Custom Search

Friday, December 22, 2006

அழைத்தால் மௌனம் அதுதான் தருணம்

கலாபக்காதலன் படத்திற்கு இசையமைத்த நிருவின் மூங்கில் நிலா (2003) என்ற இசைத்தட்டில் இடம்பெற்ற பல பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது “அழைத்தால் மௌனம்” என்ற பாடல்.உன்னி கிருஸ்ணனின் குரலா அறிவுமதியின் வரிகளா அல்லது நிருவின் இசையா எது என்னைக் கவர்ந்ததென்றறியேன்.ஒருவேளை மூன்றும் சேர்ந்து தந்த மயக்கமோ?

இந்தப்பாடல் தவிர மூங்கில் நிலாவில் இடம்பெற்ற இன்னும் ஐந்து பாடல்கள் எனக்குப்பிடித்தபாடல்களின் பட்டியலில் உள்ளன.அந்தப்பாடல்களையும அழைத்தால் மௌனம் பாடலின் வரிகளையும் இன்று தருகிறேன்.தொடர்ந்து ஏனைய பாடல் வரிகளையும் தருகிறேன். பல காலமாக எழுதவேண்டும் நினைத்த இந்தப்பதிவு இன்றுதான் சாத்தியமாகியுள்ளது.

பாடல்களைக் கேட்க : http://www.raaga.com/channels/tamil/movie/T0000956.html

(1) “திருடா திருடா என்னைத் திருடடா திருடா இதழால் விரல் நுனிகளால் என்னைச் சிற்பமாக்கடா அழகா” -சாரங்கன்

(2) “காதல் போர்க்களம்தானா பார்வை ஆயதம்தானா அழகே இதழ் கொண்டு யுத்தம் செய்வோமா” -சுதன்ராஜ்;

(3) “என் சுவாசம் சேரும் வழியால் புயலாய் வந்தவளே” -சதாபிரணவன்

(4) “பெண்ணே போகாதே இரவை எரிக்காதே நிலவைச் சாம்பலாக்காதே” -பழனிபாரதி ( தமிழ்மணத்தில் எழுதுகின்ற பழனிபாரதியா இவர்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

(5) “புல் நுனியில் பட்டுத்தெறிக்கும் மழைத்துளியில் கரைந்தேன்” -பாவனா


அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம்

திடும் திடும் திடுமென உயிர் விழிக்கும் - அது
கனவுக்குள் வானவில் தொட அழைக்கும்
திடும் திடும் திடுமென உயிர் விழிக்கும் - அது
கனவுக்குள் வானவில் தொட அழைக்கும்
இது முகங்களின்(?) சடுகுடு விளையாட்டு - இருகுயில்களின் மெல்லிய இசைப் பாட்டு
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)

விடும் விடும் விடுமென பயம் தடுக்கும் - அது
உயிருக்குள் மூழ்கிட சுழல் பிறக்கும் (3)
இது துணிகளின் கடலென்னும் பசி பாட்டு???
இனி மழையினில் நெருப்பினைக் குளிப்பாட்டு???

அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் (2)
இமைத்தால் உடனே தவித்தே அழணும் (2)
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் .

Thursday, November 30, 2006

தூக்கம் கண்களைத் தழுவட்டுமே!


“ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்கு தூக்கம் போச்சே...” இப்படித்தான் எங்களில் 25 வீதமானவர்கள் அடிக்கடி பாடிக்கொண்டிருக்கிறம். ஒன்பது வீதமான ஆக்களின் நிலமை இன்னும் மோசம்...அவைக்கு எப்போதுமே நித்திராதேவியோட சண்டைதானாம். படுத்ததுதான் தாமதம் உடனே நித்திரை வந்துவிடும் அல்லது பக்கத்தில இருப்போரை வெட்டினாற்கூடத் தெரியாத மாதிரி நித்திரை கொள்பவர்களும் இருக்கிறார்கள். படுத்துப் பலமணி நேரங்களாகியும் நித்திரை வராமல் கடிகார முள்ளதிர்வதையும் இதயம் துடிக்கும் ஓசையையும் மட்டும் கேட்டுக்கொண்டு கூரையைப் பார்த்துக்கொண்டு ஆந்தைக்குப் போட்டியா விடிய விடிய முழித்துக்கொண்டு இருப்பவர்களுமுண்டு. ஏனிந்த வேறுபாடு? தூக்கமின்மை என்பது ஒருவித வியாதியா? தூக்கமின்மைக்கு என்ன காரணம்? நல்ல நித்திரை கொள்ள என்ன செய்யலாம்?

