட்டன்..இண்டைக்கு பிரகாஸ்ராஜையும் பார்த்திருப்பன் எல்லாம் உம்மளாலதான் சின்னக்குகுகுகுகுகுகுகுகு என்று அவள்ட பல்லில நான் கடிபடத் தொடங்கேக்கயே ஓகே நான் கொஞ்ச நேரத்தில வீட்ட வந்திடுவன் என்று சொல்லிக் கட் பண்ணிட்டன் போனை.

நேற்று Toronto International Film Festival (TIFF) ல்ல காஞ்சிவரம் படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. படத்தை திரையிட இயக்குனர் பிரியதர்சன் நடிகர்கள் பிரகாஸ்ராஜ் சம்மு மற்றும் தயாரிப்பாளர் சைலேன்ரா சிங் ஆகியோர் வந்திருந்தார்கள். பிரியதர்சன் உரையாற்றும்போது அவர் போன வருடம் TIFF அனுப்பியிருந்த படத்தை மிகவும் பெருமையுடன் அவர்கள் நிராகரித்துவிட்டார்கள் அந்த நிராகரிப்புதான் தன்னை மீண்டும் புதிய உத்வேகத்தோடு காஞ்சிவரத்தை நெய்ய வைத்தது என்பதை பெருமையோடு சொல்லி நிறையக்கைதட்டுகள் வாங்கினார்.பிரகாஸ்ராஜ் 'ஹாய் செல்லம்' என்றபடி வந்தார். முன்பொருமுறை ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டபொழுது தானும் சிவப்புக் கம்பளத்தில் நடப்பேன் என்ற கனவு இன்று நிறைவேறியதென்றார்.தயாரிப்பாளரும் மகளாக நடித்த ஷம்மு வும் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். எல்லாம் முடிஞ்சு ஒருமாதிரி படம் தொடங்கிச்சுது.



இந்தப்படம் காஞ்சிவரத்திலுள்ளள நெசவாளிகளைபப் பற்றியது. கதை முழுக்க வேங்கடம் என்கிற பிணயக் கைதியின் மழைநேர வண்டிப்பயணத்தின் நினைவலைகளாகவே சொல்லப்பட்டிருக்கிறது.வேங்கடம் என்கிற பிரகாஸ்ராஜ் பட்டுடுத்தித்தான் தன் மனைவியைத் திருமணம் செய்வேன் என்று ஊரெல்லாம் சொல்லி வைத்துவிட்டு நூல் சேலையுடன் அன்னம் என்கிற ஸ்ரேயா ரெட்டியை மணந்து ஊருக்குக் கூட்டிவருகிறார். திமிருல வந்த தில்லானாவா இந்த ஸ்ரேயா என்றளவுக்கு அப்பிடி சாந்தமா இருக்கிறா அன்னம். தன் வாழ்நாள் முழுதும் பல பட்டுச்சேலைகளை நெய்த பிரகாஸ்ராஜின் தந்தை இறந்தபோது அவருடைய உடம்பைப் போர்த்துவிட ஒரு பட்டுத்துணியில்லாமல் ஒரு பட்டு நூலால் அவருடைய பெருவிரல்கள் கட்டப்படுவதன் மூலம் ஒரு நெசவாளியின் நிலமை சொல்லப்படுகிறது.அவர்களுக்கு பட்டை நெசவு செய்யத்தான் முடியும் அதை உடுத்தி அழகு பார்க்கும் வல்லமையில்லை.

ஒரு சேலையை நெசவு செய்வது முதல் அந்தச் சேலையின் நிறங்கள் அதில் வரும் டிசைன் எல்லாமே அந்த நெசவாளியின் சொந்தக் கற்பனை அல்லது படைப்பு. ஆனால் அந்தச்சேலையை பலநூறு ரூபாய்களுக்கு விற்றுச் சம்பாதிப்பது அங்கேயுள்ள முதலாளிகள். ஒரு சேலை நெசவு செய்ய 3-4 ரூபாய்கள்தான் கூலி. அப்படிச் சம்பாதிப்பதில் அவர்கள் வாழ்நாள் முழுக்கச் சேமித்தால்தான் ஒரு நெசவாளியால் ஒரு பட்டுச்சேலையை வாங்க முடியும். அப்படி தனக்கு வரப்போகும் மனைவிக்கு பட்டுச்சேலை வாங்கவென்று வெங்கடம் காசு சேர்க்கிறார் ஆனால் அது போதவில்லை அதற்குள் கல்யாணமும் நடந்துவிட்டது.

