Custom Search

Monday, June 11, 2007

நிமிர்வு 2007 ம் தாசீசியஸ் மாஸ்டருடனான சந்திப்பும்

தாசீசியஸ் மாஸ்டரை மாலை 4.30 க்கு நான் நந்தியா மற்றுமொரு நண்பனும் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம் ஆனால் லேற் கோச்சி ஒன்றால தாமதாகவே போய்ச்சேர்ந்தோம்.ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் ஏற்கனவே அ.மங்னை அவர்களின் நாடகப்பட்டறை நடந்துகொண்டிருந்தது.வேலை காரணமாக காலையில் நடந்த நாடகப்பட்டறைக்குப் போகமுடியவில்லை.அதே இடத்துக்கு தாசீசியஸ் மாஸ்டரைச் சந்திக்கச் சென்ற போது அங்கே மங்கையையும் பார்வதி மிஸ்சையும் கண்டு கதைத்தபோது சுமதி ரூபனைக் காணாதது நிம்மதியாக இருந்தது:-) கண்டிருந்தால் நாடகப்பட்டறைக்குப் போகாமல் விட்ட குற்ற உணர்வு இன்னும் அதிகமாகியிருக்கும்.

மாஸ்டர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.தன் கல்வி தொழில்முறைகளைப் பற்றி நிறையப்பேசினார்.ஆழமான தெளிவான தங்குதடையற்ற பேச்சு.மாஸ'டரைப் பற்றித் தெரியாதவர்கள் பிரபாண்ணாவின் " தாசீசியஸ் பேசுகிறார்...! " ஐ வாசியுங்கோ சரியா.எங்கள் மூவரைப்பற்றியும் கேட்டறிந்துகொண்டு தன் நோட்புக்கில் எழுதி வைத்துக்கொண்டார்.பின்னர் தமிழ்க்குடிலைப்பற்றிய பேச்செழுந்தது.நேரமின்மையால் தமிழ்க்குடிலில் நேரம் செலவழிக்க முடியவில்லை என்றும் தமிழ்க்குடிலை ஒரு 24 மணித்தியால வானொலியாகத் தொடங்கி நியுஸிலான்ட் அவுஸ்ரேலியா தொடக்கம் கனடா வரை தமிழர்கள் செறிந்து வாழும் பாகங்களிலிருந்தும் பலர் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் செயற்திட்டத்தைப்பற்றி்ச் சொன்னார்.கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் ஆகியிருக்கும் தேத்தண்ணி குடிக்ப்போவமா என்றார்.இல்லை நாங்கள்தான் உங்களுக்குத் தேத்தண்ணி வாங்கிக்கொண்டு வந்திருக்கோணும் என்றோம் " ஓ அப்ப கொண்டு வந்தனீங்களா எங்க தாங்கோ தாங்கோ " என்றார் நகைச்சுவையோடு. நாங்கள் நிமிர்வு 2007க்குப் போகவேண்டியிருந்ததால் விடைபெற்றுக்கொண்டோம்.

நிமிர்வு 2007

செல்வி சுபாங்கியும் செல்வன் சிறீயும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வளங்கினார்கள். பொன்.சிவகுமார் அண்ணாவின் நினைவுநாளான மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு நடந்த நிமிர்வு 2007 தமிழ் இளையோரமைப்பைச் சேர்ந்த சர்மி கனடாக் கொடியை ஏற்றி வைக்க ஆரம்பமானது.மேஜர் நித்திலாக்காவின் தாயார் திருமதி.செல்வநாயகம் அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து சிவகுமாரண்ணாவின் படத்திற்கு அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.தொடர்ந்தது அகவணக்கம். அடுத்து செல்வி நிவேதா இராமலிங்கம் " தாய் மண்ணே உனக்கு முதல் வணக்கம் " என்ற பாடலுக்கு வரவேற்பு நடனமாடினார்.தொடர்நது தமிழிளையோரமைப்பைச் சேர்ந்த ஜெனிற் மாணவர் எழுச்சி நாளைப்பற்றிய உரையில் ஆளுமினம் தமிழர்களின் கல்வியில் கத்தி வைத்ததில் தொடங்கி மாணவர்கள் அனைவரும் எமது பிரச்சனைகளை வெளியுலகுக்கு ஓங்கி உரைக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையுட்பட மாணவர் எழுச்சிநாள் பற்றிய பலவிடயங்களைக் கூறிச்சென்றார்.