உணவு ,உடை, உறையுள் ,பாதுகாப்பு, அன்பு மாதிரி நிம்மதியான நித்திரையும் மனிதர்களுக்கு அவசியம்தானே? எவ்வளவு பணம் செலவளித்தும் நல்ல கட்டில் மெத்தையைத்தான் எங்களால் வாங்க முடியும். ஆனால் நல்ல தூக்கத்தை எங்க போய் வாங்கலாம்?

“நல்ல நித்திரைகொண்டு கன காலமாச்சு” என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். “நல்ல நித்திரை” என்பது அவரவருடைய வசதிக்கு ஏற்ப வேறுபடும். சிலருக்கு 5 மணிநேர நித்திரையே போதும் போதுமென்றிருக்கும். சில கும்பகர்ணன்களுக்கு 10 மணிநேர நித்திரையே போதாது போலிருக்கும் (அண்ணா, என்னை மன்னிச்சுக் கொள்ளு).

“நல்லா நித்திரை தூக்கி அடிக்கிற மாதிரி இருக்கும் போய்ப்படுத்தா நித்திரை கொள்ள முடியாமல் இருக்கு. மெதுவாக் கண்ணை மூடி தூங்க முயற்சி செய்து நித்திரை வாற நேரம் பார்த்து முழிப்பு வந்திடும்” இப்படி அர்த்தம் இல்லாமல் பலர் புலம்புவதை யாவரும் கெட்டிருப்போம். இவர் போல் தூக்கம் வராமல் அவதிப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் சில உளவியல் காரணங்களாக இருக்கலாம் அல்லது சுற்றுப்புறச்சூழல் காரணிகளாக இருக்கலாம். மனவழுத்தம், மனக்கவலை, போதைப்பழக்கம் போன்றவற்றால் அவதிப்படுவோர்தான் அதிகம் தூக்கமின்றித் தவிப்ப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவை தவிர உடம்பில் தீராத வலியுடையோர், நுரையீரல் இரத்தப்பை சம்பந்தமான நோயுள்ளோர், இரவு நேர வேலை செய்வோர்கள், நித்திரைக்கான மாத்திரை உட்கொள்வோர்கள், அதிகம் இரைச்சலான/குளிரான/வெப்பமான இடங்களில் வசிப்போர், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவோர் மற்றும் அடிக்கடி caffeine போன்ற பதார்த்தங்களடங்கிய பானங்களை அருந்துவோர் எனப் பலர் தூக்கமின்மையால் அவதியுறுகிறார்கள்...........

தொடர்ந்து வாசிக்க தாயகப்பறவைகள் சரணாலயத்துக்கு வாருங்கள்... :-)
http://www.thayakaparavaikal.com/nalamnadi.php

Saturday, October 07, 2006

Genital Wart

போன இதழில் Bartholin gland cyst பற்றி பார்த்தோம். இந்த இதழில் ஜெனிற்றல் வார்ட் அல்லது condyloma என்று அழைக்கப்படுகின்ற தகாத உடலுறவினால் ஏற்படும் தொற்றுநோய் பற்றி பார்ப்போம்.

பல விநோதங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நம்முடலில் நூற்றுக்கும் அதிகமான பாப்பிலோமாவைரஸ்கள் (papillomavirus) உள்ளன. தோல் சம்பந்தமான நோய்களோடு தொடர்புடைய இந்த வைரஸ்களில் கிட்டத்தட்ட 30 வைரஸ்கள் உடலுறவின்போதே பரப்பப்படுகின்றன. 90 % கருப்பைப் புற்றுநோய்க்குக் கூட இந்த பாப்பிலோமாவைரஸ்களே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது Oral, Genital மற்றும் Anal செக்ஸ் இன் போது பரவும் papillomavirus(6, 11, 30, 42, 43, 44, 45, 51, 52, & 54) உருவாக்கும் வீக்கம் அல்லது அழற்சியே ஜெனிற்றல் வாட்.