ஒருநாள் வேங்கடத்தின் முதலாளியின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகிறது. முதலாளி வேங்கடத்தையழைத்து நீதான் மிகத்திறமை சாலியாம் என் மகளுடைய திருமணப்புடைவையை நீதான் நெய்ய வேண்டும் என்கிறார். அந்தச்சேலையை வெள்ளைக்கார துரை முதல் அனைவரும் புகழ்ந்து தள்ள முதலாளி வேங்கடத்து போனஸ் எல்லாம் குடுக்கிறார். சந்தோசத்தில் வேங்கடம் அன்னத்திடம் அந்தச் சேலையைப் பற்றி வர்ணிக்க அன்னம் அந்தச் சேலையைத் தான் பார்க்கவேண்டும் என்கிறாள்.பட்டு நூலைத் திருடுகிறார்களோ என்ற சந்தேகத்தில் முதலாளியின் கட்டளைப்படி கோயிலில் வைத்துத்தான் பட்டுச்சேலைகள் உருவாக்கப்படுகின்றன அதனால் காஞ்சிவர நெசவாளிகளின் மனைவியருக்கு பட்டுச்சீலையை உடுத்துவது மட்டுமில்லை அதைக்கண்ணால் பார்ப்பதே பெரிய விசயம்.

இந்தச்சந்தர்ப்பத்தில் வேங்கடத்துக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது.குழந்தையின் வரவைக்கொண்டாட ஏற்பாடு செய்யபட்ட விழாவில் அவர்களின் வழக்கப்படி தந்தை தன் மகளின் காதில் ஒரு வாக்குறுதி சொல்லவேண்டும். வேங்கடம் தன் மகளின் காதில் " நீ வளர்ந்து பெரிய மனுசி ஆனதும் உன்னைப் பட்டுச்சேலை கட்டித்தான் புருசன் வீட்டுக்கு அனுப்பி வைப்பன் இது சத்தியம் " என்று சொல்கிறார். "முதல்ல பொண்டாட்டிக்கு பட்டுச்சீலையெண்டான் இப்ப மகளுக்கு ஏனிந்தப் பேராசை "என்று முணுமுணுப்பார்கள் வந்திருந்தவர்கள்.எம்.ஜி.ஸ்ரீகுமார் என்ற இசையமைப்பாளருக்கு இதுதான் முதல்படமாம். " பொன்னூஞ்சல் தொட்டிலேலே மயிலிறகு மெத்தையிலே மானே நீ உறங்கு உறங்கு ...ஆராரொ ஆரிரரோ "என்றொரு பாடல் வருகிறது. திரும்ப திரும்ப கேக்கோணும் போல இருந்திச்சு ஆனால் படத்தின் முடிவிலயும் அந்தப் பாடலைப் போட்டு நிறைய பேரை அழ வைத்துவிட்டார் இயக்குனர்.

ஊருக்கு முதல்முதலாக வரும் மோட்டார்வண்டியைப் பார்க்க அம்பலோதிப்படும் சனத்திரளில் மிதிபட்டு நோய்வாய்ப்படுகிறார் அன்னம்.தன் மகளுக்குக் குடுத்த வாக்குறுதியைக் கணவரால் காப்பாத்த முடியாதென்கிற கவலையில் வாடும் மனைவியயைத் தூக்கிச்சென்று தான் இரகசியமாகத் திருடிவரும் பட்டுநூல்களைக் கொண்டு தான் நெய்துவரும் பட்டுச்சீலையைக் காட்டி அன்னத்தை நிம்மதியாகச் சாகவிடுகிறார்.