அடுத்து இடம்பெற்ற நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்தது நிவேதாவின் மாணவர்கள் வழங்கிய "ஆடிப்பாடுவோம் கவலைகள் மறந்தாச்சு புதுக்கவிதையும் பிறந்தாச்சு" என்ற பாடலுக்கான கோலாட்டம்.சிறுமிகள் நன்றாகவே பழக்கியெடுத்திருக்கிறார் நிவேதா.இரண்டு சிறுமிகள் இடையில் தடுமாறினாலும் சமாளித்துக்கொண்டு நல்லதொரு நடன நிகழ்வைத்தந்திருந்தார்கள்.அரங்கு நிறைந்து இருக்கைகள் இல்லாமல் நின்றுகொண்டிருந்தவர்கள் என அரங்கம் நிறைந்த கைதட்டலைப் பெற்றுக்கொண்டார்கள் சிறுமிகள். இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெற்ற போதிலும் எல்லா நிகழ்வுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.என்னைக் கவர்ந் இன்னும் மூன்று நிகழ்வுகள் இளையோரமைப்பினர் வழங்கிய "நிஜம்" என்ற நாடகம். கலாநிதி குலமோகன் ஆசரியரின் மாணவர்கள் வழங்கி "அறுவடை " மற்றும் U OF T மாணவர்கள் வழங்கிய " சிதைப்புக்கள்" என்ற Monologue.

"நிஜம்" யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படும் இன்னல்களைக் கருவாகக்கொண்டது.சமூக நிகழ்வுகளில் அக்கறை கொண்ட திறமையான மாணவர்களின் வாழ்க்கை இராணுவத்தினரால் எப்படி சீரழிக்கப்படுகிறதென்பதை இந்த நாடகத்தின் மூலம் காட்டியிருந்தார்கள்.அப்பா இல்லாத குடும்பத்தை ரியூசன் குடுத்து அந்தப் பணத்தில் தானும் படித்துக்குடும்பத்தையும் காப்பாற்றும் மாணவன் சிவா தன் கண்முன்னே தன் நண்பன் வெள்ளை வானில் கடத்தப்படுவதைப் பார்த்துக்கொதித்துப் போய் அடுத்த முறை இராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையும்போது அவர்களை எதிர்க்கிறான்.இன்னொரு நண்பன் இராணுவத்தினரைப் பார்த்துக் கூழை கும்பிடு போடுகிறான்.அதற்கு சிவா "எங்கட உரிமையை நாங்கள் கேக்க நீ ஏன்டா பூஞ்சிப் பூஞ்சி அவங்களிட்டப் போறாய்" என்று கேப்பான் அதற்கு நண்பனோ "டேய் நாங்கள் இப்பிடியே இருந்தா எப்படா graduate பண்றது " என்று ஆதங்கப்படுவான். அடுத்த காட்சியில் சிவாக்குப்பிடித்த மீன் குழம்பு சமைத்து வைத்துக்கொண்டு காவலிருக்கும் அம்மாவும் படித்துக்கொண்டிருக்கும் தங்கையும்.சிவா கல்லூரியால் வந்த கோலத்தைப் பார்த்துத்தாய் சண்டை போடுவாள் "நீ ஏன் அவங்கட வம்புக்குப் போறாய்? எனக்கு இருக்கிறது நீ ஒரு பிள்ளை " அதற்கு சிவாவோ " அம்மா இஞ்ச வாண எல்லாரும் எனக்கொரு பிள்ளை என்று அழுதா அப்ப ஆர்தாண இவங்களைத் தட்டிக்கேட்கிறது : நீ வீட்டைப் பார்க்கிறாய் நான் நாட்டை நினைக்கிறான்" என்பான்.சிவா சாப்பிட அமரும்போது இராணுவத்தினர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாய் தங்கையின் கண்முன்னே சிவாவைக்கொல்ல தாயாக நடித்திருந்த சுமி ஒரு கத்து கத்தினா ஐயொ எனக்குக் கண்ணால தண்ணி வந்திட்டு அப்பிடியொரு நடிப்பு. பல்கழைக்கழக மாணவர்களுடைய பெயர் விரிவுரையாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் வளாகச்சுவரில் ஒட்டப்பட்டது பாடசாலை மாணவி இராணுவத்தினரால் கடத்தப்பட்டது என அனைத்து நிகழ்வுகளையும் பிரதிபலித்த இந்த " நிஜம் " சிறப்பான நெறியாள்கையுடன் அரங்கேறப்பட்டிருந்தது. நாடகத்தின் முடிவில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட கடத்தப்பட்வர்களின் பெயர் தாங்கிய அட்டைகளை ஏந்திய படி அனைவரும் நிற்க அவர்கள் கொல்லப்பட்ட கடத்தப்பட்ட விபரங்கள் வாசிக்கப்பட்டது.இந்த நாடகத்தின் சிறப்பு என்னவெனில் நாடகம் முழுதும் ஆங்கிலத்தில் Narrator ஒருவர் திரைக்குப்பின்னால் நின்று வாசித்ததுதான்.நிமிர்வுக்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் சொல்ல வந்த செய்தி நிச்சயமாகச் சென்றடைந்திருக்கும். இந்த நாடகத்தை இன்னும் பல சர்வதேச மேடைகளில் ஏற்றவேண்டும்."கொண்டாட்டம்" போன்ற பல்கலாச்சார மக்கள் கூடும் நிகழ்வுகளில் எல்லாம் இப்படியான நாடகங்களுக்கு இடம்கொடுத்தால் எம் பிரச்சனைகளை இலகுவாக மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

"அறுவடை "

நகைச்சுவையாகப் பலசேதிகளைச் சொல்லிற்று.