பெண்ணின் பிறப்புறுப்பின் வாசலில் நுண்ணிய வீக்கமாகத் தொடங்கிப் பின்பு பிறப்புறுப்பைச் சுற்றியும் குதத்திலும் மிகப்பெரிய திரட்சியாகப் பரவத்தொடங்கும். ஆண்களுக்கும் பிறப்புறுப்பின் நுனியில் தொடங்கிப் பின்னர் பீனஸ் சுவர்களிலும் குதத்தைச் சுற்றியும் பரவும் ஆனால் ஜெனிற்றல் வார்ட்டின் அறிகுறிகள் ஆண்களில் குறைவாகவே காணப்படும். Oral செக்ஸ் இல் ஈடுபடுவோருக்கு இந்த ஜெனிற்றல் வார்ட் வாயில் கூட வரலாம். Condom அணிந்த பாதுகாப்பான உடலுறவினில் கூட இந்த papillomavirus தொற்றக்கூடும். இந்த ஜெனிற்றல் வார்ட்டை உருவாக்கும் வைரஸ்கள் ஊடுருவிப் பல மாதங்கள் வருடங்களுக்குப் பிறகு கூட திரட்சிகளை உருவாக்கக்கூடும்.........


தொடர்ந்து வாசிக்க தாயகப்பறவைகள் சரணாலயத்துக்கு வாருங்கள்... :-)

http://www.thayakaparavaikal.com/nalamnadi.php

Friday, September 01, 2006

பார்த்தோலின் கிளான்ட் சிஸ்ற் (Bartholin's Gland Cyst)

- சினேகிதி-



















இந்து : ஹலோ டொக்டர்!

டொக்டர் : ஹலோ இந்து! என்ன இந்த விடிய வெள்ளன என்னத் தேடி வந்திருக்கிறாய்..என்ன விசயம்?

இந்து : அது வந்து டொக்டர்...

டொக்டர் : கமோன் இந்து என்னட்ட என்ன தயக்கம்? உன் அம்மாட்ட சொல்லாத உன் போய்பிரண்ட் ஐ பற்றியே என்னட்ட சொல்லியிருக்கிறாய் இப்ப என்ன புதுசா தயக்கம்?

இந்து : தயக்கம் என்றில்லை..கொஞ்சம் பயம் கொஞ்சம் குழப்பம்..அதான் உங்களிட்ட எப்பிடிக் கேக்கிறதெண்டு..
டொக்டர் : வெளிப்படையாப் பேசினாத்தான் குழப்பம் தீரும். என்ன விசயமம்மா?

இந்து : செக்ஸ்ல ஒருக்காலும் ஈடுபடாத ஆக்களுக்கும் ஜெனிற்றல் வார்ட் வருமா டொக்டர்?

டொக்டர் : இல்லை! ஜெனிற்றல் வார்ட் வாறதுக்கு தகாத உடலுறவு , கருத்தடை மாத்திரை உட்கொள்ளல் போன்ற பல காரணங்கள் இருக்கு. இப்ப உனக்கு குறிப்பா என்ன குழப்பம் என்று தெளிவாச் சொல்லு. அம்மா அப்பா என்னை நம்பி உன்னை இங்க தங்கிப் படிக்க விட்டிருக்கினம். என் தலைல கல்லைத் தூக்கிப் போட்டிடாதம்மா.

இந்து : இல்லை டொக்டர் அன்ரி...ஐ நெவர் காட் செக்ஸ் பட் எனக்கு வந்திருக்கிற கட்டின்ர அறிகுறிகளை வச்சு நான் கூகிள்ல தேடிப் பார்த்தன் . ஜெனிற்றல் வார்ட் ன்ர அறிகுறிகளோட ஒத்துப்போகுது அதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.

டொக்டர் : சரி காட்டு நான் பார்க்கிறன்.

இந்து : இல்லப் பறவாயில்ல நீங்கள் எனக்கு ஒரு பெயின் கில்லர் தாங்கோ. நான் எக்ஸாம் முடிய திரும்ப பின்னேரம் வாறன்.

தொடர்ந்து வாசிக்க தாயகப்பறவைகள் சரணாலயத்துக்கு வாருங்கள்... :-)

http://www.thayakaparavaikal.com/August-nalamnaadi.html

Tuesday, August 01, 2006

இணையத்தள அறிமுகம் - "தாயகப்பறைவைகள்"

இன்றைய இணையில்லா இணைய தொழில் நுட்ப இயக்கத்திற்கு ஏற்றவகையில் உலகின் மற்றைய மொழிகளுக்கும் சமமாய் சற்றும் குறைவில்லாவகையில் எம் தாய் மொழியாம் தமிழில் பெண்களின் உரிமைக்கான குரலை உரத்து சொல்லும் "தாயகப்பறைவைகள்" என்னும் மாத இதழாக இந்த இணைய இதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பெண்களின் பிரச்சனை மட்டுமா?? ஆண்களின் பிரச்சனைகளையும் அம்பலப்படுத்தத்தவும் தயங்க மாட்டோம். அவர்களிற்குமாய் எங்கள் குரல் ஓங்கியே ஒலிக்கும். பலநாட் கனவு சிலநாள் முயற்சி கண்முன்னே தாயகப்பறவைகளாக இணையவானில் பறக்க தாயாரான வண்ணம் இருக்கிறது.