மகளாக வரும் அந்த ஓட்டைப்பல்லிக் குட்டிப்பொண்ணும் சரி வளர்ந்த மகளாக நடித்த ஷம்முவும் சரி நன்றாக நடித்திருக்கிறார்கள். ஷம்முவுக்கு இது முதல் படமாம்.மகளுக்குத்தான் குடுத்த வாக்குறுதியைக் காப்பாத்த ஒரு பொதுவுடைமை வாதியான வேங்கடம் ஒரு திருடனாக சுயநலக்காரனாகிறார். சாரதி என்கிற ஒரு எழுத்தாளர் காஞ்சிவரத்துக்கு வந்து தன் பொதுவுடைமைக் கருத்துகளையும் புத்தகங்களையும் வேங்கடத்துக்கும் அவருடைய நண்பருக்கு வழங்கிவிட்டு சுடுபட்டு செத்துப்போக அவருடைய கருத்துக்களை ஏனைய நெசவாளிகளுக்குச் சொல்லி தாங்கள் எவ்வாறு முதலாளிகளால் சுரண்டப்படுகிறோம் என்று விளக்கி ஒரு அமைப்பைக் கட்டியெழுப்பும் வேங்கடம் கோரிக்கை வைத்தல் வேலைநிறுத்தம் இப்படியெல்லாம் செய்கிறார். இறுதியில் தன்மகளின் திருமணத்துக்காக பட்டுச்சேலை தயாராகவேணும் அதற்கு தான் பட்டுநூல் திருடியாகவேண்டும் அதற்கு தொடர்ந்து வேலை நடக்கவேண்டும் என்பதற்காக தோழர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிடவேண்டும். தோழர்களிடம் அவர்களைக் குழப்வுதற்காகவே மிகத்தெளிவாக ஒரு பிரச்சாரம் செய்வார் அந்தநேரம் அரங்கு முழுக்கச் சிரிப்புத்தான்.எல்லா மனிதருக்குள்ளயும் ஒரு சுயநலவாதி ஒளிந்திருக்கிறான் என்றதுண்மைதான்.

வேங்கடத்துக்கு ஒரு தங்கையிருக்கிறார். என்னைப்பொறுத்தவரைக்கும் அவர்தான் வில்லி. அவாவும் அவான்ர கணவரும் சேர்ந்து அழுது வடிச்சு வேங்கடம் தன் மகளுக்கு பட்டு வாங்க சேர்த்த காசைச் சுருட்டாமல் விட்டிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.

எல்லாம் சொல்லிட்டன் மிச்சக்கதையும் சொல்லலாம் போலத்தானிருக்கு ஆனால் பிறகு நீங்களொருதரும் படம் பார்க்காமல் விட்டிட்டால் அது எவ்வளவு பெரிய நட்டம்..ம் அதால வேங்கடத்தின் மகளுக்குத் திருமணம் நடந்ததா ? பட்டுச்சேலை கட்டும் அதிஷ்டம் அவளுக்கு வாய்த்ததா என்று படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தப்படம் பார்த்தவர்களிடம் ஒரு கேள்வி :
வேங்கடம் தன் மனைவி சாகும் தறுவாயில் தங்கள் மகளுக்காக தான் நெய்துகொண்டிருப்பதாக காட்டுவது ஒரு அழகான பச்சையும் சிவப்புமான சேலை ஆனால் கடைசிக்காட்சியல் காட்டப்பட்டது வேறு ஒரு சேலை மாதிரி எனக்குப் பட்டது...யாரும் கவனித்தீர்களா?

ஒரு படத்தின் வெற்றி அந்தப்படம் என்ன எண்ணங்களை எங்களிடம் விட்டுச்செல்கிறது என்பதைப் பொறுத்தது உண்மையெனில் நாங்கள் இந்தப்படம் பற்றியும் அதில் வரும் கதாபாத்திரங்களும் அவர்கள் பேசும் வசனங்களைப் பற்றியும் கதைத்துக்கொண்டு நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தையும் தாண்டி ரெயின் போறதைப் கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தோம் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு பொலிஸ் அதிகாரியொருவரின் தொப்பியிலுள்ள பிரிட்டிஸ் சின்னம்(?) கழன்று விழுந்துவிடும் அதை தைப்பதற்காக அந்த அதிகாரி ரொம்பக் கஸ்டப்படுவார்.பேருந்தை மறித்து ஒரு தையற்கடையில் போய் கனநேரமா உக்காந்திருப்பார். பொறுமையிழந்த பயணிகள் இப்ப அந்தச் சின்னம் இல்லாட்ட என்ன என்று சினக்க மற்றொரு அதிகாரி சொல்லுவார் அந்தச் சின்னமில்லாட்டா வேலை போயிடும் அப்ப மற்றொராள் கேப்பார் "ஏன் அப்பிடி" பொலிஸ் அதிகாரி சொல்லுவார் பிரிட்டிஸ் காரன் வச்சிட்டுப் போன சட்டம் ஏன் எதுக்கெண்டே தெரியாமல் நாங்கள் பின்பற்றுறம்" இப்பிடியான வசனங்களுக்கோ கதையினூடு இழையோடும் மெல்லிய நகைச்சுவைகளுக்கும் பஞ்சமில்லை.

முதல்லயே கேக்கணும் என்று நினைச்சன்...எல்லாரும் நல்லா இருக்கிறீங்கிளா ?