இரண்டு வயோதிபர்களின் உரையாடலோடு தொடங்கியது.அவர்கள் 'Donut' ஐ சீனிவடை என்று கதைத்ததை நினைத்தால் இப்பவும் சிரிப்பு வருது.அறுவடை என்று எழுதியதை இங்கு தமிழ் படிக்கும் ஒரு சிறுவனை வாசிக்கச்சொல்வார்கள் அவன் அருவடை அறுவாடை என்று திக்குவான் அப்பொழுது அங்கு வரும் ஒரு அக்கா முத்தமிழைப் பற்றி அழகாகச்சொல்வார் அப்ப அங்கு வரும் இன்னொரு சிறுவனும் சேர்ந்துகொண்டு சும்மா பிலம் காட்டதயுங்கோ எங்களுக்கும் செந்தமிழ் தெரியும் இப்ப பாருங்கோ " நீ முத்தமொன்று குடுத்தால் முத்தமிழ் வெக்கப்பட்டுச் சிரித்தால் செந்தமிழ் பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்" என்று டான்ஸ் ஆடுவாங்கள் 2 பேரும். அந்த அக்கா சொன்ன வரிகளில் ஒன்று "எங்கள் வயலில் இப்பொழுது விதைக்பட்டிருப்பது நெல்மணிகளல்ல எம்முறவுகள்".அறுவடையின் இடையில் இரண்டு நடனமும் இடம்பெற்து" ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை" மற்றும் " ஆண்டாண்டு காலமதாய் நாமாண்டு வந்த பூமி ".

அடுத்து U OF T மாணவர்கள் வழங்கிய "சிதைப்புக்கள்". கல்லறையிலிருந்து எழுந்து வரும் நால்வர் தங்களுடைய கதையைச் சொல்லுவதா அமைந்திருந்தது இந்த Monologue. ஒரு மீனவர் தன் அன்பான மனைவியும் குழந்தைகளும் தானில்லாமல் என்ன அல்லல் படுகிறார்களோ எனத்தொடங்கி "எங்கள் கடலில் மீன் பிடிக்க எங்களுக்கு உரிமையில்லையாம் கொண்டிட்டாங்கள் என்னைக் கொண்டிட்டாங்கள்" என்று அழுதழுது தன் கதையைக் கூறினார்.உணர்ச்சியோடு கதைத்த அவர் திடீரென்று பேப்பரைப் பார்த்து வாசித்தது அவருடைய வேகத்தைக் குறைத்துவிட்டது.
அடுத்து 15 வயதுப் பள்ளி மாணவியொருத்தி தன் கற்பு கயவர்களால் சூறையாடப்பட்டதென்பதை அதிக வார்த்தைகளின்றித் தன் நடிப்பாலும் "வலிக்கிறது வலிக்கிறது" என்று நிஜமான வலியோடும் கதறினார்.மற்றுமொரு மாணவன் தன் கல்விகற்கும் உரிமை பறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவனுடைய கதை.அடுத்து ஒரு பெண்போராளியின் கதை(?).

அதற்குப் பிறகும் பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட "நிமிர்வு 2007 " மலரும் இன்னும் கைக்கு வரவில்லை கிடைத்ததும் அதுபற்றிச் சொல்கிறேன்.[படங்கள் விரைவில்....]

வாசு சின்னராசா மாஸ்டரின் மாணவிகள் "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லைப்போராடுமா" என்ற பாடலுக்கு வழங்கிய நடனத்தாலோ என்னவோ இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்துவி்ட்டது.உங்களுக்காக.

3 comments:

கானா பிரபா said...

சந்திப்பையும் , நிகழ்வையும் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள், மிக்க நன்றி

வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி தங்கள் பகிர்வுக்கு நன்றி. எட்டாத தொலைவில் இருப்பதால் இப்படியான நிகழ்வுகளில் பங்குபற்ற முடியதென்பது கவலை.
நல்ல பல நிகழ்வுகள் நடந்துள்ளன போல் உள்ளது. நீங்கள் சொன்னது போல் இப்படியான நாடகங்களை பல இடங்களில் மேடை ஏற்றி பலரும் பார்க்க வைக்க வேண்டும்.

சினேகிதி said...

இருந்தாலும் தேர்திருவிழாவைப் போல எல்லாம் என்னால வர்ணிக்க முடியாது பிரபாண்ணா :-)

விஜே யாரு தொலைவில இருக்க்ச்சொன்னது:-)