வாசகரின் தேவையறிந்து, ஒரு செய்தி ஊடகம் என்ற கோட்டுக்குள் மட்டும் இன்றி உலக நடப்புகள், விளையாட்டுகள், கலாசாரம், விஞ்ஞான தொழிநுட்பம், என பல்வேறு பரிமாணங்களை எமது மாத இதழ் தாங்கி வருகிறது. அதுமட்டுமல்லாது தமிழ் தெரியாதோரும் பயன்படுத்தும் வகையில் காலப்போக்கில் பல்வேறு மொழிகளிலும் எமது தாயகப்பறவைகள் பறந்து வர உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள வண்ணம் உள்ளன.

இணைய உலகம் ஒரு சமுத்திரம் அதில் சிறு துளியாய் இணைகிறது எங்கள் தாயகப்பறவைகள். எங்கெங்கோ வெவ்வேறு கண்டங்களில் வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு பறவைக்கூட்டம் தாயகப்பறவைகள். கனவுகளைய்க் களைந்து கற்பனைகள் கலைத்து நியம் தேடும் எங்களோடு கூட பயணிக்கவும் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவும். இளைய முதிய எழுத்தாளப் பெருமக்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம்.

இணையத்தள முகவரி:- www.thayakaparavaikal.com

Wednesday, July 26, 2006

கனவாகிப் போனவர்கள்












தமிழமுதத்துக்காக
-சினேகிதி-


அம்மம்மா எனக்கு இன்னுமொரு பிடி சோறு வேணும்.மிளகாயும் சேர்த்து வையுங்கோ.

இந்தாடி ஆத்தா உனக்குத்தராம ஆருக்குக் குடுக்கப்போறன்.

என்ர கையில சோத்தை வைக்கும்போதே அம்மம்மான்ர கண்ணிரண்டும் பொல பொல என்று கண்ணீர் வடிக்குது.

ஏனழுறீங்கள்?? உங்களுக்குச் சோறு காணதென்டோ?? எனக்குக் காணும்.இந்தாங்கோ இதை நீங்கள் சாப்பிடுங்கோ.

அம்மம்மா இன்னும் பெருசா அழத்தொடங்கிட்டா.நானும் அழத்தொடங்கிட்டன்.நானழுறதைப் பார்த்திட்டு அம்மம்மா அழுறதை நிப்பாட்டிட்டா.

அம்மம்மா .. ஏனழுதனீங்கள் ?

இல்லடா சின்னமாமான்ர ஞாபகம் வந்திட்டு....அவனும் உன்னை மாதிரித்தான் குழையல் சோறும் மோர் மிளகாய்ப் பொரியலும் என்றால் இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவான்.இன்றைக்கு மட்டும் என்ர பிள்ளை என்னோட இருந்திருந்தால் என்னையிப்பிடி கஸ்டப்பட விட்டிருப்பானே.

அம்மம்மா நீங்கள் எல்லோ சொன்னீங்கள் சின்னமாமா குட்டிச் சித்தீன்ர கல்யாணவீட்டுக்கு வருவார் எண்டு.ஆனால் அவர் வரேல்லயே.

அவன் இண்டைக்கு வருவான் நாளைக்கு வருவான் என்றுதான் இந்தப் பத்து வருசமாச் சொல்லிக்கொண்டிருக்கிறன்.எனக்குக் கொள்ளிபோடவாவது அவன் வரோணும்.

அம்மம்மா ரியுூசன் ரீச்சர் சொன்னவா உங்கட சின்ன மாமா திரும்ப வர மாட்டார்.உயிரோட இருந்தாத்தானே அவர் வாறதுக்கெண்டு.ஏனம்மம்மா அவா அப்பிடிச் சொன்னவா.
என்ர கடவுளே ....குழந்தைப்பிள்ளையளிட்ட என்ன கதைக்கிறதெண்டு தெரியேல்ல..இதுகளெல்லாம் ஒரு ரீச்சர்.அவாட்ட உன்ன கொம்மா ரியூசனுக்கு விடுறா.ஆவா அப்பிடித்தான் சொல்லுவா கானவிக்குட்டி.நீ இருந்து பாரன் சின்னமாமா ஒருநாளைக்கு வரத்தான் போறார்.அவையிவை சொல்றதையெல்லாம் கேக்காம கெரியாப் போய் படுத்து நித்தா கொள்ளுங்கோ நாளைக்குப் பள்ளிக்கூடமெல்லோ.

சரி அம்மம்மா நீங்களும் படுங்கோ.குட்நைட்.

++++++++++++++++++++++++++++++++++++

அம்மா

ம்

அம்மா

ம்..என்ன கானவி நீ இன்னும் நித்திரை கொள்ளேல்லயோ.

அம்மா சின்னமாமாக்கு என்னைத் தெரியுமோ?

என்ன இப்ப திடீரெண்டு சின்னமாமான்ர ஞாபகம்?

சின்னமாமாக்கு என்னைத்தெரியோமெண்டெல்லோ கேட்டனான் உங்களிட்ட.

உதான் உதான் உந்த முன்கோபமும் வாயும்தான் இன்டைக்கு அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று கூடத்தெரியாமா எங்களெல்லாரையும் அலைக்கழிக்குது.உரிச்சு வச்சு உருவத்தில குணத்தில படிப்பில எல்லாத்திலயும் அவனைப்போலவே வாறாய் நீயும்.

உண்மையாவோம்மா?அப்ப சின்னமாமா என்ன மாதிரியோ இருப்பார்? எங்க பார்ப்பம் படம் காட்டுங்கோ.

அவன்ர படத்தை நடுக அம்மம்மா பார்த்து அழுறா என்று பெரிய மாமா எல்லாப்படங்களையும் கொண்டுபொய் றங்குப்பெட்டிக்க வச்சிட்டார்.பிறகு எடுத்துக் காட்டுறன்.

சரி பின்னச் சொல்லுங்கோ சின்னமாமாக்கு என்னைத் தெரியுமோ தெரியாதோ?

அப்ப உனக்கொரு இரண்டரை வயசிருக்கும்.ஒரு சித்திரைப் பொங்கலுக்கு மொறட்டுவலிருந்து வந்து நிண்டவன்.அந்த நேரம் யுனிவர்சிற்றிப் பெடியங்கள் எல்லாரையும் சந்தேகப் பட்டு ஆமிக்காரர் பிடிச்சுக்கொண்டு திரிஞ்சவங்கள்.இவன் சொல்லாமக் கொள்ளாம நேர இங்க வந்திட்டான்.அன்றைக்கிரவே தாத்தா எவ்வளவு கெஞ்சினவர் இவனை உடனே முல்லைத்தீவில அப்பப்பான்ர பண்ணைல போய் நிக்கச் சொல்லி.இந்தப் பிடிவாதம் பிடிச்சவன் யாற்றயும் சொல் கேட்டாத்தானே. விடாப்பிடியா தானிங்கதான் நிப்பன் என்று நிண்டவன்.தாத்தா அடிக்கப்போக பக்கத்தில கிடந்த பானையத் தட்டி விட்டான் அது அம்மியோட போய் அடிபட்ட சத்தத்துக்கு நித்திரையாக்கிடந்த நீ வீரிட்டுக்கத்தத் தொடங்கிட்டாய்.
உன்னில சின்னமாமாக்குச் சரியான விருப்பம்.உன்னையும் தூக்கிக்கொண்டு "எனக்கென்னமும் ஆகோணும் என்று விதியிருந்தால் அது எங்கயிருந்தாலும் நடக்கும்.ஏற்கனவே என் இரண்டு பிரண்ட்ஸ் ஐ உயிரோட என் கண்முன்ன துலைச்சிட்டுத்தான் இங்க வந்து நிக்கிறன்.நான் இப்ப எங்கயும் போறதா இல்லை.என்னோட மல்லுக்கட்டாம உங்கட உங்கட வேலையைப் பாருங்கோ எல்லாரும்" ன்று சத்தம் போட்டிட்டுத் தோட்டத்துக்குப் போனான்.போனவன் போனவன்தான். திரும்பி வரவேயில்லை.

ஏன் திரும்பி வரேல்ல? அப்பா நானிப்பிடி திரும்பி வந்தனான்?

தோட்டத்துக்க நிக்கேக்குள்ள ஆமி வந்து ட்றக் ஸ்டாற் பண்ணேல்ல தள்ள வரச் சொல்லி சின்னமாமாவையும் அவன்ர பிரணட்ஸ் இரண்டுபெரையும் கூட்டிக்கொண்டு போனவங்களாம்.உன்னை பொன்னுத்தாத்தாதான் வீட்ட கூட்டிக்கொண்டு வந்தார்.சின்னமாமா வருவானென்று இரவு முழக்க முத்தத்திலயே சாக்குக்கட்டில்ல இருந்தம் அவன் வரேல்ல.அடுத்த நாள் விடிய பள்ளத்தில கிடந்த அவனோட போன இரண்டுபேற்ற உயிரில்லாத உடம்பைத்தான் கொண்டு வந்தினம்.அன்றைக்கு தாத்தாக்கு முதல் மாரடைப்பு வந்தது.வெத்திலைல மை போட்டுப் பார்த்தவர் சொன்னதைக் கேட்டுக் களுத்துறைச் சிறைச்சாலைக்கு அலைஞ்சலைஞ்சு அங்கயும் இல்லையென்ற அலுப்பிலயே அடுத்த கிழமையே அவர் எங்களையெல்லாம் தவிக்க விட்டிட்டு ஆண்டவனிட்ட போய்ச்சேர்ந்திட்டார். இப்ப பெரிய மாமாதான் தன்ர சுமையைக் குறைக்க சின்னமாமா எப்பவாவது ஒருநாள் வருவான் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.அம்மம்மாக்கு எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சே பிறசர் கூடிக்கொண்டிருக்கு.இனிம நீ அம்மம்மாட்ட மாமாவைப் பற்றிக்கேக்கிறேல்ல சொல்லிப்போட்டன்.

அம்மா பின்ன ஏன் எங்கட ரியுூசன் ரீச்சர் சின்னமாமா உயிரோட இல்லையென்று சொன்னவா?

இத்தின வருசமா வராதவன்...எங்கயாவது உயிரோட இருந்தா ஒரு கடிதமாவது போட்டிருப்பான் தானே.அதான் சனமெல்லாம் அப்பிடிச் சொல்லினம்.

கானவி பத்து மணியாச்சு..அம்மாவும் பொண்ணும் .இன்னும் நித்திரை கொள்ளேல்லப்போல...

இல்லையம்மம்மா இந்தா நித்திரை இதோ பக்கத்தில வந்திட்டுது.நான் நித்தா.

குட்நைட் அம்மா.

குட்நைட் கானவி.

+++++++++++++++++++++++++++++++++++++

கானவி!

என்னம்மா?

நாளைக்கு அம்மம்மான்ர திவசம் அம்மா விடிய எழும்போணும் சமைக்க.றூமுக்க பால் வைச்சிருக்குக் குடிச்சிட்டுப் படுங்கோ. விடிய லெக்ஸர் இருக்கெண்டிட்டு இன்னும் என்ன கம்பியுூட்டர்ல தட்டிக்கொண்டு..

அம்மா இப்ப ஊரில நடக்குறதுகளை வாசிக்க தெச்சு மாமான்ர ஞாபகம் வந்திட்டு..அதான் அவரைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறன்.10 நிமிசத்தில படுக்கிறன்.

கெரியாப்போய்ப் படுங்கோ.குட்நைட்!

குட்நைட்மா.

+++++++++++++++++++++++++++++++++++++

-இந்தச் சின்ன மாமா போல எத்தினபேருக்கு இப்பிடி கனவாய்ப்போன உறவுகளுண்டு. மகனைத்தேடி அம்மா, அண்ணாவைத்தேடி சோதரர்கள், கணவனைத் தேடி மனைவி, தந்தையைத் தேடிப் பிள்ளைகள் ,காதலனைத்தேடி காதலிகள் , நண்பனைத்தேடி நண்பர்கள் இப்படி எத்தனை பேர் காணமால் போன உறவுகளின் நினைவுகளைச் சுமந்தபடி இன்னமும் அவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.-

Wednesday, July 12, 2006

என்ன தான் விசித்திரமோ?

















கரை தேடும் அலை மீண்டு(ம்) கடல் சேர்கிறது
இலைஉ திரும் மரம் மீண்டும் துளிர் விடுகிறது
மண் வீழும் நீரும் ஆவியாய் விண் மீள்கிறது

என்ன தான் விசித்திரமோ?
பிரிந்து போன நம் காதல் மட்டும்
இன்னும் உயிர்ப்படைய வில்லை

தரித்து நிற்கும் புகைவண்டி மீண்டும் பயணிக்கிறது
இடைவேளைக்குப் பின்னரும் திரைப்படம் தொடர்கிறது
நின்று போன யுத்தம் மீண்டும் தொடர்கிறது

என்ன தான் விசித்திரமோ?
நின்று போன நம் காதல் மட்டும்
மறுபடி தொடரவே யில்லை :wink

-சினேகிதி-

கொள்ளையின்பம் தரும் மழலைகள்













எல்லாற்ற வீட்டிலயும் மழலைச்சத்தம் கேட்டிருக்கும் கேட்டுக்கொண்டிருக்கும் இல்லாட்டா இனிம கேக்கும் தானே?அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பண்ணிய குறும்புகளையாவது ரசிச்சிருப்பீங்கள் தானே:-)

எங்கட வீட்டயும் இரண்டு பபாக்கள் இருக்கினம்.இவை செய்யுற ஒவ்வொரு சின்னச் சின்னச் செயல்களும் நல்ல ஒரு கவிதை வாசித்த சுகத்தைவிட கூடச் சந்தோசம் தரக்கூடியவை.அப்படி நான் ரசிச்சு சிரிச்ச சில சந்தர்ப்பங்களை உங்களுக்குச் சொல்கிறேன் அதேமாதிரி நீங்கள் ரசித்தவற்றையும் சொல்லுங்கள்.

சின்னாக்கள் வடிவாக்கதைக்க முதல் திக்கித் திக்கி அரைகுறை வார்த்தைகளால் கதைப்பினம்.
கவினுக்கு இரண்டு வயசு.ஒரு சில வார்த்தைகள் மட்டுமே கதைச்சார் இப்ப " அத்தி அண்ணா பார்க் டொம்மா" என்று ஒவ்வொருநாளும் அஞ்சுமணிக்கு நச்சரிக்கத் தொடங்குவான்.சித்தி அண்ணாவை பார்க்குக் கூட்டிக்கொண்டு போங்கோ என்றதுதான் அதின்ர அர்த்தம்.தம்பி பிறந்தவுடனே எல்லாரும் அண்ணா என்று சொல்லிப்பழக்கித் தன்னைத்தானே அண்ணா என்று கூப்பிடுறார்.

தண்ணில விளையாடுறது எல்லாச் சின்னப்பிள்ளையளுக்கும் விருப்பம் போல.கவிணும் "அண்ணா கும் கும் குளிக்கிப்போ" என்று சொல்லுவார்...இன்று மழை பெய்தபோது ஓடி வந்தார் வந்து " அத்தி தாத்தாக்கார் அப்பாக்கார் மாமாக்கார் கும் கும் அ அ".

ஆதிப்பட அத்தி அத்திக்காய் பாட்டுப்போட்டாத்தான் சாப்பாடு தீத்தலாம்.வானுக்குள்ள பாட்டுப்போட்டா "சுற்றும் விழிச்சுடரே " ,"அத்தி அத்திக்காய் " ,"ரா ரா" இப்பி அவருக்கெண்டு கொஞ்ச பாட்டிருக்கு.பாட்டின்ர ஆரம்ப இசை வரவே அவர் பாடத் தொடங்கிடுவார் மிச்ச பாட்டு. அதே மாதிரி ப்ளு குளூஸ் விக்கிள்ஸ் என்றாக்காணும் சாப்பாடும் வேண்டாம்.

கவின்ர பக்கத்துவீட்டு பிரண்ட்ஸ் கொஞ்சம் பெரிய ஆக்கள்.இப்ப கின்டர்கார்டின் போயினம்.அவேன்ர அம்மம்மா சொல்லுவா இவங்கள பக்கத்தில வச்சுக்கொண்டிருந்தா ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சுக் கதைக்கோணும் என்று.ஒருநாள் தெரியாத்தனமா கெட்டவார்த்தை என்று சொல்லிட்டாவாம் உடனே அவான்ர பேரன்கள் இரண்டு பேரும் ஓ ஓ என்று சொல்லத்தொடங்க தானுடனே "excuse ma french " என்று சொல்ல அவை உடனே "hmm that wasn't french" என்று சிரிக்கினமாம்.
இப்பிடி நீங்கள் ரசித்தவற்றைச் சொல்லுங்கள். :)

-சினேகிதி-

Monday, July 10, 2006

மல்ரிபிள் பேர்ஸனாலிற்றி டிஸ்ஓடர்










இந்தப்பெயர் நமக்குப் புதிதில்லை.தமிழ்ச்சினிமாக்களில் அடிக்கடி தடக்குப்படும் வித்தியாசமான மனநோய்.சந்திரமுகில ஜோதிகா,அந்நியன்ல அம்பி ,பார்த்திபனுடைய ஒரு படம் இப்படி நிறையப் பார்த்து விட்டோம்.

அதிசயமான புதிரான பலர் அறிய ஆவலாயுள்ள உளவியல் சிக்கல்களில் விவாதத்துக்குரியதும் ஆராய்ச்சியாளர்களோடு மல்லுக்கட்டும் ஒரு மனநோய்தான் இந்த MPD.

இவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவருடைய குணாதிசியங்கள் இருக்கும்.ஒவ்வொரு குணாதிசயத்தையும் ஒவ்வொரு "Alter" என்று சொல்வார்கள்.ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு அல்டர் இவர்களில் ஆதிக்கம் செலுத்தும்.உதாரணமா அந்நியனில் விக்ரம் சில நேரம் அந்நியனாகவும் சில நேரம் அப்பாவி அம்பியாகவும் அட்டகாச றெமோகாவவும் வருவாரே.இந்த அல்டரில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் மருத்துவரிடம் வரும் MPD க்கு தன் அல்டர்களைப் பற்றி அநேகமாகத் தெரிந்திருக்காது ஆனால் அல்டர்களுக்கு தம் நிலையான பாத்திரம்(original patient) பற்றியும் தன் மற்ற அல்டர்களைப் பற்றி முழுவிபரமும் தெரியும்.இந்த அல்டர்கள் வேறு வேறு பிரதேசங்களில் வசிக்கும் வெவ்வேறு வயதுடைய வெவ்வேறு இனமாகவோ ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் என்பது மற்றொரு வியப்பூட்டும தகவல்.

MPD உள்ளவர்களை சோதனைக்குட்படுத்தி அறிந்த ஆச்சரியமான உண்மைகளில் இவர்களுக்கு வெவ்வேறு இசை ரசனை, IQ ,வித்தியாசமான ஒவ்வாமைகள் இருப்பதும் அடங்கும்.

இந்த MPD க்கள் தங்கள் சின்ன வயதில் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப் பட்டிருக்கக் கூடும் என்பது உளவியலாளர்களின் கருத்து.இந்த MPDக்களின் அல்டர்கள் இவர்களின் ஒன்பதாவது வயதுக்கு முதலே உருவாகத் தொடங்குகிறார்கள்.ஒவ்வொரு அல்டரும் ஒவ்வொரு விதமான பாலியல் துன்புறுத்தலின்போது வளரத்தொடங்குகிறது.இந்த MPDயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் என்பது கசப்பான உண்மை.

-சினேகிதி-

நீ இல்லாத நான்

உனக்குப் பிடித்த பாடல்களாலும்
உன்னை படித்த நாட்களாலும்
உன்னை வடித்த வரிகளாலும்
திமிருற்ற எந்தன் ஏட்டை
அழித்து விட்டு எனக்கு நானே
சொல்லிக்கொண்டேன நம் காதல்
கலைந்து விட்டதென்று

காலையில் தினமும் கண்சிமிட்டும் பகலவனால்
உன் துளிர்ப்புன்னகைச் சேமிப்பெடுத்து
இன்னமும் ரசிக்கிறேன் சிலிர்க்கிறேன்
இருந்தும் உன்னை விட்டு விலகி விட்டேன்

சில்லென்று மெய் நனைக்கும்
ஒவ்வொரு நீர்த்துளியும்
உன் ஸ்பரிசயமாய் படர்ந்தன
ஆனாலும் உன்னை மறந்து விட்டேன்

உட்கொள்ளுமோர் பருக்கையிலும்
நிராசையாகிப்போன நம் ஆசைகள்
நளினத்தோடு எள்ளி நகையாடின
என்றாலும் நாம் பிரிந்து விட்டோம்

பார்வையில் பாசையில் தூண்டலில்
துலங்கலில் நிறத்தில் மணத்தில்
சுவையில் தூக்கத்தில் கனவில்
நினைவில் எங்குமாக எல்லாமாக
நீக்கமற நீ நிறைந்திருக்கலாம்!

அதனாலென்ன
எனக்கு நீ இல்லாத நான் கிடைத்துவிட்டேனென
உரக்கச் சொல்லிக்கொள்வேன்- உண்மையாகாதா?

-சினேகிதி-